தீயவா 10

Thee10

தீயவா 10

10 தீயவா நீ என் தூயவா!!

ஊர் அடங்கிய வேளை  தீயவனின் வீடு அரவமில்லாமல் கிடந்தது,  தீயவன் நிம்மதியாக அவன் படுக்கையில் தூங்கிக் கொண்டிருந்தான்...

இதற்காக தான் காத்துக் கொண்டு இருந்தாரோ தேவகி .. தன் மகனின் மேல்றையை பார்த்தார் அறை பூட்டி கிடந்தது ... கையில் மருந்தை எடுத்துக்கொண்டு விறு விறுவென்று பின்னால் இருக்கும் துளசியின் அறை நோக்கி ஓட்டமும் நடையுமாக போக ஆரம்பித்தார் மனமே கொள்ளவில்லை...

பச்சைப் பெண் இத்தனை ரணத்தை தாங்க வேண்டுமா இவளிடம் சொன்னாலும் கேட்க மறுக்கிறாள், அவனிடம் சொல்லவே முடியாது

"பாவி எப்படி எல்லாம் கொடுமை படுத்துறான், நான் பெத்தவ ஆகிட்டேன், அதனாலதான் பேச்சோட என்ன விடுறான். இல்ல எனக்கும் இதே நிலைமைதான் ... மனுசன மதிக்கவே தெரியாத மிருகமா இருக்கானே கடவுளே,  இந்த புள்ள வாழ்ந்தா  உன்கூட தான் வாழ்வேன்னு அடம் பிடிக்கிறா,  இவன் அவளை புல்லா கூட பாக்க மாட்டேங்குறான், இதுல நான் என்ன செய்யணும் எனக்கே ஒன்னும் புரியலையே என்று புலம்பிக்கொண்டே துளசி அறை கதவை தட்டப்போக அது திறந்தே கிடந்தது..தேவகி  உள்ளே நுழைய பாயில் சுருண்டு படுத்து கிடந்த துளசி வலியில் அனத்திக் கொண்டு தூக்கம் வராமல் உருண்டபடி இருந்தாள்

"அம்மாடி துளசி" என்றதும்  பட்டென  கண்களை திறந்தவள் ..

"அத்தாச்சி வலிக்குது, நீயும் உன் மகனுக்கு தானே ஒத்து ஊதுற போன்னு சொன்னது உன் பாட்டுக்கு போயிட்ட , எவ்வளவு நேரம் அழுத்தினார் தெரியுமா?  கை எல்லாம் கண்ணாடி துண்டு போயிடுச்சு,  முடிஞ்ச மட்டும் கண்ணாடி எல்லாம் எடுத்தேன் ஆனா வலி தாங்க முடியல பாரு,  என் கையெல்லாம் வீங்கி போச்சு என்று உதட்டை பிதுக்கிக் கொண்டு துளசி தன் கையை நீட்ட...  ஐயோ கண்கொண்டு பார்க்க முடியாமல் தேவகி கண்கள் கலங்கி அவள் அருகே வந்து அமர்ந்து கையைப் பிடித்து ஊத..

"நல்லவேளை கையோட போச்சு அவர் சொன்னது மாதிரி முகத்தை வச்சு அழுத்தி இருந்தா,  என் முகம் நெல்லு நடவு செய்யுற வயல் கணக்கா ஆயிருக்கும் என்று அந்த வலியிலும் சிரிக்கும் அவளை சாதாரண பெண்ணாக அவரால் கடக்க முடியவில்லை .... என்ன ஒரு காதல் வைராக்கியம் பிரமிக்கத்தான் வைத்தாள்..  ஆனால் இவள் காதலுக்கு அவன் தகுதியே இல்லாதவனே!! 

"இதுக்குத்தான் உன்கிட்ட படிச்சு படிச்சு சொன்னேன் அவன்  பக்கத்துல போகாதன்னு , அவன் ஒரு வெறி பிடிச்ச  நாய்,  பக்கத்துல போனா கடிச்சு விட்ருவான்னு,  சொன்னா கேட்டாதானே,  நல்லா வாங்கிட்டு உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்க..

"நான் போகலன்னா இந்த பீங்கான் எல்லாம் அயித்தான்  காலுலல்ல குத்தி இருக்கும் ...  நானாவது பரவாயில்லை வீட்டில கிடக்கிறவ , அவரு நாலு வேலைக்கு போறவர்,  கால்ல காயத்தை வச்சுக்கிட்டு என்ன செய்வாரு...  அதோட காட்டுல வளர்ந்த எனக்கு இதெல்லாம் ஒன்னும் செஞ்சிடாது அத்தாச்சு..  அவருக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என்ன செய்ய ??

"ப்ச நீ அவன பத்தி யோசிச்சா போதுமா எப்போடி உன்ன பத்தி யோசிக்க போற ... கொஞ்சம் கண்ணு திறந்து பாரு துளசிம்மா,  நீங்க வாழ்கிற அந்த காடு மாதிரி இந்த ஊர் இல்லை..  இந்த ஊர்ல உள்ள மக்களும் உங்களை மாதிரி வெள்ளந்தி கிடையாது தங்கம் ...

"அய்ய ஆரம்பிச்சுட்டியா அத்தாச்சி,  என் புருஷன குறை சொல்றதே உனக்கு வேலையாகி போச்சு ,  மருந்துதான போட வந்த.. மருந்தை போடு கண்டத பேசி என கோபப்படுத்தாதே...  

"உன் புருசனை  ஏதாவது சொன்னா உனக்கு கோபம் வந்திடுமே நாளைக்கு காலையில கிளம்பி இரு,  ஹாஸ்பிட்டல் போயி ஒரு ஃசெப்டிக் ஊசி போட்டுட்டு வந்துடுவோம்...

அதோட கண்ணாடி துண்டு ஏதாவது உள்ள இருந்தா அவங்க எடுத்து விட்டுருவாங்க... துளசியோ யோசனையாக உட்கார்ந்து இருந்தாள் 

நான் உன்கிட்ட தாண்டி பேசிகிட்டு இருக்கேன் என்ன யோசனையா உட்கார்ந்து இருக்க"

"இல்ல ஒரு மாசம் ஆயிடுச்சு, அயித்தானுக்கு என் மேல உள்ள கோபம் போகவே இல்லையே,  இப்படியே போனா என் நிலைமை என்னன்னு யோசிச்சுகிட்டு இருக்கேன் "

"அவனுக்கு உன் மேல பிரியமே வரப் போறது இல்லன்னு அர்த்தம்,  பேசாம உன் ஊருக்கு போறியா?  இப்ப கூட ஒன்னும் கெட்டு போகல.. அத்தையே கொண்டு போய் விட்டுட்டு வரேன்...

"எப்படா வாய தொறப்பா, கொண்டு போயி என் ஊருல தள்ளலாம்னே காத்துகிட்டு இருப்பியா அத்தாச்சி,  ஒரு வழி சரியா படலைன்னா இன்னொரு வழி பிடிச்சு தான் போகணும் உன்னோட யோசனை எதுவு‌ம் சரியா வரல,  அப்போ இனிமே என் யோசனைப்படி தான் நடக்கணும்னு நினைச்சுகிட்டு இருக்கேன்... "

"ம்க்கும்  அதானே நீயாவது திருந்துறதாவது படுத்துக்கோ அத்தை காயத்தை தடவி விடுறேன் வலி குறையும்,  அவளை பாயில் படுக்க வைத்து இரவு முழுவதும் அவள் காயத்திற்கு மருந்து போடுவதும் வருடி  விடுவதுமாக தேவகி தான் பார்த்துக் கொண்டார் .... 

"யோவ் எனக்கு பரிகாரம் சொல்றதுக்கு வீட்டுக்கு வான்னு சொல்லிவிட்டா ,  சுகர ஏறிடுச்சுன்னு  வந்து ஹாஸ்பிட்டல் பெட்டுல படுத்து கிடக்கிற , உனக்கே நாலு பேர் பரிகாரம் சொல்லனும் போல இருக்கு... " என்று உடல்நிலை சரியில்லாமல் கிடந்த ஜோசியரை பார்க்க மருத்துவமனை வந்த தீயவன் அவன் அருகில்  உட்கார்ந்தான்..

"எனக்கு இப்போ பரவாயில்ல  சார்.. ரெண்டு நாள்ல டிஸ்டார்ஜ் பண்ணிடுறேன்னு சொல்லி இருக்காங்க

"நீ இருந்தா என்ன செத்தா எனக்கு என்ன , முதல்வர் நாலு அடி ஏறி வந்தா,  4 அடி சறுக்கி போயிடுறான் நேத்து வரைக்கும் சரி சரின்னு மண்டைய ஆட்டுனான்..  இன்னைக்கு இன்னும் யோசிக்கணும் 10 நாள் டைம் கொடுங்குன்னு  சொல்றான் .. இது சரியா வரும்னு தோணல நீதான் ஜெகஜால  கில்லாடி ஆச்சே,  என்னோட ஜாதகத்தை இன்னொரு தடவை புரட்டி பார்த்து ஏதாவது பரிகாரம் பண்ண முடியுமான்னு பாரு... 

"இப்பவா ரெண்டு நாள் கழிச்சு .. 

"இப்ப பார்த்தா சுகர்ல சாவ,  இப்ப பாக்கலைன்னா என் கையால சாவ புடி , "காணாமல் போன தன் ஜாதகத்தை அன்று துளசி கையில் இருந்து பிடுங்கி வைத்திருந்தான்... அவர் எழும்பி அமர்ந்து அவன் ஜாதகத்தையும்  முதல்வர் மகள் ஜாதகத்தையும் இணைத்து பார்த்து விட்டு ... 

"இந்த  பொண்ணுக்கு பாவ ஜாதகம் இருக்கு சார் 

"ப்ச் ... அந்த கருமம் வேறையா... அவளை கட்டினா என் உயிருக்கு ஆபத்து வருமா ?

"ம்ஹூம் பதவிக்கு வரும் 

"வாட் ?

"நீங்க கட்டி வச்சிருக்கிற சாம்ராஜ்யம் சரியும் 

ஓஓஓ ஒழுங்கா பார்த்து சொலலுய்யா,  வேற வழி இல்லையா ?

"ஏன் இல்லை ஒரு வழி அடைச்சா இன்னொரு வழி திறக்குமே "

"திறக்கலைன்னா உன்ன கொன்னுடுவேன்னு தெரிஞ்சா சரி.... சிஎம் மருமகன் ஆக என்ன வாய்ப்பு ?

"இன்னும் ஒரு பாவம் செய்யணும் பாவ ஜாதகத்துக்கு இணையா  ஒரு பாவத்தை கூட்டணும் 

"என்ன ?தீயவன் கண்ணை சுருக்க.... 

"எல்லா பாவத்தையும் அசால்டா செஞ்ச நீங்க,  ஒரே ஒரு பாவத்தை மட்டும் விட்டு வச்சிருக்கீங்களே  அந்த பாவத்தை செய்யணும் "

" ஜோசியர்னாவே புரியாம பேசணும்னு ஏதாவது உங்க சங்கத்துல சட்டம் போட்டு வச்சிருக்கீங்களா..  புரியும்படி சொல்லிய்யா , கொலை பண்ணிட்டேன் அடுத்தவன கெடுத்தும் விட்டு இருக்கேன் பதவிக்காக அல்லரை சில்லரை  வேலை எல்லாத்தையும் பாத்துட்டேன்..  என்னோட ஆதாயத்துக்காக துரோகம் கூட பண்ணியிருக்கேன் நான் பண்ணாத பாவமா அது என்ன?  "என்று தீயவன் நாடியை தடவிக் கொண்டே யோசிக்க..

அருகே இருந்த பல்ராம்ரோ

"எனக்கு தெரிஞ்சு , பொம்பள சகவாசம் மட்டும்தான் உனக்கு இல்லாத ஒரே ஒரு நல்ல பழக்கம் .. ஜோசியர் கண்களை அகல விரித்து,  அவன் சொல்வதை ஆமோதிப்பது போல் தலையாட்டி,

"ஆமா ஐயா,  அந்தப் பொண்ணுக்கு நீங்க தாலி கட்டணும்னா நீங்க கன்னி கழிஞ்சு இருக்கணும்

"யோவ் புரோக்கர் மாதிரி பேசாதய்யா,  நான் கன்னி கழிக்கியுறதுக்கும் அந்த பொண்ண கல்யாணம் கட்டுறதுக்கும் என்னய்யா சம்மந்தம்.... 

ஒரு பொண்ணுக்கு தாலி கட்டினா நீங்க அரசியல்வாதியா ஆகிடுவீங்கன்னு சொன்னேன்...  ஆனீங்களா இல்லையா ? அதே போல தான் இதுக்கும் அதுக்கும் சம்மந்தம் இருக்கு,  அந்த பாவ ஜாதகத்தோட உங்க ஜாதகம் சேரனும்னா உங்களுடைய யோகம் அடுத்த கட்டத்துக்கு நகரணம்னா,  நீங்க இந்த பாவத்தையும் செஞ்சு தான் ஆகணும்...  நீங்க கன்னிகழிஞ்ச அடுத்த நிமிஷம் முதல்வரே உங்களுக்கு போன் போட்டு கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு கேட்கலன்னா என்ன உங்க கையால கொன்னுடுங்க  சார் "என்ற ஜோசியரை கண்ணை சுருக்கி பார்த்துக் கொண்டே பலராமை எட்டி பார்த்தான் தீயவன்..

பொன்னாசை,  மண்ணாசை,  பொருளாசை அரசியல் ஆசை அரியாசனை மீதி இருந்த தீராஆசை என்று அத்தனை ஆசையும் இருந்தவனுக்கு இந்த பெண்ணாசை மட்டும் கிடையவே கிடையாது...  

ஓஓஓ 

"ஆனா இதுல ஒரு பிரச்சனை இருக்கு சார்,  நீங்க கலக்கப் போற முதல் பொண்ணு உங்கள மாதிரி உடல் அளவுல தூய்மையான பெண்ணா இருக்கணும்...  தூய ரத்தத்தோட உங்களோட தீய ரத்தம் கலக்கும் போது நீங்க எதிர்பார்த்தது எதிர்பார்த்துகிட்டு இருக்கிறது எதிர்பாராதது எல்லாம் உங்க வாழ்க்கையில் நடக்கும்..  குறுகிய காலத்துக்குள்ள நீங்க நினைச்சு பார்க்காத ஒரு இடத்துக்கு போகக்கூடிய சக்தியை அந்த பெண்ணினுடைய தூய்மை உங்களுக்கு கொடுக்கும்.... ஒவ்வொரு முறை அந்த பெண்ணோட நீங்க கலக்கும் போதும் உங்க அதிர்ஷ்டம் வீட்டு வாசலிலேயே வந்து கதவை தட்டும்.. நான் சொல்றத நம்பினா பண்ணுங்க,  இல்ல உங்க இஷ்டம் சார்" என்று ஜாதகத்தை அவர் மூடி வைக்க...  பல்ராம் தலையை உலுக்கி கொண்டான் ..

"பேசாம இவனுக்கு அடியாளா இருக்கிறதுக்கு ஒரு ஜோசியக்கடை திறந்து வச்சா கள்ளா கட்டும் போல இருக்கே,  என்னமா குழப்பி விடுறான்...  ஏற்கனவே இவன் அரக்கன்,  அடுத்து யார் வந்து இவன் கிட்ட மாட்ட போறாளோ என்று பல்ராம் புலம்பிக்கொண்டு யோசனையாக இருந்த  நண்பனை கூர்ந்து பார்த்தான்...

"என்னடா அவர் சொல்றத செய்ய போறியா?

"செஞ்சு தான் பாத்துடுவோமே ராமா, அரசியலுக்காக கொலையை செஞ்சவனுக்கு இதெல்லாம் அசால்ட்டுடா...  இவன் சொன்ன மாதிரி ஏதாவது நடக்காம போச்சுன்னு வச்சுக்கோ,  நம்ம தென்னைக்கு உரம்  இவன் தான்... எவள போய் இதுக்காக பிடிக்கிறது,   நாம சொல்றதுக்கு எல்லாம் ஆமாம் சாமி போடணும் யாரை தேட  ??"என்று வாய்விட்டு சொல்லிக்கொண்டு தீயவன் கதவை திறந்து கொண்டு வெளியே வர 

"அத்தாச்சி நான் இங்க இருக்கேன்" என்ற குரலில் தீயவன்  சட்டென திரும்பி பார்த்தான் ...

சரியாக அவன் கண்ணெதிரில் வந்து நின்றாள் அவனின் தூயவள்!!

"அத்தாச்சி போகும்போது ஐஸ்கிரீம் வாங்கி தரேன்னு சொன்னல்ல,  இப்போ குளிர்ச்சியா எதுவும் திங்க கூடாதுன்னு சொன்னதும்,  நான் வாங்கி தர மாட்டேன்னு மாத்தி பேசுறியே,  இது உனக்கே நியாயமா இருக்கா....  பாரு நீ சொன்னதுக்காக ஊசி எல்லாம் குத்திகிட்டேன் , ஒரு ஐஸ்கிரீம் வாங்கி கொடு அத்தாச்சி" என்று தேவகி கன்னத்தைப் பிடித்து கொஞ்சிக் கொண்டு நின்றாள்  அவன் மைனர் மனைவி .... உதட்டை வளைத்து  சிரித்த தீயவன் பலராமை பார்த்து கண்களை மேலும் கீழும் ஆட்டி 

"எப்படி,  ஆளு கிடைச்சிருச்சா?"  துளசி நின்ற பக்கத்தை அவனைப் பார்க்க சொல்ல...  பலராமோ துளசியை அங்கே கண்டு  நெஞ்சை பிடித்துக் கொண்டு நின்றான் 

டேய் அவளா???!! ...

யா, யா நான் கட்டுன பொய்தாலிக்காக,  என் கூட வாழ ஆசைப்படுறா,  வாழ்ந்துடுவோம்" என்று கைகளை மேலே நெட்டி முறித்து தூரத்தில் நின்று துள்ளி துள்ளி தேவகியோடு பேசிக் கொண்டிருந்த காட்டு மயிலை வேட்டையாட கருஞ்சிறுத்தை பார்வை பார்த்தான் தீயவன்...

அவளின் அளவற்ற காதலே அவள் எதிரி ஆகும் , அவள் காதலே இவனுக்கு ஆதாயம் ஆகும்!! 

அவளை தின்று இவன் வாழ போகிறான்!!