என் இனிய விவகாரத்தே 7

Divorce 7

என் இனிய விவகாரத்தே 7

7 என் இனிய விவாகரத்தே!! 

மயங்கி விழுந்த ஸ்ரீநாத்துக்கு உதவி செய்துவிட்டு புகழினி திரும்ப போக , சட்டென அவன் கண்கள் படபடவென்று புறா செட்டைகளை அடித்து பறப்பது போல விரிந்து கொள்ளவும், புகழினி திரும்பிப் பார்க்க ... அவன் மங்கிய பார்வை வழி அவளும் தெரிய... அதில் நன்றி உணர்வு இருந்தது... அவளுக்கு அப்பாடா எதுவும் பெருசா இல்ல என்ற நிம்மதி இருந்தது

ஆர் யூ ஓகே சார் ? அவள் மெல்லிய உதடுகள் விரித்து நலம் விசாரிக்க மெதுவாக தலையாட்டினான்..

சரி சார் பார்த்து வீடு போய் சேருங்க "என்று அருகே இருந்தவர்கள் அவனை அம்போ என்று விட்டுவிட்டு நகர போக ... இவளும் இதற்கு மேல் இங்கே என்ன செய்ய என்பது போல் நகர நினைக்க ... தள்ளாடி எழும்ப நினைத்து ஸ்ரீநாத் முடியாமல் தலையை பிடிக்க

"சார் சார் பார்த்து பார்த்து" என்று நான்கு எட்டு எடுத்து வைத்த புகழினி மீண்டும் அவன் அருகே வந்து நின்றாள்... அவனை அப்படியே விட்டு விட்டு போக முடியவில்லை அவன் முகத்தில் அவ்வளவு பசி, சோர்வு இருந்தது.... கைப்பிடித்து அவனை உட்கார வைக்கும் அளவு அவளுக்கும் அவனுக்கும் எந்த உறவும் இல்லையே... யாரோ ஒருவனின் கையைப் பிடிக்கும் அளவு அவள் துணிச்சல் உள்ளவளும் இல்லை.....

ஸ்ரீநாத் அங்கே இருந்த பெஞ்சில் அமர ..... 

வேகமாக அந்த இடத்தை விட்டு புகழினி ஓடிப் போய் அங்கிருந்த பெட்டிக்கடையில் ஒரு கூல்டிரிங்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் அவன் அருகே வந்தவள்...

"குடிங்க" என்று திறந்து கொடுக்க.. அவனுக்கும் அது அப்போது தேவைப்பட்டது... கடக் மடக்கென்று சத்தத்தோடு குடித்தவனுக்கு, அப்போதுதான் உயிரே வந்தது போல் இருந்தது... 

இப்ப பரவாயில்லையா சார்?? என்று கேள்வியாக அவன் முகத்தை நின்று கொண்டிருந்த புகழினி பார்க்க 

பரவால்ல மேடம் பெட்டரா இருக்கேன்... ரொம்ப தேங்க்ஸ் மேடம்"

அட இதுல என்னங்க இருக்கு, மனுஷனுக்கு மனுசன் உதவி செய்றதுல என்ன குறைஞ்சிட போறோம்... தனியா போயிடுவீங்களா??? ஆட்டோ ஏதாவது புடிச்சு தரவா...

இல்ல மேடம் பைக்ல தான் வந்தேன்... ரெண்டு நிமிசம் இருந்துட்டு போனா போயிடுவேன் , நீங்க கிளம்புங்க மறுபடியும் தேங்க்ஸ்...    

ம்ம் என்று நகர போனவள் ஏதோ தோன்றி அவன் அருகே வந்து நின்றவள் 

"சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க சார் ... உங்க கேஸ் ஹியரிங்கை நானும் கவனிச்சேன்" என்றதும் ஸ்ரீநாத் தலையை தூக்கி அவளை பார்த்தான் 

குழந்தையை வாங்கிட்டு போனதை தாங்க முடியாமதான் உங்களுக்கு இந்த மயக்கம்னு தெரியுது... "மூன்றாவது நபரின் வாழ்க்கையில் மூக்கை நுழைக்கும் ஆள் அவள் இல்லை தான் ஆனால் ஏனோ பேச தோன்றியது பேசினாள்...

நான் சரியா இருக்கேன் நான் நல்லவனா இருக்கேன், எல்லாரும் அப்படியே இருப்பாங்கன்னு நினைக்கிறதுதான் நாம செய்ற தப்பு சார் .. எப்படி போர்க்களம் போறதுக்கு ஒரு படை வீரன் ஆயத்தமாகணுமோ, அதே மாதிரி விவாகரத்து வாங்க ஆணும் பெண்ணும் பல ஆயத்தத்தோடுதான் வரணும்.. பொம்பளைக்கு ஈசியா விபச்சாரிங்கிற பட்டமும்.. ஆம்பளைக்கு பைத்தியக்காரன் பட்டமும் கொடுக்குறதுக்கு, இங்க நிறைய பொம்பள ஆம்பள காத்திருக்காங்க சார்... 

ம்ம் ஆமோதிப்பாக தலையாட்டினான்... தன் வீட்டு பிரச்சனையை யாரிடமும் விவாதித்து பழகாதவன் அவள் பேச்சுக்கு உம் போட்டான்... அது கண்டதும் காதல் இல்லை.. சிலரை கண்டதும் தோன்றும் மரியாதை .... அவள் மீது மரியாதை வந்தது ... 

ஒன்னு அந்த பட்டத்தை எல்லாம் தூசி மாதிரி தட்டி விட்டுட்டு போகிற தைரியம் வேணும்... இல்ல எதிர்த்து போராடுவதற்கு நெஞ்சில வலு வேணும்... இந்த ரெண்டுமே இல்லன்னா எதையுமே சாதிக்க முடியாது சார் .. நம்மள நாயா கூட யாரும் மதிக்க மாட்டாங்க சார் ... நமக்கு நாமதான் துணை , இதையெல்லாம் ஏன் சொல்றேன்னு தெரியல ... ஆனா சொல்லணும்னு தோணுச்சு, உங்க கண்ணுல இருந்த கண்ணீரையும் பார்த்தேன்.. அவங்க கண்ணுல வடிஞ்ச கண்ணீர்ல போலித்தன்மை இருந்ததையும் பார்த்தேன்... தைரியமா இருங்க சார் தைரியத்தை விட்டுடாதீங்க எல்லாம் மாறும் ... "

ம்ம் வாஸ்தவம் தான் மேடம் மனதளவுல கொஞ்சம் பலகீனமாக பீல் பண்றேன் .... "

வாழணும் சார், அவங்க முன்னாடி வாழணும் வாழ்ந்தே காட்டணும்னு வைராக்கியத்தை அந்த மனசுக்குள்ள விதைங்க... அழ வைக்க நினைக்கிறவங்க முன்ன சிரிச்சு வாழுங்க.... அதுவே வெற்றி தான்!! இது ஒரு குட்டி சைக்கோத்தனமும் கூட, பட் நல்லா இருக்கும் ட்ரை பண்ணி பாருங்க ... பை த வே உடம்பை பார்த்துக்கோங்க "என்று புகழினி நகர போக...

ரொம்ப நன்றி மேடம் ...

ஒத்த கூல்ட்ரிங்குக்கு எத்தனை தடவை சார் நன்றி சொல்வீங்க "என்று புகழினி சிரிக்க 

இது நீங்க சொன்ன அட்வைஸூக்கு மேடம்.. தள்ளாடும் போது சிலர் வார்த்தை தைரியம் கொடுக்கும், உங்க வார்த்தை அதை செஞ்சிருக்கு அதுக்கு இந்த நன்றி... 

நன்றி எல்லாம் வேண்டாம்.. முடிஞ்சா ஒரு ஆட்டோ பிடிச்சு தர்றிங்களா சார், அந்த பக்கம் ஒரே ஆம்பளை ஆட்கள் கூட்டமா இருக்கு.. ஆட்டோ பிடிக்க போக சங்கடமா இருக்கு" என்று புகழினி தடுமாற 

வாங்க என்று ஸ்ரீநாத் விலகி நடக்க இவளும் தள்ளியே நடந்து போனாள்... இருவருக்கும் தெரியும் ஒரு அந்நிய ஆண் , பெண்ணோடு எவ்வளவு இடைவெளி விட்டு பழக வேண்டும் என்று .... 

கேட்கிறேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க மேடம் ... 

"தப்பா நினைக்கிறது மாதிரி கேள்வி கேட்டா , தப்பா தான் நினைப்பேன் சார் "

ஹான் அவன் கேட்கவா வேண்டாமா என்று பார்த்து வைக்க 

கேளுங்க சார்...

இல்லை நீங்க இங்க ? என்று தயக்கமாக ஸ்ரீநாத் கேட்க 

"குடும்பநல நீதிமன்றத்துக்கு ஷாப்பிங் பண்ணவா வருவாங்க, விவகாரத்து வாங்கதான் வந்தேன் உங்களுக்கு முந்தையை கேஸ் என்னோடதுதான் சார்... 

ஓஓஓ கவனிக்கல, கிடைச்சிருச்சா?  

ம்ஹூம் என்று தோளை உலுக்கிய புகழினி

வாங்கிடுவேன்,.. வக்காளி அவனே வாழும் போது நான் விட்டிருவேனா என்ன? ஒருநாள் சுதந்திரமா மூச்சு விடுவேன் சார் , நம்பிக்கை இருக்கு ... அப்பறம் விவாகரத்து வாங்க அட்வான்ஸ் வாழ்த்துகள் சார் ..

உங்களுக்கும் மேடம் .... ஆட்டோஓஓஓஓஓ என்று ஆட்டோவின் அருகே போய் பேசி அழைத்து வந்தவன்....

பார்த்து போங்க மேடம் ... "

நன்றி சார் .. என்று ஆட்டோவில் ஏறி அமர்ந்து கொள்ள .... இவனும் தன் பைக்கை எடுத்து கொண்டு நகர ஆரம்பித்தான் ..

ரெயில் சிநேகம் போல .... பெயர் கூட தேவையில்லை பேசிய பொழுதுகள் அந்த நேரத்தை இனிமையாக்கும் அப்படியே இருவருக்கும் இருந்த அந்த நேரத்து வலியும் இறுக்கமும் சற்றே தணிந்து போனது ,...

இவளிடம் பேசியதில் கிடைத்த தைரியமா அவள் கொடுத்த தன்னம்பிக்கையா?? ஏதோ ஒன்று ஸ்ரீநாத் நேராக ரஞ்சனி வீட்டின் வாசலில் போய் நின்றான்..

உள்ள வாங்க மருமகன் என்று மாமியாரை அழைக்க..

"இந்த வீட்டுக்குள்ள வர்ற அளவுக்கு எனக்கும் இந்த வீட்டில் உள்ளவங்களுக்கும் சமமபந்தம் இல்லன்னு நினைக்கிறேன்... நான் இங்க வந்ததுக்கு என் குழந்தையை பாக்குறதுக்கு

அதான் கோர்ட் குழந்தையை என்கிட்ட அனுப்பிடுச்சே என்று உள்ளிருந்து ரஞ்சனி குரல் வர 

"என் குழந்தையை பாக்குறதுக்கு நான் எப்ப வேணும்னாலும் வரலாம் 

,என் குழந்தையை பாக்கலாம்னு அதே கோர்ட்தான் சொல்லி இருக்கு

" அப்போ உள்ள வந்து பாருங்க" மீண்டும் அவளின் குரல்

அவள் தன்னிடம் பேச மாட்டாளா, தன்னிடம் அன்பாக பேசிக் கொண்டே இருக்க மாட்டாளா என்று இந்த குரலுக்காக ஏங்கிய நாட்கள் எத்தனையோ எத்தனையோ உண்டு ... ஆனால் இன்று, அவள் குரல் அருவருப்பாக இருந்தது ... அவள் பார்வை தன் மீது படுவதை கூட விரும்பவில்லை.... கண்களை மூடி திறந்தவன் இன்று அந்த வீட்டிற்குள் கடைசியாக நுழைந்தான்... இனி இந்த வீட்டிற்குள் நுழையப் போவதில்லை என்று முடிவு செய்தவன் தோரணை நடையிலேயே தெரிந்தது..

தான் நினைத்ததை சாதித்து விட்டோம் என்ற தோரணையில் கட்டிலில் கால் மீது கால் போட்டு படுத்திருந்த ரஞ்சனி , உள்ளே நுழைந்த ஸ்ரீநாத்தை கண்டு மெல்ல எழும்பி அமர...

"என் மேல வீண் பழி சுமத்தி நீ நெனச்சத சாதிக்கலாம்னு நினைச்சுக்காத ரஞ்சனி ... சுமுகமா இந்த விவாகரத்தை எனக்கு தந்துட்டா , உனக்கு நல்லது... ஜீவனாம்சம்ங்கிற பேர்ல ஏதாவது தருவேன்... விதண்டாவாதம் பண்ணனும்னு நெனச்ச, நீ யாரு என்னன்னு உலகத்துக்கே படம் போட்டு காட்ட வேண்டியது இருக்கும்... பைத்தியக்காரன் நான் சொன்னாதான் இந்த உலகம் நம்பாது... ஆனா, உன் கூட கள்ள குடித்தனம் நடத்தின அவனே வந்து சொன்னா?? ரஞ்சனி சற்று மிரண்டு போய் பார்க்க 

"அவனுக்கும் பொண்டாட்டி புள்ள இருக்குன்னு கேள்விப்பட்டேன், அவன் யார் எவன்னு அத்தனையும் தெரியும் , நேரா எனக்கு நியாயம் சொல்லுங்கன்னு அவன் பொண்டாட்டி முன்னாடி போய் நிப்பேன், செய்யவா? என்றதும் ரஞ்சனி எச்சில் விழுங்க...

"உன்ன அசிங்க படுத்த கூடாதுன்னு தான் இப்பவும் அமைதியா இருக்கேன் என் பொறுமைக்கும் எல்லை உண்டு என்றவன் காலில் ரஞ்சனி தடாலடியாக விழுந்து விட்டாள் 

ப்ளீஸ் ஒரு தடவை மன்னிக்க கூடாதா? ஏதோ புத்தி கெட்டு போய் அந்த அசிங்கத்தை பண்ணிட்டேன் என்று ரஞ்சனி அழ... அவள் கண்ணீர் அவன் பாதத்தில் விழுந்தது.... அப்படியே கல் போல நின்றவன்... 

"தப்பு செய்றது மனித இயல்பு ... ஆனா அந்த தப்புக்கும் ஒரு தரம் உண்டு ரஞ்சனி..... இனி நாம சேர்ந்து வாழ்றது நடக்காத ஒன்னு .. என்ன ஏமாத்துறாளோன்னு ஒவ்வொரு நாளும் நான் தான் தீக்குளிக்கணும், உன்ன சந்தேக பட்டு நான்தான் என் குணத்தை இழக்கணும்... நீ சொன்னியே பைத்தியம்னு உண்மையாவே ஒருநாள் ஆகிடுவேன்.... நீ என்ன நேசிக்காத போது கூட உன்ன நேசிச்சேன்... எப்போ அடுத்தவன் கிட்ட பொறுக்க போனியோ? அப்பவே உன் மேல வச்சிருந்த மனைவிங்கிற மரியாதையை நீ இழுந்திட்ட.... உன்கூட சேர்ந்து வாழ்ந்து என் வாழ்க்கையை செல்லாக் காசாக்க எனக்கு விருப்பம் இல்லை.. நீ பன்னியா இரு, நான் இருக்க விரும்பல என்றவன் ஓடி வந்த மகனை தூக்கி கொண்டு வெளியே போனவன் 

நைட் கொண்டு வந்து விடுறேன்.... என்று மாமியாருக்கு தகவல் கொடுத்து விட்டு போய்விட்டான்..

நல்லவனாக இரு எல்லா நிலையிலும் நல்லவனாகத்தான் இருப்பேன் என்றால் நீயும் முட்டாளே!!