தினம் தினம் 12

Thinam12

தினம் தினம் 12

12 தினம் தினம் !!

என்னம்மா ஊருக்கு போகணும் போகணும்னு ராத்திரி எங்களை இருக்க விடாம கிளப்பி கூட்டிட்டு வந்துட்டு , இப்படி உம்முன்னே இருக்கீங்க என்று விஷ்ணு தன் தாயின் தோளில் கை போட...

ப்ச் , உங்க அப்பன் முகத்தை தொங்க போட்டுக்கிட்டு போனதே தான் ஞாபகமா இருக்கு விஷ்ணு....

நீங்கதான் டைவர்ஸ் பேப்பர்ல கையெழுத்து போட்டு முகத்துல விட்டெறிய போற ஆளா

நான் மானஸ்திடா, அஞ்சலிக்கு பக்கத்துல மானஸ்தின்னு போட்டுக்க, என் பிள்ளைங்க மேல தூசி விழுந்தா கூட நான் பத்ரகாளி ஆகி போவேன் .... என்ன லேசுப்டட ஆளுன்னு இந்த தற்குறி பெல்லோஸ் நினைச்சுட்டு இருக்குதுக , நானெல்லாம் காலேஜ் படிக்கும் போது கராத்தே லாவண்டர் பெல்ட் 

ம்மா அது ப்ளக் பெல்ட்

ப்ச் எனக்கு லாவண்டர் தாய் பிடிக்கும் அந்த கலர் தர மாட்டாங்களாடா என்ற தாய் தோளில் சாய்ந்து கொண்ட விஷ்ணு 

ம்மா 

ம்ம் என்னடா 

எங்களுக்காக தான இவ்வளவு அஜெஸ்ட் பண்ணி போறீங்க... அஞ்சலி மெலிதாக சிரிக்க 

ஐயம் டீன்ஏஜ் ம்மா , எனக்கு எல்லாம் தெரியும் என் கிட்ட ப்ரெண்டா இருங்கடான்னு நீங்க சொல்லி வளர்த்தது போல , உங்களுக்கு நானும் ப்ரெண்ட்தான மாம்... 

உங்களுக்கு அப்பா வேணும் எனக்கு அந்த மலைமுழுங்கி அய்யாசாமி வேணும் , உங்க அப்பாவை எனக்கு பிடிக்கும்டா சுவற்றுல அடிச்ச பந்து போல என் அக்கறை நேசம் பாசம் எல்லாம் திரும்பி வரும் போது ஒரு ஆற்றாமை அவ்வளவு தான் ... இத்தனை வருசம் ஆகியும் தன் தாய் தங்கைன்னு சொல்றவர் ஒரு நாள் கூட ஒரு நிமிசம் கூட என் அஞ்சலின்னு சொன்னதே இல்லைடா விஷ்ணு அஞ்சலி கண்ணீரை ஜன்னல் நோக்கி திரும்பி மறைக்க போக விஷ்ணு தாயின் நாடியை பிடித்து தன் பக்கம் இழுத்து அவள் கண்ணை துடைத்து விட்டவன்....

நீ சொல்லுவதானம்மா எதிர்பார்த்தா தான் வலிக்கும்னு அவர்கிட்ட எதிர்பார்க்காத 

எப்படிடா எதிர்பார்க்காம இருக்க முடியும்... என்னவோ கரிச்சட்டி மண்டையன் நாண்டுட்டு நின்னாலும் மனசு என்னவோ அவனை தான் சுத்துது.. ஆனா அவருக்கு எப்பாடா மூணு நாள் மூச்சு விடலாம்னு இருக்கும் ... ஏமாத்திட்டு இருக்காங்க ஏமாறுறாரேன்னு வருத்தம் ... இந்த அஞ்சலி யாருன்னு ஏன்டா புரியவே இல்லை இதுக்கு மேல எப்படி விஷ்ணு அப்பாவுக்கு நான் புரிய வைக்க அறியாபிள்ளை போலத்தான் முழித்தாள்...

சுடுகாடு வரை போகும் சொந்தம் தான் ஆனால் சுடுகாடு போகும் வரை இவள் யார் என்று புரியாதே போய்விடுவானோ என்ற பயம் ஒவ்வொரு பெண்ணிடமும் மரண பயத்தை விட கூடுதலாக இருக்கும்.. தன் தாயின் கண்ணீரை காண்பவன் கண்டிப்பாக ஒரு பெண்ணின் கண்ணீருக்கு காரணமாக மாட்டான் என்றுதான் அஞ்சலி எப்போதும் மகனிடம் மனதை மறைக்காது பேசுவது... 

குப்புற விழுந்துட்டு வந்து நிற்பார்மா அவருக்கும் நம்மள விட்டா யாரும் இல்லைன்னு தெரியும் அந்த கிழவி கொம்பு சீவி விடுது...

ப்ச் இவன் இப்படி தத்தி பயலா இருந்தா எல்லாரும் இவனை வச்சி ஆதாயம் தேடத்தான் செய்வாங்க..ம்ம் அப்பாவுக்கு ஒரு போன் போட்டு ஆளு எங்க இருக்கார்னு கேளேன்டா 

அட போம்மா இந்த ஆட்டத்துக்கு நான் வரல ,அவர் செல்ல மகள்கிட்ட பேச சொல்லுங்க

"அது என்னமோ உண்மைதான்டா , அவ பேசினாதான் தங்கம் பட்டுன்னு கொஞ்சுவான் நம்ம பேசினா என்ன, எதுக்கு போன் போட்ட, ஹான் வைன்னு நாலே டயலாக் டெலவரி ,அது கூட வள்ளு வள்ளுன்னு தான் வரும் ... என்று உதட்டை சுளித்து மகளிடம் போனை கொடுத்து அவன் பத்திரமாக வீடு போய் சேர்ந்தது அறிந்து கொண்டாள் ..

"யாழினி உங்க அப்பா சாப்பிட்டாரான்னு கேளு சில மணிநேரம் கழித்து அஞ்சலி போனை கொடுக்க 

"அம்மா இதோட பத்தாவது தடவை போன் போட சொல்லி இருக்க... ஏதோ அப்பா நல்ல மனநிலையில் இருந்திருக்காரு , அதனால போன எடுத்து பேசுறாரு சும்மா சும்மா தொல்லை பண்ணாதே அம்மா என்று யாழினி திட்டிவிட்டு கண்ணை மூடி சீட்டில் படுத்துக்கொள்ள 

"இதுக்கு எதுக்கும்மா இந்த சண்டை போடுற...விஷ்ணு தலையில் அடித்து கொள்ள 

" பின்ன உன்ன அடிப்பாரா அத்தனை பேரும் முன்னாடியும் அடிச்சுட்டு சர்வ சாதாரணமா இருக்கார்..

நீங்க செருப்பு போட வெளியே வரும் போது என்ன கூப்பிட்டு சாரி கேட்டாரும்மா

"இது எப்ப ??

"அப்பவே சமாதானம் ஆகியாச்சு "

"அட எருமைக்கு பிறந்த எருமை , உடனே நீயும் மன்னிச்சிட்டியோ ?

ஹிஹி பாவமா இருந்துச்சு 

"மெண்டல் மாக்கான், என்ன மாதிரி மானங்கெட்ட பொழப்பு நீயும் பொழக்காதடா, கொஞ்சம் கோபத்தை பிடிச்சு வைக்க பழகு , இல்ல நாளைக்கு இதையே தான் உன்கிட்ட பண்ணிக்கிட்டே இருப்பார் , அப்பாவா இருந்தாலும் அம்மாவா இருந்தாலும் ஒரு தப்பு பண்ணலன்னா , அதுக்காக போராட ,வாதாட தெரிஞ்சு இருக்கணும் விஷ்ணு... அதனால தான் உன்னைய வச்சு வேடிக்கை காட்டிட்டான்... 

"சரிம்மா இனி கவனமா இருக்கேன் 

ம்ம் 

தங்கள் ஊர் கோவில்பட்டியில் வந்து இறங்கினர்..

தாத்தாவுக்கு போன் போட்டு கூப்பிடுவோம்ம்மா

" வேண்டாம்டா அவங்களுக்கு எதுக்கு வீண் அலைச்சல், ஒரு ஆட்டோ புடிச்சு போயிடலாம்... அதுக்கு முன்ன தாத்தா பாட்டிக்கு ஏதாவது வாங்கணும்டா... அன்னைக்கு உங்க அப்பன் கிட்ட ஆச்சிக்கு சேலை எடுக்குறதுக்கு போய் தான் திட்டு வாங்கினேன்... அவர் கண்ணை மறைச்சு ஒன்னு ரெண்டு வாங்கிக் கொண்டு கொடுத்தா தான் உண்டு... என்கிட்ட வாங்கி அவங்களுக்கு நிறைய போறது கிடையாது... ஆனா, நான் வாங்கிட்டு போனத , அவங்க கையில எடுத்து சந்தோஷமா போட்டுக்கும்போது நமக்கு ஒரு ஆத்ம திருப்தி" என்று அஞ்சலி கடையில் போய் இருப்பதில் தாய்க்கு ஒரு சேலை தகப்பனுக்கு ஒரு சட்டை வாங்கி வைத்துக் கொண்டு ஆட்டோவை பிடித்து தன் தாய் வீட்டில் வந்து இறங்கினாள்

அப்பா சொர்க்கமே என்றாலும் அது தாய்வீடு போலாகுமா? சொர்க்கம் வந்து சேர்ந்தது போல ஒரு இன்பம் !! இது அல்லவா பெண்களின் சொர்க்க பூமி... 

"சாரதா கடைக்கு போயிட்டு வர்றேன் என்று வெளியே வந்த சாந்தகுமார் வெளியே ஆட்டோவில் வந்து இறங்கி நின்ற மகளை கண்டு விட்டு 

"எம்மாடி அஞ்சுக்கண்ணா எப்போடா வந்த??? என்று தள்ளாடி மகள் நோக்கி வயதை மறந்து ஓடி வர கண்ணீர் அரும்பி போனது அஞ்சலிக்கு 

"ப்பா இப்பதான் வந்தேன் ... அவர் குனிந்து யாழியை தூக்க போக

"நெஞ்சுல பிடிச்சுடும்ப்பா தூக்காதீங்க

"அட போத்தா, எப்போடா பிள்ளைகளை ஆர தழுவுவோம்னு தான் காத்தே கிடப்பேன்" என்று பேத்தியை தூக்கி கொஞ்சி பேரனை தோளில் தடவினார்..

"சாரதா மூத்தவ வந்திருக்கா ஓடியா" என்று குமரன் போல ஓடினார்...

"என்னடி நாலு நாள் கழிச்சு வர்றேன்னு சொன்ன திடீர்னு வந்துட்ட மருமகன் வரலையா? ஒத்தையாவா வந்த??? தாய் அரைத்த மாவு கையோடு எழும்பி ஓடி வந்தார் 

"வாசல்ல விட்டு என்ன கேள்வி சாரதா, உள்ள வாத்தா" பெட்டியை ஆளுக்கு ஒன்றாக தூக்கி கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர் ...

என்னடி எதுவும் பிர‌ச்சனையா? தகப்பனுக்கு கேட்காது தாய் விசாரிக்க 

"ம்மா தாய் வீட்டுக்கு வர கூடாதா... ரெண்டு நாள் சேர்ந்த்தாப்ப லீவ் இருந்துச்சு, அதான் வந்துட்டேன் 

"இல்ல மருமகன் இங்க உன்ன நெறைய நாள் தங்க விட மாட்டாரே அதான் கேட்டேன்..

"சாரதா பிள்ளைக்கு காப்பி தண்ணீ போட்டு கொடு சும்மா தொண தொணக்காத.... அஞ்சுவுக்கு முக்கு கடை பஜ்ஜி பிடிக்கும்ல சூடா போட்டிருப்பான் போய் வாங்கிட்டு ஓடி வர்றேன், எய்யா நீயும் வா "பேரன் பேத்திகளை அழைத்து கொண்டு தகப்பன் எழும்ப 

"ப்பா அப்படியே அந்த கடையில இலந்தை அடையும் வேணும் "சிறுபிள்ளை போல கேட்ட மகளை பார்த்து சிரித்த தகப்பன் 

"சரித்தா நீ இன்னும் மாறவே இல்ல" என்று அவள் தலையை தடவி கொடுக்க 

இல்லப்பா நிறைய மாறிட்டேன் , மாத்திட்டாங்க எனக்கு என்ன வேணும்னு கேட்டு வாங்கி தர கூட அங்க யாரும் இல்லப்பா .. இந்த உரிமை சுதந்திரம் இது எல்லாம் அங்க இல்லப்பா , உங்க கூடவே நான் இருந்திருக்கலாம் என்று அஞ்சலி மனதில் வலித்தாலும்... தகப்பனுக்கு சிரிப்பை பரிசாக கொடுத்தாள்.. பிள்ளைகள் கண்ணில் கண்ணீரை பார்த்தால் உடைந்து போவாரே அந்த பெரிய மனிதர் ....

உண்மையாகவே உனக்கும் மருமகனுக்கும் சண்டைஇல்ல தானே அஞ்சு " தகப்பன் போனதும் தாய் அருகே வர 

"ஏன்னா ரெண்டு நாளைக்கு முன்னாடி பேசும் போது அவரை வகை தொகை இல்லாம திட்டுனுயே அதான் கொஞ்சம் பயமா இருக்கு" என்று தாய் அவள் கையில் கொண்டு வந்து காபியை ஆவி பறக்க கொடுக்க 

"அப்பாடா!! அந்த காஃபியே பார்க்கும் பொழுது என்னவோ கோடி ரூபாயை அள்ளி அவள் மேலே கொட்டியது போல இருந்தது...

பெண்களின் ஏக்கமெல்லாம் ஒரு கோப்பை தேநீரை எந்த இடையூறும் இல்லாமல் ஆழ்ந்து அனுபவித்து குடிக்க வேண்டும் என்று சுருங்கி போனதுவே... ஆனால் அது கூட நிராசையாக தான் பல பெண்களுக்கு போய்க் கொண்டிருக்கிறது... தாயின் வீட்டில் சுதந்திரமாக இப்படி காபியை முகர்ந்து பேஸ் பேஸ் ரொம்ப நன்னா இருக்கு என்று உச்சிக் கொட்டி குடித்த சிறு பிள்ளை ஞாபகங்கள் 

"அஞ்சு

"ம்மா என்கிட்ட திட்டு வாங்கிட்டு போயிடாத, அதெல்லாம் எந்த சண்டையும் போடல, புள்ளைங்க உங்களை பாக்கணும்னு சொன்னுச்சு, அந்த மனுஷன் கொஞ்சம் அசந்த நேரம் ஓடி வந்துட்டோம் அவ்வளவுதான்.... 

"சரிடி அதுக்கு ஏன் சிடுசிடுக்கிற, இரண்டு பிள்ளைகளை பெத்துட்டு அதுக நல்லா வாழனுங்கிறதுக்காக , நாங்க படுற வேதனை எங்களுக்கு தாண்டி தெரியும் ... கடனை உடன வாங்கி கல்யாணத்தையும் கட்டி கொடுத்துட்டு, சண்டைன்னு வந்து நின்னா பெத்த வயிறு பத்தி எரியுது என்ன செய்ய? குடிக்காத பையனா வேணும் குணமுள்ள பையனா வேணும்னு பார்த்து பார்த்துதான் அப்பா ரெண்டு பேருக்கும் மாப்பிள்ளை எடுத்தார்... இப்படி இருக்காரே,  

"ப்ச் , உன் மாப்பிள்ளைக்கு குணத்துல என்ன குறை அதெல்லாம் நல்லாத்தான் இருக்காரு , என்ன வாயில தான் சனி வந்தது போல ஆடிருவார்.. அதுவும் அவரா ஆடமாட்டார் , அந்த பொம்பளை இருக்கு பாரு அந்த ராட்சசி அவளால, அவ செத்தா எல்லாம் சரியா வந்துருவார், என்ன அவ சாகுற வரைக்கும் நான் உயிரோட இருக்கணும்..

"அடி எருமை என்ன பேச்சு பேசுற நீ ....என்று செல்லமாக தட்ட தாயின் மடியில் படுத்து கொண்டாள் 

"யம்மோய், தோசையும் புதினா சட்னியும் வச்சு குடுக்குறியா.. கொஞ்ச நேரம் இந்த கயித்து கட்டில்ல படுத்துகிறேன்...

"ம்ம் , குளிச்சிட்டு படுடி ட்ராவல் பண்ணிட்டு பல்லு கூட விளக்கமா வந்து கட்டில்ல படுக்கிற...

"அய்ய, அங்கதான் அதை பண்ணு இதை பண்ணுங்கிறானுக , இங்கேயும் தொல்லை பண்ணாதம்மா, ஒரு நாள் பல்லு விளக்காம காபி குடிச்சாலும் தூங்கினாலும் சாமி குத்தம் ஆயிடாது தயவு செஞ்சு போ "என்று விட்டு அப்படியே கட்டிலில் சாய்ந்தாள்

எப்படி தூக்கம் வந்தது என்று தெரியாது ஆனால் குறட்டை விட்டு தூங்க ஆரம்பித்து விட்டாள் கண்களை முழித்து பார்க்கும் பொழுது அவள் தகப்பன் அவளையே பார்த்துக் கொண்டு பக்கத்தில் உட்கார்ந்திருந்தார்..

டிவியை சத்தம் இல்லாமல் வைத்திருந்தார்.. மகள் முழித்து விடுவாளாம்... பேரப்பிள்ளைகளை வெளியே விளையாட அனுப்பி வைத்துவிட்டார் மகள் முழித்து விடுவாளாம்... குக்கர் சத்தம் கூட கேட்காம சமையல் செய், என் மக முழிச்சிடுவா என்ற தகப்பனின் குரலில் தான் அவள் முழித்தது...

என் அப்பா என்னோட அப்பா!! என்று சொல்லும் போது அவ்வளவு கர்வமாக இருந்தது....

கோடி ரூபாய் சம்பாதித்து காரில் அழைத்து செல்லும் கணவனா கேட்டேன், இதே போல என் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் ஒருவன் தானே கேட்டேன் ... ஏழு மணி வரை தூங்கு, பொம்பள தூங்குனா வீடு விளங்கிடும், காலையில குளிக்காம வர்றவ குடும்ப பொம்பளையா என்ற குரல்கள் சுற்றி வர தலையை உதறினாள்...

உணர்வுள்ள ஒருத்தியின் உணர்வுகளை செயலிழக்க வைக்க மனிதன் கண்டுபிடித்த அரிய கண்டுபிடிப்பே திருமணம் ..

உணர்வுகளை மதிக்கும் இணைகள் சேர்வதே இருமனம் இணைந்த பந்தம்