தெள்ளழகே-18

தெள்ளழகே-18

தெள்ளழகே!-18

ராதா இப்போது தெளிவாகிவிட்டாள். தனது வீடு என்ற உணர்வு இப்போது தாய் வீட்டிற்குள் உணர்ந்தாள்.

அங்கே மைதிலி ஒருவாரம் இருந்தாள்.இதுக்கு முன்னாடி எதுக்கெடுத்தாலும் ராதாவோடு எப்போதும் முட்டிக்கொண்டு நிற்பவள் ஒதுங்கிப்போக ஆரம்பித்தாள்.

ராதா மீது மனதில் கோபம் இருக்கிறது. ஆனால் அதைக்காட்டமுடியாது போயிற்று. மணிகண்டனின் கோபத்தைப் பார்த்துவிட்டதால் இனி அடக்கியே வாசிக்கணும். அதுவுமில்லாமல் அம்மாவீட்டுக்குப் போகமுடியாது கிருஷ்ணன் அங்க போனால் விரட்டிவிட்றுவான்னு புரிந்துவிட்டது.

அதனால் நல்ல மருமகளாக காலையில் எழுந்து சமையல் முடித்து குழத்தைகளை அனுப்பிவிட்டு அமைதியாக தனது அறைக்குள்ளாகவே இருந்துவிடுவாள்.

மணிகண்டனுக்கே ஆச்சர்யமாக இருந்தது”இவளை முதலிலயே என்பக்கமாக இழுத்திருக்கலாமோ? நான்தான் பொண்டாட்டியே எல்லாம்னு அவக்காலுக்கடியில் வாண்டடா மிதிவாங்கிட்டிருந்தனோ? ப்ச்ச் நம்ம பொண்டாட்டிதானே மிதி வாங்குறதுல தப்பில்லை. ஆனாலும் இப்போ அவளே நமக்கு மரியாதைக்கொடுக்கிறதும் நல்லாதான் இருக்கு. இப்படியே வாழ்க்கயை ஓட்டுவோம். எல்லாம் வாழ்க்கை அனுபவம்தானே”என்று சரியாக நிதானித்து வாழ்க்கையைப் புரிந்துக் கொண்டான்.

ஆனாலும் இனி இங்கே இருகக்கூடாது. தம்பி செல்வம் வெளியே போயிட்டான். நம்மளும் போயிடணும்.அப்பா அம்மாவைவிட்டுத் தள்ளியே இருக்கலாம் என்று முடிவுசெய்து வீடு பார்க்க மனைவியோடு வெளியே போய்விட்டான்.

ராதா மகளைப் பள்ளியில் விட்டுவிட்டு உள்ளே சென்று ஹெட்மிஸ்ஸஸிடம் பேசினாள்.

“மேடம் என் பாப்பாவை எங்கம்மா அப்பாவைத் தவிர வேற யாரு பார்க்கவந்தாலும் அனுமதிக்காதிங்க. நான் டிவோர்சி சிங்கிள் பேரண்ட். நான் சொல்லவர்றது உங்களுக்கே புரியும்னு நினைக்கிறேன்”

“ஓகே மேடம் நாங்க கிளாஸ் டீச்சர்கிட்டயும் வாட்ச்மேன்கிட்டயும் சொல்லி வைக்கிறேன். நீங்க தைரியமாக போங்க. வெண்ணிலாவை நாங்கப் பார்த்துக்கிறோம்”என்று தைரியம் சொல்லி அனுப்பிவைத்தனர்.

அதனால கொஞ்சம் தைரியம் வந்தவளாக தனது வண்டியில் சிட்டாகப் பறந்து ஆபிஸிற்கு முன்பாக வந்தாள்.

சரியாக அவளது வண்டிக்கு முன்பு ஒரு கார் வரவும் பட்டென்று சடன்பிரேக் போட்டு கார் டிரைவரைத் திட்டிக்கொண்டே பார்த்தாள்.

அங்கே கார் சீட்டில் கிருஷ்ணன் உட்கார்ந்து அவளைப் பார்த்துப் பல்லைக்காட்டிக்கொண்டிருந்தான்.

‘இவனா? இவன் இன்னும் ஊருக்குப் போகலையா? ’என்று யோசித்தவள் தனது வண்டிக்கு முன்பு அவனது கார் நிற்பதைப் பார்த்து ”அறிவிருக்காடா உங்க ஊருக்குள்ள வண்டியை ஓட்டுறமாதிரியே சிட்டிக்குள்ளயும் ஓட்டுவீங்களாடா? கண்ணுத் தெரியலையா? குறுக்க வந்து தண்ணீ லாரி மாதிரி வண்டியை நிறுத்தியிருக்க என் ஆபிஸுக்குள்ள எப்படி போவேன். வண்டியை ரிவர்ஸ் எடுறா”என்று தைரியமாகப் பேசினாள்.அதுவும் மரியாதை என்பது மருந்துக்குக்கூட அவள் வாயிலிருந்து வரவில்லை.

அவனோ ஹாயாக காரில் இருந்து இறங்கிவந்தவன் காரின் முன்பு சாய்ந்து நின்றுகொண்டான்.

“ஊப்ஸ் டேய் வெண்ணெய் காரை நகர்த்திவிடுடா. த்தா உங்கப்பன் வீட்டு ரோடுன்னு நினைச்சியாடா” என்று வேண்டுமென்ற தனக்கு வராத வார்த்தைகளை கஷ்டப்பட்டு பேசினாள்.

அவளருகில் வந்தவன் நெருங்கி நின்று அவளோடு உடலில் உரசும்படியாக வேண்டுமென்றே வண்டிக்கு அருகில் போய் நின்றான்.

“என்ன ராது இது? உனக்குத்தான் இதெல்லாம் வாராதே. இந்த மச்சானுக்குன்னா மதுரை லோக்கல் வார்த்தைகள் அத்துப்படி பேசுவேன்.நீ பதவிசா பேசக்கூடியவள் இப்படி இறங்கி வந்துப் பேசலாமா. எனக்கு உன்கிட்டக் கொஞ்சம் தனியா பேசணும்.பேசினால் எல்லாம் சரியாகும்”

“யாரு நீ காரை நடுவழியில் குறுக்கால நிறுத்திட்டு கண்டபடி பேசிட்டு நிக்கிற. மூடிட்டு காரை எடுடா வெண்ணெய் காலையிலே ஆபிஸூக்கு போற நேரத்துல உசுற எடுக்க வந்துடுறானுங்க”என்று கத்தினாள்.

அவளையே கண்கள் இடுங்கப்பார்த்தவன் தனது காரின் முன்பக்கம் ஏறி உட்கார்ந்துக்கொண்டான்.

அதைப்பார்த்தவள் இவனுக்கெல்லாம் எதுக்குப் பயப்படணும் என்று தனது வண்டியில் இருந்து இறங்கியவள் சுற்றி சுற்றிப்பார்த்தாள்.

அவள் என்னத்தைத் தேடுகிறாள் என்று புரியாது பார்த்திருந்தான். பக்கத்தில் மற்றொரு ஆபிஸில் கட்டிட வேலை நடந்துக்கொண்டிருக்க அங்குக் கிடந்த செங்கலை எடுத்தவள் குறி பார்த்து அவன்மீது ஏறிந்தாள்.

ஆத்தீ கொலை வெறியில் இருக்காளே!என்று குனிந்து கொண்டான்.

செங்கல் அவன் குனிந்ததில் நேராக காரின் முன்பக்க கண்ணாடியை உடைத்துப் பொத்துக்கொண்டு உள்ளேபோய் விழுந்தது.

“ரூபாய் அரை இலட்சம் காலி. வாழ்க வளமுடன்” என்று சிரித்தவன் அவளருகில் வந்தான். அடுத்து இன்னொரு செங்கலை எடுத்து கையில் வைத்திருந்தவளிடமிருந்து அதைப் பிடுங்கி எறிந்தான்.

“கையைவிடுறா இப்படித்தான் ஒரு கல்யாணமான பொண்ணுக் கையைப்பிடிச்சு இழுப்பியா? காப்பாத்துங்க காப்பாத்துங்க” என்று சத்தமிட்டாள்.

அதைக்கேட்டதும் அவனோ அவளது இடுப்பைப் பிடித்து வளைத்து நல்லவசமாக இதழில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு “இப்போ காப்பாத்துங்கன்னு கூப்பிட்டுக்க மை மயிலு” என்று ஒரு மார்க்கமாகச் சிரித்தான்.

ச்சீ ச்சீ நீயெல்லாம் என்ன ஜென்மம் உனக்கு சூடு சொரனையே இல்லையா? உன்னை வேண்டாம்னுதானே பிரிஞ்சே வந்தேன். இப்போ போய் இப்படி பல்லை இளிச்சுட்டு என்னைப் பார்க்கப்பேச வர்ற” என்று திட்டி அவனைத் தன்னிடமிருந்தத் தள்ளிவிட்டாள்.

அவனோ தள்ளிப்போகாது அவளது கையைப்பிடித்து தன்னோடு இழுத்தான்.

அதற்குள் ஏற்கனவே ஆபிஸ் போகிற டென்சனில் இருப்பவர்கள் நிறைய பேர் வண்டியை எடுக்கச் சொல்லி சத்தம் போட்டுக் கொண்டிருந்தனர்.

அதில் கடுப்பானவன் ராதாவின் கையைப்பிடித்து இழுத்துக் கொண்டுப்போனவன் “வா என்கூட எனக்கு உன்கிட்ட பேசணும்.அதுவும் தனியாக பேசணும்”என்று பிடிவாதம் பிடித்து உட்கார்ந்திருந்தான்.

“என்ன மௌனராகம் கார்த்திக்குன்னு நினைப்பா.போடா டேய் அங்குட்டு ஒதுங்கிப்போய் உட்காரு.உங்க மாமனாரு வீட்டுல இருந்து வந்துக் கூட்டிட்டுப் போவாங்க”

“அதுக்குத்தானடி காத்திருக்கேன். மாமனார் வீட்டு விருந்து வேணும்னு” என்று ஒரு மார்க்கமாகப் பார்த்திருந்தான்.

எப்போதுமே ராதாவும் சரி கிருஷ்ணனும் சரி விவாகரத்துக்குப் பின் பேசிக் கொண்டதேயில்லை.

அவனுக்கு இப்போது அவளோடு பேசவேண்டும் அவளுக்கோ அவனிடமிருந்து மொத்தமாக விலகி நிற்கவேண்டும்.

அதனால் வாய் சண்டைத் தகராறு என்று போய்கொண்டிருக்கிறது.

அதற்குள் பின்னாடி வந்த வண்டிக்காரர்கள் எல்லாம் வண்டியை நிறுத்திவிட்டு இறங்கி அவனருகில் வந்து “ஏப்பா நீ என்ன ஊருநாட்டானா? உன் பேச்சைப் பார்த்தாலே தெரியுதே. இப்படித்தான் சிட்டிக்குள்ள வந்து பிரச்சனை பண்ணுவியா. உனக்குத்தான் வேலை இல்லை. எங்களுக்கு ஆபிஸ்ல ஆயிரம் வேலையிருக்கு லேட்டூ போனா மேனேஜருங்கக் கிட்ட பேச்சு வாங்கணும். ஒரு நாள் சம்பளம் கட்டாக்குவானுங்க. உங்க சண்டைக்குள்ள ஏம்பா எங்களை சாவடிக்கிற? போப்பா உங்க காதல்களுக்குள்ள பிரச்சனைன்னா ஏதாவது பீச்சு பக்கமா ஒதுங்குங்க. எங்க வேலையைக் கெடுத்துட்டு”என்று அவனைச் சுற்றி வளைக்க அதற்குள் போலீஸ் வந்துவிட்டனர்.

அதைப்பார்த்த “ராதா போ போ உன்னைப் பிடிச்சிட்டுப்போக மாமியார் வீட்டுல இருந்து வந்திருக்காங்க. போய் கம்பி எண்ணு. பப்ளிக் நியூசன்ஸ் கேஸ்ல உள்ளப்போ. நான்தான் போன் பண்ணி வரச்சொன்னேன்”என்று தனது வண்டியில் உட்கார்ந்தாள்.

போலீசார் அவனருகில் வந்து “எந்த ஊருக்காரம்டா நீ? வண்டியில மதுரை ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு.ஊர்ல இருந்து இதுக்குன்னே வருவீங்களாடா?” என்று வண்டியை ஓரமாக ஒதுக்கிவிட்டுவிட்டு அவனை இழுத்துச் சென்றனர்.

“போடா டேய் டேஷூ” என்று திட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டு ஆபிஸுக்குள் வந்துவிட்டாள்.

அவள் உள்ளே சென்று தனது சிஸ்டம் முன்னாடி உட்கார்ந்து வேலையைத் தொடங்கவும் தாமரையிடமிருந்து போன் வந்தது.

எதுக்கு அம்மா இந்த நேரத்துல போன் பண்றாங்க என்று எடுத்துக் காதில் வைக்கவும்”ஏன்டி அறிவு கெட்டவளே உன் வாழ்க்கை இப்ப தான் கொஞ்சமாக சரியாகுதுன்ன் நானே சந்தோஷப்பட்டுட்டு இருக்கேன். அதை மொத்தமாக இல்லாமல் ஆக்குவதற்குன்னே மருமகனை போலீஸ்ல பிடிச்சு கொடுத்திருக்கியே. உனக்கு எல்லாம் எவ்வளவு ஏத்தம் இருக்கு உனக்கு? கொஞ்சமாவது இறங்கி போறியா இல்ல அடங்கி போறியா. எதுவும் கேக்க மாட்டேங்கிற. உங்க அப்பா வேற எதெதுவோ உன் விருப்பம்னு சொல்லிட்டு இருக்காரு. இதுக்கு மேல அந்த மனுஷன் என்ன பண்ணனும்னு நினைக்கிற? உன் கால்ல விழுந்துக் கெஞ்சனுமா?”என்று கோபத்தில் வசைபாடினார்.

“அம்மாஆஆஆ அந்தாளு என்னை போகவிடாமல் வண்டியை மறிச்சிட்டிருந்தான். எல்லோரும் அங்க மாட்டிக்கிட்டாங்க. அதுதான் போலீஸ் வந்தாங்க. அதுக்கு நான் என்ன பண்ணமுடியும்? அந்தாளு எதுக்கு என்னைப் பார்க்க வர்றான்?”

“உன்னைப் பார்க்கதானடி வருவான்.நீதானே அவன் பொண்டாட்டி”

“அம்மாஆஆஆஆ நான் அவன் பொண்டாட்டி இல்லன்னு கோர்ட்டு முடிவு பண்ணி மூணு வருஷமாச்சு. அவனும் வேண்டாம்னு போய் இரண்டாலது கல்யாணத்துக்கும் தயாராகிட்டான். அப்படிப்பட்டவன் எப்படி என் புருஷனாக இருப்பான். நான் எப்படி அவன் பொண்டாட்டியாக இருப்பேன். சும்மா அதையே சொல்லாதம்மா. வைமா போனை”என்று வைத்துவிட்டாள்.

“என்னடி மறுபடியும் உங்கம்மா எதுக்கு உன்னைப் போட்டு பிராண்டுறாங்க?”என்று சரண்யா கேட்டாள்.

“ப்ச்ச் அந்த பரதேசி மதுரையில் இருந்து இங்க வந்திருக்கான். என்கிட்ட பேசணுமாம். அதுதான் வண்டியை வழிமறிச்சு நின்னுட்டிருந்தான் போலீஸ்க்கு போன் பண்ணி பிடிச்சுக் குடுத்திட்டேன். அதுக்குத்தான் மாதாஜி பொங்கிங்”

“ஓஓஓ அப்படியா விஷயம் உன் முகத்தில் ஒரு தேஜஸ் பெரிய என்ன ஆச்சு ஊருக்கு போயிட்டு வந்ததிலிருந்து முகம் நல்லா தெளிவா இருக்கு கடந்த ரெண்டு வருஷத்துல நான் பாக்காத ராதாவை இப்போ கொஞ்ச நாளா பார்க்கிறேனோ ? என்று கேட்டுவிட்டு சிரித்தாள்.

“அப்படியெல்லாம் இல்லையே.எல்லா பிரச்சனையும் முடிஞ்சுட்டு. இரண்டு அண்ணன்களும் தனிக்குடித்தனமா வெளியே போகப்போறாங்க. இனி எனக்கு அந்த வீட்டில் எந்த பிரச்சனையும் இல்லையே. அந்த நிம்மதிதான்.அதனால முகம் பொலிவா இருக்குமாயிருக்கும்”

“நீ இவ்வளவு பெரிய சுயநலவாதியா ராதா? உன்கிட்ட நான் இதை எதிர்பார்க்கலையே?”

“என்ன சரண்யா இது என்கிட்ட எதிர்பார்க்கல ஏன் இப்படி டக்குனு பேசுற. நான் அப்படி என்ன சுயநலவாதியாக இருந்தேன்”என்று புரியாது கேட்டாள்.

“அது எப்படி எங்க அம்மா அப்பா வீட்டுக்கு நான் சுதந்திரமா வரணும் சுதந்திரமா போகணும் என்பதற்காக உன் இரண்டு அண்ணி நாகேஸ்வரியும் மைதிலி உன்ன கிருஷ்ணன் கூட வாழ முடியாமல் விரட்டி விட்டாங்க. அதையேதான் நீ கொஞ்சம் வித்தியாசமா உங்க அம்மா வீட்ல சந்தோசமா நிம்மதியா இருக்கணும் என்பதற்காக உங்க அண்ணன் குடும்ப இரண்டையும் தனியா விரட்டி விட்டத இவ்வளவு சந்தோஷமா சொல்றியே அப்ப நீயும் ஒரு சுயநலவாதிதானே” என்று சரண்யா ராதாவின் தவறை சுட்டிக்காட்டினாள்.

அதில்ல சரண்யா நான் எப்படியான ஒரு சூழ்நிலை அம்மா வீட்டுக்கு வந்தேன்னு உனக்கே தெரியுமே. அப்போ இவங்க என்னை தாங்கிப்பிடித்திருக்க வேண்டாமா? தாங்கிப்பிடிக்கக்கூட செய்ய வேண்டாம் என்னை வதைக்காமலும் வலியையும் வேதனையையும் கொடுக்காமல் இருந்திருக்கலாமே.என்ன தாங்கி இருக்கணுமா? வேண்டாமா? கஷ்படுத்தாமல் இருந்திருந்தாலே போதுமானதாகவே இருக்கும்.ஆனால் அவங்க செய்யலைய.இப்போவரைக்கும் என்னை வேதனைப்படுத்தத்தானே செய்றாங்க.அதுக்கு அப்பா தனிக்குடித்தனம் போங்கன்னு சொன்னாங்க” என்று தன்மேல் தவறு இல்லையே என்று பேசினாள்.

“எல்லாரும் நம்மளுடைய தவறை உணர்வதே இல்லை இதுதான் யாதார்த்தம். அடுத்தவங்க நமக்கு செய்தால் தப்பு ஆனா அதேஇதை நம்ம அடுத்தவங்களுக்கு ஏதாவது செய்தால் சரி.நம்முடைய பார்வையில் சரின்னு சொல்லிட்டு போயிட்டேயிருப்போம். இது அப்படி இல்ல அவங்க செய்தது தப்புன்னா நீ செய்ததும் தப்பு. இப்போ என்ன பண்ணப்போற? கிருஷ்ணனுன் நீயுமா காதலிச்சுக் கல்யாணம் பண்ணவங்கதானே. ஏன் அவர் இப்போ திருந்திருக்கக் கூடாதா? இந்த மூணு வருஷத்துல மனசு மாறியிருக்கலாமே! நீ அவனை ஏற்றுக்கொள்வதில் உனக்கு என்ன பிரச்சனை? ஈகோவா?” என்று நேரடியாக கேட்டாள்.

அப்பொழுதுதான் ராதாவும் தன்னால் அண்ணனுங்க குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை உணர்ந்தாள் இதற்கு எப்படி தீர்வு காண்பது? என புரியாது முழித்துக் கொண்டிருந்தாள்