தெள்ளழகே-7

தெள்ளழகே!-7
கிருஷ்ணன் தனது நண்பனுக்குப் போன் பண்ணி வண்டியில் இருந்துக் கீழவிழுந்ததையும் அடிபட்டதையும் சொல்லிக் காரையெடுத்துட்டு வரச்சொன்னான்.
அவன் ஆக்ஸிடெண்டுன்னு சொன்னதுமே அவனோடு சேர்ந்து கூட நாலுபேரும் ஓடிவந்துவிட்டனர்.
அங்கே கூடியிருந்தவர்கள் ஒவ்வொருத்தராக கலைந்துச் செல்ல அவனது மனசு முழுக்க தனது மனைவியின் நினைவுகள் வந்து முட்டிமோதத்தான் செய்தது.
இந்த இரண்டுவருஷத்துல கடந்துப்போன வாழ்க்கையில் இருந்து மீண்டு வந்துட்டேன்னு நினைச்சிருந்தேன்.ஆனால் அப்படி இல்லை போலிருக்கே!திடீர்னு மனசுக்குள்ள வந்து உட்கார்ந்து ஆட்டுறாளே!இது சரியில்லையே என்னை வேண்டாம்னு சொன்னவளை நான் எதுக்கு நினைக்கணும்? என்று வீம்புக்கு அவளது நினைப்பை ஒதுக்கித் தள்ளினான்.
அதற்குள் நண்பர்களும் வந்துவிட உடனே காரில் ஏறி அப்படியே ஹாஸ்பிட்டல் போயிட்டான்.
பெருசா அடியில்லை என்றாலும் அங்காங்கே சிராய்ப்புகளும் தோல் வழண்டும் இருந்தது.
அதனால் நர்சுளே மருந்துப் போட்டுவிட்டனர்.
இப்போது கால் கொஞ்சம் வலிக்கவும் தாங்கித் தாங்கி நடந்தவன் இனி கல்குவாரிக்குப் போக முடியாது என்று நேராக வீட்டுக்கு வந்துவிட்டான்.
அவன் கைகாலெல்லாம் கட்டுப்போட்டு வருவதைப் பார்த்த அவன் அம்மா பூங்கோதை ஓடிவந்து அவனைத் தாங்கிப்பிடித்து உட்கார வைத்தார் அழுதார்.
“அந்த சிறுக்கி காலையிலயே அவங்க வீட்டுல பிரச்சனை செய்திருக்கான்னு உங்க அக்கா சொல்லும்போதே ஏதோ அசம்பாவிதம் நடக்கபோகுதுபோன்னு நினைச்சேன் நடந்துட்டு.அந்த ஊர்ப்பொறுக்கி நாயை ஒருத்தன் பொண்ணுப் பார்க்க வந்தானாம் ஒரே பிரச்சனையாம்.உன் மாமனாரு அவளையும் சேர்த்து பேசிருக்காரு.உங்க அக்கா மைதிலி போன் பண்ணிச் சொன்னாள்.அப்பவே நினைச்சேன் இப்படியாகிட்டே”என்று அழுதார்.
“அம்மா அழாதம்மா.ஒன்னும் ஆகலை.ரோட்டுலக் கல்லுக்கிடந்திருக்கு கவனிக்காமல் புல்லட்டை ஏத்திட்டேன்.அது சரக்குன்னு பஸ்ஸூக்குள்ள என்னைத் தள்ளிவிட்டுட்டு. நல்லவேளை டிரைவர் ப்ரேக் போட்டுட்டான்.இல்லைன்னா உன் புள்ளையை அள்ளித்தான் கொண்டு வந்திருப்பானுங்க”
“ஐயோ!அப்படிச் சொல்லாதடா. ஒத்தைபுள்ளையா ஆம்பளை பிள்ளையை வைச்சிருக்கேன். என்னைக்கு அந்த சிறுக்கிமவ உன் வாழ்க்கைக்குள்ள வந்தாளோ உன்னை ஒன்னுமில்லாலாக்கிட்டுதே!” என்று புலம்பிக்கொண்டே அவனுக்கு காபியெடுக்க உள்ளே சென்றார்.
அதற்குள் அவனது அப்பா ஆவுடையப்பன் கிருஷ்ணனுக்கு அடிபட்டதையும் அவன் கீழே விழுந்து வந்திருக்கிறான் என்பதையும் கேள்விப்பட்டு வந்துவிட்டார்.
“என்னடா தம்பி இப்படியாகிட்டு. ஒருநாளும் வண்டியில் இருந்து விழுந்ததில்லையே நீ.இப்போ எப்படி ஆச்சுது?யாரும் வேணும்னு பண்ணிட்டாங்களா என்ன?என்று கேட்டார்.
“இல்லப்பா நான்தான் கவனம் இல்லாமல் விழுந்துட்டேன்”
“அப்படித்தானே ஆகும்.ஒருத்திதான் இவன் எப்போடா சாவான் அடுத்தக்கல்யாணம் முடிக்கலாம்னு காத்திருக்காளே!அப்போ நமக்கு எல்லா கெட்டதும் வரத்தான் செய்யும்”
அதற்குள் அவனது இரண்டாவது அக்கா நாகேஷ்வரியும் அவனைப் பார்க்க உள்ளூரிலே இருப்பதால் ஓடிவந்துவிட்டாள்.
“என்னதம்பி இப்படி விழுந்துட்ட!” என்று அவனது கையைப்பிடிச்சுட்டு அழுதாள்.
“ப்ச்ச் ஒன்னுமில்லக்கா லேசான அடிதான்.நீ அழாத” என்று சமாதினப்படுத்தினான்.
“யம்மா நேத்துதான் பொண்ணு பார்த்துட்டு வந்திருக்கோம். அதுக்குள்ள இப்படி அபசகுணமாகிடுச்சே. அந்தப்பொண்ணு வேண்டாம்மா நம்ம வேற பொண்ணுப் பார்க்கலாம்.பொண்ணு பார்த்துட்டு வந்ததுக்கு என் தம்பியை சாய்ச்சுட்டுதே ஆத்தீ” என்று அங்கலாய்த்தாள்.
விவாகரத்தாகி இரண்டு வருடங்களுக்கு மேலாகிட்டுது. இப்போதான் இரண்டாவது கல்யாணத்துக்கே சம்மதிச்சான். அதுக்குள்ள இப்படியாகிடுச்சு என்றுதான் எல்லோருக்கும் மனம் ஒரு நிலையில் இல்லாது தவித்தது.
“ப்ச்ச் என்ன பேசுற நாகு.சும்மா எதுவும் பேசாத.அந்தப்பொண்ணு ஜாதகமும் கிருஷ்ணா ஜாதகமும் பத்துப்பொருத்தமும் பக்கவாகப் பொருந்திருக்குன்னு ஜோசியரு சொல்லிட்டாரு.திருவிழா முடிஞ்சதும் நிச்சயம் வைக்க எல்லா ஏற்பாடும் பண்ணியாச்சு .நீ பாட்டுக்கு ஏதாவது உளறாத.உங்க அக்கா குடும்பமும் திருவிழாவுக்கு வர்றாங்களாம்.அதனால் அவ இங்க இருக்கும்போதே நிச்சயத்தை முடிச்சுட்டா நல்லது.இல்லைன்னா அந்த சிறுக்கி இருக்க வீட்டுக்குப்போய் கூப்பிடணும். அது எதுக்கு அவ கண்ணுல முழிச்சிட்டு”என்று அம்மாவும் மகளும் பேசிக்கொண்டிருந்தனர்.
அதைக்கேட்ட கிருஷ்ணனுக்கு மனம் ஒரு நிலையில் இல்லை’ராதாவும் குழந்தையும் வர்றாங்களா என்ன?என்று யோசித்தவன் அவள் வந்தால் என்ன வரலைன்னா உனக்கென்ன?அதுதான் அவளும் வேண்டாம் குழந்தையும் வேண்டாம் என்று தள்ளி வைச்சிட்டியே.அடுத்த மாசம் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கப்போற.போய் பொழப்பைப் பாரு’ என்று அவனது அறிவு லேசாக எட்டிப்பார்த்துச் சொன்னது.
ம்ம்ம் என்ன செய்ய ஆசை ஆசையாகக் காதலிச்சு கல்யாணம் பண்ணினதுக்கு ஒரு வருஷத்துலயே பிரிவுதான் வந்திருக்கு.இதுல என்ன சந்தோசம் இருக்குன்னு இந்த அம்மாவும் அக்காங்களும் இரண்டாவது கல்யாணம் பண்ணிவைக்க இவ்வளவு அவசரப்படுறாங்கன்னு தெரியலை.ம்ம் எப்படியும் எனக்கான வாழ்க்கையை நான் வாழணுமே திமிர் பிடிச்சு நான் வேண்டாம்னு போனவளே நல்லாயிருக்கும்போது நான் இரண்டாவது கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதுல என்னத் தப்பு இருக்கு?அவ வந்தாலும் நம்ம கல்யாணத்துக்கு இருந்துட்டுப் போகட்டும்.நான் அவளைவிட நல்ல அழகான பொண்ணா கல்யாணம் பண்ணிட்டு வாழ்றதை பார்த்து ஏங்கட்டும்”என்று சின்னதாக ஒரு குரூர எண்ணம் மனதில் வந்தது.
உடனே தனது அம்மாவை அழைத்தான்”ம்மாஆஆ நேத்து நம்மூருலயே போய் பார்த்தோமே அந்தப்பொண்ணு என்ன படிச்சிருக்கு?”
“ஏன் தம்பி கேட்கிற?”
“ஏற்கனவே பட்டணத்துல படிச்சவளை பார்த்துக் கட்டிவைச்சதுனால்தான் உன்னை மதிக்காம வேண்டாம்னு போயிட்டா.அதுதான் அந்தப்பொண்ணு பனிரெண்டாங்கிளாஸ்தான் படிச்சிருக்கு. பார்க்கவேற ராதாமாதிரியே கண்ணுக்கு இலட்சணமா இருக்கா.அதுதான்டா உனக்காக பார்த்துப் பார்த்து பேசிமுடிச்சிருக்கோம்”என்று பெருமையாக சொன்னார்.
எல்லாம் கேட்டவனுக்கு அந்த ராதா மாதிரின்னு சொன்ன வார்த்தைதான் நெஞ்சுக்குள்ள முள்ளாகக் குத்தியது.
ராதா உண்மையில் அழகிதான்.ஆனால் வெளியே பார்க்க அழகாக இருக்கும் அத்திப்பழத்தின் அழகு என்று நினைத்தவன் முகத்தைத் சுழித்தான்.
முதன்முதலில் தனது அக்கா மைதிலியைப் பொண்ணுப்பார்க்க வந்தபோது கிருஷ்ணனின் கண்கள் நொடிக்கு ஒருமுறை ராதாவையும் அவளது அழகையும் அந்த நளினம் பதவிசு என்று பார்த்துப் பார்த்து ரசித்தான்.
மைதிலிக்கும் மணிகண்டனுக்கும் பேசிமுடித்து நிச்சயதார்த்தம் வைக்கப்போறாங்க கல்யாணம் நடக்கப்போகுது என்றதும் அவர்களைவிட இவன்தான் சந்தோசப்பட்டான்.
அவனுக்கு ராதாவை அடிக்கடிப் பார்க்கணும் அவளோடு பேசணும் என்பதைத் தாண்டி மச்சானோட தங்கச்சி நமக்கும் கட்டிக்க முறை வந்திடும். அவளைப் பொண்ணுக்கேட்டுக் கட்டிக்கணும் என்கின்ற ஆசை அப்போதே வந்துவிட்டது.
அது நிறைவேறி வாழ ஆரம்பிக்கும்போதுதான் வாழ்க்கை இருவருக்குமே நரகமாக மாறியிருந்தது.
‘ம்ம்ம் எல்லாம் விதி’ என்று நொந்துக்கொண்டவன் அப்படியே கண்களை மூடிப்படுத்துவிட்டான்.
ஆவுடையப்பன் பூங்கோதையிடம் வந்தவர்”இங்கப்பாரு அவனே அந்த ராதாபுள்ளையை மறத்துட்டு வேற கல்யாணத்துக்கு இப்போதான் சம்மதிச்சிருக்கான்.மறுபடியும் மறுபடியும் வேற பொண்ணெல்லாம் பார்க்க முடியாது. நான் சிவலிங்கத்துக் கிட்டப்போய் பேசிமுடிச்சு ஒரேடிய நிச்சயத்தை வைப்போமா இல்லைக் கல்யாணத்தை வைப்போமான்னு கேட்டுட்டு வந்திடுறேன்.வசதி வாய்ப்புல நம்ம அளவுல இல்லைன்னாலும் குணத்துல பொண்ணும்சரி சிவலிங்கம் குடும்பமும் சரி தங்கம்தான்.நல்லத்தம்பிக் குடும்பம் மாதிரி இல்ல.அதனால் உன் மகள்கிட்ட சொல்லிப் புரியவைச்சு வாயை அடக்கிக்கச் சொல்லு”என்று கடுமையாகச் சொல்லவிட்டுப்போனார்.
“யம்மா இந்த அப்பா ஏன் இப்படியிருக்காரு.நாங்க எதுக்கு வாயைக்குடுத்து தம்பிக் கல்யாணத்துல பிரச்சனை பண்ணப்போறோம்.அவனுக்கு நல்லவாழ்க்கை அமையணும்னு தானே நாங்களே பாடாய்படுறோம். அந்த ராதாதான் அடங்காபிடாரியாக இருந்துட்டா அதுக்கு நாங்க என்ன பண்ணமுடியும்? அக்காவை அந்த வீட்டுல கட்டிக்குடுத்திருக்குன்னு தான் அந்த ராதா செய்ததுக்கு எல்லாம் அமைதியாகப்போனோம்” என்று தோளில் இடித்துக்கொண்டுச் சொன்னாள்.
“விடுடி உங்கப்பனுக்கு என்னைக்குத்தான் நம்மளை நல்லவங்களா கண்ணுக்குத் தெரிஞ்சிருக்கு.ஆனாலும் இந்த ராதா ஏதோ வானத்துல இருந்துக் குதிச்சவாமாதிரியே நடந்துக்கிட்டா. கடைசியில என் மகனை வைச்சே துரத்தியாச்சு.என் மகனையே பிரிச்சு அவக் கைக்குள்ள போட்டுக்கிட்டாளே!கடைசில அம்மா மகன் பாசம்தான் ஜெயிச்சது.இனி வர்றவளை முதல்லயே தட்டி வைக்கணும்.ஏற்கனவே அந்த சிவலிங்கக்குடும்பம் கொஞ்சம் வசதியில குறைவுனால நம்ம சொல்லுறதைக் கேட்டு நடப்பா”
“அதுவும் சரிதான்.எங்க வீட்டுல கொழுந்தன் பொண்டாட்டிய்யும் ரொம்ப ஆடுனா என் மாமியார் உன் வீட்டுக்கு ஓடுன்னு விரட்டிவிட்டுட்டாங்க. பஞ்சாயத்து நடக்குது.அவளும் படிச்ச திமிர்லதான் ஆடினாள்” என்று பேசி சிரித்துக்கொண்டிருந்தனர்.
ராதாவோ தனது வாழ்க்கையையே இழந்து முதுகொடிந்தவளாக இருந்தாள். இப்போது மோகனும் ருக்குமணியும் செய்த வேலையால் இருந்த கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போய் அப்படியே அடிமை வாழ்க்கைக்குள் தள்ளி விட்டுட்டாங்களே என்று நோந்துப் போய் காரில் உட்கார்ந்திருந்தாள்.
அவளுக்கு மதுரைக்கு வரவே பிடிக்கவில்லை.மூன்று வருடம் முன்பென்றால் இந்த ஊருக்கு வருவதென்றால் மனசுக்குள்ளும் வயித்துக்குள்ளும் பட்டாம்பூச்சி பறக்கும்.
காதலில் மூளைத் திளைத்து கிருஷ்ணனைப் பார்க்கப்போகிறோம் என்று வானில் பறப்பாள்.
ஆனால் இன்று மதுரைக்குப் போகிறோம் என்றதுமே அடிவயிறெல்லாம் பயத்தில் கலங்கியது’மறுபடியும் அவனது முகத்தைப் பார்க்கணுமா?என்னைக் காதலோடு பார்த்தவன் அடித்து துன்புறுத்தும்போது இருந்த வெறி வேறுமாதிரிதானே இருந்துச்சு. அம்மா அக்கான்னு இருக்கிற பாசம் மனைவின்னு வரும்போது மொத்தமாக இல்லாமல் போயிடுதுல. என்னைப் புரிஞ்சிக்கிட்டது அவ்வளவுதான் இனி இவனோடு வாழமுடியாதுன்னு முடிவு எடுத்துக்கொண்டு வெளியே வரும்போது எவ்வளவு வலித்தது.அதே வலியோடு’ அவனைத் திரும்பப் பார்க்கணுமே என்று யோசிக்கும்போது வருகிறதே!என்று கண்களை மூடியவளுக்கு கண்ணீர் தானாக வந்தது.
எண்ணெய் சட்டியில் இருந்துத் தப்பி அடுப்புக்குள்ள விழுந்ததுபோன்று அவளது நிலை இப்போது ஆகிவிட்டது.
மகள் தனது திருமணவாழ்க்கையே வேண்டாம்னு வந்திருக்காளே? அங்க என்ன கஷ்டப்பட்டாளோ? என்று யாருமே யோசிக்கவேயில்லை.
புருஷன்கூட அனுசரிச்சு வாழாமல் வாழாவெட்டியாக வந்துட்டான்னு அம்மா தினம் தினம் வசைபாடியே கொல்லுறாங்க.
அண்ணனுங்களா பொண்டாட்டி பேச்சைக்கேட்டு நம்மளையே நாயைவிடக் கேவலமாக நடத்துறானுங்க.இதுல இருந்துத் தப்பிச்சு வேலைக்குப்போனால் கொஞ்சமாச்சும் நிம்மதியாக மூச்சுவிடலாம்னு பார்த்தால் அங்கேயும் சில நாயிங்க மோகனை மாதிரி வந்திடுறானுங்க என்று நினைத்து வருந்திக்கொண்டே வந்தாள்.
நல்ல நகைப்போட்டு வரதட்சணை கொடுத்து கல்யாணம் பண்ணிக் குடுக்கிறமே பொண்ணு நல்லா வாழ்றாளான்னு கேட்கிறதும் இல்லை.அப்படியே பிரச்சனைகளைச் சொல்லிட்டா அதுக்கு தீர்வு காண்றதும் இல்லை.
ஒன்னு அனுசரிச்சு போன்னு சொல்லுறது இல்லையா வாழாவெட்டியா வந்திடாதன்னு அழுது குடும்ப சூழ்நிலையை காரணம் காட்டி, அவளை அந்த நரகத்திலயே வாழப் பழக்கிவிட்டுடறது.
இதைக்கடந்து அவள் வெளியே வந்து சுயமாக நின்றால் ஒழுக்கங் கெட்டவள் திமிர்பிடித்தவள் இல்லையா உடம்புக்கு அலைகிறவள்னு சொல்லி உயிரோடு மனசை சாகடிச்சிடுறது.
இதுல முக்காவாசி இந்த அம்மாக்களின் பிடுங்கல்தான் பெருசா இருக்கு என்று சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது தொண்டைக்குழிக்குள் சுவாசம் அடைக்க மதுரை வீட்டிற்கு வந்து இறங்கினாள்!