தினம் தினம் 16
Thinam16

16 தினம் தினம் !!
வாங்க மருமகன் , நீங்க வர்றத அஞ்சலி சொல்லவே இல்லயே என்று சாந்தகுமார்தான் அஞ்சலியை தாண்டி வேகமாக ஓடி வந்தார்
ஆக அப்பா அவரோடு பேசவில்லை, ஏன் திடீர்னு வந்து நிற்கிறார் ஒருவேளை நான் நேத்து பேசுனதுல, உங்க பொண்ண நீங்களே வச்சுக்கோங்க அப்படின்னு டைவர்ஸ் பத்திரத்தை என் முகத்தில் வீசிட்டு போவாரோ? அப்படி ஏதாவது ஒரு சம்பவம் நடந்தது , போடா நீயும் உன் குடும்பமும் தலை முழுக்கிட்டு அப்பா வீட்ல ஜாம் ஜாம்னு... ஜாம் ஜாம்னு எங்க இருக்க? நான் வாழாவெட்டியா இருக்கிறது பார்த்து என் அப்பாவுக்கு நெஞ்சு வலி வந்துருமே... என்னமோ நான் தப்பு பண்ணிட்டு இங்க வந்து உட்கார்ந்த மாதிரி அம்மா பேசி பேசியே இங்க உலகப்போர் வருமே, சரி சம்பாதிச்சு புள்ள குட்டிகளை பார்த்துக்கலாம்னு சொந்த கால்ல நிற்கலாம்னு பார்த்தா, சுத்தி இருக்கிறவன் ஆயிரம் கல்லை நம்ம மேல தூக்கி போடுவானே, இதெல்லாம் சமாளிக்க பார்த்தாலும் , பிள்ளைங்க அப்பா வேணும்னு கேட்டா என்ன செய்வேன் ... என்ன வெட்டி விட்டுட்டு அவர் அடுத்த கல்யாணம் பண்ணிட்டா அதை தாங்க வலு இதுக்கா? நெஞ்சுக்குள் சொல்ல முடியாத கேள்விகள் அஞ்சலிக்கு அவன் எட்டு வைத்து நடக்க நடக்க இருதயம் டமடம என்று அடித்துக் கொண்டது..
அடிமையாகி விடக்கூடாது என்று நினைத்தேன், ஆனால் நீ கொடுக்காத அன்புக்கு கூட அடிமையாகி விட்டேனோ?
கடவுளே எல்லாரும் முன்னாடியும் மானம் போக கத்துவாரோ தங்கச்சி கிட்ட வேற நான் அப்படி இருக்கேன் இப்படி இருக்கேன்னு பீத்தி வச்சிருக்கேன் ... இவர் வகை தொகை இல்லாம திட்டுவாரே, மானம் போக போகுது.... இவனை யாரு வர சொன்னது, கையை பிசைந்து கொண்டு தகப்பனுக்கு பின்னே பாதுகாப்பாக நின்று கொண்டாள்...
பக்கத்துல லோடு இறக்க வேண்டியது இருந்தது.. அதான் கல்யாணம் முடிஞ்சதும் இவங்களையும் சேர்த்து கூட்டிட்டு போயிடலாம்னு வந்தேன் என்றவன் பார்வை மகளை வருடியது .. யாழி ஓடிவந்து தகப்பன் காலுக்குள் நிற்க.... அவளை தூக்கி உச்சி முதிர்ந்தவன்
"பாப்பா ஏன் இளைச்சிருக்கு, சாப்டியா இல்லையா? ஆசை முத்தம் வேறு வைத்தான் ...
"யப்பா கூட்டிட்டு போக வந்திருக்கார் , முட்டிய இதயம் சமன்பட்டது..மகள் பதில் முத்தம் வைக்க சத்யா இதழில் விரிந்த புன்னகை..
நீயும் ஒரு தகப்பன்டா, இன்னைக்கு காஞ்ச ஓலைக்கு என்ன நடக்குதோ, அது நாளைக்கு பச்ச ஓலைக்கும் நடக்கும்னு தெரியாமதாண்டா ஆடிட்டு இருக்க... வச்சு விட்டான் பாத்தியா ஆப்பு, கரெக்டா ஒரு பொம்பள புள்ளையை பெத்து வச்சிருக்க.. நாளைக்கு உன் மருமகன் வந்து நீ கொனட்டின மாதிரியே அவனும் கொனட்டுவான்.. அப்ப இருக்குடி, நான் கெக்கே பிக்கேன்னு சிரிப்பேன்..
அஞ்சலி என்ன அங்கேயே நின்னுட்டு இருக்க, வந்து பெட்டியை வாங்கு"என்று சாந்தகுமார் குரலில் அவன் அருகில் வந்தவள்... சத்யா கையில் இருந்த பெட்டியை வாங்க
"சாரதா மூத்த மருமகன் வந்து இருக்காங்க பாரு தோசை மாவு இருந்தா தோசை போடும்மா... நான் பக்கத்துல கடை இருந்தா வடை வாங்கிட்டு வந்துடுறேன் ...
"இல்ல , அஞ்சு நீயே தோசை போட்டு கொடுத்திடு என்றான் சத்யா
எங்க போனாலும் நானே தான் இவனுக்கு மடியில தூக்கி வச்சு ஊட்டணுமா, கஷ்டப்பட்டு சேலை கட்டுனேனே போச்சு இனி எங்க கல்யாண வீட்டுக்கு போக? என சலித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய அவள் பின்னே அவனும் தங்களுக்கான ரூமுக்குள் நுழைந்தான்..உள்ளே ஏசி எல்லாம் மாட்டி இருந்தது..
போன வாட்டி வந்து இருக்கும்போது ஏசி இல்லன்னு சண்டை போட்டது அம்மா காதுல விழுந்துடுச்சு போல... இப்போ பென்ஷன் ரூபா வந்ததுல இங்கேயும் ஏசி மாட்டிட்டார்.. நீங்க அடிக்கடி வர மாட்டீங்கன்னு உடனே ஏசி மாட்ட தேவை இல்லாம இருந்தது... ஏசி போடவா
வேண்டாம் என்று சுருக்க பதில் கொடுத்துவிட்டு, சட்டை கூட மாத்தாமல் அறைக்குள் நுழைந்த சத்யா படுக்கையில் மல்லாக்க படுக்க .. அவன் மகள் அவன் மீது கால் போட்டுக்கொண்டு ஏதோ கதை அளக்க அவளுக்கு பதில் சொல்லிக்கொண்டே மகள் காலை தடவி விட்டுக் கொண்டிருந்தான் முகம் ஏதோ சோர்ந்து போய் இருந்தது ... அவனை பார்த்துக்கொண்டே சிறிது நொடி நின்றவள்
தோசை போட்டுட்டு வரவா இல்ல பிறகு சாப்பிடுறீங்களா?
அப்பவே போட்டுட்டு வான்னு சொன்னேன்ல இன்னும் இங்க நின்னு என் மூஞ்ச என்னத்துக்கு பாத்துட்டு இருக்க "
ஆமா அங்க தேன் வடியுது , அதான் குடத்தில் பிடித்து வைப்போமா, கிணத்துல பிடிச்சு வைப்போமான்னு பாத்துட்டு இருக்கேன் என்று அஞ்சலி முணுமுணுத்து கொண்டே கிச்சன் நோக்கி போனவள்.... அவனுக்கு பிடித்தது போல் இரண்டு தோசையை போட குடும்பமே இவளைத்தான் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது
அப்பா என் பசங்கள கூட்டிட்டு போங்க நான் அவர் சாப்பிட்டு முடிச்சதும் கல்யாணத்துக்கு வரேன்
சரிம்மா" யாழி விஷ்ணுவை அழைத்துக் கொண்டு திருமணத்திற்கு அவர்கள் சென்றுவிட .... இவள் கதவை பூட்டிவிட்டு உள்ளே வந்தாள்
பெட்டில் உட்கார்ந்தே சாப்பிட்டுக் கொண்டிருந்தான் சத்யா, ஏதோ தவறாகப்பட்டது...
"என்னாச்சு?
"என்னாச்சுன்னா??? சாப்பிட்டுக் கொண்டே அவளை பார்த்தான்
"இல்ல திடீர்னு வந்து இருக்கீங்களே அதான் என்னாச்சுன்னு கேட்டேன்..
"சொன்னேன்ல லோடு வந்திருந்தது, அது கூட வந்தேன் ரூம் போட வேண்டியது இருந்தது.. ரூம் போட்டா 500 ரூபாய் வேஸ்ட்.... சரி இங்க தானே இருக்கன்னு வந்தாச்சு
"ஓஓஓஓஓ ... தட்டில் கையை கழுவி அவள் அருகே நகட்டி வைத்து வி்ட்டு மீண்டும் படுத்தான்...
"நான் கல்யாணத்துக்கு போயிட்டு வந்திடவா?
ம்ம் ... கதவு வரை போனவள் அங்கிருந்து அவனை பார்த்தாள் சத்யாவும் தலையை திருப்பி அவளை பார்த்தான் ...
ப்ச் என்ன ஆச்சுன்னு தெரிலேயே முகம் தொங்கி போய் கிடக்கு கேட்டா சொல்ல மாட்டாரே... அய்ய என்னடா வம்பா போச்சு இவன் சிரிச்சாலும் கடுப்பாகுது முறைச்சாலும் நமக்கு ஆகல, இப்படி அமைதியா இருந்து தொலைச்சாலும் ஏதோ போல மனசு கிடந்து அடிக்குது...
தொண்டையில் சிக்கிய மீன் முள் போலத்தான் பெண்களின் வாழ்க்கை துப்பவும் முடியாது விழுங்கவும் முடியாது....
அவன் அருகே வந்து உட்கார்ந்த அஞ்சு சத்யா கழுத்தில் கை வைத்து பார்த்தவள்
"உடம்புக்கு ஏதாவது பண்ணுதா..
"ப்ச் கையை தட்டி விட்டான்
"எதுக்கு முகம் ஒரு மாதிரி இருக்கு "..இப்படி உர்ரான் சீன் போட்டு தகப்பன் கிட்ட காசு வாங்கி கொடுன்னு கேட்பானோ, செஞ்சாலும் செய்வார் ... நயா பைசா வாங்கி கொடுக்க கூடாது இவரை எல்லாம் நம்பி அப்பா காசு கொடுத்தா கடைசி காலத்துல அவங்க நடுத்தெருவுல தான் நிக்கணும்... சத்யா போன் கீர் கீர் என்று அடித்தது ... மங்களம் தான் ,சத்யா ஒரு பார்வை பார்த்துவிட்டு அணைத்து போட்டான் அடுத்து அவன் தங்கையிடம் இருந்து வந்தது அதையும் அணைத்து போட ....
ஆஹா!!! இது என்னைக்கும் நடக்காத கூத்தா இருக்கே முதல் ரிங்கிலேயே காயு, அம்மான்னு பாசத்தை பிழியுற ஆளு இத்தனை போன் போட்டும் எடுக்காம இருக்கார்னா சம்திங்க் ராங்க்
"நீ போகல
"இல்லை நீங்க ஒருமாதிரி இருந்தீங்க அதான் யோசனையா நின்னுட்டு இருக்கேன் .... எதுவும் பிரச்சனையா
"ஆமான்னு சொன்னா நீ என்ன செஞ்சிடுவ... கிளம்பு கொஞ்சம் நேரம் தூங்குறேன் ஈவினிங் சேர்ந்து கிளம்பிடுவோம் ....
"ம்ம் .... அஞ்சலி கதவு வரை போக
"அஞ்சுஊஊ
"என்னங்க ..
"நகை ரெண்டு திருப்பி பெட்டியில வச்சிருக்கேன் எடுத்து போட்டுட்டு போ என்று குப்புற விழுந்து அவன் தூங்க கண்ணை மூட
"ம்ம் கடவுளுக்கு நான் போட்ட கூக்குரல் கேட்டு குளோனிங் முறையில புருசனை செஞ்சு அனுப்பிட்டாரா..என் புருசன் நகையை புடுங்கிட்டுதான போவார் , இவர் என்ன நான் கேட்காமலேயே திருப்பி கொண்டு வந்திருக்கார்.. கல்யாணம் அன்று பார்த்த ஆரம் இன்று தான் பார்க்கிறாள் எடுத்து மகிழ்ச்சியாக போட முடியவில்லை
என்னவா இருக்கும் வாயை திறக்க மாட்டைக்கிறாரே காசு இல்லைன்னு சொன்னார் இதை திருப்ப ஏது காசு ? பேசி சாகடிப்பது ஒரு சைக்கோ தனம் என்றால் பேசாது சாகடிப்பது இன்னொரு வகை சைக்கோ தனம் இந்த ரெண்டு வில்லத்தனமும் கொண்ட ஒரே ஜீவன் புருசன் வகையறாதான்...
"எடுறா போனை அடிடா ஸ்பைக்கு போனை "என்று போனை தூக்கி கொண்டு ஓடிய அஞ்சலி. பக்கத்து வீட்டு மாமிக்கு போனை போட்டாள் ... தெருவுக்கு நாலு சிசிடிவி கேமரா இருக்கும், அதுகளை மீறி எவனும் ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது... எப்படியும் நாலு மேட்டர் தேறும்... என்று அஞ்சலிக்கு தெரியுமே
"மாமி எப்படி இருக்கீங்க , அங்க ஏதுவும் விசேஷமா... நாட்டு நடப்பு விசாரித்து விட்டு தன் வீட்டு செய்திக்கு வர
"உனக்கு விஷயமே தெரியாதா அஞ்சலி ... உன் மாமியாருக்கும் உன் வீட்டாளுக்கும் நேத்து பெரிய சண்டை ஆகி போச்சு
"ஹான் ..... இருக்காதே
"அட நான் என்ன பொய்யா சொல்றேன் போதாக்குறைக்கு உன் சம்மந்தி வேற வந்து நின்னு ஆடிட்டு தாயை கையோட கூட்டிட்டு போயிட்டா
"எதுக்குன்னு தெரியுமா ?
"ஏன் எதுக்குன்னு உனக்கு தெரியாதாக்கும்
சத்தியமா தெரியாத மாமி நான் அம்மா வீட்டுக்கு வந்திட்டேன் .. அதான் கேட்கிறேன்
"சத்யா அங்கையா இருக்கான்
"ஆமா மாமி வந்த நேரத்துல இருந்து அமைதியா இருக்கார் அதான் ஏன்னு கேட்க போன் போட்டேன்...
"அதை ஏன் கேட்கிற , உன் மாமியா இப்படி பண்ணும்னு நினைக்கவே இல்ல அஞ்சலி
"என்ன பண்ணிச்சு ... காசு எதையும் ஆட்டையை போட்டு மகளுக்கு கொடுத்துடுச்சோ என்று அஞ்சலி யோசிக்க ...
"உன் மாமனார் பேர்ல இருந்த வீடு கடை எல்லாத்தையும் காயத்திரி பேர்ல பத்திரம் போட்டு கொடுத்துருச்சு போல என்று கூற , கேட்டு கொண்டிருந்த இவளுக்கு நெஞ்சே வெடித்து விட்டது
"மாமி எ.....ன்...ன சொல்றீங்க ?
"ம்ம் வீடு கடைன்னு எல்லாத்தையும் அவ பேர்ல கள்ள பத்திரம் போட்டு கொடுத்துட்டு அமுக்கமா இருந்துக்கிட்டு போல , மாமா பத்திரம் போடுற விஷயமா அங்க போயிருந்தார், அவர்தான் விஷயம் கேள்வி பட்டு சத்யாக்கிட்ட சொல்லி இருப்பார் போல இவன் நம்பவே இல்லயாம் கடைசியா அங்க போய் பார்த்தா எல்லாம் இவ பேருக்கு மாறி இருந்திருக்கு... பிள்ளையாண்டான் உடைஞ்சு போயிட்டான் ...
என் புருசன் சம்பாதிச்ச சொத்து நான் யாருக்கும் கொடுப்பேன்னு உன் அத்தைக்காரி திமிரா சொல்லுது என்ன நினைச்சானோ பெட்டியை தூக்கிட்டு வெளியே வந்துட்டான் பார்க்கவே பரிதாபமாக ஆகி போச்சு அஞ்சலி ..இந்த குடும்பத்தை சத்யா எப்படி சுமந்தான்னு எங்களுக்குதானே தெரியும்
"அய்யோஓஓஓஓஓஓஓஓஓஓஓ" இருதயம் அலற சத்யாவை நோக்கி ஓட நெற்றி மீது கையை வைத்து விட்டத்தை வெறித்து பார்த்து கொண்டிருந்தான் சத்யா ....
இவர்கள் நம்மை ஏமாற்றவே மாட்டார்கள் என்ற எண்ணம் தான் நாம் ஏமாந்து நிற்க முதல் காரணம்!!
நம்பிய மனைவி பிள்ளைகளை விட்டுவிட்டு அடுத்தவர்களை தோளில் சுமந்தால், ஒருநாள் அந்த சுமை சுமந்தவனையே அமுக்கி கொன்றுவிடும் ...
மனைவி பிள்ளைகள் மட்டுமே சுகமான சுமை
மற்றவர்களுக்கு செய்வது அத்தனையும் கடமை மட்டுமே அளவாக இருந்தால் சுற்றமும் குடும்பமும் நிலைக்கும்..