தெள்ளழகே-5

தெள்ளழகே-5

தெள்ளழகே!-5

நல்லதம்பி வீட்டில் அடுத்தநாள் ஊருக்குச் செல்லுவதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்துகொண்டிருந்தனர்.

ராதாவுக்கு மனதே கேட்காமல் ஆபிஸிற்குப் போக கிளம்பிக்கொண்டிருந்தாள்.

தாமரைத்தான் திட்டிக்கொண்டே அங்கேயும் இங்கேயும் நடந்துக்கொண்டிருந்தார்.

இரண்டு மருகள்களும் புருஷனை எப்படிக் கைகுள்ள போட்டுக்கிறதுன்னு தனியா கோர்ஸ்ஸே படிச்சுட்டு வந்ததுபோல அவன்களைவிட்டு இம்மியளவு அங்கும் இங்கும் நகராமல் இருக்கிறார்கள். தன் புருஷன் தன் பிள்ளைகள் என்று பார்த்துப் பார்த்துக் கவனித்துக் கொண்டிருந்தனர்.

வெண்ணிலாவுக்கு நல்லதம்பி சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.இதுக்குமேல நம்ம இங்கிருந்தால் சரியாக இருக்காது என்று எழுந்தவள் டிபனை எடுத்து வைத்துக்கொண்டு வெளியே வரவும் வெளியே கார் வந்து நின்றது.

கார் சத்தம் கேட்கவும் எல்லோரும் யோசனையோடு வாசலைப் பார்க்க,அங்கே மோகனும் ருக்குமணி சுமியென்று குடும்பமாக இறங்கிக்கொண்டிருந்தனர்.

ராதாவைத் தவிர ஒருத்தருக்கும் அவர்கள் யாரென்று தெரியாது.அவர்களைப் பார்த்ததும் இது என்னடா எங்கயோ போன ஓணான் நம்ம வீட்டுக்குள்ள வருது?என்று அடுத்து என்ன நடக்குமோ என்று பயந்தவாறே ராதா திருதிருவென்று முழித்துக்கொண்டிருந்தாள்.

அவளைப் பார்த்ததும் மோகன் “ஹாய் ராதா! உனக்கு சர்ப்பரைஸ்ஸாக இருக்கட்டும்னுதான் சொல்லாமல் வந்திருக்கோம். உள்ள போ”என்று அவங்க வீட்டுக்கே வந்து அவளை உள்ளப்போகச்

சொல்லிக் கொண்டிருந்தான்.

மோகன் பேசுவதை கேட்டதும் மணிகண்டன் முதல் செல்வம் வரை எல்லாரும் ராதாவை திரும்பிப் பார்த்த முறைத்தனர் உன் வேலை தானா இது? என்று கேட்பது போன்று இருந்தது.

அதைப் பார்த்த ராதாவோ மிரண்டுப்போய்” சார் நீங்க எதுக்கு சார் எங்க வீட்டுக்கு வந்திருக்கீங்க? அதுவும் காலையிலே எங்க வீடு எப்படி உங்களுக்கு தெரியும்? எங்க அப்பாவா இல்லை எங்க அண்ணனை யாரும் பார்க்க வந்திருக்கீங்களா?” என்று ஒன்றும் புரியாது அடுக்கடுக்காக மோகனிடம் கேள்வி கேட்டாள்.

ருக்குமணி அதற்குள் “உங்க வீடு தேடி வந்தவங்களை இப்படித்தான் வாசல்ல வச்சு ஏன் வந்தீங்க எதற்கு வந்தீங்கன்னு கேட்பீங்களோ? உள்ள கூப்பிட்டு மரியாதை எல்லாம் கொடுக்க மாட்டீங்களா? யாராக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் வாங்கன்னு கூப்பிட்டு உள்ள உட்கார வைக்க மாட்டீங்களா? அப்படிப்பட்ட குடும்பம்தான் உங்க குடும்பம்போல?விளங்கிடும்” என்று வரும்போதே பெரிதாக பிரளயத்தை ஏற்படுத்தும் விதமாக பேசினார் ருக்குமணி.

அந்தப்பேச்சே நல்லத்தம்பிக்கு பிடிக்கவில்லை.அதனால் தனது மனைவி தாமரையிடம்”தாமரை வீட்டுக்கு வந்தவங்க யாராக இருந்தாலும் உள்ளே கூப்பிட்டு உட்காரவைச்சுப் பேசணும்னு இங்கிதமில்லையா. பிச்சைக்காரனைத் தவிற எவன் வந்தாலும் மரியாதைக் குடுக்கணும். போ வந்தவங்களை வான்னு கூப்பிட்டு உள்ள உட்கார வை”என்று உனக்கு நான் சளைத்தவனில்லை என்ற ரீதியாக ருக்குமணியை பார்த்தவாறே பேசினார்.

ருக்குமணிக்கு இதுதானே வேணும் ‘இதை எதிர்பார்த்துதானே நான் பேசினேன். வசமான குடும்பம்தான் நம்ம என்ன பேசினாலும் அதற்கு எதிர்வினை சரியாக வரும். இதுதான் நமக்கு நல்லது’என்று மனதிற்குள் கணக்குப்போட்டவாறே கெத்தாக உள்ளே வந்து உட்கார்ந்தார்.

அருண் வரவில்லை.காலையில் சுமி கிளம்பும்போதே அருண் சுமியிடம் சொல்லிவிட்டான் “இங்க பாரு உங்க அண்ணனோடு அங்க போறதெல்லாம் சரிதான்.உங்க அம்மா அங்க என்ன கூத்து நடத்தினாலும் அமைதியா வந்துரு. அவங்களுக்கு ஏத்தாப்புல ஆடிட்டு நிக்காத. அவங்க ஏதாவது பிரச்சனை பண்ணுனா அதுக்கு சமாதானமா நீ பேசி எடுத்து முடிச்சிட்டு வா. கண்டிப்பா உங்க அம்மா பொண்ணு பாக்குறாங்கிற பேர்ல அங்க பிரச்சனை பண்ணிட்டுதான் வருவாங்க. எனக்கு நல்லாவேதெரியும். எங்க அத்தையைப் பத்தி எனக்கு தெரியாதது எதுவும் இல்லைன்னு” சொல்லி எச்சரிக்கைப் பண்ணி தான் அனுப்பினான்.

அதற்கு ஏற்றாற்போலவே ருக்குமணி வீட்டுக்குள் போவதற்கு முன்பாகவே பிரச்சனையை பிள்ளையார் சுழி போட்டு அழகாக் தொடங்கி வைத்திருந்தார்.

ராதாவுக்கு மனதெல்லாம் படபடவென்று அடித்துக்கொண்டது. அதனால் வேர்த்து விறுவிறுத்து அப்படியே அடுத்து என்ன நடக்கப்போகுதோ? என்று தெரியாது பயந்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளது நிலையை கண்ட மோகன் தான் “ராதா எதுக்கு வெளியே நிக்கிற நீயும் உள்ள வந்து உட்காரு” என்று அவனது வீடு போன்று நினைத்துக் கொண்டுப்பேசினான்.

அதற்குள் மணிகண்டன் “ஓஹோன்னானாம் இவன்கூடத்தான் கேண்டினில் பேசிட்டு இருந்தியா?”என்று கோபத்தில் கேட்டான்.

அதை பார்த்த ருக்குமணி “தம்பி நானும் அங்க தான் இருந்தேன் ராதாகிட்ட பேசலாம்னு வந்தேன். அவ பேசாம இறங்கிப்போயிட்டாளா. சரி நல்ல காரியம் வீட்டுல வந்து பேசினாதான் சரியாக இருக்கும்னு நாங்களே வீட்டுக்கு வந்துட்டோம். பெரியவங்க நம்மளா பேசி முடிவு எடுத்து இரண்டு பேரும் கல்யாணத்தையும் நடத்தி வைக்கணும்ல அதுக்காக தான் சொல்லாமகொள்ளமால் நாங்களே வந்திருக்கோம்” என்று பூடகமாக பேசினார்.

“கல்யாணமா? யாருக்குக் கல்யாணம் பேச வந்திருக்கீங்க? எங்க வீட்ல தான் கல்யாணம் பேசுவதற்கு பொண்ணே இல்லையே. எங்க மூணு பேத்துக்கு தான் கல்யாணம் முடிஞ்சு குழந்தை குட்டி எல்லாம் இருக்குதே. ஏதோ வீடு மாற்றி வந்துட்டீங்க போல”என்று செல்வம் கேட்டான்.

“அடேய் தம்பி உனக்கு புரியலையா உன் தங்கச்சிக்காரி இந்த பையன் கூட பழகிட்டு இருக்கா. அது தெரிஞ்சு அந்த பையனோட அம்மாக்காரி அவளை பொண்ணு கேட்டு வந்திருக்காங்க. உனக்கு இதுக்கூட புரியலையா? என்ன நீ தத்தி மாதிரி பேசிட்டு இருக்க” என்று மணிகண்டன் நக்ககலாகச் சிரித்தான்.

அதைக் கேட்டதும் நல்லதம்பி மணிகண்டனை பார்த்து “என்ன பெரிய தம்பி பேசுற யாரு இருக்காங்க யாரு முன்னாடி நம்ம தங்கச்சியை பேசுறோம்னு தெரிஞ்சு பேசணும். நம்ம வீட்டு பிள்ளைங்களை வெளிய விட்டுக் கொடுத்தா பேசுவாங்க” என்றதும் தனது வாயை மூடிக்கொண்டு அப்படியே மணிகண்டன் அமைதியாகிவிட்டான் ஆனாலும் தனது தங்கையை பார்த்து முறைத்துக் கொண்டிருந்தான்.

மைதிலியும் காவேரியும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்து “ஏதோ கூத்து நடக்குது போல இந்த ராதா என்னமோ செய்து வச்சிருக்கா. குடும்பத்துக்கு மொத்தமா கெட்ட பேரு உண்டு பண்ண போறான்னு நினைக்கிறேன். மாமா இதுவரைக்கும் பொறுமையா இருந்தாரு. இனி எப்படி பேச போறார்ன்னு பார்ப்போம்”என பிரச்சினைகளை சந்தோஷமாக வேடிக்கை பார்க்க காத்திருந்தனர்.

நல்லதம்பி ருக்குமணியிடம் “சொல்லுங்க என்ன விஷயமா எங்கள பாக்க வந்திருக்கீங்க? நீங்க எங்க சொந்தக்காரங்களும் கிடையாது. இதுக்கு முன்னாடி உங்களை நாங்க பார்த்ததும் கிடையாது. நீங்க யாருன்னு சொல்ல முடியுமா?: என்று நிதானமாக ஆனால் வார்த்தைகளில் ஊசி குத்துவது போல கேட்டார்.

“என் பேரு ருக்குமணி இது மோகன் இது என் மகன்.அவ மக சுமி அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சது .மோகனுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணிட்டு இருக்கோம். என் தம்பி பொண்ணு தருணிகாவை தான் பேசி வைத்திருக்கோம். ஆனால் அவனுக்கு வேற ஒரு பொண்ணு பிடிச்சிருக்குன்னு சொன்னான். யாருன்னு கேட்டா உங்க மக ராதாவை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டான்.பெத்தவளாச்சே அதனால் பொண்ணு கேக்க வந்திருக்கும்” என்று பார்த்து விஷயத்தை போட்டு உடைத்து விட்டார்.

“என் பொண்ணு ராதாவுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிஞ்சிட்டு நாலு வருஷத்துக்கு முன்னாடியே கல்யாணம் முடிஞ்சு மூணு வயசுல பெண் குழந்தை இருக்கு.அங்க என் பொண்டாட்டி தாமரை தூக்கி வைச்சிருக்காளே வெண்ணிலா. அவதான் என் பேத்தி. ராதாவோட பொண்ணுதான். அப்படி இருக்கும்போது அவளை எப்படி நீங்க பொண்ணு கேட்டு வர முடியும்?என்ன அர்த்தத்துல நீங்க கேட்டு வந்திருக்கீங்க?” என்று அடக்கப்பட்ட கோபத்தை வார்த்தைகளில் வெளிப்படுத்தாதவாறு கேட்டார்.

“அதெல்லாம் எனக்கு தெரியுங்க உங்க மகளுக்கு கல்யாணம் முடிஞ்சு மூணு வயசுல குழந்தை இருக்கு உங்க வீட்ல கூடஇருக்கா. தன்னுடைய சுய சம்பாத்தியத்திற்காக வேலைக்கு வந்திருக்கா என்று எல்லாமே தெரியும். ஆனா என்ன செய்ய என் மகன் ஆசைப்பட்டுட்டானே! என் மகனோட ஆசைதான் எனக்கு முக்கியம்.ஒரு விவாகரத்து ஆன பொண்ணுக்கு மறுவாழ்வு கொடுக்கிறது தான் அவனுடைய எண்ணம்னா அது நிறைவேற்றிவிட்டு போகட்டுமே! அதை எதுக்கு நம்ம தடுப்பானேன்னு பெருந்தன்மையா வந்து இருக்கிறேன்” என்று சொன்னார்.

அதைக் கேட்ட ராதா கோபத்தில் “எனக்கு வாழ்க்கை கொடுங்கன்னு உங்ககிட்ட வந்து நான் நின்னனா? இல்ல நான் வந்து வாழ்க்கைப்பிச்சை போடுங்க மேடம்னுக் கேட்டனா? நேத்து நீங்க என்கிட்ட என்ன சொன்னீங்க? உங்க மகனுக்கும் உங்க அண்ணன் மகளுக்கும்தானே கல்யாணம் பேசி இருக்கேன் சொன்னீங்க.அது அப்படியே இருந்துட்டு போகட்டுமே எதுக்கு என் வாழ்க்கையில குறுக்க வரீங்க? நான் நல்லா இருக்காது உங்களுக்கு பிடிக்கலையா ?முதல்ல வெளியப்போங்க”என்று கத்தினாள்.

“என்ன ராதா இப்படி பேசுற?எங்க அம்மா பொண்ணு கேட்டு தானே வந்து இருக்காங்க. அது ஏதோ கொலைக்குத்தம் மாதிரி ஏன் இப்படி கத்துற?கொஞ்சம் மரியாதையா போசு.இதுசரியில்ல” என்று மோகன் தனது சத்தத்தை உயர்த்தி பேசினான்.

எதுடா சரியில்ல எது சரியில்ல?முதல்ல பொண்ணுகிட்ட வரதுக்கு முன்னாடி அது எனக்கு விருப்பமா இல்லையான்னு தெரிஞ்சுகிட்டு வந்தியா?நீ அப்படிக்கேட்டுட்டு வந்திருக்கணும் .அது எப்படி என்கிட்ட கேட்காமலயே வந்தீங்க?இதுக்கு முன்னாடி நான் உங்ககிட்ட இதைப்பத்தி ஏதாவது பேசி இருக்கேனா? இல்ல பல்லை காட்டி உன்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதானம் சொல்லுற மாதிரி ஏதாவது நடந்திருக்கேனா? இந்த ரெண்டு வருஷமா என் பார்வையிலும் சரி என்னுடைய நடையிலும் சரி ஏதாவது தப்பா நடந்திருக்கனா?” என்று மோகனை அடிக்காத குறையாகக் குற்றம் சாற்றப் பேசினாள்.

இது எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த நல்லதம்பி “ராதா நீ உள்ள போ” என்று ஒரே வார்த்தையில் முடித்து விட்டார்.

“அப்பா நான்…” என்று ஏதோ சொல்ல வாய் எடுக்கவில்லை “உள்ள போன்னு சொன்னேன் ராதா.வெண்ணிலா எடுத்துட்டு உள்ள போ” என்று மீண்டும் சத்தத்தை உயர்த்தாமல் கோபத்தில் அதிர்ந்து பேசாது அவ்வளவு அழுத்தமாக ராதாவிடம் உள்ளே போ என்று சொன்னார்.

“இதற்கு மேல் யாரும் அங்கு இனி பேச முடியாது” என்று தெரிந்து கொண்ட ராதா தனது மகள் வெண்ணிலாவை எடுத்துக்கொண்டு தன் அறைக்குள் சென்று விட்டாள்.

நல்லத்தம்பி ருக்குமணியிடம்”என் பொண்ணுக்கு இரண்டாந்தாரம் கல்யாணம் பண்ணிக் கொடுக்கிறேன்னு நான் எதுலயும் விளம்பரம் பண்ணலையே. பின்ன எதை வைச்சுப் பொண்ணுக்கேட்க வந்தீங்க? என மகளுக்கு இரண்டாவது கல்யாணம் பண்ணி வைக்கிறமாதிரி எந்த ஐடியாவும் எங்களுக்கு கிடையாது. உங்க மகனுக்கு வேற ஒரு பொண்ண பாத்து நல்லபடியா கல்யாணம் முடிச்சு வாழ்க்கையா வாழவைக்க பாருங்க. இதுக்கு மேல என் பொண்ணைத் தேடியோ இல்லை என் பொண்ணு கிட்ட பேசுவோ நீங்க முயற்சி செய்தீங்கன்னா தெருவுல ஓடவிட்டு அடிப்பேன். இந்த நல்லத்தம்பி யாருன்னு இந்த ஏரியால கேட்டு பார்த்தால் தெரியும். நான் என்ன சொல்ல வர்றேன்னு புரியுதா?இதுக்கு மேல என் பொண்ணைக்கேட்டு என் வீட்டு வாசப்படி மிதிக்கக்கூடாது. மணி செல்வம் இவனுங்களை இங்கிருந்து விரட்டிவிடுங்க”என்று கோபத்தில் கத்தினார்.

“அது எப்படி நீங்க எங்களை விரட்டிவிடுங்கன்னு சொல்லலாம்? நாங்க மரியாதையா பொண்ணு கேட்டுதான் வந்தோம். உங்க பொண்ணு இரண்டாந்தாரமா இருந்தாலும் பரவாயில்லை பிள்ளை இருந்தாலும் பரவாயில்லை என்றுதான் என் மகனுக்கு பொண்ணு கேட்டு வந்தேன். நகை நட்டுக்கூட பார்த்துப் போடுங்க. ஆனால்குழந்தையை நீங்களே வைச்சுக்கங்க.பொண்ணை கட்டித்தாங்கன்னுதான் கேட்கவந்தோம். உங்களுக்கே உங்க புள்ளைய பத்தி அக்கறையோ எதுவும் இல்லைன்னா நாங்க எதுக்கு பீல்பண்றோம். என் மகனுக்கு நிறைய பொண்ணுங்க க்யூல நிக்கிறாங்க நாங்க அதுல யாரையாவது ஒருத்தரை பிடிச்சு கட்டிவைச்சிடுவோம் .உங்கப்பொண்ணை என் மகன் வாழ்க்கைக்குள்ள வராமல் பார்த்துக்கங்க.புண்ணியமாகப் போகும்”என்று வந்தவேலை முடிந்துவிட்ட திருப்தியில் எழுந்து வெளியே வந்தார்.

நம்ம என்ன நினைச்சு வந்தோம் இங்க என்ன நடக்குது?என்ன நடந்துச்சு?மொத்தமா என் ஆசையில் எங்கம்மாவும் ராதாவின் அப்பாவும் சேர்த்து பத்து லாரி மண்ணை அள்ளி மொத்தமாகப் போட்டுட்டாங்களே! என்று பரிதாபமாக எழுந்த மோகன் வேதனையிலும் நம்ம காதல் நிறைவேறாது என்று அங்கலாய்ப்போடு அமைதியாக யாரோடும் பேசாது வீட்டுக்கு வந்தான்.