தினம் தினம் 13

Thinam13

தினம் தினம் 13

13 தினம் தினம் !! 

மாலை வரை தான் தாய் வீட்டு மயக்கம் கிறக்கம் எல்லாம் இரவு நெருங்கியதும் மணாளன் நியாபகம் வந்து கேலி செய்து அவள் மானத்தை வாங்கியது.. 

சைத்தான் வரும் போது சூனியம் வச்சு அனுப்பிட்டான் போல இங்க வந்தும் அவன் குரல் கேட்குது, நாலு நாள் அந்த தடியன் நியாபகம் இல்லாம இருக்கணும் நம்மள அந்தாளு நினைக்கவா போறார் என்றவள் போனில் சத்யா அவன் மகளை தூக்கி வைத்தது போல போட்டோவோடு காலிங் வர ... 

அதிசயமா இருக்கு போன் எல்லாம் போடுறார்.. 

"ஏட்டி யாழி இங்க வா உன் அய்யன் பேசுறார், வந்து சேர்ந்துட்டோம்னு சொல்லு" என்று மகளை பிடித்து கையில் போனை திணிக்க 

"போம்மா விளையாட போறேன் .... 

"ஒழுங்கா சொல்லிட்டு போ... அப்டியே காலையில சாப்பாடு அந்த கிழவி என்ன செஞ்சு கொடுத்துச்சுன்னு கேளு கடையில திங்க சொல்லாத... வீட்டுல கெழுநரி போல அது கிடக்குதுல்ல ரெண்டு நாள் அவரை பார்த்துக்க சொல்லு "விஷ்ணு தாயை நக்கலாக பார்த்தவன் 

"அஞ்சலி அஞ்சலின்னு இங்க ஒரு மானஸ்தி இருந்தா பார்த்தீங்களாம்மா ...

"ப்ச் போடா , யாழி பேசு பேசு போனை ஆன் பண்ணி காதில் கொடுத்து விட்டு அஞ்சலி காதை போன் அருகே வைக்க 

"ஹலோ" சத்யா குரல் கம்பீரமாக வந்தது 

"ஹலோ அஞ்சுஊஊஊஊஊ "உதட்டை சுளித்து முகத்தை கோணினாள் 

"பக்கத்துல இருக்கும் போது அஞ்சு மூக்குல பஞ்சை வைக்க வேண்டியது இப்ப அஞ்சுவாம் அஞ்சு 

"அப்பா 

"என் தங்கமா,  

"ஆமா டேடி 

"அவன் பெத்தது தங்கம் அடுத்தவன் பெத்தது மட்டும் தகரம் எனக்கு வில்லி மாமியா இல்லை இதுதான்... கொஞ்சலை பாரு "

"ப்பா நாங்க வந்து சேர்ந்தாச்சுன்னு அம்மா சொல்ல சொல்லுச்சு... கடையில திங்க கூடாதாம், அதையும் அம்மாதான் சொல்ல சொல்லுச்சு... "அஞ்சலி தலையில் அடித்து கொண்டாள் 

"போச்சு நாமதான் இப்படி இருக்கோம்னா, நாம பெத்ததும்ல சதி பண்ணுது 

"அம்மாக்கிட்ட கொடு தங்கம்" சத்யா குரல் கேட்டது ..

"நான் குளிக்க போறேன் ,நீயே பேசு யாழி "என்று வேண்டுமென தவிர்த்து விட்டு அஞ்சலி போய்விட்டாள்... 

அவன் அனுமதி கேட்காது ஊருக்கு வருவது இதுதான் முதல் முறை.. இப்படி ஊமை நாடகம் போடுவதும் இதுதான் முதல் முறை என்னதான் நடக்குன்னு பாப்போமே என்று பார்க்க 

அப்பா அம்மா பத்தி என்னடி கேட்டார் மகளிடம் விஷயம் கறக்க பார்க்க 

"அப்பா ஆதார் கார்ட் எங்க வச்சிருக்கீங்கன்னு கேட்டார் "

"ப்ச் அதுக்குதான் என்ன தேடினானா, நான் கூட சண்டை போட்டுட்டு வந்துட்டாளே சமாதானம் பண்ண தேடுறார்னு நினைச்சேன் ஏமாந்து போறதே எனக்கு ஹாபியா ஆகிடுச்சு ச்சை என்று முனங்கி விட்டு ஹாலுக்குள் நுழைய 

"பாத்தியா என் மக வாங்கிட்டு வந்த சட்டையை தகப்பன் அவள் வாங்கி கொடுத்து சட்டையை தடவி தடவி பார்த்தார்... வெறும் ஐந்நூறு ரூபாய் சட்டைதான் அவருக்கு அது ரொம்ப குறைவு தான் கை நிறைய பென்சன் வாங்கி இன்னும் யாருக்கும் பாரம் இல்லாது சேர்த்து வைத்து கெளரவமாக வாழ்பவர் ஐந்நூறு ரூபாய் சட்டையை ஆர தழுவது மகள் மீது வைத்திருந்த நேசத்தை பிரதிபலித்தது... 

"எனக்கும் தான் சேலை எடுத்துட்டு வந்திருக்கா நல்லா இருக்கா என்று தாய் சேலையை மேலே போட்டு காட்ட .... 

"இரு நானும் போட்டு காடடுறேன் என்று தகப்பனும் சட்டையை போட்டு கொண்டு நிற்க... அஞ்சலி மனம் கனத்த உணர்வு 

படிக்க வைத்து கட்டி கொடுத்து அதுக வாழ்ந்தா போதும் என்று ஒதுங்கியும் இருந்து ஆண் பிள்ளை பெத்தவ நான் என்று அவர்கள் பேசும் பேச்சுக்கு தலையும் குனிந்து நம்ம விட இவர்கள் நிலை இன்னும் மோசமோ?? 

பெரிதாக ஒன்னும் வேண்டாம் ... மாமா நல்லா இருக்கீங்களா, செக்கப் போனீங்களா ,உடம்பை பார்த்துக்குங்க ஒரு வார்த்தை கேட்டால் இவனுக்கு வாயில் பூராண் போயிடுமா என்ன ??  

அப்படி என்ன ஆண் என்ற கர்வம் !!

பெண்ணுக்கு ரெண்டு வீட்டையும் பேலன்ஸ் பண்ண தெரியும் ... 

ஆணுக்கு அது வராது , தனக்கு ஒன்று முடியாத போது தன் தகுதியை இழந்து விட கூடாது என அவன் போடும் முகத்திரையே நான் ஆண், நீ பெண் என்ற மூகமூடி!! 

சத்யா அவர்களை பஸ்ஸில் ஏற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைய, அப்போதுதான் அவன் தாயும் எங்கோ இருந்து ஓடி வந்து நின்றார்

"எங்கம்மா போயிருந்த??

"ஹான் அதுவா கனகா இருக்கால்ல , அவ வீட்டுக்கு போயிருந்தேன்

"நேத்து தான் சொன்ன கனகா அவங்க மக வீட்டுக்கு திண்டுக்கல்லுக்கு போய் இருக்குன்னு... இப்ப எந்த கனகாவ பார்த்துட்டு வர்ற என்ற மகன் கேள்விக்கு மங்களம் வியர்வைத்த துடைத்துக் கொண்டே 

"கனகா இல்லடா கங்கா கங்கா வாய் மாறி வந்துடுச்சு என்று உளறலாக சொல்லிவிட்டு உள்ளே ஓடியது

"ம்மா அவ வந்த பிறகு கொஞ்சம் பார்த்து நடந்துக்க வளர்ந்த பிள்ளைங்க இருக்காங்க, அதுக்கு முன்னாடி சண்டை போட்டுக்கிட்டே இருந்தா நல்லா இருக்காது ..

"என்னவோ நான் சண்டை போடுற மாதிரி என்கிட்ட வந்து சொல்லிட்டு இருக்க

நீ தான் அவளை சண்டைக்கு இழுப்ப , அதனால தான் அவ சண்டைக்கு நிப்பா, அஞ்சு முடிஞ்ச வரைக்கும் சண்டையே தவிர்க்கத்தான் பாப்பா.. நீ தான் கூட கூட பேசி அவளை வம்புக்கு இழுக்கிறது என்ற மகனை கூர்ந்து பார்த்த மங்களம்...

என்னடா போலீஸ் ஸ்டேஷன்னு சொன்னதும் பயந்துட்டியோ...

போலீஸ் ஸ்டேஷன் போக பயம் இல்ல, போற அளவுக்கு நடந்துக்க கூடாதுன்னு யோசனை.. வேற என்ன, பாத்துக்க என்று விட்டு அறைக்குள் புகுந்தான் ... அவனுக்கு தேவையான சட்டை அயர்ன் பண்ணி வைத்திருந்தாள் ப்ரஷர் மாத்திரை பிரித்து பாக்கெட் போட்டு மேஜை மீது இருந்தது , டவல் உள்ளாடைகள் எல்லாம் படுக்கை மீது கண்படும் இடத்தில் இருந்தது.. ஏசி ரிமோட் சார்ஜர் என்று சிறிய பொருள் கூட அவன் கைக்கு எட்டும் தூரத்தில் வைத்து விட்டு போயிருந்தாள்... 

பத்து வயசு சின்ன பொண்ணே, விவரம் தெரியாம இருக்காளேன்னு ... அதை செய்யாத இத செய்யாத அப்படி செய்யாத இப்படி செய்யாதன்னு சொன்னா குத்தமா தெரியுது, வெளியே இருக்கிற ஆயிரம் கொடச்சல இவ கிட்ட காட்டுனா தாங்குவாளா? ஏதோ கோவத்துல ஒன்னு ரெண்டு வார்த்தை விட்றதுதான் அதுக்கு என்ன நிலை நிக்கிறா.. மனசுக்குள்ள அவன் இவன்னு கண்படி பேச வேண்டியது... ஆனா, வெளியில அப்படியே அப்பாவி பிள்ளை மாதிரி ஒரு பார்வை பார்த்து வைப்பா... அது என்னவோ இந்த மருமகள்களுக்கு புருஷனோட தாய் தகப்பனை கண்டாவே ஆக மாட்டேங்குது .. நம்ம தாய் தகப்பன் மாதிரி தானேன்னு யோசிச்சு தொலைச்சாதான் என்ன? காலைல இருந்து ராத்திரி வரைக்கும் இவங்க அவளை குறை சொல்றதும் அவ இவங்களை குறை சொல்றதும் என்ன குடும்பமோ என்று சலித்துக் கொண்டே கடைக்கு கிளம்பினான்....

மயிராண்டி நீ அவ தாய் தகப்பனை மனுசனா நினைச்சி இருக்கியாடா ..

சத்யா கடையில் போய் உட்கார்ந்தான் வியாபாரம் முன் போல் இல்லை ... இருப்பதை வைத்து அஞ்சலி சமாளித்து விடுவாள்.. ஆனால், தங்கை அன்னை இவர்கள் பிக்கல் பிடுங்கல்தான் இப்போதெல்லாம் அதிகமாக இருக்கிறது... முடியாது என்று மனைவியிடம் சொல்ல எளிதாக வந்து விடுகிறது.. தங்கையிடம் சொல்ல முடிவதில்லை.. இவ கிட்ட சொன்னா புரிஞ்சுக்குவா என்று தெரியும்... எவ்வளவு கஷ்டம் வந்தாலும் தாய் தங்கையிடம் ஒரு பத்து பைசா கூட கேட்க மாட்டான், இவளிடம் தான் வந்து நிற்பான்... அஞ்சு சேர்த்து வச்ச காசு ஏதாவது இருந்தா தாடின்னு.... 

தாய் தவறே செய்தாலும் இவளைத்தான் திட்டுவான் அத்தோடு அந்தப் பிரச்சினையை முடித்துவிட்டு நகர வேண்டும் என்றால், இவன் அஞ்சலியை கத்திவிட்டு நகர்ந்தால்தான் முடியும் ... தாயை கத்த முடியாது மனைவியை கத்துவிட்டு போக எளிது..

தகப்பன் இல்லாமல் வளர்ந்த தங்கை, என் அப்பா இருந்திருந்தா எல்லாம் செஞ்சு இருப்பார் என்று ஒரு வார்த்தை சொல்லிட கூடாதே என்று நினைத்துதான் தன் தகுதிக்கு மீறி இழுத்துக் கொண்டிருக்கிறான் ... தலையை தடவிக் கொண்டே கடையில் அவன் உட்கார்ந்திருக்க

அண்ணே என்ற குரலில் சத்யா தலையை நிமிர்த்து பார்க்க லதா நின்று கொண்டிருந்தாள்..

அது என்னவோ அவள் தோழிகள் என்றால் இவனுக்கு வேப்பங்காய் கசப்பு ... ஒன்னும் தெரியாதவள இவங்க தான் சூதுவாது சொல்லிக் கொடுத்து கெடுத்துட்டாங்க என்பது போலவே நினைத்து வைப்பான்... 

அஞ்சலி ஸ்கூலுக்கு வரலையே

ஏதோ லீவுன்னு சொன்னா ..

லீவு எல்லாம் இல்ல ஸ்கூல் நடந்துகிட்டு தான் இருக்கு... சொல்லாம கொள்ளாமல் லீவு எடுக்க மாட்டாளே, அதான் பொருள் வாங்கிட்டு அப்படியே கேட்டுட்டு போகலாம்னு வந்தேன் ..

அவங்க அம்மா வீடு வரைக்கும் போய் இருக்கா என்று முகத்தை பார்க்காமலே பதில் சொல்லிவிட்டு நோட்டில் கணக்கு எழுதிக் கொண்டிருந்தான்

ஓஓஓ என்ற லதா அக்கம் பக்கம் ஆள் அசப்பு பார்த்துவிட்டு 

அண்ணே

என்ன சலிப்பாக அவளைப் பார்த்தான் 

நேத்து ஹெச்எம் அவகிட்ட கொஞ்சம் தப்பா நடந்துக்க ட்ரை பண்ணி இருப்பாரு போல இருக்கு அட்டெண்டர் என்கிட்ட வந்து சொன்னார் ... கொஞ்ச நாளாவே அவர் நடவடிக்கை சரியில்ல, நேத்து காலையில அஞ்சலியை தனியாக கூப்பிட்டு உட்கார வச்சு அசிங்கமா பேசி இருப்பான் போல இருக்கு.. கையில் இருந்த பேனா அவன் கையில் வளைப்பட்டது

 "என்ன சொல்ற

"ம்ம் இது ரொம்ப நாளா நடக்குது அண்ணா அவ செருப்பை கழட்டி அடிச்சிருவேன்னு கண்ட மேனிக்கு பேசிட்டு வெளியே போயிட்டா போல இருக்கு .. அந்த கோவத்துல தான், நம்ம விஷ்ணுவ அந்த ஆள் மாட்டிவிட்டுட்டார் ... 

"ஏன் என்கிட்ட சொல்லல??

" உங்க கிட்ட சொல்ல பயம் அண்ணா, எங்க வேலையை விட்டு நிறுத்திட்டீங்கன்னா வீட்டிலேயே கிடக்கணுமோன்னு பயந்து சொல்லல ... இப்ப கூட விஷயம் விபரீதம் ஆகிட கூடாதுன்னு தான் நான் உங்ககிட்ட வந்து சொல்றேன் அண்ணா, நான் சொன்னேன்னு அவ கிட்ட சொல்லாதீங்க.. போயிட்டுவரேன் என்று லதா போய்விட 

சத்யா முகம் கோபத்தில் சிவந்து போய் பைக்கை ஸ்டார்ட் பண்ணினான்

எவன் பொண்டாட்டி கையை எவன் புடிச்சி இழுக்கிறது, நான் என்னவும் சொல்லி திட்டுவேண்டா அவ என் பொண்டாட்டி , என் உரிமை என் சொத்து , அவள அடிப்பேன் நாண்டுகிட்டு நிப்பேன் கண்டவனெல்லாம் கைய புடிச்சு இழுக்குறதுக்கு நான் என்ன ஓசிலியா பொண்டாட்டிய விட்டு இருக்கேன்" சத்யா பைக் ஸ்கூலை நோக்கி பறந்தது.... 

பாலைவனத்தில் கிடக்கும் நீர் போல, ஆண்கள் மனதிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நேசம் கிடக்கத்தான் செய்யும்..

பாலைவனத்தில் நீரை கண்டுபிடிப்பது எவ்வளவு கடினமோ? அவ்வண்ணமே, ஆண்களின் மனதில் ஒளிந்து கிடக்கும் ஒற்றை புள்ளி நேசத்தை கண்டுபிடிப்பதும் கடினம்தான்...