தெள்ளழகே-10

தெள்ளழகே!-10
அடுத்நாள் காலையில் கண்முழித்த ராதாவுக்கு ஹாஸ்பிட்டல்ல இருக்கிறோம் என்றதுமே படபடவென்று மனது அடித்துக்கொண்டது.
எனக்கு என்னாச்சு?என்று முழித்தவள் பக்கத்தில் இருந்த அம்மாவிடம் கேட்காமல் அப்படியே தூரத்தில் நின்றிருந்த நர்ஸை அழைத்துக்கேட்டாள்.
அவர் வந்து நடந்ததைச் சொன்னதும் “எனக்கு என் பாப்பாவைப் பார்க்கணும். எங்கப்பா வெளியே பாப்பாவை வைச்சிட்டிருந்தா உள்ளக் கூப்பிடுங்களேன்” என்று பரிதாபமாகக் கேட்டாள்.
“வெண்ணிலா இங்க இல்லை.மாப்ளே தூக்கிட்டுப் போயிட்டாரு” என்ற தாமரை சொன்னதும்தான் எங்கிருந்துதான் அவ்வளவு கோபமும் வேகமும் வந்ததோ அவளுக்கு தெரியவில்லை.
அவள் கையிலிருந்த ட்ரிப் நீடிலை உருவியெடுத்தவள் “யாருக்கிட்டக் கேட்டு என் மகளை அந்தாளுக்கிட்டக் குடுத்தீங்க? அவளை பத்துமாசம் வேணும் வேணும்னு பெத்தவ நான்.உன்னை மாதிரி அம்மா நான் இல்லை.என் மகள் எங்கிருந்தாலும் பாதுகாப்பாக இருப்பாள். எப்படி இருந்தால் நல்லாயிருப்பான்னு அறிஞ்சு புரிஞ்சு வளர்க்கிறவ. உன்னைய மாதிரி பெத்தமகள்கிட்ட இராட்சஷியாக நிக்காமல் வளர்க்கிறேன். யாருக்கிட்டக் கேட்டு என் மகளை அந்த வீட்டுக்கு அனுப்புவ?” என்று இவ்வளவு நாளும் பேசாத பேச்சைப்பேசினாள்.
தாமாரையே அரண்டுவிட்டார். இவளென்ன இப்படி பேய்பிடிச்சவள் மாதிரி ஆடுறா? என்று அவளைப்பிடித்து படுக்கவைக்க முயன்றார். ம்ஹூம் அவரால் முடியவில்லை.
அதற்குள் நல்லத்தம்பி உள்ளே வந்தவர் தாமரையிடம் விபரம் கேட்டார்.அவர் சொல்லுவதற்குள் “யாருக்கிட்டக்கேட்டு என் குழந்தையை அவருக்கிட்டக் குடுத்துவிட்டீங்க. எனக்கு என் பாப்பா இப்போ வேணும்” என்று சண்டைப்போட்டாள்.
ராதா! என்று சத்தமாக அதட்டினார். அவளோ அதையெல்லாம் கேட்கும் மனநிலையில் இல்லை!
ராதா நல்லதம்பியையும் சும்மாவிடவில்லை ”என்னை விடுங்கப்பா? அந்த வீடு எனக்கும் நரகம் என் மகளுக்கும் நரகம் நான் என் பாப்பாவை அங்கிருந்துக் கூட்டிட்டு வரணும்.விடுங்கப்பா” என்று ஹாஸ்பிட்டலே அதிரும் அளவுக்கு சத்தமிட்டாள்.
அவளை யாராலையும் கட்டுப்படுத்த முடியவில்லை.உடனே மணிகண்டனுக்குப் போன் பண்ணி வெண்ணிலாவை கிருஷ்ணனிடமிருந்து அழைத்து வரச்சொன்னார்.
கிருஷ்ணனோ தூங்கி முழித்து அம்மாவைத் தேடி அழும் மகளை வைத்துக் கொண்டு என்ன செய்வது? என்று தெரியாது வேகமாகக் கிளம்பி அவளைத் தூக்கினான்.
வெண்ணிலாவோ இதுவரை போட்டோவில் மட்டுமே பார்த்திருந்த அப்பாவை நேரில் பார்த்ததும் முதலில் அழுதாள்.அதன்பின் அமைதிமாகி அப்பா என்று அழைத்துச் சிரித்தாள்.
ஒருநொடியில் உலகமே அவனது காலடியில் விழுந்துவிட்டது போன்று தோன்றியது.
“அப்பாஆஆஆஆவா! அப்போ என்னை அடையாளம் காட்டி சொல்லிக் குடுத்துத்தான் வளர்த்திருக்கிறாளா?”என்று மகளையே பார்த்திருந்தான்.
வெண்ணிலாவோ மெதுவாக “அம்மாட்ட போகணும் பாட்டிய பார்க்கணும்” என்று லேசாக சிணுங்கினாள்.
உடனே அவளை வாரியெடுத்தவனுக்கு மகளை தனது கையில் தூக்கி வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது.
அதனால் அவளை தூக்கிக் கொண்ட அப்படியே வெளியே வந்தவன் தனது அம்மாவின் அறைக்குள் செல்லவும் அங்கே நாகேஸ்வரி உட்கார்ந்திருந்தாள்.
தனது மகன் கையில் ஒரு பெண் குழந்தை இருக்கிறதே என்று பூங்கோதை யோசனையில் அவளை பார்க்கவும் “அம்மா இது யார் தெரியுதா என்று குரல் கமர கேட்டாலும் பூங்கோதைச் சொல்லவும் நாகேஸ்வரி உடனே அதுதான் மூஞ்சிலேயே எழுதிஒட்டியிருக்கே ராதா மகள்னு” இதைவேற நீ தனியா சொல்லனுமா என்ன இதையே அக்கா சொல்லிட்டா. ராத்திரி நீ உன் மகளை தூக்கிட்டு வந்தது வரைக்கும் போன்ல சொல்லிட்டா. என்ன புதுசா பாசம் எல்லாம் ஒட்டுது என்று முகத்தில் அடித்தார் போல் கேட்டாள்.
அதைக் கேட்டதும் கிருஷ்ணனுக்கு அவ்வளவு கோபம் வந்தது “நீ எல்லாம் மனுஷியா? ராதா மகள்னு மொட்டையா சொல்லுறா? இது என் மகள். என் இரத்தம் நான் தூக்கிட்டு வந்து இருக்கேன். அவளை நான் பிறந்ததிலிருந்து பார்க்கவேயில்லை. இப்போதான் பார்க்கிறேன். கோர்ட்ல வச்சு கூட கோவத்துல குழந்தை பார்க்காமல் வந்துட்டேன். அவ்வளவு கர்ணகொடூரனாக இருந்திருக்கேன். என்னைக்கு இருந்தாலும் அவஎன் மகள் நான் அவனுக்கு அப்பன். நீ எப்படி இப்படி பேசலாம் நாகேஸ்வரி? நீ என் அக்கா என்றாலும் உனக்குன்னு ஒரு எல்லை இருக்கு அதோட நின்னுக்கோ” என்று முதல்முறையாக அக்காவை திட்டினான்.
அதை நாகேஷ்வரி எதிர்பார்க்கவில்லை ”என்னடா தம்பி திடீர்னு உன் மகளைக்கூட்டிட்டு வந்ததும் எங்கமேல உள்ள பாசமெல்லாம் அவள் பக்கம் திரும்பிட்டோ? இல்லை இது அந்த திமிர்பிடிச்சவ பண்ற நாடகமா? அங்க ஊர்ல உள்ளவனையெல்லாம் பொண்ணுப்பார்க்க வரச்சொல்லிட்டு இங்கவந்ததும் உன்ன மறுபடியும் மயக்கப்பார்க்கிறாபோல. அதுக்குத்தான் இவளை இங்க அனுப்பிருப்பா. அவதான் எல்லாத்துலயும் சாகசக்காரியாச்சே. ஏய் இறங்குடி என் தம்பிக்கிட்ட இருந்து”என்று வெண்ணிலாவை கிருஷ்ணனிடமிருந்து இழுத்து கீழே இறக்கி விடப் பார்த்தாள்.
கிருஷ்ணனுக்கு சட்டென்று கோபம் வந்து நாகேஷ்வரியை தனது அக்கா என்றுக்கூட பார்க்காமல் பட்டென்று அறைந்துவிட்டான்.
“இங்கப்பாரு இங்க வந்தியா சோத்தை மூணுவேளையும் தின்னியா இங்கிருந்து உன் புருஷன்வீட்டுக்கு எதையாவது அள்ளிட்டுப்போனியா அத்தோடு நிறுத்திக்க. நான் என் மகளைத் தூக்குவேன் கொஞ்சுவேன். இல்லை நானே வளர்ப்பேன் இதுல உனக்கென்ன பிரச்சனை?ஆமா அப்படி ராதா உனக்கு என்ன கொடுமையும் கெடுதலும் பண்ணிட்டான்னு இப்படி அவளை திட்டுற? உன் கல்யாணம் முடிஞ்சுதானே என் கல்யாணம் நடந்துச்சு. நீ இங்க அடிக்கடி வந்து ஏனு டேரோ போடுற? உன் புருஷன் வீட்டுல இருந்திருக்க வேண்டியதுதானே. இதுக்குமேல ஏதாவது பேசின நல்லாயிருக்காது” என்று கோபத்தில் சத்தம் போட்டதில் எல்லோருமே அரண்டுவிட்டனர்.
பூங்கோதைக்கு புரிந்துவிட்டது’மகனுக்கு பிள்ளைப்பாசம் தலைக்கு ஏறிட்டு இப்போ என்ன சொன்னாலும் பிரச்சனையாகும்.நம்ம தணிஞ்சுப்போனால்தான் அடுத்து இரண்டாவது கல்யாணம் பண்ணிப்பான். இரண்டாங்கல்யாணம் முடிச்சுட்டாலே இந்த பிள்ளைப் பாசமெல்லாம் புதுப் பொண்டாட்டிமேல தாவிடும், அதுவரைக்கும் விட்டுப்பிடி கோதை’என்று தனக்குத்தானே சமாதனாம் செய்துக்கொண்டு கிருஷ்ணனின் அருகில் சென்றார்.
“யாரு இது என் பேத்தியா? எத்தனை வருஷமா காத்திருக்கேன் பார்க்கிறதுக்கு. இப்போதான் கடவுள் கண்ணைத் திறந்திருக்காரு. வாம்மா என் தங்கப்புள்ள” என்று வெண்ணிலாவை வாங்குவதற்குக் கையை நீட்டினார்.
அவளோ மிரண்டுப்போய் அவனது தோளில் சாய்ந்துக்கொண்டாள்.
அதைப்பார்த்ததும் பூங்கோதைக்கு பத்திட்டு வந்தது, ஆனாலும் அதைக் காண்பிக்காது அப்படியே கண்ணீரைத் துடைத்தவர் ”பார்த்தியா சொந்தப் பேத்திக்கே நம்மை அடையாளம் தெரியாமல் வளர்த்து வைச்சிருக்காங்க. என்னத்தைச் சொல்லுறது. நம்ம குடுத்து வைச்சது அவ்வளவுதான்”என்று பேத்தியின் கையைப் பிடித்து முத்தம் கொடுத்தார்.
ஆவுடையப்பனுக்கும் பேத்தியைப் பார்த்ததும் சந்தோசத்தில் அவளை எடுத்துக்க வந்தார் அவரிடமும் அவள் செல்லவில்லை.
இப்போது மைதிலி குழந்தைகளோடு உள்ளே நுழைந்ததை வெண்ணிலா பார்த்து ஐயோ அத்தை அடிக்கும் என்று கண்களை மூடிக்கொண்டாள்.
அவனுக்கு படக்குன்னு நெஞ்சுக்குள் யாரோ குத்தியது போன்றிருந்தது.
“நான்தான் என் மகளை ராதாவின் மேலிருந்த கோபத்திலும் வெறுப்பிலும் சண்டை போட்டதிலும் பார்க்காமல் வைராக்கியமாக இருந்தேன். ஆனால் ஒரே வீட்டில் பிறந்ததிலிருந்து என் மகளை பார்த்து கொண்டிருக்கும் மைதிலியைக் கண்டதும் என் மகள் ஏன் இப்படி அரண்டு கண்ணை மூடிக்கிறா?” என்று அவனுக்குள்ளே கேள்வி கேட்டவரே மைதிலியைப் பார்த்தான்.
அவளோ வெண்ணிலாவைப் பார்த்ததும் “இவளை இன்னும் அவ அம்மாகாரிக்கிட்ட கொண்டுவிடலயா நீ? இவள எதுக்கு நீ இன்னும் சுமந்துட்டிருக்க? ஹாஸ்பிட்டல்லக் கொண்டு விட்டுட்டுவா. உனக்கு இன்னும் பத்துநாள்ல கல்யாணம் நிச்சயம் இருக்கு.இப்போ முதல் பொண்ட்டிக்கு பிறந்தக் குழந்தையை கொஞ்சிக்கிட்டிருக்கான்னு பேசுவாங்க. என்ன திடீர்னு பாசம் ஒட்டுது.நானெல்லாம் இதை பார்த்தாலே விரட்டிவிட்டுடுவேன். கண்ணுலயே காணவொட்டாது எனக்கு” என்று முகத்தைச் சுழித்துக்கொண்டுப் பேசினாள்.
அதைக்கேட்டவனுக்கு மண்டைக்குள் குழவிக்கொட்டியதுபோன்று சுர்ரென்றிருந்தது.
“மைதிலிக்கா உன் கல்யாணம் முடிஞ்சு உனக்கும் நம்ம நாகேஷ்வரி அக்காவுக்கும் குழந்தை நம்ம வீட்டுலதானே பிறந்துச்சு. என்னைக்காவது உங்கப் பிள்ளைங்கள நான் தூக்காமலோ கொஞ்சமாலோ இருந்தகருக்கேனா? அதைவிடு ராதா உன் பிள்ளைங்களை என்னைக்காவது கவனிக்காமல் இருந்திருக்காளா? இல்லை உன் குழந்தைகளை ஒதுக்கித்தான் வைச்சிருக்காளா? ஒருநாள்கூட முகம் சுழிச்சுக்கூட உன் பிள்ளைங்ககிட்ட பேசினதில்லை”
“அதை எதுக்குடா இப்போ பேசுற தம்பி?” என்று புரியாது கேட்டாள்.
“இந்தப் பச்சைமண்ணு என் குழந்தைதானே? ராதா உன் நாத்தனார்தானே மூணுவருஷமா ஒரே வீட்டில்தானே இருக்கீங்க.என் குழந்தைன்னு ஒருநாள்கூடவா இந்தப்பிள்ளையை நீ தூக்கிக் கொஞ்சினதில்லை?
உன்னைப் பார்த்ததும் என் மகள் பயந்து என்கிட்ட ஒட்டுறாள். என்னை அவள் பார்த்ததேயில்லை ஆனாலும் அவங்கம்மா சொல்லிக்கொடுத்து வளர்த்திருக்கா. என்கிட்ட ஒட்டிக்கிட்டாள். ஆனா நீ இருபத்திநாலு மணி நேரம் கூடவே இருக்குறவ. அதுவும் மூணு வருஷமா கூடவே இருக்க. உன்கிட்ட அவள் வர்றதுக்கு பயப்படுறா. அப்போ நீ அவளை எப்படி பாத்துக்குற?” இந்த கேள்வியோடு முடித்துவிட்டான்.
அதற்குள்ளாக மணிகண்டன் கிருஷ்ணனுக்கு போனில் அழைத்து விட்டான் மணிகண்டன் என்றதும் எடுத்து காதில் வைத்ததும் “மச்சான் இந்த ராதா ரொம்ப பிரச்சனை பண்றா. வெண்ணிலாவை நீங்க எடுத்துட்டு போனது தெரிஞ்சதும் ரொம்ப ஆர்ப்பாட்டம் பண்றா. பைத்தியம் புடிச்ச மாதிரி நடந்துக்கிறாள். என்ன பண்ணட்டும்? நீங்களே மகளை வச்சுக்கறீங்களா? அப்படின்னா இவ பைத்தியம் பிடித்து செத்தாலும் பரவாயில்லை என்று விட்றுலாம்”என்றுவிட்டு தான் மைதிலியின் கணவன் தான் கடைசி வரைக்கும் ராதாவின் அண்ணனாக இருக்கப் போவதில்லை என்பது மீண்டும் நிரூபித்தான்.
அதைக் கேட்டதும் “என்ன மச்சான் உளறிட்டு இருக்கீங்க பெத்து ரெண்டு வருஷமா வளர்த்துட்டிருக்கவ எப்படி என்கிட்ட புள்ளை விட்டு தருவா. நான் பிறந்ததுல இருந்து அவளை பார்த்ததேயில்லை. இப்போதான் அவளை தூக்கிட்டு வந்து இருக்கேன் உடனே அவளை நான் எப்படி வளர்க்க முடியும்? இல்ல எங்க வீட்ல உள்ளவங்க தான் என் மகளை ஏத்துக்கிட்டு வளர்ப்பாங்களா? அந்த அளவுக்கு இங்க யாரும் அன்பு பாசம் நிறைஞ்சு வங்களா இல்ல மச்சான்.நான் ராதாகிட்டயே வெண்ணிலாவைத் திருப்பி கொடுக்கிறேன்” என்றவன் அம்மா அக்காங்க என்று அவர்களை ஒரு முறைப் பார்த்துவிட்டு அமைதியாக மகளோடு வெளியே வந்தான்.
இப்பொழுதுதான் தனது கூட பிறந்தவர்களின் உண்மையான முகத்தை கொஞ்சம் கொஞ்சமாக கிருஷ்ணன் புரிந்து கொள்ளத்தொடங்குகிறான். ஆனால் என்ன பிரயோஜனம்?
வாழ்க்கையில் எது நடக்க கூடாதோ அதெல்லாம் நடந்து முடிந்து, பிரிவு என்பது நிரந்தரம் என்றானபின்பு, இப்பொழுது அறிவு வந்து வந்து என்ன பயன்?
ராதாவுக்கு இன்னும் நான் நியாயம் செய்திருக்க வேண்டுமோ? காதலித்தால் காதலுக்கு கொஞ்சம் உண்மையாக இருந்திருக்கணுமோ? இல்லை ராதாவிடம் பேசி புரிய வைத்திருக்கனுமோ? இது எதுவுமே நான் செய்யலையே! ஆம்பளை என்ற திமிரில் அவள் பிரிஞ்சுப்போன்னு சொல்லிவிட்டேனே
அது கூட பரவாயில்லை கணவன் மனைவிக்கான பிரிவாக இருந்தாலும் அந்த பிரிவை நிரந்தரமாக்கியது நான் தானோ? என் பக்கத்துலயேயிருந்தும் இந்த காதலையும் அவளது அன்பையும் காக்க தவறி விட்டோம் என்று மூளையை போட்டு கசக்கி பிழிந்து கொண்ட ஹாஸ்பிட்டலுக்கு போய் இறங்கினான்.