தெள்ளழகே-12

தெள்ளழகே!-12
ராதாவின் மூளையோ மகள் மகள் என்றே அனத்திக் கொண்டிருந்தது. அடுத்து இரண்டு நாள் ஹாஸ்பிட்டலில் இருந்து முற்றிலும் குணமாகி வீட்டிற்கு வந்துவிட்டாள்.
அந்த இரண்டுநாளில் தாமரையிடமும் நல்லத்தம்பியிடமும் சின்னதாக ஒரு மாற்றம் வந்திருந்தது.
மணிகண்டனையும் செல்வத்தையும் அழைத்தார் ”உங்களுக்கென்று வேலையும் சம்பாத்தியமும் இருக்குத்தானே நீங்க உங்க குடும்பத்தோடு தனிக்குடித்தனம் போயிடுங்க. உங்களுக்கான சொத்துக்கள் எல்லாம் என் காலத்துக்குப் பிறகு உங்க கைக்கு வந்திடும்.அதுல மூணு பங்கு வைப்பேன். ராதாவுக்கும் மூணுல ஒரு பங்கு உண்டு.அப்புறம் நான் செத்து என் பொண்டாட்டி இருந்தால் கண்டிப்பா உங்க பொண்டாட்டிங்க இரண்டுபேரும் பார்க்கமாட்டாளுங்கன்னு தெரியும். அவளுக்கு என் பென்சன் வருது அதுபோதும்னாலும் என் மகள் ராதா அவளை நல்லா பார்த்துப்பா அதேமாதிரிதான் அவ செத்து நான் இருந்தாலும் நடக்கும்”என்று சொல்லிதான் முடித்தார்.
உடனே மைதிலி “அதெப்படி மூணு பங்கு வைப்பீங்க. அதுதான் ராதாவுக்கு நகைபோட்டுக் கல்யாணம் பண்ணிக் கொடுத்தாச்சுல” என்று சட்டம் பேசினாள்.
“இப்படி ஏதாவது குறுக்காமறுக்கா பேசினன்னு வை உன்னையும் உன் புருஷனையும் சேர்த்து அடிச்சுத் தூக்கிக் கிணத்துல போட்டிருவேன். சட்டம் பேச வந்துட்டா சட்டம். இவளும் இவ தங்கச்சிக்காரியும் சேர்ந்துதான் அவங்கம்மாகிட்ட சொல்லிக்குடுத்து நம்ம ராதாவை கொடுமைப் படுத்திருக்காங்க.அவ ஏதாவது பேசினா படிச்சவ எங்களை மதிக்கமாட்டுக்கா எதிர்த்துப்பேசுறா அதுஇதுன்னு கிருஷ்ணன்கிட்ட நீலிக்கண்ணீர் வடித்து இரண்டுபேருக்கும் நித்தமும் சண்டையை தூண்டிவிட்டு அடிக்க வைச்சிருக்காங்க. அந்த பரதேசியும் என்ன நடந்ததுன்னு யோசிக்காமலே முரட்டு முட்டாளாக சண்டைப்போட்டு என் மகளை இப்போ தள்ளி வைச்சிருக்கான்”
“அப்பா அங்க நடந்தது எதுவும் தெரியாமல் நீங்க பாட்டுக்கு மைதிலியை ஏன் குறை சொல்லுறீங்க. அவ எப்பவுமே அப்படி எல்லாம் பண்ண மாட்டாள். ராதாதான் அங்க பிரச்சனை பண்ணி மாமியார் மருமகள் சண்டை வந்திருக்கு. கிருஷ்ணன் கூட சண்டை போட்டு இருக்கா. அதுக்கு மைதிலி என்ன பண்ணுவ? எதுக்கு மைதிலியை திட்டுறீங்க” என்று மணிகண்டன் அவனது அப்பாவையே எதிர்த்து பேசினான்.
“வாடா நல்லவனே கல்யாணம் முடிஞ்ச நாளிலிருந்து உன் பொண்டாட்டிக்கு சப்போர்ட் பண்றேன்னு சந்தோஷம் தான். ஆனா உன் பொண்டாட்டி தப்பே பண்ணினாலும் அதை நியாயம் தீர்க்க பாரு அதுல தான் நீ பெரிய கில்லாடி. உன் தங்கச்சி அங்க பசியும் பட்டினியுமாக கிடந்திருக்கா. நல்ல கொடுமைப்படுத்தி இருக்காங்க. அதெல்லாம் கிருஷ்ணன் தட்டியே கேட்கலை. ஆனா அவங்க அம்மாவை ராதா எதிர்த்து நின்னதுக்கு என் பிள்ளையைப் போட்டு அடிச்சிருக்கான். கர்ப்பமா இருக்கும் போது எதுவுமே செய்யல .அப்படியே இங்க வந்துட்டாள். அவளுக்குக் குழந்தை பிறந்ததுக்கு அப்புறம் அவன் வந்தானா? இல்லையே! குழந்தையுடன் சேர்த்து விவாகரத்து வாங்கிட்டு வந்தாச்சு. இந்த மூணு வருஷத்துல என்னைக்காவது பொண்டாட்டியைப் பார்க்கல வரல. மகளையாவது பார்க்க வந்திருக்கானா? சரி அது கூட இல்லை பிரிஞ்சிட்டாங்க ரெண்டு பேரும் வாழ்க்கை தனித்தனியா பாத்துட்டு போகலாம்ல. இப்ப எதுக்கு குழந்தை வேணும்னு வந்து எடுத்துட்டு போய் இருக்கான்? அப்போ அங்க ஏதோ சந்தேகம் இருக்குல்ல”
“ஏன் என் தம்பிக்கு மகள் மேல பாசம் இருக்கக் கூடாதா என்ன? இல்ல அந்த குழந்தை என் தம்பிக்கு பிறக்கலையா?” என்று மைதிலி அசிங்கமாக பேசினாள்.
அவ்வளவுதான் நல்லத்தம்பி மைதிலியை அடிக்கப் போய்விட்டார்.
“இதுக்குமேல என் மகளைப்பத்தி ஏதாவது பேசின நாக்கு அறுத்திடுவேன் உங்கப்பனும் அம்மையும் வந்துக் கேட்கமுடியாது. தரங்கெட்ட நாயே யாரப்பாத்து என்ன பேசுற? என் மக அவ” என்று சத்தம் போட்டது மணிகண்டனை அரண்டுவிட்டான்.
“தாமரை தான் சும்மா இருங்க அவங்ககிட்ட எதுக்கு இப்போ சண்டைப்போடுறீங்க. உங்க மகளைத்தானே கண்டிச்சு வைக்கணும். ஆம்பளை பிள்ளைங்களை திட்டுறீங்க” என்று இப்போதும் தாமரை மகன்களுக்காகத்தான் பேசினார்.
“அடியே கிறுக்கச்சி உனக்கு இன்னும் அறிவு வரலையா? இவனுங்க லாம் உன்னை என் காலத்துக்கு அப்புறம் வைச்சு தாங்குவாங்கன்னு நினைக்கிறியா? உன் மகன் பாசத்துக்கு ஒரு அளவில்லாம போயிட்டு. உன் மகள் மேலே கொஞ்சம் அக்கறையை வை. உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் மாமியார் வீட்ல இன்னும் மகள்களை அடிமைகளாக உருவாக்கிட்டு இருக்கீங்க. மகன்கள் பார்த்து பார்த்து மகள்களை கவனிக்கிறதில்லை. நம்ம பெத்த மூணு பிள்ளைகளையும் ஒன்னா ஒழுங்கா கவனி. எப்போ பாரு வார்த்தையாலயே ராதாவ காயப்படுத்திக்கிட்டே இருக்க. நானும் சரி நம்ம பொண்டாட்டி நம்ம பிள்ளைக்கு நல்லதைதானே செய்வா நினைச்சுட்டு இருந்தா நீ அவளை கறிச்சு கொட்டிக்கிட்டே இருக்க”
“அவ மாமியார் வீட்டில் நல்லபடியா வாழ்ந்தால் எதற்கு இவ்வளவு திட்டப்போறேன். இப்ப வாழ்க்கையை இழந்துட்டு வந்து வாழாவெட்டியா நிக்கிறாளே! அவளுடைய எதிர்காலத்துக்கு யாரு பொறுப்பு? யாரு பார்த்துப்பா? என்று கேள்வி கேட்டதும் நல்லத்தம்பி தலையில் அடித்துக் கொண்டார்.
இதே மாதிரி என்னைக்காவது ஒரு மருமகள் பத்தி பேசி இருக்கியா? உன்கிட்ட நல்லபடி நடந்திருக்காளா? இல்ல இங்க வீட்டுல இருக்கவங்ககிட்டாயாவது நல்லபடியா நடந்திருக்காளா? இல்லையே. ஆனால் நீ எவ்வளவு சகிச்சுக்கிட்டு தானே போற. அப்புறம் நம்ம மகள் பொறுமையாக் இருந்தும் கஷ்டப்பட்டு வாழ்க்கை இழந்துட்டு வந்து நிற்கிறாளே அவளுக்கு நீ எவ்வளவு அணுசரனையா இருந்திருக்கணும்” என்றதும் அமைதியாகிவிட்டார்.
இதெல்லாம் கேட்டுக் கொண்டிருந்த ராதா யாரோ யாருக்காக பேசுகிறார்கள் என்று அமைதியாக இருந்தாள்.
அவளது மனது ஏற்கனவே தனது வாழ்க்கையில் பட்ட அடியை நினைத்தும் இவர்கள் பேசின பேச்சுகளை நினைத்தும் அப்படியே ரணமாக மாறி அது காய்ப்பு காத்துவிட்டது.
இப்பொழுது உணர்வுகளை வெளிக் காட்டாத அளவுக்கு மரத்து போயிருந்தாள் என்பதால் அதை கண்டு கொள்ளவே இல்லை.
இப்படி எங்களுக்கு சொத்துக்கள் தராமல் தனிக்குடித்தனம் போகணும்னு சொன்னா நாங்க எப்படி போக முடியும்? என்று மைதிலி திரும்பவும் பேச ஆரம்பித்தாள்.
உடனே நல்லத்தம்பி “இங்கப்பாரு தனிக்குடித்தனம் போங்க, உன் வீட்டுக்காரன் சம்பாத்தியத்தில் வாழு. அப்படி வாழக் கஷ்டமாக இருந்துச்சுன்னா உங்க அப்பா வீட்டில கல்குவாரி இருக்குல. அதுல பங்கு கேட்டு வாங்கி அதுல வாழ்கையை வாழுங்க. சொத்துக்காக கேஸ் போடுவேன் அது போடுவேன் இது போடுன்னு யாராவது வந்தீங்கன்னா மொத்த சொத்தையும் மகளுக்கு எழுதி வெச்சிருவேன்”என்று ஒரு மிரட்டல் போட்டு விட்டார்.
மைதிலி வீட்டில் இருக்கிற ஒரு கல்குவாரி வைத்துதான் சம்பாத்தியம் பண்ணுகிறார்கள். வேறு கொஞ்சம் சொத்து இருக்கிறது. அதனால் நாகேஸ்வரிக்கும் மைதிலிக்கும் நிறைய நகைகள் போட்டு கட்டி கொடுத்து விட்டனர். திரும்ப போயி அங்கு பங்குகள் கேட்கமுடியாது .
அதற்கு ஆவுடையப்பனும் கிருஷ்ணனும் சம்மதிக்க மாட்டார்கள். அவர்கள் சம்மதித்தாலும் பூங்கோதை மகனுக்கு மட்டும்தான் கால்குவாரி என்று ஏற்கனவே சொல்லிவிட்டார் என்பதால் வாயையே திறக்கமுடியாது.
மைதிலிக்கும் நாகேஸ்வரிக்கும் நகைகள் போட்டதோடு சரி இனி எந்தபங்கும் சொத்தில் இருந்து கிடையாது எந்த உறுதியாக சொல்லிவிட்டார்.
கிருஷ்ணன் இப்போது நிறைய ராதாவைப் பத்தியே யோசிக்க ஆரம்பித்தான்.ராதா விசயத்தில் கொஞ்சம் அடக்கி வாசித்து இருக்கணுமோ? என்று நினைத்தான்.
ஆனால் அது காலம் கடந்து போனது என்று அவனுக்கு தெரியவில்லை!.
செல்வமோ எதுலயும் தலையிடதா அப்பா சொல்லுவதை அப்படியே கேட்டுக்கொண்டிருந்தான்.
செல்வம் உனக்கு ஏதாவது சொல்ல வேண்டியதிருக்கா? என்று நலல்தம்பி கேட்டார்.
“இல்லாப்பா உங்க முடிவு எதுவோ அதை கேட்டுக்கிறோம். நாங்க தனிகுடித்தனம் போயிடுறோம்” என்று முடித்துவிட்டான்.
“காவேரிதான் அதெப்படிங்க முடியும். வீடு எடுக்கணும். வாடகை சாப்பாடுன்னு எல்லாம் சிட்டிக்குள்ள எகிறுமே. இதுவரைக்கும் மாமா சம்பாத்தியத்துலயே நடத்திட்டோம். வீடு வாங்கிட்டாக்கூட போயிடலாம். என்ன பண்றது?”
“உன் நகையும் சேவிங்க்ஸூம் இருக்குல்ல.அதை வைச்சு வீடு வாங்கிடலாம்”
“என்ன?”
“மைதிலிக்கூட சேர்ந்து என் தங்கச்சியை நோகடிச்சல்ல வாங்கிக்கட்டிக்க” என்று ஒரே வார்த்தையில் முடித்துவிட்டான்.
அங்கு நடந்ததைக் கண்டுக்காது தனது மகளோடு பால்கனியில் இருந்து வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
மனுஷங்க நாக்கு எப்போனாலும் மாத்தி மாத்திப்பேசும்னு புரிந்ததால் மகளோடு மட்டும் தனிமையில் இருந்தாள்.
மைதிலியால் இதைத் தாங்கிக்க முடியாது நேராக நான் “இனி எங்கம்மா வீட்டோடு இருந்துக்கிறேன். இனி இங்க வாழவரமாட்டேன்” என்று இரண்டு குழந்தைகளோடு அங்கு சென்றுவிட்டாள்.
பூங்கோதைக்கு ஆத்திரம் தாங்காது மொத்தக் குடும்பத்துக்கும் சாபம் கொடுத்தார்.
அதைப்பார்த்து ஆவுடையப்பன் யோசித்துக் கொண்டிருந்தார்.
“என்னங்க நீங்க இப்படி பேசாமல் இருக்கீங்க?”என்று பூங்கோதை கேட்டார்.
கிருஷ்ணனுக்கும் இப்போது யோசனைதான்’ஏன் மாமா இப்போதைக்கு தனிக்குடித்தனம் போகச்சொன்னாரு. ராதாவுடைய வாழ்க்கையை யோசிக்கிறாரோ? என்று குழப்போத்தோடு இருந்தான்.
மைதிலியைப் பத்திக்கவலை இல்லை.எப்படியும் மணிகண்டன் மச்சான் அக்காவையும் குழந்தையையும் தேடி வந்திடுவாரு என்று நிம்மதியாக உணர்ந்தான்.
இதே ஒரு நிம்மதியை நான் ராதா குடும்பத்தாருக்கு என்னைக்காவது குடுத்திருக்கனா?அதுவும் அவளை உயிருக்குயிராக காதலிச்சவன். அந்த நம்பிக்கையைக் குடுக்கவேயில்லையே? அப்போ நான் அவளோடு என்ன வாழ்க்கையை வாழ்ந்தேன்? என திரும்பி தனது அம்மாவையே பார்த்தான்.
ராதாவை எந்தளவுக்கு அடிமனதில் இருந்து வெறுக்கிறார்கள் என்பது
அவருடைய பேச்சுக்களிலே தெரிந்தது.
ஒருவேளை ராதாவை அம்மாவுக்கு முதலில் இருந்தே பிடிக்கவில்லையோ? எனக்காக கல்யாணத்துக்கு தலையாட்டிட்டாங்களோ? என்று முதன்முறையாக உண்மையை உணர்ந்தான்.
இதுக்கு இனி என்ன முடிவு எடுக்கமுடியும்? ஏற்கனவே முடிஞ்சுப்போன விசயத்துக்கு யாரால் முடிவு எடுக்கமுடியும்? என்று எழுந்து கோவில் காரியங்களைப் பார்க்க நண்பர்களுடன் சென்றுவிட்டான்.
ஆவுடையப்பன் நேராக சிவலிங்கம் வீட்டிற்குச் சென்றவர் “கிருஷ்ணன் தருணிகா கல்யாணத்தை சீக்கிரம் நடத்திடவேண்டும் நிச்சயம் வைக்கணும்னு திட்டம் போட்ட நாளிலே கல்யாணத்தை வைத்துவிடலாம் என்று முடிவு எடுத்து பத்திரிக்கையும் அடிக்கக்கொடுத்துவிட்டுத்தான் மாலைவேளை கோவிலுக்கு வந்தார்.
சாயங்கால வேளை பூஜைக்கு எல்லோரும் குடும்பமாக வந்திருந்தனர்.
அவரவர் குடும்பத்தோடு கண்களை மூடி சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ராதாவும் நெடுநாளைக்குப்பிறகு மனதுருகி மகளோடு சாமிக் கும்பிட்டுக் கொண்டிருந்தாள்.
கண்களைமூடி பிரார்த்தித்துக் கொண்டிருந்தவளை கண்களைது திறந்து பார்த்துக் கொண்டேயிருந்தான் கிருஷ்ணன்.
கிட்டதட்ட மூன்று வருடங்களுக்குப் பின்பு இப்போதான் இங்கே வந்திருக்கிறாள்.அதுவும் மகளோடு வந்திருக்கிறாள்.
இதே பழைய ராதாவாக இருந்தாளென்றால் அவனோடு ஒட்டி உரசிக்கொண்டு அவன் கவனிக்காது வந்தாலும் ஏதாவது பேசிக்கொண்டே வருவாள்.
அவன் அவளை மதிக்காது நடந்தாலும் ஓடிவந்து கையோடு கையைக்கோர்த்துக்கொண்டு மச்சான் மச்சான் என்று மூச்சுக்கு மூச்சு கூப்பிட்டுக்கொண்டே வருவாள்.
அவன் கெத்தாக ஆம்பளை என்கின்ற திமிரோடு நடக்கும்போது வளைந்துக் குழைந்துத் தன்னோடு வம்பிழுத்து பேசும் ராதாவை அவன் தொலைத்த பின்னும் அதே கம்பீரத்தோடு மூன்று வருடம் கடந்தாலும் அவனுக்குள்ளிருந்த சந்தோசம் மொத்தமாகக் காணாமல் போயிருந்ததே இன்றுதான் கண்டுப்பிடித்தான்.
கிருஷ்ணன் ராதாவையே பார்த்திருக்க அவனை கொஞ்சம் நெற்றி சுருக்கி சந்தேகத்தோடு தருணிகா பார்த்திருந்தாள்.