தினம் தினம் 2

Thinam2

தினம் தினம் 2

2 தினம் தினம் !!!

"பரவா இல்லையே இன்னைக்கு அஞ்சு நிமிஷம் முன்னக்கூட்டியே வந்துட்டேன் போல இருக்கு தனக்கு தானே தட்டி கொடுத்தபடி, அஞ்சலி பல்ஸை விட்டு இறங்கி,, தன் லஞ்ச் பேக்கை தூக்கிக்கொண்டு பள்ளி நோக்கி வர... புது கார் ஒன்று அவள் பக்கத்தில் வந்து நின்றது...

"யார்டா இது, கோவில்ல இருந்து அப்படியே தூக்கிட்டு வந்திருக்காங்க மஞ்சள் குங்குமம் எல்லாம் போட்டு பக்தி பழமா இருக்கு" என்று எப்போதும் போல அவள் பராக்கு பார்த்துக் கொண்டு நிற்க.. அதிலிருந்து அவளோடு வேலை செய்யும் மோனிகா இறங்கி வர 

"ஓஓஓஓ இந்த சிலுப்பியா... 35 வயதில் அஞ்சலியோ முட்டு வலிக்குதே , உட்கர்ந்தா எழும்ப முடியல , தலையில பாதி முடி வெள்ளை, ரொம்ப நேரம் நடந்தா கால் வலிக்குது, ரொம்ப நேரம் உட்கார்ந்து இருந்தா இடுப்பு வலிக்குது, சுகர் பார்டர் பிரஷர் நம்ம அங்காளி பங்காளி போல கூடவேதான் இருக்கு , இப்படி ஏகப்பட்ட பிரச்சனை உடம்பெல்லாம் இருக்குன்னு தினம் தினம் புலம்ப.... அதே வயது பெண் தான் மோனிகா... ஆனால் ட்ரெஸ்ஸுக்கு மேட்சாக ஹேண்ட்பேக் என்ன, காலில் செருப்பு என்ன , தலையில் கிளிப் என்ன தினமும் அவளை வேடிக்கை பார்ப்பதே இவனுக்கு ஒரு நேரா போக்கு என்று வைத்துக் கொள்ளலாம் ..

ஆரம்பத்தில் எல்லாம் அஞ்சலிக்கும் நிறைய ஆசைகள் கனவுகள் உண்டு , என் புருஷன் இப்படி இருக்கணும் நான் என் புருஷன்கிட்ட இப்படி இருக்கணும்... எனக்கு அவர் நிறைய செய்யணும் நானும் முடிஞ்ச அளவுக்கு அவருக்கு செய்யணும் என்ற ஆசைகள் எல்லாம் காலங்கள் ஆக ஆக குறுகி குறுகி..

சண்டை இல்லாம இன்னைக்கு இருந்தா போதும் சாமி, ரெண்டு பேருக்கும் இடையில வார்த்தை தர்க்கம் வராமல் தூங்குனா போதும்.. என்கிட்ட காரணமே இல்லாம சண்டை போடாம இருந்தா நிம்மதியா தூங்கவாவது செய்வேன் , அவருக்கு என்ன? பிசினஸ்ல உள்ள பிரச்சனை எல்லாத்துக்கும் என்ன சேர்த்து திட்டிறார், ராத்திரி முழுக்க அதை நினைச்சு தூங்காம கிடக்கிறது நான்தானே, கணவன் அன்பை கொட்டிக் கொட்டி கொடுக்க வேண்டும் என்ற ஆசை எல்லாம் திருமணம் முடிந்த 90 நாட்களில் முடிந்து போனது... இப்போதெல்லாம் அவன் சும்மா ஒரு முக்குல உட்கார்ந்திருந்தால் போதும் சாமி என்ற நிலைமைக்கு தள்ளி விட்டார்கள்.. இதுதான் ரியாலிட்டி என புரிந்து வாழ பழகி கொண்ட பெண்ணில் அவளும் ஒருத்தி ... 

"குட் மார்னிங் அஞ்சலி .. என்ன கண்டுக்காம போறீங்க 

"ஓஓ நீங்களா மோனி , நான் வேற யாரோன்னு நினைச்சேன் ..கார் புதுசா?

"ம்ம் நேத்து தான் டெலிவரி எடுத்துட்டு வந்தோம் 

"ஓஓஓஓ அழகா இருக்கு 

"தேங்க்ஸ் , என் வீட்டுக்காரர் பஸ்ல போகாத கை கால் வலிக்குதுன்னு சொல்றல்ல ஒரு கார் வாங்கிக்கலாம்னு சொன்னார்... அதான் இஎம்ஐ போட்டு கார் வாங்கிட்டோம் , பஸ்ல இடிச்சு புடிச்சு கஷ்டப்பட்டு வர வேண்டாம் பாருங்க" என்று அவள் குணட்ட...

"ஆமா ....என்று விட்டு அஞ்சலி நடக்க ஆரம்பிக்க 

"நீங்க வேலைக்கு சேர்ந்து இத்தனை நாள் ஆகுது சத்யா சார் ஒரு நாள் கூட உங்களை பைக்ல கூட கொண்டு விட்டுட்டு போக மாட்டேங்குறாரே, சூப்பர் மார்க்கெட் தான வச்சிருக்கார்.. கவர்மெண்ட் ஆபீஸ்லயும் வேலை பார்க்கலையே, அழகா உங்களை கொண்டு வந்து விட்டுட்டு பக்கத்து தெருவுல இருக்குற கடைக்கு போகலாமே...

"ம்க்கும், இவளுக்கு வேலையே இல்லை அடுத்தவன் வீட்டை குறை சொல்றது வேலையா வச்சிருப்பா, உனக்கு கார் இருந்தா அதை தூக்கி இடுப்புல சொருவிக்கடி, ஏன் என் வயித்தெரிச்சலை கொட்டிக்கிற என்று அஞ்சலி மனதில் புலம்பிக்கொண்டவள்..

"என்னை விட்டுட்டு போறேன்னு தான் சொல்லுவார் மோனி, நான் தான் எதுக்கு போட்டு வீண் சிரமம்னு சொல்லிடுவேன் 

"இதுல என்ன வீண் சிரமம் இருக்கு அஞ்சலி, என் வீட்டுக்காரர் ஐடி கம்பெனியில வேலை பாக்குறார், ஆனா பாத்தீங்க தானே கரெக்டா என்ன கொண்டு விட்டுட்டு போவார்

"உனக்கு வாச்சிருக்கு, கருமம் எனக்கு வாய்க்கலையே என்று அஞ்சலிக்கு வாய் வரை வந்தாலும் , எச்சில் விழுங்கி வார்த்தையை விளங்கிக் கொண்டவள்..

"பாவம் ஆயிரம் வேலை இருக்கிற மனுஷன்; என்னையும் விட்டுட்டு போங்கன்னு சொன்னா எனக்காக வருவார் தான், ஆனா பாவம் இல்ல... கிளாசுக்கு நேராச்சு போறேன் என்று நடையை கட்டினாள் 

இப்படி புருசனுக்கு முட்டு கொடுத்து கொடுத்தே என் வாழ்க்கை போயிடும் போலவே" என்று சலித்து கொண்டே ஸ்டாப் ரூம் வந்து தன் மேஜையில் உட்கார்ந்தாள் அஞ்சலி ...

"ஹாய்டி என்ன அதிசயமா சீக்கிரம் வந்துட்ட "என்று அவளின் தோழி லதா சீண்ட   

"ப்ச் நீ வேற ஆரம்பிக்காத 

"என்னடி மோனிகா ஒரே அலப்பறை போல இருக்கு, நேத்துல இருந்து ஒரே கார் புராணம்தான் , அப்பா காது கொடுத்து கேட்க முடியல , என்னமோ உலகத்துலேயே, இவ மட்டும் தான் கார் வாங்குன போற மாதிரி அவ்ளோ பிலிம் காட்டினா... காலையிலேயே உன்னையும் காச்சி எடுத்துட்டா போல இருக்கு

"ம்ம் ஆமாடி என்னவோ அவ புருஷன் மட்டும் தான் பாசமா இருக்கானாம்.. நம்ம புருஷன் எல்லாம் சும்மா இனிஷியல் பிரச்சனைக்கு தான் வச்சிருக்கோங்கெற மாதிரி பேசிட்டு போறா.. 

"ஹாஹா 

"அவ சொல்றதிலும் நியாயம் தான் இருக்கு சொன்னாலும் சொல்லலன்னாலும் பிள்ளைகளுக்கு இன்ஷியல் பிரச்சனைக்கு தானே நம்ம புருஷன்மாரை வச்சிருக்கோம், என்று சொன்ன அஞ்சலி தோளில் அடித்த லதா

"யேய் கத்தி பேசாதடி "

"போடி கடுப்பு கூந்தலா இருக்கு, காலையிலேயே அந்த வல்லரக்கி மாமியார் , மினி அரக்கன் புருஷன் இந்த ரெண்டு கிட்டேயும் திட்டு வாங்காம என்னைக்கு வர்றேனோ அன்னைக்கு தாண்டி எனக்கு நல்ல நாள்.. இந்த கல்யாணத்தை கண்டுபிடிச்சவன் எவனா இருக்கும் லதா?

"நானும் அவன தாண்டி தேடிக்கிட்டு இருக்கேன், உனக்காவது பரவாயில்லை அண்ணன் திட்டி திட்டி பழக்கமாகி போச்சு , ஆனா என் புருஷன் எப்ப திட்டுவான் , எப்ப கொஞ்சுவான்னு தெரிய மாட்டேங்குது , அந்நியன் , ரெமோ அம்பி மாதிரி மாறி மாறி பிச்சு பெடல் எடுக்கிறான்... 

"அப்படி இருக்கிறவன கூட கன்சிடர் பண்ணலாம் லதா, ஆனா என் புருஷன் அந்த ஜிஞ்சர் மூஞ்சன் இருக்கானே, வெறுவா கெட்ட பய , ஒன்னத்துக்கும் ஆக மாட்டான், எப்ப பார்த்தாலும் முகத்துல சுடுதண்ணிய கோரி ஊத்துனவன் மாதிரி நிப்பான் , அதுவே அவன் அம்மாகாரிக்கிட்ட பேச சொல்லு இளிச்சு பேசுவான் , அதுவும் அவன் தங்கச்சி கிட்ட பேசும்போது வாயெல்லாம் பல்லாயிருக்கும், என்னமோ அவங்கெல்லாம் தாயோட வயித்துல இருந்து பிறந்த மாதிரி, நம்மள கவர்மென்ட் ஆஸ்பத்திரி குப்பைத்தொட்டியில இருந்து எடுத்துட்டு வந்த மாதிரியே முகத்தை வச்சுக்குவான்... மூஞ்சும் முகரையும் 

"என்னடி மட்டு மரியாதை இல்லாமல் பேசுற 

"ப்ச், உன்கிட்ட மட்டும்தான் இப்படி எல்லாம் மனசு விட்டு பேச முடியுது , வீட்டுக்கு போனா மனசுக்குள்ளயே கவுண்டர் குடுத்துக்கிட்டு வெந்து சுண்ணாம்பாகி போறேன் போ..  

"எனக்கும் தான் 

"இந்த வாழ்க்கையிலிருந்து விடுதலை கிடைக்கும்னு ஒரு மனசு ஏங்குது, இன்னொரு மனசு தாய் வீட்டுக்கு போனா விளக்குமாறு அடி விழும், கல்யாணம்தான் கட்டி கொடுக்க முடியும் டைவர்ஸ் வாங்கிட்டு வந்தா அதுக்கெல்லாம் என்னால பாக்க முடியாதுன்னு , என் அம்மா வண்டி வண்டியா திட்டி கிழிச்சு தெருவுலயே நிப்பாட்டி விட்டுடும்... அந்த கேவலத்துக்கு இவன் கிட்ட வாங்கி கட்டுறது தேவையில்லைன்னு நினைச்சு தான் எல்லாத்தையும் பொறுத்து போக வேண்டியது இருக்கு..

ம்ம்

"எத்தனை நாளைக்கு தான் பொறுக்க போறேனோ தெரியல, எல்லாம் நான் பெத்து விட்ட ரெண்டு பிள்ளைகளையும் கரை சேர்த்துடனும் என்கிற ஆசைதான்.... அதற்குள் பிரின்சிபல் அவர்கள் அறையை கடந்து செல்லும் பொழுது புலம்பிக் கொண்டு உட்கார்ந்திருந்த அஞ்சலியை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே போக 

"அஞ்சலி ஜொள்ளு பார்ட்டி உன்ன தான் ஓர கண்ணால சைட் அடிச்சிட்டு போறான்..

"இந்த கட்டையில் போறவன் வேற , சாகப் போற நேரத்துல சைட் அடிச்சு என்னடி பண்ணுவான்..

"அதாண்டி எனக்கும் தெரியல , இன்னொன்னு சொல்லவா அந்த மோனிகாவுக்கும் இவருக்கும் அப்படி இப்படியாம்

"ச்சே சே, கண்ணால பாக்காம யாரையும் அப்படி சொல்லக்கூடாது லதா, அப்படி எல்லாம் பேசாத வாயில போட்டுக்கோ... ""

"ரொம்பதான் போ, நானே ரெண்டு நாள் ஸ்டாப் ரூம்ல ரெண்டு பேரும் தனியா நின்னு பேசிட்டு இருந்ததை பார்த்திருக்கேன்

"பேசுனா தப்பா?? இப்படி எல்லாம் அபத்தமா பேசாத , அவளும் நம்மள மாதிரி ஒரு பொண்ணு தானே கொஞ்சம் அலட்டல் பேர்வழி மத்தபடி நான் பார்த்த வரைக்கும் அது நல்ல பொண்ணு தான், 

"ஓவரா நல்லவளா இருக்காதடி ,அதனால தான் உன் தலையில குடும்பம் மிளகாய் அரைக்குது, கொஞ்சம் சூதானமா இல்ல எல்லாத்தையும் இழந்துட்டு நிக்க வேண்டியதுதான்...

ம்ம் தெரியுது ஆனா , இனி இழக்கிறதுக்கு என்னடி இருக்கு.. 

"நீ தான் புலம்பிக்கிற ஆனா உன் அழகை டெய்லி நம்ம பிரின்ஸி ரசிச்சிட்டு போறானே..

"போடி போக்கத்தவளே!! நானே ரெண்டு குட்டி போட்ட எருமைமாடு என்ன பாத்து என்னடி தேற போகுது 

"தேறுதே என்னவோ இந்த ஸ்கூல்ல அழகான டீச்சரே இல்லை என்கிற மாதிரி உன்னைய தான் அவன் பார்த்து வைக்கிறான்.

"வாய திறக்காதடி, இது என் புருஷன் ஜிஞ்சர் மூஞ்சனுக்கு போச்சுன்னு வச்சுக்கோ , இந்த வேலையை விட்டு நிற்க வச்சிடுவான், நானே கெஞ்சி கூத்தாடி இந்த வேலையில வந்து சேர்ந்திருக்கேன்.. . எனக்கு இருக்கிற ஒரே நிம்மதி இந்த ஸ்கூல்தான், பத்து ரூபாய் ஆனாலும் கவுரவமா அந்த சம்பளத்தை வாங்கி எனக்கு தேவையான ஒன்னு ரெண்டு பொருளை வாங்கி எப்படியோ காலத்தை தள்ளிக்கிட்டு இருக்கேன் இதெல்லாம் கேள்விப்பட்டான்னு வச்சிக்க, மனுஷன் நீ வேலைக்கே போக வேண்டான்னு அடுப்படியே கதின்னு போட்டுருவாண்டி..

ம்ம் 

"ஆனா ஒன்னுடி சின்ன பிள்ளைங்களா இருந்தாலும் விடமாட்டேங்குறாங்க, இப்படி குட்டி போட்ட ஆண்டியா இருந்தாலும் விடமாட்டேங்குறாங்க வேலைக்கு வந்தா இவனுங்க தொல்ல தாங்கல , சரி கொஞ்ச நேரம் இந்த மூஞ்சுபுக் பக்கம் போகலாம்னு பார்த்தா, அங்க ஹலோ எக்ஸ்கியூஸ் மீ இருக்கீங்களா? உங்க போட்டோ ரொம்ப அழகா இருக்கு நீங்க ஆணா பொண்ணான்னு அவனுக வர்ணிக்கிற தொல்ல வேற தாங்க முடியல.... எங்க தாண்டி நாம எல்லாம் போகிறது..

நானும் இந்த பிரின்சிபால பாத்துக்கிட்டே தான் இருக்கேன் இப்ப எல்லாம் கொஞ்சம் ஓவரா அத்துமீறன மாதிரி தான் இருக்கு அஞ்சலி"

"ம்ம் ஆமா , தனியா அவர் ரூமுக்குள்ள போகும்போதெல்லாம் குறுகுறுன்னு பாக்குறாரு அப்புறம் நீங்க எப்போ ஃப்ரீயா இருக்கீங்க, வீட்ல சார் எல்லாம் நல்லா பார்த்துக்கிறாரா, எதாவது தேவைன்னா சொல்லுங்க செய்றேன்னு ரெட்ட அர்த்தத்தில் பேசறான்டி என்று அஞ்சலி சலித்துக் கொண்டாள்

வீட்டில் கிடந்தா மாமியார் பக்கம் புருஷன் மறுபக்கம் என்று மத்தளத்துக்கு இரண்டு பக்கம் இடி.. சரி வேலைக்கு வரலாம் என்றால் கண்ட காவாலி நாய்களால் பிரச்சனை , என்னதான் செய்வது? பிரச்சனைக்கு தீர்வு தான் இல்லை..

புலம்பிக்கொண்டே வகுப்புக்கு சென்ற அஞ்சலி அங்கே போனதும் குழந்தைகளோடு குழந்தையாக மாறியே விட்டாள் அவள் நிம்மதி இது ஒன்று தான் , கொஞ்சமாய் மூச்சு விடுவது இங்கேதான்..

வீட்டில் அவளுக்கு வன்முறை நடக்கிறது என்று எல்லாம் அர்த்தம் கிடையாது கணவனாக சத்யா சிறந்தவன் தான் .. ஆனால் இப்படித்தான் மனைவி இருக்க வேண்டும் என்று அவர்கள் போடும் சட்டதிட்டங்களை தான் தாங்கிக் கொள்ள முடிவதில்லை...

தன் குடும்பத்திற்காக தானே மாறிக் கொண்டால்தான் அது அன்பில் மாற்றம்..குடும்ப பெண் ... இது உன் குடும்பம் இதுக்கு நீ தான் செய்யணும் நீ தான் செஞ்சாகணும் என்று திணிக்கப்படுவதும் வன்முறையில் ஒன்று தானே.. 

தினம் தினம் பெண்ணுக்கு நடக்கும் இவ் வன்முறைக்கு தீர்வுதான் என்ன ??

தீர்வு இல்லை என்று கடந்து போவதுதானோ??