பொய்யில் ஒரு மெய் 3

Poi3

பொய்யில் ஒரு மெய் 3

3 பொய்யில் ஒரு மெய் !!

இது ராமோட பைக் ஆச்சே, இங்கே ஏன் நிக்குது?.. அடுத்த நாள் மதியம் குழந்தைகளுக்கு பள்ளிக்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கிக் கொண்டு நின்ற சீதா, ஒரு உயர்தர ரெஸ்டாரண்ட் ஒன்றில் ராம் என் வண்டியை பார்த்து யோசனையாக நின்றாள்..

அவன் வண்டியில் பின்னால் ராம் சீதா என்று எழுதி இருக்கும் ..

"ஏங்க அவனவன் கல்யாணம் பண்ணுனதை மறைச்சி வைப்பாங்க, நீங்க என்னன்னா கொட்டை எழுத்தில் இரண்டு பேர் பேரையும் சேர்த்தே எழுதி வைக்கிறீங்களே?? என்று அவள் கிண்டல் அடிக்க

"இந்த ராம் முழுக்க சீதாவுக்கு தான் சொந்தம்னு ஊருக்கு தெரியணும்ல....

"ஓஓஓ

"ம்ம் அதே மாதிரி இந்த சீதாவும் இந்த ராமுக்கு மட்டும் தான் சொந்தம்... 

"ம்க்கும் அய்யா நல்லவர் தான் ..என்று கழுத்தில் அவன் கடித்த காயத்தை காட்ட 

"ரொம்ப நல்லவன்டி அதான் உன் கழுத்தை மட்டும் கடிக்கிறேன் 

நம்பிட்டேன்,  

உண்மைடி, கல்யாணம் முடிஞ்சாச்சு இரண்டு குழந்தையும் வந்தாச்சு... இதுக்கு மேல வேற பொண்ண சைட் அடிச்சு நான் என்ன பண்ண போறேன் சொல்லு.. 

"ஓ அந்த அளவுக்கு ஐயாவுக்கு என் மேல காதலா என்ன??அவன் காதலில் எப்போதும் அவள் கர்வம் கொள்வாள்.. 

"பின்ன காதலிக்காமலா, என் குடும்பத்தை எல்லாம் எதிர்த்து உன்ன கல்யாணம் கட்டிகிட்டேன்" என்ற கணவன் முதுகோடு கட்டி அணைத்துக்கொண்ட சீதாவுக்கு, இன்னும் அவர்கள் திருமணம் நடந்தது உண்மைதானா என்பதை நம்பவே முடியவில்லை..

பின்னே வேறு வேறு ஜாதி, வேறு வேறு மதம் அவனை கல்யாணம் கட்டிக் கொண்டால் குடும்பத்தோடு செத்து விடுவோம் என்றார்கள் இப்பக்கம், அந்த பெண்ணை கல்யாணம் கட்டிக் கொண்டால் வீட்டில் ஒரு நயா பைசா தரமாட்டோம் என்று மிரட்டினார்கள் அவன் பக்கம் ....

ஆனால் , அவனோ எனக்கு காசு பணம் தேவையில்லை ... சொத்து பத்து வேண்டாம் என்னை நம்பி காதலித்த அவளை கடைசி வரை விடவே மாட்டேன் என்று சொல்லி அவளை கல்யாணம் கட்டியே தீருவேன் என சீதாவின் வீட்டில் வந்து உட்கார்ந்து, அவள் தாய் தகப்பனிடம் திட்டையும் எச்சையும் வாங்கி சம்மதம் வாங்கினான்..

வேலையில்ல, அவளும் படிப்பு முடிக்கல என்னத்த வாழ்ந்து கிழிச்சிட போறீங்க என்று அத்தனை பேரும் சாபம் விட்டாலும்

பரவாயில்லை அவளுக்கு நான், எனக்கு அவள்னு வாழ்ந்து கொள்வோம் என்று துணிந்து இருவரும் மாலை மாற்றிக் கொண்டனர்

அதன் பிறகு தான் அரவிந்த் கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படிக்க ஆரம்பித்தான் ...இரண்டு வருடம் எத்தனை வலி , வேதனை... அவன் வீட்டை விட்டு விரட்டி விட்டார்கள், சீதாவை அழைத்து கொண்டு நாடோடி போல திரிந்தான்..

சாப்பாட்டிற்கு கூட பஞ்சம் , ஒரே ஒரு அறை கொண்ட வீட்டில் இருவரும் தங்கிக் கொண்டு அவன் லைப்ரரி ஒன்றில் பார்ட் டைமாக வேலை பார்த்து , காலையில் கவர்மெண்ட் எக்ஸாமுக்கு படித்து , இவளையும் காலேஜில் மீதி படிப்பை தொடர வைத்தான்..

நம்மை பார்த்து சிரித்த உறவுகள் முன்னால் வாழ்ந்து காட்டி விட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக, கடினப்பட்டு பல வலிகளை தாண்டி கவர்மெண்ட் பேங்கில் வேலை கிடைக்கும் பொழுது.. அவர்கள் பட்ட சந்தோஷத்தை விட அப்பாடி இனிமே வலி இல்லாத ஒரு வாழ்க்கை வாழலாம் என்று இருவரும் பெருமூச்சு விட்டதுதான் இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது...

ஆனால், அத்தனை வலியிலும் இருவரும் ஒரு நாள் கூட காதலித்து கல்யாணம் கட்டிக்கிட்டியே உன்னால என்ன நிம்மதியா வைக்க முடிந்ததா?? மூன்று வேளை ஒழுங்கா சாப்பாடு போட முடிஞ்சுதா, என்று அவளும் கேட்டதில்லை, இவனும் தன் கோபத்தை, கஷ்டத்தை அவளிடம் காட்டியது கிடையாது... காரணம் இருவருக்கும் இருந்த அழகான காதல் பரஸ்பரம் , அன்பு , உனக்கு வலிக்குதா நான் ஆறுதல் தரேன்.. எனக்கு வலிக்குதா உன்கிட்ட வரேன் நீ எனக்கு அன்ப கொடு போதும் என்று அன்பை கொடுத்து அன்பை எடுத்து அழகான ஒரு வாழ்க்கை... அந்த அழகான வாழ்க்கைக்கு அர்த்தம் கொடுக்க இரண்டு குழந்தைகள் பரிபூரணம் என்ற வார்த்தையின் அர்த்தத்தை அவர்கள் வாழ்க்கை இன்றுவரை காட்டிக் கொண்டுதான் இருக்கிறது...

காலத்தின் மாற்றம் சில முகங்களை மட்டும் அல்ல

சில மனங்களையும் மாற்றித்தான் விடுகிறது..

"ஏதாவது வேலை விஷயமா இங்க வந்திருப்பாரோ ஆமா இங்க அவருக்கு என்ன வேலை ??அதுவும் ரெஸ்டாரண்டில, சரி போய் பார்ப்போம் ,யாராவது கூட இருந்தா , அப்படியே திரும்பி வந்துடுவோம், என்று நினைத்த சீதாலட்சுமி தன் கணவனை பார்ப்பதற்காக அந்த ரெஸ்டாரன்ட் உள்ளே போக கண்களை சுழல விட்டாள்.. 

ஒரு தனி அறை கதவு லேசாக திறந்து கிடந்தது உள்ளிருந்து ராமின் சிரிப்பு சத்தம் வந்து கொண்டிருக்க 

ஏதோ க்ளைண்ட் போல என்று நகர போனவள் காதில் பெண்ணின் சிரிப்பு சத்தமும் ராமின் சிரிப்பை தொடர்ந்து வர.. சீதா கண்ணை சுருக்கி அங்கேயே நின்றவள்.. வெயிட்டர் அந்த அறை கதவை தள்ளவும் ... எதிர் எதிர் இருக்கையில் அமர்ந்து உணவை சாப்பிட்டு கொண்டு இருந்த ராமையும் ஷில்பாவையும் கண் எதிரே வெட்ட வெளிச்சத்தில் கண்டாள்... 

இந்த பொண்ணு?? என நினைவு அடுக்கில் தேடினாள்.. பார்டி ஒன்றில் ராம் அவளை அறிமுகம் செய்து வைத்ததும் அதன் பின் நடந்ததும் நியாபகம் 

வந்தது 

"சீதா இது அஸிட்டெண்ட் மேனேஜர் ஷில்பா ... 

"வணக்கம் என்று சீதா கும்பிட..

"ஹாய் அக்கா என்று சிரித்த ஷில்பா 

அரவிந்த் சார் உங்ககிட்ட ஒரு டவுட் ..

"என்ன ஷில்பா 

"இல்லை நீங்க ரொம்ப யேங்கா இருக்கீங்க மேடம் வயசான போல இருக்கே" மெதுவாக கேட்டாலும் அது சீதாவுக்கு கேட்கத்தான் செய்தது., இது போல பல விமர்சனம் கேட்ட காது தான்... 

"உன்ன மாதிரி கண்ணுக்கு திரெட்டிங் பண்ணினா என் சம்பளம் பத்தாதுன்னு, என் பொண்டாட்டிக்கு தெரியும் "

"ஓஓஓ அப்போ நான் மேக்கப்ல தான் அழகா இருக்கேன்னு சொல்றீங்க "

"என் பொண்டாட்டிக்கு அது தெரியாதுன்னு சொன்னேன்மா , அதுக்குள்ள வரிஞ்சி கட்டிட்டு சண்டைக்கு வராத "என்று இருவரும் சிரிக்க... சீதா அருகே வந்து நின்ற இன்னொரு பெண்ணோ 

"மேடம்,அந்த பொண்ணு கேரக்டர் சரியே கிடையாது சாரை பார்த்து பழக சொல்லுங்க" என்று போட்டு கொடுத்துவிட்டு போக .. சீதாவுக்குமே அவள் பேச்சு, நடத்தை எதுவும் பிடிக்கவில்லை .. ஆண்களிடம் எட்டி நின்று பேசுவது தான் தமிழ் பெண்களின் மரபு!! இவள் ஒட்டி ஒட்டி நின்று பேசுவதும், உரிமை எடுத்து கொள்வதும் ... அதுவும் அரவிந்திடம் சற்று அதீத ஒட்டுதலோடு இருப்பது முகத்தை சுளிக்க செய்தது.. இருந்தாலும் ராம் எல்லாரையும் ஒரு எல்லையில் நிப்பாட்டி விடுவான் என்ற நம்பிக்கையில் அதை அப்படியே விட்டு விட்டாள்.... விட்டிருக்க கூடாதோ பிள்ளைகள் என்ன செய்கின்றனர் என கண் கொத்தி பாம்பாக இருக்கும் பெற்றவர்கள், ஏனோ தன் இணை என்ன செய்கிறான் (ள்) என பார்க்க தவறி விடுகின்றனர்.. 

"இந்த பொண்ணு கூட இவர் இங்க வர காரணம் என்ன? அதுவும் தனியா உட்கார்ந்து சாப்பிடுற அளவு இங்க என்ன நடக்குது" என்று நினைத்தாலும் கண் என்னவோ இருவரையும் தான் பார்த்தது 

"சார் இந்த சிக்கன் எடுத்துக்கோங்க இது ஸ்பைசியா இருக்கு" என்று ஷில்பா உரிமையாக ராம் தட்டில் பரிமாற சீதாவுக்கு கெதக் என்று இருந்தது 

"ராம் குட்டிக்கு சிக்கன் ,மட்டன் கொடுத்தா ஒத்துக்கல ... நாமளும் சிக்கனை நிறுத்திடுவோமா என்று சீதா கேட்க... ராம் உடனே சரி என்று தலையாட்டினான்... அன்றிலிருந்து வீட்டுக்குள் சிக்கன் மட்டன் வரவே செய்யாது ... தினமும் காய்கறிகள் தான் அவன் வெளியே சிக்கன் சாப்பிடுவான் என்பதே இன்று தான் அவன் மனைவி பார்கிறாள்.. 

தியாகம் அவனாக செய்ய வேண்டும் , நாமாக செய்ய வைப்பது எப்படி தியாகமாக மாறும், அது வற்புறுத்தல் அல்லவா!! 

சரி , பேங்க்ல ஒன்னா வேலை பார்கிறார்கள் எல்லாத்துக்கும் குறை பேச முடியுமா ??வீட்டுக்கு வந்த பிறகு என்ன ஏதுன்னு கேட்டுப்போம்.. அந்த பொண்ணு கூட அதிகமா பேச்சு வார்த்தை வைக்காதீங்கன்னு சொல்லிடுவோம் என்று அவள் யோசித்து கொண்டே வீடு வந்து சேர்ந்தாள்...

சந்தேகம் என்பது ஒரு துளி விஷம் போல உணவில் விழுந்த நஞ்சு உணவை கெடுக்கும், உறவில் விழுந்த நஞ்சு உறவை கெடுக்கும்.. இந்த விஷம் எதை கெடுக்குமோ?? 

சீதாவுக்கு மனம் எங்கேயும் போக மறுத்தது .. இருவரும் பேசி சிரித்த நிகழ்வே கண் முன் வந்து வந்து போக .... 

ச்சை எத்தனை நிலை கடந்து வந்தேன் ... அப்ப எல்லாம் அவரை சந்தேக பட்டேனா ,என்று தலையில் அடித்து கொண்டாள்... இரண்டாவது மகன் உண்டான நாளில் இருந்து.. உடல் உபாதை பத்து மாதமும் அரவிந்தை அருகே விடவே இல்லை அவனும் ஆசை இருந்தாலும் ...

"விடு சீதா நீதான் முக்கியம் , என்று தாய் தகப்பன் நின்று செய்ய வேண்டிய பிரசவ கவனிப்புகளை கூட, அவனே நின்று பார்த்து கொள்வான்... அப்படி ஒருத்தனை போய் சந்தேக படுறியே, அறிவு இருக்கா , நீ சந்தேக படுறேன்னு தெரிஞ்சாவே உன் புருசன் செத்து போவான்டி "என்று அவனை சுமக்கும் இதயம் குரல் கொடுக்க 

"ஆமா ஆமா இது என்ன பொல்லாத சிந்தனை இனிமே இதை யோசிக்க கூடாது என்று நினைத்து முடிக்க வில்லை... அதுக்குள் அவள் போன் அதிர வாட்சப்பில் புதிய நம்பரில் இருந்து மெசேஜ்.... வரிசையாக ஏதோ போட்டோக்கள் வந்து விழ... சீதா யோசனையாக அதை டவுன்லோட் செய்ய.. கண்கள் பொய் சொன்னதா மெய் சொன்னதா??

ஆம்!! அவள் கணவன் அரவிந்தும் அந்த ஷில்பாவும் பைக்கில் ஜோடியாக காதலர்கள் போல செல்வதை போட்டோவாக யாரோ அனுப்பி இருந்தனர் ...அது இன்றைய போட்டோவும் இல்லை .... இன்று ராம் கருப்பு சட்டை போட்டிருந்தான் ... ஆனால் இதில் பச்சை நிற சட்டை, அப்பெண் சுடிதாரில் இருந்தாள்...

ஏதோ என்னால் முடிந்த உதவி இப்படிக்கு உன் நலம் விரும்பி என்று முடித்திருக்க... சீதா போட்டோவை வெறித்து பார்த்து கொண்டு நின்றாள் ...

பல நேரம் பொய் மெய் ஆகலாம் !!

மெய் என்று நினைப்பது பொய்யும் ஆகலாம் !!