தீயவா நீ என் தூயவா 2

Thee2

தீயவா நீ என் தூயவா 2

2 தீயவா நீ என் தூயவா !!

தியாகி இயக்குனர் வருகைக்காக நகத்தைக் கடித்துக் கொண்டு காத்துக்கொண்டிருந்தான்... அப்படி இந்த கதை எதை நோக்கி தான் பயணம் ஆகும் என்று அவனுக்கே ஹூயிரியாசிட்டி தாங்க முடியவில்லை ... 

இமையன் உள்ளே நுழையவும் அவர் பின்னே ஓடியவன் 

"சார் அதுக்கு பிறகு என்ன ஆச்சு, துளசி தீயவனை பார்த்தாளா ?

"ம்ம் சொல்றேன் எழுதிக்கோ" என்ற இமையன் சேரில் அமர ..

"இல்ல சார் எழுதறத விட நான் அப்படியே லைவா இதுல வீடியோவா மேக் பண்ணிடுறேன்.. அவங்க ரெண்டு பேரும் நம்ம கண்ணுக்கு முன்னாடி வாழ்ந்த மாதிரியே ஒரு ஃபீல் வரும் இல்ல 

"ஓஓஓ அப்படியா சொல்ற, அதுவும் சரிதான் நான் சொல்ல சொல்ல நீ அதுக்கு காட்சி அமைப்பு கொடுத்துக்கிட்டே வா 

"ஓகே சார் என்று இருவரும் லேப்டாப் முன்னால் அமர்ந்தனர்..

துளசி சென்னையில் வந்து தன் துணி பொட்டலத்தோடு இறங்கி நின்றாள்..

"எம்மா தங்கச்சி நீ போகணும்னு சொன்ன கொண்டு வந்து விட்டுட்டேன் , இம்மாம் பெரிய ஊர்ல உன் புருஷனை எப்படிம்மா கண்டுபிடிக்க போற

"ப்ச் தெரியல அண்ணா என்று கோவை நிற உதட்டை பிதுக்கினாள் துளசி 

"ஆனா கண்டுபிடிச்சிடுவேன்ங்கிற நம்பிக்கை இருக்கு... அழிச்சு அழிச்சு கல்யாணம் பண்ண நான் என்ன பொம்மையா? ஒரே ஒரு வாழ்க்கை அது அவர் கூட தான்னு முடிவு பண்ணிதான் வந்து இருக்கேன்.. அவர் கிடைக்கிற வரைக்கும் நான் விடமாட்டேன் தேடிட்டே இருப்பேன் அண்ணா" 

"என்னவோமா நல்லா இருந்தா சரிதான் 

"ரொம்ப நன்றி அண்ணா கூட்டிட்டு வந்ததுக்கு" என்று லாரி டிரைவருக்கு ஒரு நன்றியை போட்டுவிட்டு அந்த ஓய்யார சென்னையை சுற்றி மிரண்டு பார்த்தாள் துளசி

"தன் புருஷன் தவிர அடுத்தவனை தலை தூக்கிப் பார்க்காத ஊரில் பிறந்தவள், புருஷன் மூச்சுக்காற்று மட்டும் தான் ஒரு பெண்ணின் முகத்தில் பட வேண்டும் என்று கோட்பாடு கொண்டவர்கள் .. ஆகவே, அவர்களை பார்த்து பார்த்து வளர்ந்தவள் கல்யாணம் என்று ஒருவன் தாலி கட்டிவிட , அதை அறுத்து எறிந்து விட்டுப் போக என்னவோ மனமில்லை .... அவள் கட்டையில் போகும் வரை அவன்தான் தன்னுடைய புருஷன் என்பதில் அன்றிலிருந்து இன்று வரை நிலையாக இருக்கிறாள்.. அதன் விளைவு இதோ ஊர் பெயர் தெரியாத ஒரு ஊரில் வந்து நின்று கொண்டு இருந்தாள்... 

அவளுக்கு இனி சோதனை அதிகம் என்பதால், கடவுள் , அவனை கண்டுபிடிக்க அவ்வளவாக சோதிக்க வில்லை போலும் , அள்ளி அள்ளிக் கொடுப்பது எல்லாம் , அவளை கிள்ளி போடத்தானோ?

இவ்வளவு பெரிய ஊரில் கணவனை கண்டுபிடிக்க அவளுக்கு சிரமம் இல்லாமல் அவள் கை அருகில் கொண்டு வந்து தீயவனை நிறுத்தினார் இறைவன்...

தன் மனதில் ஆழ பதிய வைத்த ஒரே ஒரு முகம் அது அவள் கணவன் தீயவன் முகம் தான்...

 அவன் முகத்தை ஒரு நொடிப் பார்த்திருந்தாலும் அவள் இருதயம் முழுக்க முழுக்க அப்படியே ஆழப் பதிந்து போனது ... அவன் எங்கே நின்றாலும் இதுதான் அவர்? என்று கண்டுபிடிக்கும் அளவிற்கு அவனை அடையாளம் வைத்திருந்தாள் துளசி....

யார் கிட்ட போய் விசாரிக்க? புருஷன் பெயரை சொன்னா அவருக்கு ஆயுசு கம்மியாயிடுமே, இதை காட்டி யார்கிட்டயாவது விசாரிப்போமா என்று பெரிய பெரிய பங்களாக்களை வேடிக்கை பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தாள்.... 

ஒற்றை காலில் கருப்பு கயிறு, இன்னொரு காலில் வெள்ளித்தண்டை, மூக்கில் வளையம்... கழுத்தில் தாலி நெற்றியில் அரை நாணய அளவு சிவப்பு பொட்டு , அவள் கிராமத்திற்கே உரிய முழங்காலுக்கு கட்டிய சேலை, ரவுக்கை இல்லாத தோள்பட்டை அதையும் அழகாக மறைத்து முன்னால் கொண்டு வந்து முடிச்சு போட்டு மலைவாசி பெண்ணாக சுற்றித்திரிந்தவளை பலர் வேடிக்கை பார்க்க, சிலர் பைத்தியமோ என்று கிண்டல் அடிக்க ... அவள் கவனம் எல்லாம் தன் கணவனின் திருமுகம் கண்டு விட மாட்டோமா என்று ஏக்கத்தில் இருந்தது... அங்கே வைக்கப்பட்டிருந்த பெயரை எழுத்து கூட்டி வாசித்தாள்

வே...ள...ச்..சேரி... 

வேளச்சேரியின் புதிதாக கட்டிய வெள்ளை மாளிகை அது. வெளியே கரை வேட்டி கட்டிய கட்சி உறுப்பினர்கள் தலைவர்கள் என பலர் காத்து நிற்க... 

அந்த மாளிகையில் உள்ள விஸ்தார அறையில் காலடி சத்தம் கேட்டது .. குளித்து விட்டு இடையில் டவலோடு வந்தவன் அலமாறி திறந்து குவிந்து கிடந்த ஆடைகளின் ஒன்றை நீள விரல் வைத்து எடுத்தான்.... அதை அணிந்து கொண்டவன் மேஜை மீது வைத்திருந்த தங்க வாட்சை எடுத்து கையில் கட்டினான் ...

அவன் தன் முன்னால் இருந்த தேக்குமர பிரேம் போட்ட நிலைக்கண்ணாடியில் தன் உருவத்தைப் பார்த்தான்... அவன் வழி எப்போதும் தனி வழிதான்

அரசியல்வாதி வேட்டி சட்டை தான் அணிய வேண்டுமா என்ன?? காட்டன் சட்டை, ஜீன்ஸ் பேண்ட் கழுத்தில் குட்டியாக ஒரு டைமண்ட் செயின் ..என்று மாடலாக ராயல் லுக்கில் நின்றான் தீயவன்!!  

வயது 32 இளம் எம்எல்ஏ , கூடிய விரைவில் முதல்வர் மருமகன் ... 

அவன் சிவந்த கண்களும் கூர் நாசியையும் இளம் சிவப்பு இதழும் , கருத்த கேசமும், நீண்ட கழுத்தும், மார்கண்டைய மார்பும், அகண்ட தோள்பட்டையையும் , ஒட்டிய வயிறும், ஓங்கி உயர்ந்த தேக்கு மர உயரமும்...அவன் மாநிறமும் அவன் அரக்கத் தனத்தை இன்னும் அழகாக்கும் அவன் மீசையும் , அவன் இடுங்கிய கண்கள் பார்க்கும் கூர் பார்வையும் , அப்பப்பா!! ராஜகுமாரன் ஒருவன் அரசவையில் இருந்து எழும்பி வந்து விட்டானோ என்பது போல சிலிர்க்க வைத்து விடும்...

மெய்சிலிர்க்க வைக்கும் உடலுக்குச் சொந்தக்காரன் மனம் அத்தனையும் கந்தகமும் திராவகமும் நிரம்பி வழிந்ததுவே!! 

மீசையை திருகிக் கொண்டே , கண்ணாடியில் தன் உருவத்தை அசட்டையாக பார்த்து சிரித்தவன் 

"டேய் தீயா , வெறும் எம்எல்ஏ போஸ்ட் உனக்கு போதவே போதாதுடா, எவன் தலைய அடகு வச்சாவது முதல்வர் பதவிக்கு வந்தே ஆகணும் என் இலக்கு இது இல்லடா , எம்எல்ஏ ஆடிட்டோம்னு நீ சிரிக்காத காறி முகத்து மேலேயே துப்பிடுவேன், நீ ராஜாவாக பிறந்தவன்டா, உனக்கு கீழ பத்து பேர் இருக்கலாம் ஆனா நீ எவனுக்கும் கீழே இருக்க கூடாதுடா ... தினம் தினம் இந்த முகத்தை பார்க்கும்போது சொல்லிக்கிட்டே இரு , இந்த நாட்டுக்கே நீ தான் ராஜா ராஜா "என்று தன் உருவத்தோடு பேசியவன் முன்னும் பின்னும் தன்னை திரும்பிப் பார்த்தான்..

அசரடிக்கும் உடலும் அழகும் என்று கொட்டி கிடந்தது.. முன்னால் இருந்த ஜெல்லை எடுத்து தன் தலையில் கோதி அடர்ந்த சிலையை அலைபாய விட்டவன், கூலிங் கிளாஸ் எடுத்து கண்ணில் மாட்டிக் கொண்டு வெளியே வர,

எம்எல்ஏ தீயவன் வாழ்க , ஏழைகளின் விடிவெள்ளி, சரித்திர நாயகன் எங்க அண்ணன் வாழ்க "என்று தொண்டர்கள் கோஷம் போட... உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்...

"என்கிட்ட, ஒத்த பைசா தேற போறது கிடையாது... பிச்சைக்கார நாய்ங்க காலையிலையே வீட்டு வாசல்ல ஓசி காப்பிக்கு வந்து நின்னுடுவாங்க" என்று இளக்காரமாக நினைத்துக் கொண்டவன் தன் கையை தலைக்கு மேல் தூக்கி அழகாக வணக்கத்தை போட்டு 

"யாரும் வெறும் வயித்தோடு போகக்கூடாது . காபி சாப்பாடு எல்லாம் பின்னாடி நடந்துக்கிட்டு இருக்கு போய் சாப்பிட்டு கட்சி வேலையை போய் பாருங்க" என்று தீயவன் கூற 

"எத்தனை பேருக்கு ஐயா இந்த குணம் வரும் உங்கள தேடி வந்த அத்தனை பேருக்கும் வயிறார சோறு போட்டு அனுப்புறிங்களே நீங்க நீடுழி வாழணும்" என்று அத்தனை பேரும் வாழ்த்த 

"ம்க்கும் கொஞ்சோண்டு சோத்த போட்டா போதும் அவர் காலடியிலேயே கிடப்பீங்கன்னு தெரிஞ்சு தானடா சோத்தை போட்டு உங்கள கொத்தடிமையா வச்சிருக்கார்" முனங்கிய தன் பிஏவை தலையை திருப்பி பார்த்தான் தீயவன் .. அவன் நண்பன் பல்ராம் வலக்கை தும்பிக்கை நம்பிக்கை என்று எதை வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம் கர்ணன் போல நீ கெட்டவனாக, தீயவனாக இருந்தாலும் என் நட்பு மாறாது என்று அவன் செய்த அத்தனை துரோகம் தவறுகளுக்கு ஒரே சாட்சி இந்த பல்ராம் தான் 

உயிரை விடுவானே தவிர நண்பனை காட்டி கொடுக்காத ஒருவன் .... 

"இப்ப சோத்தை போடு நமக்கு எதிரா வாயை திறந்தா அந்த சோத்துல விஷத்தை போடு ,

"தெரியாதா சார் உங்க பாலிசி பண்ணிடலாம் 

"இன்னைக்கு என்ன வேலை "என்று தாவித்தாவி படிகளில் இறங்கி தன் ஜகுவார் கார் நோக்கி தீயவன் போக ...

"காலையில முதலமைச்சர் கூட ஒரு மீட்டிங் இருக்கு.. நைட் ஒரு ரிசப்ஷன் நீங்க தலைமை தாங்க வேண்டியது இருக்கு , அப்புறம் இடைப்பட்ட நேரத்தில் உங்க தொகுதி மக்களோட குறைதீர்க்கிற கூட்டம் இருக்கு அவ்வளவுதான் சார்"...

"ப்ச் , அந்த கெழட்டு பய ஏதாவது அப்டேட் சொன்னானா.."

"சார் முதல்வராயா சொல்றீங்க

"ம்ம் அந்த ஆளதான் சொல்றேன், கல்யாண விஷயம் பத்தி ஏதாவது சொன்னானா ??

"இல்ல சார் .. 

"சீமையில இல்லாத அழகி , எனக்கு கட்டி கொடுக்க கசக்குதோ... முதல்வர் மட்டும் ஆகல குடும்பத்தோட பாம் வச்சி போட்டு தள்ளிடுவேன்" என்று பல்லை கடித்து கொண்டு போய் காரில் முன் சீட்டில் அமர பல்ராம் காரை ஓட்ட அவன் மாளிகை வீடு விட்டு கார் வெளியே வர .. வெளியே நின்ற கூட்டத்தை கலைக்க ஹாரனை வண்டி தெறிக்க விட 

அங்கே வேடிக்கை பார்த்து கொண்டு நின்ற துளசி ஹாரன் சத்தத்தில் தலையை திருப்பி பார்க்க .. கார் முன் கண்ணாடி வழியாக வணக்கம் போட்டு கொண்டு வந்த தீயவனை ஒரு நிமிடம் பார்த்து வி்ட்டு யாரோ எவரோ என்று திரும்ப போனவள் ஏதோ தோன்றி மீண்டும் பார்க்க.. அவள் கணவன் அஃது!! 

அயித்தானா??!!! அய்யோ ஆமா அயித்தானேதான் கடவுளே என் மேல உனக்கு என்னே கருணை, வந்து ஒரு நாள் கூட ஆகல என் அயித்தானே கண்ணுல காட்டி புட்டியே "என்று குதூகலிக்க துளசி வாணுக்கும் பூமிக்கும் குதித்து கொண்டு 

"அயித்தான் அயித்தான்" என்று கத்தி கொண்டே அந்த கார் பின்னால் ஓட கார் வேகம் எடுத்து போய் மறைந்தது

அய்யோ அயித்தான் நான் துளசி உங்கள தேடி வந்துட்டேன் என்று கத்த.... அந்தோ பரிதாபம் கார் சாலையில் மறைந்தே விட்டது 

ப்ச் இதான் கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலைன்னு சொல்றதா, அயித்தான் என்ன பார்க்காம போயிட்டாரே... இங்கிட்டு இருந்துதானே வண்டி வெளிய வந்துச்சு அப்போ இதுதான் அவர் வீடா இருக்கும் .. இங்கேயே ஒரு ஓரமாக இரு‌த்துக்க வேண்டியதுதான்... அவர் வந்ததும் நான் யார் என்னனு சொன்னா கண்டிப்பா என்ன ஏத்துப்பாக... துளசி மனதில் அத்தனை நம்பிக்கை ...  

காலை போனது மதியம் போனது இரவு வந்தது அந்த வீட்டையே பார்த்து கொண்டு அவன் கேட் அருகே போய் நின்றாள் காவலர்கள் அடித்து விரட்டாத குறையாக 

"எம்மா இங்க நிக்க கூடாது போ அங்க 

"அய்யாவை பார்க்க ஊர்ல இருந்து வந்திருக்கேன் பாத்துட்டு போறேனே 

"சொன்னா கேட்க மாட்ட உன்ன போல ஆயிரம் பேர் வருவாங்க எல்லாரையும் உடனே அனுப்ப முடியுமா போய் ஓரமா உட்கார் 

"ம்ம் என்று முகம் சுருங்க துளசி போய் மர நிழலில் மணலில் காலை நீட்டி உட்கார்ந்தாயிற்று...

 நடு இரவு வேளை கீங் கீங் என்ற ஹாரன் சத்தத்தில் தூக்கத்துக்கு கண் சொக்கி கொண்ணிருந்த துளசி சட்டென கண்ணை திறந்தாள் 

"அயித்தான் போன கார் சத்தம் இதுதானே" என்று தெருவை பார்க்க .. அவன் கருப்பு ஜாகுவார் சீறி வந்து கொண்டிருக்க, துளசி யோசிக்கவே இல்லை இதுதா‌ன் வாய்ப்பு என நினைத்து ஓடி போய் அவன் வண்டி குறுக்கே வழியை மறைத்து நின்றிருக்க , பல்ராம் சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்தினான் இல்லை எமலோக பதவி அடைந்து இருப்பாள் நாயகி... 

தீயவனும் தூயவளும் எதிர் எதிரே முகம் பார்க்கும் அருகாமையில் நின்றனர் ... 

தன் நிலை சொன்னால் தன்னை ஏற்று கொள்வான் என்று அதீத நம்பிக்கை, அதை சுக்குநூறாக்க போவது அறிந்திலள்..