தெள்ளழகே-19

தெள்ளழகே-19

தெள்ளழகே!-19

ராதா தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தாள்.நம்ம செய்ததும் தப்புத்தானோ? நம்மால் அண்ணனுங்களும் அண்ணிங்களும் வெளியே போயிட்டாங்களோ?

நம்மள மாதிரி மாமியார் கொடுமை இல்லாமல் வெளியே நல்லாத்தானே இருக்காங்க.இருக்கட்டுமே அவங்கங்க குடும்பமா நல்லாயிருக்கட்டும் என்று நினைத்தவள் ஸ்கூட்டியை எடுக்க மறந்து அப்படியே நடந்தாள்.

சரண்யா பின்னாடியே அவளைப் பார்த்து ஓடிவந்தாள் அதுக்குள்ளாக ஒரு வண்டி வந்து அவள் பக்கத்தில் நின்றது.

பயந்து யாரென்று உள்ளே பார்க்க கிருஷ்ணன் இருந்தான்.அவனைப் பார்த்து முறைத்துவிட்டு திரும்புவதற்குள் கிருஷ்ணன் அவளை இழுத்து காரினுள்ளே போட்டுவிட்டு வேகமாக போய்விட்டான்.

“ஐயோ! ஐயோ! ராதாவை யாரோ கடத்திட்டு போறாங்க” சத்தம்போட்டுக்கொண்டே சரண்யா பின்னாடியே ஓடியவள் வண்டி நம்பரை பார்த்து எழுதி உடனே போலீஸிற்குத் தகவல் சொன்னாள்.

அதற்குள் அவளது அப்பாவுக்கு ஆபிஸிலிருந்து அழைத்துச் சொல்லிவிட்டனர். அவர் இதையெல்லாம் கேட்டதும் வண்டி யாரோடது என்று விசாரித்து கடைசியில் அது கிருஷ்ணன் என்றதும் என்னத்தைச் சொல்ல என்று போலீசாரிடம் அவன் தன் மருமகன்தான் அவங்க புருஷன் பொண்டாட்டி பிரச்சனை போயிட்டிருக்கு. குடும்பத்தார் நாங்கப் பார்த்திக்கிறோம் என்று சொல்லி முடித்துவிட்டார்.

இந்தக் கிருஷ்ணனை என்னசெய்ய? ராதாதான் அவனை வேண்டாம்னு முடிவாகச் சொல்லி விவாகரத்து வாங்கிட்டாளே. இப்போ என்ன திடீர்னு அவனுக்கு ஞானம் பிறந்து இப்படி அவளை வம்புக்கு இழுக்கிறான்?என்று கோபத்தில் உட்கார்ந்திருந்தார்.

“ஏங்க எதுக்குங்க இப்படி உட்கார்ந்திருக்கீங்க.அதுதான் மருமகன்தானே அவளை கூட்டிட்டுப் போயிருக்கான். நீங்க ஏதோ வேற எவனோ கடத்திட்டுப் போனமாதிரியே கவலையோடு இருக்கீங்க. அவளுடைய வாழ்க்கை மறுபடியும் துளிர்த்தால் நல்லதுதானே. நமக்கு அப்புறம் அவள் தனிமரமாக நிற்கமாட்டாளே” என்று உண்மையாகவே ஒரு தாயாக அவளை உணர்ந்து அவளது எதிர்காலத்திற்காக யோசித்தார்.

அவருக்குத் தெரியுமே ஒரு பெண்ணாக துணை இல்லாது இந்த சமூகத்தில் எப்படி தனியாக வாழமுடியும்? அதுக்கான பணபலம் இருந்தாலும் தைரியமாக எதிர்கொண்டு பல பிரச்சனைகளை தாங்கித் தாண்டி வாழவேண்டும். அதுவும் தனியாளாகப் பெண் குழந்தையை வைத்துக்கொண்டு என்னவெல்லாம் செய்வாள்? என்று பயந்து அவளை வசைப்பாடிக் கொண்டே இருந்தவருக்கு இப்போதுதான் கொஞ்சமே கொஞ்சம் நிம்மதியாக உணர்ந்தார்.

கிருஷ்ணன் மனம்மாறி மறுபடியும் ராதாவோடுதான் வாழவேண்டும் என்று அவளுக்காத் திரும்பி வந்ததில் ரொம்ப சந்தோசப்பட்டார்.சந்தோசத்தை விடவும் நிம்மதியை உணர்ந்தார்.

நல்லத்தம்பி இப்படி நல்லதாக யோசிக்கும் தாமரையைபா பார்த்து “ஏன்டி உனக்குக் கொஞ்சமாவது யோசிக்கும் தன்மை இருக்கா? அவளே அவன் கூடத்தான் வாழமுடியாதுன்னு வந்துட்டாளே! அவன் டார்ச்சர் பண்றான், அடிக்கிறான் அவளுக்காக எதையோ யோசிக்க மாட்டேங்குறான். அப்படி ஒருத்தி இருக்கிறது அவன் கண்டுக்க மாட்டாங்கிறான் ஏதோ கல்யாணம் முடிஞ்சு வாழ்ந்தோம் அப்படிங்கறது மாதிரி கூட இல்லையே. இது வேற மாதிரி எல்லாம் இருக்கு அவனை நம்பி எப்படி திரும்ப ராதாவை அவன் கூட அனுப்ப முடியும்? அதுவும் ராதா எப்படி மனசு மாறி அவனை ஏத்துப்பா? இதெல்லாம் நீ யோசிக்க மாட்டியா?

“அதெல்லாம் யோசிச்சுத்தான் பேசுறேன்.ஸஅவனே இறங்கிவரும்போது இவளுக்கென்னவாம். அவன்தான் மனசு மாறி இவதான் எல்லாம்னு வேறக் கல்யாணமும் முடிக்காமல் ஓடிவந்திருக்கானே.அப்போவே அவன் மனசுல ராதாமட்டும்தான் இருக்கா.இனி வாழ்க்கையை ஒழுங்கா வாழுவான்னு தெரியுதுல”

“இதெல்லாம் வாயால் பேசுறதுக்கு மட்டும் சரியா இருக்கும். ஆனால் வாழ்க்கையென்று வரும்போது மறுபடியும் சண்டையுமா பிரச்சனையுமாக மாறினா என்ன பண்றது? திரும்பவும் அதே பிரச்சினை,இரணாடாவது குழந்தை அப்படின்னு இப்படின்னு வந்தால் இன்னும் அவளுக்கு தோள்மேல சுமையாக ஏறிடுமே! அடுத்த குழந்தைகள் வந்தா அவளுக்கு கஷ்டமாயிடும். இல்ல திரும்பவும் பழைய குருடி கதவைத் திறடி என்கிறது போலாகிடும். அவளை அடிக்கவும் சண்டை பிடிக்கவும் தொடங்கிட்டான்னா? இப்போ பெத்ததையும் இனிப் பெறப்போவதையும் சேர்த்து பார்த்துக்கணும். வாழ்க்கையை சமாளிக்கணும். இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்?யதார்த்த வாழ்க்கைக்காக யோசிக்கணும். அவளுக்கு மறுபடியும் அந்த வாழ்க்கை நரகமாயிடக்கூடாது. அதுதான் யோசிக்கிறேன்”

“அதெல்லாம் பொம்பளை பிள்ளை சூதானமா இருந்துப்பா.நான் அவக்கிட்ட பேசிக்கிறேன்”

“அவக்கிட்ட பேசி மனசைக்கலைக்காத. அவளா கிருஷ்ணனை ஏத்துக்கிட்டான்னா வாழட்டும். இல்லையா எப்போதும் போல இங்கயே இருக்கட்டும். அவளது வாழ்க்கைக்கு என்ன உண்டுமோ அதை நம்மளே பண்ணிட்டுப்போவோம் அவ்வளவுதான் என்று” சொன்ன நல்லதம்பி இதுக்குமேல இவக்கிட்ட பேசினால் நம்ம மனசையும் மாத்திடுவா என்று எழுந்து வெளியே சென்றுவிட்டார்.

அங்கே ராதா காருக்குள் உட்கார்ந்திருந்தவள்”ஆமா என்ன டேஷூக்கு என்னைத் தூக்கிட்டுப்போற? அதுவும் காரெல்லாம் வைச்சுக் கடத்திட்டுப்போற. உன் திட்டம்தான் என்ன?”

அவளைத் திரும்பிப் பார்த்தவன் “உன் திட்டம் என்னன்னு சொல்லு மயிலு. அப்புறம் என் திட்டத்தைச் சொல்லுறேன்?”

“இதா இந்த மயிலு கியிலுன்னு சொன்ன தொலைச்சிடுவேன். உன் பொண்டாட்டியைப் போய் அப்படிச்சொல்லு. என்னைச் சொல்லாத. ஏற்கனவே அந்த மயிலுங்கிற வார்த்தையில மயங்கித்தான் மொத்தமாக வாழ்க்கையைத் தொலைச்சேன். இனி ஏமாறுவன்னு நினைக்காத. என்னை எங்கத் தூக்கிட்டுப்போற அதைச்சொல்லு. உனக்கு என்ன வேணும்னுத் தெளிவா சொல்லு!”

அதைக்கேட்டவன் “எனக்கு நீ மட்டும்தான் வேணும் மயிலு. வேற எதுவும் இந்த வாழ்க்கையில் வேண்டாம்.சத்தியமா நீ மட்டும் போதும்டி”என்று அவளது கன்னத்தைத் தொட்டான்.

அவனதுக் கையைத் தட்டிவிட்டவள் “இந்தத் தொடுற வேலையெல்லாம் வைச்சுக்காத. நான் பழைய ராதா இல்லை. உன்னைப் பார்த்ததும் மயங்கி மச்சான் மச்சான்னு ஓடிவர்றதுக்கு. நீ என்னை படுத்தினக் கொடுமையையும் அடிச்சுக் காயப்படுத்தினதையும் இன்னும் மறக்கலை. சாகுறவரைக்கும் மறக்கவும் மாட்டேன் .இத்தோடு என் வாழ்க்கையில் இருந்து ஓழிஞ்சுப்போயிடு.உன் முகத்துலயே முழிக்கப்பிடிக்கலை, நாயைவிடக் கேவலமா என்னை நடத்தினவன் நீ இப்போவந்து மயிலு குயிலுன்னு. என்னை இறக்கிவிடு.என் மகள் என்னைத் தேடிட்டிருப்பாள். அந்த ஜீவன் மட்டும்தான் என்னை நம்பி இருக்கு. எனக்காக இருக்கக்கூடிய ஒரே உயிரு. சீக்கிரம் வீட்டுக்குப் போகணும்”

“அப்போ நான் உனக்காக இருக்கும் உயிரு இல்லையாடி?”

“இல்லை நீ எவளுக்காகவோ காத்திருந்தவன்.எவளுகளும் சரிவரலைன்னு மறுபடியும் என்கிட்ட வந்திருக்க?”

“சத்தியமா அப்படியில்ல மயிலு.என்னால் உன்னைத்தவிற வேற யாரையும் அந்த இடத்துல நினைச்சிப் பார்க்கமுடியலை. அப்பா அம்மா கட்டாயப்படுத்தினாங்களேன்னு சம்மதிச்சேன். அந்தப்பொண்ணு தருணிகா அப்படியே உன் ஜாடையில் இருந்தாள். அதுல கொஞ்சம் சரின்னு தலையாட்டிட்டு வந்துட்டேன். ஆனாலும் மனசு முழுக்க நீதான்டி இருந்த. உன்மேலக் கோபம் இருந்துச்சு. அந்தக்கோபத்தின் வெளிப்பாடு உனக்குமுன்பே இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு வாழ்ந்துக் காண்பிக்கணும்னு இருந்தேன். ஆனால் அதுக்கு என் மனசே ஒப்பலை. அதுதான் நிஜம்.உன்னை திரும்பவும் அந்த பால்கனியில் பார்த்த அந்த நொடியே என் கோபமெல்லாம் உருகிக்காணமால் போயிடுச்சு. நீதான் எனக்கு எல்லாமும் என்று அப்போதான்டி உண்ர்ந்தேன். நீயில்லாது நான் இல்லைடி”

“ஆனால் நீயில்லாமல் நானிருப்பேன். எந்த மாற்றமும் நீ என் வாழ்க்கையில் வந்ததால் புதுசா வந்திடல. ஒன்னே ஒன்னை மட்டும் தெள்ளத்தெளிவாகப் புரிஞ்சாக்கிட்டேன். அண்ணனுங்க அக்காங்கன்னு யாரையும் நம்பி நம்ம வாழ்க்கை இல்லை.அவங்க அவங்க வாழ்க்கையைத்தான் வாழுவாங்க.நமக்காக யாரும் இருக்கமாட்டாங்க. நம்ம வாழ்க்கையில் எத்தனைமுறை விழுந்தாலும் நம்தான் கையையும் காலையும் ஊன்றி எழுந்து நிமிர்ந்து நின்னு திரும்பவும் ஓடணும் வாழணும். அதுமட்டும் இந்த மூன்று வருஷ வாழ்க்கையில் நான் படிச்ச வாழ்க்கைப் பாடம். அதிலிருந்து நான் தெளிஞ்சிட்டேன். காதல் என்கின்ற பைத்தியக்காரத்தனத்தை நான் திரும்பவும் வாழ்க்கையில் செய்யப்போறதில்லை. அதுவும் நீ என் வாழ்க்கையில் வரக்கூடாதுன்னு தெளிவாக இருக்கேன் .தயவு செய்து என்னையும் என் மகளையும் எங்கபோக்குல வாழவிட்று. உனக்கு பொண்ணுவேணும்னா வேற கல்யாணம் தாரளமாக செய்துக்கோ. அதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் கிடையாது. என்னைக் காதலிக்கிறேன்னு சொன்னியே இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டியேன்னு நான் வந்து உன்மீது குற்றமும் சுமத்தமாட்டேன். போதுமோ.என்னைக் கொண்டு என் வீட்டுல விட்று”

காரை ஒதுக்கிவிட்டவன் அமைதியாக அவளையே பார்த்திருந்தான்.

“ப்ச்ச் இப்படி உத்து உத்துப் பார்த்தால் எல்லாம் நான் மனசு மாறமாட்டேன். மனசு காயப்பட்டு ரணப்பட்டு அப்படியே மறத்துப்போச்சு. நீ என்னப் பண்ணினாலும் நான் பழைய ராதாவாக மாறி உன்மேல் காதலைப் பொழிவேன்னு கனவுகாணத. அது வெறும் கனவுதான். உன்கூட சண்டைப்போடக்கூட நான் விரும்பவில்லை. தயவு செய்து என்னை வாழவிடு. அதுவே நீ எனக்கு செய்கிற உபகாரமாக இருக்கும்”என்று கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டுக்கொண்டாள்.

அதைப்பார்த்ததும் பதறி அவளது கையைப்பிடித்து தனது கைகளுக்குள் வைத்தவனுக்கு கண்கள் கலங்கிவிட்டது.

தனது தாலியை வாங்கிக்கொண்டு எவ்வளவு சந்தோசமாக என்னோடு என் வீட்டுக் வாழவந்தாள்.அவளது கண்களில் அத்தனைக் காதலும் அன்பும் ஆசையும் வழிந்தோட தனது கையைப்பிடித்து வீட்டுக்குள் வாழவந்தவளை எந்தமாதிரி பார்த்துக்கிட்டேன்.அவளது காதலை உடைத்து மனதை சிதைத்து வேண்டாம் என்று குழந்தையோடு தள்ளிவிட்டு வந்திருக்கேன்.அப்போ அவளது மனதின் காயம் எவ்வளவை ஆழமாகவும் வலிநிறைந்ததாகவும் இருக்கும் என்று அப்போது உணர்ந்தான்.

அதனால் மயிலு என்று குரல் நடுங்கக் கூப்பிட்டவன் “மன்னிச்சிடுன்னு நான் கேட்கமாட்டேன்.ரொம்ப பெரிய தப்புப் பண்ணிட்டேன்னு மறுபடியும் உன்னைப் பார்த்தபோதே உணர்ந்துட்டேன்.என்னை மட்டும் நம்பி என்னோடு வாழவந்தவளுக்கு நான் எந்த நியாயமும் செய்யாது அம்மா பாசம் அக்கா பாசம் அவங்கதான் பெருசு நீயெல்லாம் அடுத்தவதானேன்னு தெனாவெட்டு திமிரில் செய்ததுக்கு மன்னிப்புக் கிடையாதுதான்.ஆனாலும் எனக்கு இரண்டாவது வாய்ப்புத் தாயேன்.நான் செய்த தப்பையெல்லாம் சரிசெய்து திருத்திக்கிறேன்.உன்னோடு நான் வாழணும்னு உன்மேல உண்மையான காதலோடும் அன்போடும் கேட்கிறேன் மயிலு.எனக்கு நம்பிக்கை இருக்கு.உன்னோடு சாகுறவரைக்கும் காதலோடு இருப்பேன்னு.இதுல எந்த மாற்றமும் இருக்காது”என்று கண்களின் ஓரம் ஈரம் கசிய அவளிடம் தனது காதல் வாழ்க்கையை யாசித்தான்.

அதைக்கேட்டவள் அவனது கண்களைத் தீர்க்கமாகப் பார்த்தவள் அப்படியே அவனது கையில் இருந்து தனது கையை உருவியெடுத்தவள் எதுவுமே பேசாது அமைதியாக ரோட்டைப்பார்த்தாள்.

“நீ பதிலெதுவும் சொல்லமாட்டியா? நீ முடியும்னு சொன்னாலும் சரி முடியாதுன்னு சொன்னாலும் சரி நான் உன்னைத்தான் காதலிக்கிறேன்.உன் பின்னாடியேதான் வருவேன்.உன் மனசு மாறினாலும் மாறாட்டாலும் இந்த ஜென்மத்தில் நீதான் எனக்கு எல்லாமே அதையாராலும் என் மனசுல இருந்து எடுத்துப்போட முடியாது.நீயும் என்குழந்தையும் எனக்குப்போதும் மயிலு”என்று அவளது கன்னத்தில் முத்தம் வைத்தான்.

ச்ச்சீ என்ன பண்ற என்று கன்னத்தைத் துடைத்து முகத்தைச் சுழித்துச்சொன்னவளைப் பார்த்து அவனது இதயமே கிழிந்துப்போனது.

அவனது முகமே மாறிற்று வேதனையில் அவளை அப்படியே பார்த்திருந்தான்.

அதைப்பார்த்து தன்னை நிதானப்படுத்தியவள் “மூணுவருஷமா நான் மனசுக்குள்ள அதிகமா வெறுக்கிறது உன்னையும் உன் குடும்பத்தாரையும்தான்.அது இயல்பா ச்ச்சீன்னு வந்துட்டு. தயவு செய்து தொட்டுப்பேசாத. பிடிக்கலை.என்னைவிட்டு விலகியே இரு அது எனக்கு நல்லது”என்று முடிவாகப் பேசிமுடித்துவிட்டாள்.

அதற்குமேல் அவளிடம்பேசாது வண்டியை எடுத்தவன் நேராக அவளது வீட்டில் கொண்டு இறக்கிவிட்டான்.

அவள் இறங்கியதும் திரும்பியே பார்க்காது நடந்தாள்.உடனே மயிலு என்று கூப்பிட்டான்.

அவள் திரும்பிப் பார்க்கவும் பறக்கும் முத்தம் கொடுத்துவிட்டுக் காரைவேகமாக அங்கிருந்து எடுத்து வந்துவிட்டான்.

அதைப்பார்த்தவளுக்கு வெறுப்பின் உச்சம் தொட்டிருந்தது அவளது காதல் மனது!