மெய் பேசும் மித்தியமே-3

மெய் பேசும் மித்தியமே-3

மெய் பேசும் மித்தியமே-3

சூர்யபிரகாஷ் மெதுவாக எழுந்தவன் “அப்போ நான் கிளம்புறேங்க.நாளைக்கு வர்றேன்”என்று வணக்கம் வைத்துவிட்டுத் திரும்பினான்.

அந்தப்பக்கமாக ரோஜா நிற்கவும் அவளருகில் நின்றிருந்த தினேஷ் “அத்தை இது அந்த டாக்டருதானே.காலையில உன்னை இழுத்து அடி….”என்று சொல்லி முடிப்பதற்குள் அவனது வாயைப் பொத்தினாள்.

“அப்பாவும் சித்தப்பாவும் நிக்கிறானுங்கடா.எதையும் சொல்லிடாத. அத்தை முட்டாய் வாங்கித்தர்றேன்” என்று சன்னமான குரலில் சொல்லிவிட்டாள்.

சூர்யபிரகாஷோ தினேஷைப் பார்தத் “பயபுள்ள எப்போ கோர்த்துவிடலாம்ன் காத்திருந்து கோர்த்துவிட்டுட்டே! அய்யய்யோ!இவனுக்கு ரெண்டு பேரும் பக்கத்துல மலமாடு மாதிரி நிக்கிறானுங்களே நசுக்கி கொன்னுடுவானுங்களோ?: என்று யோசனையோடு ரோஜாவைப் பார்த்தான்.

அதற்குள் முருகேசன் அய்யய்யோ உண்மை தெரிஞ்சா நம்மளையும் கொன்னு போடுவாங்களே என்று பயந்து மெதுவாக வெளியே நடந்தான்.

“என்னது உன்னை கையைப்பிடிச்சு இழுத்தானா? அடிச்சானா?யார் இந்தா நிக்கிற இந்த டாக்டரா?” என்று கோபத்தில் ஆவேசத்துடன் அவன் அருகில் நெருங்கினர்.

அதைப் பார்த்த ரோஜா ஓடிப்போய் அவர்கள் இருவரது கையையும் பிடித்தவள் “அண்ணே அவரு வந்து என்னை கைய புடிச்சு இழுக்கலாம் ஒன்னும் செய்யல. நான்தான் அவரை தண்ணிக்குள்ள இருந்து காப்பாத்தினேன். தூக்கிட்டு வந்து வெளியே போட்டேன். நம்ம முருகேசனும் உதவினான்.பாவம் நீச்சல் தெரியாம குளத்துல குளிக்க வந்துட்டாரு. நான் தாமரை பூ பறிச்சிட்டு வந்தேனா‌ அவர் நிக்கிறது தெரியாம தண்ணிக்குள்ள தள்ளி விட்டுட்டேன். பாவம் தண்ணிக்குள்ள முங்கி மூச்சு அடைச்சு சாகப்போனாரு.அவர நான்தான் காப்பாத்தி விட்டேன். அதை நம்ம தினேஷ் பார்த்துட்டு இருந்தனா அது தெரியாம என்னமோ உளறிட்டான். அப்படித்தானே தினேஷு” என்று திரும்பி அவளை பார்த்து கண்ணடித்து சொல்லாதே என்றுவிட்டு‌ அமைதியாக நின்றாள்.

அதைக்கேட்டதும் கொஞ்சம்கோபம் தணிந்த குணசேகரன் டாக்டரைப் பார்த்து“இவ்வளவு பெரிய ஆம்பளைக்கு நீச்சல் தெரியாமல் குளத்துக்கு எதுக்கு குளிக்க போற?ஹாஸ்பிட்டலிலிருந்து ரெண்டு செம்பு தண்ணி எடுத்து குளிக்க வேண்டியதுதானே. நல்லா வந்திருக்காங்க பாரு. ஏதோ வெளியூர்ல இருந்து நம்ம ஊருக்கு வந்தோமோ பொழப்பு பார்த்தோமான்னு போகாம குளத்துக்குள்ள இறங்கி சாக போயிருக்க.என்ன‌ டாக்டரோ?” என்று கோபத்தில் அவனைப் பார்த்து சொல்லிவிட்டு உள்ளே சென்று விட்டனர். 

அதைக்கேட்ட சூர்யபிரகாஷோ ரோஜாவைப் பார்த்த்”இதுக்கு நீ உண்மையைச் சொல்லிருந்தாக்கூட கெத்தா நாலு அடியை வாங்கிருப்பேன்.இப்போ பாரு உங்கண்ணனுங்க என்னை ஏதோ வெத்துவேட்டுன்னு நினைச்சு பார்த்துட்டுப் போறானுங்க.என் நேரம்.இதுலவேற இவனுங்க வீட்டுக்கே வாடகைக்கு வர்றேன் விளங்கிடும்”என்றவன் அங்கிருந்துக் கோபத்தில் வேகமாக வெளியே வந்துவிட்டான்.

அவன் வெளியே வந்தப்பிறகுதான் “ஐயோ! அந்த மாட்டைப்பிடிச்சு கட்டிப் போட்டுட்டானுங்களா?

என்னவோ தெரியலையே” என்று அக்கம் பக்கம் பார்த்தான்.

அவனுக்குப் பின்னாடியே வந்த முருகேசன்தான்”என்ன டாக்டரு யாரைத்தேடுறீங்க.காளையையா?”

அதைக்கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்து முறைத்தான்.

“அதைப் பிடிச்சிக் கட்டிப்போட்டாச்சு.பயப்படாதிங்க டாக்டரே இதுக்கெல்லாமா பயப்படுவாங்க?கிராமத்து ஆளுங்கன்னா காளை வளப்பாங்க, பசு வளப்பாங்க நாய் வளப்பாங்க இதெல்லாம் இங்க சகஜம்.இதுக்குப்போய் பயந்துக்கிட்டு”

“இங்க வா அந்த மாடு ஒடிவந்ததும் முத்துப்பின்னாடி முதல்ல நீதான்ன ஓடின.ஏதோ அந்தக் காளையை அடக்கின மாதிரி பேசுற.ஹாஸ்பிட்டலுக்கு வா முதல்ல உன் வாயை ஊசியால தைச்சி வைக்கிறேன்.அப்பதான் சரிப்படுவ”

“இனி பேசமாட்டேன் டாக்டரு”என்றவன் வாயை இறுக மூடிக்கொண்டான்.

அதற்குள் பின்னாடியே வந்த ரோஜா”என்ன முருகேசா உங்க டாக்டருக்கு இங்கயே நிக்காரு.என்ன மாடு போயிடுச்சான்னு பாக்குறாரோ?அதெல்லாம் அப்பவே கட்டிப்போட்டாச்சு.இப்போதான் தீவனம் வைச்சாங்க.அவரைக் கிளம்பச் சொல்லு.இல்ல போன அண்ணனுங்க திரும்பி வந்திடப்போறாங்க”

அதைக்கேட்ட சூர்யபிரகாஷ் திரும்பிப்பார்த்து அவளை முறைத்தவன்”என்ன உங்க அண்ணனுங்கன்னா பெரிய இவனுங்களா?கொஞ்சம் என்னை மாதிரியே உயரமா இருந்துட்டா ரவுடிங்களா?மூளையே கிடையாதா அவனுங்களுக்கு ஒரு டாக்கருக்கிட்ட எப்படி நடந்துக்கணும்னு ஒரு மரியாதை தெரியல.இவனுங்க இந்த ஊரு பெரிய மனுஷங்களாம்?ஏதோ அவங்கத் தங்கச்சி உலக அழகி நாங்க அவளை அப்படியே கடத்திட்டுப்போக வீட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரியே ஓவருபில்டப்பு”

“ஏன் நான் உலக அழகி இல்லையாக்கும்.எங்க ஊர்ல நான்தான் உலக அழகி.உன் கண்ணு நொள்ளக் கண்ணு டாக்டரு.அதான் கண்ணாடி போட்டிருக்க.வந்துட்டாரு டப்ஸா கண்ணை வைச்சிக்கிட்டு உலக அழகியில்லன்னுட்டு”

“என்னது டப்ஸா கண்ணா உன்னை உன்னை” என்று அவளுருகில் சென்று அவள் மோதியவாறு நின்றான். 

“என் கண்ணு டப்ஸா கண்ணா?என் கண்ணு டப்ஸா கண்ணா நல்ல பார்த்துச் சொல்லு”என்று கண்ணாடியைக் கழட்டிட்டு அவள் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டுபோனான்.

இருவரது கண்களும் ஒருவர் கண்களை ஒருவர் விழுங்க ஒரு நொடியில் இருவருக்குமே ஒரு மாதிரியா உள்ளம் படபடக்க அப்படியே உறைந்து நின்றுவிட்டனர்.

அந்த நேரம் தினேஷ் அத்தை என்று கூப்பிட்டு அவளது கையை வந்துப்பிடிக்கவும் இருவரும் விலகி நின்றனர்.

ரோஜாவுக்கு அடுத்து என்ன பேசவென்று தெரியாது தடுமாறியவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

அவனுமே அடுத்து பேசமுடியாது வார்த்தைகள் தொண்டைக்குள் சிக்கிக்கொள்ள அப்படியே அவளேயே பார்த்திருந்தான்.

அந்தக் கண்கள் நான்கும் கண்ணும் கண்ணும் கொள்ளையடிக்க என்ற ரீதியில் நின்றிருக்க முருகேசன்தான்”வாங்க டாக்டர் நம்ம போவோம்.போய் டீ குடிச்சிட்டு வீட்டுக்குப்போலாம்” என்று அழைத்தனர்.

அதற்குள் சூர்யபிரகாஷ் தன்னை நிலைப்படுத்திக்கொண்டான்.

உடனே தனது பார்வையை மாத்தியவன் “உலக அழகியாம் உலக அழகி!சூன்யக்காரி மாதிரி இருந்துட்டு உலக அழகியாம் என்றவன் திரும்பி நடந்தான்.

“ஆமா இவருக்குத்தான் சூன்யம் வைக்க நான் பொறந்திருக்கேன்.டாக்டருன்னா அழகா அறிவா இருப்பாங்கன்னு பார்த்திருக்கேன்.இவரென்ன செங்குரங்கு சட்டைப்பேண்டு போட்ட மாதிரி இருக்காரு.இவரை சீக்கிரம் அடிச்சுத் துரத்திவிடு முருகேசா”

அவ்வளவுதான் சூர்யபிரகாஷோ திரும்பி”அடிங்க இருடி இந்த செங்குரங்கு என்ன செய்யும்னு காண்பிக்கிறேன்”என்று கீழக்கிடந்தக் கல்லை எடுத்து ஏறியப்போனான்.

“ஐயோ டாக்டரே எறிஞ்சாடாதிங்க. ஏழரையைக் கூட்டிடாதிங்க” என்று அவனது கையைப்பிடித்து இழுத்து அவன்கையிலிருந்தக் கல்லைப் பிடுங்கி எறிந்தான்.

“என்னைப் பார்த்தா செங்குரங்கு மாதிரியா இருக்கு?”

“ஐயோ டாக்டர் ரோஜா ஏதோ சின்னபிள்ளைத்தனமா பேசிட்டா விடுங்க.அவளே பாவம்.பொதுவா யாருக்கிட்டயும் பேசவேமாட்டா.உங்கக்கிட்டதான் காலையிலிருந்து வம்பிழுத்திட்டிருக்கா.அவதான் சின்னபிள்ளை அப்படி நடந்துக்கிறான்னா நீங்க பெரியவருதானே விட்டுக்குடுங்க.இப்படியா சின்னபிள்ளைக்கு சமமா சண்டைப்போடுவீங்க என்ன டாக்டரோ போங்க”என்றவன் சைக்கிளை எடுத்துக்கொண்டு நடந்தான்.அவனோடு சேர்ந்து டாக்டரும் நடந்தான்.

“இவளா பாவம் சரியான பஜாரி”

“பஜாரின்னா என்ன டாக்டர்?”

“உங்க ரோஜா மாதிரி இருக்கிறவங்கதான்”

“அப்படியெல்லாம் சொல்லாதிங்க டாக்டர்.அதுவே பாவம்”

“ஆமா ஆமா பாவம்தான்.என்னை காலையில கொல்லப் பார்த்தவதான”

“அவதான் உங்களை நான் வரதுக்கு முன்னாடியே கரைக்குத் தூக்கிட்டுவந்தவ ஞாபகமிருக்கா?”

‘ஆமால்ல அதை மறந்துட்டனே?’ என்று அப்போதுதான் தண்ணிக்குள்ள நடந்ததை முளைக்குள்ள திரும்பவும் கொண்டுவந்து யோசித்தான்.

‘ஆமா தண்ணிக்குள்ள முங்கினவனைத் தூக்கிட்டு வந்தவ ட்ரஸ்ஸை பிடிச்சி இழுத்து மொத்தமா உருவிட்டேன்ல.அவ மறுபடியும் என்னை விட்டு பாவடையை எல்லாம் திரும்பக் கட்டிட்டுத்தானே என்னைப் பிடிச்சுத் தூக்குனா?’என்று யோசித்தவாறே நடந்தவன் சட்டென்று நின்றுவிட்டான்.

அவளைத் தண்ணிக்குள்ள அப்படிப் பார்த்ததுதான் முளைக்குள் திரும்பத் திரும்ப வந்தது.அதுதான் அப்படியே நடக்காது நின்றிருந்தான்.

அவன் அப்படியே நின்றதும் முருகேசன்”என்னாச்சு டாக்டர் நின்னுட்டீங்க?நடக்க முடியலையா?நீங்க சைக்கிள் ஓட்டுங்க நான் நடந்துவர்றேன்”என்றான்.

உடனே தன் யோசனையில் இருந்து வெளியே வந்தவன் “இல்லை முருகேசா நடக்கிறது நல்லாயிருக்கு.வா அப்படியே ஊரைச் சுத்திப்பார்த்துக்கிட்டே நடக்கலாம்.அடுத்த வாரத்துல என்னோட வண்டியையும் காரையும் கொண்டு வந்திடுவேன்.அப்புறம் இப்படி வாய்ப்பு கிடைக்காதுல”

“ஆகட்டும் டாக்டர்” என்று ஏதேதோ பேசியவாறே நடந்தான்.

‘அவனோ ச்சை நம்மளை அந்த நேரத்துலயும் காப்பாத்திக் கொண்டு வந்தவளை கொலைகாரின்னு சொல்லிட்டமே.ஆனாலும் அவளுக்கு வாய் கொஞ்சம் ஓவர்தான்.உலகழகி ரோஜாவே உன் வாயை ஒரு நாள் அடைக்கிறேன் இரு’ என்று நினைத்தவாறே நடந்தான்.

ஒரு பெண்ணின் உடலைப் பார்த்தால் வரும் ஹார்மோன்களின் பிரச்சனை அவனுக்கும் அந்த நொடி தன்னையறியாது வந்தது.

அதுசரி அவனென்ன புத்தனா எல்லாத்தையும் மறந்து வாழ்வதற்கு.அவனும் மனிதன்தானே!

ஒருமாதிரியான சந்தோசமா? இல்லை உள்ளே ஏதோ நடக்கிறதா? என்று எதுவும் தெரியாது நடப்பதுக்கூட தெரியாது நடந்தான்.

சூர்யபிரகாஷ் அமைதியாக நடந்துவருவதைப் பார்த்த முருகேசன்”என்ன டாக்டர் ரோஜா திட்டுனது வருத்தமோ?”

“இல்லை” என்று தலையாட்டினான்.

“அதுக்கில்ல டாக்டர் நீங்க வந்த ஒருவாரத்துல தூங்கும்போது தவிற உங்க வாயை சும்மா இருக்காதே.இப்போ அமைதியா வர்றீங்களேன்னுதான் கேட்டேன்”

அதைக்கேட்டதும் அவனைத் திரும்பிப் பார்த்த சூர்யபிரகாஷ்”என் ஒரிஜினல் குணம்தெரியாம நீபாட்டுக்குப் பேசுற.ஒரு நாள் உன் வாயை உடைச்சு நானே தையல் போட்டுதைக்கப்போறேன் பாரேன்”என்னு கடுப்பில் சொன்னான்.

“ஐயோ!” என்று தனது வாயை மூடிக்கொண்டு நடந்தவனது போன் சத்தம்போடவும் எடுத்துப் பார்த்தான் அவனது அம்மா என்றதும் எடுத்துப் பேசினான்.

“சொல்லுமா?”

“வீடெல்லாம் ரெடி பண்ணிட்டியா? நாங்க எப்போ வரணும்னு சொல்லு”

“வீடு பார்த்துட்டேன்மா இப்போதான் முருகேசனும் நானும் போய் பார்த்துட்டு வந்தோம்”

“நமக்கு செட்டாகுமா?”

“அதெல்லாம் பார்க்கமால இருப்பேன்.அதெல்லாம் பார்த்துதான் பேசிருக்கேன்.நீ வந்தா மட்டும் போதும்”

“அப்படியா அப்போ சாமான்லாம் பேக் பண்ணிடவா?”

“அதெல்லாம் நானே மூவர்ஸ் அண்ட் பேக்கர்ஸ்கிட்ட சொல்லிடுறேன்.தேவையானது எல்லாம் எடுத்துட்டு வந்திடுவாங்க.மேல வீட்டுல எல்லாம் ஒதுக்கிப்போட்டுட்டு வந்திடு”

“சரிடா”

“அந்த வாடகைக்கு வர்றாங்கள்ல அவங்கக்கிட்டயும் பேசிடு.எப்போ வர்றாங்கன்னு கேட்டுச் சொல்லு.அநேகமா நீ இந்த வார ஞாயித்துக்கிழமை கிளம்பவேண்டியதிருக்கும்”

“சரிடா”

“அப்புறம் இங்கதான் போறோம்னு யாருக்கிட்டயும் சொல்லாம வாம்மா”

“சூர்யா”

“நான் சொல்ல வர்றது புரியுதாம்மா.இதுக்குமேல என்னால முடியாதுமா.தலைவெடிச்சிடும்.பழைய சூர்யாவா மாறிடுவேன்”

“தம்பி”

“இதுக்குமேல நான் என்னமா செய்யணும்?முடியாதுமா.நீங்க கிளம்பி வந்திடுங்க.எனக்கு மனநிம்மதி வேணும்”

“சரி தம்பி.நீ எதுவும் இப்போதைக்கு யோசிக்காத.நீ எல்லாம் பேசி முடிச்சிடு.நீ வந்துக் கூட்டிட்டுப்போவியா.இல்லை நாங்க வந்திடட்டுமா”

நான் சனிக்கிழமை வர்றேன்மா.காரைக்கொண்டுவரணும் நம்ம கார்லயே இங்க வந்திடலாம்”

“சரிடா”

“வேற யாராவது வந்தாங்களா?”

“வந்தாங்க வந்தாங்க.அவங்ககிட்ட என்னத்தை பேசுறதுக்கு இருக்கு.வந்து பார்த்துட்டுப் போயிட்டாங்க”

“ம்ம்ம்”

“இதுவும் நம்ம தலையில ஏன் கட்டிக்கணும்.எல்லாத்தையும் குடுத்துட்டு நீ உன் வாழ்க்யை மட்டும் பார்க்கலாமே.நீ தேவையில்லாம உன் தோள்ல சுமக்குறியோன்னு தோணுது”

“அம்மா இது என்ன பேச்சுன்னு பேசுற.அதெல்லாம் எனக்கு சுமையா இல்ல.இந்த வாழ்க்கையே வாழ்றதுக்கு காரணம் தெரிஞ்சும் இப்படி சொல்லுறீயோம்மா”

“நீ யோசிக்கிற மாதிரிதானே நானும் என் மகனுக்காக

யோசிப்பேன்”

“இனி இப்படி பேசதம்மா.மனசு வலிக்குது”என்றவனது குரல் உடைந்தமாதிரியாகிற்று.

“சூர்யா நான்…நான்”என்று அழைத்தவருக்கும் குரல் உடைந்துவிட்டது.

அவர்கள் பேசுவது புரியாவிட்டாலும் டாக்டரின் குரலைவைத்துக் கண்டுக்கொண்ட முருகேசன் டாக்டர் என்று அவனது கையை ஆதுரமாகப் பிடித்தான்.

அவனிடம் ஒன்றுமில்லை என்று தலையசைத்துவிட்டு அம்மாவிடம் பேசிமுடித்தவன் முருகேசனின் தோளில் கைப்போட்டுப் பிடித்துக்கொண்டு நடந்தான்.

அவனுக்கு சூர்யபிராகஷைப் பார்த்து ஆச்சர்யமாகவும் வித்தியாசமாகவும் இருந்தது.

இந்த டாக்டரு என்ன ரகம்னு யோசித்தவாறே அவனைத் திரும்பித் திரும்பிப் பார்த்தான்.

சூர்யபிரகாஷோ சோகம் இளையோடும் முகத்தோடு அவனோடு சேர்ந்து நடந்தான்!