தினம் தினம்3
Thinam3

3 தினம் தினம் !!
மாலை பள்ளியை விட்டு வீட்டுக்கு போக வேண்டும் என்றதும் வயிற்றில் புளியை கரைத்தது அஞ்சலிக்கு...
கல்யாணமாகுற வரைக்கும் அரவிந்த்சாமி மாதிரி மாப்பிள்ளை வேணும், சூர்யா ஜோதிகா மாதிரி வாழ வேண்டும் , அஜித் ஷாலினி மாதிரி ஒருத்தர் ஒருத்தர் ஒருத்தர் சுதந்திரமா அவங்க அவங்க ஆசையா நிறைவேற்றனும் , இப்படின்னு ஏகப்பட்ட ஆசை இருந்தது ... ஆனால் இப்போ எல்லாம் ...
"இந்த கருமம் புடிச்சு போறவன், ஒரு நாள் வேலைக்கு போயிட்டு லேட்டா வந்தா, நிம்மதியா இருக்கலாமே, மாமியார்க்காரி, மைனி வீட்டுக்கு போனா மூச்சு விடலாமே , புள்ளைங்க எங்க அம்மா வீட்டுக்கு போனா, ஒரு நாள் சமைக்காம நாள் முழுக்க படுக்கையிலேயே படுத்து தூங்கலாமேன்னு ஆசை எல்லாம் குறுகி போச்சு என் வாழ்க்கை எதை நோக்கி போகுதுன்னு தெரியலையே.... அய்யய்யோ வீடு பக்கத்துல வந்துடுச்சு" என்று அஞ்சலி புலம்பிக்கொண்டு வீட்டிற்குள் நுழைய.... வீட்டு வாசலில் புதிதாக கிடந்த செருப்பை கண்டு பல்லை நரநர என்று கடித்தாள் சத்தியனின் தங்கை காயத்ரி வந்துவிட்டாள்...
"கட்டி கொடுத்தாச்சு இல்ல , அப்படியே போய் தொலைய வேண்டியது தானே.. மாசத்துல ரெண்டு நாள் இங்க வந்து உட்கார்ந்துகிட்டு நம்ம உயிரை வாங்குவா... என் தங்கச்சி நிலாவுல இருந்து நேரடியாக இங்கிட்டு வந்து இறங்கி இருக்கா, அவளுக்கு பார்த்து பொருக்கி திங்குறதுக்கு வாய்க்கு நல்லதா வக்கனையா செஞ்சு கொடுன்னு சொல்ல வந்துடுவானே, என்னமோ இவனுக்கு மட்டும் தான் தங்கச்சி இருக்கிற மாதிரியும், நாமெல்லாம் அனாதை பிள்ளைகள் மாதிரியே ட்ரீட் பண்ணுங்க... என்னைக்காவது ஒரு நாள் மொத்தமா சோத்துல விஷத்தை வச்சு அத்தனைபேர் சோலியையும் முடிச்சிட்டு, நேரா ஜெயில்ல போய் உட்கார்ந்துக்குவேன் .. அங்கையாவது வாரத்துல ஒரு நாள் மட்டன் புதன் கிழமை முட்டை அப்பப்போ வேலை செஞ்சுட்டு காத்தோட்டமா வாழலாம் போல இருக்கு.... எனக்கு மட்டும் புலம்புறதுக்கு டிசைன் டிசைனா வருதே, கொஞ்ச நேரம் தூங்கிட்டு வேலை செய்யலாம்னு நினைச்சது குத்தமா கோபால் , இவள அனுப்பி விட்டிருக்க" என்று புலம்பி கொண்டே அஞ்சலி உள்ளே போக
"அடடே !!வாங்க அண்ணி எப்படி இருக்கீங்க
நல்லா இருக்கீங்களா?
"நல்லா இருக்கியா காயு , மாப்ள நல்லா இருக்காங்களா?
"ம்ம் அவங்க எல்லாம் இருக்கிறது இருக்கட்டும் , புது சேலையா அண்ணி, பார்க்க அழகா இருக்கு..
"இல்ல காயு , இது பழசு தான் , போன தீபாவளிக்கு உங்க அண்ணன் எடுத்து கொடுத்தது ...
"ஓஓஓ அப்படியா, நான் பாக்கவே இல்ல.. எனக்கு எடுத்து தந்தது டிம்மா இருந்துச்சு, உங்களுக்கு எடுத்தது நல்ல பளிச்சுன்னு இருக்கு..
"நீதானே அந்த சேலை எனக்கு வேணும்னு எடுத்துட்டு போன, ஒரே விலை ஒரே டிசைன்தான் காயு "
"அப்ப பாக்கும்போது நல்லா இருந்தது , ரெண்டு தடவ துவச்ச பிறகு சாயம் போயிடுச்சுன்னு நினைக்கிறேன் அடுத்த வாட்டி வரும்போது அந்த சேலையை கொண்டு வரேன் நீங்களே பாருங்க..
"ச்சே சே , அதெல்லாம் எதுக்கு போகும்போது அண்ணன் கிட்ட கேட்டு வேற புடவை வாங்கிட்டு போ ..." இதுக்கு தான இந்த குணட்டல் என்று அவளுக்கு தெரியாதா என்ன ?
"இது என் அண்ணி என்று அஞ்சலியை நெட்டி முறித்த காயத்ரி,
"மாமியார் வீட்ல தின்னு தின்னு நாக்கு செத்து போச்சு அந்த பொம்பளைக்கு சுகர் பிரஷர் இருக்குல்ல அண்ணி, அது சமைக்கிறதை வாயில வைக்க முடியல... வாய்க்கு ருசியா ஏதாவது பண்ணி தரீங்களா? "என்று அஞ்சலி கழுத்தை வந்து காயத்ரி கட்டிக் கொள்ள
"சரி என்று தலையாட்ட வேண்டிய ஆகிப்போனது புருஷனும் மாமியாரும் நேரடியாக சண்டைக்கு வருவார்கள் என்றால் ,இவள் கொஞ்சி கொஞ்சி காரியத்தை சாதித்து விடுவாள்... ஏதாவது இவள் பேசினால் ...
"அவ உங்கிட்ட எவ்வளவு அன்பா இருக்கா , ஏன்டி இப்படி பண்ற... உன்ன அண்ணி மாதிரியா நினைக்கிறா, கூட பிறந்தவ மாதிரி உன்ன அவ்வளவு பெரிய உயரமான இடத்துல வச்சுருக்கா இப்படி அல்ப தனமா பத்து ரூபாய்க்கு இருபது ரூபாய்க்கு கணக்கு கேட்காத அஞ்சு "என்று என்னவோ இவளை பேராசைக்காரி மாதிரி புருஷன் ஆக்கி விடுவான்...
ஹாலில் அண்ணனும் தங்கையும் அரட்டை அடித்து சிரித்து சிரித்து பேச... அதோடு அவன் அம்மா வேறு கூட்டு சேர்ந்து கொள்ள ... அவர்கள் சிரிப்பு சத்தம் இவளுக்கு அப்படியே கந்தகத்தை எடுத்து தன் தலையில் கொட்டியது போல் இருந்தது..
"வேலைக்கு போயிட்டு வந்து ஒரு காபி கூட பல்லுலப் படாம இவளுக்கு பரோட்டா செய்யணுமாம் .. ஏன்டா தீவெட்டி தலையா, உன் தங்கச்சிக்கு பரோட்டா திங்கணும்னு ஆசையா இருந்தா கடையில வாங்கி கொடுத்து வந்து _ட்ட மாட்டியோ, நானே பெசையணுமோ.... நீங்க எல்லாம் மனுச ஜென்மம்தானா , புள்ள பெக்குறதுக்கும் உனக்கு துணிமணி துவைச்சு போடுறதுக்கும் தான் பொண்டாட்டின்னா, எதுக்குடா நீங்க எல்லாம் பொண்டாட்டிய கட்டிக்கிட்டு வந்து வாழ்றீங்க... ஏதாவது ரோபோட் இருந்தா கூட்டிக்கொண்டு வச்சு வாழுங்கடா, அதுக்கு தான் மனசும் கிடையாது உடம்புல சொரணையும் இருக்காது... நீங்க சொல்றது எல்லாத்துக்கும் ஆமாம் சாமி ஆமாஞ்சாமி போடும் .. எங்களுக்கு வலிக்குதுடா எருமை மாட்டு பயலுகளா....
"அஞ்சு சாப்பாடு ரெடியா சத்யா குரல் வர
"இதோ அஞ்சு நிமிஷம்"
"என்னம்மா ரொம்ப வேலையா இருக்கா உங்களுக்கு ஏதாவது நான் செஞ்சு தரவா??? என்று அரும்பு மீசை முளைத்த மகன் விஷ்ணு அவள் அருகே வந்து நிற்க.... அஞ்சலிக்கு கண்ணீர் அரும்பி விட்டது...
என்ன வேணும் பெண்ணுக்கு
ஆறுதல் !!
ஆறுதல் அவ்வளவுதான் வேணும் , இதை கேட்க புருஷன் வரமாட்டானா என்று ஏக்கம், புருஷனுக்கு நேரமில்லை பிள்ளையாவது கேட்கிறதே அழுகை கொட்டி விட்டது...
ம்மா அழாத என்று விஷ்ணு தாய் கண்ணை துடைத்து விட, உதடு துடைக்க மகன் சட்டையில் கண்ணீரை துடைத்தாள்..
"பிரின்சிபாலுக்கு என் மேல என்ன கோபமோ தெரியலடா வேலை வாங்குறான், கால் முட்டி எல்லாம் வலிக்குது ... சரி வீட்ல வந்து கொஞ்ச நேரம் படுத்துட்டு ராத்திரி சமையல் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன்டா. இந்தா பாரு இந்த பன்னிக்குட்டி கூட்டத்துக்கு சோறு தண்ணி செஞ்சு கொடுத்தே கால் வலி கூட கொஞ்சம் ஆகிடுச்சு..
"ஏம்மா இதையெல்லாம் இழுத்து போட்டு செய்ற அப்பாகிட்ட கட் அன்ட் ரைட்டா சொல்லிட வேண்டியதுதானே.."
"சொன்னா என்ன நடக்கும் என்கூட இப்படித்தான் வாழனும் முடிஞ்சா வாழு இல்லன்னா உன் அம்மா வீட்டுக்கு போன்னு சொல்லுவான்... நான் மட்டுனனா எதையாவது செய்யலாம் உங்களையெல்லாம் வச்சுக்கிட்டு நான் என்னடா செய்வேன்...
"ப்ச் கொடு அந்த பரோட்டாவை நான் போட்டு எடுக்குறேன்...
"இல்லடா தீஞ்சு போச்சுன்னா அதுக்கும் அந்த ஆளு ஆட்கள் முன்னாடி வச்சு என்ன அவமானமா பேசுவான்" தன் தாயை பரிதாபமாக பார்த்தான் விஷ்ணு
"உனக்கு ஒன்னே ஒன்னு தாண்டா சொல்றேன் அம்மா படுற கஷ்டத்தை பார்க்கிற தானே
"ம்ம்
"உனக்கு வர்றவளையாது மனுஷியா மதிக்க கத்துக்கடா , இவங்களை எல்லாம் மாத்த முடியாது, திருத்த முடியவே முடியாது .... ஆனா, நான் பெத்த புள்ளைய திருத்துனா ஏதோ ஒரு புள்ள நல்லா வாழும்.... பொண்ணுங்களுக்கு மதிப்பு கொடுத்தா மட்டும் போதாதுடா , அவங்களுக்கு சுயமரியாதையையும் கொடுக்கணும்
"ம்மா நான் வேணும்னா அப்பாகிட்ட பேசவா
"என்னத்தடா பேச போற அப்பனுக்கும் மகனுக்கும் இடையில பிரச்சனையை இழுத்து விடவா.. ஏற்கனவே உன்னை கண்ணில் கண்டாலே அவருக்கு ஆக மாட்டேங்குது ... அவர் என்னவோ கலெக்டர் ஆன மாதிரி, பனிரெண்டாபுப்ல ரெண்டு தடவை ஃபெயில் ஆன மனுஷன், நான் ஜஸ்ட் பாஸ் ஆகி டீச்சர் ட்ரைனிங் போன ஆளு ... எனக்கும், அவருக்கும் பிறந்த புள்ள என்ன, ஸ்டேட் ஃபர்ஸ்டா வரும் ... இந்த மாதிரி தைய தக்க தான் போட்டுக்கிட்டு இருக்கும் என்றதும் விஷ்ணு சிரித்து விட ..
"படவா , அதுக்காக படிக்காம இருக்காதடா... அம்மா சப்போர்ட் பண்றான்னு இதையே சாக்கா வச்சு படிக்காம சுத்தலாம்னு நினைக்காத புரியுதா? என்று மகனோடு பேசும் பொழுது வேலைப்பளு தெரியவில்லை ....
மகன் தாய்க்கு சப்போர்ட் என்றால் மகள் யாழி தகப்பனின் செல்லம், இவனை திட்டிக்கொண்டே இருக்கும் சத்யா , மகள் அப்பா என்று கெஞ்சினால் போதும் என் சமத்துப்புள்ள என்று மடியில் போட்டுக் கொள்வான் , பொண்டாட்டி ஆகாது, ஆனால் பொண்டாட்டி ஜாடையில் இருக்கும் மகள் என்றால் கொள்ளை பிரியம்...
வேலையெல்லாம் முடித்து அவர்கள் அரட்டை அடிப்பதை பார்த்துக் கொண்டே அஞ்சலி தன் அறைக்குள் போக நினைக்க ..
அஞ்சு எங்க போற, எல்லாரும் இங்க உட்கார்ந்து பேசிட்டு இருக்காங்கல்ல, கொஞ்ச நேரம் நீயும் வந்து இங்க உக்காந்து கதை பேசு என்ற புருஷனுக்கு..
"இல்லைங்க நாளைக்கு காலையில வேலை இருக்கு
"என்ன வேலை எப்பவும் போல தானே, ஏன் நாங்க எல்லாம் வேலை வெட்டி இல்லாம சும்மாவா இருக்கோம்.... எப்பவும் பிசியாவே இருக்கிற மாதிரி சீன் போடுற , நாலு பாத்திரம் நாலு பேருக்கு சமைக்கிறது , கொஞ்சம் துணி , இத துவைக்கிறதுக்கு என்னவோ இந்த வீட்ல நாங்க உன்ன வேலைக்காரி மாதிரி வச்சிருக்கிறது போல முகத்தை வைக்கிறது... எல்லா பொம்பளையும் இதெல்லாம் செய்ய தானே செய்றா... என்னமோ நீ மட்டும் தான் செய்ற மாதிரி முகத்தை முகத்தை தூக்குற .. என்று மங்களம் இசை பாட... சத்யா ஃபோனை பார்த்து கொண்டே
"சரி அஞ்சு நீ போய் தூங்கு என்று விட
"என்னடா இது என் புருஷன் தூங்க சொல்லிட்டான் அதிசயமாக இருக்கே , எந்த முனி அடிச்சதோ தெரியலே , விட்டால் போதும் என்று அஞ்சலி அறைக்குள் ஓடிவிட்டாள்...
அப்பாடா என் உலகத்துக்குள்ள வந்துட்டேன் என்ற போனை கையில் எடுத்தாள் அஞ்சலி.... வேக வேகமாக கதைகள் உலகத்திற்குள் சென்றாள் ...
"அய்யய்யோ நேத்து ஹீரோ ஹீரோயினுக்கு விஷத்தை வச்சு கொல்றதுக்கு ட்ரை பண்ணினானே, என்ன ஆச்சோ தெரியலையே" என்று புலம்பிக் கொண்டு நேற்று விட்ட கதையின் அப்டேட்டை தேடிக் கொண்டிருந்தாள் ...
வீட்டில் பஞ்சமில்லாத அளவிற்கு பணம் இருக்கிறது 5 வருடங்களுக்கு முன்பு வேலையும் இல்லாமல் வீட்டில் மண்டை காயும் பொழுதுதான் கதைகள் படிக்க ஆரம்பித்தாள்
"என்னங்க கொஞ்சம் கதை படிச்சா ரிலாக்ஸா இருக்கு
"நீ என்ன கலெக்டர் ஆபீஸ்லயா வேலை பார்க்கிற உனக்கு டென்ஷன் ஆவதற்கு"
"இல்லைங்க சும்மாவே இருக்கிறதும் போரடிக்குது கதை படிக்கிறதுக்கு அமேசான்ல 200 ரூபாய் போட்டு தரீங்களா ??
"காசு சம்பாதிக்கிறவனுக்கு தான் அதோட அருமை தெரியும் ... உனக்கு எங்க தெரிய போகுது 200 ரூபாய் போட்டு கதை படிக்கலைன்னா ஆகாதோ? " என்று 200 ரூபாய்க்கு கணக்கு கேட்கும் கணவனிடம் அஞ்சலி அதன் பிறகு வாயை திறக்கவில்லை ..
அவன் இருக்கும் பொழுது படித்தால் அதையே வச்சுக்கிட்டு இரு, வீட்டு வேலை ஒன்னையும் பாத்துடாத , என்னைக்காவது ஒருநாள் அந்த போனை தூக்கி போட்டு உடைக்க போறேன் என்று அதற்கும் திட்டுவான் ...
அவள் அம்பானியாக வேண்டும் அதானி ஆக வேண்டும் என்றெல்லாம் கேட்கவே இல்லை... நிம்மதியா தூங்கி எனக்கு பிடித்ததை, தனக்கான நேரத்தை ஒரு அரை மணி நேரமாவது செலவழித்துக் கொள்ள பிச்சை கேட்கிறாள், அந்த பிச்சையை கூட கொடுக்க மனம் இல்லாதவர்களுக்கு பெயர் தான் கணவன்மார்கள்... அவள் என்ன செய்ய வேண்டும் என்று கூட அவர்கள் தான் சொல்வார்கள் இதற்கு சமூகம் வைத்த அழகிய பெயர் தாம்பத்திய விளக்கை புனித பந்தம் ...
அவள் சிறிது நேரம் வாழ்கிறாள், சிரிக்கிறாள் தன்னை மறந்து ஒரு கற்பனை உலகத்தில் லயித்து இருக்கிறாள் என்றால் அது இந்த கதைகளை படிக்கும் பொழுது தான்...
குடும்பம் கொடுக்கும் மன அழுத்தத்திற்கு வழி மாறி போகாமல், இல்லை விபரீத முடிவுகள் எடுக்காமல் ஏதோ ஒன்றில் தன் மனதை கவனம் செலுத்தி சில பெண்கள் வாழ்கிறார்கள் என்றால் அதற்கு இந்த கதை உலகமும், கற்பனை உலகமும் உறுதுணையாக இருக்கிறது என்பது மெய் ...
ஃபோனை தேய்த்து கொண்ட வந்தவளுக்கு பொங்கல் குரூப் கண்ணில் பட்டு விட்டது ..
"வழக்கம்போல ஆன்டி ஹீரோ ரொமான்ஸ் ரைட்டருக்கு பொங்கலா?? நான் படிக்க வந்து ஆறு வருஷம் ஆகுதுடா, ஆனா ஆறு வருஷமா சேம் பொங்கல் , ஆன்டி ஹீரோ எழுதினா தப்பு , ரொமான்ஸ் எழுதினா தப்பு அதுவே அவங்க சைடு ஆட்கள் எழுதுனா சரி, அவங்களுக்கு பிடிக்காத ரைட்டர் எழுதிட்டா தப்பு.. என்னதான் நியாயம், இவங்க கதை எல்லாம் படிச்சுதான் நாமெல்லாம் கெட்டுப் போக போறோமா என்ன?? நம்மள சுத்தி இருக்கிற கேடுகெட்ட பயல்க, வக்கிர புத்தி நெறஞ்ச உலகத்தில் இருந்து தப்பிச்சு வர்ற, எங்களுக்கு எது சரி, எது தப்புன்னு தெரியாதா என்ன? சின்ன நொள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி இவங்க எல்லாம் பொங்கல் வச்சு சொல்லி கொடுத்தா தான் எங்களுக்கு தெரியுமா என்ன?? ஏழு கழுதை வயசான எங்களுக்கு எதை படிக்கணும் எது எங்களுக்கு பிடிக்கும், எது எங்களுக்கு பிடிக்காது,எது எங்களுக்கு வேணும், எது எங்களுக்கு வேண்டாம்னு சொல்லத் தெரியாதா என்ன.... ஒன்னு ரெண்டு பேர் சிங்கிளா கிடைச்சா இவள்க கும்மலா வந்து கும்மிட்டு போயிட வேண்டியது..
என்னவோ வன்முறையை இவங்க தான் திணிக்கிற மாதிரி, உலகம் முழுக்க வன்முறை தான்டா கொட்டி கிடக்குது... அவங்க கிட்ட எல்லாம் போய் பேச மாட்டாங்க, ஏன்னா அங்க நிக்கிறவன் எல்லாம் ஆண் வர்கம் இல்ல, பேசினா தூக்கிப் போட்டு வாயிலேயே மிதிச்சிடுவான்னு தெரியும்ல... இவங்க வீரம் ஆவேசம் எல்லாம் இங்கிட்டு மட்டும் தான்... பிடிக்காத பொண்ண தொடுற மாதிரி கட்டாயபடுத்திற மாதிரி ஹீரோ வச்சி எழுதுறாங்க இவங்கெல்லாம் பெண்களா ?? என்று பொறுப்பு துறப்பு குரூப் ஒரே கதறல்
பொண்டாட்டிய, எல்லா புருஷனும் உனக்கு புடிச்சிருக்கா புடிச்சிருக்கான்னு, கேட்டுதான தொடுறான், பெரிய ஆண்டி ஹீரோ?? என் புருஷன் கூட நான் வாழும் வாழ்க்கையை ரெண்டு நாள் என் வீட்டிலேயே உட்கார்ந்து ஓசியா தின்னுட்டு பார்த்துட்டு போடி, அப்போ தெரியும் இந்த ரைட்டர் எல்லாம் எழுதுற ஆன்ட்டி ஹீரோ அம்மன்சல்லிக்கு கூட உதவ மாட்டான்னு... ஆன்ட்டி ஹீரோவையே இந்த புருஷன்மார் கேட்கிரி தூக்கி சாப்பிட்டுடுவானுகன்னு .. . இதெல்லாம் அம்புட்டு பேருக்கும் தெரியும் , தெரிஞ்சாலும் சும்மா இதுகளுக்கு நேரம் போக வேண்டாமா ! வந்ததுக்கு ஏதாவது வத்தி வச்சிட்டு போனா தானே தின்ன சோறு செமிக்கும்...
குடும்பத்து பிரச்சனையில மண்ட ஒடஞ்சு போய் கொஞ்ச நேரம் இங்க வந்து கதை படிச்சு நிம்மதியாய் இருக்கலாம்னு நினைச்சா, பொறுக்காதே... நாலு பொங்கல வச்சி ஊத்தி மூடுனாதான் நிம்மதியா இருக்கும் ...நாலே டைப் பொங்கல் , அதே நாலு ஆட்கள்தான் அந்த பொங்கலையும் வைக்குது , அந்த பொங்கலுக்கு கீழ நாலே பேரு கூவு கூவுன்னு கூவுறாங்க.. நமக்கு எதுக்கு வம்பு நம்ம ரைட்டர் எங்கன்னு தேடி புடிச்சு கதையை படிப்போம் "என்று அஞ்சலி வழக்கம் போல அத்தனை குரூப்பிலும் வயிறு எரிந்து போட்டு இருக்கும் போஸ்ட்களை எல்லாம் பார்த்து சிரித்து விட்டாள், இடையில் விட்ட கதைகளை படிக்க ஆரம்பித்து விட்டாள்....
வஞ்சக குடோன்தான் உலகம் .. வஞ்சிக்க தெரிந்தவன் வாழ்கிறான், வஞ்சிக்க தெரியாதவன் வீழ்கிறான் அவ்வளவே !!