மெய் பேசும் மித்தியமே-6

மெய் பேசும் மித்தியமே-6

மெய் பேசும் மித்தியமே-6

ரோஜாவுக்கு சனி ஞாயிறும் லீவு அப்படின்னதும் மனசு ஒருமாதிரி இருந்தது.அவளுக்கு வாரத்துக்கு ஏழு நாளும் ஸ்கூல் இருந்தால் நல்லாயிருக்கும்னு நினைக்கிறாள்.

அவளுக்கு அந்த மழலைகளோடு மழலையாக உருமாறி சந்தோசமாக துள்ளிக்குதித்தான் ஆசை.ஆனால் ஸ்கூல்ல இருக்கணுமே!

அன்றும் வழக்கம்போல எழுந்து தினேஷை அழைத்துக்கொண்டு அப்படியே வண்டியில் ஊர் சுத்தியவள் குளத்துப்பக்கம்தான் போனாள்.

“அத்தை இங்க குளிப்போமா?”

“வேண்டாம்டா அன்னைக்கு பூ பறிச்சதுக்கு உங்கப்பா அதான் எங்கண்ணன் சத்தம்போட்டான்.இன்னைக்கு குளிச்சுட்டுப்போனா அவ்வளவுதான் சாட்டைக்கம்பால நம்மளை வெளுத்திருவான்”

“உன்னை வெளுக்கமாட்டாங்க.என்னைத்தான் வெளுப்பாங்க,அதுவும் உங்கண்ணன் இல்லை உங்க அண்ணி எங்கம்மா?”

“அம்மாக்கள்னாலே அப்படித்தான்டா.உங்கம்மா உன்னை அடிச்சா எங்கம்மா என்னை அடிப்பாங்க.அவ்வளவுதான் இதெல்லாம் நம்ம வாழ்க்கையில் சகமப்பா.நான் வாங்கத அடியா என்ன?”

“பாட்டி உன்னை அடிச்சிருக்காங்களா?பொய் சொல்லாத அத்த”

“உண்மைக்கும்டா நான் ரொம்ப சேட்டைப் பண்ணுவேனா அதான் பாட்டி ரொம்ப அடிப்பாங்க.அப்புறம் சிலபல சம்பவங்கள்னால அடிக்கிறதை மறந்தே போனாங்க.என்ன இப்போ நான் பழையபடியே சேட்டை பண்ணமாட்டனான்னு ஏங்குறாங்க”

“அப்படியாத்தை.அப்பா நானும் அப்படி உன்னைய மாதிரியே மாறிட்டா அடிகிடைக்காதுல்ல”

அதில் பதறி சட்டென்று அவனது வாயை மூடியவள் “அப்படியெல்லாம் சொல்லாதடா ஒருநேரம் இல்லன்னா ஒருநேரம் நம்ம சொல்லுற வார்த்தைகள் பலிச்சிடும்.அப்படியெல்லாம் உனக்கு எதுவும் நடக்காது.நீ இப்பவே எல்லா சேட்டையும் பண்ணு.அடிவாங்குனா துடைச்சிக்கலாம்.நம்ம பார்க்காத பிரச்சனையா? அடியா?”

“சரித்தை அப்படியெல்லாம் இனி சொல்லமாட்டேன்.வா நம்ம தோப்புக்குப் போவோம்”

“இன்னைக்கு வேண்டாம்டா மனசே இல்லை”

“ஏன்த்தை நம்ம தோப்புக்கு போனாதான கிணத்துல குளிக்க முடியும்.இளநீ குடிக்க முடியும்”

“பிடிக்கலடா ஒரு மாதிரியா இருக்கு”

“அப்படியா.நீ வரவர சரியே இல்லத்தை.நேத்துல இருந்து உம்மனாமூஞ்சியாவே இருக்க.நான் அம்மாக்கூட அம்மாச்சி வீட்டுக்கு போறேன் போ”

“அங்க எதுக்குடா போற?”

“நீதான் எங்கயும் வரப்பிடிக்கலைன்னு சொல்லுறியே அதுதான் அங்கப்போறேன்”

“போறேன்னா போ.அப்புறம் எப்படினாலும் இங்கதான வரணும்.அப்போ பார்த்துக்கிறேன்.அத்தை நொத்தைன்னு வா உன்னை வெளுத்துவிடுறேன் பாரு”

“உன்கிட்ட வந்தாதானே.நீயே இஞ்சித்தின்ன மாதிரியே உர்ன்னு இருக்கு.உன்கிட்ட யாரு பேசுவா?”

“அப்படியா அப்போ நான் வாங்கித்தந்த முட்டாய்லாம் தா.நீ உங்க அம்மாச்சி வீட்டுக்குப்போய் உன் சித்தி வாங்கித்தர்றதை தின்னு.தாடா”என்று அவனது கையில் உள்ளதை பிடுங்கி தாவணியில் சொருகி வைதுத்துக்கொண்டாள்.

“ச்ச்சீ பே.உன்கூட வந்தேன் பாரு.இனி உன்கூட பேசவேமாட்டேன்”என்றவன் அழுதுகொண்டே வீட்டுக்குப்போய்விட்டான்.

அவன் போனபின்புதான் யோசித்தாள் “ரொம்ப பேசிட்டமோ.அழுதுட்டுப்போறானே.அண்ணன் எதுவும் கேட்டுச்சின்னா என்ன சொல்லுறது?ஆஆஆ அவன் ஒன்னும் சொல்லமாட்டான்” என்று தன்னைத்தானே சமாதானப் படுத்திக்கொண்டாள்.

ஆனாலும் அவளது மனது அவளையே கேள்விக்கேட்டது.

‘ஏன்டி இப்படி இருக்க.ஸ்கூல்ல மிஸ் பண்றேன்னு தெரியுது.ஆனால் அதுக்காக நீ இப்படி சோகமாக இல்லைன்னு தெரியுது.சின்னவாண்டுலாம் கண்டுப்பிடிக்கிறளவுக்கு உன் மூஞ்சியில ஏக்கம் தெரியுது.எதுக்காக இந்த ஏக்கம்?

இந்த பாலையாய் வெந்திருந்த மனசுல அவனைப் பார்த்ததும்தான் கொஞ்சமே கொஞ்சம் குளிர் வந்துச்சு.அதனால்தான் அவனை தேடுறியா?’என்று தனக்குள்ள பேசியவாறே வண்டியை எடுத்தவள் ஓட்டிக்கொண்டு வீடுநோக்கி வந்துக்கொண்டிருந்தாள்.

அப்போது எதிரே வந்த முருகேசனைக் கண்டதும் நேராக அவனுக்கு முன்பு போய் வண்டியைகொண்டுவிட்டாள்.

“ஐயோ என்று பயந்து தனது கையை வைத்து இடுப்புக்குக் கீழ் மறைத்துப் பிடித்தவன்”என்ன ரோஜாம்மா இப்படியா மனுஷனை பயமுறுத்துவீங்க?எனக்கு ஒரு நல்லது நடக்கவிடாமா பண்ணப் பார்த்தீங்களா?”என்று விரித்து வைத்திருந்த காலை ஒடுக்கியவன் பக்கத்தில் வந்து நின்றான்.

“என்ன முருகேசா எப்பவும் ஒட்டுப்புல்லு மாதிரி உங்க டாக்டரை ஒட்டிக்கிட்டே நடப்பியே?இப்போ என்னாச்சு உங்க டாக்டர் உன்னை அம்போன்னு விட்டுட்டு போயிட்டாரோ?”

“அதையேன் கேட்கறீங்க ஊருக்குப் போகணும்னு சிட்டா பறந்துட்டாரு.அவரு குடும்பத்தை இங்கக் கூட்டிவரணும்ல அதுதான்.நம்மதான் ஒத்தைக்கு இருக்கோம் அவராவது குடும்பத்தோடு இருக்கட்டும்”

“எப்போ வர்றாராம் உங்க டாக்டரு?”

“இரண்டு நாளையில் வந்திருவேன்னு சொல்லிருக்காரு.திங்கள் ஹாஸ்பிட்டல் இருக்குல்ல.ஒருவேளை வர்றதுக்கு லேட்டானா லீவு போட்டுட்டுத் தகவல் சொல்லுவாரும்மா”

“ஓஓ”என்று சொன்னவளின் குரலில் ஒரு தடுமாற்றம் வந்தது.

“ஆமா உங்க டாக்டரு குடும்பம் குடும்பம்னு சொல்லுறாரே கல்யாணம் முடிஞ்சிட்டா என்ன?”

“அது தெரியலம்மா.ஆனா அவங்கம்மாகிட்டதான் அடிக்கடி பேசுவாரு.பொண்டாட்டிக்கிட்ட பேசிப் பார்த்ததுமில்லை கேட்டதுமில்லை.கல்யாணம் முடிஞ்சிருக்கா இல்லையான்னு சொல்லவேயில்லை.நானும் கேட்கவேயில்லை”

“க்கும் இதுக்கூட தெரியல.அவருக்கு வீடு பார்த்துக் குடுத்திருக்க.மவனே அப்பாவையும் அண்ணனுங்களையும் தெரியும்ல.ஏதாவது எடக்கு மடக்கா இருந்துச்சுன்னா உன்தலைதான் வெட்டப்படுய் முருகேசா.பார்த்து சூதானமா இருந்துக்க”என்று எச்சரித்துவிட்டு வண்டியை ஸ்டார்ட் பண்ணி பறந்துவிட்டாள்.

“ஐய்யய்யோ என் தலையை வெட்டுவாங்களா?”என்னம்மா இப்படி பயமுறுத்திட்டு போறீங்களே என்று பயந்தவன் உடனே டாக்டருக்குப் போன் பண்ணினான்.

அந்தோ பாவம் அவனுக்கு அந்தப்பக்கமிருந்து இந்த நம்பர் சுவிட்சுடு ஆப் என்றுதான் வந்தது.

“அப்போ உண்மையில டாக்டரை பத்தி ஏதோ மர்மம் இருக்கா?அதுதான் எதையும் சொல்லாம போயிட்டாரா?அதெல்லாம் ரோஜாம்மாவுக்குத் தெரிஞ்சிருக்குப்போலயே?”என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டு நடந்தான்.

ஆனால் ரோஜாவுக்கு மனசு முழுவதும் சூர்யபிரகாஷின் நினைவுகள்தான் வந்தது.தனது வண்டியை கொண்டுவிட்டுட்டு வீட்டுக்குள் போனவளுக்கு எதுவும் கண்ணிலும் கருத்திலும் படவில்லை.

அங்கே இருந்த அப்பாவையோ அவர்கூட உட்கார்ந்துப் பேசிட்டிருக்க பெரியவங்களையோ கவனிக்காது வேகமாக உள்ளே போய்விட்டாள்.

அவளை வழி மறித்த மல்லிகாதான் “என்னபிள்ள நீ முன்னாடி அப்பாவும் அப்பாகூட பெரியாட்கள் இருக்காங்க. ஒரு மரியாதைக்குக்கூட அவங்களைப் பார்க்காம பேசாம வந்துட்டியே? உன்ன பத்தி என்ன நினைப்பாங்க?”என்று திட்டினார்.

“என்னம்மா சொல்ற அங்க யாருமே இல்லையே? என் கண்ணுக்கு யாருமே தெரியலையே!” நான் வந்து விட்டுட்டு அது பாட்டுக்கு உள்ள வந்துட்டேனே” 

“நீ என்ன யோசனையில அப்படி உள்ள வந்துன்னு தெரியல அப்பா என்னைப் பார்த்துக் கண்ணைக் காண்பிக்கிறாரு.இந்தா இந்த ஜூஸைக் கொண்டு குடுத்துட்டு வா” என்று ஜூஸ் இருந்த டிரேயை அவள் கையில் கொடுத்து முன் வாசலுக்கு அனுப்பிவிட்டார்.

“இந்த அம்மாவுக்கு வேற வேலையே இல்ல. நானே வெளியில் இருந்து பழைய விஷயங்களை வரேன் இந்த சொந்தக்காரங்களுக்கு அதைக்குடு இதைக்குடுன்னு நம்மளையே விரட்டிவிடுறாங்க” என்று முணுமுணுப்புடன் திட்டிவாறே வந்தாள்.

அவள் வந்து அங்கிருந்த ஒரு ஐந்தாறு பேருக்கும் ஜாஸினை கொடுத்துவிட்டு திரும்பி வந்துவிட்டாள். அவர்கள் யார்? என்ன? என்று விசாரிக்கவே இல்லை ஏதோ சொந்தக்காரங்க வெளி ஊர்ல இருந்து வந்திருப்பாங்க என்றுதான் நினைத்திருந்தாள்.

அதனால் நேராக தன் அறைக்குள் போனவள் உடையை மாற்றிவிட்டு கட்டிலில் பொத்தென்று படுத்துக்க ண்ணை மூடினாள்.

அவள் கண்முன்னே சூர்யபிரகாஷ் வந்து நின்றான்.

அச்சோ என்று படக்கென்று எழுந்து உட்கார்ந்தவளுக்கு உடலெல்லாம் ஒருமாதிரி பதறியது.

“இது என்ன அந்தாளுக்கூட பேசுறதுக்குப் பிடிச்சிருக்குன்னு பேச்சுக்கொடுத்தேன்.ஆனால் இந்த மனசு என்ன இப்படிக் கண்டபடி யோசிக்குது?வேண்டாம் அவர் யாரோ நான் யாரோ?நல்ல படிச்சவரு.அந்த விசயத்துல எனக்கும் அவருக்கும் சரியாவனது,அதுவுமில்வாமல் வந்து ஒருவாரத்தில் யாரென்றே தெரியாத ஒரு டாக்டர் மேல எனக்கெப்படி இப்படியான ஆசைவிதை மனசுக்குள்ள விழுந்துச்சு.இப்படியான எண்ணங்களே எனக்கு வரக்கூடாதே!”என்று பதறியவள் எழுந்துப்போய் முகத்தில் தண்ணீர் அடித்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டு வந்து உட்கார்ந்தாள்.

அவளுக்குத் தன்னையறியாது கண்ணீர் வந்தது.அதை துடைக்காது அப்படியே அமர்ந்திருத்தவளின் இதயம் தாளம் தப்பித் துடித்தது.

நானே இந்த வாழ்க்கை யே போதும்னு அதுபாட்டுக்கு வாழ்ந்திட்டிருக்கேன்.இந்த வாழ்க்கையில் இப்படியன ஆசை துளிர்க்கலாமா?ஏன் கடவுளே மறுபடியும் மறுபடியும் என் வாழ்க்கையிலயே விளையாடுற?உனக்கு விளையாடும் பொம்மையாக நான்தான் கிடைச்சேனா?உள்ளுக்குள் இருக்கும் வெந்தும் தனியாதிருக்கும் நெருப்பு சாம்பலில் மீண்டும் ஒரு பீனிக்ஸ் எழும்பவேண்டாம்.மறுபடியும் நெருப்பில் குளிக்க என் மனம் தாயாரில்லை” என்று தனக்குள்ளே புலம்பியவள் அப்படியே தலையணையில் சாய்ந்து தன் மனம் ஆறுமட்டும் அழுது ஓய்ந்தவள் சாப்பிடாது தூங்கிவிட்டாள்.

மாலையில் இருள் கவ்வும் வேளையில் தினேஷ் வந்து “அத்தை எழுந்திரு.தாத்தா உன்னைக் கூப்பிடுறாங்க.அத்தை!”என்று அவளது கன்னத்தை லேசாகத் தட்டி எழுப்பினான்.

“போல தூக்கத்தைக் கெடுக்காத”என்று அவனது கையைத் தட்டிவிட்டாள்.

அதற்குள் மல்லிகா வந்து”சாயங்கால நேரத்துல தூங்கிட்டிருக்க.அப்பா உன்கிட்ட பேச மத்தியானத்துல இருந்நு காத்திருக்காங்க.நீயும் எழும்பினபாடில்ல.எழும்பு அப்பா ஏதோ முக்கியமா உன்கிட்ட பேசணும்னு இருக்காங்க”என்று சத்தம்போட்டு அவளை எழுப்பவும்தான் எழுந்து உட்கார்ந்தாள்.

அப்போதான் மணியைப் பார்த்தாள் மணி ஆறுமணிக்குமேலாகிட்டு.ஐயோ இவ்வளவு நேரமாவா தூங்குனேன்னு எழுந்துப்போய் முகம் கழுவி வேற ட்ரஸ்ஸை மாத்திட்டு வெளியே வந்தாள்.

“யம்மாஆஆஆ காபி தாம்மா.மத்தியானம் சாப்பிடக்கூட எழுப்பவேயில்லை.கொலை பசி”என்று ஹாலில் வந்து உட்கார்ந்தாள்.

அப்போதான் பார்த்தாள் அங்க அப்பாபெரியண்ணன் சின்ன அண்ணன்னு எல்லோரும் உட்கார்ந்திருந்தார்கள்.

‘ஆஹா குடும்பம் மொத்தமும் ஒன்னா கூடியிருக்காங்களே!என்னவா இருக்கும்?அப்பா வேற என்கிட்ட ஏதோ பேசணும்னு வரச்சொன்னாருன்னு அம்மா சொன்னாங்களே’என்று யோசித்தவளது கையில் கொண்டு மல்லிகா காபியைக் குடுத்துவிட்டு அவள் பக்கத்தில் உட்கார்ந்தார்.

‘காபி உபச்சாரமெல்லாம் ரொம்ப பாசமா இருக்கே.அப்போ கண்டிப்பா இது வரன் சம்பந்தப்பட்டதாகத்தான் இருக்கும்.அதைப்பத்திப் பேசத்தான் காத்திருக்காங்க போல.ரைட்டு சனி எந்த ஊர்ல இருந்தோ வந்திருக்கு.நடக்கட்டும் நடக்கட்டும்.எப்படியும் முடிவு என்னன்னுதான் நமக்கும் தெரியும் இவங்களுக்கும் தெரியுமே.ஆனாலும் ஆசை யாரைவிட்டது’என்று நினைத்தவள் காபி குடிப்பதிலயே மும்முரமாக இருந்தாள்.

குணசேகரன்தான்”பட்டு உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.சீக்கிரம் காபியை குடிச்சி முடி”

“நான் காபியை குடிச்சிட்டே இருக்கேன்.நீ சொல்லுண்ணே.காபி சூடா இருக்கு”

“பட்டும்மா”என்று கருப்பசாமி அழைக்கவும் காபியை வைத்துவிட்டு சொல்லுங்கப்பூ என்று நிமிர்ந்து உட்கார்ந்தாள்.

“சொல்லுங்கப்பா”

“நம்ம கருணாகரனுக்கு ஒரு வரன் வந்திருக்கு”

“அப்படியா ஹய் சூப்பருப்பா.பொண்ணு என்ன பண்ணுது?படிச்சிருக்கா?”

“பொண்ணு படிச்சிருக்கு வேலைக்கும் போகுது.அவங்களுக்கு நம்ம கருணாவை ரொம்பப் பிடிச்சிருக்காம்.அதனால் அவங்களே தேடி வந்திருக்காங்க”

“சரிப்பா அவங்களுக்கே பிடிச்சிருக்குன்னா நம்ம சம்மதம் சொல்லிடலாமே.அண்ணனுக்குப் பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டு முடிச்சிடுங்கப்பா.இதை எதுக்குப்பா என்கிட்ட சொல்லுறீங்க?”

“அது அது வந்து அவங்க வீட்டுப் பையனுக்கு உன்னைக் குடுக்கலாம்னு நாங்க பேசிருக்கோம்.அதுதான் அதை உன்கிட்ட சொல்லணும்ல”

அவ்வளவுதான் சட்டென்று பதறி எழுந்தவள் வைத்திருந்தக் காபியைத் தட்டிவிட அது அவள் மேல கொட்டிவிட்டது.

மல்லிகாதான் என்னபிள்ளை நீ இப்படியா பயந்நு எழும்புவ?இங்கப்பாரு காபி உன்மேல சிந்திட்டு என்று துடைத்துவிட்டார்.

குணசேகரன் எழுந்து வேகமாக அருகில் வந்து அவளது கையைப்பிடித்து “உட்காரு பட்டு”என்று சொன்னவன் அவளை உட்காரவைத்து அவளருகில் உட்கார்ந்தான்.அவளது கை கிடுகிடுவென்று ஆடியது.

ஏற்கனவே வர்ற வரனெல்லாம் தட்டிப்போகுது.இதுல இவா வேற இப்படிப் பயப்படுறாளே என்றுதான் வேதனையோடு தங்கைப்பக்கத்தில் உட்கார்ந்தான்.

ஒன்னுமில்லண்ணே நான்தான் காபியை தட்டிவிட்டுட்டேன்.ஒன்னுமில்ல என்று அவள் வாய்தான் தானாகச் சொல்லியது,ஆனால் உடலோ அதற்கும் அவள் பேசுவதற்கும் சம்பந்தமில்லை என்பதுபோன்று உதறியது.

இதுக்குமேல இப்போதைக்கு இதைப்பத்தி பேசவேண்டாம் என்று கருணாகரன் யோசித்தவன்”பட்டு நீ போ.பிறவு பேசிக்கலாம்.நீ போய் சாப்பிடு.காலையிலிருந்து சாப்பிடலைன்னு அம்மா சொன்னாங்க”

யம்மாஆஆ அவளைக் கூட்டிட்டுப்போய் சாப்பிட ஏதாவது குடும்மா.இப்படியா அவளை கவனிக்காம விடுவ என்றவன் மல்லிகாவிடம் கண்ணைக் காண்பித்தான்.

பட்டு வா என்று அருகில் வந்தவர் அவளது கையைப்பிடித்து கூட்டிட்டுப்போயிட்டார்.

கருப்பசாமிக்கு பேசுறதுக்கு முடியாது கண்களை மூடிக்கொண்டவர் அப்படியே அந்த சோபாவில் கண்களை மூடி சாய்ந்துக்கொண்டார்.

குணசேகரனா எப்போதும் வெரைப்பா நடப்பவன் இன்று நெகிழ்ந்துப்போய் கருணாகரனைப் பார்த்தான்.

“என்ன செய்ய முடியும்ண்ணே?எப்படியும் ஒரு முடிவுக்கு வந்துதானே ஆகணும்.அவளும் சின்னப்பொண்ணுதானே.அவளுக்கும் லாழ்க்கை வேணும்ல.இந்த சம்பந்தம் அவங்களா தேடி விரும்பி வர்றாங்க.நம்ம தங்கச்சிக்காகவும் சேர்த்துப் பேசுவோம்.அவங்க சம்மதிச்சா கல்யாணம் பண்ணிக்கிறேன்.இல்லைன்னா வேற பார்ப்போம்”என்று சொன்னான்.

அவன் பேசுவது உள்ளிருந்த ரோஜாவுக்கும் கேட்கத்தான் செய்தது.

அண்ணனுடைய கல்யாணம் நம்மளால எத்தனை முறைதான் தடைபடும்.இந்தத் தடவை எப்படினாலும் சம்மதிப்போம் என்று யோசித்தவளுக்கு சூர்யபிரகாஷ் முகம் கண்ணுக்குள் வந்து எனக்கு அப்போ என்ன பதில் சொல்லுவ என்று கேட்டது.

ஆமா என்ன பதிஸ் சொல்லுவாள்?