நினைத்தாலே இனிக்கும் அழகியே-26

நினைத்தாலே இனிக்கும் அழகியே-26

அத்தியாயம்-26

ஊட்டியில் ஒரு பெரிய மருத்துவமனையில் கிரீஷை சேர்த்திருந்தனர்.

அன்று கிரீஷ் மயங்கிகிடக்க இடத்தை சரியாக கண்டுபிடித்து அவனது உதவியாளர்கள் ஆம்புலன்ஸோடு வந்திருந்தனார்.

உடனே ஆம்புலன்ஸில் ஏற்றி அவனை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இரத்தம் நிறைய வெளியேறிவிட்டது. இரத்தம் ஏற்றவேண்டியதிருந்தது எல்லாம் ஏற்பாடு செய்து முடித்துவிட்டுத்தான் வீட்டிற்கு தகவல் சொல்ல லேண்டலைன் போனிற்கு அழைத்தனர்.

ஏற்கனவே கணவன் வர நேரமாகியதும் பயந்து பயந்து இருந்தாள், மனதிற்குள்ளும் ஒரு படபடப்பு வரவும் தூங்காமல் அவனுக்காக கீழ் அறையிலயே காத்திருந்தாள்.ஏனோ சாமிகும்பிடத் தோன்றியது அந்த வேளையில் பூஜையறைக்குள் நுழைந்தாள்.

ஆம் பூஜையறை வேண்டும் என்று மெல்ல இங்கவந்த அடுத்த நாளே சொல்ல,அவன் கும்பிடுவதில்லை என்றாலும் அவளுக்காக அடுத்தநாளே ஏற்பாடுசெய்துகொடுத்துவிட்டான்.

போய் வேண்டிக்கொண்டு குங்குமம் இட்டுவந்தாள்,சரியாக போனில் அழைப்பும் வந்தது.

அந்தப்பக்கம் கேட்ட செய்தியில் அப்படியே சரிந்து அமர்ந்தவள் வாழ்க்கை மட்டுமல்ல உயிரே போனதுபோல் உணர்ந்தாள்.

இங்கு வந்து ஒருமாதகாலமும் அவர்களது வீட்டிற்கு போக வெண்பாவை அனுமதித்தானில்லை.

இப்போது அவசரத்திற்கு அண்ணன் நியாபகமே வந்தது,உடனே அவனுக்கு அழைக்க அந்த அர்த்த ராத்திரியிலும் வந்து நின்றான் தன் தங்கைக்காக.

உடனே இருவரும் மருத்துவமனைக்கு செல்ல அவனது உதவியாளர் இருவரும் இவர்களுக்காக காத்திருந்தனர்.

அதற்குள் கொச்சியில் தன் மாமானாருக்கும் தகவல் கொடுத்திருந்தாள்.

என்னதான் கெட்டவனாக இருந்தாலும் தன்னை உயிராக நினைக்கிறான் என்று அவனது சின்ன சின்ன செயல்களிலிருந்து கண்டுக்கொண்டாள்தான்.அதெல்லாம் அங்கு அவன் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் வேளையில்தான் நினைத்து நினைத்துப்பார்த்தாள்.

துக்கம் தாளாது அழுதே கரைந்தாள்,அடுத்தநாள் அவசர அவசரமாக மேனகாவும்,நாராயணனும் மருத்துவமனைக்கு வந்துசேர்ந்தனர்.

மந்திரி மகன் என்றதும் இன்னும் அதிக கவனத்துடன் மருத்துவம் பார்த்தனர்.மேனாகாவும் அழுதுகொண்டே இருந்தார். கடைகுட்டி மகன்,அவருக்கு செல்லமகன் இப்படியொரு நிலையில் இருக்கின்றான் என்று தன் கணவரிடம் சொல்லி சொல்லி அழுதார்.

ரத்னாவும் கிரீஷின் நிலையறிந்து வந்தவர் மகளுக்கு ஆறுதலாக அருகில் இருந்தார்.வெண்பாவோ ஒன்றும் குடிக்காமல் சாப்பிடாமல் அம்மாவின் மடியே கதியென்று படுத்திருந்தாள்.

நாராயணன் வந்த பிறகு உதவியாளர்கள் ஒதுங்கிக்கொண்டனர்,அவனது மருத்தவ செலவிலிருந்து எல்லாவற்றையும் அவனது உதவியாளர்கள் பார்த்துக்கொண்டனர்.

தம்பியின் நிலையறிந்து இரு அண்ணன்களும் ஓடிவந்துவிட்டனர் அவனை பார்ப்பதற்கு என்னதான் வேண்டாத விஷயங்கள் கிரீஷ் செய்தாலும் அவன்மேல் கோபப்படுவார்களே தவிர அவனை ஒதுக்கி வைத்ததேயில்லை,எந்த சூழ்நிலையிலும் தம்பியை விட்டுக்கொடுக்கமாட்டார்கள்.அந்தவைகையில் மூன்றுபேரும் ஒற்றுமையுடன்தான் இருந்தனர்.

என்ன நடந்ததென்று யாருக்குமே தெரியாது.அவன் எழுந்தபிறகு போலீஸ் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என்று அமைதிகாத்தனர்.

அதற்குள் ராஜேஷும் நடந்துசென்றவன். கிரீஷை ஏதோ ஒருவேகத்தில் குத்தினான்தான், ஆனாலும் அவன் இவனை நெஞ்சில் இரு லேசான காயத்தைமட்டுமே ஏற்படுத்தியிருந்தான் அவன் நினைத்திருந்தால் ராஜேஷை அப்பவே கொன்றிருக்கமுடியும் அதை கிரீஷ் செய்யவில்லை.

ராஜேஷ் கொஞ்சதுரமாக நடந்ததும் மயங்கி விழுந்திருந்தான்.

வழிபோக்கரில் யாரோ ஒருவர் பார்த்து அதிகாலையில் போலீஸிற்கு தகவல் கொடுக்க,போலீஸ் வந்து தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையில் சேர்த்திருந்தனர்.

போலீஸார் விசாரித்ததில் தன்னிடம் வழிப்பறி திருடன் வந்து மிரட்டியதில் அவனுடன் நடந்த சண்டையில் என்னை குத்திவிட்டு சென்றுவிட்டான் என்று வாக்குமூலம் கொடுத்தான்.

கே.என் விஷயம் சொன்னால் தன் மனைவி விஷயம் சொல்லவேண்டியது இருக்கும்.அவளது பெயர் இறந்தபின்னும் கெடவேண்டாம் என்று மறைத்துவிட்டான்.

அவன் ஒரேவாரத்தில் குணமாகி சென்றுவிட்டான்.

ஆனால் கிரீஷ் கிட்டதட்ட ஐந்துநாட்கள் சுயநினைவின்றி இருந்தான்,பின் மெல்ல மெல்ல கண்திறந்து பார்த்தான்.அப்போது முதலில் தேடியது தன்னவளைத்தான்.நர்ஸ் வந்து அவன் கண்திறந்ததை சொல்லவும் அனைவரும் உள்ளே சென்றனர்.

எல்லோரையும் பார்த்தவன் பின் மெல்ல கையசைத்து அவளை தன்னருகில் அழைத்து,அவளது கையை இறுக பற்றிக்கொண்டான்.

வெண்பாவோ"மாமா என்று அழைத்து அழுதுவிட்டாள்.

அந்த ஒற்றை வார்த்தைக்குத்தான் எத்தனை சக்தி மெல்ல தன் உதடுகளை விரித்து புன்னகைக்க முயன்று மீண்டுமாக கண்களைமூடி உறக்கத்திற்கு சென்றான்.

கத்தி ஆழமாக வயிற்றில் இறங்கியிருந்ததினால் குணமாக ஒருமாத காலமாகிற்று.

அன்றுதான் குணமாகி அடுத்த நாள்வீட்டிற்கு செல்லலாம் என மருத்துவர்கள் கூறியிருந்தனர்.. நாரயணன் எவ்வளவோ மகனிடம் சொன்னார் கொச்சிக்கு போவோம் அங்க கொஞ்சநாள் இரு ரெஸ்ட் எடு என்று அழைத்துப்பார்த்தார்.

கிரீஷோ முடியாது என்று மறுத்துவிட்டான். அங்கிருந்தால் அவர்களுக்கு அடிமையாக இருப்பதுபோல் உணர்வான்.

அவனுக்கென்று ஒரு ஆளுமை அங்க இருக்காது.

அப்பா,அண்ணன்கள் என்று அவர்களின் பேச்சுக்கள்தான் அங்கு ஓங்கி ஒலிக்கும் என்று எண்ணுவான்.

இங்கென்றால் அவனே ராஜா,அவனே மந்திரி அதனால்தான் கொச்சிக்கு வரமாட்டேன் என்று மறுத்துவிட்டான்.

அப்பொழுதும் நாராயணன் திட்டிக்கொண்டிருந்தார் பாரு உன் மகன் இப்பவும் என் பேச்சுக்கேட்க மாட்டுக்கான் என்று தன் மனைவியிடம் புகார் வாசித்துக் கொண்டிருந்தார்.

அதைப்பார்த்த வெண்பாவிற்குத்தான் லேசாக சிரிப்பு வந்தது,இதுல யாரு சின்னபிள்ளை அப்பாவா,மகனா என்று. அவர்கள் செயல் அப்படித்தான் சிறுபிள்ளைத்தனமாக இருந்தது.

மருத்துவமனையில் இருவருக்கும் தனியாக பேசும் வாய்ப்பு அமையவில்லை.

அதைவிட அவன் கண்திறந்ததும் போலீஸ் வந்து விசாரித்ததில் குத்தியது யாரென்று அடையாளம் தெரியவில்லை என்று கூறிவிட்டான்.

அதுக்கேட்டுக் கொண்டிருந்த வெண்பாவிற்கு ஆச்சர்யம்,கிரீஷ் பயங்கர ஷார்ப்,அதுவும் வயிற்றில் நேருக்கு நேர் நின்று குத்தியிருக்கான்,பார்க்கவில்லை தெரியாதுனு சொல்றாங்க.

ஐயோ குணமாகி வந்து அவனை பழிவாங்கப்போறாங்க,யாராயிருந்தாலும் மாமா கண்ணுலபடாமல் இருக்கட்டும்,இல்லைன்னா அவன் உயிருக்கு உத்தரவாதம் இல்லையென்று வேண்டிக்கொண்டாள்.

குணமாகி அன்றுதான் வீட்டிற்கு வந்தான்,அவனோடு மேனகாவும் இங்குதான் வந்தார்,மகன்கூட கொஞ்சநாள் இருந்துட்டு வர்றேன் என்று நாராயணனிடம் அழுது சம்மதம் வாங்கிவிட்டார்.

நாராயணனுக்கு மகன்மீது கோபம்தான் நம்ம பிடிக்கு எப்போதும் வரமாட்டுக்கான். அவன் சொல்றதை நம்மள கேட்கவச்சிடுறான் என்று மேனகாவிடம் என்னமோ செய்.உன் செல்ல மகனோடு எத்தனைநாள் இருக்கணுமோ ஆசைதீர இருந்துவிட்டுவா என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

வீடுவந்ததும்தான் வெண்பா கிரீஷ் இருவருக்கும் தனிமை கிடைத்தது. 

மெல்ல அவனருகில் அமர்ந்தவள் அவனது கண்களைப்பார்த்து "உண்மையாகவே உங்களை குத்தினது யாருன்னு தெரியாதா?"

கிரீஷ் லேசாக சிரித்தவன் "ராஜேஷ்"என்று சொல்ல...அவங்களா? என்று நம்பமுடியாமல் அதிர்ந்து வாயில் கைவைத்து அமர்ந்திருந்தாள்.

கூடவே இருந்து எல்லாம் பக்காவா ப்ளான் போட்டு நேரம்வரும்வரைக்கு காத்திருந்து செய்துட்டான் விடு பார்த்துக்கலாம் என்று கண்களை மூடி தலையணையில் சாய்ந்துக்கொண்டான்.

அப்போ எதுக்கு போலீஸ்கிட்ட மறைச்சீங்க?

சொல்லிருந்தா என்ன பண்ணுவாங்க அது வேறமாதிரி போகும்,அப்படி பிரச்சனை வேண்டாம்னுதான்,விடு இனி அவனால தொந்தரவு இருக்காது என்றவனைப்பார்த்து.. .பதறி வேற எதுவும் செய்திடாதிங்க,அந்த பாவமெல்லாம் நம்ம பிள்ளைங்களுக்குத்தான் வந்துசேரும் என்று கண்ணீரோடு சொன்னவளின் கையைப்பிடித்து அப்படியே படுத்துவிட்டான்.

நாம் செய்தபாவம் நம்மை துரத்திக்கொண்டே இருக்கும்,நாம் தூங்கினாலும் அது தூங்காது சமய சந்தர்பங்களுக்காக காத்திருந்து கழுத்தைப்பிடிக்கும் வல்லுறு.

சிறிது நேரங்கழித்த சட்டென்று கண்களைத் திறந்து பார்த்தவன்"நண்டு என்ன சொன்ன பாவம் நம்ம பிள்ளைங்களை பிடிக்கும்னுதான"

"ஆமா"

"செக் பண்ணிட்டியா,எப்போ"

"நேத்துதான் நீங்க டிஸ்சார்ஜ் ஆகிறீங்கனு நர்ஸ் சொன்னாங்க,உடனே போய் செக் பண்ணிட்டுவந்துட்டேன்"

அப்படியே அவளை தன்னருகில் இழுத்து அமர்த்திக்கொண்டு அவளது தலையை தன் நெஞ்சோடு சாய்த்தவனுக்கு என்ன உணர்வென்றே தெரியவில்லை.

மரணத்தின் விளிம்புவரை சென்று மீண்டிருக்கின்றான்.இப்போது அவனுக்கென்று ஒருவாரிசு கல்யாணமே வேண்டாம் என்று பெண்பித்தனாக இருந்தவனுக்கு,திருமணமாகி இரண்டாவது குழந்தை லேசாக சிரித்துக்கொண்டான்.

அந்த விஷயத்தை ஹாஸ்பிட்டலில் இருக்கும்போது ரத்னாவிடம் கூறியிருந்தாள்.அவர்தான் ஹஸ்பிட்டல்ல வச்சு சொல்லவேண்டாம் வீட்டுக்குப்போனதும் சொல்லு என்று வெண்பாவிடம் கூறியிருந்தார்.

ரத்னாவுக்கு கிரீஷை பிடிக்கவில்லை என்றாலும் மகளின் கணவர் என்று வரும்போது,மகளுக்காக இங்கே வந்திருக்கிறார்.

கிரீஷை பொறுத்தவரை நல்லவன் கெட்டவன் என்று கிடையாது,தப்பு செய்து மாட்டினா கெட்டவன்,இல்லைனா நல்லவன்.அதனால் அவன் இயல்பிலயே இப்போதும் இருக்கின்றான்.தன்னை மாற்றிக்கொள்ளாது.

தன் மனைவிக்கு உண்மையாக இருக்க முயற்சி செய்கின்றான், அவ்வளவே.

வெண்பாவிடம் நேரடியாகவே சொல்லிவிட்டான்"இங்கப்பாரு இதுக்கு முன்னாடி எப்படி இருந்தேன்கிறதைவிட இனி உன்னைத்தவிர வேற எவளையும் தேடமாட்டேன்னு சொல்றேன்,அதுக்காக நல்லவன் வேஷமெல்லாம் போட சொல்லாத.

அந்தவார்த்தையே நமக்கு கசக்கும் என் வாழ்க்கை அது எப்படி வாழணும்னு நான்தான் தீர்மானிக்கணும்,அவன் அப்படி சொல்றான்,இவன் இப்படிசொல்றான்லாம் அடுத்தவனுக்காகலாம் என்னால வாழமுடியாது அந்த போலியான நடிப்பு வாழ்க்கை நமக்கு செட்டாகாது"என்று தோளை குலுக்கிவிட்டு வெளியேறினான்.

வெண்பாதான் இவங்களை என்ன கேட்டகரில சேர்க்குறது என்று முழித்துக்கொண்டு நின்றிருந்தாள்.

இப்பொழுதும் அதே கே.என்தான் அவனது குணங்களில் எந்த மாற்றமும் இல்லை,தானாகவே அவனது மனது பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் விலகி இருந்தது.இப்பொழுது அவனது உடல் தேவையை வெளிப்படுத்தும்போது தன் மனையாளைத்தான் தேடுகிறான்.அது நிலைத்தால் சந்தோஷம்.

கிரீஷிற்கு பயந்து ராஜேஷ் எங்கு சென்றான் என்றுத்தெரியாது.

ருத்ரனது சொத்துக்களை மட்டும் திருப்பிக்கொடுத்தான் ஆனாலும் ருத்ரன் கே.என்னிடமிருந்து ஒதுங்கியேதான் இருக்கின்றான் தானாக பேக்ட்டரி தொடங்கி தொழில் நடத்துகிறான். சிந்தியாவும் இப்போது கர்ப்பமாக இருக்கின்றாள்.

கிட்டதட்ட வெண்பாவிற்கு ஒன்பதாவது மாதத்தில் பிரசவத்திற்காக கொச்சி செல்லமுடிவெடுத்து விட்டான்.

இங்கு மழை பெய்துக் கொண்டிருப்பதால் எப்போது எங்கு நிலச்சரிவு,இல்லைனா பாதைகள் உடைபடும், போகமுடியாத சூழல் வரும் என்று தெரிந்துதான் கொச்சிக்கு கிளம்பினான்.

கிரீஷின் வார்த்தைகளைவிட, அவனது செயல்களில் வெண்பாவின் மீதான காதல் தென்படும்...இருவருக்குமிடையே வார்த்தைகள் இல்லா உணர்வுகள் சரியாக உணர்ந்துக்கொள்ளப் பட்டன..

கொச்சிக்கு சென்றதும் அவன்

மனைவியுடன் இணக்கமாக இருப்பதை பார்த்த அவனது அண்ணிகள் இருவரும்தான் தங்கள் கணவர்களிடம்"ஏதோ கல்யாணமே வேண்டாம்னு சொல்லிட்டு,இப்போ ஒரு சின்னபிள்ளை பொண்டாட்டியாக கிடைச்சதும் எப்பா உங்க தம்பி பண்ற அலப்பறை தாங்கமுடியலை,அவ உங்கதம்பியை மாமா கூப்பிடுறதும்,உங்கதம்பி உடனே கண்ணாலேயே பேசறதும்,எப்பா படத்துலக்கூட இப்படி பார்த்ததில்லை" என்று பேச…

ஏன் உனக்கு பொறாமையா இருக்கா என்று கேட்டதும்தான் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டு சென்றார்கள்.

கிட்டதட்ட கொச்சி வந்து ஒரே வாரத்தில் வெண்பாவிற்கு பிரசவவலி வந்து மருத்துவமனையில் சேரத்திருந்தனர்.

பிரசவவார்டிற்குள் அவளை கொண்டுசெல்லும்போதுதான் அவனது ஒற்றைவிரலைப் பிடித்து மாமா என்று தன் அடி நெஞ்சிலிருந்து பயத்தில் அழைத்திருந்தாள்.

அந்த ஒருவார்த்தையிலயே அவளது பயத்தை உணர்ந்தவன் யாரிடமும் மண்டியிடாத சிறுத்தை அந்த அழகியிடம் தன் உணர்வை வெளிக்காட்டாது ஒரு சின்ன நெற்றி முத்தத்தில் தன் நேசத்தை உணர்த்திவிட்டான் அவ்வளவே.

ஐயோ என் உயிரே!உறவே! என்று வசனங்களை பேசாது தன் உடல்மொழியில் உணர்த்தி தைரியத்தை வழங்கிவிட்டான்.

அதுதான் கிரீஷ் நாரயணன் என்ற கே.என்.

வெண்பா உள்ளே சென்ற ஒருமணிநேரத்தில் அவர்களுக்கு அழகானதொரு ஆண்குழந்தை பிறந்தது.

முதன்முதலாக தன் குழந்தைய தொட்டுப்பார்ப்பதற்குள்ளாகவே அவனுக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது.

மேனகாவின் கையில் நர்ஸ் குழந்தையை கொடுத்துவிட்டு செல்ல அந்த பூச்செண்டு வளைந்து நெளிந்து அழுததைப்பார்த்து பிள்ளையின் பாதத்தை தொட்டால் வலிக்கமோ என்று மெல்ல தொட்டுப்பார்த்தான்.

அதைக்கண்டு மேனகாதான் நீயும் பிறக்கும்போது இப்படித்தான் குட்டியாக இருந்த என்று சொல்லி சொல்லி பிள்ளையின் பெருமை பேசினார்.

கிட்டதட்ட குழந்தை பிறந்து மூன்றுமாதம் கழித்துதான் தங்களது எஸ்டேட்டிற்கு வந்தனர்.

தன் கம்பீர நடையுடன் பேக்ட்டரிக்கு செல்ல கிளம்பி வந்தவன்,கட்டிலில் உறங்கிக்கொண்டிருந்த தன் மனையாளையும்,மகனையும் ஒரு நிமிடம் ரசித்து நெற்றிமுத்தம் வைத்து சென்றுவிட்டான்.

தன் ஜீப்பை ஓட்டிக்கொண்டு செல்ல பாதிவழியில் ஒரு அழகான இளம்பெண் அவனது ஜீப்பை மறைத்து"சார் என்னை கூட்டிட்டுப்போக என் ஹஸ்பண்ட் வரலை,தயவு செய்து போறவழியில கொஞ்சம் இறக்கிவிடமுடியுமா என்று கேட்கவும் ஓஓ...தாராளமாக என்றவனின் மனதில் வெண்பாவின் முகம் வர…

சாரி மேடம் பின்னாடி வேற எதாவது வண்டி வருதான்னு பாருங்க என்று விருட்டென்று கிளம்பிவிட்டான்.

அந்த தனிகாட்டு ராஜாவாயிருந்த கே.என்னைதன் கண்ணசைவில் காதலென்னும் மெல்லிய நூலினால் கட்டிவைத்திருக்கின்றாள் அந்த அழகி.அவன் நினைத்தாலே அடிநெஞ்சில் இனிக்கும் அழகி.

              *******சுபம்*******