பொய்6

Poi6

பொய்6

6 பொய்யில் ஒரு மெய் !! 

சரியாக ஒரு மாதம் கழித்து ,

அன்றோடு அந்த விஷயத்தை விட்டுவிட்டு இருவரும் சகஜ நிலைக்கும் திரும்பி விட்டார்கள்.. 

சீதா மதிய சமையலை செய்து கொண்டிருக்க அவள் போன் அடிக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்தவள் ..

யாரிது புது நம்பரா இருக்கு? என யோசித்தவள் எடுத்து காதில் வைக்க..

ஹலோ "

"ஹலோ யாருங்க பேசுறது 

"ஹலோ ஹலோ பேசுறது கேட்குதா என்று சீதா கத்த 

"ம்ம் கேட்குது நான் உங்க நலம் விரும்பி பேசுறேன்" என்ற பெண்ணின் குரலில் சீதா யோசனையாக கண்களை சுழட்டி அந்த போட்டோ அனுப்பிய நம்பர் பார்க்க.. அதுவும் இதுவும் ஒன்று இதயம் ஏனோ தாறுமாறாக அடிக்க நெஞ்சை பிடித்து கொண்ட சீதா 

"என்ன வேணும் யார் நீ ? எதுக்கு என் வீட்டுல குழப்பத்தை உண்டாக்க பார்க்கிற தேவையில்லாம போட்டோ அனுப்பி விட்டது நீதான ??

"ம்ம் நான்தான் ...ஆனா தேவையில்லாம இல்ல நீ கண்ணை முழிச்சிக்கணும்னு நல்ல எண்ணத்துல தான் அனுப்பினேன்..உங்க கூட கொஞ்சம் பேசலாமா சீதாலெட்சுமி... சீதா எச்சில் கூட்டி விழுங்கினாள்..

யாரோ தெரிந்தவள் தான் ,ஏன்? ஏன்? ஏன் ?பயம் பிடித்து கொண்டது ... 

"என்ன பேசணும், 

உங்க புருசனை பத்தி 

"என் புருசன பத்தி எனக்கு தெரியும் ..இன்னொரு வாட்டி இப்படி கண்டபடி போட்டோ அனுப்புறது பேசுறது, எல்லாம் வச்சிக்கிட்ட !. நான் பொல்லாதவள் ஆகிடுவேன்.. அஸ்திவாரம் ஆட்டம் கண்டு நின்றது அவளுக்கு தான் தெரியும்.. பயம்! பயம் !பயம் .... 

"உண்மைகள் சில நேரம் வலிக்கத்தான் செய்யும் சீத்தாலட்சுமி.. பட் உண்மையை தெரிஞ்சுக்காம பொய்யாக ஒரு வாழ்க்கை வாழலாம்னு யோசிச்சுட்டிங்க போல இருக்கு

"என்ன உண்மை ,எனக்கு எந்த உண்மையும் தெரிய வேண்டாம்

"உண்மை தெரிய வேண்டாமா, இல்ல தெரிஞ்சுக்க போற உண்மை உங்கள மொத்தமா உடைச்சிடுமேன்னு பயப்படுறீங்களா?

அதுவும் மெய்தான் எங்கே திருமண வாழ்வில் பிரளயம் வெடித்து விடுமோ!!? எரிமலையை அள்ளி தலையில் கொட்டி விடுவார்களோ, என்று பயம்... 

"பிராக்டிகலா சிந்தனை பண்ணுங்க சீதா லட்சுமி, இல்ல கெட்டுப் போக போறது உங்க வாழ்க்கையா தான் இருக்கும் ... 

 

"உங்க ஹஸ்பண்ட் பெயரிலமட்டும் தான் ராமன் ஆனா, அவர் நடவடிக்கை அப்படி கிடையாது..

 

"நான் எதுவும் தெரிஞ்சுக்க விரும்பல போன வையுங்க "பதறிய குரலில் போன் அவள் கையில் கிடு கிடுவென்று ஆடியது..

"சீதா உங்க குடும்பத்தை கெடுக்கிறது என்னோட நோக்கம் இல்ல , ஆனா உங்க குடும்பத்தை தக்க வச்சிக்கிறது ரொம்ப அவசியம் இல்லையா... இந்த உண்மைய இப்பவே சொன்னா ஒருவேளை உங்க குடும்பத்தை நீங்க காப்பாத்திக்கலாம்...

"என்ன சொல்ல வரீங்க 

"எஸ் உங்க ராம் இல்லீகல் அஃப்பயர் வச்சிருக்கார்..

"நோ நோ நோ நான் இதை நம்ப மாட்டேன் 

"ஹாஹா பட் நம்பிதான் ஆகணும் சீதா , பச்சையா சொல்லப்போனா இருபது வயசு பொண்ண வப்பாட்டியா வச்சிருக்கார்...

"இல்லை ஏஏஏஏஏஏ

"எஸ் , உங்களுக்கு தெரியாம அந்த பொண்ணு கூட வாழ்ந்துட்டு இருக்கார்..

"இல்ல இல்ல நான் நம்ப மாட்டேன்,யாரு என்ன சொன்னாலும் என் ராமை நான் நம்ப மாட்டேன்..

" நம்ப வேண்டாம் நான் கண்ணால பார்த்தத சொல்றேன் , நீங்க நம்புறதும் நம்பாததும் உங்க இஷ்டம் .. நானும் சார் வேலை பார்க்கிற அதே பேங்க்ல தான் வேலை பாத்துட்டு இருக்கேன்.... அவர் வச்சிருக்க அந்த பொண்ண ஷில்பாவும் எங்க பேங்க்ல தான் வேலை பார்த்துட்டு இருக்கா ... 

"ஷில்பாவா??

"ம்ம் , அவங்க ரெண்டு பேரும் அப்படி இப்படி இருக்கிறது எங்க பேங்க்ல எல்லாருக்கும் தெரியும், ஆனா யாரும் வாய தொறக்க மாட்டாங்க ... அது அவங்களுக்கு தேவையும் இல்லை .. எவன் குடும்பம் எப்படி போனா என்னன்னு எல்லாரும் கண்டும் காணாம அவங்க பாட்டுக்கு இருக்காங்க... பட் என்னால அப்படி இருக்க முடியல, ஒரு பொண்ணா எனக்கு உங்கள பாத்தா ரொம்ப பாவமா இருக்கு சீதா , அவர் உங்களை பச்சையா ஏமாத்திக்கிட்டு இருக்கார்... பட் நீங்க அது தெரியாம கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு அவருக்காக சாப்பாட்ட தூக்கிட்டு ஓடி வரும் போது... எனக்கு உங்கள பாத்தா கஷ்டமா இருக்கு சீதா லட்சுமி... அதனால்தான் எனக்கு தெரிஞ்ச இந்த உண்மைய எப்படியாவது உங்க காதுல போட்டுடணும்னு நினைச்சு, அந்த போட்டோவ உங்களுக்கு அனுப்பினேன்.. ஆனா அப்ப கூட நீங்க உங்க புருஷனை சந்தேகப்படல போல இருக்குது .... 

"அவங்க ரெண்டு பேர் உறவு எதுவரைக்கும் போய் இருக்குன்னு உங்களுக்கு தெரியுமா?? இப்பக்கம் நடுங்கிய உடலோடு சீதா நின்றாள்...

"அந்த ஷில்பா ஒருமுறை அபார்ட் பண்ணி இருக்கா,

ஹான்

"ம்ம் ராமோட குழந்தை தான் , இப்போ மறுபடியும் குழந்தை உண்டாகி இருக்காளாம், அத வெக்கமே இல்லாம என்கிட்ட சொல்றா... 

"யார் காரணம்னு கேட்டா , இதுக்கு காரணம் ராம்தான்..

"அவர் கல்யாணம் ஆனவர் அவனை நம்பி எப்படி குழந்தை வரைக்கும் போன 

"ப்ச் அவர் பொண்டாட்டிய டைவர்ஸ் பண்ணின பிறகு குழந்தை பெற்றுக்கலாம்னு சொல்லி இருக்கிறார் .... ஏற்கனே ஒரு தடவை அபார்ஷன் பண்ணிட்டேன்னு பயமே இல்லாம சொல்றா சீதா ..

கேட்டுக் கொண்டிருந்த சீதாவுக்கு மயக்கமே வருவது போல் இருந்தது .. இதெல்லாம் கனவாக இருக்குமா?? .. இல்ல நான் தூக்கத்தில் இருக்கிறேனா என்று சமாதானப்படுத்த நெஞ்சை தடவினாலும்.. எங்கோ கேட்கும் காய்கறி வியாபாரத்தின் சத்தமும் , ஆட்டோக்களின் ஹாரன் சத்தமும்.. இது நிஜம் என்று அவளுக்கு சொல்லிக் கொண்டே இருக்க ... கண்களில் இருந்து கண்ணீர் குடம் குடமாக கொட்ட ஆரம்பித்தது

சீதா இருக்கிங்களா ??அவள் விசும்பல் சத்தத்தில் சீதா இன்னும் லைனில் தான் இருக்கிறாள் என்று அறிந்த அப்பக்கம் 

"சாரி சீதாலட்சுமி ஷில்பாவ பத்தி எங்களுக்கு நல்லா தெரியும், உடும்பு போல சார புடிச்சுக்கிட்டா, சின்ன வயசு வேற .. சாருக்கு என்ன பிடிக்குமோ அதை மாதிரி கொடுத்து அவரை மொத்தமா மயக்கிட்டா கொஞ்சம் கவனமா இருங்க... இல்ல மொத்தமா உங்க வாழ்க்கைய அபகரிச்சு எடுத்துட்டு போய்டுவா.. சீதா தொண்டையை செருமி கொண்டவள்..

"ரொம்ப தேங்க்ஸ் உங்க உதவிக்கு, ஆனா நீங்க என் நல்லதுக்கு சொன்ன மாதிரி இல்ல ... நல்லா இருக்குற குடும்பத்தை கெடுக்கிறதுக்கு சொல்ற மாதிரி இருக்குது.... எனக்கு அவரை பத்தி நல்லா தெரியும்... என்ன தவிர வேற யாரையும் ஏறெடுத்து பாக்க மாட்டார்.. இன்னொரு பொண்ண பைக்ல கூட்டிட்டு போனா அதுக்கு பேரு தப்பாதான் இருக்கணும்னு அவசியம் இல்ல..

" பைக்ல கூட்டிட்டு போறது தப்பில்ல சீதாலட்சுமி ஆனால் எங்க கூட்டிட்டு போறான்னு பாருங்க அதுதான் தப்பு ... அவங்க ரெண்டு பேரும் ராமோட ஃபிரண்ட் ஒருத்தவங்க ஃபாரின்ல இருக்காங்க இல்ல அவங்க வீட்டு சாவி கூட சார்கிட்ட இருக்குல்ல அங்க தான் அந்த பொண்ண கூட்டிட்டு தனியா இருந்துட்டு வர்றார்... உண்மை தானே சாவி மாட்டும் ஹேங்கரில் அந்த சாவியை சீதா தேட , அது இல்லை மாயம் ஆகி இருந்தது 

"அம்மா ஆஆஆஆஆஆ வாயை பொத்தி கொண்டு பயத்தில் அலறினாள்...

"பாதிநாள் பேங்குக்கு வர்றதே இல்லை... லீவ் போட்டுட்டு இரண்டு பேரும் கண்ட மேனிக்கு திரியுறாங்க .. 

இந்த மாசம் சம்பளம் ஏன் குறைவா இருக்கு ராம் 

லோனுக்கு பிடிச்சருப்பாங்க என்று மழுப்பினானே.. எச்சில் விழுங்கினாள்.. 

இதுக்கெல்லாம் ஆதாரம் என்கிட்ட இருக்கு சீதா ... இதுக்கு மேல உங்க கிட்ட நான் எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியல... அவ்வளவு ஏன் பேங்க்ல நாங்களே கண்ணால ரெண்டு பேரும் ஒரே ரூமுக்குள்ள கட்டிப்பிடித்துக்கிட்டு இருக்கிறத பார்த்து இருக்கோம்... உங்களுக்கும் குடும்பம் இருக்கு வளர்ந்த ரெண்டு பிள்ளைங்க இருக்காங்க, அவங்களோட வாழ்க்கை நாசமாகிட கூடாதுங்கிற ஒரு நல்ல எண்ணத்திலதான், நான் உங்களுக்கு சொல்லிக்கிட்டு இருக்கேன்... 

"நீ யாரு அதை முதல்ல சொல்லு ??

"நான் யாரு என்னன்னு விசாரிக்கிறத விட்டுட்டு உங்க புருஷன் என்ன பண்றாரு, ஏது பண்றாருன்னு விசாரிச்சா ரொம்ப நல்லா இருக்கும் சீதா ... அப்புறம் உங்க இஷ்டம் ... சொல்ல வேண்டியது என் கடமை சொல்லிட்டேன் ... கவனமாய் இருக்கிறதும், கண்டுக்காம விடுறதும் உங்களோட தனிப்பட்ட விஷயம்.... இனி உங்களை நான் டிஸ்டர்ப் பண்ண மாட்டேன்....  

"தேங்க்ஸ் இவ்வளவு மெனக்கெட்டு எடுத்து ஒரு குடும்பத்தை கெடுக்கிறதுக்கு..."

"ஹாஹா , நான் சொல்றத நீங்க நம்பலன்னா புரசைவாக்கம் பக்கம் ஜானகி நர்சிங் ஹோம் இருக்குல்ல அங்க போய் பாருங்க .. ஷில்பா இன்னைக்கு இரண்டாவது அபாசன் பண்ண போறா.. அதுக்கு உங்க சார்தான் கூட துணைக்கு போறார் , அங்க போனா நான் சொல்றது உண்மையா பொய்யான்னு உங்களுக்கு புரியும்... அவர் ராமன் வேஷம் போட்ட அயோக்கியன்னு உங்களுக்கு தெரியும் ... சீதா அமைதியாக இருந்தாலும் ஆட்டம் கண்டு போய் நின்றாள் அது உறுதி.. 

"அதோட சமைக்கிற வேலை பிள்ளைங்கள பாக்குற வேலை எல்லாம் முடிச்சிட்டீங்கன்னா, உங்க சாரோட மொபைல எடுத்து கொஞ்சம் செக் பண்ணி பாருங்க , அவர் எவ்வளவு பெரிய திருட்டுத்தனம் எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காருன்னு, உங்களுக்கு கொஞ்சமாவது புரியும்னு நினைக்கிறேன் .. கண்ண மூடிகிட்டு வாழ்றது இந்த காலத்துல சாத்தியம் கிடையாது சீதா ... நம்மள போல எல்லாரும் சரியா இருப்பாங்க, நல்லவங்களா இருப்பாங்கன்னு நினைச்சு ஏமாறுர மாதிரி ஒரு முட்டாள்தனம் வேற எதுவுமே கிடையாது... கொஞ்சம் கண்ண திறந்து பாருங்க உங்க புருஷனோட வண்டவாளம் புரியும்.. பாய் வைக்கிறேன் "என்று அப்பெண் போனை வைத்து விட ... அடுத்து தாயிடம் இருந்து போன் வந்தது..

"என்னம்மா ??

"சீதா மாப்பிள்ளையை இங்க ஜானகி நர்சிங் ஹோம்ல பார்த்தேன் ..

"என்னது ??!!!

"ஆமாடி, முட்டுவலின்னு வந்தேன் .. ராம் கூட அவர் கூட வேலை பார்க்கற பொண்ணு பேர் கூட மறந்து போச்சே

ஷில்பாவா ?

"அட ஆமாடி ,அந்த பொண்ணுக்கு ஏதோ உடம்பு முடியலைன்னு கூட்டிட்டு வந்தார் போல , மருமகன் என்ன பாத்ததும் கொஞ்சம் பதறிட்டார்... ஒருவேளை வேற பொண்ணு கூட வந்ததும் நான் தப்பா நினைப்பேன்னு நினைச்சுட்டார் போல, நமக்கு தெரியாதா அவர பத்தி" என்று தாய் மருமகன் அருமை பெருமையை கூற ... சீதா காதுக்குள் எதுவுமே ஏற வில்லை 

அவ்வளவு தானா?? அப்படி என்றால் அப்பெண் கூறியதும் அத்தனையும் மெய்யா?? 

சீதாவுக்கு உலகம் இருண்டு கொண்டு வந்தது.... அப்படியே அவள் சுவற்றில் சாய சுவற்றில் மாட்டி இருந்த அவர்கள் திருமண போட்டோ அவள் முதுகு பட்டு கீழே விழுந்து சில்லு சில்லாக உடைந்தது..

உடைந்தது அவர்கள் திருமண போட்டோ மட்டும் இல்லை, திருமண உறவும் தான் ....