மெய் பேசும் மித்தியமே-5

மெய் பேசும் மித்தியமே-5

மெய் பேசும் மித்தியமே-5

தனது வீட்டின் சமயலறையில் தனக்கான மதிய உணவை டிபன்பாக்ஸில் எடுத்து வைத்துக்கொண்டிருந்த ரோஜாவை அவளது அம்மா மல்லிகா முறைத்துக்கொண்டிருந்தார்.

“எதுக்கும்மா இப்போ முறைச்சிட்டு நிக்கிற?நான் வேலைக்குப் போகவேண்டாமா?”

“ஏன்டி எதுக்கு இப்போ இந்த பால்வாடி டீச்சர் வேலைக்குப்போற?அதுவும் நம் ஊருத்தான்டி அடுத்த டவுண்ல?”

“யம்மா வேலைக்குத்தானே போறேன்.அதுக்கு எதுக்கு மூஞ்சிய இப்படித் தூக்கி வைச்சிருக்க?”

“என் மூஞ்சியே அப்படிதான் பேச்சை மாத்தாதடி.அந்த வேலையில கிடைக்கிற சம்பளம் வாங்கித்தான் நமக்கு நிறையப்போகுதாக்கும்?”

“உங்களுக்கு அப்புறம் நான் யார் கையை நம்பி இருக்கணும்னு நினைக்கிற.உன் மருமகங்க கையை நம்பியா?”

“அண்ணனுங்களை நம்பி இருக்கணும்டி அவளுகளை நம்பியேன் நீ இருக்கப்போற?இது உன் வீடுடி”

“எத்தனை நாளைக்கு?”

“அது அது”

“சொல்ல முடியலல?”

“ப்ச்ச் காலையிலயே இது என்ன பேச்சுன்னு பேசிட்டிருக்க?எதுக்கு இப்போ இப்படி பேசுற?”

“யம்மாஆ எனக்கு இந்த வீட்டுக்குள்ளவே அடைஞ்சி கிடந்து பைத்தியம் பிடிக்குது.பெரிய அண்ணங்கிட்டக் கேட்டுத்தான் வேலைக்குப் போறேன்.அண்ணனோட பிரண்டுதான் அந்த ஸ்கூல்ல வைச்சிருக்காங்க.நான் ஒன்னும் சம்பளத்தை எதிர்பார்த்துப் போகல.எனக்கு மூளைக்கு வேலைக்குடுக்கப்போறேன் போதுமா?”

“ஆனாலும் நாலுபேரு நாக்கு என்னலாம் பேசும்டி.இது நம்ம குடும்பத்துக்குத் தேவையா?உனக்கான நகைங்களையும் சொத்துக்களையும் வைச்சே ஒரு ஊரே வாழலாம்டி.நீயென்னடானா இந்த பால்வாடிக்கு வேலைக்குப்போய் சம்பதிக்கணும்னு நினைக்கிற பாரு”என்று ரொம்ப வருத்தப்பட்டார்.

“எத்தனை கோடி பணமும் சொத்து இருந்தாலும் நான் என் சொந்த காசுல நிற்கிறது பெருமதனம்மா. அது ஐயாயிரமோ பத்தாயிரமோ அந்தக்காசிலிருந்து நீங்க ஒரு பைசா கூட எடுக்க போறதில்லைன்னு எனக்கு தெரியும்.ஆனாலும் இருக்கட்டுமேமா எதுக்கு போட்டு நீ இப்ப இவ்வளவு வருத்தப்படுற” என்றவள் சாப்பாடு எல்லாம் எடுத்து வைத்துவிட்டு வெளியே வந்தாள்.

அவள் வெளியே வரவும் கருப்பசாமி அவர்களுக்கு எதிரே வந்தார்.

“எங்க போற பட்டுமா? பேக் எல்லாம் எடுத்துட்டு போற. அண்ணன்கூட வெளிய போறியா? அம்மா உங்கக்கூட வரலையா?என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்.

“அப்பா பெரியண்ணே எதுவுமே உங்ககிட்ட சொல்லலையாப்பா?”என்று கொஞ்சம் பயந்தவாறே கேட்டாள்.அப்பா என்னசொல்லப்போறாரோ என்கின்ற பயம் அவளுக்கு உதறலைக் கொடுத்தது.அண்ணன் அப்பாக்கிட்ட பேசிருப்பான்னு நினைச்சன்னே.அவன் அப்பாக்கிட்ட சொல்லைப்போலிருக்கே”என்று முழித்தாள்,

“இல்லையேம்மா.நீயும் அவனும் வெளியே போறீங்கன்னு நான்தான் கேட்டேன்.அப்போசரி சீக்கிரம் போயிட்டு பத்திரமா பாதுகாப்பா வாங்க”

“அதில்லப்பா நான் நான் பக்கத்து டவுணு ஸ்கூல்ல…”

“ஸ்கூல்ல?”என்று புரியாது கேட்டார்.

“அது வந்துபா நம்ம பெரிய அண்ணனோட ப்ரெண்டு தர்மராஜா அண்ணே இருக்காங்கள அவங்க ஒரு ஸ்கூல் திறந்து இருக்காங்கள்ல?”

“ஆமா போன வருஷம் தொடங்குனானே. அது கூட நம்ம எல்லாம் போயிட்டு வந்தோமே. இப்போ அதுக்கு என்ன? எதுக்கு இப்படி என்னென்னமோ சொல்லிட்டிருக்க.சொல்ல வந்ததைச் சொல்லி முடி” என்றவர் சிறிது கோபப்பட்டார்.

“அந்த ஸ்கூல்ல டீச்சரா வேலைக்கு சேர்ந்து இருக்கேபா. நம்ம பெரிய அண்ணன்தான் வேலைக்கு சேர்த்துவிட்டுச்சு. நீங்க ஒன்னும் சொல்லாதீங்கப்பா” என்று படபடவென்று வேகமாக சொல்ல வந்ததைச் சரியாக சொல்லி முடித்தாள்.

“என்னது வேலைக்குப் போறீயா?யாருக்கிட்டக் கேட்டுட்டுப் போற?பட்டு உள்ளே போ.யாரு வீட்டுப்பிள்ளை வேலைக்குப் போறதுன்னு வேண்டாமா?”

கருப்பசாமியின் சத்தம் கேட்டு எல்லோரும் ஓடிவந்தனர்.குணசேகரன்தான் அருகில் வந்து”அப்பா நான்தான் அவளை வேலைக்குப் போகச்சொன்னேன்.அவளும் எத்தனை நாளைக்குத்தான் வீட்டுக்குள்ளயே அடைஞ்சிக்கிடப்பா?”

“அதுக்காக நம்ம வீட்டுப் பொண்ணு வேலைக்குப்போய்தான் நம்ம சாப்பிடணும் அப்படிங்கிற மாதிரியே வேலைக்கு அனுப்பக்கூடாது.நம்ம நினைச்சா அவளுக்காக ஒரு ஸ்கூலே திறக்கமுடியும்”

“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாதாப்பா.இன்னும் எத்தனை நாளைக்கு அவளை இப்படியே வைச்சிருப்பீங்க.வரன் வந்தா அதாவது வந்துச்சுன்னா கட்டிக்குடுக்கலாம்.அதுக்கு அப்புறம் அவள் என்ன வேலைக்கா போகப்போறாள்.அதுவரைக்கும் போகட்டும்”

“குணசேகரா இது எனக்கு சரியாப்படலை.நம்ம வீட்டுப்போண்ணுங்க நாக்குமேல பல்லைப்போட்டு பேசிடுவானுங்க.நான் சொல்லவர்றது புரியுதா?”

“அப்படி இனி எவன் சொன்னாலும் அவன் மூஞ்சியை உடைச்சிருவேன்பா.அந்த ஸ்கூல் வைச்சிருக்கது நம்ம தர்மராசுதான்.எவனும் உள்ளக்கூட நுழைய முடியாது.பட்டுமா போயிட்டு வரட்டும்”

“என்னமோ செய்யுங்க எனக்கு இது பிடிக்கலை.அவ்வளவுதான் சொல்லிட்டேன்.பொறவு பிரச்சனைன்னு வந்து என்கிட்ட நிக்கக்கூடாது”

“அப்படியெல்லாம் வராதுப்பா போகும்போதே அச்சாணியமா பேசாதிங்க”என்றவளுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

அவ்வளவுதான் மகளின் கண்ணீரைப் பார்த்ததும் சட்டென்று நெகிழ்ந்தவர்”சரி சரி மனச சுணாங்கமா போயிட்டுவா.அண்ணன் கொண்டுவிடுறானா இல்லை வண்டியில போறீயா?”

“நானும் தினேஷும் போறோம்.தினேஷை ஸ்கூல்ல விட்டுட்டு நான் என் ஸ்கூலுக்குப் போயிடுவேன்”

“சரி சரி பார்த்துப்போயிட்டுவா.வண்டியை கவனமா ஓட்டு”என்றவர் அவரது பாக்கெட்டில் இருந்துக் கொஞ்சம் காசை எடுத்து அவளிடம் கொடுத்தார்.

அதைப் பார்த்ததும் எல்லோரும் மொத்தமாக சிரித்து விட்டனர்.

குணசேகரன் “அப்பா அவ வேலைக்கு போறப்பா. காலேஜுக்கு படிக்க போக.இப்படி பைசா குடுத்துக் கெடுக்காதிங்க”

“அதெல்லாம் குடுக்கலாம் அவ வைச்சிருக்கட்டும் டீ காப்பிக்குடிக்க தேவைப்படும்ல”

“அவ சம்பளமே இவ்வளவு இருக்காதுப்பா.டீ குடிக்க இவ்வளவு பைசாவா?”

“உனக்கென்ன அண்ணே.நீ பெரிய வியாபாரகாந்தம் நிறைய பணம் வச்சிருப்ப. நான் அப்படியில்லையே.நானே சாதாரணமான பாவப்பட்ட டீச்சர். இப்படி அப்பாகிட்ட இருந்து வாங்கினாதான் உண்டு” என்று சொன்னவள் அவரது கையில் இருந்து பணத்தை வாங்கி கொண்டு சிட்டாக பறந்து வெளியே வந்துவிட்டாள்.

அவள் வண்டியை எடுத்ததும் பினனாடி தினேஷ் வந்து ஏறிக்கொண்டான்.

அவ்வளவுதான் நேராக ஸ்கூலுக்கு வண்டியைவிட்டவளுக்கு நிம்மதியாக இருந்தது.

ஹப்பாடா வீட்டுக்குள்ளயே அடைஞ்சிக்கிடந்து மனசு இறுகிப்போச்சு.இனி இந்த ஸ்கூலுக்குள்ள சுத்தி வரலாம் என்று நினைத்தவாறே வண்டியை ஓட்டியவள் தினேஷைப் பள்ளியில் விட்டுவிட்டு அவளது பள்ளிக்குள் நுழைந்தாள்.

அந்த பள்ளி ஆரம்பித்து ஒருவருஷம்தான் ஆகுது.குணசேகரனின் நண்பன் தர்மராஜ்தான் அந்தப்பள்ளியை வைத்து நடத்துகிறான்.

நர்சரி கே.ஜி என்று இப்போதுதான் மெதுவாக டவலப் ஆகிக்கொண்டிருக்கிறது.அவள் படித்த படிப்பிற்கு இதுவே போதுமென்றுதான் வேலைக்கு வந்திருக்கிறாள்.

உள்ளே சென்றதுமே அவளுக்கு ஏக சந்தோசம்.குட்டி குட்டியா குழந்தைங்க உள்ளே வந்து அவங்க அவங்க கிளாஸ்ல உட்கார்ந்திருக்கதைப் பார்த்ததுமே ஓடிப்போய் ஒவ்வொரு குழந்தையையும் கொஞ்சணும்னு தோன்றியது.

அப்படியே ஆபிஸ் உள்ளே போனவள் சிரித்த முகமாக பிரின்ஸிபால்கிட்ட போய் பேசிட்டு அவளது கிளாஸ் எதுன்னு கேட்டுட்டு வந்து உள்ளே போனாள்.

பிரின்ஸிபாலுக்குமே அவளையும் அவளது குடும்பத்தையும் நன்றாகத் தெரியும் என்பதால் வேறு எதுவுமே கேட்கவில்லை.

அவளுக்கு அன்றைய நாள் எப்படிப் போச்சுன்னே தெரியல.மாலை ஸ்கூல்விட்டு வீட்டுக்கு வரவே மனதில்லாது வந்தாள்.

அவள் சோகமாக வரவும் கருப்பசாமி பதறிவிட்டார்”என்னாச்சு பட்டு இப்படி வாடிப்போய் ஓர்ற.நிறைய வேலையோ அப்போ நாளையிலிருந்து வேலைக்குப் போகவேண்டாம்”என்று பொசுக்குன்னு சொல்லிவிட்டார்.

“அப்பா என்னப்பா பேசுறீங்க.நானே அந்தப்பிள்ளைங்கள விட்டுட்டு வரவே மனசில்லாமல் வந்தேன்.அதுதான் சோகம்.நீங்க வேற”

“ஏன்டி இதுக்கா இப்படி மூஞ்சைத் தூக்கி வைச்சுட்டு வந்த.அதுதான் நம்ம வீட்டுலயும் இரண்டுபிள்ளைங்க இருக்காங்களே.அவங்களைப் பார்க்கவேண்டியதுதானே”

“யம்மாஆஆஆ அவங்களை நான்தானே தூக்கி வளர்த்தேன்.இப்போ எதுக்கு அதுக்கும் இதுக்கும் முடிச்சுப்போட்டுப் பேசுற.குழந்தைங்களை பார்த்தும் கொஞ்சம் ஆசைப்பட்டுட்டேன்.அதுதான் வரும்போது சோகமா வந்துச்சு இதுக்கு எதுக்கு இவ்வளவு பேச்சு.போங்க”என்று உள்ளே போனவள் முகம் கைகால் கழுவிவிட்டு காபியையும் வடையையும் எடுத்துட்டு வந்து முன்பக்கம் இருக்கும் பெரிய வராண்டாவில் இருந்த சாய்வு நாற்காலியில் வைத்து தின்றுக்கொண்டிருந்தவளுக்கு யாரோ நம்மளைப் பார்க்கிற மாதிரி இருக்கே என்று சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

அந்த சூர்யபிராகஷ் அவளையே கண்ணெடுக்காது பார்த்திருந்தான்.

அதைப்பார்த்தவள் முகம் சுருக்கி கண்களை இடுக்கிப் பார்த்தவள்”காபி வேணுமா?”என்று கையை காண்பித்துக்கேட்டாள்.

அதைப்பார்த்தவன் “வேண்டாம் நீதான் வேணும்” என்பதுபோல கையைக் காட்டவும் “அடங்கொப்பத்தா.இந்த டாக்டருக்கு எவ்வளவு ஏத்தமிருக்கணும்.நான் வேணும் கேட்பான்”என்று கோபப் பட்டவள் கையிலிருந்த காபியோடு வடையோடும் நேராக மாடியேறி அழனருகில் போனாள்.

அவள் கோபத்தில் வருவதைப் பார்த்தவனுக்குச் சிரிப்புத் தாங்கலை.ஆனாலும் சத்தமாகச் சிரிக்காது மெதுவாகப் புன்னகைத்தவன்

அந்தப் புன்னைகையோடு அவளையே பார்த்திருந்தான்.

அவள் மேல ஏறிவந்ததும் வராததுமாக “யோவ் டாக்டரு என்னய்யா நினைச்சிட்டிருக்க? உன் மனசுக்குள்ள நீ பெரிய மன்மதக்குஞ்சுன்னு நினைப்போ.நானும் பார்த்திட்டிருக்கேன் வந்த நாளிலிருந்தே என்கிட்ட வம்பு பண்ணிட்டிருக்க.நான் காபி வேணுமான்னு கேட்டா வேணும் வேண்டாம்னு சொல்லணும்.அதென்ன கையை காண்பிச்சு நீ வேணும்னு சொல்லுறது.அசிங்கமா இல்லை”

“இல்லை”

“என்ன?”

“அசிங்கமா இல்லைன்னு சொன்னேன்டி”

“என்னது டீயா? யோவ் மரியாதையூ பேசு.எங்கப்பாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.உன்னை இப்பவே இங்கிருந்துத் துரத்திவிட்றுவாரு”

“அப்படியா அப்போ சொல்லு”

“சொல்லமாட்டேங்கிற தைரியம் அப்படித்தானே”

“ஆமா”என்று தலையாட்டினான்.

அதைப் பார்த்தவளுக்கு இன்னும் கோபமேறியது.”யோவ் உன்னையெல்வாம் அன்னைக்கே தண்ணிக்குள்ள வைச்சு முக்கியே கொன்னுருக்கணும். உன்னை சும்மா விட்டது என் தப்பா போச்சு”என்று மூச்சு வாங்க பேசியவளை அப்படியே ரசிக்கும் பார்வையால் பார்த்தான்.

“அன்னைக்கே இந்த தேவியின் முழு தரிசனமும் தண்ணிக்குள்ள வைச்சுப் பார்த்துட்டனே.நீ முக்கிக் கொன்னாலும் சந்தோசமா செத்திருப்பேன்”

அதைக்கேட்டவளுக்கு முதலில் என்ன சொல்கிறான் என்று புரியாமல் முழித்தாள். அதற்குப் பிறகுதான் அவன் சொன்னது என்னவன்று அர்த்தம் புரிந்து அப்படியே காபியை அவனது முகத்தில் ஊத்துவதுபோல கொண்டுவந்தாள்.

“நீ என்னவேணாலும் செய்”என்று பல்லைக்காட்டிக்கொண்டு நின்றான்.

அதைப்பார்தவளுக்கு அவனை என்ன செய்யவென்று தெரியாது”உன்னை உன்னை கொன்றுவேன் பார்த்துக்க”என்று அவனருகில் நெருங்கிப்போனாள்.

இருவரது கண்களும் கவ்விக்கொள்ள அவள் அப்படியே உறைந்து நின்றுவிட்டாள்.

“என்ன நீ கொல்லாமல் நிக்கிற.என்னை உன் கையாலக் கொல்லேன்”என்று மயங்கிக் கிறங்கிய குரலில் சொன்னான்.

“யோவ் டாக்டரு நீ என்ன பிறவியா?இவ்வளவு திட்டுறேன் அப்படியே நிக்கிற”

“உன் கையால சாகும்வரம் கிடைக்கும்னு நிக்கிறேன்”

“உனக்கு மொத்தமா பித்தம் முத்திப்போச்சுய்யா”

“ஆமா ஆமா உன் மேல உள்ள பித்து கூடிப்போச்சு”

“அடிங்க எவ்வளவு எகத்தாளமா சொல்ற பாத்தியா நீ? தான் வேணும்.எங்க வீட்டுக்குள்ள இருந்துகிட்டே என்னை இப்படி பாக்குறியே? நீ என்ன நான் தனியா மாட்டினா என்ன செய்வ?”

“அது என்னென்னவோ செய்வேன்” என்று பார்வையாலயே அவளை தின்றுக்கொண்டிருந்தான்.

“அடச்சை இந்தப் பார்வையை மாத்துய்யா”

“முடியாது”

“உன்கிட்ட மனுஷன்பேசுவானா என்ன?நான் போறேன்”

“அந்த வடையையும் காபியையும் தர்றது நானாவது குடிப்பேன்ல”

அதைக்கேட்டு கடுப்பின் உச்சத்துக்குப் போனவள்”ஹ்ஹ்ஹ்ம் உன்னையெல்லாம் ஒன்னும் செய்யமுடியாது.இந்தா இந்த வடையைத் தின்னு.விக்கிக்கப்போகுது காபியையும் குடிச்சுத் தொலை”

“நன்றி தேவி”

“ஆஹ்ஹ்ஹ் சாமி இவனை நானேகொன்றுவேன் போல இருக்கே”என்று புலம்பியவள் திரும்பி நடந்தாள்.

“காதல் ரோஜாவே காதல் ரோஜாவே”என்று மெதுவாகப் பாடினான்.

அவள் படிக்கருகில் சென்றவள் திரும்பிப் பார்த்து “டாக்டரே ஓவர்பீலிங்ஸ் உடம்புக்கு ஆகாது.கட் பண்ணிடுவேன்”என்று எச்சரித்தவளுக்குமே சிரிப்புத்தான் வந்தது.

அதை அவனிடம் காண்பிக்காது இறங்கிப்போனவள் அப்போதான் உணர்ந்தாள்.

அவள் குடித்தக் காபியும் வடையையும் அவன் கையில் சாப்பிடக் குடுத்துட்டமே என்று கீழேஇறங்கியதும் ஏறிட்டுப்பார்த்தாள்.

அவன் அந்த காபியையும் வடையையும் ருசித்துச் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.

அவனது எண்ணப்போக்கு என்னவென்று புரியாது குழம்பிப்போனாள்.

அவனுக்குமே அவளிடம் மட்டும் உரிமையாக சணடைப்போடும் தன்னை நினைத்தே ஆச்சர்யப்பட்டான்.

இன்னும் கொஞ்சநாள்தான் இங்க இருப்பேன்.அப்புறம் நான் என் வாழ்க்கையை பார்த்துட்டுப் போயிடுவேன்.

அதுக்கு எதுக்கு இவளிடம் வாயடிக்கொண்டு உறவை வளர்க்கிறேன் என்று யோசித்தவன் அவளையே பார்த்தவாறு கபியை அருந்தினான்.

ஆனால் இருவருக்குமே அந்தச் சண்டையும் பேச்சும் பிடித்திருந்ததுதான் ஆச்சர்யம்!

அந்தவாரம் முழுவதும் இருவருக்கும் அடிக்கடி சண்டை முட்டிக்கொண்டுதான் வந்தது.அவர்கள் விரும்பியே செல்லச்சண்டைப் போட்டுக்கொண்டார்கள் என்பது தனிக்கதை!

அந்தவாரம் முடிவில் சூர்யபிரகாஷ் ஊருக்குக் கிளம்பி செல்லும்போது அவனை பிரிந்து இருக்கணுமே என்று உண்மையாகவே வருத்தப்பட்டு போகும் அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவன் திரும்பி வரும்போது இதே உணர்வு உன்னிடம் இருந்தால் நலமாக இருக்கும் பட்டுரோசா!