பொய்யில் ஒரு மெய் 1
Poi1

1 பொய்யில் ஒரு மெய் !!
சென்னையில் நடுத்தர வாசிகள் வசிக்கும் ப்ளாட் அதிலுள்ள ஏழாம் நம்பர் வீடு
பரபரப்பான அந்த காலை பொழுதில் ஒரு பக்கம் குக்கர் விசில் சப்தம் , இன்னொரு பக்கம் இட்லி அவியும் மணம் , குளியலறை உள்ளே குளிக்கும் சப்தம் என பரபரப்பாக அந்த காலையை வரவேற்று கொண்டிருந்தது...
"அம்மா காலையில ஸ்பெசல் கிளாஸ் இருக்குன்னு நேத்தே சொன்னேனே, நீங்க இப்பதான் இட்லி அவிச்சிட்டு இருக்கீங்க" பத்தாம் வகுப்பு படிக்கும் மகள் அவிரா தாயை முறைத்து பார்க்க ..
"எனக்கு என்ன நாலு கையா இருக்கு, அஞ்சு மணிக்கு எழும்பினேன்... இப்ப வர வேலை செஞ்சு மாய முடியல, என்ன குறை சொல்றியே , இன்னும் ரெட்ட ஜடை பின்னல், சாக்ஸ் போடல, டை கட்டல ஸ்னாக்ஸ் பாக்ஸ் எடுத்து வைக்கல.."
" போதும்மா போதும் உங்களை குறை சொன்னா பொறுக்காதே , உடனே வரிஞ்சிக் கட்டி எங்களை குறை சொல்ல ஆரம்பிச்சுடுவீங்களே" என்று அவிரா இடையில் கை வைத்துக் கொண்டு தன் தாயை முகத்தை கோணி பார்க்க
இட்லியை ஆவி பறக்க ஹாட் பாக்ஸில் போட்டுக் கொண்டே மகளை தலையை திருப்பி பார்த்தாள்..
சீதாலட்சுமி...
நடுத்தர வயது பெண் 40 வயது.. குடும்பப் பெண்ணுக்கான அத்தனை அம்சமும் ஒருங்கேப் பெற்றவள்... அழகான குடும்பத் தலைவி, பிள்ளைகளுக்கு நல்ல தாய், கணவனுக்கு அருமையான மனைவி .. அழகான குடும்பம் இனிமையான வாழ்க்கை .. இத்தனை வருட வாழ்க்கையில் பல சவால்களைக் கடந்து இருக்கிறாள் .. ஆனால் இன்பம் ஒரு நாளும் குறைவு பட்டது கிடையாது ..
இதற்கு காரணம் அவள் கணவனும் கூட தான்..
"என்னங்க என்னங்க குளிச்சாச்சா??" என்று சீதா குரல் கொடுக்க
"முடிஞ்சு முடிஞ்சு" என்று குளியலறை கதவை திறந்து கொண்டு அரவிந்த் தன் தலையை துவட்டிக் சமையல் அறை உள்ளே வந்தான் ..
அரவிந்த் ராம் 45 வயதுக்காரன்...
மனைவி பிள்ளைகள் என்று வாழும் சராசரி ஆண் மகன் ... நல்ல உயரம் அதற்கேற்ப உடல்வாகு பேங்கில் மேனேஜராக இருக்கிறான்... ஒருவன் சம்பளம் மட்டுமே எனவே பார்த்து பார்த்து வாழும் குடும்பம் ..
"டெய்லி லேட்டா எழும்ப வேண்டியது , பிறகு சீதா அதே எங்க இதை எங்கன்னு என்ன பிச்சு புடுங்க வேண்டியது , இந்தாங்க காப்பி" என சீதா ஆவி பறக்க பில்டர் காப்பியை தன் கணவன் கையில் கொடுக்க...
"ஆரம்பிச்சிட்டியா, இன்றைக்கு சரியா போயிடுறேன் பாரு , நீ காபி குடிச்சியா சீதா"என்று கேட்டுக் கொண்டே அர்விந்த் அந்த காபியின் நறுமணத்தை ஆழ்ந்து அனுபவித்தவன்.. மகள் தலை மறையவும் மனைவி கன்னத்தில் முத்தம் கொடுக்க அருகே போக.. அவன் கையில் கிள்ளி வைத்த மனைவி
"வளர்ந்த பிள்ளைய வச்சுக்கிட்டு இந்த வேலை பாக்காதீங்கன்னு உங்கள நான் எத்தனை தடவை சொல்லி இருக்கேன் ராம்.. பிள்ளைங்க கண்ணுல பட்டுட்டா கேவலமாகி போகும்" என்று பல்லுக்குள் கடித்து புருஷனை கடிந்து கொள்ள ..
"ப்ச் நீயும் எத்தனையோ தடவ சொல்ற.. ஆனா என் மரமண்டைக்கு ஏற மாட்டேங்குது.."
"அப்பா என்று பத்து வயது மகன் அஸ்வின் யூனிபார்மை தூக்கிக்கொண்டு ஓடி வர..
"ம்ம் , உங்க மகன் வந்துட்டான் , டிரஸ் மாத்தி விடுங்க ....
"அவ்வளவுதானாடி
"அட அட , இன்னும் ஐயாவுக்கு சின்ன வயசுன்னு நினைப்பு , பொண்டாட்டியை இடிச்சுக்கிட்டே நிக்க வேண்டியது... புள்ளைங்க ரெண்டும் தோளுக்கு மேல வளர்ந்து நிக்குது, கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோங்க ராம் , கிளம்புங்க போங்க 'என்று மனைவி சதா பாடும் அதே ராகம் தான் ..
வயதுக்கு வந்து விட்ட மகள், 10 வயது மகன் ஒற்றைப் படுக்கை அறை கொண்ட அப்பார்ட்மெண்ட் வீடு , மனைவியை தொட்டு அணைப்பதற்கு கூட ஏகப்பட்ட கெடுபிடிகள் உண்டு...
ஆனாலும் இந்த வாழ்க்கையில் இருவரும் இன்பமயமாகத்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்...
என் புருஷன் மாதிரி யாரு? என்று தினமும் மெச்சிக் கொள்வாள்...
காரணம் உண்டு, அர்விந்த் சீதாவை காதலித்து பல சண்டைகளும் நடுவே , அவளை கரம் பிடித்தான்...
அவளுக்காக தன் தாய் தகப்பனிடம் சண்டை போட்டு தனி குடித்தனம் அழைத்து வந்தான் ..
எதிலும் குறை வைத்தது இல்லை.. பார்த்து பார்த்து மனைவியை பகட்டாக வைத்திருக்கிறான்.. சபையில் யாரும் அவளை ஒரு வார்த்தை சொல்லி விட முடியாது..
"நகை போட்டுட்டா வந்த, இல்ல அவனுக்கு வேலை செஞ்சு சம்பாதித்து காசு கொடுக்குறியா? எல்லாத்தையும் என் மகன்தான பார்த்துக்கிறான்., போதாக்குறைக்கு இந்த அப்பார்ட்மெண்ட் வாங்குன கடன் வேற என் மகன் தலையிதான் இருக்கு "என்று மாமியார் சாடை மாடையாக பேசினாலும்
"அவ எதுக்கு நகை போட்டுட்டு வரணும்.. என் பொண்டாட்டிக்கு நான் செஞ்சு கொடுக்க மாட்டேனா, சும்மா வர்ற நேரம் போற நேரம் எல்லாம் என் பொண்டாட்டிய குறை சொல்லாதீங்க அம்மா என்று அரவிந்த் முடித்து விடுவான்..
இப்படிப்பட்ட புருஷனுக்கு நான் எந்த குறையும் வச்சிடக்கூடாது என்று சீத்தா தினமும் அவனுக்காக பார்த்து பார்த்து செய்வாள்
ராஜ விருந்து என்றால் அவன் டிபன் பாக்ஸில் இருக்கும் விருந்துதான் ...
பிரபல பேங்க் ஒன்றில் மேனேஜராக அரவிந்த் இருக்கிறான், மதிய சாப்பாடு சுடச்சுட தான் அவனுக்கு செல்லும்.. அதுவும் நான்கைந்து வெரைட்டி குறையாது .. வீட்டிற்கு வேலைக்கு ஆள் கிடையாது அவளேத்தான் செய்வாள்..தன் பிள்ளைகளுக்கு புருஷனுக்கு என்று பார்த்து பார்த்து செய்வதில் அவளை அடித்துக் கொள்ள இன்னொருத்தி பிறக்கத்தான் செய்ய வேண்டும்..அந்த அளவுக்கு நேர்த்தியான ஒரு குடும்பப் பெண்மணி சீதா லெட்சுமி...
பிள்ளைகள் புருஷனை வேலைக்கு அனுப்பி வைத்து விட்டு, அவர்கள் துணியை துவைத்து மாடியில் காய வைத்து, மதிய உணவை அவசர அவசரமாக செய்ய ஆரம்பித்தாள் சீதா..
இங்கிருந்து நடந்து போகும் தொலைவு தான் அவன் பேங்க் எனவே மதிய சாப்பாட்டை அவளே செய்து கொண்டு போய் வாசலில் கொடுத்துவிட்டால் போதும் ..
கிச்சனில் இனிமையான மெலடி பாடல்கள் ஓடிக்கொண்டிருந்தது ...பிள்ளைகள் இருந்தால் இப்படி காதல் பாடல் கூட கட் தான்.. பெண்ணை பெற்ற தாய் அல்லவா நேர்த்தியான நடத்தை கொண்டவள்
நம்மள பார்த்து பிள்ளைங்க சபல பட்டிர கூடாது என்று நினைப்பாள்..
காதல் சடுகுடு என்று அர்விந்துக்கு பிடித்த பாடல் தான் அவளுக்கும் பிடித்த பாடல் ...
அவளுடைய நினைவுகள் பல வருடங்களுக்கு முன்னால் ஓடியது.. காதலிக்கும் போது மிக கண்ணியமான காதலன்தான் அவள் கணவன்..
கண்ணை பார்த்து தான் பேசுவான், அதுதான் அவளை ஈர்த்தது... ஆனால் திருமணத்திற்கு பிறகு தான் ஐயோ சொன்னால் வெட்கக்கேடு ... ஐயாவுக்கு தினமும் விதவிதமாக உணவு மட்டுமல்ல படுக்கையிலேயும் விருந்து வேண்டும் என்ற அடம் பிடிப்பதில் வளர்ந்த குழந்தை தான்
ஐயோ, உங்களுக்கு அலுக்கவே செய்யாதா ராம் என்று இவள் அலுத்துக் கொள்வாள்
உன்ன தினம் தினம் இப்படி ரசிச்சு பார்க்கிறதுக்கு நானே ரெண்டு கண்ணு எக்ஸ்ட்ராவா கடவுள் கிட்ட கேட்டுட்டு இருக்கேன்... நீ என்னடி அலுத்துகிற.. உன்ன யாருடி இவ்வளவு அழகா பிறக்க சொன்னது... அவன் மோகம் ஆசை அவள் என்றால் கசக்கவா செய்யும்..
"மக்கும் நான் அவ்வளவு அழகா?? .. சற்று கர்வம் தான் கணவன் வாயால் புகழுரை கேட்கும் மனைவிக்கு ...
எனக்கு நீ அழகு தாண்டி என்று உதட்டுக்குள் உயிர் கொடுப்பானே...
ஆனால், இப்போது பிள்ளைகள் பிறந்த பிறகு நடக்கும் கூடலை விரல் விட்டு எண்ணி விடலாம் கல்லை கண்டால் நாயை காணல, நாயை கண்டால் கல்லை காணல போல ... ஆசை வரும் போது பிள்ளைகள் இருக்கும் பிள்ளைகள் இல்லாத நேரம் இவளுக்கு உடலில் உபாதை இருக்கும் ... அவன் ஏக்கமாக பார்க்கும் போது பாவமாகத்தான் இருக்கிறது.. என்ன செய்ய ?
சாப்பாட்டை எடுத்து கொண்டு பேங்க் போய் நின்றாள் ..
"வாங்க மேடம் சார் வந்ததும் கொடுத்துடுறேன் என்று கிளார்க் சாப்பாட்டை வாங்க
"சார் இல்லையா??" அரவிந்த் பைக் வாசலில் இல்லாததை பார்த்து கொண்டே சீதா கேட்க
"இல்லை மேடம் வெளியே போயிருக்கார்
'நேத்தும் அப்படிதான் சொன்னீங்க," அவர் திருதிருவென முழிக்க..
"கலெக்சன் போயிருக்கார் மேடம்
"கலெக்ஷனா அதுக்கு ஏன் இவர் போறார் ??"என யோசித்தாலும்... சரி அவர் வேலையை பத்தி நமக்கு என்ன தெரியும் என்று தலையில் தட்டி கொண்டு தன் வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்து விட்டாள்....
அரவிந்தோ பிரபல ஏசி ஹோட்டல் ஒன்றில் 22 வயது இளம் பெண்ணோடு உட்கார்ந்து தன் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தான்...
அவள் ஷில்பா அஸிட்டெண்ட் பேங்க் மேனேஜர்
"ஏன் சார் மேடம் சாப்பாடு கொண்டு வருவாங்களே இப்ப என் கூட உட்கார்ந்து சாப்பிடுறீங்க ,அது வீணா போகாதா ?என்றாள் நக்கலாக...
"வீணா தான் போகும் , வீட்டுக்கு போகும் போது குப்பையில கொட்டிட்டு போக வேண்டியது தான் ஷில்பா..என்று அரவிந்த் சிரிக்க
"ஏன் சார் அவங்களுக்கு அவ்வளவு பயமா ?
"ச்சே சே தேவையில்லாம வீட்டுல சண்டை வரும் .. எதுக்கு நிம்மதியை கெடுப்பானே அதான் ... என்று அரவிந்த் தலையை கோத ... ஷில்பா அவனை கண்கள் கிறங்க பார்த்தாள்....
"சீக்கரம் வா ஷில்பா யாராவது கண்டு என் பொண்டாட்டி கிட்ட போட்டு கொடுத்தா, என் சோலி முடிஞ்சு "என்று அரவிந்த் பைக்கில் தோரணையாக ஏறி அமர்ந்தாள் ஷில்பா .... அவனோ அவசரமாக ஹெல்மெட்டை போட்டு முகத்தை மறைத்து கொண்டான்...
மாலை வேலை முடிந்து கிளம்பும் போது அரவிந்த் தன் மனைவி செய்த உணவை குப்பை தொட்டியில் கொட்டி விட்டு.. போனை எடுத்தான்.. ஆசையாக வாட்சப் திறந்தான், அதிலிருந்து பல மெசேஜ்கள் வந்து ஹாட்டின் முத்த எமோஜியோடு விழுந்தது..
அது அவன் மனைவி இல்லை என்பது தான் பூகம்பம் உண்டாக்கும் விஷயம்...
"அரவிந்த் , உங்கள மிஸ் பண்ணவே தோணல .. மறுபடி எப்போ வருவீங்க .. உங்களுடைய டைட் ஹக் , கிஸ் அதோட நீங்க தந்த அந்த இனிமையான தருணங்கள் அதெல்லாம் என்னால மறக்கவே முடியல ... கண்ணை மூடினாலே உங்களோட வாசம் தான் என் முகத்துக்குள்ள அடிக்குது... எத்தனை தடவை நீங்க என்ன எடுத்துக்கிட்டாலும் , தினம் தினம் புதுசா இருக்கு .. ஐ மிஸ் யூ சோ மச் ,இச் இச் இச் என்று காதல் ஒழுக ஒழுக அந்த மெசேஜ்கள் அவன் கண்ணை பறிக்க.. ஆசையில் தலையை கோதினான்.. ஆழ முச்செடுத்தவன் அந்த சுகங்களை கண் மூடி அனுபவித்தான்.. கிர் கிர் என்று போன் அடிக்க பதறி போனை பார்க்க
மனைவி என்று விழுந்தது ... ஆசை அறுந்தது... இன்னொரு பக்கம் மனைவி பிள்ளைகள் என்று குற்ற உணர்ச்சி மேலோங்க.. அத்தனையும் அழித்து போனில் தவறுக்கு தடயம் இல்லாது ஆக்கிவிட்டு போனை எடுத்தான்..
ராம்
"சொல்லு சீதா
"கிளம்பிட்டீங்களா ?
"ம்ம் ஆல்மோஸ்ட் "
ஓஓஓ வரும் போது தோசை மாவு , அரைக்கிலோ சீனி வாங்கிட்டு வாங்க" என்றதும் சலிப்பாக முகத்தை சுளித்தான்..
ம்ம் சரி
"நைட் சாம்பார் வைக்கவா ராம்?
"எதையாவது வை ...
ஓகே என்று வைத்த மனைவி பேச்சில் தலையை தடவி கொண்டான்.. மீண்டும் வாட்சப் திறந்து ஆசையாக தன் கள்ளக்காதலிக்கு சில மெசேஜ்கள் அனுப்பி மனைவி கொடுத்த எரிச்சல் மனநிலையை உல்லாச மனநிலையாக கள்ள காதலியுடன் கொஞ்சி பெற்று கொண்டவன் , கேஸூவலாக தன் வீடு வந்து சேர்ந்தான் ....
அவன் மெய்யான வாழ்க்கையை தொலைத்து பொய்யை நாடி புதைகுழியில் விழுந்து, பல நாட்கள் ஆகிறது என தெரியாத மனைவியோ கணவனுக்காக சுடச்சுட பஜ்ஜூ சுட்டு கொண்டு நின்றாள்...
அவனை மெய் என்று நம்பி , பொய்யாக வாழ்கிறாளோ பேதை !!