தினம் தினம் 1

Thinam1

தினம் தினம் 1

1 தினம் தினம் !!

மாளிகை வீட்டு விஸ்தார வெல்வெட் படுக்கையில் நைட்டியில் ஒரு பெண் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்

மேடம் காபி என்று பணிப்பெண் வந்து தேனீர் கோப்பையை நீட்ட...

அதுல வச்சிட்டு போ, "

சரிங்க மேடம் , 

போகும் போது ஏசி ஆப் பண்ணிட்டு பேனை போட்டு விட்டுட்டு போ , காலையில டிபனுக்கு புரியும் கிழங்கும் செஞ்சுடு" என்ற கண்ணை மூடிக்கொண்டு அப்பெண் பணியாளருக்கு கட்டளை போட்டுக் கொண்டிருக்க சுளீர் என்ற அடி அவள் கையில் விழ பதறி எழும்பினாள்

அஞ்சலி... 

வயது 35

கோலிகுண்டு கண்ணு கோவப்பழ உதடு, பளிங்கு போல கன்னம் , இஞ்சி இடுப்பு , அம்சமான தோற்றம் என்று ஆகா ஓகோ பட்டம் எல்லாம் கிடையாது ... சராசரியாக ரெண்டு பிள்ளை பெற்றவள் எப்படி இருப்பாளோ? அப்படி ஒரு உடலமைப்பு அவ்வளவே!! இதுதான் நம் நாயகி ...

கண்ணை திறந்த அஞ்சலி சலிப்பாக தன் அறையை பார்த்தாள் புருசன் கழட்டி போட்டுவிட்டு போன லுங்கி ,மகன் மகள் தூக்கி வீசிய போர்வை அங்கேயும் இங்கேயும் கிடந்த நோட்டு புக்குகள் தான் இருப்பது அதே நரகத்தில் தான் என்பதை நடுமண்டையில் நச்சென்று அடித்து புரிய வைக்க பல்லை கடித்தாள்... 

"ச்சைக் இன்னைக்கும் கனவா?? எப்பதான் இது எல்லாம் நிஜமா நடக்கும் , மாடமாளிகை வெல்வெட் படுக்கை கூட வேண்டாம் தெய்வமே ,அட்லீஸ்ட் ஒரு பெட் காப்பியாவது ஆபர் பண்ணலாம் நீ , பெண்கள் மேல உனக்கு அப்படி என்ன கோவம்னு, காலா காலமா எங்கள இப்படி ஒரு காப்பிக்கு அலைய விடுற , ப்ச் நானே எழும்பி போய் காப்பி போட்டு எல்லா தீவெட்டி தலைங்களுக்கும் ஆவி பறக்க காப்பியை கொடுத்து அதுக குடிச்சு முடிச்சு டம்பளரை நீட்டுற வரை நின்னு, அதை வாங்கிட்டு வந்து பார்த்தா என் காப்பி ஆறி , நாலு முழ ஆடை அது மேல , சூடு பண்ண மாய்ச்ச பட்டு , அதை வாய்ல ஊத்தி ப்ச் என்ன வாழ்க்கைடா சாமி!!" என்று சலித்து கொண்டு எழும்பி கொண்டையை போட்டுவிட்டு ... சிதறி கிடந்த அறையை சரி செய்து வி்ட்டு வெளியே வந்தாள் அஞ்சலி...

"பெண்ணாய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டுமம்மா, மயிரு ஒரு நாள் குடும்ப பொண்ணா இருந்தா பாருடா டேஸ் பயலே, நாக்கு தள்ளிடும் "என்று எப்போதும் போல புலம்பியபடி நின்றாள் நம் நாயகி!!  

பத்துக்கு பத்து அறை மூன்று கொண்ட நடுத்தர வீடு ...படுக்கையில் பழைய நைட்டியில் தாலியில் ரெண்டு ஊக்கு குத்தி போட்ட கேஸ்வல் குடும்ப இஸ்திரி பெட்டி ... தன் எதிரே நின்ற 15 வயது மகனை எரிச்சலாக கொட்டாவி விட்டு கொண்டு அஞ்சலி பார்க்க ...

யம்மோ மணி ஆறாகி போச்சு "

"அதுக்கு என்னடா ? "

ஊன் வூட்டுக்கார் வாக்கிங் போயிட்டு வர்ற நேரம் , அவள் முகத்தில் கலவரம் புகுந்து விட்டது 

அய்யயோ!!! ஆமால்ல, அந்த ஆளு வந்தா தய்ய தக்கன்னு குதிப்பானே என்று அஞ்சலி முகத்தை கழுவியும் கழுவாது எழும்பி வெளியே ஓட ஹாலில் இருந்த மாமியார் மரகதம்  

ம்க்கும் வீடு விளங்கிடும் ,இப்ப எழும்பி எப்போ அவனுக்கு சாப்பாடு எல்லாம் கட்டி கொடுப்ப ... வயசானவளுக்கு ஒரு கப் காப்பி நேரத்தோட எழும்பி போட்டு கொடுக்கணும்னு விவஸ்தை இல்ல மணிய பாரு ஆறு ஆகுது... "மரகதம் குற்றச்சாட்டும் வேலையை செவ்வென ரிப்பன் வெட்டி ஆரம்பித்து வைக்க...  

ஆறு தானடா ஆகுது, என்னவோ சாயங்காலம் 6 மணிக்கு எழும்பின மாதிரி கிழவி முகத்தை சுருக்குது ...கிழவி பார்வையே சரியில்லையேடா இன்னைக்கு என்ன பஞ்சாயத்து எல்லாம் நடக்க போகுதோ தெரியலையே ..."

"யம்மா நீ பெரிய ஆளு அதெல்லாம் அசால்டா ஹேண்டில் பண்ணிடுவ "என்ற மகனை முறைத்தவள்

"மக்கும் , இப்படியே உசுப்பு ஏத்தி விட்டு தான்டா ரணகளமா ஆகி கிடக்கேன்...."

எல்லாம் ஒரு பொதுசேவை தான்" என்று டீன்ஏஜ் பருவம் உள்ளே நுழையும் தன் மகன் தலையை தடவி விட்ட அஞ்சலி ...

சீக்கிரம் போய் குளிடா , இல்லை உங்க அய்யா வந்து ஆடுவான் "

ம்ம் என்று அஞ்சலி மகன் விஷ்ணு குளியலறை உள்ளே புகுந்தான் 

"எவ எவளுக்கு எல்லாமோ சாவு வருது, இதுக்கு வர மாட்டைக்கே, ஆளும் முகரையும் கடலை மாவுல முக்கி போட்ட பஜ்ஜி மாதிரி இருந்துக்கிட்டு பண்றது எல்லாம் சகுனி வேலை "

காப்பி இன்னும் வரல என்று மரகதம் மீண்டும் கனைக்க 

ஒரு நாள் போட்டு குடிச்சா ஆத்தாளுக்கும் , மகனுக்கு எடுத்துடுமே எல்லாத்துக்கும் நானே வரணும் ச்சை என்ன எழவு வாழ்க்கைடா இது ??என்று அஞ்சலி முனங்கி கொண்டே கிட்சன் உள்ளே போனாள்..

இரவு சமையல் முடித்து போட்ட பாத்திரம் சிங் நிறைய குவிந்து கிடக்க , அடுப்பில் பாலை வைத்துவிட்டு வேக வேகமாக அதையும் துலக்க தொடங்கினாள்....

ஆஹா ஓஹோ என வர்ணிக்க எந்த குடும்ப இஸ்திரியிடமும் எதுவும் இல்லாது, கடமை அமுக்கி போட்டு விடும் அப்படியே வர்ணிக்க எதுவும் தேறாத ஒருத்தி தான் இவள்... 

"வாடா இப்பதான் உன் பொண்டாட்டி முழிச்சு கொட்டாவி விட்டுகிட்டு கிச்சன் உள்ள போறா , நீ இன்னைக்கு வேலைக்கு போய் கிழிச்ச மாதிரிதான்" என்ற மாமியார் சத்தத்தில் பாத்திரத்தை விளக்கிக் கொண்டிருந்த அஞ்சலிக்கு கை சற்று நடுங்கியது, வெளியே எட்டிப் பார்க்க ... திடகாத்திரமான உடலோடு வாக்கிங் முடித்துவிட்டு டிசர்ட்டை கழட்டிக்கொண்டு உள்ளே வந்தான் அவள் கணவன் சத்தியநாதன்

சத்யா 40 வயது 

இருவருக்கும் திருமணம் முடிந்து 16 வருடங்கள் முடிந்து விட்டது .... 15 வயதில் ஒரு மகன், ஏழு வயதில் யாழி என்ற மகள் ....

சத்யா சூப்பர் மார்கெட் முதலாளி , போதுமான வருமானம்.. அவன் மனைவி அஞ்சலி அருகே உள்ள ப்ரைவேட் ஸ்கூலில் ஆசிரியை... நடுத்தர குடும்பம் பஞ்சாயத்துக்கு பஞ்சமே இருக்காது ... என்டர்டெய்ன்மென்டுக்கு எல்லாம் தனியா இடம் தேட வேண்டாம் இங்கேயே தினுசு தினுசா காட்சிகள் கிடைக்கும்.... 

செருப்பை கழட்டி அழுக்கு ஷாக்ஸை அவள் அருகே வீசிய சத்யா 

ராத்திரி பத்து மணி வரைக்கும் ஃபோனை பாத்துக்கிட்டே இருக்க வேண்டியது , இப்படி தான் லேட்டா எழும்ப வைக்கும் .... அவளுக்கு என்ன மாடா உழைச்சு போட நான் இருக்கேன், என் காசுல தின்னுட்டு ஊதி போய் கிடக்கா, புருஷனோட கஷ்டம் நஷ்டம் தெரிஞ்சா தானே 

"என்று டீசட்டையும் கழட்டி அவள் பக்கத்தில் வீசிவிட்டு சேரில் அமர்ந்த சத்யாவிற்கு ஆவி பறக்க காபி வந்தது.. 

ஆனால் அஞ்சலி மனமோ 

புரோட்டோ கல்லுல போட்டு கொத்து பரோட்டோ போட்டிருவேன்டா மைதாமாவு மண்டையா, அந்த ஷாக்ஸை அழுக்கு துணியில போட்டா ஆகாதா, இவர் பரப்பி போடுறதை எடுக்கவே அரை நாள் ஆகும், மயிராண்டி என்னவோ இந்திய ஜனாதிபதி போல பேசுவான்.. சூப்பர் மார்கெட் வச்சிருக்கானாம், ம்க்கும் அது வைக்க என் வீட்டுல போட்ட நகையை அடகு வச்சி கொடுத்தேன் என்னவோ இவுக சொந்த காசுல வந்தது போல ஆத்தாளுக்கும் மகனுக்கும் பவுச பாரு" என்று முடிந்த வரை கெட்டவார்த்தை தவிர்த்து திட்டிவிட்டு அவனை குறுகுறுவென பார்த்து கொண்டு நின்றாள் அஞ்சலி ..

எதுக்கு லேட்டா எழும்பின அஞ்சு ??"

இல்லைங்க ராத்திரி கொஞ்சம் கால் வலி நேத்து பிராக்டிகல் சப்ஸ்டியூட் போட்டுட்டாங்க, நின்னே வேலை செஞ்சேன் அதுல கால் வலி ராத்திரி முழுக்க தூக்கம் இல்ல , விடியற்காலை தான் தூங்குனேன் அப்படியே கொஞ்சம் கண்ணை அசந்துட்டேன்" ... உண்மையை உள்ளபடி கூறினாள் அவன் ஒன்னும் செய்ய வேண்டாம் , ஓஓஓ அப்படியா என்ற ஆறுதலாய் ஒரு வார்த்தை வந்தா கால் வலி கூட பறந்து போகும் ... ஆனால் வந்ததோ 

ஆமா கொடுக்கிற பத்தாயிரம் சம்பளத்துக்கு டெய்லி ஒரு சேலை கட்டி மினுக்கிகிட்ட போகலைன்னா ஆகாது ... வேலையை விடுன்னு சொன்னாலும் உன் பொண்டாட்டி விட மாட்டேங்குறா "என்று அங்கிருந்து மரகதம் குரல் கொடுக்க ... இவளுக்கு தொண்டை வரை பொங்கிக் கொண்டு வந்தது கணவன் முகத்தை பார்க்க அவனோ 

"நாம சொன்னா மேடம் கேட்பாங்களாம்மா, பெண்ணியம் பேசுவாங்க.... நமக்கு என்ன வந்துச்சு... என்று ஒத்து ஊதிய கணவன் மண்டையில் நாலு கொட்டு நச்சுன்னு வைக்க ஆசையோ ஆசை ,... ஊமையாகி போனால் தான் உலகில் பெண்ணுக்கு கெளரவம், எவன்கிட்டையோ வாழ வக்கில்லாதவள், வேசி, விவகாரத்து ஆனவ, திமிர் எடுத்த நாய் என்று பல இலவச பட்டங்கள் வாங்க பயந்து , இந்த ரெண்டு ஜந்துகளை போட்டு மேய்த்து கொண்டிருக்கிறாள் அவ்வளவுதான்... 

கல்யாணம் முடிந்த புதிதில் வேலை செய்யாம உட்கார்ந்து சாப்பிடுற என்று குத்தி காட்டியது, இந்த பேச்சை கேட்க முடியாது வேலைக்கு போக ஆரம்பித்தால், அதுலயும் மட்டம் தட்டும் புருஷனும் மாமியாரும் இதுகளுக்கு பதில் சொல்ல நாலு நேரம் எக்ஸ்ட்ரா சாப்பிடணும் என்று முடிந்தவரை பல்லை கடித்துக் கொள்வாள்

அவங்க ஏகம் படிச்சவங்கல்ல அம்மா , அந்த திமிர் கொஞ்சம் அதிகமாக இருக்கும்ல, நாம எல்லாம் சொன்னா எங்க கேக்க போறா, அவ இஷ்டத்துக்கு தான் ஆடுவா... என்ற சத்யனை வெறுப்பாக பார்த்தாள் ..

ரெண்டு கொலை பண்ணிக்கலாம் என்று அரசாங்கம் ஆஃபர் பண்ணினா , முதல் கொலை மாமியார் துடிக்க துடிக்க கருணையே இல்லாம போட்டு தள்ளிடுலாம் , ரெண்டாவது புருஷன், சத்தம் இல்லாம போட்டிரணும் அவனுக்கு வலிச்சா இவளுக்கும் லைட்டா வலிக்கும் கொஞ்சோண்டு லவ் இருக்கு சோ சைலண்ட் மர்டர் ... அவ்வளவு விரக்தி வந்தது ...

என்ன சமையல் செஞ்சு இருக்க அஞ்சு.."

காலையில் இட்லி மதியத்துக்கு சாம்பார் வச்சுட்டேன்"

ப்ச் , காலையில் வச்ச அதே சாம்பார்தானே மதியத்துக்கும் ஊத்த போற.... எனக்கு இட்லி வேண்டாம் பூரி போட்டு கொடு "

எனக்கு பூரி நெஞ்சை கரிக்கும் , ரெண்டு இட்லியை ஊத்த சொல்லு" சத்யா மரகதம் மெனு அனுப்ப ...

அம்மா சொன்னது கேட்டுச்சா..

மாவு இருக்கு ரெண்டு இட்லி ஊத்திக்கோங்க அத்தை" அவ்வளவுதான் கதற கதற ரெண்டும் அவளை புரட்டி விட்டதுக... 

அம்மாவை பார்த்துக்க வேண்டியது நம்ம கடமை அஞ்சு.... 

அஞ்சு அஞ்சுன்னு நெஞ்சிலையே ஏறி மிதிப்பான் பேப்பய, நீ பாருடா தடியா என்னை ஏன்டா சாவடிக்கிற?"

என்ன ?

குடிச்ச காப்பி கப் தரலைன்னு சொன்னேன்

இந்தா என்று சத்யா குடித்து முடித்த காபி கப்பை அவள் கையில் திணித்துவிட்டு குளிக்க உள்ளே போக

டவல் எடு 

சீப்பு எங்க

 என் பர்ஸ் எங்க வச்ச?

 ஷூ எங்க ?

கடை சாவியை காணல 

கார் சாவி இங்க தானே வச்சேன், எங்க போட்ட? 

உன் மகன் கிளம்பிட்டானா ஒழுங்கா படிக்க சொல்லு இந்த வாட்டி மார்க் குறைஞ்சானு அவனை ஒன்னும் சொல்ல மாட்டேன், உன்னை தொலைச்சிடுவேன் பாத்துக்கோ... டீச்சர் மகன் மக்குங்கிறது உண்மை தான் போல.. கணக்குல ஜஸ்ட் பாஸ்ட் தான் ஆகிட்டு இருக்கான்... கொஞ்சம் அவனை கவனிக்கனும்னு உனக்கு விவஸ்தை இல்ல .... எப்ப பார்த்தாலும் அந்த போன்ல என்னதான் இருக்கோ அதையே பாத்துட்டு இருக்க வேண்டியது, இல்ல வாய பிளந்து சீரியல் பார்க்க வேண்டியது டீச்சர் மாதிரியா நடந்துக்கிற" என்று திட்டிவிட்டு அவள் வக்கனையாக செய்து வைத்த சாப்பாட்டு கூடையையும் எடுத்துக் கொண்டவன் 

இன்னைக்காவது சீக்கிரமா வேலைக்கு போய் சேரு டெய்லி லேட்டா போய் அவமானப்பட்டு நிக்காத .. உன் பிரின்ஸ்பல் பார்க்கிற நேரம் எல்லாம் , ஏன் சார் உங்க பொண்டாட்டி மட்டும் லேட்டாவே வராங்கன்னு நக்கலா சிரிக்கிறான்..

நானாடா லேட்டா போறேன் மனசாட்சியை பானிபூரிக்கு வித்த கூட்டம் போல , 

என்ன சொன்ன ?

உங்களுக்கும் உங்க அம்மாவுக்கு தேவையானது எல்லாம் செஞ்சு வச்சுட்டு குளிக்க போகவே 9 மணி ஆகுது அதற்கு பிறகு கிளம்பி பஸ் புடிச்சு ஸ்கூல் போய் சேர நேரம் ஆகுது 

ஓஓஓஓ அப்போ என்னால தான் லேட்டா போறேன்னு சொல்றியா" என்று வாசல் வரை போனவன் திரும்பி அடுத்த யுத்தத்திற்கு தயாராக..

இல்லை எனக்கு நேரத்தை சரியா பயன்படுத்திக்க தெரியலைன்னு , என்னை நானே சொல்லிக்கிறேன் நீங்க போயிட்டு வாங்க சார் .... 

பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குறதுக்கு இந்த வாய் பேசுறியே நீ எல்லாம் லட்ச ரூபா சம்பாதிச்சா , அப்பா உனக்கு கையில பிடிக்க முடியாது என்று மரகதம் கவுண்டர் கொடுக்க

.

 நான் என் புருஷன் கிட்ட பேசிட்டு இருக்கேன் அத்தை , நீங்க எதுக்கு தேவையில்லாம எங்க ரெண்டு பேருக்கும் இடையில் மூக்கை நுழைக்கிறீங்க 

என்னடி அம்மா கிட்ட குரல் உசுருது" என்று வண்டி வரை போனவன் சத்தம் இங்கே வர ..

அம்மா தான் முக்கியம்னா உனக்கு எதுக்கு பொண்டாட்டி புள்ள என்று முனங்கி கொண்டே உள்ளே போய்விட்டாள் அஞ்சலி ... 

பிடித்து வாழும் கூட்டதத்தை விட 

சலித்து கொண்டே வாழும் கூட்டம் தான் இங்கே அதிகம் 

அஞ்சலி அரக்க பறக்க ஸ்கூலுக்கு கிளம்பி வர... 

அம்மாடி காயத்திரி அங்க அத்தனை வேலையும் இழுத்து போட்டு செய்யாத, மருமகனை நைசா பேசி சமாளி, வேலை செஞ்சு பழக்கிட்டா, நீயே தான் அதுகளுக்கு வடிச்சு கொட்டணும் என்று மரகதம் போன் வழியே மகளுக்கு மாமியார் உபதேசம் செய்ய ...

ஒரு நாள் இல்லை ஒரு நாள் உனக்கு பாயாசத்தை ஊத்துறேன் கிழவி" என்று எரிச்சலாக மரகதத்தை பார்த்து முறைத்து கொண்டே பஸ்ஸில் ஏறி அமர ஓடி உழைத்த உடல் ஓய்வுக்கு கெஞ்ச வாயை பிளந்து தூங்க ஆரம்பித்து விட்டாள் ...

காதல் நேசம் அன்பு பிரேமம் என்று கவிதைக்காக, கதைக்காக ஆயிரம் சொன்னாலும் நிதர்சனம் ஒன்றே ... கட்டின தாலிக்காக வாழ்ந்து தொலைப்போம் என்று சகித்து வாழும் ஆண் பெண் கூட்டமே இங்கு அதிகம்  

தினம் தினம் திருமண வாழ்க்கையின் சவால்களோடு வலம் வரும் ஒருத்தி உங்களில் ஒருத்தியாக குமுற கும்ம வருவாள் ...