தினம் தினம் 15

Thinam15

தினம் தினம் 15

15 தினம் தினம்!! 

ஃபோனை பேசிவிட்டு அஞ்சலி கீழே வைக்க அவள் தகப்பன் பாவமாக அவளை பார்த்துக் கொண்டிருந்தார் ....

"அய்யய்யோ அப்பாவா? கையில் இளநீரோடு நின்ற தகப்பனை பார்த்து இவளுக்கு பகீர் என்று ஆகி போனது ...

"அப்பா ...

"இந்தா இளநீர் குடி ...வெட்டி அவள் கைமில் கொடுத்தார் அஞ்சலி குடித்து விட்டு தகப்பனை பார்க்க வேட்டி நுனி வைத்து மகள் வாயை துடைத்து விட்டார் 

இந்த நேசத்தை அங்கே தேடித்தான் பல பெண்கள் தோற்று போகிறோமோ?? 

தன் தாயிடம் போட்டிக்கு போட்டி பேசினாலும், அப்பா கிட்ட இதெல்லாம் பத்தி எதையும் சொல்லிக்கிட்டு இருக்காதம்மா மக எப்படி இருக்கான்னு கேட்டா , ரொம்ப நல்லா இருக்கான்னு சொல்லிடு பாவம் அந்த மனுஷன் உடைஞ்சு போய்விடக்கூடாது என்று தான் பல விஷயங்களை மறைத்து சில விஷயங்களை மட்டுமே தன் தாயின் காதலும் போடுவது 

அப்பா என்று அஞ்சலி நெளிய , அவள் அருகில் வந்து உட்கார்ந்த தகப்பனை ஏறிட்டு பார்க்க முடியாமல் அஞ்சலி எச்சில் விழுங்க ..

"என்ன கண்ணா பிரச்சனை

"ச்சே சே அப்படியெல்லாம் இல்லப்பா எப்போதும் நடக்கிறது தான்

"ஓஓஓ டைவர்ஸ் அது 

இதுன்னு பேசுற அளவுக்கு சண்டையா ??

"சும்மாப்பா அவரும் பயம் காட்டுவாரு, நானும் பயம் காட்டுவேன் அவருக்கும் தெரியும் , அவரை விட்டுட்டு நான் எங்கேயும் போக மாட்டேன்னு , எனக்கும் தெரியும் அவருக்கு என்னை விட சிறந்த கூஜா கிடையாதுன்னு .. என்னை அவர் மட்டமா பேசறது நான் அவரை மகா மட்டமா பேசுறதும் எங்களுக்குள்ள ஹாபி"

"கண்ணீர் வர்ற அளவுக்கு மட்டமா பேசிக்குவிங்களாம்மா என்ற தகப்பனின் பேச்சில் அண்ணாந்து பார்த்த அஞ்சலி கண்ணீரை இழுக்க பார்க்க... தன் கட்டை விரலால் அவள் கண்ணீரை துடைத்து விட்ட சாந்தகுமார்

"அப்பாவுக்கு எதுக்கு சுமையை இழுத்து வைக்கணும்னு நினைக்கிறியா ?

இல்ல, இந்த வயசுக்கு மேல இந்த அப்பா என்ன செஞ்சிடுவாருன்னு நெனச்சு வலியை மனசுக்குள்ள மறைச்சு வைக்கிறியா??... இப்பவும் நீ எனக்கு குழந்தை தான் கண்ணா... இந்த கண்ணுல கண்ணீர் வரவா கல்யாணம் கட்டிக் கொடுத்தேன்....எனக்கு பிறகு என் பிள்ளையை பாதுகாக்க ஒருத்தர் வேணும்னு தேடி தேடி மாப்பிள்ளை பார்த்தேனே.... 

ப்பா கணவனையும் விட்டு கொடுக்க முடியாது கையை பிசைந்தாள்... 

"பொறுத்து போ தப்பு இல்ல பொருத்தே போய் அவர பொறுப்பில்லாம மாத்தாத ..சகிச்சு போ தப்பு இல்ல சகிச்சு போய் நீ சல்லடை ஆகாத, குடும்பம் அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும், நாம அட்ஜஸ்ட் பண்ணி போறது இல்ல தப்பு இல்ல.. ஆனா ஒருத்தர் அழுது மத்தவங்க சிரிக்கிறதுக்கு பேரு எப்படிம்மா விட்டுக் கொடுத்தல்....அது வதை இல்லயா... நீ சந்தோஷமா சிரிக்கிறியோ இல்லையோ .... ஐயோ எனக்கு யாரும் இல்லையேன்னு அழுற அளவுக்கு ஒரு வாழ்க்கை வாழ்றன்னா நானும் ஏதோ தப்பு பண்ணிட்டேனோம்மா , என் மகன்கிட்ட நீ எப்படி இருக்க கேட்டேனே, நீ சந்தோஷமா இருக்கியான்னு கேட்டிருக்கணுமோ? என்ற தகப்பனின் கையைப் பிடித்துக் கொண்டு அஞ்சலி அவர் கைக்குள் முகத்தை புதைத்துக் கொண்டு

"அப்பா உங்கள மாதிரி என்னை யாராலும் புரிஞ்சுக்க முடியாது அது தான்பா பிரச்சனை அவருக்கு என்ன புரிஞ்சிக்க முடியலப்பா, அவர் அம்மாவா தங்கையா நானான்னு கேட்டா அவங்க ரெண்டு பேரையும் முதல்ல வச்சு, என்ன ரெண்டாவது கொண்டு போயிடுறார்.. அது தான்பா எல்லா பிரச்சனைக்கும் காரணம் .. அவங்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தை எனக்கு கொடுக்கிறது இல்லை அதுதான் சண்டை , மத்தபடி நான் நல்லாதான் இருக்கேன் ... எனக்கு அவர் எந்த குறையும் வச்சது இல்ல ...

ஓஓஓ

ஆனாலும் பொண்ணா ஒரு ஏக்கம் , மனைவியா ஒரு ஆசை, பிள்ளைகளுக்கு தாயா ஒரு விருப்பம் இதெல்லாம் நிறைவேறாத போது , சில நேரங்களில் அழுகை வருது அவ்வளவுதான்... நான் மட்டுமா இப்படி வாழ்றேன் 70% பெண்கள் இப்படித்தான்பா வாழ்றாங்க... 

எதுக்குடா உன்னை படிக்க வச்சேன், இதுக்கா ? பத்தோட ஒன்னா நீ வாழவா , நீ சுயமா நிக்கணும்னு வேலைக்கு போன அப்ப கூட உன்னால உன் மரியாதையை காப்பாத்த முடியலையா ?

ஹாஹா,போங்கப்பா படிப்புக்கும் வேலைக்கும் குடும்பத்துக்கும் சம்மந்தமே இல்ல ... வேலை பாக்காம வீட்ல இருக்குறவங்களுக்கு ஒரு வகையான பிரச்சனைனா, வேலைக்கு போயிட்டு வீட்டுக்கு மேனேஜ் பண்ற எங்களுக்கு பலவிதமான பிரச்சனை எல்லாத்தையும பழகுறதுக்குள்ள வயசு ஆயிடும் போல இருக்கு .... அவங்களுக்கு என்ன பிடிக்கும் இவங்களுக்கு என்ன பிடிக்கும் அவங்களுக்கு இப்படி பேசினா புடிக்கும் இவங்களுக்கு இப்படி பேசினா பிடிக்கும்னு எல்லாருக்கும் வளைஞ்சு நெளிஞ்சு போய் வயசாயிடும் போல இருக்குப்பா... எனக்காக எப்ப வாழ போறேன்னு அந்த தவிப்புல வர்ற கண்ணீர் தான் இது ... வேற ஒன்னும் இல்ல 

நிஜமா ?

உங்க மருமகனை விட நல்ல புருசன் எல்லாம் வாய்க்காது உங்க சாய்ஸ் பெஸ்ட் தான் .... இப்ப கூட என்ன தப்பா பேசினவனை அடி வெளுத்துட்டு வந்து இருக்காரு.. 

பின்ன ஏன் சண்டை ?

"வேற ஒன்னும் இல்ல மூணு நாள் ஆயிடுச்சு, நான் போன் போடணும்னு நினைச்சிருப்பார் ... நான் போன் போடல, அந்த கோபத்தையும் என் மேல காட்டுறார்.. வீட்ல துவைச்சு வச்ச துணி எல்லாம் காலியா போய் இருக்கும்... நான் இருந்திருந்தா எல்லாம் கைக்குள்ள இருக்கும், இப்போ நான் இல்லாம அவருக்கு கை உடைஞ்ச மாதிரி இருக்கும் அதனால எப்போ கிடைப்பா கடிச்சு துப்பலாம்னு அலைவார்... "

"என்னவோ சொல்ற அப்பாவுக்காக எதையும் மறக்கலையே கண்ணா .. அப்பா உயிருள்ள வரைக்கும் என் பிள்ளைக்கு பாக்க என்னால முடியும் எனக்காக யோசிச்சு அப்பா என்ன சொல்லுவாங்க அம்மா என்ன சொல்லுவாங்கன்னு யோசிச்சு சகித்துக்கிட்டு வாழ அவசியம் இல்லை.. வரனும்னா வந்துடு பாத்துக்கலாம்" என்று சொன்ன தகப்பனை ஏறெடுத்து பார்த்த அஞ்சலி..

"உங்க கைக்குள்ள இருக்கும்போது இருந்த பாதுகாப்பு சுதந்திரம் இதைத் தேடி தேடி தான்பா 15 வருஷத்தை தொலைச்சிட்டேன்.. ஒரு வேளை இங்க கஷ்டப்பட்டு இருந்தா ... அங்க ஈசியா இருந்திருக்குமோ என்னவோ தெரியல ... உங்க கிட்ட ரொம்ப சொகுசா இருந்துட்டேனா, அதனால அங்க சமாளிக்க முடியாம திணறுறேன்

பாத்துக்கிறேன்பா" தகப்பன் முகம் தெளியாமல் இருக்க

"ஐயோ!!! இங்கே வந்து இவரை வருத்தப்படுத்திவிட்டோமோ ?என்ற அஞ்சலிக்கு மனத்தாங்கலாகி போனது., இதற்காகத்தான் எவ்வளவு முட்டிக் கொண்டாலும் அங்கேயே கிடப்பது தாய் தகப்பனாவது நிம்மதியாக இருந்து விட்டுப் போகட்டும் என்று தான் சமாளிப்பது .. இப்படி ஆகிவிட்டதே என்று அஞ்சலிக்கே வருத்தமாகி போனது... 

நாளை அத்தை மகளின் திருமணம் ,தாய்வீட்டு ஆகா ஓகோ கவனிப்பில் அஞ்சலி ஒரு வனப்பு கூடிய விட்டாள்...

மாலை தங்கை மஞ்சு தன் புது காரில் வந்து இறங்கினாள் ... 

நானும் அவர் பிசினஸூக்கு கூடமாட ஹெல்ப் பண்றேன் என்னால அசையவே முடியுறது இல்ல அஞ்சு ... குழந்தையை பாக்குறதுக்கு வீட்ல ரெண்டு சர்வண்ட் போட்டு தந்திருக்கார் ..

ஓஓஓ 

வீட்டு வேலைக்கு தனியா ஆள் இருக்கு... அவருக்கு எப்பவும் நான் கூடவே இருக்கணும் .... அங்கும் ஆயிரம் குடைச்சல் உண்டு, நான் நல்லா இருக்கேன் என்று காட்டி கொள்வதில் பெண்களுக்கு நிகர் யார் உண்டு ?

"அத்தான் அப்படியேதான் இருக்காரா இல்ல ஏதாவது மாத்தம் இருக்கா" என்று மஞ்சு தன் புருஷன் வீட்டு புராணத்தை பாட ...

சூப்பர் மார்க்கெட் பக்கத்துல ஒரு மெயின் பில்டிங் இருக்கு இல்ல "

ஆமா"

 "அத அட்வான்ஸ் போட்டு இருக்கோம்" என்ற அஞ்சலி பக்கத்தில் இருந்த விஷ்ணு 

"மா இது எப்ப நடந்தது ,அது சேட்டு பீல்டிங் நீ இப்படி சொல்றது அந்த சேட்டுக்கு தெரிஞ்சது கட்டி வச்சி தோலை உரிச்சிடுவார்"

"ப்சு சும்மா இருடா கம்பி கட்டுற கதையாவது கட்டி விட்டுருவோம் ... இல்ல உன் அப்பனுக்கு இங்க இருக்கிற கொஞ்சநஞ்ச மரியாதையும் போயிடும்

"நீ நடத்து நடத்து உன் வாயி உன் உருட்டு , "

"ஓஓஓஓஓ அப்படியா , நீ கடன்ல இருக்க நகையெல்லாம் அடகுல இருக்குன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருந்தது "என்றதும் அஞ்சலி தன் அம்மாவை திரும்பி பார்த்தவள் 

எல்லாத்தையும் பொத்தனாப்ப கேட்டு , இவ காதுல போட்டு விட்டுருவாங்க போல இருக்கு.. இனிமே உக்காந்து கதை பேசக்கூடாது நாம இவங்க கிட்ட சொன்னா மனசு கொஞ்சம் லேசா இருக்கும்னு நினைச்சு சொன்னா, அப்படியே இரண்டாவதுகாரிக்கி தகவல் தொடர்பு கொடுத்திருக்கு ... 

"ஆமா , ஒரு கோடி ரூபாய் பிளாட் நகைய கொஞ்சம் வச்சா தான் சரியா இருக்கும்னு வச்சு கொடுத்தேன்... தங்கை முகம் சற்று சுருங்கிப் போனது...

உன்ன விட நான் நல்லா இருக்கேன் என்று காட்ட அவளுக்கு ஆசை ,நானும் குறையா இல்லை என்று காட்ட இவளுக்கு ஆசை ..

ஒரே வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தான் இவளே நாம மேலே இருக்கனும், இவ கீழே இருக்கணும்னு நினைக்கும்போது... என் மாமியாரும் நாத்தனார் பேசுறதுல செய்றதுல என்ன குறை காண... ஒட்டு மொத்தத்துல குடும்பம்னு பெயர் வச்சதுக்கு பதிலா சூனிய குடோன்னு பேர் வெச்சி இருக்கலாம்... எல்லாம் ஒரு தினுசாதான் இருக்கு... இந்த உலகத்து கூட ஒன்றவும் முடியல, இந்த உலகத்தை விட்டு தனியா போகவும் முடியல ... ச்சை , தங்கையோடு அளவாக பேசிவிட்டு நகர்ந்துவிட்டாள்

காலையில் தங்கையின் கணவன் திருமணத்திற்காக வந்திருக்க நல்லா இருக்கீங்களா என்று ஒரு வார்த்தையில் நகர்ந்து நின்று கொண்டாள் .. 

அவளுக்கும் தன் கணவன் இதே போல தங்களோடு தாய் வீட்டில் வந்து தங்க வேண்டும், என் புருஷன் என்னை எப்படி வச்சிருக்கார் பார்த்தியா என்று ஒரு பார்வை, தன் குடும்பத்தை கெத்தாக பார்க்க வேண்டும் என்றெல்லாம் ஆரம்பத்தில் ஆசை இருந்தது... ஒன்று இரண்டு தடவை சத்யா வந்தான் வந்தவன் அங்கு போடும் சண்டையை இங்கு போட்டான், எங்கே அறையை விட்டு சத்தம் வெளியே போய்விடுமோ என்று பயந்து போன அஞ்சலி அவன் வாயை பொத்திக் கொண்டவள்

அப்பாவுக்கு சத்தம் கேட்டா ஏன் எதுக்குன்னு மனசு வருத்த பட்டு போவார் இருக்கிற வரைக்கும் கொஞ்சம் சத்தம் இல்லாம இருங்களேன் "

'ஓ அப்ப நான் தான் சண்டை போடுறேனா மூத்த மருமகன் நான் வந்து இருக்கேன்.. எனக்கு மரியாதை இல்லை.. ஆனா இப்ப வந்தவன் அவனுக்கு ஏசி மாட்டி வச்சிருக்கீங்க.. 

அவர் அடிக்கடி வருவாருங்க "

அது சரி இவன் இவ்வளவுதான சம்பாதிக்கிறான் இவனுக்கு இவ்ளோ போதும்னு, எனக்கு ஃபேன் உள்ள ரூம் ... அவன் லட்சத்துல சம்பளம் வாங்குறான்ல அதனால அவனுக்கு ஏசி உள்ள பெரிய ரூம் ... இவள் தலையைப் பிடித்துக் கொண்டவள்.. காலையில் முதல் பேருந்திலேயே போயிட்டு வா ராசா , இனிமே என் வீட்டுக்கு வரவே வேண்டாம் என்று அனுப்பி வைத்து விட்டாள்

காலை அஞ்சலி தங்க நிற காட்டன் புடவை தாம் தூம் என்று இல்லை என்றாலும் எப்போதும் போல இல்லாமல் இன்று மெனக்கிட்டு சேலை உடுத்தி தலை நிறைய பூவை வைத்துக் கொண்டாள்..

தாய் ஒரு தங்க கழுத்து பதக்கத்தை கொண்டு வந்து அவள் கழுத்தில் போட போக

இது எதுக்கு??

இல்லடி அவ கழுத்து நிறைய நகை போட்டு இருக்கும்போது, நீ மட்டும் மொட்டையா வந்தா எல்லாரும் ஒரு மாதிரி பார்ப்பாங்க 

அம்மா நீயே அவ மேல, நான் கீழன்னு அடிக்கடி சொல்லிக் காட்டுற மாதிரி இருக்கு.. என் புருஷன் நகை எல்லாத்தையும் கொண்டு போயி எவகிட்டயும் கொடுக்கல ... தேவைக்கு வச்சிருக்கார், திருப்பி தருவார்... தரலையா அது என் பாடு ?நான் பாத்துக்குறேன்"

இதுக்காடி நாங்க சிறுக சிறுக சேர்த்து உனக்கு நகை போட்டது.. இப்படி நல்லது கெட்டதுக்கு கூட ஒத்த நகை இல்லாம வந்து நிற்கிற ... நான் தந்தாலும் வேண்டாம்னு சொல்ற .. 

இந்த நகையை போடுறதுல, எனக்கு எந்த குறையும் வந்துட போறது இல்ல ... ஆனா என் புருஷனுக்கு இந்த இடத்துல கூட மரியாதை குறை வந்துட கூடாதுன்னு நினைக்கிறேன்.. அவர் கட்டுன தாலி கிடக்குல்ல போதும் , இப்படியே நிக்கிறேன்..

இந்த மனுஷனை கல்யாணம் கட்டிக்கிட்டே நீ இந்த பேச்சு பேசுறியே... அவள மாதிரி தாங்குற புருஷன் கிடைச்சிருந்தா என்ற தாயை எரிச்சலாக பார்த்த அஞ்சலி

"ஏம்மா நீயும் அடிக்கடி கட்சி மாறிடுற , அதுகதான் இப்படி இருக்குன்னு பார்த்தா, நீ அதுக்கு மேல இருக்க எப்படா ஊருக்கு போய் சேருவோம்னு நினைக்க வச்சுடுவ போல இருக்கு...

"பின்ன என்னடி உன்னால எங்களுக்கு இருக்கிற கொஞ்ச நஞ்ச நிம்மதியும் போயிடும் போல இருக்கு... கல்யாணம் கட்டிக் கொடுத்தா சத்தம் இல்லாம அவளை போல குடும்பம் நடத்துவேன்னு பார்த்தா , டெய்லி ஒரு பிரச்சனையை இழுத்துட்டு வர்ற ... வயசுக்கு ஏத்த சூதானம் கொஞ்சமாவது இருக்கா... அப்பா கிட்ட என்னத்த சொல்லி தொலைச்சியோ, நேத்துல இருந்து மனுஷன் உர்ருன்னு இருக்காரு.... 

"நான் இப்போ இங்க இருக்கவா இல்ல கல்யாணத்துக்கு கூட நிக்காம ஊருக்கு கிளம்பவா

" சரி சரி எதுவும் சொல்லல கிளம்பு,

" நீ சின்ன மக கூடவே போ, நான் அப்பா கூட வரேன் என்று முடிக்க..

" அம்மா அம்மா என்று யாழி ஓடி வந்தாள் 

ஏன்டி உயிர் போக கத்துற ??

அப்பா வந்திருக்கு "

உன் அப்பன் தானே வந்துருவான், அவர் வந்துட்டாருன்னா மழை கீழ இருந்து மேலே பொத்துஊஊஊஊஊ "ஆட்டோவில் இருந்து இறங்கிய சத்யாவை பார்த்து அஞ்சலி வார்த்தை தடுமாறி நிற்க.. சத்யா பர்சை திறந்து பணத்தை கொடுத்துவிட்டு உள்ளே வர இவள் அதிர்ச்சி விலகாது நின்றாள் ... 

அப்பா இது சரிப்பட்டு வராதுன்னு பேசி முடிக்க கூப்பிட்டு விட்டிருப்பாரோ, ஆண்டவா போச்சு போச்சு இந்த பைத்தியக்காரன் இல்லாம வாழ்ந்துப்பேனா பீதியாக சத்யாவை பார்த்தாள்...

விவகாரத்து விடை இல்லை, 

விவாகரத்து பல விடை இல்லாத கேள்விகளின் தொடக்கம் என்று துணை இன்றி வாழும் பெண்களுக்கே தெரியும்!!