தினம் தினம் 11

Thinam11

தினம் தினம் 11

11 தினம் தினம் !!

சாப்பாட்டு மேஜையில் குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்கும் அளவிற்கு அமைதியாக இருந்தது.. கிழவியும் ஆளோடு ஆளாக வந்து சத்தமில்லாமல் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தது..

"இது போதுமா இல்ல முட்டை ஏதாவது பொறிக்கனுமா "அஞ்சலி பார்சலை திறந்து வைத்து அத்தனை பேருக்கும் பரிமாறிக் கொண்டு கேட்ட கேள்வியில் சத்யா அவள் முகத்தைப் பார்த்தவன்..

"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் இருக்குறத வச்சு திண்ணுக்கலாம்.. என்று ஆண் புலி பம்மியது.. 

"எப்பா அப்படியே நான் பேசுனதுல பயந்துட்ட மாதிரியே ஃபிலிம் காட்டுவான்.. இதே மாதிரி எத்தனை தடவை பேசி இருக்கேன் ... எத்தனை தடவை சரி சரி விடுன்னு மழுப்பி இருக்காரு, அதுக்கு பிறகு பழைய குருடி கதவை திறடின்னு சைனா பீஸ் பொம்மை மாதிரி பத்து நாள்ல பல்லை இளிச்சிடும்.. இதையெல்லாம் நானும் உண்மைன்னு நம்பி மறுபடியும் ஏமாந்து போறேன்.. ஆனா இனிமே இந்த மாதிரி என் பிள்ளைங்ககிட்ட அரெகண்டா நடந்துக்கிட்டாரு சொன்னதை செஞ்சுடனும் ... ஒரு நாளாவது இவனை தூக்கி ஜட்டியோட கொண்டு போய் போலீஸ் ஸ்டேஷன் முக்குல உட்கார வச்சிடனும் யுவர் ஹானர்.... அப்போ கூட நமக்கு தான் வலிக்கும் , இவன் அங்கிருந்து வந்து இந்த ஜட்டியை துவைச்சு போடுன்னு அப்பவும் நம்மள தான் ஏவுவான்.. மானங்கெட்ட பய முழுங்கிறதை பாரு சோத்தை காணதவன் போல 'என்று புலம்பிக்கொண்டே அவளும் சாப்பிட்டுவிட்டு, சத்யாவை திரும்பி பார்க்காமல் அறைக்குள் போய் பிள்ளைகளோடு படுத்துக்கொண்டாள்

"என்னடா சத்யா உன் பொண்டாட்டி திடீர்னு போலீசு கேசுன்னு ஒரு மாதிரி பேசுறா.. தன் தாயை சத்யா

 திரும்பிப் பார்க்க 

"இல்லடா கதவு திறந்து கிடந்துச்சுல்ல அது வழியா நீங்க பேசுனது எனக்கும் அரசல் புரசலா கேட்டுச்சு

"ப்ச் விடும்மா அவ பேசுறதுல்லாம் அப்படியே செஞ்சுட போறாளா என்ன., அந்த அளவு எல்லாம் அவளுக்கு தைரியம் கிடையாதும்மா... 

"இருந்தாலும் ஊஊஊ

"இன்னைக்கு நடந்த விஷயத்துல, என் மேல தப்பு இருக்கு அதனாலதான் அமைதியா இருக்கேன்... இவளுக்கு பயந்து இல்ல.... ஏன் எதுக்குன்னு கேட்காம தோளுக்கு மேல வளர்ந்த பிள்ளையை கை நீட்டுனது தப்பு ...

"பாரு சத்யா உனக்கு இருக்குற ஈவு சரண உன் பொண்டாட்டிக்கு இல்லையே , எப்படி எல்லாம் நாக்கு மேல பல்ல போட்டு பேசுறா பாத்தியா... நாம என்னமோ இவள கொடுமை படுத்துற மாதிரில்ல ஆகிப்போச்சு.... கடவுளே என் மருமக, என் பேர புள்ளைன்னு மட்டும்தான் இதுவரைக்கும் நினைச்சி இருக்கேன்... என் மகளுக்கு கூட இந்த அளவு மரியாதை கொடுத்தது கிடையாது... போனவாரம் அந்த கனகா என் மருமக என்னை அப்படி கொடுமை படுத்துறா , இப்படி கொடுமை படுத்துறான்னு அழுதா... ஆனா , நான் என்ன சொன்னேன் தெரியுமா? எனக்கு கடவுள் அவ்ளோ அழகான மருமகளை கொடுத்திருக்காரு, என்ன அவ்வளவு அருமையா பாத்துக்குறான்னு வாய் நிறைய சொன்னேன். என்ன போய் போலீஸ் ஸ்டேஷன்ல உக்கார வச்சுருவேன்னு சொல்லிட்டாளே சத்யா அதைத்தான் என்னால தாங்கமுடியல... அந்த இடத்திலேயே நெஞ்சு புடிச்சு செத்து இருப்பேன் போல இருக்கு "

"விடும்மா விடும்மா நீயும் கொஞ்சம் பொறுமையா தான் போயேம்மா... அவ என்னத்தையாவது பேசிட்டு போறா, செஞ்சிட்டு போறான்னு நீயும் அமைதியா இருக்க மாட்டேங்குற, தேவை இல்லாம என்னத்தையாவது ஒன்னு பேசி வச்சுடுற ... உங்க ரெண்டு பேருக்கு இடையில நான் தான் மாட்டிகிட்டு முழிக்க வேண்டியது இருக்கு ... இந்த இழவுக்கு கல்யாணம் பண்ணாமலே இருந்திருக்கலாம் போலன்னு இப்போ எல்லாம் நினைக்க வேண்டியது இருக்கு.... சாப்பிடுட்டு போய் தூங்கு "என்று பாதி சாப்பாட்டிலேயே கையை கழுவி வைத்துவிட்டு சத்யா எழும்பி ஹாலுக்கு போய் விட்டான் ...

மங்களம் சோத்தை பிசைந்து கொண்டே யோசனையான முகத்தோடு உட்கார்ந்திருந்தார் 

"இவளுக்கு கொடுக்கு முளைக்க ஆரம்பிச்சிடுச்சு இதுவரைக்கும் காச் மூச்சுன்னு சத்தம் போடுவா ஆனா இந்த மாதிரி கேஸ் போலீஸ் ஸ்டேஷன்னு திமிரா பேச மாட்டாளே.. பட்டத்தோட நூல் இவன் கையில இருக்கிற வரைக்கும் தான் பிரச்சனை இருக்காது.. இவ சுதந்திரமா சுத்த ஆரம்பிச்சிட்டா அங்க எதுக்கு காசு போகுது , இங்க இவ்வளவு ஏன் போகுதுன்னு கணக்கு கேட்க ஆரம்பிச்சிடுவாளே... 15 வருஷமா நல்லாத்தான் இருந்தா , திடீர்னு எந்த பூதம் பூந்துச்சுன்னு தெரியலையே ... சரி வராது என்ன பண்ணலாம்... இவனும் பொண்டாட்டியை செய்றது சரிங்கிற மாதிரியே பேசிட்டு போறானே... இவன் வீடு வாசல்னு செட்டில் ஆயிட்டான்... ஆனா என் மக இன்னும் செட்டில் ஆகலயே,. வாடகை வீட்டில் தான் இருக்கா அவளுக்கு ஏதாவது செட்டில் பண்ணி வைக்கலன்னா, என் கட்ட வேகாதே, 

ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பு வைத்திருக்கும் தாயின் கோர முகம் தெரியாமல் இவனும் சுற்றி சுற்றி இருப்பவர்களையும் அரைமெண்டல் ஆக்கிக் கொண்டிருந்தான்...

படுக்கையில் படுத்திருந்த அஞ்சலியின் இரண்டு பக்கமும் அவள் பிள்ளைகள் படுத்திருந்தனர்...

ஈசியாக சொல்லிவிடுவார்கள் இன்றைக்கு பேசியதை அன்றே பேசியிருக்க வேண்டும் என்று அன்றே பேசி இருந்தால் என்ன சொல்லி இருப்பார்கள்...

எல்லார் வீட்டிலேயும் சண்டை சச்சரவு வரத்தான் செய்யும், அதுக்கு பதிலுக்கு பதில் பேசினா குடும்பம் பிரிஞ்சு போகாதா, குடும்பம் பிரிஞ்சு போனா பிள்ளைங்க பாதிக்கப்படாதான்னு கேட்பாங்க ....பஞ்சாயத்து பண்றவன் எவனும் நமக்கு ஒரு வாய் சோறு கூட தர மாட்டானுக கொழும்பு எடுத்து திரிஞ்சா இவளை பாடு நம்ம பார்க்கணுமான்னு சொல்வானுக... சரி நமக்குத்தான் தாய் வீடு இருக்கேன்னு நாலு நாள் போய் அங்க இருக்கலாம்னு போனா, அஞ்சாவது நாள் எப்பம்மா கிளம்புறேன்னு நாசுக்கா கேட்பாங்க, பத்தாவது நாள் போறியா இல்லையான்னு கேட்பாங்க... 11 வது நாள் கொண்டு வந்து விட்டுட்டே போயிடுவாங்க .... அதுக்கு பிறகு மானங்கெட்ட இங்க நிக்கிறதுக்கு முதல்லயே அமைதியா போயிடுவோம்னு போறதுதான்... பதிலுக்கு பதில் பேசத் தெரியாமலேயோ, இல்ல சண்டைக்கு சண்ட மல்லுக்கட்ட தெரியாமலையோ எந்த பெண்ணும் இருப்பதில்லை... 

எதிர்காலத்தையும் நிகழ்காலத்தையும் கருத்தில் கொண்டு தான் ஒரு பெண் அமைதியை கையில் எடுக்கிறாள் .... 

காலையில் சத்யா வாக்கிங் முடித்துவிட்டு வர வாசலில் மனைவி பெட்டி படுக்கையோடு நின்றாள் இவனுக்கு சற்று ஜெர்க் ஆகிவிட்டது..

தாயே ஆனாலும் இவள் போல அவனை சீராட்ட முடியாது என்பது அவனுக்கு நன்றாக தெரியும்

"என்ன ஆச்சு பெட்டி படுக்கையோட எங்க கிளம்பிட்ட பவ்வியமாக குரல் வந்தது ... இல்லை என்றால் வாயில் அரை லிட்டர் ஆசிட் ஊற்றியது போலவே கொப்பளிப்பான்...

இவ போய்ட்டா அவன் மானமும் அல்லவா சேர்ந்து கப்பல் ஏறும் ..

"ஊருக்கு போறோம் 

"ஊருக்கு போறீங்களா என்ன திடீர்னு, வர்ற ஐடியா இருக்கா இல்ல அப்படியே போற மாதிரி ஏதும் பிளான் இருக்கா, அப்படின்னா சொல்லிடு , அதுக்கு ஏத்தாப்ப என்ன தயார் படுத்திக்குவேன் பாரு... சத்யா பைக் சாவியை கொக்கியில் மாட்டினான்

போய் விடுவாளோ என்று கண்ணில் ஒரு மிரட்சி வரத்தான் செய்தது ...

"வர்றதா ,இல்ல அங்கேயே இருக்கிறதான்னு நீங்கதான் முடிவு பண்ணனும் .... நான் இப்போதைக்கு அத்தை மக கல்யாணத்துக்கு தான் போறேன் 

"ஓ கல்யாணத்துக்கு போறியா?" அப்பாடா பீல் நாலு நாள் அவள் இல்லாமல் சமாளித்து விடலாம் ஐந்தாவது நாள் நாக்கு தள்ளி விடுவான் ... பிள்ளை பிறபதற்காக அவள் நான்கு மாதம் தாய் வீட்டில் இருந்தாள் அய்யோ அம்மா முடியலையே என்று உருண்டே விட்டான்.... 

நேசம் எல்லாம் இல்லை கடமை , அவள் இருந்தால் குடும்ப கடமை அத்தனையையும் அவள் தலையில் போட்டுவிட்டு போய்விடலாம்.... 

"சரி கொண்டு போய் விடுறேன் டேய் விஷ்ணு 

அம்மாவை தங்கச்சிய பத்திரமா பாத்துக்கோ

"உன்கிட்ட இருந்து தான்டா எங்களைய காப்பாத்தணும் நீதாண்டா பெரிய பூச்சாண்டி என்று முனங்கிய தன் தாயின் பேச்சில் சிரித்த விஷ்ணு

"மா அப்பாவுக்கு கேட்டுற போது

"கேட்டு தொலையட்டும் இனிமே மைண்ட் வாய்ஸ் பேசறதா இல்ல எல்லாம் ஓபன் வாய்ஸ்தான் எப்போ என் புள்ளையை அடிச்சாரோ, அப்பவே உங்க அப்பனுக்கு மரியாதை இல்லடா"

"அம்மா இப்ப நீ பேசுனது எனக்கு மட்டும் தான் கேட்டு இருக்கு, அப்பாவுக்கு கேட்டிருக்காது

"அப்போ இன்னும் தைரியம் வரலையோடா..

"அப்படித்தானே நினைக்கிறேன் ...  

அங்க போய் எங்க அம்மா வீட்டு சாப்பாட்ட தின்னுட்டு தைரியத்தோட மறுபடி வருவேன்டா, உன் அப்பனா இல்ல நானான்னு பார்த்துடுவோம்... 

"காசு இருக்கா அஞ்சு சத்யா பர்ஸை திறக்க 

யாரும் காசும் எனக்கு தேவையில்லை, நானும் சம்பாதிக்கிறேன் எனக்கு என்ன பார்த்துக்க தெரியும்னு சொல்லு தம்பி "

"ம்மா பட்டையை கிளப்புற , அப்புறம் ஏம்மா அப்பா வாக்கிங் போன சமயம் அப்பா பர்ஸ்ல இருந்து துட்டை ஆட்டையை போட்ட 

"ப்ச் அது பழக்கம் தோஷம்டா ... உன் தங்கச்சி காதுல போட்டிருக்காளே தோடு அது அவருக்கே தெரியாம அவர் பர்ஸ்ல ஆட்டையை போட்ட காசு தான் ... அம்புட்டு கூறுதான் உன் அப்பனுக்கு , ஆனா அந்த கிழவி என் மகன் படிச்சிருந்தா அமெரிக்கா ஜனாதிபதியா ஆகியிருப்பான்னு பீத்தும்... இந்த கூறு கெட்ட குக்குரும் அதை நம்புது பார்த்தியா, ஒரு பக்கம் கோவம் வந்தாலும் இன்னொரு பக்கம் இந்த மெண்டலை பாத்தா பாவம்தான்டா இருக்கு ..

"அப்பாகிட்ட சொல்லிட்டு வாம்மா அப்பா பாவமா உன்ன பாக்குது 

"சொல்லிட்டு எல்லாம் வர முடியாது, நடிப்புடா அத்தனையும் ராஜ படம் , சங்கர் பட நாயகன் போல பல கெட்டப் போடுவார்டா , முகத்தை அப்படி வச்சிருப்பார் ... இப்படியே போயிடுவாளா இல்ல திரும்பி வருவாளான்னு று தெரியலையே, ஏகப்பட்ட துணி துவைக்காம கிடக்குதே, நாலு நாள் தானே ஹோட்டல்ல சாப்பிட முடியும் ... அதுக்கு மேல சாப்பிட்டா வயித்துக்கும் ஒத்துக்காதே.. பர்ஸ் காலியாகி போகுமேன்னு முழிச்சுக்கிட்டு நிப்பான் திருட்டு கம்னாட்டி , அவன பத்தி எனக்கு தாண்டா தெரியும் " என்று மூவரும் பஸ்ஸில் ஏறினர் 

பஸ்ஸில் உட்காந்திருந்த மனைவிக்கு வாட்டர் பாட்டிலை வாங்கி மடியில் போட்டான்,. வாங்கி வைத்துக் கொண்டாள்... 

"யாழி பாப்பா சமத்தா இருக்கணும் மகளுக்கு தனியாக கொஞ்சல் நடந்தது ...

அஞ்சு ஹெட்போன் மாட்டி அமர்ந்து கொண்டாள் வண்டி மூவ் ஆக ஆரம்பிக்க , இவள் ஜன்னல் அருகே நின்ற புருசனை திரும்பி பார்க்கவே இல்லை .. வண்டி பஸ் ஸ்டாண்ட் விட்டு வெளியேற அஞ்சலி ஜன்னல் வழியாக பைக்கை உதைத்து கொண்டு நின்ற சத்யாவை எட்டி பார்த்தாள்... அவன் இவளை கவனிக்க வில்லை ஆனால் நாலு நாள் எப்படி சமாளிப்பானோ தெரிலேயே என்று அவன் உருவம் மறையும் வரை பார்த்து விட்டு தான் தலையை உள்ளே எடுத்தாள் 

பெண்களுக்கு நேசம் வரம் அல்ல சாபம் !! 

வாழவும் விடாது, சாகவும் விடாது!!