தெள்ளழகே-9

தெள்ளழகே!-9
ராதா குழந்தையை யாரிடமும் கொடுக்காது போனது கிருஷ்ணனுக்கு வருத்தமும் கோபமும் வந்தது. அதைவிட மணிகண்டன் பேசியதைக் கேட்டதும் எது யதார்த்தமான தாம்பத்யம் என்று புரிந்தது.
ஆனாலும் தனது பெற்றோரை அவள் இப்போதுவரைக்கும் மதிக்காதுபோனது கடுப்பாகி வெளியே வந்தவன் மீண்டும் பால்கனியை எட்டிப்பார்த்தான். அவள் வரவேயில்லை.
ஒருமுறை தவறவிட்ட வாய்ப்புகள் மீண்டும் நம்மிடம் வாராது.அதுதான் வாழ்க்கை!
அதற்குள் பூங்கோதையும் ஆவுடையப்பனும் ”மச்சான் உங்கக்கிட்ட சொல்லாமல் இருக்கக்கூடாதுன்னு தான் சொல்லிட்டு அழைச்சுட்டுப் போகலாம்னு வந்திருக்கேன். நம்ம கிருஷ்ணனுக்கு சிவலிங்கத்தின் மகளைக் கல்யாணம் பேசியிருக்கோம்.திருவிழா முடிஞ்சதும் நிச்சயமும் அடுத்த வாரத்துலயே கல்யாணமும் வைச்சிருக்கோம் வந்திடுங்க.வேற சொல்லுறதுக்கு ஒன்னுமில்லை” என்று கைகூப்பினார்.
“அவரிடம் என்ன பேசமுடியும். ஏற்கனவே இருந்த பந்தத்தை மூன்று வருஷத்துக்கு முன்னாடியே அத்துவிட்டாச்சு. இப்போ அவன் அவனுக்கான புது வாழ்க்கையைத் தேடும்போது நம்ம குறுக்கால போகவாமுடியும். எல்லாத்தையும் மூடிட்டு சும்மாதான் இருக்கணும் என்று அமைதியாகிவிட்டனர்.
மணிகண்டனோ தங்கச்சி வாழ்க்கையைப் பத்தி எந்தக் கவலையும் படவேயில்லை.அவ வாழ்க்கையை அவளே வேண்டாம்னு வந்துட்டா நானும் அப்படி இருக்கணுமா என்ன?என் வாழ்க்கையை நான் சரியாக வாழ்றேன்.என் பொண்டாட்டி பிள்ளைங்களுக்கு நான்தான் இருக்கேன்.அவங்களுக்கு நான்தான் செய்யணும்.அக்கா தங்கை அண்ணன் தம்பிக்கெல்லாம் அவங்களுக்கு அப்புறம்தான் செய்வேன்” என்று தனது வாழ்க்கையில் தெளிவாக இருக்கிறான்.
இது சுயநலமில்லை.என் வாழ்க்கையை நான் வாழ்கிறேன் என்கின்ற தெளிவு அது!
அதனால் மாமனார் மாமியாரோடு மனைவி மக்கள் என்று அழைத்துக் கொண்டு அவர்களோடு சென்றுவிட்டான்.
செல்வத்தின் மனைவிதான் அவனிடம்போய்”நீங்களும் இருக்கீங்களே உங்க அண்ணன்தான் குடும்பத்தை அப்படி தாங்குறாரு.நீங்க என்னை மதிக்கிறதே இல்லை”
“மதிக்கிறதேயில்லையா? தூக்கிப்போட்டு மிதிச்சிருவேன். உன்னைக் காதலிச்சுட்டு அது வீட்டுக்குத் தெரியாமல் காப்பாத்தி சொந்தக்காரின்னால எப்படியோ கல்யாணம் பண்ணிக்கிட்டேன். உங்க வீட்டுல இருந்து அப்படி என்னத்தை எனக்குன்னு செய்துட்டாங்க பெருசா பேசுறாபாரு.அண்ணி வீட்டுல இருந்து இன்னும் வந்திட்டிருக்கு அதனால் எங்கண்ணன் அந்தப்பக்கம் சாய்கிறான். ராதா அவளுக்கு அவ்வளவு சொத்தும் பணமும் இருந்தும் வேண்டாம்னு வந்திருக்கான்னா காரணம் இருக்கும்.அதுக்காக அவள் செய்கிறதையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்க முடியாதுன்னுதான் கண்டிக்கிறோம் புரியுதா. உன் இடத்துல நீ நில்லுபோதும்”என்று மண்டையில உரைக்கிற மாதிரி சொல்லிட்டான்.
“க்கும் ஆன்னா ஊன்னா என்கிட்டயே எகிறுங்க” என்றுவிட்டுப் போய்விட்டாள்.
தனது மகளைத் தூக்கிக்கொண்டு போன ராதா உடைந்து அழுதாள். எத்தனைக் காதலோடு வாழவந்தேன்.
ஆனால் தொட்டதுக்கெல்லாம் சண்டை அம்மா சொன்னா சண்டை அக்காங்க சொன்னா சண்டைன்னு நரகமாக இருந்துச்சு வாழ்க்கை. அந்த வாழ்க்கையையும் அந்த வீட்டாளுங்களையும் நினைச்சாலே வலிக்குது என்று ஏங்கி ஏங்கி அழுதாள்.
பாவம் அவள் அழுவதைப் பார்த்து மகளும் அழுதாள்.வெளியே சத்தம் கேட்டு தாமரைக் கதவைத் தட்டிக்கொண்டு நின்றார்.
நெடுநேரம் கதவைத்தட்டியும் திறக்காமல் இருந்தாள்.உடனே சத்தம் கேட்டு நல்லத்தம்பியும் ஓடிவந்து கதவைத் தட்டினார்.
அதற்குள் வெளியே சென்ற மைதிலியும் மணிகண்டனும் வந்துவிட்டனர்.
அவர்களும் வந்துக் கதவைத் தட்ட யாருக்குமே ராதா செவி சாய்க்கவில்லை. இங்க வரக்கூடாதுன்னு நினைச்சவளை கட்டாயப்படுத்தி கூட்டிட்டு வந்ததும் இல்லாமல் யாரு முகத்தலயே வாழ்நாள் எல்லாம் முழிக்ககூடாதுன்னு இருந்தனோ அவனையும் அவன் அம்மா அப்பான்னு எல்லோரையும் பார்க்க வைச்சுட்டாங்களே என்று வேதனையில் அழுதாள்.
இன்னும் அவளால் அதைத்தாங்கிக்க முடியவில்லை என்பதையும் தாண்டி மறுபடியும் அவனைப் பார்த்ததில் அந்தக் காதலித்தக் காலங்கள் வாழ்ந்த காலங்கள் என்று எல்லாம் வந்து ஏன்டா நம்மெல்லாம் வாழுறோம் என்கின்ற உணர்வைக் கொடுத்தது.
இதுக்கு பேசாமல் செத்துப்போயிருக்கலாம் என்று தோன்றியது.அதனால் வந்த வேதனையை மோகன் வந்துப் பொண்ணுக்கேட்டதும் ஆளாளுக்கு வீட்டில் பேசியபேச்சுக்கள் என்று எல்லாமே இப்போதான் அதிகமாக வலித்தது.அதனால் அப்படியே அழுதுக்கொண்டிருந்தவள் கதவைத் திறக்கவேயில்லை.
அதில் எல்லோரும் பயந்துக் கதவைத் தட்டித்திறக்க முயன்றனர்.
“இங்கு வந்தவுடனே இவள் இப்படிப் பண்ணுவான்னு நினைக்கலையே!ஸஊர்ல உள்ளவனுங்களுக்குத் தெரிந்தால் என்னவாகும். சும்மாவே வாழவெட்டின்னு பேசிட்டிருக்கானுங்க. இப்போ இப்படின்னா காறித் துப்ப மாட்டானுங்களா?” என்று தாமரை அழுது புலம்பிக்கொண்டிருந்தார்.
“தள்ளிப்போ உனக்கு உன் கவலை.அவளுக்கு எதுவும் ஆகிருக்கக்கூடாதுன்னு நாங்க பதறிட்டிருக்கோம்” என்று சத்தம்போட்டு கதவைத் திறக்க முயன்றுக்கொண்டிருந்தனர்.
அதற்குள் மைதிலி இங்கு நடப்பதை போன்பண்ணி தனது தம்பிக்கு சொல்லிவிட்டாள்.அம்மா அப்பாவுக்கும்தான் சொன்னாள்.
பூங்கோதையோ அவள் செத்தா சாகட்டும் என் பையனாவது இரண்டாவது கல்யாணத்துலயாவது நல்லாயிருப்பான் என்று சொல்லி போனை வைத்துவிட்டார். மைதிலிக்கு ஒரு மாதிரியாகிவிட்டது. அம்மா ரொம்ப ராதாவைக் கொடுமைப் படுத்திருக்குமோன்னு யோசித்தாள்.
அதற்குள் கிருஷ்ணன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு பறந்துவந்துவிட்டான்.
அவன் ராதாவைப் பார்த்ததிலிருந்து ஒரு மாதிரியாகவே உணர்ந்தான்.
அதுவும் மைதிலியும் மணிகண்டனும் பேசியதிலிருந்தே தனது தப்பையும் கொஞ்சம் உண்ர்ந்திருந்தான்.அதற்குள் மைதிலி ராதா ரூமுக்குள்ள போயி கதவைப் பூட்டிக்கிட்டு திறக்கமால் இருக்கிறாள் என்றதும் பதறி ஓடிவந்தான்.
அவன் வந்ததும் கதவை மிதித்து பெரிய சோபவை இழுத்து கதவில் வைத்து தள்ளி இரண்டு நிமிடத்திலயே கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே ஓடினான்.
வெண்ணிலா மட்டும் கட்டிலிலிருந்து அழுதுகொண்டிருந்தாள். ராதாவைக் காணவில்லை.எங்கே என்று தேடிப்பார்த்தான் கட்டிலின் அந்தப்பக்கம் மயங்கிகிடந்தாள்.
அவ்வளவுதான் ஓடிப்போய் தூக்கியவன் யாரையும் எதிர்பார்க்காது காரில் போட்டு பக்கத்துல இருக்கும் ஹாஸ்பிட்டலில் கொண்டு சேர்த்தான்.
ஒருமாதிரியாக உணர்ந்தான். ஏன் மயங்கினாள்?ஒருவேளை சாகணும்னு மருத்துக்கிருந்துக் குடிச்சிட்டாளோ? என்று சந்தகேப்பட்டவன் டாக்டரிடமும் கேட்டான்.
அவர்கள் என்னவென்று பரிசோதிக்கிறோம்னு அவளை செக் பண்ணிட்டிருந்தாங்க.
அதற்குள் வீட்டில் உள்ளவர்களும் வந்துவிட்டனர்.
தாமரை அங்கேயும் வந்து வாயை வைச்சுக்கிட்டு சும்மா இல்லாமல் ”பேசாமல் நம்மளை இப்படிக் கேவலப்படுத்திறதுக்கு செத்துப்போகட்டும்”என்று சொல்லி அழுதார்.
செல்வம்தான் சத்தம்போட்டான் “என்னம்மா நீ எப்போ பாரு அவளைக் கரிச்சுக் கொட்டிக்கிட்டே இருக்க.உனக்கு என்னதான் பிரச்சனை?அவதான் வாழ்க்கையே வேண்டாம்னு விவாகரத்து வாங்கிட்டு வந்துட்டாள்ல.விடு இனி என்ன அவளை அவா பார்த்துக்கட்டும். இவ்வளவு தூரம் வந்தாச்சு. சாகுறளவுக்கு வந்துட்டான்னா விடு. அவளுக்கு எப்படி வாழணும்னு தோணுதோ வாழட்டும்”
“இதுக்காகவா அவளை இவ்வளவு படிக்க வைச்சு கட்டிக்குடுத்தோம். இப்படி வாழமால் பிள்ளையோடு வந்துட்டாளே. அதே வீட்டிலிருந்து வந்த மைதிலி நம்ம மணிகண்டனோடு சந்தோசமாகத்தானே வாழ்ந்திட்டிருக்கா. அப்போ இவளுக்கு மட்டும் என்னவாம்?”
“மைதிலிக்கு உன் மகன் மாதிரி தலையாட்டுற மாப்பிள்ளை கிடைச்சிருக்காருல்ல. அவனுக்கு அவன் பொண்டாட்டித்தான் உலகம்னு மாத்தி வைச்சிருக்காங்க .உன் மகளுக்கு அப்படி சாமார்த்தியம் இல்லையா இருக்கும். விடு அவங்க மகளையும் மகனையும் அவங்களுக்குத்தக்க வளர்த்திருக்காங்க நீ அனுசரிச்சுட்டு போறமாதிரில வளர்த்திருக்க. இந்த நிக்கிறாரே உன் பழைய மருமகன் அவங்க அம்மா அப்பா அக்காங்கன்னு எல்லோருடைய பேச்சையும் கேட்பாரு.ஆனால் பொண்டாட்டியை மட்டும் நாயாகூட மதிக்கமாட்டாரு. ஆனா இதே உன் மகன் கூடப்பிறந்த தங்கச்சி வாழ்க்கையைப் பத்திக்கூட யோசிக்காமல் பொண்டாட்டியோட தம்பிக்காக வருத்தப்படுறாரு.அப்புறம் எப்படி வாழுவா?”என்று இருந்தக்கடுப்பில் எகிறிவிட்டான்.
அதைக்கேட்ட மைதிலி “என்ன கொழுந்தனாரே வாய் ரொம்ப ஓவரா நீளுது.பார்த்துப் பேசுங்க.என்னைய ஒரண்டை இழுக்கிற வேலையெல்லாம் இங்க வேண்டாம்”என்று கோபத்தில் கத்தினாள்.
அதைப்பார்த்த செல்வம் “என்ன கிருஷ்ணன் இதேமாதிரி என் தங்கச்சி உங்க வீட்டுல உரிமையா உங்க அக்காவையோ சொந்தங்களையோ பேசமுடியுமா? என் தங்கச்சியோட பல்லை உடைச்சிட்டுத்தானே மறுவேலைப பார்ப்பீங்க. ஆனா எங்கண்ணனைப் பாருங்க அவரு பொண்டாட்டி உங்க அக்காவை சமாதானப்படுத்திட்டிருக்காரு. ஏன்னா பொண்டாட்டித்தான் வாழ்க்கைன்னு புரிஞ்சு வைச்சிக்கிட்டான்” என்று வேண்டுமென்றேதான் பேசினான்.
தனது தங்கைக்கு இந்த நிலைவரக்காரணமே அவன்தானே! என்ன ஆதங்கம் பலநாட்களாக இருந்தது.அதை இப்போது கொட்டிவிட்டான்.
அதைக்கேட்டு மைதிலி ஏதோ பேசவந்தாள்.அதற்குள் கிருஷ்ணன் கொஞ்சம் சும்மா இருக்கியா மைதிலி என்று அவளது வாயை அடைத்துவிட்டான்.
இன்னும் ராதா அவனது தாலியைக் கழட்டாமலே போட்டிருக்கிறாள். விவாகரத்து கிடைத்தபோது அவனும் அந்த் தாலியைத் திருப்பிக் கேட்கவில்லை.அவளும் அதைக் கழட்டிக்கொடுக்கவில்லை.
இவ்வளவு நாள் கழித்துதான் அவளை நெருக்கமாகப் பார்க்கிறான் அவன் கட்டின தாலி அப்டியே அவள் கழுத்தில் கிடந்தது.இப்போது மகளைத் திரும்பிப் பார்த்தான்.
வெண்ணிலா பாவம்போல அழுது அழுது நல்லதம்பியின் தோளில் சாய்ந்துத் தூங்கிவிட்டாள்.
ஒருவேளை ராதாவுக்கு ஏதாவதை ஆகிவிட்டால் என்ன செய்கிறது? என்று முதன்முறையாக அவளுக்காக யோசித்தான்.
அங்கே பாவமாகப்படுத்திருந்த மகளைப் பார்த்ததும் அப்படியே மொத்தமும் ஆடிப்போய்விட்டது. இந்த மூன்று வருடத்திலும் அவளைக் கொஞ்சியது தூக்கியது என்று எதுவுமே இல்லை.
அவள் பிறந்திலிருந்தே பிரச்சனை அம்மா ராதா சண்டை, அக்கா ராதாவுக்கு சண்டையென்று மொத்தமாக ராதாவோடு நெருங்கிப் பேசக்கூட இல்லை. மகளைக் கையால் தூக்கியதுக்கூட இல்லை என்று யோசித்தவனுக்கு உண்மையாகவே நான் ராதாவைக் காதலித்தேனா? என்ற கேள்வித் தொக்கி நின்றது.
அவள் அழகாக இருக்கிறாள் சொந்தக்காரியாக இருக்கிறாள் என்று பிடித்துப்போனதும் அதைக் காதல் என்று நானே நினைத்துக்கொண்டேனோ? என்று மூன்று வருடம் கழித்து குழம்பினான்.
மெதுவாக தூங்கும் வெண்ணிலாவை தனது கையில் எடுத்தான்.அவள் தூக்கத்தில் அவனது தோளில் சாயவும் சட்டென்று கண்கலங்கியவன் யாருக்குமே தெரியாது திரும்பிக்கொண்டான்.
அதற்குள் டாக்டர்ஸ் வந்து அவங்க மருந்து எதுவும் குடிக்கலை ரொம்ப ஸ்ட்ரெஸ்ஸ இருக்காங்க. இரண்டுமூணுநாள் சாப்பிடாமல் வேற இருந்திருக்காங்க அதனால் மயங்கிட்டாங்க.எப்படியும் ஒரு இரண்டுநாள் இங்கிருக்கணும். ஸ்ட்ரெஸ் குறைஞ்சா வீட்டுக்கு உடனே விட்றுவோம்”என்று பில் கட்ட சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
கிருஷ்ணன் பில்கட்டப் போகவும் அதற்கு முன்பே நல்லதம்பி கட்டிவிட்டார்.
‘ஆமால்ல இதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? அவராவது அவங்கப்பா என்கின்ற உரிமையில் கட்டுவாரு. நான் என்ன முன்னாள் கணவன்னு உரிமையா எடுத்துக்கமுடியும்?” என்று கடுப்பானவன் அங்கிருந்துக் குழந்தையோடு வெளியே வந்தான்.
உடனே தாமரை ஓடிப்போய் மாப்ள மாப்ள பிள்ளையைக் குடுத்துட்டுப்போங்க என்று வாங்கப்போனார்.
ஏற்கனவே எதுக்கு கோபப்படுறோம் ஏன் கடுப்பாகிறோம் என்று தெரியாமலே இருந்தவன் தாமரை வந்து குழந்தையைக் கேட்டதும் “இது என் குழந்தைதானே?”
“என்ன மாப்ள இப்படிக் கேட்கிறீங்க?”என்று கோபத்திலும் பாவமாகக் கேட்டார்.
“அப்போ எதுக்கு கேட்கிறீங்க.என் குழந்தையை நான் வைச்சிக்கிறேன். அவளை எப்படிப் பார்த்துக்கணும்னு தெரியும்” என்றவன் டிரைவருக்கு போன் பண்ணி அவங்க வீட்டுக்காரை எடுத்துக்கொண்டு வரச்சொன்னான்.
டிரைவர் வருவதற்குள் ராதாவைப் பாரக்கலாமா என்று மனதில் தோன்றியது.ஆனால் தன்னைத்தானே கட்டுப்படுத்திக்கொண்டான்.
“வேண்டாம் முடிஞ்சுப்போனது முடிஞ்சுப்போனதாகவே இருக்கட்டும்.குழந்தையை மட்டும் நம்ம வளர்க்கலாம் இனி. அவளுக்கு வேற வாழ்க்கை வந்துச்சுன்னா வாழட்டும்” என்று விட்டேத்தியாக நினைத்துக்கொண்டு மகளைத் தன்னோடை தனது வீட்டிற்கு தூக்கிச்சென்றான்.
முதன்முறையாக தன் மகளை தன் வீட்டிற்குள் கொண்டு செல்லும்போது அப்படியொரு பரவசத்தை உணர்ந்தான்.
அவளைக் கட்டிலில் போட்டு அழகாக தலையணையைக் கொண்டு பாதுகாப்பாக உருளாது வைத்தவன் அவளையே பார்த்திருந்தான்.
காதலிக்கும்போது மனைவி குழந்தையென்று யோசித்து கற்பனை செய்தவனுக்கு அதே குழந்தைக்கிடைத்தும் சந்தோசமாக வாழமுடியாமல் போயிட்டுதே!என்ற குற்றவுணர்ச்சி மேலங்கி அவனை வேதனையில் ஆழ்த்தியது.