தெள்ளழகே-2

தெள்ளழகே!-2
ராதா நிமிர்ந்துப்பார்த்தாள் மோகன் கோபத்தில் இன்னும் அங்கயே நிற்பதைக் கண்டு சுற்றியும் கண்களால் நோட்டம்விட்டாள்
எல்லோரும் இவர்களையே பார்த்திருந்தனர்.
அதனால் மெதுவாக “மோகன் சார் ப்ளீஸ் உங்க கேபினுக்குப் போங்க.எல்லோரும் நம்மளையே பார்க்கிறாங்க.தயவு செய்து எனக்குக் கெட்டப்பெயர் வாங்கித் தந்திடாதிங்க.தயவு செய்து போங்க சார்”என்று கெஞ்சாத குறையாகக் கேட்டதும் மெதுவாக அவனது கேபினுக்குச் சென்றான்.
‘இவ என்ன நினைச்சிட்டிருக்கா? ஏற்கனவே ஜாடைமாடையாக என் விருப்பத்தை அவக்கிட்ட சொல்லியாச்சு. அதுக்கும் பதில் சொல்லாமல் இரண்டுவருஷத்தை ஓட்டிட்டா. இன்னைக்கு நேரடியாகச் சொன்னாலும் பதில் சொல்லாமல் திரும்பிக்கிறா? என்னைப் பார்த்தால் மார்க்கெட்டுல விலைபோகாதவன் மாதிரி இருக்கா என்ன? எத்தனை பேரு எனக்குப் பொண்ணுத்தர்றதுக்கு க்யூவுல நிக்கிறானுங்க. என் தாய்மாமா ஒருவருஷமா வீட்டுக்கு நடையா நடக்கிறாரு. அவங்களையெல்லாம் விட்டுட்டு நான் உன் பின்னாடி வர்றேன்ல உனக்குத் திமிருடி”என்று திட்டிக்கொண்டிருந்தான்.
அவள் தன்பின்னாடியே வந்து விளக்கம் சொல்லுவாள் என்று எதிர்பார்த்து இருந்தான்போல. அவள் வருகிறாளா? இல்லையா? என்று எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அவள் வரவில்லை என்றதும் அதற்கும் கோபப்பட்டு வெளியே வந்தான்.அப்போதும் ராதா எந்தவிதமான உணர்வுகளையும் வெளிப்படுத்தாது திரும்பிப் பார்த்துவிட்டு தனது வேலையில் கவனமாக இருந்தாள்.
‘இதுக்குமேல இவளுக்காகவெல்லாம் காத்திருக்கக்கூடாது.மோகன் நீ பேசாமல் உங்கம்மா பார்க்கிற பெண்ணையே கல்யாணம் பண்ணிக்கோ!’என்று அவனது ஈகோ அவனைத் தட்டிவிட்டது.
அதனால் நேராக அவளருகில் வந்தவன் ஒரு சேரை எடுத்துப்போட்டு உட்கார்ந்தான். அந்த அக்கவுண்ட் செக்ஷனில் உள்ள அத்தனைபேரும் வேலைப்பார்த்துக்கொண்டே இங்கே என்ன நடக்கிறது என்றுதான் பார்த்திருந்தனர்.
அதையெல்லாம் கண்டுக்காது மோகன் ஸ்கீரினில் கையைக்காட்டி வேலை விசயமாகப் பேசிக்கொண்டிருந்தான்.
சிறிது நேரம் கழித்து எல்லோரும் தங்களது வேலையைப் பார்க்க இப்போது மெதுவாக”ராதா நான் உன்கிட்ட என் காதலைச் சொன்னேன்.அதுக்கு நீ பதிலே சொல்லாமல் இருக்கிற?என்னைப் பார்த்தால் எப்படித் தெரியுது?ஊர்ல வர்ற வரனையெல்லாம் தட்டிக்கழித்துவிட்டு உனக்காக காத்திட்டிருக்கேன் நீ என்னடான்னா இப்படி இருக்க.உன் பதிலுக்காக காத்திருக்கேன்.இரண்டு வருஷமா உன் பின்னாடிதானே சுத்துறேன். உனக்கு அது தெரியாமலா இருந்துச்சு? உன் பின்னாடி நாங்கெல்லாம் சுத்துறோம்னு உனக்கு பெருமையும் திமிரும் அப்படித்தானே!”என்று அவளுக்கு மட்டும் கேட்கும் வண்ணம் அடிக்குரலில் கேட்டான்.
அதுவரைக்கும் அவன் பேசுவதை கவனிக்காது இருந்தவள் அந்தக் கடைசி வார்த்தையில் அவனைத் திரும்பிப் பார்த்து ஒற்றை புருவத்தை ஏற்றியிறக்கினாள்.
‘என்ன உளறிட்டிருக்க?’என்றகின்ற அர்த்தம் புருவம் உயர்த்துதலில் இருந்தது.
அதில் கொஞ்சம் தனது கோபத்தை குறைத்தவன் “எனக்கு உன்கிட்ட நிறைய பேசவேண்டியதிருக்கு ராதா! ஒன்னு நீ என் கேபின் வா. இல்லை ஈவ்னிங் வெயிட் பண்ணு காபி ஷாப் போய் விவரமா எல்லாத்தையும் பேசிடலாம்”
அதற்கு உதட்டை வளைத்தவள் ‘நான் எதுக்கு உன்கூட பேசுறதுக்கு வரணும்?எனக்கு நீ யாரு?’என்று அர்த்தத்தில் ப்ச்ச் என்றவள் இதற்குமேல் இவனருகில் இருக்கக்கூடாது என்று எழுந்து வாஷ்ரூம் போவதுபோன்று போய்விட்டாள்.
‘ஊப்ஸ் இவளை நான் எந்தவழியில் பேசி மடக்குறதுன்னே தெரியலையே கடவுளே!இதுக்கே இப்படி நாக்குத்தள்ளுதே இதுல காதலைச் சொல்லி; அவளைக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வைச்சு: எங்கம்மா ருக்குவ அவங்க வீட்டுல பேசைவைச்சுன்னு ஏகப்பட்டது இருக்கே.அதுக்குள்ள உனக்கு அறுபதாம் கல்யாணமே வந்திடும்டா மோகன்.நல்ல நேரத்துல உனக்கு மோகன்னு பேரை வைச்சிருக்காங்கடா! விளங்கிடும்”என்று கோபத்தில் எழுந்தவன் பார்த்தது உள்ளே வந்துக்கொண்டிருந்த தனது அம்மாவைத்தான்.
“ஐயோ!யம்மாஆஆ ருக்குமணி! ருக்கு நீ எப்படிம்மா இங்க வந்த?போச்சு போச்சு இன்னைக்குத்தான் அவக்கிட்ட பேசிருக்கேன்.அதுக்குள்ள எங்கம்மாவ எண்ட்ரி போடச்சொன்னது யாருடா?”என்று வேகமாக போனவன் ருக்குவின் முன்பு போய் நின்றான்.
அவரிடம் சிரித்துக்கொண்டே “என்ன ருக்கு இந்தப்பக்கம். காலையில் இருந்து மகனைப்பார்க்காம இருக்க முடியலைன்னு ஆபிஸ் வந்திட்டியா என்ன?”என்று அசட்டுச் சிரிப்பு சிரித்தவாறே கேட்டான்.
“என்னடா உன் சிரிப்பே சரியில்லையே!என்ன நான் இங்க வந்தது ஒரு முக்கியமான விசயமாகத்தான்.நீ அப்படியே என்னை திரும்ப பேக் பண்ணி அனுப்பலாம்னு கனவு காணத.வழியைவிடு உள்ள போகட்டும்”
“யம்மா ருக்கு! ருக்குமணி தேவையில்லாத எதையும் செய்துவைக்காத.எதுக்கு நீ இங்க வந்திருப்பன்னு எனக்குத் தெரியும்.நானே இப்போதான் ஏதாவது நடக்குமான்னு பார்க்கிறேன்.நீ வேற அதுல ஆசிட்ட ஊத்திடாத புரியுதா.வா கேண்டின்ல உனக்குப் பிடிச்ச சிக்கன் பப்ஸ் வாங்கித்தர்றேன்.உனக்குப் பிடிச்ச புடவையெல்லாம் வாங்கித் தர்றேன்.வா வா”என்று கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு கேண்டின் பக்கமாகச் சென்றான்.
“டேய் டேய் விடுறா என்னை எனக்கு அவளை இன்னைக்குப் பார்த்தேயாகணும்.நீ என்னை எப்படித்தான் ஏமாத்தினாலும் இன்னைக்கு அவளைப் பார்க்காமல் போகமாட்டேன்.உன் வாழ்கைக்கு ஒரு முடிவு எடுத்தே ஆகணும்.சும்மா சும்மா பார்க்கிற பொண்ணையும் வேண்டாம்னு ஓட்டிட்ட.என் தம்பி மகளையும் கட்டிக்கமாட்டேன்னு ஓருவருஷமாக பிடிகொடுக்கமாட்டுக்க. இதுக்கெல்லாம் அவதான் காரணம்.அவகிட்டப் பேசிட்டா ஒரு முடிவுக்கு மொத்தமாக வந்திடலாம்”
“யம்மா யம்மா ருக்கு ருக்குமணி!நானே இன்னைக்குத்தான் காதலைச்சொல்லிருக்கேன். அதுக்கே இன்னும் எந்த ரியாக்க்ஷனும் வரலை. இப்போ போய் நீ என்ன பேசினாலும் மொத்தமா முடிஞ்சிடும்.தயவு செய்து முடிச்சுவிட்றாத!”என்று கெஞ்சிக்கொண்டிருந்தான்.
ஏற்கனவே வாஷ்ரூம் சென்றிருந்த ராதாவுக்கு தலைவலி வின்னுவின்னுன்னு தெறித்தது.
‘ஏற்கனவே குடும்பத்துக்குள்ள இருக்க பிரச்சனைகள் போதாதுன்னு இந்த மோகன் வேற புது பிரச்சனையைக் கிளப்பிவிட்டிருக்கான் .நானே பலபிரச்சனைகளில் இருந்து வெளியே வரதுக்காக இங்க வேலைக்கு வந்தால் இவன் வந்த முதல் நாளிலிருந்தே ஜொள்ளு விட்டுட்டு இப்போ வந்து உன்னைக் காதலிக்கிறேன் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு வந்து நிக்கிறான்.இதுமட்டும் எங்கப்பா நல்லதம்பிக்கும் எங்கம்மா தாமரைக்கும் தெரிஞ்சது அவ்வளவுதான்.ஏற்கனவே ஒரு காதல்ல பட்ட வலியே போதும்டா சாமி.இதுல இவன் வேற கடுப்பு டேஷை உண்டுபண்றான் ‘ என்று தலையைத் தேய்த்துக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.
அவளருகில் இருந்த டீம்மேட் சரண்யா “என்ன ராதா தலைவலிக்குதா? இரண்டுவருஷமா இந்த தலைவலி உன் பின்னாடியே சுத்துதுபோல” என்று நக்கலாகக் கேட்டாள்.
ம்ம்ம் என்ன செய்ய கண்டுக்காம இருந்தாலும் நம்மளை விடமாட்டுக்கே என்று சூசகமாகச் சொன்னாள்.
“கேண்டீன் போகலாமா? எனக்கும் இன்னைக்கு மாமியாரால காலையிலே தலைவலி. காபிக்குடிச்சுட்டு வருவோமா” என்று கேட்டாள்.
“சரி வா போகலாம்.எனக்கும் இப்போ காபிக்குடிச்சா கொஞ்சம் தேவலாம்னு இருக்கு” என்று எழுந்தாள்.
இருவரும் மெதுவாக நடந்துக் கேண்டீன் போய் காபி வாங்கிக்கொண்டு திரும்பினால் அங்கே மோகனும் அவங்க அம்மாவும் உட்கார்ந்திருந்தனர்.
ராதாவுக்கு மோகனைப் பார்த்ததும் கொஞ்சமாக இருந்தத் தலைவலி கூடுதலாகிவிட்டது.
சரண்யாவிடம் மெதுவாக “கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு வந்தா அங்க இரண்டு கொடுமை அவுத்துப்போட்டுட்டுத் திங்குதிங்குன்னு ஆடிச்சாம் அதுமாதிரி இருக்கு. தலவலிக்குதுஈன்னு இங்க வந்தேன்.இங்க அதுக்குமேல இருக்கு”என்று கடுப்பில் காபியை வைத்துவிட்டு உட்கார்ந்தாள்.
“ஏன் ராதா உனக்குத்தான் வேற எந்த ஆப்ஷனும் இல்லையே. இவரும் நல்லாதானே இருக்காரு அதுவும் பிரஷ்ஷா இருக்காரு கட்டிக்கவேண்டியதுதானே!” என்று ராதா மனதில் என்ன இருக்கு என்பதை தெரிந்துக் கொள்ளக்கேட்டாள்.
அவளைத் திரும்பிப் பார்த்தவள் லேசான கசந்த முறுவலுடன் அப்படியே காபியை ரசித்துக் கண்ணை மூடிக்குடிக்க ஆரம்பித்தாள்.
“ஏன் ராதா நான் கேட்டக் கேள்வி தப்புன்னு சொல்லாமல் சொல்லுறியா?”
“கேட்டக்கேள்வி தப்பில்ல சரண்யா கேட்ட ஆளு தப்பு”
“அப்போ இனி கல்யாணமே பண்ணிக்கமாட்டியா?”
“அந்தக் கல்யாணத்துல அப்படி என்ன இருக்க.அடிதடியும் சண்டையும் ஈகோவையும் தவிற எதுவும் சொல்லிக்கொள்கிற மாதிரி கல்யாண வாழ்க்கையில் இல்லை”
“ப்ச்ச் என்னப்பா நீ இருபத்தஞ்சு வயசுக்கூட ஆகலை அதுக்குள்ள கிழவி மாதிரி இப்படி சலிச்சிக்கிற.வாழ்க்கையில் எவ்வளவோ நல்ல விசயம் இருக்குத் தெரியுமா?”
“அப்படியா?நீ அனுபவிக்கிற ஒரு நல்லதைச் சொல்லுபார்ப்போம்”
“அது அது நம்ம வீட்டுக்காரங்க நம்மளை காதலா அன்பா பார்த்துக்கிறாங்கள்ல அது போதாதா?”
“அப்படியா?நேத்து கன்னத்துல நாலு விரல்தடம் இருந்துச்சே அது யாரோடது?”
ராதா அதைக்கேட்டதும் திருதிருவென்று முழித்த சரண்யா வேறெதுவும் பதில்பேசாமல் காபியை குடிக்கத் தொடங்கினாள்.
மோகனோ அவளையும் பார்த்தான்.அவங்க அம்மாவையும் பார்த்தான்.யாரை எப்படி சமாளிக்கணும் என்று ஒத்திகைப் பார்த்துக்கொண்டிருந்தான்.
அதற்குள் சட்டென்று எழுந்த ருக்மணி நேராக ராதாவின் முன்பு வந்து உட்கார்ந்தார்.
மோகன் அவரது பின்னாடியே ஓடிவந்தான்.அதற்குள் அவர் “நீ தான் ராதாவா? நான் மோகனோட அம்மா ருக்மணி?”என்று தோரணையாக ஆனால் ஆளுமையாகச் சொன்னார்.
அதைப்பார்த்தவளுக்கு புரிந்துவிட்டது அவர் என்ன பேசவந்திருப்பார் என்று தெரியாத புரியாத சின்னப்பிள்ளையா என்ன?
அதனால் ராதா “சொல்லுங்க! நான்தான் ராதா? நான்தான் ராதாவான்னு எதுக்கு விசாரிச்சீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா?”
“நான் என்ன பேச வந்திருப்பேன்னு உனக்குத் தெரியாதா என்ன?”
“தெரியாது.எனக்கு என் முன்னாடி இருக்கிறவங்க என்ன பேசப்போறாங்க எது பேசப்போறாங்கன்னு ஞானதிருஷ்டியில் கண்டுபிடிக்கிறளவுக்கு ஞானம் இல்லை.என் காபி முடிஞ்சிடுச்சு நான் கிளம்புறேன்”என்று எழுந்தவளை சரண்யா தோளைப்பிடித்து உட்காரவைத்தாள்.
“ப்ச்ச் என்ன சரண்யா?” என்று அவளிடம் ராதா கோபப்பட்டாள்.
“சில விசயங்களுக்குத் தொடர்புள்ளியா முற்றுப்புள்ளியான்னு பேசினாலே முடிஞ்சிடும்.அதைவிட்டுட்டு காற்புள்ளி போட்டுக்கிட்டே போனால் நல்லாயிருக்காது முடிச்சிட்டு வா” என்றவள் ராதாவைத் தனியாக விட்டுவிட்டுப் போய்விட்டாள்.
ராதா தனது அம்மாவிடம் மரியாதையாகப் பேசாது எழுந்துப்போகிறாள் என்றதுமே அவனது ஈகோ பயங்கரமாக அடிபட்டது. அவளைக் கோபத்தில் முறைத்துப்பார்த்தவன் எழுந்து அவளை உட்கார் என்று சொல்ல முனைவதற்குள் சரண்யா பேசிவிட்டாள்.
அதனால் மோகன் அமைதியாகி அம்மாவிடம் பொறுமையாக இருமா என்று கைகாண்பித்தான்.
“சொல்லுங்க மேடம் உங்களுக்கு என்கிட்ட எதுவும் முக்கியமா பேசணுமா என்ன?”என்று நேரடியாகவே கேட்டாள்.
அதைக்கேட்ட ருக்மணி “என் மகனுக்கு என் தம்பி மகளைப் பேசி முடிக்கப்போறோம்.அதைச்சொல்லதான் வந்தேன்”என்று சொன்னவர் உன் ஜம்பமெல்லாம் என்கிட்ட பலிக்காதுடி என்று கண்களை உருட்டிப்பார்த்துவிட்டு முகத்தைக் கெத்தாக வைத்துக்கொண்டார்.
மோகனோ “அம்மா என்ன பேசவந்துட்டு என்ன பேசுற?நான் ராதாவை விரும்புறேன்மா. அவளைத்தான் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்னு உன்கிட்ட சொல்லிருக்கனேம்மா. ஏம்மா இப்படிப் பண்ற?”என்று ராதாவைப் பாவமாகப் பார்த்தான்.
அவளோ அவனது பார்வையைக் கண்டுக்கொள்ளாது “நல்லது மேடம்.உங்க மகனுக்கு வாழ்த்துக்கள்.சீக்கிரம் கல்யாணம் பண்ணி வைங்க வயசுப்போயிட்டு இருக்குல்ல.அதுதான் உங்களுக்கும் உங்க மகனுக்கும் நல்லது.வாழ்த்துகள் மோகன் சார்” என்று அவனுக்குக் கைக்கொடுத்து வாழ்த்தியவள் வர்றேன் மேடம் என்று கைக்கூப்பி வணங்கிவிட்டு ஹப்பாடா ஒரு தொல்லைவிட்டுச்சு என்று ஆபிஸிற்குள் நுழைந்தாள்.
இந்த அம்மா எதுக்கு வந்தாங்க?என் காதலை மொத்தமா முடிச்சுவிடுறதுக்கா? என்று அவரைப்பார்த்து முறைத்தவனால் வேறு எதுவும் பேசவும் முடியாது செய்யவும் முடியாது இடிந்துப்போய் உட்கார்ந்திருந்தான்.
உங்கம்மா நல்லாதாகவே பேசியிருந்தாலும் ராதா மொத்தாமா உன் காதல்ல குடம் குடமா கொதிக்கிற வெந்நீர் ஊத்திட்டுப்போயிருப்பா மோகன்!!