தினம் தினம் 24
Thinam24

24 தினம் தினம் !!
சார் உங்க மகனுக்கு கணக்கு சுத்தமா வரல... இப்படி பெயில் ஆகிட்டு இருந்தா, கடைசி எக்ஸாம்ல என்ன நிலவரம்னு எங்களுக்கு சொல்ல முடியாது என்று கணக்கு வாத்தியார் சத்யாவிடம் சொல்லிக் கொண்டிருக்க ... விஷ்ணு தகப்பனை பாவமாக பார்க்க அவன் தோளில் கைப்போட்ட சத்யா
"வந்திடுவான் எனக்கு நம்பிக்கை இருக்கு பார்க்கிறேன் ... வா" என்று மகனை அணைத்து வெளியே அழைத்துவர, தகப்பன் தோளில் கை போட விஷ்ணு தயங்க ,அவன் கையை இழுத்து தன் தோளில் போட்டு கொண்ட சத்யா
"என்னடா பிரச்சனை ஏன் மேக்ஸ் வரல ...
"புரிய மாட்டேங்குதுப்பா....
"ஓஓஓ சரி விடு பாத்துக்கலாம்" என்று தோளில் தட்டி கொடுத்த தகப்பனின் அணைப்பு அவனை வாழ்க்கையில் ஜெயிக்க வைத்து விடும் ...
"அஞ்சு அண்ணன் வந்திருக்கார் வகுப்பில் நின்று கொண்டிருந்த அஞ்சு வெளியே நின்ற லதாவை ஒரு பார்வை பார்த்துவிட்டு வகுப்பு முடியவும் வெளியே வந்தாள் ..
"பேரன்ட்ஸ் மீட்டிங் இருக்கு, வழக்கம் போல நான் போகவான்னு கேட்டேன்... இல்ல இந்த வாட்டி நானே போயிக்கிறேன்னு சொல்லிட்டார் ....
"ஆஹா அண்ணே மாறினாலும் மாறினார் தலைகீழா மாறிட்டார் போல இருக்கு...
"எங்க இன்னைக்கு காலையில கூட ரெண்டு பேரும் சண்டை தான் போட்டுக்கிட்டோம்...
"ஏதே மறுபடியும் மறுபடியுமா
"ம்ம் , ஆனா முன்ன போல, அந்த சண்டையில எனக்கு வருத்தம் எல்லாம் வரல .. சரி கோபப்பட்டாலும் சாயங்காலம் வந்து ஏதாவது சமாதானப்படுத்துவார்னு நம்பிக்கை தந்துட்டார்
அப்படி என்னடி பிரச்சனை நல்லாத்தான போயிட்டு இருந்தது.."
"வேற ஒன்னும் இல்ல லதா , இரண்டு குழந்தைக, கண்ண மூடி திறக்கறதுக்கு முன்ன பெத்து முடித்துச்சிட்டோம், பேசாம இன்னும் ஒன்னே ஒன்னு பெத்துக்குவோமான்னு கேட்டேன்... மனுஷன் கடிச்சு கொதறிட்டாரு.... ஏற்கனவே உள்ள ரெண்டு பிள்ளைகள வளர்க்கறதுக்கே இங்க கண்ணு முழி பிதுங்குது , இதுல உனக்கு அடுத்த புள்ளை வேணுமான்னு கேக்குறாரு... நான் வேணும்னு சொன்னேன் .. அப்ப நீயே பெத்துக்கன்னு சொல்லிட்டாரு... நீங்க முயற்சி பண்ணாம எப்படி நான் தனியா பெக்க முடியும்னு கேட்டேன் , அதுக்கு தான் சண்டை "என்று அஞ்சலி கிளுக்கி சிரிக்க லதா அவள் கன்னத்தில் இடித்து ..
"அப்போ அண்ணாக்கிட்ட நீ மாட்டிக்கிட்டு முழிச்ச , இப்ப அண்ணன் உன்கிட்ட மாட்டி முழிக்கிறார் போல
"ம்ம் ரிவெஞ்ஜ் பழிக்கு பழி வாங்கி அவரை என்ன போல புலம்ப விட்டே தீரணும் .... அப்படி இல்லை இன்னொரு பிள்ளை பெத்து கொடுத்து நீயே வளருடா மேங்கோ மண்டையான்னு கொடுத்து பழியை தீர்க்கணும்" தூரத்தில் மகனோடு பேசி கொண்டு வந்த சத்யா மனைவியை கண்டுவிட்டு
சாப்டாச்சா ??என்று கையசைவில் கேட்க, இவள் இல்லை நீங்க என்று பதில் கையசைப்பு கொடுக்க
"இனிதான் கடைக்கு போய் சாப்பிடணும்..
"சாப்பிடும் போது போன் போடுங்க எனக்கு ப்ரீதான் என்று இவள் கண்ணை சிமிட்ட
"வண்டி இல்லைன்னா பண்றேன் .. ஈவினிங் கூப்பிட வர்றேன் பஸ்ல வராத "
"ம்ம் பைக்கை கிக் செய்தபடி மனைவிக்கு அவன் கையசைக்க புத்தக மறைவில் அஞ்சலி அவனுக்கு கையசைக்க
"மக்கும் நானும் இங்க தான் இருக்கேன் ..என்று லதா கனைக்க
"ஹிஹி நம்ம புள்ள தான இதையெல்லாம் கண்டுக்க படாது இது வாலிப வயசு "
"ஏது ,அம்மாடி கண்ணை முழிச்சிக்க உனக்கு ரெண்டு வாலிப பசங்க இருக்காங்க
"அதுக்கு என்ன நாங்க இப்ப தான லவ் பண்ண ஆரம்பிச்சு இருக்கோம் அப்போ இதுதான வாலிப வயசு.. ஆமா உன் வீட்டாள் உங்கிட்ட எப்படி இருக்கார்
"கவர்மெண்ட் வேலை கிடைச்சு தூரமா போனதுல இருந்து, பொண்டாடி பாசம் பொத்துக்கிட்டு தான் வருது .. நாம இருந்தா நேரத்துக்கு சமைச்சுக் கொடுப்போம், ட்ரெஸ் எல்லாம் துவைச்சு கொடுப்போம், அங்க எல்லாத்தையும் அவரே செய்ய வேண்டியது இருக்கா, இது கூட பரவாயில்லை அக்கம் பக்கத்துல யாரு கூடயும் பேசி பழக்கம் இல்லையா, ஒத்தையாவே இருக்க என்னவோ போல இருக்கு லதா , நீ வேலையை எழுதி கொடுத்துட்டு வர்றியான்னு நேத்து கூட கேட்டுட்டு இருந்தார்
ஓஓ நீ என்ன சொன்ன ??
"நான் தான் கொஞ்ச நாள் கெடக்கட்டும் , அப்பதான் நம்ம அருமை தெரியும்னு காய விட்டு இருக்கேன்.. பக்கத்துல இருக்கும்போது பொண்டாட்டி அருமை தெரியாது, வேலைக்காரி மாதிரி நடத்துறது தூரத்துல போன பிறகு கண்ணே மணியேன்னு கொஞ்ச வேண்டியது.. ஒரு ரெண்டு வருஷம் ஒத்தையா கிடந்து அல்லல் படட்டும், அப்பதான் பொண்டாட்டி வெறும் வேலைக்காரி இல்லன்னு மனுஷனுக்கு புரியும்..
" அடியேய் சைடு கேப்பில, எங்கேயும் சிக்ஸர் அடிச்சிடாமடி
"அந்த அளவெல்லாம் அவருக்கு டேலண்ட் இல்லடி ஏதோ, நாம கட்டிட்டோம்னு வச்சு தள்ளு தள்ளுன்னு தள்ளிக்கிட்டு இருக்கோம் .. மத்தபடி இதுக எல்லாம் நம்ம கிட்டதான் வீரன் மாதிரி வேஷம் போடும் வெளிய வெத்து வேட்டுக"
"அது என்னமோ சரிதான் , ஆனாலும் ரொம்ப காயப்போடாதடி கொஞ்சம் அப்பப்ப கவனிச்சு விடு
"அதெல்லாம் கவனிக்கத்தான் செய்றேன்
"ம்ம் அதை நானும் கவனிச்சேனே.. ராத்திரி ஒரு மணி வரைக்கும் உன் போன் ஆன்லைன்ல இருக்கே.. உன் கவனிப்பு நல்லா தெரியுது" என்று அஞ்சலி சிரிக்க
"அந்த ஒரு மணி வரைக்கும் முழிச்சு கிடந்து நீ என்ன பண்ணுற, உங்கள் லவ்சும் நல்லா தெரியுது என்று லதா சிரிக்க, ஹெச்எம் இருவரையும் முறைத்துக் கொண்டே நகர்ந்தார்...
மாலை அஞ்சலி சற்று லேட்டாக வேலை முடித்து வீட்டிற்குள் வர... சத்யா மேஜையில் உட்கார்ந்திருந்தான் அவன் அருகில் விஷ்ணு புத்தகத்தை புரட்டிக் கொண்டிருந்தான்...
"இவ்வளவுதான் புரியுதாடா
"ம்ம் , ரொம்ப ஈஸியா இருக்கு டாடி , ஆனா மேடம் நடத்துனது ஒன்னுமே புரியல
"அவங்க 40 பேருக்கு கிளாஸ் எடுப்பாங்க விஷ்ணுவுக்கு எப்படி சொல்லி கொடுத்தா புரியும்னு அவங்க யோசிக்க மாட்டாங்க, ஆனா என் புள்ளைக்கு எப்படி சொல்லிக் கொடுத்தா , மனசுல புரியும்னு எனக்கு தெரியும் .. இனிமே மேக்ஸ் அப்பாவே உனக்கு சொல்லி தரேன்" என்ற கணவன் பேச்சில் அவர்களை நெட்டி முறித்த அஞ்சலி,
"என் கண்ணே என் பிள்ளைகளுக்கு பட்டுற கூடாது" என்று சத்தம் இல்லாமல் இருவர் தலையையும் கோதிவிட்டு விட்டு படுக்கையில் ஆடை மாற்றி மகளை தூங்க வைத்திருந்த அவனை திரும்பிப் பார்த்தாள்... மகனுக்கு பாடம் நடத்திக் கொண்டே தலையை திருப்பி என்ன என்று சத்யா கேட்க
"இச்சா ஆஆ" மகனுக்கு பின்புறத்திலிருந்து அஞ்சலி பறக்கும் முத்தம் ஒன்றை உதட்டை குவித்து மனைவி கொடுக்க .. முகம் சிவந்து போன சத்யா சட்டென தலையை குனிந்து கொண்டான்...
ஸ் ஸ்இஇ மீண்டும் மனைவி சத்தம் எழுப்ப... அவன் தலையை திருப்பாமல் புத்தகத்தில் உருட்டிக் கொண்டிருக்க ....
ப்ச் யோவ் ஊஊஊஊஊ வாயசைத்து வம்பிழுத்தாள்.... மகன் முன்னே தலையை தூக்க முடியாது சத்யா புக்கே கதி என்று இருக்க
ப்ச் டேய் சத்யா என்ன பாருடா" என்று அவன் போனில் மெசேஜ் வர.. போனை பார்த்தவன் மனைவியை தேட
அடிங்க சத்யவா??? என்று இவன் பதில் அனுப்ப
"ஆமாடா சத்யா
"தொலைச்சு புடுவேன்
"உங்கிட்ட தொலைஞ்சே போனேடா
சரிதான் முத்தி போச்சு
"ம்ம் முத்தலாக சுற்ற விட்டாய் , இன்னொரு பேபி பெத்துப்போமா என்று அவள் குழந்தை படம் போட
மெண்டல்
"உன் மீது பித்தானேன்
"போடி
"போடா
"ஒரு கவிதை சொல்லவா ??
"ம்ம் அனுப்பு கவிதை கதைகள் என்று அவள் படிப்பதில் பிடித்ததை தன் கணவனுக்கு அனுப்புவாள்... அவனும் ஓய்வு கிடைக்கும் போது உட்கார்ந்து பார்ப்பான்.. மாதம் மாதம் அவளுக்கு பிடித்த புத்தகங்களை தேடி வாங்கி கொண்டு வந்து கொடுப்பது அவன் காதல் முயற்சியில் முதல் முயற்சி...
"இது நானே உங்களுக்காக எழுதின கவிதை சிரிக்க கூடாது
"அனுப்பு அதை பிறகு பார்ப்போம்
"நீ தந்த காமத்தால் ரெட்டை பிள்ளை பெற்றேன்
நீ தரும் காதலால் ஒரு சிசு வேண்டும்
அச்சிசுவை நாம் தாங்க வேண்டும் ...
என் பாதம் வீங்கும் வேளை, உன் விரல் என் மருந்தாக வேண்டும்
நான் இடை உடையும் வலி தாங்கும் போது
உன் உள்ளங்கை இதம் என் நெற்றி உணர வேண்டும்
இரு ஜனனம் எடுத்த போதும்
உன் அருகாமை இழந்து தவித்த பேதை நான்
இனி ஒரு ஜனனம் எடுக்கும் போது
உன் நெற்றி முத்தத்தில் உயிர் வர ஆசை கொள்ளும் பேராசைக்காரி நான்
இவ்வரம் கிடைக்குமா அன்பரே!! என்ற மனைவி கவிதையை வெறித்து பார்த்தான் சத்யா ...
இது வரிகள் இல்லை அவள் வலிகள் ... இரண்டு பேர்கால காலத்திலும் , இது பொம்பள சமாச்சாரம் நாங்க பார்த்துகுகிறோம் சத்யா நீ போ என்று அனுப்பி வைத்த தாய் பேச்சை மறுத்து கெட்ட மகன் என்ற பெயர் வாங்கி இருக்கலாமோ என்று இப்போது யோசிக்கிறான்
ஹலோ சாமி வரம் தர முடியுமா முடியாதா? என்று இவள் அனுப்ப ... பழையதை விட்டு தலையை உதறி வெளியே வந்த சத்யா ...
உன் விருப்பம் அது என்றால்
என்னையே உனக்கு தர எனக்கும் சம்மதமே!! என்ற கணவன் பதிலில் அவள் அதிர , சத்யா தலையை தூக்கி அவளை பார்க்க ...
லவ் யூ டா சத்யா என்று வாயசைத்தவள் மீண்டும் இச் மொச் பறக்கும் முத்தத்தை கொடுக்க ... இவனுக்கு மீசை சிரிப்பில் மலர்ந்தது.. மகன் கண்ணை மறைத்து காதல் விளையாட்டு இருவரும் விளையாட
"அம்மா
ஹான் இருவரும் பதற
"உங்க புருஷனுக்கு நீங்க கிஸ் பண்றீங்க இதுல எதுக்கு சங்கடம், சும்மா என் முன்னாடியே கொடுங்க... நீங்க அங்க குரங்கு சேட்டை பண்றது எதிர்ல இருக்கிற பிரிட்ஜில அப்படியே தெரியுது என்று விஷ்ணு கிண்டல் அடிக்க
அய்யய்யோ!! சீசீ மண்டை மேல இருந்த கொண்டை மறந்து போனேன் மன்னா !!இப்போது முகம் சிவந்து உள்ளே ஓடி மறைவது மனைவியின் முறையாகி போனது ...
விட்டுக் கொடுக்கும் குடும்பங்களில் சிரிப்பு ஒரு நேரம், அழுகை ஒரு நேரம் மாறி மாறி வரலாம்.. ஆனால் ஒரு நாளும் அந்த குடும்பத்தின் நிம்மதி சமாதானம் குறைவு படாது ..
சிலுவை ஒருவருக்கும் , சிறகு ஒருவருக்கும் என வாழ்வதே தவறு !!