தெள்ளழகே-6

தெள்ளழகே-6

தெள்ளழகே!-6

சுமிக்கு இது இப்படித்தான் முடியும் என்று தெரியுமாதலால் அவள் எதுவுமே பேசாது வெறும் பார்வையாளராக மட்டும் இருந்துவிட்டு அப்படியே இறங்கி வீட்டுக்கு வந்துவிட்டாள்.

அருண் அவள் உள்ளே நுழைந்ததுமே கேட்டுவிட்டான்.

“என்ன சுமி போனகாரியம் சுபமாக முடிஞ்சுட்டுப்போல?” என்று நக்கலாகக் கேட்டான்.

சுமி பதிலே சொல்லவில்லை. ருக்குமணிக்கு இது இத்தோட முடிஞ்சுதுன்னு சந்தோசம்.அதனால் அதை வெளிக்காட்டாது அமைதியாக இருந்தார்.

மோகனுக்குத் தான் நல்லத்தம்பி பேசினதும் பிடிக்கவில்லை ராதா பேசினதும் பிடிக்கவில்லை. அவங்க அம்மாவது அவனது வாழ்க்கையை யோசித்து வெட்டிவிடுற மாதிரி பேசியிருந்தாலும் ராதாவிடமிருந்து அப்படியொரு எதிர்வினையை அவன் எதிர்பார்க்கவில்லை.

அவளையே இரண்டுவருடமாக நினைத்து நினைத்து வாழ்றேன்னு தெரியும்.அவளுகாகத்தான் இத்தனையும் இறங்கிவந்து செய்யுறேன்னும் தெரியும். ஆனாலும் அவள் எப்படி அப்படி பேசினாள். என்னைப் பத்திக் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்காது பேசிட்டாளே! நான் அவளைப் பொண்ணுக்கேட்டுப் போனதே தப்புன்னு சொல்லிட்டாளே! இனி என்னத்தை அவளிடம் பேசி கல்யாணத்தை முடிக்கிறது.என்னை மாதிரி அன்பான ஒருத்தன் அவனுக்கு இனிக்கிடைப்பானா? பிற்காலத்தில் தெரியும் இந்த மோகன் எவ்வளவு காதல் நம்ம மேல வைச்சிருந்தான்னு நினைச்சு அழட்டும்”என்று 

அப்படியே ராதா மீதுள்ள கோபத்தில் ஒருவாரம் ஆபிஸிற்கு லீவு போட்டுவிட்டு பெங்களூருக்குப் போய்விட்டான்.

அங்கே இருக்கும் தனது நண்பர்களுடன் சேர்ந்து ஊரைச் சுத்திவிட்டு எல்லாம் மறந்து வராலாம். அதற்குள்ளாக ஒருவேளை ராதா மனசு மாறியிருந்தாளென்றால் அவளை கல்யாணம் பண்ணிக்கொண்டு வீட்டைவிட்டு ஏதேனும் ஊருக்குப் போயாவது வாழலாம் என்று பல பல கனவு கண்டு கொண்டிருந்தான்.

மோகன் குடும்பம் தனது வீட்டில் ஒரு பிரளயத்தையே உண்டுப்பண்ணிட்டுப் போயிட்டாங்களே என்று நினைத்து நினைத்து ராதா தனது மகளை மடியில் வைத்துக்கொண்டு அழுதுக்கொண்டிருந்தாள். இப்போதைக்கு அவளால் எதுவுமே செய்யமுடியாத நிலை.

அம்மாவுக்கும் குடும்பத்தில் உள்ளவர்களுக்கும் அவள் விவாகரத்து வாங்கிக்கொண்டு வந்தது பிடிக்கவில்லை.

அதென்ன பொம்பளைக்கு இவ்வளவு திமிரா? ஆணவமா? ஆம்பளைன்னா அப்படி இப்படித்தான் இருப்பான்.அவனை சகிச்சிக்கிட்டுப் போகவேண்டியதுதானே. அதுவும் உன்னைக் காதலிச்சிக் கல்யாணம் பண்ணிருக்கான் என்ற ஆதக்கம்தான் எல்லோருக்கும் இருந்தது.

அவளது முடிவுக்கு அப்பா நல்லதம்பி மட்டும்தான் சரின்னு தலையாட்டியிருந்தார்.

விவாகரத்து வாங்கப் போறேன் என்று சொன்னதுமே வீட்டில் எத்தனை பிரச்சனைகள் எத்தனை போராட்டங்கள். இதையெல்லாம் கடந்து விவாகரத்து பெற்று வீட்டோடு வந்து இருந்த பிறகு தான் தெரிந்தது.

கல்யாணம் முடிந்த பிறகு பெண்களுக்குத் தாய் வீடும் சொந்தமில்லை கணவன் வீடும் சொந்தமில்லை.அங்குமிக்கும் பந்தாடப்படுவோமென்று பின்புதான் அனுபவத்தில் தெரியவருகிறது. தனது மகளை தானே வளர்க்க வேண்டும் யார் கையை எதிர்பார்க்கக் கூடாது என்பதற்காக வேலைக்கு சென்று கொண்டிருக்கிறாள்.

அந்த வேலைக்கும் சம்பளத்துக்கும் மொத்தமாக ஆப்பு வைப்பதற்காக மோகனும் அவனது குடும்பமும் வந்து சேர்ந்து விட்டனர்.

அப்பா கையைக்கூட எதிர்பார்க்கக்கூடாது என்று வைராக்கியமாக இருப்பவளின் மனதையே தளர்த்திப்ஸபோட்டிருந்தது.

ருக்குமணியும் மோகனும் வந்துப் பொண்ணுக்கேட்டுட்டு வெளியேதான் கிளம்பினார்கள். நல்லதம்பி ராதாஆஆஆ என்று அழைத்தார்.

அவர் கூப்பிட்டதிலயே உள்ளிருந்து பயந்து ஓடிவந்தவளைப் பார்த்ததும் வெண்ணிலா அழவே ஆரம்பித்துவிட்டாள்.

ராதா ஓடிப்போய் தன் மகளைத் தூக்கிக்கொண்டாள்.

“உனக்கு அவ்வளவு உடம்புக்கு கேக்குது என்ன? புருஷனை விட்டுட்டு அடுத்தவனைப் பார்க்கிறளவுக்கு மதத்துப்போய் அலையிறியா என்ன?”என்று தாமரை பச்சையாகவே மகளை எல்லோர் முன்பும் திட்டிவிட்டார்.

இதுக்குத்தானே எதிர்பார்த்துக் காத்திருந்தாள் அவளது அண்ணி மைத்திலி!

இதைக்கேட்டதும் ராதா ”அம்மாஆஆஆ என்னம்மா பேசுற நீ? நான் என்ன செய்தேன்? எவனோ வந்துப் பொண்ணுக்கேட்டதுக்கு நான் என்ன செய்யமுடியும்? அவனைப்பிடிச்சு அடிச்சு துரத்தவேண்டியுதானே.எதுக்கு என்னை அசிங்கப்படுத்துற? உன் மருமகள் வீட்டுல நீ நல்ல தாயின்னு பேரெடுக்கிறதுக்கு என்னை அசிங்கப்படுத்துவியா? இதுக்கு பேசாமல் என்னையும் என் பொண்ணையும் விசம் வைச்சுக் கொன்னுடுமா”என்று மகளைக் கட்டிக்கொண்டு அழுதாள்.

“ஆஹாஹா என்ன ஒரு நடிப்பு. என் தம்பியை வேண்டாம்னு வரும்போதே தெரியுமே. உனக்கு அவன்மட்டும் போதாதுன்னு” என்று அவளும் பேசவும் நல்லத்தம்பி மைதிலியைப் பார்த்து திட்டிவிட்டார்.

“ஏய் இந்தாம்மா மருமகளே வாயிருக்குன்னு உன் இஷ்ட மண்ணாங்கட்டிக்குப் பேசாத. என்பொண்டாட்டி அவள் மகளைக் கண்டிக்கிறா.இடையில் நீ யாரு கண்டபடி ராதைவப் பேச? உன் அண்ணன் யோக்கியதையைப் பார்த்தேன் உங்க அக்கா தங்கச்சி பேச்சைக் கேட்டு என் பொண்ணை அடிச்சு அசிங்கப்படுத்தினான். அதனால்தான் விவாகரத்துக்கு சம்மதிச்சேன். டேய் பெரியவனே இதுக்குமேல உன் பொண்டாட்டி ஏதாவது பேசினான்னா நீங்க தனிக்குடித்தனம் போயிடுங்க.இது சரிவராது”என்று சத்தமிட்டார்.

ராதா இங்கப்பாரு ஒருத்தனுக்கு மானம் மரியாதையாகக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். உனக்கு வாழ்ப்பிடிக்கலைன்னு வந்துட்ட. அதோடு உன் கல்யாண வாழ்க்கை முடிஞ்சுப்போச்சு. இரண்டாவது கல்யாணம் அதுஇதுன்னு நினைக்காத.அது நம்ம பரம்பரைக்கே கிடையாது. பொண்ணுங்க நடந்துக்கிறதுதான் நமக்கு மானம் மரியாதை.நான் சொல்லுறது புரியும்னு நினைக்கிறேன்.இதுக்குமேல எவனாவது பொண்ணுக்கேட்டு வந்தானுங்கன்னா கொன்னுப் புதைச்சிடுவேன். உன்னையும் சேர்த்துதான்”

“முதல்ல அவளை வேலையை விடச்சொல்லுங்கப்பா. வேலைக்குப் போகிறதுனாலதான் அதுப்பெடுத்து ஆடுறா” என்று சின்ன அண்ணன் செல்வம் சொன்னதும் திரும்பி பாவமாக அவனைப் பார்த்தாள்.

அதில் நீயுமாண்ணா? என்று அர்த்தம் அதில் இருக்கவும் செல்வம் அதன்பிறகு அவளைப் பார்க்காது முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

ரிசைன் லெட்டர் எழுதித்தா நானே என் பிரண்ட் மூலமாகக் கொடுத்திடுறேன் என்று அதை ராதாவை வைத்து எழுதி வாங்கிக்கொண்டுதான் வேலைக்கே சென்றான்.

நல்லதம்பியோ “நாளைக்கு நீயும் எங்கக்கூட ஊருக்கு வர்ற. திருவிழாவெல்லாம் முடிஞ்சதும் வரலாம்.அங்கயும் கொஞ்சநாள் இருந்தாதானே நமக்கும் ஊர்ல ஆளுங்க இருக்காங்கன்னு காட்ட முடியும்”என்று ஒரு உள்குத்து வைத்தே பேசிவிட்டுச் சென்றார்.

அதற்குக் காரணம் அவரது ஒரே ஒரு மருமகனும் ராதாவின் கணவனுமான கிருஷ்ணன் மைதிலியின் ஒரே தம்பி.

மைதிலியும் நல்லதம்பியின் தூரத்து சொந்தத்தில் உள்ள பெண்தான். நல்லக்குடும்பம் நல்ல வசதி பொண்ணும் பார்க்க இலட்சணமாக இருந்ததால் பார்த்துத்தான் மணிகண்டனுக்குக் கட்டிவைத்தனர்.

அதே குடும்பத்தில் உள்ள பையன் என்றால் தன் மகளுக்கு ஏத்தவனாக இருப்பான் என்று ராதாவுக்கு செல்வம் கல்யாணம் முடிந்த உடனே கிருஷ்ணனுக்கு கல்யாணம் முடித்த வைத்தார்.

 

ஆனால் அந்த கல்யாணம் ஒரே வருடத்தில் முடிவுக்கு வந்ததும் இரு குடும்பத்துக்கு இடையிலும் பிரச்சனையாகி இன்னும் பேச்சுவார்த்தை இல்லாதுதான் இருக்கின்றனர்.

ஆனால் மைதிலி தனது தாய்வீட்டுக்குப் போயிட்டுத்தான் இருக்கிறாள். அவள் முடிவாகவே சொல்லிவிட்டாள்.

“ உங்க மகளுக்கும் என் தம்பியை பிடிக்கலைன்னு விவாகரத்து பண்ணிட்டு பிரிஞ்சு போயிருக்காங்க அதுக்காக நான் எங்க அம்மா வீட்டுக்குப் போகாமலும் என் தம்பி கூட பேசாமலும் இருக்க முடியாது” என்று தனது முடிவை உறுதியாக சொல்லி தனது உரிமையை நிலைநாட்டிக் கொண்டிருக்கிறாள்.

செல்வமும் அவனது மனைவி காவேரியும் மெதுவாக தங்களது அறைக்குள் சென்றுவிட்டனர்.

“அதென்னங்க உங்க தங்கச்சியை மட்டும் இதுக்குள்ள நாலு பேரு பொண்ணுக்கேட்டு வந்துட்டாங்க. பிரச்சனை அவனுங்ககிட்டயா? இல்லை உங்கத் தங்கிச்சிக்கிட்டியா?” என்று சொல்லி முடிக்கும் முன்பே அவளை அறைந்திருந்தான்.

“இங்கப்பாரு எங்கத் தங்கச்சியைப் பத்தி எல்லாம் எங்களுக்குத் தெரியும்.சும்மா அவளை பத்திப்பேசாத சரியா.உன் வேலை எதுவோ அதைமட்டும் பாரு” என்றுவிட்டு வேலைக்குக் கிளம்பிவிட்டான்.

நல்லத்தம்பி சென்னையிலயே ஒரு பேங்கில் கிளர்க்காக வேலைப்பார்த்து ரிட்டயர்டு ஆகிவிட்டார். ஊரிலிருந்து இங்கு வேலைக்கு வந்ததால் ஊரில் இருந்து வரும்போது தாமரையைக் கல்யாணம் பண்ணிக் கொண்டுதான் அழைத்து வந்தார்.

சென்னையில் தான் மூன்று பிள்ளைகளும் பிறந்தார்கள் மூன்று பிள்ளைகளும் அவர்களுக்குத்தக்க படிக்க வைத்து வேலையும் வாங்கி கொடுத்து விட்டார்.

மணிகண்டன் ஒரு கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனியில் சிஃப் சிவில் இன்சியராக இருக்கிறான்.செல்வம் எம்.பி.ஏ முடித்துவிட்டு ஒரு கம்பெனியில் எச்.ஆராக இருக்கிறான்.

ராதா எம்.காம் முடித்துவிட்டு அடுத்து அடுத்து படிக்கலாம் என்றிருக்கும்போதுதான் மணிகண்டன் திருமணம் அப்புறம் அவளுக்கு வரன்பார்த்தனர்.

அபொழுதே கிருஷ்ணன் மைதிலி மூலமாக ராதாவைப் பொண்ணுக்கேட்டு அவன் விருப்பத்தைச் சொல்லிவிட்டான் என்பதால் ராதாவை கிருஷ்ணனுக்குக் கல்யாணம் பண்ணிக்கொடுக்க நல்லத்தம்பி சம்மதம் சொல்லிவிட்டார்.

ஏற்கனவே ராதாவுக்கும் அவனைப் பிடிக்கும் என்பதால் செல்வத்தின் திருமணம் முடியும்வரைக்கும் காதலித்தனர்.

செல்வத்தின் கல்யாணம் முடிந்து ஆசை ஆசையாக காதலித்த இருவருக்கும் கல்யாணம் செய்து வைத்தது தான் தாமதம் ஒரே மாதத்தில் அவள் கர்ப்பமாகி விட அதற்குப் பிறகுதான் மெதுமதுவாக பிரச்சனைகள் ஆரம்பித்து பூதாகரமாக வெடிக்க குழந்தை பிறந்ததும் விவாகரத்துக்கேட்டு நின்றுவிட்டாள். மொத்தமாக வாழ்கையை முடிவுக்கு வந்துவிட்டது.

என்னதான் அப்பா படித்து பேங்கில் வேலை செய்தாலும், அண்ணன்கள் இருவரும் பெரிய பெரிய பதவி வகித்தாலும் குடும்பமானம் குடும்ப பெருமையெல்லாம் இன்னும் பெண்களின் குணத்திலும் அவர்களின் நடவடிக்கைகளிலும் நடத்தையிலும்தான் இருக்கிறது என்று நம்பும் சமூகமாகவே தான் இருக்கிறார்கள்.

முன்பாமாவது விவாகரத்தை விமர்சித்து தினம் பந்தாடிக் கொண்டிருக்க, இப்பொழுது இரண்டாம் திருமணத்துக்கு கேட்டு வருபவர்கள் மூலமாக அனுதினமும் நரக வேதனை அனுபவித்துக் கொண்டிருக்கிறாள் ராதா.

கொஞ்சம் அவளது அழகும் படிப்பும் சம்பாத்தியமும் பார்ப்பவர்களுக்கு அவளை சொந்தம் கொண்டாடவும் திருமணம் செய்து கொள்ளவும் தோன்றத்தான் செய்தது. ஆனால் யாரும் அவளது விருப்பம் என்ன என்று இதுவரைக்கும் கேட்டதில்லை மோகன் உட்பட!

மோகன் மூலமாக இப்போது பிரச்சனை பெரிதாக வெடித்து வேலையைவிடும் அளவிற்கு போய்விட்டது.

அதுதான் ராதாவால் தாங்கிக்க முடியவில்லை.இனி ஒவ்வொரு செலவுக்கும் மகள் கேட்கும் பொருளுக்குமாக பணம் என்று அம்மாவிடமோ இல்லை அப்பாவிடமோதான் கையேந்தவேண்டும்.

இதெற்கெல்லாம் மொத்தமாகக் காரணமான தன் கணவனை நினைத்து அவளுக்கு அவ்வளவுக்கோபம் வந்தது.அதைவிட முந்திரிக்கொட்டை மோகனை கன்னம் கன்னமாக பிடித்துவைத்து அறையவேண்டும் என்கின்ற வெறியே வந்தது.

நான்தான் அவன் காதலைச் சொல்லும்போது கண்டுக்கலையே அப்பவே புரிஞ்சிக்க வேண்டாமா? அவனால் பிரச்சனையா? அல்லது அவன் அம்மா இந்த பிரச்சனை பெருசாக்கி ஒரு முடிவுக்கு கொண்டு வரணும்னு கூட்டிட்டு வந்தாங்காளானும் தெரியல. ஆனா அவங்க மட்டும் இப்போ நம்ம கையில் கிடைச்சாங்கன்னா கன்னம் கன்னமாக சொல்லி சொல்லி அறையணும் என்று வெறியோடு கட்டிலில் உட்கார்ந்திருந்தாள்.

எல்லவாற்றிற்கும் மேலாக தன் கழுத்தில் தாலிக்கட்டிய அந்தப்புண்ணியவன் எதுக்குத்தான் என் வாழ்க்கையில் வந்தான் என்று இது எத்தனையாவது முறையென்று தெரியாது திட்டிக்கொண்டிருந்தாள்.

காதலிச்சானாம் கல்யாணம் பண்ணினானாம் பொண்டாட்டி பிள்ளையை வைச்சு ஒழுங்கா வாழத்தெரியாதவன். அம்மா அக்காதான் முக்கியம்னா எதுக்கு என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டான்.நீயெல்லாம் நல்லாவேயிருக்கமாட்டடா பேசாமல் நீ செத்துபோயிருக்கலாம் என்று அவள் நினைத்தாள்.

அப்போது மதுரையில் தனது புல்லட்டில் இருந்து தவறிவிழுந்து பஸ்ஸூக்கு அடியில் சென்ற கிருஷ்ணன் செத்தோம் என்றுதான் நினைத்திருந்தான்.

அவன் விழவும் பஸ்ஸும் சடன்ப்ரேக் போட்டு நின்றுவிட்டதால் தப்பித்துவிட்டான்.

மெதுவாக எழுந்து அடிபட்ட கைகால் முட்டியெல்லாவற்றையும் பார்த்துவிட்டு மெதுவாக நடந்து வண்டியை எடுக்க முயன்றான்.

அங்கே நின்றிருந்த பெரியவர் ஒருத்தர் “ஏதோ புண்ணியவதி உனக்காக வேண்டிக்கிட்டிருக்கு தம்பி. அதுதான் நூலிழையில் உயிர் தப்பிச்சிட்ட.

உன் பொண்டாட்டிக் கழுத்துல கட்டின தாலிக்கு பலம் அதிகம்தான்போல! போய் சுத்திப்போடு பட்டக் கண்ணும் காயமும் காணமல் போயிரும்” என்று சொல்லிவிட்டு நகர்ந்துப் போய்விட்டாள்.

கிருஷ்ணனுக்கு அந்தப் பெரியவர் சொன்னதும் உடம்பெல்லாம் புல்லரித்துவிட்டது.

அவனது கண்முன் தன்னையே காதலோடும் ஆசையோடும் பார்த்துக்கொண்டிருக்கும் தன் மனைவி கண்ணில் வந்துப்போனாள்.

நான் கட்டின அந்தத் தாலிக்கு ஆயுசுக்கட்டின்னு சொல்லிட்டுப் போறாரே.அவள் விவாகரத்து ஆனதும் அந்தத் தாலியைக் கழட்டிவீசிருப்பாளே!என்று யோசித்தவாறே வண்டியை எடுக்காது அப்படியே நின்றிருந்தான்!