தெள்ளழகே-11

தெள்ளழகே!-11
ராதாவின் கையையும் காலையும் பிடித்து வைத்து ஊசிப் போட்டுக் கொண்டிருந்தனர்.
அதில் சத்தமாக அழுதவள் “நீங்கெல்லாம் மனுஷங்கதானா? இல்லை உண்மையில நீங்கதான் என்னைப் பெத்தீங்களா? உங்களையெல்லாம் பார்த்தாலே அருவருப்பா இருக்குது. ஒருத்தியைக் கல்யாணம் பண்ணிக்குடுத்தமே அவள் அந்த வாழ்க்கையே வேண்டாம்னு வந்திருக்காளே அவளுக்குன்னு ஒருமனசு இருக்கும்,அதுலயும் வலியிருக்கும்னு யாராவது யோசிச்சீங்களா?
கல்யாணம் பண்ணிட்டு போனாளே அங்கே அவ புருஷன் அவளை நல்லா வைச்சிருக்கானான்னு என்னைக்காவது கேட்டிருக்கீங்களா?
ஒருதடவைக்கூட கேட்டதில்ல. நான் ஏதாவது சொல்லவந்தாலும் மாமியார் வீடுன்னா அப்படித்தான் இருக்கும் அனுசரிச்சுப்போ. இங்கவந்து சும்மா இருப்பியா? அதுக்கு நீ அங்கயே சகிச்சிக்கிட்டு வழப்பாரு. நல்லதோ கெட்டதோ அதுதான் உன் வீடு. உன் குடும்பம்னு மூச்சுக்கு முந்நூறு முறை சொல்லிச் சொல்லி பெத்தவ நீதான் என்னை முதல்ல சாகடிச்சது.
இந்தா நிக்கிறாரே நல்லத்தம்பி பொம்பளை பிள்ளை வீட்டுக்கு வாழாமல் வந்தால் எனக்கு அவமானம்னு சொன்னாரே இந்த மனுஷன்.எனக்கான வாழ்க்கை எதுன்னு யோசிக்கவேயில்லை.
ஆமா நான் அந்த பரதேசியைக் காதலிச்சேன்தான். ஆனால் அவனுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கமட்டும்தான் பிடிச்சிருந்தது. காதல்னா என்ன? பொண்டாட்டியே எப்படி அன்பா வைச்சுக்கணும்? அவளுக்கு என்ன பிடிக்கும் எது பிடிக்கும்னுகூடத் தெரியாது. அப்படித்தான் அந்த தடித்தாண்டவராயன் என்கூட வாழ்ந்தான். அவங்கம்மா சொன்னா நம்புவான்; அவங்க அக்காங்க சொல்லுறதை நம்புவான்; ஆனால் நான் என்ன சொல்லவர்றேங்கிறதை நம்பக்கூட வேண்டாம் காதுக் குடுத்தாவது கேட்கலாம்ல அதுக்கூட அவன் கேட்டதில்லை.
கர்ப்பமாக இருக்கும்போது எல்லா புருஷனுங்களும் அவன் குடிகாரனா இருந்தாக்கூட பொண்டாட்டிக்கு என்ன பிடிக்கும்னு கேட்டுக்கேட்டுச் செய்வாங்க. என்ன புள்ளை பொறக்கும்னு ஆசை ஆசையா பேசிப்பாங்க. நான் கர்ப்பமானதைக்கூட ஏதோ நாய்குட்டிப்போட போகுதுங்கிற மாதிரியே ஊர்சுத்துனான். அவனோட சந்தோசத்தை மட்டும்தான் பார்த்தூக்கிட்டான். அப்படிப்பட்டவன்கிட்ட எப்படி என் மகளைக் குடுத்திங்க?
ஹான் யாருக்கிட்டக் கேட்டுக்கிட்டுக் குடுத்தீங்க? இந்த மூத்தமகன் மூத்தமவன்னு வாய் நிறைய பாசத்தை ஊட்டுறியே ஓருநாளாவது உன்னை சாப்பிட்டியான்னு கேட்டிருப்பானா? என்று தாமரையிடம் கேட்டாள்.
இல்ல அவன் சுயநலத்தான். அவன் வாயாடி பொண்டாட்டி முந்தானையைப் பிடிச்சுட்டு சுத்துவானே தவிற கூடப்பிறந்தவ வாழ்க்கையில் அவன் பொண்டாட்டியும் சேர்ந்துதான் விளையாடினான்னு தெரிஞ்சும் சிங்கியடிக்கிறான். இவன் பொண்டாட்டித்தான் உண்மையில் கொடுத்து வைச்சவள். என் மகளை பார்த்தாலே கடிச்சுத் திங்கிறமாதிரி இந்த மூணு வருஷமும் துரத்தினாளே உங்களால் கேட்கமுடிஞ்சுதா? இல்லல.
ஏன்னா எங்க சொத்துக்கு இவளும் பங்குக்கு வந்திருவாளோ? இவளையும் இவ பெத்ததையும் நம்ம பார்த்துக்க வேண்டியது வருமோன்னுதான் என்னை விரட்டுறதுக்கு என்னென்ன வழி உண்டுமோ அத்தனையும் குடும்பமா சேர்த்து திட்டம் போட்டு செய்தாங்க.உன் சின்னமகனும் அவங்கக்கூடத்தான் சேர்ந்தான்.
“என்னடி பைத்தியம் மாதிரி உளறிட்டிருக்க? நீ வாழாவெட்டியாக வந்து உட்கார்ந்தா எல்லாரும் உன்னை ஆரத்தியெடுத்து வீட்டுக்குள்ள வைச்சு பூசை பண்ணுவாங்களா.உன்னை எவ்வளவு கெஞ்சிக்கேட்டேன் இது வேண்டாம்னுகேட்டியா நீ?”
“அதுக்காக என்னை அப்படியே பேசிப்பேசியே சாகடிச்சிடுவியா என்ன? எவனோ என்னைப் பார்த்துப் பொண்ணுக்கேட்டு வந்தால் அதுக்கும் நான்தான் தப்பு. எவனாவது என் பின்னாடியே நாய் மாதிரி மோப்பம் பிடிச்சுட்டு வந்தால் அதுக்கும் நான்தான் அவனைக் கூப்பிட்டிருப்பேன்னு பெத்தவளா இருந்தும் நாக்கு கூசாமல் அசிங்கப்படுத்தின. நான் கூனிக்குறுகி நிதம் நிதம் செத்துறலாமான்னு நினைக்கிறளவுக்கு என்னை சாகடிச்சியே! உண்மையிலயே நான் செத்தாக் கஷ்டப்படப்போகிறது என் பொண்ணு மட்டும்தான்.அந்த நினைப்புலதான் நீங்க எல்லோரும் என்னைக் காயபடுத்தினதையும் தாங்கிக்கிட்டு வாழ்ந்திட்டிருக்கேன். இன்னைக்கு வரைக்கும் சாகணும்னுதான் உள்ளப்போனேன் என் பொண்ணோட கண்ணீர்தான் என்னை தடுத்திச்சு. ஏன் ஒரு பொண்ணு கணவனைப் பிரிஞ்சி வந்து சுயமா வாழ்றது அவ்வளவு பெரிய பாவமா என்ன?”
“ஆமா இப்படியே பேசிட்டிரு உன்னைப் பைத்தியக்கார ஹாஸ்பிடல்ல தான் கொண்டு சேர்க்க போறேன் பாரு. திமிரு திமிரு உடம்பெல்லாம் திமிரு அதனால் எவ்வளவுதான் பேசினாலும் தாய் தகப்பன் சொல்றது கேக்க மாட்டேங்கறியே. அண்ணன் தம்பி சொல்றதையும் கேட்க மாட்ட. எல்லாத்துக்கும் விவாகரத்து பண்ணிட்டா சரியாப்போகுமா ? வாழவேண்டிய வயசுல இப்படி வாழாம வந்து நிக்கிறியே எங்க மனசுலயும் அது கஷ்டமாகத்தானே இருக்கும். நீ வாங்கிட்டுவந்த வரம்போல இப்படி வாழணும்னு.இப்போபாரு பைத்தியம் மாதிரி பேசிட்டிருக்க. இது எல்லாத்துக்கும் தெரிஞ்சுரும் நீ ஹாஸ்பிடல்ல இருக்கிற. உனக்கென்ன தெரியும் இதுக்கும் எங்க மனம் தான் போகும் என்று அப்பொழுது மானம் மரியாதை பற்றிதான் தாமரை கவலைப்பட்டுப் பேசிக் கொண்டிருந்தார்.
அதைக்கேட்ட ராதாவுக்கு இன்னும் வேதனையாகத்தான் இருந்தது. உன்னை மாதிரி தாயிங்களால்தான் நிறைய பொம்பளை பிள்ளைங்க புருஷன்வீட்டுல அடிமை வேலை செய்து வாழ்ந்திட்டிருக்காங்க. என்ன நடந்தாலும் அனுசரிச்சு சகிச்சிப்போன்னு சொல்லி சொல்லியே முதுகெலும்பு இல்லாமல் வாழவைச்ச்சிட்டீங்க.
உனக்குத் தெரியுமா நம்ம வீட்டுலயும் என் புருஷன் வீட்டுலயும் வசதியில என்னக் குறைச்சல்? ஆனால் நான் மாசமாக இருக்கும்போது கூட இரண்டு இட்லி சாப்பிடுறேன்னு தட்டைப்பிடுங்கி பட்டினியா போட்டுச்சு என் மாமியாரு. இதை புருஷன்கிட்ட சொல்லவேமுடியலை. உன்கிட்ட சொன்னாலும் பயனில்லைன்னு பசியோட எத்தனை நாட்கள் இருந்திருக்கேன் தெரியுமா? வாயும் வயிறுமாக இருக்க ஒரு பொண்ணை பட்டினியாக போடுறவள் எவ்வளவு பெரிய இராட்சஷியாக இருக்கணும். அப்படிப்பட்டவங்க வீட்டுக்கு நான் எப்படி வாழப்போவேன்?என் மகளை அங்க எப்படி வளரவிடுவேன். நல்ல புருஷனாகவும் மனுஷனாகவுமே இல்வாதவன் எப்படி நல்ல அப்பனா இருப்பான்? என் மகளை என்கிட்டகொண்டு தரச்சொல்லுங்க. இல்லை நான் உங்களையெல்லாம் கொன்றுவேன்”என்று தலையைப்பிடித்துக்கொண்டு கத்தியவள் பக்கத்தில் இருந்த மருந்து ட்ரேயைத் தூக்கி தாமரை மீது வீசினாள்.கண்களை மூடிக்கொண்டு அழுதாள்.
“எல்லோருமே சுயநலவாதிங்கத்தான். நான் கட்டினவன் முதற்கொண்டு பெத்தவங்க கூடப் பொறத்தவனுங்க எல்லோருமே சுயநலவாதிங்கதான். உங்களையெல்லாம் நம்பி வந்தது என் தப்புத்தான்.
அது புரிஞ்சுத்தானே எவன் கையையும் நம்பி இருக்கக்கூடாதுன்னு நானே வேலைக்குப்போய் எனக்கும் என் பொண்ணுக்கும் தேவையானைதை செய்துகிட்டேன் பாதுகாப்புக்காக மட்டும்தான் உங்ககிட்ட இருந்தேன்.
ஆனாலும் எந்த நாயோ பொண்ணுக்கேட்டு வந்துச்சுன்னு அந்த வேலைக்கு ஆப்பு வைச்சுட்டீங்க. நான் இனி உங்க வீட்டுக்கு வரமாட்டேன்.என் பிள்ளையை எங்கிட்ட வாங்கி தந்திருங்க நானும் என் மகளும் எங்கேயாவது உங்க கண்ணுக்கு மறைவான இடத்தில் போய் வேலை செய்து வாழ்ந்துக்கிறோம். யாருக்கும் எந்த பாரமும் தொந்தரவும் இல்லாம வாழ்ந்திட்டுப்போறோம்” என்று கண்ணை மூடி குலுங்கி குலுங்கி அழுதாள்.
அவளால் அந்த அழுத்தங்களை இனி தாங்கிக்க முடியாது என்று தோன்றவும் வெடித்து அழுது புலம்பிவிட்டாள்.
சிறிது நேரம் அழுதவள் தனக்குத்தானே சமாதானம் சொல்லிக்கொண்டாள். முகத்தை துடைத்துவிட்டு “எனக்கு இப்போ என் மகள் இங்க வந்திருக்கணும். அந்த இராட்சஷி வீட்ல அவள் இருக்க கூடாது. கண்டிப்பா ஒரு நேரம் சாப்பாடு கூட என் பிள்ளைங்க நிம்மதியா சாப்பிட முடியாது. அதைவிட அவங்க மகனுக்கு இரண்டாவது பொண்ணு பார்த்து கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்காங்க. அவன் கல்யாணம் பண்ணிட்டு புது பொண்டாட்டியைக் கொஞ்சிறதுக்குத்தான் நேரம் இருக்கும்.அப்புறம் என் மகள் அநாதையா ஆகிடுவாள்.அதனால என் பிள்ளை இப்பவே என்கிட்ட கொண்டுத்தரச் சொல்லுங்க. இல்ல போலீசுக்கு போவேன்” என்று மீண்டும் எழுந்தாள்.
அப்போது நல்லதம்பி அவளருகில் வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார்.
“ஏன்பா என்னை மட்டும் எல்லோரும் சித்ரவதைப் பண்றீங்க? நான் செத்துப்போயிட்டதா சொல்லி உங்க மானம்போகாமல் காப்பாத்திக்கங்க. நான் வேறொரு கல்யாணம் பண்ணிக்கிற எண்ணத்தில் எல்லாம் இல்லை.
இந்த ஆம்பிள்ளைங்க முதல்பொண்டாட்டி பிரிஞ்சா இரண்டாவது,இரண்டாவதுபோன மூணாவதுன்னு கட்டிப்பானுங்க. ஆனால் அதே ஒரு பொண்ணு கொஞ்சம் தனக்குன்னு தேடிக்கிட்டா மானம் மரியாதை மட்டைன்னு அவளை பேசியே சாகடிச்சிடுறீங்க.என்னை உயிரோடு கொல்லுற மாதிரியே இருக்கு.
அந்த கிருஷ்ணனுக்கு இரண்டாவது கல்யாணத்துக்கு நம்ம வீட்டுக்கே வந்து கூப்பிட்டுட்டுப் போறாங்க.ஏன்னா இங்க எவனும் ராதாவுக்காக பேசுறதுக்கு நிக்கமாட்டானுங்கன்னு அவங்களுக்குத் தெரியும்.
ஏற்கனவே மாமியார் கொடுமை பண்ணும்போது யாரும் கேட்டு எனக்காக நியாயம் பேசவரலை. இப்பவோ வந்திடப்போறாங்கன்னு தைரியம்தான்.
காதலிச்சு கல்யாணம் பண்ணின முதப்பொண்டாட்டியையும் பிள்ளையையும் நட்டாத்துல அம்போன்னு விட்டுட்டுப் போனவன் இரண்டாவது கல்யாணம் பண்ணப்போறான்னு வந்து சொல்லுறாங்க. உங்க மகனும் அதுக்கு சந்தோசமா கார்டு கொடுக்கப்போறான். உங்களையும் கூப்பிட்டுட்டும்போறாங்க. அவன்லாம் எப்படி காதலே இல்லாமல் இன்னொருத்தியைக் கட்டிக்கிட்டு வாழ்ந்திடுவான். அவளுக்கு என்னைவிட மோசமான நிலைதான் வரும். அந்தப்பொண்ணு பாவம் என்னைய மாதிரியே அவளும் இவங்கம்மா அந்த அரக்கிக்கிட்ட மாட்டிக்கிட்டு சாகணும். நானாவது தைரியமாக அந்த நரகத்துல இருந்து வெளியே வந்துட்டேன். அந்தப்பொண்ணு தற்கொலை பண்ணிக்கிட்டா என்ன பண்ணுவீங்க. அதைவிடுங்க நானே செத்துப்போயிருந்தா என்ன பண்ணுவீங்க? மானம் மரியாதை வாழமட்டைன்னு சந்தோசப்பட்டிருப்பீங்களோ? அவன் இரண்டாவது கல்யாணம் பண்ணிக்கலாம் நான் பண்ணக்கூடாதா என்ன?”
“ஏன்டி உன் புத்தி இப்படிப்போகுது.அவன் ஆம்பளைடி எத்தனைக் கல்யாணம் வேணும்னாலும் பண்ணுவான்.நீ பண்ணமுடியுமாடி?பைத்தியக்காரி அறிவுகெட்டத்தனமா பேசாத”
“ஆமா நான் பைத்திம்தான் நியாயத்தை பேசினால் பைத்தியம்தான் சொல்லுவீங்க. எனக்கு ஒன்னும் கல்யாணம் பண்ணிக்கிற ஆசையெல்லாம் இல்லை. நீங்கெல்லாம் பேசுறதைப்பார்த்தால் செத்துடலாம்னுதான் தோணுமே தவிர இன்னொரு கல்யாணமா வேண்டாம்பா சாமின்னு இருக்கு.அதுக்கு உயிரோடு சாகுறதே மேலு.அந்தளவுக்கு ஏற்கனவே நீ என்னை வார்த்தையால் வதைச்சிட்ட. என் மகளுக்காக வாழ்றேன். அவ எனக்கு வேணும். அவன்கிட்ட மட்டும் என் வெண்ணிலாவைக் கொடுத்தன்னா உங்க எல்லோரையும் விசம் வைச்சுக் கொன்னுடுவேன்”என்றவளால் அதற்கு மேல் தாங்க முடியாது மீண்டும் மீண்டும் அழுதாள்.
அவளது வாழ்க்கையில் இந்த மூன்று வருடங்களும் அழுகை கண்ணீர், மனவேதனை தாங்கமுடியாது தற்கொலை எண்ணம் என்று இப்படியே போய்கொண்டிருக்கிறது.
இதில் வீட்டுல உள்ளவங்களே உடம்புக்காக வேறோருத்தனை தேடிருவாளோ? குடும்ப மானத்தை வாங்கிடுவாளோ? என்று எதற்கெடுத்தாலும் குற்றம் கண்டுபிடித்தே அவளை அரை பைத்தியமாக்கிவிட்டனர்.
இப்போது தனக்கிருந்த ஒரே உறவு மகளையும் யாருக்கிட்ட இருந்து திருமணமுறிவை வாங்கிட்டு வந்தாளோ அவங்ககிட்டயே விட்றுக்காங்க. அதற்கே அவளது இதயத்தில் இரத்தம் கசிந்து அது கண்ணீர் துளிகளாக கன்னத்தில் இறங்கிக்கொண்டிருந்தது.
அவள் அழுது அழுது அரை மயக்கத்திற்குப் போகும்போது “அம்மாஆஆ”
என்று வெண்ணிலாவின் சத்தம் கேட்டது.
அவ்வளவுதான் தனது கண்களின் மயக்கத்தையும் மீறி கண்களைத் திறக்க அங்கே கிருஷ்ணன் நின்றிருந்தான்.
அவனை பார்த்து அதிர்ந்து எழுந்தவள் “என் வெண்ணிலா எங்க?” என்று அவனது சட்டையைப் பிடிச்சு கேட்டாள்.
அவளருகில்தான் வெண்ணிலாவை உட்கார வைத்திருந்தான் ”அம்மாஆஆஆ” என்று அவள் மீண்டும் அழைத்ததும் தான் அவளைப் பார்த்துவிட்டு அப்படியே மயங்கிவிட்டாள்.
உண்மையில் இதுநாள்வரைக்கும் தன்னிடமிருந்து விவாகரத்து வாங்கிட்டுப்போயிட்டாள். தன்கூட வாழப்பிடிக்காமல் சண்டைப்போட்டாள். திமிர்காறி இவளை அடக்கணும், அவளுக்கு வலிக்க வைக்கணும் என்றெல்லாம் மூன்று வருடமும் மனதில் வன்மத்தை மட்டுமே சுமந்திருந்தவனுக்கு அதெல்லாம் போய் இவளை வாழ்க்கையில் இழந்துவிட்டோமே என்று நினைக்க வைத்திருந்தாள்
அவள் பேசியதையெல்லாம் வெளியே நின்றுக் கேட்டுக்கொண்டிருந்தவனுக்கு உண்மையில் இவளை நான் காதலிக்கவேயில்லையோ? என்று தனக்குத்தானே கேட்டவன் மகளை குடுக்கக்கூடாது என்று வந்த கோபம் ஆத்திரம் எல்லாத்தையும் அவளது காலடியில் போட்டுவிட்டு மகளையும் கொடுத்துவிட்டு அப்படியே சஞ்சலத்தோடு வெளியேறினான்!