தெள்ளழகே-8

தெள்ளழகே-8

தெள்ளழகே!-8

ராதாவும் குடும்பமும் இரவு நேரத்தில் வந்திறங்கியதால் அவரவர் பாட்டுக்கு அவர்களுக்கென்று இருக்கும் அறைக்குள் போய் இரவு தூங்கிவிட்டனர்.

மகளைத் தன்னருகில் படுக்கவைத்துவிட்டு நன்குத் தூங்கிக்கொண்டிருந்த ராதாவுக்கு அதிக சத்தம் கேட்டதும் தொந்தரவாக இருந்தது.

அவள் கண்முழித்துப்பார்த்தாள். அண்ணன் குழந்தைகள்தான் விளையாடிக்கொண்டிருந்தனர்.

முன்பாவது குழந்தைகளைக் கொஞ்சுவாள் எடுப்பாள் எங்க அண்ணன் குழந்தைகங்க என்ற பாசத்தோடு ஒட்டுவாள்.

என்றைக்கு விவாகரத்தாகி வீட்டோடு வந்தாளோ அன்றிலிருந்து அண்ணனுங்களும் அவளோடு ஏறுக்கமாறாக பேசுவதால் ஒதுங்கியே இருந்துவிடுவாள்.

வெண்ணிலாவை மட்டும் அவர்களோடு விளையாட விடுவாள்.வெண்ணிலா காரில் அவ்வளவு தூரம் வந்த அசதியில் நன்றாகத் தூங்கிக் கொண்டிருந்தாள்.

இனி எங்கே தூங்க என்று எழுந்து வந்தவள் முகமெல்லாம் கழுவிவிட்டு மனது பாரமாக இருக்கவும் அப்படியே வெளியே வந்து பால்கனியில் உட்கார்ந்து வேடிக்கைப்பார்க்க கீழே குனிந்தாள்.

அப்போது கீழிருந்த காரில் தனது அம்மா அப்பாவை இறக்கி விட்டுவிட்டு கிருஷ்ணன் காரில் சாய்ந்து அந்தப் பால்கனியை ஏறிட்டுப் பார்த்தான்.

அது வழக்கமாக இங்கே வந்தாலே பார்ப்பதுதானே அது அவனை அறியாமலே வந்துவிட்டது.

அப்படியே ராதாவைக் கண்டதும் மெய்மறந்துப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவளுக்கும் பழைய ஞாபகங்கள் தலைத்தூக்க குனிந்து அவனது கண்களைப் பார்த்தாள்.

இருவரும் அசையாது அப்படியே நின்றிருக்க கடந்தக்கால வசந்தமான நினைவுகள் கண்ணுக்கு முன்பு வந்தது.

மைதிலி மணிகண்டன் நிச்சயம் முடிந்து இங்கேதான் தங்கியிருந்தனர்.

அப்போது காலையில் அங்கும் இங்கும் போவதுபோன்று கீழிருக்கும் மரத்தடியில் வந்து கிருஷ்ணன் நின்றுக்கொள்வான்.

ராதா பால்கனியில் உட்கார்ந்திருந்தால் ஹார்ன் அடித்து தன்னைப் பார்க்க வைப்பான்.

இருவருக்குள்ளும் பார்வையாலே பேசிக்கொள்ளுமளவுக்கு உறவு வளர்ந்திருந்தாலும் இரண்டுபேரும் இன்னும் பிடிச்சிருக்கு என்று சொல்லும் நிலைக்கு வரவில்லை.

அவன் கையசைத்தால் கையசைத்து சிரிப்பாள். தலையாட்டி போ என்று சொல்லுவாள். அவனோ போகமாட்டேன் என்று அழிச்சாட்டியம் செய்வான்.

வீட்டுக்குள்ளிருந்து யாராவது வெளியே வந்தால் மட்டுமே போவான்.அதுவரைக்கும் இருவருக்கும் சைகைப் பேச்சுக்கள்தான் நடக்கும்.

அவர்களின் காதல் தொடக்கத்தில் ராதா காலேஜ் படித்துக் கொண்டிருந்தாள். அவனோ டிப்ளமோ படிப்பை முடித்துவிட்டு குடும்பத்தொழிலான குவாரித்தொழிலைக் கையில் எடுத்திருந்தான்.

அதனால் இருக்குடும்பத்துக்கும் பணம்சம்பாதிக்கணும் வாழ்க்கையில் செட்டிலாகணும் என்கின்ற நிலை இல்லை என்பதால் அடுத்து பொண்ணுக்கேட்டுக் கல்யாணம் பண்ணிக்கலாம் என்று நினைத்திருந்தான்.

அதனால் தைரியமாக அவளைக் காதலிக்கத் தொடங்கியிருந்தான். ராதாவை அவனுக்கு அவ்வளவு பிடிக்கும் பத்து நாள் சாப்பாடு தண்ணியில்லாமலே அவளைப் பார்த்துக்கிட்டிருக்கும் அளவுக்குப் பிடிக்கும்.

மணிகண்டன் மைதிலி திருமணம் அன்றுதான் முதன்முதலாக அவளது கையைப்பிடித்து தன்னருகில் நிறுத்தி வைத்தவன்”எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குப் புள்ள.நம்ம கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று நேரடியாகவே கண்களைப் பார்த்துக்கேட்டான்.

ஏற்கனவே அவனை ரொம்பப்பிடிக்கும் என்ற நிலையிலிருந்து அவன்தான் தனது எதிர்காலம் உயிர் என்ற நிலைக்கு வந்திருந்தவளுக்கு அவன் அப்படிக்கேட்டதும் பனிமழையே பொழிந்தது போன்று உணர்ந்தாள்.

அவள் ஆனாந்த அதிர்ச்சியில் உறைந்து நின்ற அந்தவேளையில் அவளது நாடியைப்பிடித்து யாரும் வருகிறார்களா? என்று பார்த்தவன் குனிந்து அவசர அவசரமாக நச்சென்று அவளது உதட்டில் முத்தம்கொடுத்துவிட்டு போய்விட்டான்.

அந்தமுத்தம் கொடுத்த இனிமையை இப்போது நினைத்தாலும் அடிநெஞ்சில் தித்திக்கும்.அவனது மீசை தனது உதட்டில் பட்டுகுறுகுறுப்பாகியது வரைக்கும் மூளைக்குள் பதிவாகியிருந்தது.  

மணிகண்டன் திருமணம் முடிந்து ஊருக்கும் சென்றுவிட்டனர். கிருஷ்ணன் ராதாவின் மனதில் ஆழமாக வேரூன்றி பதிந்துவிட்டான்.

அவர்களுக்குப் பார்க்கவோ பேசவோ வேறு வழியெதுவும் கிடையாது, நல்லதம்பி என்னதான் படித்து வேலைப்பார்த்தாலும் பெண்பிள்ளைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற கட்டுப்பாடோடு வளர்ப்பதால் பொதுவான டெலிபோன்தான் வீட்டில் உண்டு செல்போன் ராதாவுக்குத் தனியாக கிடையாது.

மைதிலிக்கு பேசுவதுபோன்று அழைத்து ராதாவிடமும் பேசிவிடுவான்.

ஆவுடையப்பனுக்கும் பூங்கோதைக்கும் சின்னமகள் நாகேஷ்வரியை செல்வத்துக்கு கொடுக்கலாம் என்ற எண்ணம் இருந்ததால் பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஆனால் அதற்குள்ளாகவே செல்வத்துக்கும் தாமரையின் சொந்தத்தில் உள்ள பெண்ணை பேசிமுடித்துவிட்டனர்.

அது மைதிலிக்கும் பிடிக்கவில்லை அவளது குடும்பத்தாருக்கும் பிடிக்கவில்லை.அதிலிருந்தே ஒருவிதமான புகைச்சல் இரு வீட்டாருக்கும் இருக்கத்தான் செய்தது.

ஆனால் அதை வெளியே காண்பித்துக் கொள்ளவில்லை. மைதிலியும் நாகேஷ்வரியை செல்வத்துக்குக் கட்டி வைச்சிடணும்னு எவ்வளவோ முயற்சி செய்துபார்த்தாள்.

செல்வம் காவேரியைத்தான் கட்டுவேன் என்று முடிவாக சொல்லிவிட்டதால் வேறு வழியில்லாமல் நாகேஷ்வரிக்கு உள்ளூரிலே வரன் பார்த்துக் கட்டிக்கொடுத்துவிட்டனர்.

அவனுக்கு செல்வத்தைப் போன்று அவ்வளவு படிப்பும் இல்லை. அழகும் இல்லை என்பதால் நாகேஷ்வரிக்குமே செல்வத்து மேல் பொறாமையாகத்தான் இப்போது வரைக்கும் இருக்கிறது.ஆனால் அதை வெளிக் காண்பிக்க மாட்டார்கள்.

செல்வம் கல்யாணத்திற்கு ஆவுடையப்பன் மட்டும்தான் கடமைக்காக வந்துச்சென்றார். கல்யாணமும் சென்னையில் வைத்து நடந்ததால் ராதாவுக்கு ஊருக்கு செல்லும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

அதைவிடவும் கிருஷ்ணனைப் பார்க்கமுடியாததுதான் வருத்தமாக இருந்தது.கல்யாணத்துக்கு அவன் வருவான் அவனிடம் காதலுக்கு சம்மதம் சொல்லவேண்டும் என்றெல்லாம் காத்திருந்தாள்.அது நடக்கவில்லை.

மைதிலிக்குத் தனியாக செல்போன் மணிகண்டன் வாங்கிக் கொடுத்துவிட்டதால் கிருஷ்ணன் ராதாவோடு பேசவே முடியவில்லை. அவளுக்கும் கிருஷ்ணனிடம் பேசும் வாய்ப்பேயில்லாது போய்விட்டது.

செல்வத்திற்கு குழந்தைப்பிறந்து ஒருவருடம் முடிந்தபின்புதான் குலதெய்வம் கோவிலுக்கு வந்தனர் மணிகண்டன் மகனுக்கும் செல்வம் மகனுக்கும் மொட்டைப் போடுவதற்காக வந்திருந்தனர்.

கிருஷ்ணன் குடும்பத்தையும் அழைத்திருந்தனர்.

கிருஷ்ணனுக்கு வரவிருப்பமில்லை என்றாலும் ராதாவைப் பார்க்கவேண்டும் என்ற ஆசையில் வந்திருந்தான்.

பெரிய பெரிய பஸ் பிடித்து ஆட்களை கோவிலுக்கு அழைத்துச்சென்றாலும் கிருஷ்ணன் தனது காரில் தனியாகத்தான் வந்திருந்தான்.

நாகேஷ்வரியும் தனது கணவன் குடும்பத்தோடு வந்திருந்தாள். எல்லோரும் ஒன்னுக்குள்ள ஒன்னு அங்காளி பங்காளிகள் என்பதால் அவளது கணவன் வீட்டாளுங்க ராதா குடும்பத்துக்கு சொந்தம் என்பதால் வரவேண்டியதாகிற்று.

மொட்டை அடிப்பதற்கு முன் சாமிக்கும்பிட அவள் கண்ணை மூடியிருக்கும்போதே மெதுவாக அவளது காதில் வந்து உன்கிட்ட பேசணும்.தனியாக வா என்று சொல்லிவிட்டுப் போய்விட்டான்.

அவள் கண்ணைத் திறப்பதற்குள் காணாமல் போயிருந்தான். அவனெங்கே என்று தேடிக்கொண்டிருந்தவளுக்கு எதிராக மைதிலியின் அருகில் பாந்தமாக நல்லபிள்ளைப்போல நின்றிருந்தான்.

அந்த கிருஷ்ணனை அவள் அவ்வளவு ரசித்திருந்தாள்.அதே பார்வை இப்போதும் அவனிடம் இருந்தது.அவளும் அதே கிருஷ்ணனை இப்போது தேடிப்பார்த்தாள்.

இருவரும் பார்த்துக்கொண்டிருக்க வெண்ணிலா சத்தமாக ராதவைத்தேடி அழுதாள். அந்த அழுகை சத்தத்தில் உணர்வுக்கு வந்தவள் ஓடிப்போய் மகளைத் தூக்கிவிட்டு திரும்ப பால்கனிக்கு வந்தாள்.

கிருஷ்ணன் அங்கில்லை சென்றுவிட்டான்! அதில் அப்படியே அங்கயே உட்கார்ந்து மகளைத் தோளில் போட்டுக்கொண்டு தனது நிலமையை நினைத்துக் கண்ணீர் வடித்தாள்.

அவளது கன்னங்களில் இறங்கிய கண்ணீரைப் பார்த்து வெண்ணிலா துடைத்துவிட்டாள்.அழும் அவளது முகத்தையே திரும்பத் திரும்ப பார்த்தாள்.

இனி மகளின் முன்பு அழக்கூடாது என்று வேகமாகக் கண்ணீரைத் துடைத்துவிட்டு நிமிர்ந்தாள் அங்கே மைதிலி அவளைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளைக்கண்டதும் எழுந்து அறைக்குள் செல்ல முயன்றவளை வழி மறித்து வெண்ணிலாவை அவளது கையில் இருந்துப் பிடுங்கிய மைதிலி ”எங்கம்மாவுக்கு அவங்க பேத்தியைப் பார்க்கணுமாம்” என்றவள் அவளது அனுமதியைக் கேட்காமலயே கீழிறங்கிச் சென்றாள்.

இவ்வளவு நேரம் இருந்த இதமான சூழல் மறைந்து கோபம் ஆழ்மனதிலிருந்துக் கொப்பளிக்க அவள் பின்னாடியே ஓடியவள் நடுக்கூடத்தில் வைத்து மைதிலியிடம் இருந்து வேகமாக தனது மகளை இழுத்து வாங்கிக்கொண்டாள்.

அதைப்பார்த்ததும் பூங்கோதை “பார்த்தீங்களா சம்பந்தி என் மகக்கிட்ட என் பேத்தியை எப்படி உங்க மகள் பிடுங்கிறான்னு? இப்படித்தான் என் மகளை மரியாதை இல்லாமல் நடத்துறீங்களா?” என்று கோபத்தில் சத்தம்போட்டார்.

ஆவுடையப்பனுக்கும் அது பிடிக்கவில்லை.உடனே ராதாவிடம் “ராதா எங்க பேத்தியை பார்க்கத்தானே வந்தோம்.இப்படி செய்தால் என்ன அர்த்தம்?”

அவள் திரும்பி “உங்க மகனுக்கு இரண்டாவது கல்யாணம் முடிஞ்சதும் இதைவிட அழகு அழகான குழந்தை வரும் அதைக்கொஞ்சுங்க. என்கிட்ட என் பேத்தி என் குழந்தைன்னு யாரும் உரிமைக்கொண்டாட வராதிங்க. அது நல்லாவும் இருக்காது”என்று கோபத்தில் சொல்லிவிட்டு மாடிப்படியேறினாள்.

“நில்லு!”ஒரு அதட்டலான குரல் வந்ததும் திரும்பிப் பார்க்கப் பிடிக்காது அப்படியே நின்றாள்.

இங்கே பூங்கோதை மைதிலியின் சத்தம் கேட்டு வெளியை காருக்குள் இருந்தவன் ஓடிவந்திருந்தான்.

அவன் உள்ளே வரவும் ராதா கோபத்தில் பேசியதைக் கேட்டுத்தான் சத்தமிட்டான்

“எங்கம்மா என் குழந்தையைப் பார்க்க வந்திருக்காங்க. அவங்கக்கிட்ட குழந்தையைக் குடு”

“அவங்களுக்கு என்ன பதில் சொன்னேனோ அதேதான் யாருக்கும்னாலும்”

“அது என்குழந்தை”

அவள் பதில் சொல்லும்முன் தாமரை வந்து ராதவிடமிருந்து வெண்ணிலாவை வாங்க முற்பட்டார்.அவளோ இறுக்கிப்பிடித்து வைத்துக் கொண்டாள்.

“வெண்ணிலா அப்பாக்கிட்ட அவளைக்குடு ராதா.இதுல உனக்கு என்ன பிரச்சனைன்னு குதிக்கிற”

“பிரச்சனை இல்லை என் சுயமரியாதை அதைவிட்டு யாருக்கிட்டயும் நான் இறங்கிப் போகணும்னு இல்லை”

“என் குழந்தையை நான் எப்போ வேணும்னாலும் பார்க்க அனுமதி உண்டுதானே.அப்போ ஏன் இப்படிப் பண்ற?”

அவர்கள் பேசிக்கொண்டிருக்க அவளோ மாடிப்படியேறினாள்.

“உங்க மகள் இப்படித் திமிர்தனம் செய்கிறதுனாலதான் எங்க மகன் வேண்டாம்னு அவளை விலக்கி வைச்சான்.இப்பவும் அப்படித்தான் இருக்காள்.படிச்சிருக்கோம் வசதியாக இருக்கோம்னு திமிர் இருந்தால் இப்படித்தான் வாழாவெட்டியாக இருக்கணும்”என்று பூங்கோதை வார்த்தையில் விஷம் தடவிப்பேசினார்.

அந்த வார்த்தையில் திரும்பி கிருஷ்ணனைப் பார்த்தாள். அவனுக்கும் அவளது பார்வையின் அர்த்தம் புரிந்தும் பூங்கோதையை ஒன்றும் சொல்லமுடியாது அமைதியாகிவிட்டான்.

நல்லத்தம்பிதான் “ராதா பேத்தியை இங்கக்குடு. நான் வைச்சிக்கிறேன். அவங்ககிட்டக் குடுக்கலை. அவங்க தூரத்தில் இருந்துப் பார்த்துக்கட்டும். எல்லோரும் அவங்கவங்க இரத்தம்னா பாசம் தானாக வரத்தான் செய்யும்”என்று சொன்னார்.

“என்ன சம்பந்தி இது உங்க மகள் இவ்வளவு பட்டும் மூணுவருஷமாகப் பிரிஞ்சி இருந்தும் இன்னும் திருந்தலைப்போல.அதுசரி பிறவிக்குணம் மாறாதுன்னு சும்மாவா சொல்லிருக்காங்க”என்று வேண்டுமென்றே குத்திக்காட்டிப் பேசினார்.

அவர் சொன்ன அந்த வாழாவெட்டி வார்த்தைக்கே ஒன்னும் கேட்காதவன் இதுக்கா கேட்கப்போறான் என்று தன்னைத்தானே நிதானப்படுத்திக்கொண்டாள்.

”இல்லப்பா என் குழந்தைக்கு அப்பாவே இல்லன்னு வந்துட்டப்பிறகு அப்பாவழி சொந்தங்களும் இல்லைன்னே இருக்கட்டும்.அதுதான் எனக்கும் என் மகளுக்கும் நல்லது”என்றவள் யாருடைய பேச்சையும் கேட்காது வேகமாகப் படியேறி தனது அறைக்குள் சென்று கதவை அடைத்துக்கொண்டாள்.

அப்போது மணிகண்டன் “பாருங்கப்பா உங்கப் பேச்சையும் மதிக்காமல் போறாள்.அவ எப்படி என் பொண்டாட்டிக்கிட்ட இருந்துக் குழந்தையை அப்படி பறிச்சு வாங்குனா.உங்க மகக்கிட்ட சொல்லிவைங்க என் பொண்டாட்டியும் நானும் வேறுவேறு இல்ல.அவளை மதிக்கலைன்னா என்னையும் மதிக்கலைன்னுதானே அர்த்தம்”என்று சத்தமாகப் பேசினான்.

அது ராதவின் காதுக்குக்கேட்டு இதயத்தை வலிக்கக் குத்தியது என்றால் கிருஷ்ணனுக்கு இதயத்தைக் கிழித்து செவிலில் நான்கு அறை வைத்ததுபோன்று இருந்தது.

கணவன் மனைவியின் யதார்த்த உறவுநிலை எப்படி இருக்கவேண்டும் என்பதை முதன்முறையாக இத்தனை பிரிவும் வலிவேதனைக்குப் பின்பு மணிகண்டனின் அந்த வார்த்தை அவனுக்குப் புரியவைத்திருந்தது.

மைதிலியும் மணிகண்டனும் வாழ்ற வாழ்க்கையை ஏன் நாங்க வாழாமல் போயிட்டோம்?என்று ஒரு நொடி யோசித்தான்.

அப்போதுதான் ராதாவின் பக்கம் இருக்கும் நியாயம் கொஞ்சமே கொஞ்சம் தெரிந்தது.

‘இது தெரியாமல்தானே விவாகரத்து வாங்கிப் பிரிஞ்சு அடுத்த வாழ்க்கைக்குத் தயாரானேன். எல்லாம் முடிச்சுபோச்சே? இனி எதையும் மாற்றமுடியாதே! என்று தன் வாழ்க்கையில் செய்த தவறை முதன்முறையாக சரியாகக் கணித்தான் வருந்தினான்.

இதுக்குப்புறம் கணித்துப் புரிந்து என்ன பிரயோஜனம் தம்பி?

இரண்டாவது கல்யாணத்துலயாவது சந்தோசமாக இருன்னு விதி வாழ்த்திட்டுப் போகுது!