தினம் தினம் 27

Thinam27

தினம் தினம் 27

27 தினம் தினம் !! 

சத்யா தான் வாங்கிய நிலத்தில் முன்னே கடை கட்டுவதற்காக செங்கல் அடித்துப் போட்டதை மேற்பார்வை செய்ய வந்து நிற்க அவன் பக்கத்தில் பைக்கில் யாரோ வந்து நிற்கவும் யார் என்று பார்க்க காயத்ரியின் கணவர் 

வணக்கம் மச்சான் என்று வணக்கம் செலுத்த சத்யா முகத்தை திருப்ப போக 

மச்சான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், எப்போதும் சத்யாவிடம் பணிவாகத்தான் இருப்பான்.. நல்ல பையன் என பார்த்து பார்த்து தேடிதான் சத்யா இவனை தன் தங்கைக்கு பேசியது... இவனா இப்படி என்று சற்று வருத்தம்தான் 

ப்ளீஸ் மச்சான் கொஞ்சம் தனியா பேசணும், தங்கை இவனுக்கு கொம்பு சீவு அனுப்பி விட்டால் போல என நினைத்துக் கொண்டு சத்யா கொஞ்சம் ஒதுங்கி வர

எப்படியும் நான் போட்ட போட்ல ரெண்டும் உங்களை தேடி அலறி அடிச்சு ஓடி வந்து இருக்குன்னு எனக்கு தெரியும் ... சொத்து எல்லாம் எங்கேயும் போகல அதை மறுபடியும் உங்க பேர்ல எழுதி கொண்டு வந்து இருக்கேன் என்று பத்திரத்தை சத்யா கையில் கொடுக்க .. சத்யா யோசனையாக முன்னே நின்ற காயத்ரி கணவனை பார்த்தான்

 உங்க தங்கச்சி நல்லவதான் ..ஆனா உங்க அம்மா தான் அவளை வாழ விடாம கெடுக்கிறது, அதையும் இதையும் சொல்லி பேராசைக்காரியா ஆக்கிவிட்டு, பணம் பணம்னு ஒரே நச்சரிப்பு தாங்க முடியல மச்சான்.. நானும் சரி நம்ம பொண்டாட்டி அனுசரிச்சு போவோம் அனுசரிச்சு போவோன்னு நினைச்சா , எங்க அம்மாவ கொண்டு போயி முதியோர் இல்லத்துல சேர்த்து விட்டுட்டு சத்தம் இல்லாம கமுக்கமா வந்து ரெண்டு பேரும் உட்கார்ந்துகிட்டாங்க.... அம்மா கிட்ட போயி வாங்கன்னு கூப்பிட்டா உன் பொண்டாட்டி மாமியார் பேசுற பேச்சுக்கு என்னால அங்க இருக்க முடியாது இங்கேயே நிம்மதியா இருந்துட்டு போறேன்னு சொல்லிட்டாங்க.. ஒரு பெத்த பையன் இருந்தும் முதியோர் இல்லத்துல யாரோ போல கிடக்கும் போது தான் எனக்கு தோணுச்சு .. இதுக்கு மேல இப்படியே விட்டா சரி வராதுனனு நினைச்சேன் .. 

எப்பாடா!! காலை சுற்றிய நாகம் விடுபட்ட உணர்வு தான் சத்யாவுக்கு.. 

வயித்துல புள்ள இருக்கும்போது அதை செய்யாத இதை செய்யாதன்னு நானும் எவ்வளவோ சொல்லி பார்த்தேன் , எதையும் கேட்கல ... கடைசில என் குழந்தையும் பாருங்க என்று வருத்தமாக நின்ற அவன் தோளில் தட்டிக் கொடுத்தான் சத்யா 

நாங்க வாழனும்னா, ஒன்னு அவ என் கூட வரணும் அதுக்கு உங்க அம்மா எங்களை விட்டு தள்ளிப் போகணும் .. அவங்க இருக்கிற வரைக்கும் இவளுக்கு சுயபுத்தியே வராது மச்சான்... எங்களையும் வாழ விட மாட்டாங்க, இன்னைக்கு உங்க பணத்தை புடுங்கி கொண்டு வந்து போட்டு அதுல வாழ நினைக்கிறவ , நாளைக்கு எவன் பணமா இருந்தாலும் பரவாயில்லைன்னு நினைக்க ஆரம்பிச்சா, முதலுக்கே மோசமாகிடும் சரி வராது என் குடும்பம் என் புள்ள எங்க அம்மான்னு இருந்தாதான் , எங்க வாழ்க்கையை நாங்க வாழ முடியும்.. உங்க அம்மாவ இனிமே என் வீட்டுக்குள்ள வர சொல்லாதீங்க .. தெரியும் நீங்களும் அவங்கள ஒதுக்கி வச்சுட்டீங்கன்னு இருந்தாலும் நான் தப்பு பண்ணல மச்சான் .. என்ன நம்பி உங்க தங்கச்சியை எனக்கு கட்டிக் கொடுத்தீங்க , இன்னைக்கு வரைக்கும் நான் உங்க நம்பிக்கைக்கு துரோகம் பண்ணல, கடைசி வரைக்கும் என் மனைவியை புள்ளைய பாத்துக்க என்னால முடியும் ... ஆனா அதுக்கு அவ ஒத்துழைக்கணும் , அவளுக்கு தேவையில்லாத கருத்தை சொல்லி கெடுத்து விடுறது உங்க அம்மா தான் ... எனக்கு பணம் காசு எல்லாம் வேண்டாம் மச்சான் நிம்மதியா வாழ்ந்தா போதுன்னு நினைக்கிறேன் ... ஆனா அந்த நிம்மதியை கெடுத்துடறாங்க.... சொல்லிப் பார்த்தேன் கெஞ்சி பார்த்தேன் மிஞ்சு பார்த்தேன், ஒண்ணுக்கும் சரியா வரல.. அதனாலதான் பணம் , சொத்து எல்லாம் போயிடுச்சுன்னு நாடகம் நடத்தி அவங்கள அலைய விட்டேன் ... இந்தாங்க இதுல உங்க கிட்ட இருந்து புடுங்கின சொத்து பத்திரம் இருக்கு.. உங்க பெயரிலேயே மாத்திட்டேன்... 

மன்னிச்சிடுங்க என் பொண்டாட்டிய முதலிலேயே அடிச்சு திருத்தி இருக்கணும் , அவளால உங்க நிம்மதியும் போயிடுச்சு 

ச்சேசே , இப்பதான் நிம்மதியா இருக்கேன் ...நான் யோசிச்சேன் இவர் அப்படி எல்லாம் இல்லையேன்னு.. ஆனாலும் இப்ப எல்லாம் யாரையுமே நம்ப முடியல, பட்டது பெருசு அதனால கண்ணை மூடிக்கிட்டு யாரையும் இப்ப நம்புறது இல்ல... 

சத்தியமா என் மேல எந்த வருத்தமும் இல்லையே மச்சான் 

"இல்ல" என்று சத்யா தலையாட்ட 

"ரொம்ப சந்தோஷம் நான் பெங்களூருக்கு வேலை கிடைச்சு போறேன்.. என் பொண்டாட்டி, புள்ளைய அங்க கூட்டிட்டு போறேன்.. உங்க அம்மாவுக்கு என்ன வழி பண்றதுன்னு எனக்கு தெரியல அதனாலதான் உங்ககிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அதுக்கு பிறகு கலந்து பேசி ஏதாவது செய்யலாமேன்னு யோசிச்சேன் என்றதும் சத்யா பெருமூச்சு விட்டவன் 

"அஞ்சலி என் குழந்தைங்க நான் இதுதான் என் குடும்பம்ன்னு தீர்க்கமா முடிவு எடுத்துட்டேன், இனிமே இதுக்கு இடையில் யாரும் வர்றதை, நான் விரும்பல ... 

புரியுது 

இந்த சொத்து எனக்கு வேண்டாம் இதை நீங்களே வச்சுக்கோங்க என்று சத்யா மீண்டும் காயத்ரி கணவன் கையிலே கொடுத்தான்

"அய்யய்யோ!! இந்த பாவத்தையும் என்னால சுமக்க முடியாது எனக்கு வேண்டாம் என்று அவர் இவன் கையில் திணிக்க ..

"எங்க அம்மாவுக்கு என்ன வழி பண்ணனும்னு கேட்டீங்கல்ல ...அதே வீட்ல அவங்கள இருக்க சொல்லுங்க... இந்த சூப்பர் மார்க்கெட்டை யாருக்காவது வாடகைக்கு விட்டு , அதுல வர்ற பணத்துல அவங்க பாட்ட பார்த்துக்க சொல்லுங்க இதை விட பெருசா என்னால எதுவுமே செய்ய முடியாது ..

"என்ன இருந்தாலும் இந்த கடையை உருவாக்கியது நீங்க தானே , அந்த வீட்டுக்காக மாடா உழைச்சது நீங்கதானே 

"15 வருஷம் கை கால் இல்லாம கட்டில்ல கிடந்ததா நினைச்சுக்கிறேன் ... ஆனா இனிமே அந்த இடம் எனக்கு வேண்டாம், நான் இப்போ இருக்கிற வீடு விலைக்கு வந்திருக்கு , அட்வான்ஸ் போட்டு வச்சிருக்கேன்... ஒரு வருஷத்துல அதை வாங்கிடுறதா சொல்லி இருக்கேன்... அது குட்டி வீடா இருந்தாலும், அங்கதான் எங்களுக்கான வாழ்க்கை தொடங்கி இருக்கு, அந்த வீடு எங்களுக்கு போதும்... அச்சுவை காயப்படுத்தின துன்பப்படுத்தின அந்த நரகம் எனக்கு வேண்டாம் குட்டியே ஆனாலும் இந்த சொர்க்கம் எங்களுக்கு போதும் .."

"அப்போ நீங்களே இத உங்க அம்மாக்கிட்ட குடுத்துடுவீங்களா மச்சான்"

"அவங்க முகத்தை பார்க்க எனக்கு விருப்பம் இல்லை, உங்க பொண்டாட்டி கிட்ட கொடுத்து நான் சொன்னதை சொல்லி , வேண்டாம் நான் சொன்னேன்னு சொன்னா இன்னும் அவங்க மேல எனக்கு கரிசனை இருக்குன்னு மறுபடியும் வந்து ஒட்டிக்க தான் பாப்பாங்க ... இனிமே உங்க மகள் வாழ்க்கையில திருப்பி ஏதாவது பிரச்சனை பண்ணுனீங்கனா இருக்குறதையும் புடுங்கி நடுத்தெருவுல விட்டுட்டு போயிடுவேன்னு ரெண்டு மிரட்டு மெரட்டுங்க, 

ம்ம் 

அப்புறம் உங்க குழந்தைக்கு என்று சத்யா தயக்கமாக கேட்க 

பெங்களூர்ல ஏதோ ஹெல்த் சென்டர் இருக்குதாம் அங்க பார்த்தா கொஞ்சம் பெட்டரா வருவான்னு யோசனை இருக்கு, அதனால தான் அங்க போக யோசிச்சு இருக்கேன்... இனிமே இவளுக்கு செல்லம் கொஞ்சல் எல்லாம் கொடுக்கக் கூடாது மச்சான்.. நீங்க புதிய சத்யாவா மாறிட்டீங்க, நான் உங்க பழைய சத்யா ரோலை எடுத்துக்கலாம்னு இருக்கேன் ... சாட்டை எடுத்து விளாச போறேன் 

"ஹாஹா , என் பொண்டாட்டி அப்பாவி !!ஆனா உங்க பொண்டாட்டி அப்படி இல்ல, எடுத்த சாட்டைய திருப்பி விளாசிடாம 

"அப்படியெல்லாம் பண்ண மாட்டா என் மேல அவளுக்கு அதிகமான லவ்வு இருக்கு, அதே சமயம் கொஞ்சம் லொள்ளு இருக்கு.. அந்த லொள்ள கட் பண்ணிட்டா , கரெக்ட்டா என் வழிக்கு வந்துடுவா.. "

"எப்படியோ பிரச்சனை இல்லாம வாழ்ந்தா சரி.. பார்த்துக்கோங்க , வாழ்க்கையில எல்லாரும் தவறுவதும் , வழி விலகி போறதும் சகஜம்தான், ஆனா குதிரைக்கு ஒரு சாட்டையடி மாதிரி ஒவ்வொரு மனுஷனுக்கும் ஒவ்வொரு சாட்டையடி, சில நேரங்களில் கிடைக்கும் ... எனக்கு இவங்க மூலமா கிடைச்சது, என் தங்கச்சிக்கு உங்க மூலமா கிடைக்கட்டும் ... ஆனா நம்மள நம்பி வந்த சொந்தத்தையும், பந்தத்தையும் விட்டுற கூடாது

" அவள விடுற எண்ணம் எல்லாம் இல்ல, விடுறதா இருந்திருந்தா, அவ என்ன டார்ச்சர் பண்ணும்போது விட்டுட்டு போயிருப்பேனே மச்சான்... இப்பவும் விட்ற கூடாது என்பதற்காகத்தான், உங்ககிட்ட சொல்லிட்டு போறேன்... போயிட்டு வரேன் என்று போன காயத்ரி கணவனை மன நிறைவோடு பார்த்தான் 

காயு அவனும் என்ன சேத்துக்க மாட்டேங்குறான் நீயும் என் கூட வராதுன்னு சொன்னா ஒத்தையில நான் என்னடி பண்ணுவேன்... எனக்கு பைத்தியமே பிடிச்சுடும் காயத்ரி.... 

தன் பையை அடுக்கிக் கொண்டிருந்த காயத்திரி முன் மங்களம் கெஞ்சி கொண்டு நின்றார்

ராத்திரி புருஷன் ஓட்டிய பேய் அப்படி, " என்கூட வாழனும்னா உன் அம்மாவை இங்க விட்டுட்டு வா இல்ல டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போடு.. நான் என் குழந்தையை கூட்டிகிட்டு போறேன் ஒத்தையா கிடந்து சாவேன்னு நினைக்காத, அடுத்த கல்யாணம் பண்ணிக்கிட்டு நான் ஜாம்ஜாமுன்னு தான் வாழுவேன்... ஆனா நீ?

"என்னங்க இப்படி பேசுறீங்க உங்களை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமில்ல

"புடிச்சவதான் இப்படி எல்லாம் பேய் பிடிச்சு ஆடுவாளா, பணம் பணம்னு ஆடுனல்ல.. இனிமே ஒத்த பைசா உன் கைல தரமாட்டேன் , திங்கிறது உடுக்கிறது உனக்கு தேவையானது எல்லாத்தையும் நான் வாங்கி கொடுத்துடுவேன் ... அதை தாண்டி உன் கையில நயா பைசா தரமாட்டேன் இதுக்கு சம்மதம்னா என்கூட வா , 

ம்ம் 

"அதோட உன் அம்மாவுக்கு போன் போட்டு பேசுறது இங்க பாக்க வர்றது, உங்க அண்ணன டார்ச்சர் பண்றது தேவையில்லாத வேலை பண்றது கேள்விப்பட்டேன், ஏன் எதுக்குன்னு கேட்க மாட்டேன் அடிச்சு விரட்டிடுவேன்

"அய்யோ வேண்டாம் , எனக்கு உங்க பணம் எல்லாம் வேண்டாம் உங்க கூட இருந்தா போதும்ங்க 

"இனிமே என் அம்மா என்கூட தான் இருப்பாங்க 

"அம்மாவா என்று காயத்ரி தலையில் சொரிய

இதுக்கும் ஓகேன்னா வா இல்ல உன் அம்மா கூட போ..

"ஐயோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...

" அதோட குழந்தையை இனி நீ தான் பாத்துக்குற, குழந்தைக்கு சோறு ஊட்டுறது குழந்தையை கவனமா பார்த்துக்கிறது எல்லாம் நீ தான்

"அது ரொம்ப கஷ்டமே

 நீதான பெத்த, சொல்ல சொல்ல கேட்காம தேவையில்லாத வேலை எல்லாம் பாத்தல்ல அப்ப நீ தான் பாத்துக்கணும் , இப்பவே கிளம்பு இரவோடு இரவாக காயத்ரியை பார்சல் பண்ண.. மங்களமும் மகள் பின்னாடியே அலைந்தார்

எங்கே கடைசி காலத்தில் அனாதை பிணமாக போய்விடுவோமோ என்ற பயம் பிடித்துக் கொண்டது

விடும்மா உன்னாலதான் என் வாழ்க்கை போச்சு இனிமே என்ன தேடி வந்திராத .. நல்லா இருப்ப என்கிட்ட அன்பா இருந்த மனுஷன் , இப்போ இப்படி எல்லாம் பேசுறாரு.. ஒரு வார்த்தை நான் சொன்னதுக்கு மறுத்து பேச மாட்டார், ஆனா இப்போ என்ன பேசவே விடமாட்டைக்காரு., எனக்கு நீ எல்லாம் வேண்டாம், நீ இருந்தா இரு செத்தா செத்து ஒழி, எனக்கு என் புருஷன் வேணும் அவருக்காக நான் என்ன வேணாலும் செய்வேன்

காயு 

"போம்மா, என்னையும் உன்ன போல பேராசைக்காரியா மாத்திட்ட .. வேண்டாம் தாயே!! நீ உன் மகன் வீட்டுக்கு போவியா, அது உன் இஷ்டம் இனிமே என்கிட்ட பேசாத , என்ன பார்க்க வந்துடாத உன் மக நல்லா இருக்கணும்னு நெனச்சா , தயவு செஞ்சு என் பக்கமே திரும்பி பார்த்துடாத உனக்கு கோடி கும்பிடு என்று போட்ட காயத்ரி பிள்ளையையும் இடுப்பில் இடுக்கிக் கொண்டு அவள் கணவன் பின்னால் குடுகுடுவென்று ஓட ஆரம்பித்தாள்

சொத்து பத்திரத்தை கையில் வைத்துக்கொண்டு மங்களம் போகும் மகளை வெறித்து பார்த்துக் கொண்டு நின்றார்

"வீடு இருக்கிறது பணம் இருக்கிறது ஆனால் சுத்தி உறவுகள் இல்லை... முதுமையில் தனிமை கொடிகள் அந்த கொடிய தண்டனையை அனுபவித்துதான் தீர வேண்டும் !! 

மருமகளை மகளாக எல்லாம் பார்க்க வேண்டாம் மருமகளாகவாவது பார்க்க முயற்சி செய்திருக்கலாம்.... 

நரை வரும் போது நற்குணங்களும் சேர்ந்தே வர வேண்டும் .. இல்லை என்றால் சிறுமை பட்டு போவது உறுதி, 

முதுமையில் உறவுகள் ஊன்றுகோலாக இருந்தால் தான் முதுமை இனிக்கும் !! 

ஊன்றுகோலை உடைத்து விட்டால் தனியாக தள்ளாடத்தான் வேண்டும் !!