ரணம்7
Ran7

7 ரண ரணமாய்!!
எங்கே இவனை மீண்டும் மீண்டும் பார்க்கும் பொழுது தன்னுடைய முடிவில் இருந்து மாறி விடுவோமோ? எனக்கும் வாழ ஆசை வந்து விடுமோ ... அவன் கையில் தாலி கட்ட நானும் ஆசைப்பட்டு விடுவேனோ.. அவனோடு குடும்பமாய் வாழ வேண்டும் என்ற பேராசை எனக்கும் வந்து விடுமோ என்ற பயம் காவ்யாவை மெல்ல மெல்ல அசைக்க ஆரம்பிக்க ..
அப்படியே சிறிது நேரம் அங்கும் இங்கும் நடை போட ஆரம்பித்தாள்
இன்னொருவன் வந்து அவளை அழைக்க ...மறுப்பாக தலையசைத்தவள்...கால் போன போக்கில் அந்த இருட்டில் நடக்க ஆரம்பித்தாள்
"எனக்காக நீ இந்த வலியை விட்டு வெளிய வா காவ்யா அது போதும்" என்றவன் வார்த்தை மீண்டும் மீண்டும் அவளுக்குள் வந்து போக
"என்னால உங்கள கல்யாணம் தான் சார் கட்டிக்க முடியாது , ஆனா உங்க ஆசையை நிறைவேற்ற முடியும் ... இது என்னை ஒரு ஆளா மதிச்சு நீங்க சொன்ன காதலுக்கு நான் தர்ற சமர்பணம் என்று பெருமூச்சு விடடவள் , தன் கையில் இருந்த தொழிலுக்குத் தேவையான ஹேண்ட் பேக்கை தூக்கி பக்கத்தில் எரிந்து கொண்டிருந்த பிணத்தின் மீது வீசினாள்... அவள் பையில் இருந்த பொருட்களும் கபகபவென்று எரிய ஆரம்பித்தது..
அவன் தந்த வாழ்க்கையை தான் ஏற்று கொள்ள மறுத்தாள் அவன் கோரிக்கையை உடனே ஏற்று கொண்டாள்..
ஆம் , இனி அவள் விபச்சாரி இல்லை ..
ஒரு வருடம் கழித்து
வேளாங்கண்ணி
காவ்யா அந்த சிக்கனுக்கு மசாலா தேய்ச்சு வச்சிட்டியா... ஒரு பக்கம் பரோட்டா அடித்துக் கொண்டிருக்கும் சத்தம், இன்னொரு பக்கம் டீ டம்ளர் கழுவும் சத்தம் ..
அண்ணே வடை நாலு ,இட்லி 3 என்று கஸ்டமர்களின் குரல்கள்.. அதன் நடுவே இந்த குரலும் ஓங்கி ஒலித்தது..
"அண்ணே சிக்கன் மசாலா தேச்சு வச்சாச்சு, மட்டன் கிரேவிக்கு மட்டன் வந்தா, அதையும் அடுப்பில ஏத்திடலாம் என்று இடுப்பில் சேலையை சொருகிக் கொண்டு வெளியே வந்தாள் காவ்யா
அவள் விபச்சாரி இல்லை ...புதிய அவதாரம் எடுத்து சமையல்காரியாக வேலை செய்கிறாள்..
அன்று மாதவனிடம் பேசிய இரவே சில வேலைகளை செய்து முடித்து விட்டு வேளாங்கண்ணிக்கு வண்டி ஏறிவிட்டாள் ..
அவனை பார்க்க பார்க்க அவள் கொண்ட உறுதி தளர்ந்து போகும் என்று நினைத்து, அவன் இல்லாத இடத்திற்கு பெட்டியை கட்டி விட்டாள்.. அவனுக்காக அடுப்படியில் கிடந்தது வெந்து கொண்டிருக்கிறாள் ஆனால் அதிலும் சந்தோஷம்தான்...
கழுகுகள் அவளை கொத்தி தின்பது இல்லை.. காமூகர்கள் அவளை குதறுவது இல்லை.. உழைக்கிறாள் சாப்பிடுகிறாள்
மாதவன் என்று யாரோ யாரையோ அழைக்க சமையல் செய்து கொண்டிருந்த காவ்யா ஆர்வமாக திரும்பி பார்த்தாள்
அவள் படித்த அழகிய ஆண் கவிதை அவன் அல்லவா??
என்னதான் இவ்வளவு தூரம் வந்து விட்டாலும் அவன் நினைவுகள் அவளை விட்டு எப்போதும் மறக்காது ..மறக்க விரும்ப வில்லை...
ஆண் என்றாலே அவன்தான் ஞாபகம் வரும்..
மாதவன் சாருக்கு எப்படியும் கல்யாணம் முடிஞ்சு இருக்கும் இல்ல .. பின்ன என்ன போயா நினைச்சுக்கிட்டு, இன்னும் கல்யாணம் பண்ணாம இருப்பார்... ஏதோ அன்னைக்கு ஆர்வக்கோளாறுல கேட்டு இருப்பார்.. அதுக்கு பிறகு அவர் வேலையை பார்க்க ஆரம்பிச்சிருப்பார் ...பெருமூச்சு விட்டாள்..
"பரவாயில்ல என் மேல் அக்கறை உள்ள ஒருத்தராவது இருக்காங்களேங்கிற சந்தோஷம் இன்ன வரைக்கும் என் மனசுல இருக்கு ... வாழ்க்கையில் என்னைக்காவது ஒருநாள் மறுபடியும் மாதவன் சார பாக்கணும்... மறைஞ்சிருந்தாவது அவர் குடும்பமும் குட்டியுமா இருக்கிறத பாத்துடணும் ..இது மட்டும் தான் எனக்கு ஆசை ... நான் நல்லா இருக்கணும்னு நினைச்ச மனுஷன் அவர், எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் என்ற ஒற்றை வேண்டுதல் தினமும் அவனுக்காக உண்டு
"டேய் மாதவா என்னடா சொல்ற அந்த பொண்ணு ஊரு விட்டு காலி பண்ணி போயிடுச்சா??
"அப்படித்தான் சொல்லிக்கிறாங்க அவ கூட இருக்கிற ஒரு பொண்ணு கிட்ட விசாரிச்சேன் எங்கேயோ ஊரு மாதிரி போயிட்டான்னு சொல்றாங்க
"நீ அந்த அளவுக்கு கொடைச்சல் கொடுத்து இருப்ப அதான் அந்த பொண்ணு ஓடிப் போயிடுச்சு என்ற ராகவை மாதவன் முறைத்து பார்க்க..
"நீங்க வேற சும்மா இருங்க , அவரே கவலையில சொல்லிக்கிட்டு இருக்கார் .. நீங்க வேற உசுப்பி விட்டுகிட்டு ..
ச்சை ச்சே கவலையெல்லாம் இல்ல காயத்ரி ...இங்க இருந்தா அவளுக்கு ஏதாவது உதவி செய்வேன் அங்க இருந்தா யார் அவளுக்கு உதவி செய்வா, உடம்பு முடியலன்னா கூட யாருகிட்டேயும் சொல்ல மாட்டா.. பத்து ரூபா மாத்திரை போட கூட யோசிப்பா.. கஷ்டம் எல்லாம் அவளுக்கு பழகிப்போனது.. ஆனா எனக்கு தான் என்னவோ போல இருக்கு ... அவ கிட்ட இந்த விஷயத்தை பேசாமலே இருந்திருந்தா.. போயிருக்க மாட்டால்ல அந்த வருத்தம் தான் என்று மாதவன் பெருமூச்சு விட..
"மாதவன் அவர்கிட்ட சொல்லி அவங்க எங்க இருக்காங்கன்னு கண்டுபிடிக்க சொல்லுவோமா,
எங்க போயிடப் போறாங்க எங்க தமிழ்நாட்டுகுள்ள தான் எங்கேயாவது இருப்பாங்க கண்டுபிடித்துவிடலாம் நான் மறுபடியும் அவளை பார்க்க கூடாதுன்னு நினைச்சு தானே எங்கேயோ போயிட்டா அங்கேயும் போய் தொல்லை பண்ண சொல்றீங்களா காயத்ரி விடுங்க ..
இல்ல நாம வேணும்னா பேசி பார்க்கலாமே
அய்யய்யோ வினையே வேண்டாம் , அவ இந்த கண்டத்தை விட்டு வேற கண்டத்துக்கு ஓடிடுவா.. போறது போல போகட்டும் என்று மாதவன் அவன் விஷயத்தில் யாரையும் நுழைய அனுமதிக்க வில்லை ...
டாக்டர் சார் என்ன மறந்துருப்பாருல, மறந்திருப்பார் எத்தனையோ ஆட்களை கடந்து போறவர் என்னையும் ஈசியா கடந்து போயிருப்பார் என்று யோசித்து கொண்டு இருந்தவள் காதில் முதலாளியின் குரல் கேட்டது
"காயத்ரி உன் தங்கச்சி போன் போட்டு இருக்கு ஓடி வா
"இதோ வர்றேன் முதலாளி என்று றெக்கை இல்லாமல் பறந்து கொண்டு ஓடினாள்..
இந்த ஒரு வருடத்தில் அவளுக்கு நடந்த மகிழ்ச்சியான சம்பவத்தில் ஒன்று .. அவள் தங்கை அவளோடு பேசியதுதான் ..
ஏதாவது தேவன்னா இந்த நம்பருக்கு போன் போடு கவிம்மா என்று வேலைக்கு வந்து சேர்ந்த காவ்யா நம்பரை தங்கைக்கு கொடுக்க ..
சாகுற நிலைமை வந்தாலும் உன்னை மாதிரி ஒரு கேவலமான பிறவிக்கிட்ட நான் உதவின்னு, கேட்டு வந்து நிற்க மாட்டேன் என்று கவி போனை வைத்துவிட ... இவளுக்கு முகம் சுருங்கி விட்டது..
ஆனால் அன்றைய இரவே தங்கையிடம் இருந்து போன் வந்தது
அக்கா என்ற அழைப்பை சத்தியமாக காவ்யா எதிர்பார்க்கவில்லை
"கவிம்மா எதுவும் பிரச்சனையாடா?
"நான் நல்லா இருக்கேன், நீ எப்படி இருக்க அக்கா சாப்பிடியா என்ற தங்கை மிக மிக புதிது... அதிர்ச்சியாக கண்களை விரித்த காவ்யா
"நீ நல்லா தானம்மா இருக்க , எதுவும் பிரச்சனை இல்லையே , எதுவா இருந்தாலும் அக்கா கிட்ட சொல்லு உடனே கிளம்பி வந்துடுறேன்... காசு பணம் எதுவும் தேவையா கவிம்மா..
ம்ஹூம் இல்ல , என்னைக்காவது லீவு கிடைச்சா வந்து பார்த்துட்டு போறியா அக்கா.. உன்ன பாக்கணும் போல இருக்கு என் தங்கை குரல் நடுங்கி போய் வர ...
"அப்பாவும் அம்மாவும் உன்னை ஏதாவது பண்றாங்களா இவளுக்கு பயம் தங்கை இப்படி உடைந்து போய் அவளிடம் அன்பாக பேசியது எல்லாம் நடக்காத ஒரு காரியம் ..
அதெல்லாம் என்ன செஞ்சிட முடியும் , நீ இருக்கும் போது எதுவும் செய்ய முடியாதே. நான் நல்லா தான் இருக்கேன் நீங்க என்ன பத்தி பயப்படாம அங்க நல்லா இருங்க, நல்லா சாப்பிடுங்க நல்லா தூங்குங்க எனக்கு அடுத்த வாரம் லீவு வரும் அப்போ உங்கள பாக்க வரேன்... என்று தங்கை அவளுக்கு புத்தி கூறி.. தினம் தினம் அரை மணி நேரம் அக்காவோடு அரட்டை அடிக்கிறாள்
என்ன நடந்தது தெரியாது தங்கையும் வாயை திறக்க வில்லை ஆனால் அவளை அன்பாய் தேட ஆரம்பித்தாள்..
அந்த நேரத்திற்காகவே இவளும் காத்து கிடக்கிறாள்.. எப்படி இந்த மாற்றம் தெரியவில்லை ஆனால் இந்த மாற்றம் மிகவும் பிடித்திருந்தது..அழகிய மாற்றம் எப்படி சாத்தியம்??
எப்படி ஒருவர் மாற முடியும் ஒன்று உண்மையை அறிந்திருக்க வேண்டும் .. இல்லை உணர்ந்து இருக்க வேண்டும் தங்கை உணர்வது அவ்வளவு எளிது இல்லை ..
அப்படி என்றால் உண்மையை அறிந்திருக்க வேண்டும் ... உண்மை எப்படி அவள் அறியக்கூடும்? அவளைப் பற்றிய ரகசியம் அறிந்தது அவள் பெற்றோர் அவர்கள் தங்கள் சுயலாபத்திற்காக கண்டிப்பாக அதையெல்லாம் இவளிடம் சொல்ல மாட்டார்கள் ... இன்னொன்று மாதவன்?? அப்படி என்றால் மாதவன் அவளோடு பேசி இருப்பானோ??
ஆம் , போனவளை வேண்டுமானால் அவள் விருப்பப்படி விட்டு விட்டானே தவிர ... அவள் வாழ்க்கையில் ஏற்பட்ட சிக்கல்களை அப்படியே விட அவனுக்கு மனமில்லை.... அவள் ரணங்களை சரி செய்ய அவள் வாழ்க்கை உள்ளே காலடி எடுத்து வைத்திருந்தான் மாதவன் ..
இன்னைக்கு கட்டுறேன், நாளைக்கு கட்றேன்னு சொல்ற ... ஒரு மாசமா பீஸ் கட்டாம காலம் தாழ்த்திக்கிட்டே இருக்க .. உன்னால பீஸ் கட்ட முடியலன்னா ஏன் எந்த ஸ்கூல்ல வந்து படிக்கிற என்ற ஹெட்மாஸ்டர் முன்பு தலையை குனிந்து கொண்டு கவிதா நின்றாள்..
இத்தனை நாளில் இதுதான் முதல் முறை எப்போதும் அவளுக்கு சரியாக பீஸ் கட்டப்பட்டு விடும் ...
காவ்யா ஊரை காலி பண்ணி போன பிறகுதான் அவளுக்கு நிம்மதியே .. ஆனால் அடுத்த பிரளயம் போல வீட்டில் அவளுக்கு சரியான உணவு கொடுக்கப்படுவதில்லை ..காவ்யா அனுப்பும் பணத்தை தாயும் தகப்பனும் பங்கு போட்டுக் கொள்வதிலேயே குறியாக இருந்தார்கள்... இவளுக்கு அனுப்பும் ஃபீஸ் காசை கூட அவர்கள் ஆட்டையை போட்டு விட.. பீஸ் கட்டாமல் கையை பிசைந்து கொண்டு நிற்கிறாள்
"பாரு கவி நல்லா படிக்கிற பொண்ணு அப்படிங்கறதனாலதான் உன் வீட்ல எவ்வளவு கேவலம் நடந்தாலும் உன்னை இந்த ஸ்கூல்ல நாங்க விட்டு வச்சிருக்கோம் ... எங்களுக்கு எதுவும் தெரியாது ன்னு நினைக்காத ..
சார்
"எல்லாம் தெரியும் இருந்தும் நீ நல்ல பொண்ணுங்கறதுக்காகதான் உனக்கு இந்த ஸ்கூல்ல இடம் கொடுத்து இருக்கோம்... இப்படி நீ பீஸ் கட்டாம இருந்தா, எப்படி
"இல்ல சார் எப்படியாவது ப்ளீஸ் கட்டுறதுக்கு ட்ரை பண்றேன்...
" இன்னும் ஒரு வாரம் தான் உனக்கு டைம் அதுக்குள்ள பீஸ் கட்டு இல்லன்னா டிசியை வாங்கிட்டு வெளியே போ அதுவரை கிளாஸ்ல வெளியே நில்லு என்று போய் விட்டார் ..கவிதா நாள் முழுக்க வெளியே நின்று வகுப்பை கவனிக்க...
சார் கவிதாவை உள்ள விடணுமாம், கவிதாவுக்கு பீஸ் கட்டியாச்சு , பெண்டிங்ல இருந்த எல்லா பீஸையும் ஒரு சார் வந்து கட்டிட்டாரு என்று அட்டெண்டர் வந்து கூறவும் , தலை குனிந்து நின்ற காவ்யா யாரது என்பது போல் வெளியே வந்து ஆளை தேட ..
மாதவன்தான் நின்று கொண்டிருந்தான்...
இந்த ஒரு வருஷம் மட்டும் இந்த ஸ்கூல்ல படிக்கட்டும். இதுக்கு மேல இந்த ஸ்கூல்ல எங்க கவிதாவுக்கு நீங்க பாவம் பார்த்து இடம் கொடுக்க வேண்டாம் ... படிக்கிற பொண்ணு எங்க இருந்தாலும் படிச்சுக்கும் அவள டெல்லியில _____ என்று ஒரு பிரபல பள்ளிக்கூடத்தின் பெயரை சொல்லி..
" அங்கு சேர்க்க நான் முடிவு பண்ணிட்டேன் என்ற மாதவனை ஹெச்எம் கையை பிசைந்து கொண்டு பார்த்தார்
"எதிர்ல இருக்கிறவங்களோட திறமை மனச இதெல்லாம் பாக்குற பக்குவத்தை பிள்ளைகளுக்கு தான் சொல்லிக் கொடுக்கலைன்னு பார்த்தா, உங்களுக்குமே அது இல்ல சார் ... பணம் மட்டும் தான் முக்கியம் பணம் தான் எல்லாம் இல்ல என்று கடினமாக பார்த்தவன் திரும்பிட கவிதான் நின்றாள்
"சார் யாருன்னு தெரியலையே, எதுக்காக எனக்கு பீஸ் கட்னீங்க "
"காவ்யா தங்கச்சி தான நீ??" என்றதும் முகத்தை சுளித்த கவிதா
"ஓஓ இந்த அளவுக்கு எல்லாம் கஸ்டமர் புடிச்சு வச்சிருக்கா போல இருக்கு..என்று அவள் உதட்டை சுளிக்க...
"பரவால்ல சின்ன பொண்ணு நிறைய பேசி புரிய வைக்கணும்னு நினைச்சேன், ஆனா நல்ல மெச்சூரிட்டியா பேசுறியே, விவரமான பொண்ணு தான்.
ஹலோ மிஸ்டர் எனக்கு யாரும் பீஸ் கட்ட தேவை இல்லை நான் பிச்சை எடுத்தாவது படிச்சிக்கிறேன்..
"ம்ம் குட் , நல்ல வளர்ப்பு... நீ போட்டு இருக்க டிரஸ் யார் எடுத்து கொடுத்ததும்மா
அது என்றவள் தொண்டையை செரும
"சும்மா சொல்லு ஒரு கிளரிஃபிகேஷனுக்குதான்" கேட்டேன்.
" அவதான்"
" நீ சாப்பிடுற சாப்பாட்டுக்கு பணம் யாரு கொடுக்குறான்னு தெரியுமா?
" அவதான் என்றாள் முகத்தை சுளித்து
" நீ போடுற செருப்பு, பவுடர் ஏன் கட்டியிருக்கிற ரிப்பன் இதுக்கெல்லாம் யாரு காசு கொடுக்குறா?
அவதான் சார் இப்ப என்னங்கிறீங்க???..
"ம்ம் இதெல்லாம் உனக்கு கிடைக்கிறதுக்காக மட்டும் தான் உன் அக்கா அந்த இடத்துல டார்ச் லைட்டை புடிச்சிட்டு நிக்கிறான்னு சொன்னா உன்னால நம்ப முடியுமா? கவிதா கண்களை சுழட்டி எதிரே நின்ற மாதவனை பார்க்க
"உன்னோட அப்பா அம்மாவும் தான் அவளை இந்த தொழிலுக்குள்ள தள்ளிவிட்டாங்கன்னு உண்மைய சொன்னா உன்னால ஏத்துக்க முடியுமா?
"சார்இஇஇ என்று அவள் எச்சில் விழுங்க
"நீ நம்பினாலும் நம்பலேன்னாலும் இதுதான் நிஜம் நிஜம் இன்னைக்கு வேணும்னா... உன் கண்ண விட்டு மறையலாம்.. ஆனா என்னைக்காவது ஒரு நாள் உனக்கு கண்டிப்பா தெரியும்.. இது உன் அக்கா வேலை பார்க்கிற கடையோட நம்பர் ... அப்படி என்னைக்காவது ஒரு நாள் உனக்கு உன் அக்கா மேல தப்பு இல்லன்னு தெரிஞ்சா... இந்த நம்பருக்கு போன் போட்டு அக்கான்னு ஒரு வார்த்தை சொல்லு , அவளுக்கு அது போதும்மா...
நீங்க பொய் சொல்றீங்க
"எனக்கு பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.... அவளோட வலிய என்னாலையே பார்க்க முடியல... நீங்க எல்லாம் எப்படி பாக்காம விட்டீங்க , இதுவரைக்கும் அவ பட்டது போதும், ஒத்தையா நின்னு போராடினது போதும் .. அவளை தட்டிக் கொடுக்கலைன்னாலும் பரவாயில்லை... மறுபடியும் மறுபடியும் ரணம் ஆக்காதீங்க..
எனக்கு ஒரு உதவி செய்யணும்.. நான் வந்ததையோ, உன்கிட்ட பேசினதையோ, காவ்யா கிட்ட சொல்லக்கூடாது வரேன் என்று மாதவன் போய்விட...
கவிதா யோசனையாக உடம்பு சரியில்லை என்று லீவ் போட்டுவிட்டு வீட்டிற்கு வந்தவள்.. தன் பெற்றோரின் சுய ரூபத்தை கண்டாள்..