மெய் பேசும் மித்தியமே-4

மெய் பேசும் மித்தியமே-4
சூர்யபிரகாஷ் ஹாஸ்பிட்டலில் படுத்திருந்தான்.அவனுக்குப் பக்கத்தில் கீழே பாயை விரித்துத் தரையில் முருகேசன் படுத்திருந்தான்.
ஏனோ ஒருவாரம் இருந்த நிம்மதி இப்போது இல்லாமல் போயிற்று.எழுந்தவன் முருகேசனுக்குத் தெரியாது வெளியே நடந்தான்.
அவ்வளவு குளுமையாகத்தான் அந்த ஊர் இருந்தது.ஆனால் அவனுக்குத்தான் உள்ளுக்குள் புழுங்கியது.உள்ளத்தின் இறுக்கத்தால் திக்குமுக்காடிப்போனான்.
அப்படியே எழுந்து கொஞ்சதூரம் காலார நடந்தான்.அவனுக்கு இப்போது சிகரெட் தேவைப்பட்டது.
‘டாக்டருன்னு ஊருக்குள்ள ஒரே மரியாதை.எங்கேயும் போய் சிகரட்டும் வாங்க முடியலை.முருகேசன்கிட்டயும் சொல்ல முடியல.இப்போ போய் எங்க வாங்குறது.ச்சை ஊராடா இது?பேசாம சென்னைக்கே போயிடலாமா?ஆமா அங்க போயிட்டா மட்டும் உனக்கு நிம்மதி கிடைச்சிடுமா என்ன?என்ன இரண்டு சிகரட்டு வாங்கிக்கலாம் அவ்வளவுதான்.அதுக்காக சென்னைக்குப் போவியா டாக்டரே?”என்று மூளை கேள்வியை எழுப்பியதும் அப்படியே மீண்டும் வந்து சத்தமே இல்லாமல் படுத்துக்கொண்டான்.
ஆனால் தூக்கம்தான் அவனைவிட்டுத் தூரமாகப் போயிருந்தது.நாளைக்கு வேற அந்த வீட்டுக்குப்போகணும்.அங்கேப்போனால் நமக்கு செடடாகுமான்னு வேற தெரியலை.
அந்தப் பெரிய மீசையை சமாளிக்கலாம் கூட இருக்கு இரண்டு சின்னமீசைங்கள சமாளிக்கணும்னா நம்ம அவனுங்கள மாதிரியே ஆகணும்.இப்போதைக்கு அது சாத்தியமில்லை.அதனால் அமைதி மார்க்கத்தையே கடைப்பிடிப்போம் என்று முடிவெடுத்தவன் அப்படியே கண்ணயர்ந்து தன்னையறியாது தூங்கிவிட்டான்.
காலையில் முருகேசன்தான் அவனைத் தட்டியெழுப்பினான்.
“டாக்டரு டாக்டரு எந்திருங்க.நம்ம புதுவீட்டுக்குப் போய் பால் காய்க்கணும்ல?”என்றவன் அவன் எழும்பினானா இல்லையா என்றுக்கூட பார்க்காது வேகமாக எழுந்து வெளியே போய்விட்டான்.
“என்னது பால் காய்க்கணுமா?க்கும் அவனுங்க முதல்ல பால் காய்க்க விடுவானுங்களான்னே தெரியலை.இதுல எங்கப்போறது.எனக்கு டாக்டரா இருக்கதுக்கூட கஷ்டமா இல்லடா.அவனுங்கள சமாளிக்கிறதுதான் பெருங்கஷ்டமா இருக்கும்போல?”என்று எழுந்து முகமெல்லாம் கழுவிவிட்டு குளிப்பதற்கு எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டிருந்தான்.
அப்போது வேகமாக உள்ளே வந்த முருகேசன் கையில் தூக்குப்பாத்திரம் இருந்தது.
“இது என்ன முருகேசா?”
“அதுவா புதுசா ஒரு வீட்டுக்குப்போறீங்கள்ல அதுதான் பக்கத்துல சொல்லி வைச்சு பால் வாங்கிட்டு வந்தேன்”
அவனை புன்னகையோடு பார்த்த சூர்யா தலையாட்டி “காசு எவ்வளவு குடுத்த?”இந்தா எனறு பணத்தை எடுத்து நீட்டினான்.
“போங்க டாக்டரு இதுக்கெல்லாமா பணம் தருவாங்க.உள்ள வைங்க.வாங்க போய் குளிச்சிட்டு வரலாம்” என்ற முன்னாடி நடந்தான்.
இந்தப்பணத்துக்காக ஒரொருத்தன் என்னலாம் செய்யுறான்.இவன் வேண்டாம்னு போறான் என்று தலையாட்டி சிரித்தவாறே குளிக்கப்போனான்.
குளத்துப்பக்கம் போனதுமே நேத்து நடந்ததை நினைச்சு கெதக்குன்னு இருந்தாலும் சிரிப்புவந்துவிட்டது.
“எதுக்கு டாக்டர் சிரிக்கீங்க?”
“இல்லை நேத்து தண்ணிக்குள்ள இருந்து மோகினி வந்துச்சு.இன்னைக்கு யட்சி வருமான்னு யோசிச்சேன் அதுதான் சிரிச்சேன்”
“என்ன டாக்டர் நீங்க ரோஜாவைப்போய் மோகினின்னு சொல்லுறீங்க.பாவம் அந்தப்பொண்ணு”
“நேத்துல இருந்து அவளைப் பாவம்னு நீதான் சொல்லுற.ஆனாப்பாரு அவப் பேசுறதைக்கேட்டா
எனக்குப் பாவம்னு தோணலை.அடி வெளுக்கத்தான் தோணுது”
“அப்படியெல்லாம் தோணப்படாது.கருணாகரனும் குணசேகரனும் சேர்ந்து வந்து நம்மளை இந்தத் தண்ணிக்குள்ளயே போட்டு மிதிச்சு வைச்சிருவாங்க.அதுதான் அந்த ஜலசமாதி ஞாபகம் வைச்சிக்கங்க”என்றவன் தண்ணிக்குள்ள குதிச்சு நீச்சலடித்துக் குளிக்க ஆரம்பித்தான்.
அதைப்பார்த்த சூர்யபிரகாஷ் “அடேய் நீச்சல் தெரியும் என்கிற ஆணவத்துல ஆடாதடா.நானும் கத்துக்கிட்டு உன் முன்னாடி நீச்சலடிச்சுக் குளிப்பேன்”என்றவன் கரையிலயே முங்கிக் குளித்தான்.
“அது அப்போ பார்த்துக்கலாம் டாக்டரு”
“பார்க்கலாம்டா பார்க்கலாம்”என்று அவனும் படியைப் பிடித்துக்கொண்டு முங்கிக் குளித்தான்.
இப்போ இரண்டுபேரும் டிப்டாப்பா கிளம்பி புதுவீட்டில் பால் காய்ச்சிக்குடியோற போய்கொண்டிருந்தார்கள்.
உள்ளே போகவும் அப்போதுதான் குணசேகரன் தனது வில்லன் ஜீப்பில் வந்திறங்கினான்.
“க்கும் காலையிலயே நல்ல சகுணம்டா டேய்.உன்னையப் பார்த்துட்டேன்ல விளங்கிடும்” என்று யோசித்தவாறே நின்றுவிட்டான்.
“என்ன முருகேசா ஹாஸ்பிட்டல்ல நோயாளி வர்றக்கூடிய நேரம் உங்க டாக்டர் இங்க என்ன பண்றாரு?வாங்குற சாம்பளத்துக்கு ஒழுங்கா வேலையைப் பார்க்கச் சொல்லு.கையில என்ன தூக்கு?”
“பாலுங்கய்யா!”
“யாருக்கு பால் ஊத்தப்போறீங்க?”
“ஐயோ ஐயோ வீட்டுக்கு குடி வர்றதுக்கு முன்னாடி பால் காய்ச்சலாம்னு வந்தோமுங்க”
“இது என் வீடுலா முருகேசா.எங்கப்பா வீட்ட பெருசாதான் கட்டி ஊருக்கே சாப்பாடு போட்டு பாலக்காய்ச்சிட்டாரு.இப்போ நீங்க பால் காய்சுனாதான் மகாலெட்சமி வருவாளாக்கும்”
“அது யாருங்க மகாலெட்சுமி?”
“ம்ம்ம்.உன் ஓடிப்போன உன் பொண்டாட்டி”என்றவன் கோபத்தில் உள்ளே போய்விட்டான்.
போகும்போதே சூர்யபிரகாஷை கோபத்தில் விட்டா அடிக்கிற மாதிரிதான் பார்த்துட்டுப்போனான்.
சூர்யாவுக்கே செமக்கோபம்.நம்ம என்ன இவனைவிட குறைஞ்சவனா? படிப்பறிவில்லாதவனுங்க எல்லாம் என்னைக் கலாய்ச்சிட்டுப் போறானுங்க என்று அவனது ஆதிக்குணம் வெளியே எட்டிப்பார்த்தது.
இவனும் அவனைத் திரும்பி முறைத்தவன் “வா முருகேசா.எனக்கு இந்த வீடு வேணாம்.நம்ம வேற எங்கேயாவது வீடு பார்த்துக்கலாம்.இவனுங்களும் இவனுங்க வீடும்”என்று திரும்பிப்போக காலெடுத்துதான் வைத்தான்.
“என்ன டாக்டரே வந்துட்டு திரும்புறீங்க?உள்ள வராமலே போறீங்க?” என்று கருப்பசாமியின் குரல் கேட்டதும் வேறுவழியின்றி திரும்பிப்பார்த்தான்.
“டேய் முத்து உள்ளப்போய் ரோஜாகிட்ட இருந்து மேல வீட்டுச் சாவியை வாங்கிட்டு வா”என்று சொன்னார்.
அப்படியே சூர்யபிராகஷைப் பார்த்து வந்தவர் “வாங்க டாக்டர் மேல வீட்டுக்குப்போகலாம்.முருகேசா தூக்குல என்ன பாலா?ஸ்டவ்வுலாம் கொண்டு வரலையே பால் எப்படி காய்ப்பீங்க.அடுப்பு மேல இருக்காதே”என்று கேட்டார்.
அப்போதான் இருவருக்குமே மண்டைக்குள் யோசனை போனது.ஆமால்ல என்று ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“அதைவிடுங்க பால்காய்ச்சாதான் ஆச்சா வாங்க நம்ம வீட்டுல இருந்து பாலைக் காய்ச்சிக்குடிப்போம்” என்றவர் அங்கு சாவிக்கொண்டுவந்த ரோஜாவிடம் அந்த பாலைக் குடுத்து அம்மாக்கிட்ட இந்தப்பாலைக் காய்ச்சிக் கொண்டுவரச்சொல்லு.நாங்க மூணுபேரும் மேல தட்டுல இருக்கோம்”என்றவர் முன்னாடி நடந்தார்.
ரோஜா சாவியைக்கொண்டு வந்ததுமே அவளைத்தான் பார்த்தான்.
அழகாக புடவைக் கட்டி தலைமுடியை பின்னிப்போட்டு தெய்வகாடாட்சமாக வந்து நின்றவளை ஒரு நொடி மதிமயங்கித்தான் பார்த்தான்.
அவளை உச்சிமுதல் பாதம் வரைக் கண்களாலேயே அளந்தவன் அவளை மொத்தமாக ரசித்தான்.
அவளோ ‘இந்த டாக்டர் என்ன இன்னைக்கு இப்படி பார்த்து வைக்கிறாரு.அதுவும் அப்பா முன்னாடியே இந்தாளுக்குக் கொஞ்சம் தைரியம் ஜாஸ்த்திதான் போல?’ என்று நினைத்தவாறே அவனை முறைத்தாள்.
அவள் முறைப்பதைப் பார்த்தும் அவன்கண்களை விலக்காது அவளை ரசித்தவாறே தனது மீசையை தடவினான்.
அடிங்க என்று தனது கண்களாலே மிரட்டியவள் உள்ளேபோகத் திரும்பி நடந்தாள்.
அவளது பின்னல் தொடையைத் தாண்டி முட்டுக்கு கீழ்வரைக்கும் அசைந்து ஆட ஹப்பாடா எவ்வளவு முடி கட்டிக்கப்போறவன் இந்த அழகுலயே மயங்கிருவான் என்று நினைத்தவாறே பார்த்திருக்க உள்ளே போனவள் தலையை மட்டும் வெளியே நீட்டி கொன்றுவேன் டாக்டரே என்று விரலால் எச்சரிக்கை செய்துவிட்டுப் போனாள்.
அவள் போனதும் ‘ச்ச்ச போயிட்டாளே இன்னும் கொஞ்சநேரம் இருந்தா என்ன குறைஞ்சா போயிடுவா?இவ்வளவு நீளமா முடி வளத்துக்கத் தெரியுது அதுல அழகா பூ வைச்சா எவ்வளவு அம்சமா இருப்பா.இதுக்கூட இந்த ரவுடிக்குத் தெரியல.வாய் மட்டும் இங்கிருந்து சென்னைவரைக்கும் நீளுது.க்கும்’ என்று நினைத்தான்.
அதற்குள் கருப்பாசாமி முன்னாடி நடக்க இவனும் பின்னாடியே போனான்.ஒருமுறை திரும்பி அவள் வெளியே வர்றாளா? என்று பார்த்தவனுக்கே ஏன் இப்படிப் பண்றோம்னு தோணவும் மனதை ஓருநிலையிலாக்கிக்கொண்டு மேல வீட்டைப் பார்க்கபோனான்.
அது அவ்வளவு பெரிய வீடு.ஏற்கனவே கீழே வீட்டைப் பார்த்தவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது. அந்த வீட்டிற்கு உள்பக்கமாகவும் வாசல் இருக்கிறது வெளிப்பக்கமாகவும் படி இருக்கிறது என்பதால் உள்பக்கமான கதவை பூட்டிதான் வைத்திருக்கிறார்கள்.
மேல இருக்க வீடு எப்பொழுது அதிகமாக புழக்கத்தில் இல்லை. பழைய சாமான்களும் தேவையான பொருட்களையும் போட்டு வைப்தற்கு ஒரு நாலைந்து அறைகளை பயன்படுத்துகிறார்கள் அவ்வளவுதான்.
சூரிய பிரகாஷ் கருப்பசாமியிடம் மெதுவாக “எனக்கு ஒரு மூணு நாலு ரூம் மட்டும் போதும் மீதி எல்லாம் பூட்டி வச்சுக்கோங்க இந்த ஹால் தேவைப்படுது மத்தபடிக்கு சமையலறை அவ்வளவுதான். இதையே நாங்க பயன்படுத்துகிறோம் இதுக்கான வாடகை எவ்வளவோ அதை மட்டுமே குடுத்திடுறேன். எனக்கு வீடு புடிச்சிருக்கு பிடிக்கல அப்படிங்கிறதைவிட பாதுகாப்பா என் குடும்ப இங்க இருப்பாங்க.அந்த ஒரு நம்பிக்கை இருக்கு.அதனால்தான் இந்த வீட்டுக்கு வர்றேன் உங்க மேல அவ்வளவு மரியாதை நம்பிக்கை இருக்கிறது” எ
அப்படிச் சொல்லி கருப்பசாமிக்கு பெரிதாக ஒரு ஐஸ்கட்டியை தூக்கி தலையில் வைத்து விட்டான்.
“இந்த ஊரே பாதுகாப்பானது தான் டாக்டர் நீங்க அப்படி எல்லாம் பயப்படாதீங்க.உங்க சென்னை சிட்டிமாதிரியெல்லாம் இங்க இருக்காது.நீங்க தைரியமா உங்கக் குடும்பத்தை இங்கக்கூட்டிட்டு வரலாம்”
“சரிங்கய்யா இந்தவாரமே கூட்டிட்டு வந்திடுறேன்”என்று பேசிக்கொண்டிருக்கும்போது கருப்பசாமியின் மனைவி மல்லிகா உள்பக்கம் படிவழியாக ஏறி அங்கிருந்தக் கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வந்தார்.
அவருக்குப்பின்னாடியே வேலைக்காரியும் கையில் பால் டம்பளர் வைத்திருந்த தட்டோடு வந்தாள்.
“டாக்டரே பால் எடுத்துக்கோங்க.நம்ம வீட்டு மாட்டுல கறந்த பால்.சும்மா சீனிபோடாமலயே நல்லாயிருக்கும் குடிங்க”
“சீனிப்போடாமலயேவா”என்று டாக்டர் முழிக்க மல்லிகாதான் “அவரு அவங்க வீட்டு மாட்டுப்பால் பெருமையஐ அப்படி சொல்லுறாருங்க.நீங்க பயப்படாதிங்க சீனியெல்லாம் போட்டுத்தான் கொண்டுவந்திருக்கோம்”என்று அவனை சகஜமாக்கினார்,
“ஊப்ஸ் இவங்க யாருக்குமே நார்மலா பேசவராத முருகேசா?” என்று முருகேசனில் காதில் கேட்டான்.
“நார்மலான்னா கைதான் பேசும்.அதுவும் முக்கியமா அருவாதான் பேசும்.அப்படி வேணும்னா பேச்சொல்லட்டுமா டாக்டர்”
“க்கும் அதுக்கு இது எவ்வளவோ பரவாயில்லை”என்றவன் பால் டம்பளரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.
“உங்கக் குடும்பத்தை எப்போ கூட்டிட்டு வர்றீங்க டாக்டர்” என்று மல்லிகா இயல்பாக சிரித்தாவறே கேட்டார்.
அவர் கேட்டதுக்கு”இந்தவாரம்”என்று பதில் சொல்லியவாறே சிரித்தவன் மனதிற்குள் நல்லவேளைப்பா இந்த வீட்டுல இந்த ஒரு ஜீவனாவது கொஞ்சம் இதமாபதமா பேசுறாங்களே.மகளை மாதிரி அம்மா அடாவடி இல்லை அந்தவகையில சந்தோசம் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டான்.
அதற்குள் யம்ம்மாஆஆஆஆஆஆ என்று ரோஜாவின் சத்தம் வரவும் “சரிதம்பி நீங்க பேசிட்டிருங்க நான் வர்றேன்”என்று போய்விட்டார்.
உடனே சூர்யபிரகாஷ் தனது வாட்சினைப் பார்த்துவிட்டு”சரிங்கய்யா நாங்க இப்போ கிளம்புறோம்.இந்த வாரம் ஊருக்குப் போயிட்டு அப்படியே குடும்பத்தைக் கூட்டிட்டு வந்திடுறேன்.திங்கஸ்லாம் ஏற்கனவே பேக் பண்ண சொல்லிட்டேன்.எங்கக்கூடவே வண்டிலப்போட்டுக் கொண்டு வந்திருவேன்”
“அதுக்கென்ன டாக்டர் நீங்கக் கொண்டுவாங்க.நம்மாட்களை வைச்சு மேல ஏத்திடுவோம்.நீங்க ஒன்னுக்கும் கவலைப்படாதிங்க.எங்களை நம்பி எங்க ஊருக்கு வந்திருக்கீங்க.உங்களுக்குச் செய்யாமலா இருப்போம்”
அதுவே அவனுக்கு இருந்த மனகிலேசங்கள் எல்லாம் தூரப்போனதுபோன்று இருந்தது.
“நன்றி சார்” என்று சொன்னவன் அங்கிருந்து கிளம்பிக் கீழே வந்துவிட்டான்.
அவனது மனது லேசாகக் குறுகுறுக்க ‘இந்த ரவுடி என்ன பண்றாளோ?கொஞ்சம் வெளிய வந்தாக் கண்ணுக் குளிர்ச்சியாக இருக்கும்’ என்று நினைத்தவாறே உள்ளே எட்டிப்பார்த்தான்.
அவன் எட்டிப்பார்க்கவும் கருணாகரன் வெளியே வரவும் சரியாக இருந்தது.
இவனா இந்த மலைமாட்டைப் பார்க்கவா எட்டிப்பார்த்தேன்? என்று நினைத்துதான் முடித்தான்”யோவ் டாக்டரே என்ன வீட்டுக்குள்ள எட்டி பார்க்கிற?”என்றவாறே கை சட்டையை மேலத்திவிட்டாவறே அவனருகில் வந்தான்.
“இல்லை உங்கம்மாவைப் பார்த்துப்போயிட்டு வர்றேன்னு சொல்ல வந்தேன்”
‘ஓஓஓ அப்படியா அம்மாகிட்ட நான் சொல்லிக்கிறேன் நீங்க கிளம்புங்க”என்றவன் தனது புல்லட்டினை எடுத்துக்கொண்டுப்போய்விட்டான்.
“இருங்கடா ஒரு நாள் அண்ணனும் தம்பியும் என்கிட்ட மாட்டுவீங்கள அப்போ உங்க மண்டையிலயே குனிய வைச்சுக்குட்டுறேன்.அப்படி செய்யலன்னா நான் சூர்யபிரகாஷ் இல்லைடா”என்று மனசுக்குள்ளயே சபதம் எடுத்துக்கொண்டான்.
ச்சை அவளைப் பார்க்கணும்னு எட்டிப்பார்த்து அசிங்கப்பட்டுட்டியே சூர்யா!இனி எவளையும் பார்க்கத் திரும்பக்கூடாது என்ற முடிவோடு திரும்பி நடந்தான்.
முருகேசனோ இந்த டாக்டருக்கு என்னாச்சு தானகவே பேசிட்டு வர்றாரு என்று புரியாது முழித்துக்கொண்டு நின்றான்.
“என்னடா பேய் முழி முழிக்கிற?”
அவன் திட்டியதைக் கேட்டதும்தான் “ஹப்பாடா டாக்டரு நார்மலாதான் இருக்காரு” என்று நிம்மதியானான்.
சூர்யாவோ மனதிற்குள் ஊருக்குப்போவதற்கும் அங்கிருந்துக் குடும்பத்தைக் கூட்டிட்டு வர்றதுக்கும் திட்டம்போட்டவாறே ஹாஸ்பிட்டலை நோக்கி நடந்தான்.