அநாயகனே-9

அநாயகனே-9

அநாயகா-9

இளந்தீரனோ வண்டியை ஓட்டிக்கொண்டிருக்க ரகுவரன் பின்னால் உட்கார்திருந்தான்.இளந்தீரன் அவனிடம் பேசிக்கொண்டிருந்தான்.

“ஏன்டா பங்காளி நான் செங்கல்லை தூக்கி வீசும்போது ,இப்படி நீ சும்மாவாடா பார்த்துட்டு நிப்ப? நான் கோபத்துல இருந்தாலும் நீ வந்து என்னைப் பிடிச்சு தடுத்திருக்க வேண்டாமாடா. இப்படியே பப்பரபான்னு வேடிக்கைப் பார்த்துட்டு நிப்பியா. என்னைக் கொஞ்சம் தடுத்திருக்கலாமேடா. அவருக்கு நல்ல இரத்தம் வந்து மயங்கி விழுந்துட்டாரேடா”என்று ஒருமாதிரி ஆதங்கத்தில் பேசிக்கொண்டிருந்தான்.

ரகுவரனோ கோபத்தில் அவனது முதுகில் வேகமாக அடித்தான்.“ஏன்டா இப்படி கேட்கிற? உங்க மாமாதானே நமக்கு முதல் எதிரி. நீ அவரை அடிச்சதுல தப்பேயில்லை.இன்னும் நல்லா இரத்தம் வரட்டும். அப்போதான் நம்ம யாருன்னு அவருக்குத்தெரியும்” என்று சொன்னான்.

“அதில்லைடா இதுக்குமேல அவருக்கு என்னாச்சுன்னு தெரியலையே. அங்கிருந்து கோபத்துல வந்துட்டோமே, வேணும்னா மறுபடியும் போய் அவரைப் பார்த்துட்டு தூக்கிட்டுப்போய் ஹாஸ்பிட்டல்ல போட்டுட்டு வருவோமா?”

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். இப்போ போனன்னு வையேன் உங்க அத்தைக்காரி உன்னை எதால அடிப்பான்னு தெரியாது. வாயை மூடிட்டு வண்டியை ஓட்டுடா. எதுன்னாலும் நான் எங்க மாமாகிட்ட பேசிக்கிறேன். அவர் நம்ம ஆட்களை வைச்சு எல்லாம் பார்த்துப்பாரு. எப்படியும் போலீஸ் கேஸாகாது .உன் மாமா அதையெல்லாம் செய்யமாட்டாரு. இனி நம்ம பக்கம் கொஞ்சம் பார்த்துதான் காலெடுத்து வைப்பாரு. நீ சம்பவக்காரன்டா. உன்னை மாதிரி ஒரு ஆளுதான்டா அடுத்து மேல தலைவரா வரணும்னு எங்க மாமா வேற சொல்லிட்டிருக்காரு. உன்னை வீட்டோட மாப்பிள்ளையாக்கி அப்படியே அவருக்கூடவே வைச்சிக்கணும்னு நினைக்கிறாரு. அதுக்கு இப்போ இந்த சம்பவமே போதும்ன வாடா மருமகனேன்னு உன்னை கட்டிப்பிடிச்சிப்பாரு. இப்போ விடுறாவண்டியை மறுபடியும் தோப்புக்கு. அடிச்ச சரக்கெல்லாம் போயிடுச்சு. மறுபடியும் சரக்கடிக்கணும்” என்று அவனை தோப்பு வீட்டுக்கு போகச்சொன்னான்.

“அப்படியாடா நம்ம ஐயா சொன்னாரு. நானும் மதுமதியும் காதலிக்கிறது அவருக்கு தெரியுமா என்ன?நீ அவருக்கிட்ட எங்க காதல் விசயத்தைச் சொல்லிட்டியா?”

“நான் எதுக்குடா சொல்லணும். அதுதான் எல்லோருக்கும் தெரியுமே. நீங்க இரண்டுபேரும் அங்கேயும் இங்கேயும் நின்னு பேசுறதை அவரே பார்த்திருக்காரே. அவரு நம்ம வளர்ச்சிக்காக எல்லாம் பார்த்து பார்த்து செய்தாரு. அதனால் அவரு என்ன சொல்லுறாரோ அப்படியே செய்வோம். நீயும் சீக்கிரம் மாமாவோட இடத்துக்கு வந்திருவ. எம்.எல்.ஏவாகிடுவாடா. அப்புறம் என்ன மதுமதியோடு சந்தோசமா வாழவேண்டியுதுதான்”என்று சொல்லிவிட்டு சந்தோஷமாகச் சிரித்தான்.

அந்த வார்த்தைகளைக் கேட்டதும் ரகுவரனுக்கு அப்படியே மதுமதியின் முகம்தான் கண்ணுக்கு முன்னாடி வந்துப்போனது. 

அவளது அந்த ஆளைக்கொல்லும் கண்களும், அவளது காதலும் தரும் போதையை மனதுக்குள் நினைத்துப்பார்த்தவனுக்கு பொண்ணு போதையும், பதவிபோதையும் சேர்ந்து அவனை அப்படியே கிறக்கத்தற்குக் கொண்டுபோனது. அதுக்கு முன்னாடி அவன் அடிச்ச சரக்கின் போதையெல்லாம் ஒன்னுமில்லாமல் போயிருந்தது.

அதனால் அடுத்து குடிக்கணும் என்ற எண்ணம் அவனுக்குமே வந்துவிட்டது. அதனால் ரகுவரன் சொன்னதுபோல தோப்புவீட்டுக்கே போய்விட்டான்.

அங்கே போனதும் நடந்தது எல்லாத்தையும் தூக்கிப்போட்டுவிட்டு தனது பிரண்ட்ஸ் மற்றும் கட்சி ஆட்களோடு ஐக்கியமாகிவிட்டான்.

இங்கே ஜெயச்சந்திரன் வீட்டில் இளந்தீரன் ஜெயசந்திரன் மயங்கி விழுந்ததையும், அவரது நெத்தியில் இரத்தம் வழிவதையும் பார்த்தும் கண்டுக்காது போனதையே பார்த்திருந்த ஆதிராவுக்கு அவ்வளவு கோபம் வந்தது. அவளுக்கு இப்பொழுது இளந்தீரன் மீது இதுவரைக்கும் இல்லாதளவு வெறுப்புத்தான் வந்தது.

இதுக்குமேல சும்மா நின்னுட்டிருந்தால் சரிப்படாது என்று நினைத்தவள் வேகமாக செயல்பட்டாள்.

அவள் ஓடிப்போய் காரை எடுத்துட்டு வந்தாள். ரவீந்திரனும் செக்யூரிட்டி என்று எல்லோரும் சேர்ந்து அவரைத் தூக்கி காரில் வைத்து உடனே ஹாஸ்பிடலுக்கு கொண்டு சென்றாள்.

மகேஸ்வரியும் அவர்களோடு போனார். ஜெயசந்திரனை மடியில் படுக்க வைத்திருந்தவருக்கு அழுகையாக வந்தது. 

இந்த இளந்தீரன் கிட்டதட்ட காலஜ் படிக்கிறதுல இருந்தே இப்படித்தான் பண்ணிட்டிருக்கான். தங்கச்சி மகன்னு தூக்கி வளர்த்தவன்னு அவரும் சும்மா பார்த்துட்டேயிருந்தாரு. சின்னப்பையன் புரிஞ்சிப்பான்னு நினைச்சாரு. ஆனால் அவன் வளர்த்தக்கடா மாருலதான் பாயுங்கிறமாதிரியே அடிக்கடி பிரச்சனை பண்ண்ணிட்டிருக்கான். இப்படி செங்கல்லைத் தூக்கி அடிச்சு கொல்லப்பார்த்துட்டானே.மாமா மாமான்னு உயிரா இருந்தவன், இப்போ அவரு உயிரை எடுக்கிறளவுக்கு அடிச்சிட்டானே என்று அழுதார்.

ரவிதான் சமாதானப்படுத்தினான். 

“அத்தை அழாதிங்கத்தை. முதல்ல மாமாவை ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டு இளந்தீரன் பேருல ஒரு கேஸ் போட்டிருவோம். எப்படியும் ஹாஸ்பிட்டல்ல கேட்பாங்க. அதுவும் எம்.எல்.ஏவையே கல்லால அடிச்சிருக்கான். அவங்களே நேரடியா கேஸ் போட்டிருவாங்க” என்று அவரிடம் பேசியவன் ஜெயசந்திரனைக் கொண்டு ஹாஸ்பிட்டலில் அடமிட் பண்ணிட்டு உட்கார்ந்திருந்தார்கள்.

அங்கு எப்படி அடிபட்டது என்ன என்று டாக்டர்கள் விசாரித்தார்கள். மகேஸ்வரி இளந்தீரன்மேல் உள்ளக் கோபத்தில் கம்ப்ளெயிண்ட் கொடுத்து எல்லாவற்றையும் சொல்லிவிட்டார். 

உடனே ஹாஸ்பிட்டலில் இருந்து பக்கத்தில் இருந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்துவிட்டனர்..

அதற்குள் ரவியும் தனது வீட்டுக்குப்போன் பண்ணி இளந்தீரன் என்னவெல்லாம் செய்தான் என்பதை சொன்னவன்”அம்மா உன் இளைய மகனை இதுக்குமேலயும் கண்டிக்காமவிட்டன்னு வையேன் அவன் ஜெயிலுக்குள்ளதான் இருப்பான். அவனோட வாழ்க்கையே மொத்தமா போயிடும். மாமாவுக்கு என்னாச்சுன்னு தெரியலை. ஐ.சி.யூல இருக்காரு. அவருக்குமட்டும் ஏதாவதாச்சுன்னா உன் மவனை சும்மாவிடமாட்டாங்க பார்த்துக்க”என்று இருந்த வேதனையில் பேசிவிட்டு போனை வைத்தான்.

அவனுக்கு மனசு ஒருமாதிரியாகிருந்தது. அவனுக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்தே மாமான்னா அவ்வளவு பிடிக்கும். தங்கச்சி பிள்ளைங்கன்னு எங்க மேல அவ்வளவு பாசம் வைச்சிருக்காரு. ஆனால் இந்த ரருவரன் மட்டும் ஏன் அவரை எதிரியாவே பார்க்கிறான். அரசியல் விருப்பு வெறுப்பு வேற குடும்பம் பாசம் அப்படிங்கிறது வேற. இதையெல்லாம் இவன் எப்போ புரிஞ்சிக்க போறானோ தெரியலையே என்றுதான் வேதனையோடு உட்கார்ந்திருந்தான்.

ஜெயசந்திரன் இன்னும் கண்முழிக்கவில்லை. அதனால் மகேஷ்வரி கொடுத்த கம்ப்ளெயிண்ட் அடிப்படையில் போலீசார் நேராக இளந்தீரனைக் கைது செய்யவேண்டும் என்று கிளம்பிவிட்டனர். 

ஆதிராவோ இப்பொழுது எதுவுமே பேசாது அமைதியாக நடப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். அவளாலும் என்ன செய்யமுடியும். அப்பாவை இந்தளவுக்கு வெறித்தனமா செங்கலைக்கொண்டு அடிச்சிருக்கான். இதுக்குமேல அவன்மேல உள்ளக் காதலுக்கு என்ன மரியாதை இருக்கமுடியும்?இத்தனை நாளும் அவனுக்காக காத்திருந்தது போதும். இனி அவனே என்னைக் கட்டிக்கிறேன்னு சொன்னாலும் எனக்கு அவன் வேண்டாம் என்று அப்போதைய மனநிலையில் ஒரு முடிவை எடுத்துவிட்டு, அப்பாவைப் பார்ப்பதற்காக ஐ.சி.யூவின் வெளியே காத்திருந்தாள்.

அவள் பிறந்ததிலிருந்தே ஆளுமையோடு பார்த்த அப்பா இப்போ அடிபட்டு மயங்கி ஐ.சி.யூவில் இருக்கிறார் என்பதை அவளால் தாங்கிக்கொள்ளமுடியாது அங்கயே மடங்கி உட்கார்ந்து அழுதாள்.

ரவீந்திரன்தான் ஓடிப்போய் அவளைப் பிடித்துக்கொண்டான்.

அவள் இப்படி உடைந்து அழுது அவன் பார்த்ததேயில்லை. சங்கவிதான் தொட்டதுக்கெல்லாம் குறைசொல்லிட்டு எமோஷனலா பேசிட்டு தன் உணர்வுகளை வெளிக்காட்டிக்கிட்டே இருப்பாள்.

ஆனால் இப்போது ஆதிரா உடைந்து அழவும் பயந்துவிட்டான்.

என்னாச்சு ஆதிரா?மாமாவுக்கு உள்ள ஏதும் பிரச்சனையா? என்று கேட்டுவிட்டு எழுந்து ஐ.சி.யூவின் கண்ணாடி வழியாக அவரைப் பார்த்தான்.

செங்கல்லு அடிச்ச வேகத்துல மயங்கிருப்பாரு என்று நினைத்துதான் இரத்தம் சொட்ட சொட்ட தூக்கிட்டு வந்து சேர்ந்தாங்க. ஆனால் உள்ளே அவருக்கு பயங்கரமான அடியாக விழுந்திருந்ததால் தலையில் பாதிப்பு இருக்க அதிகவாய்ப்பிருக்கு என்று எம்.ஆர்.ஐ ஸ்கேன் எல்லாம் எடுத்து வேகவேகமாக ட்ரீட்மெண்ட் குடுத்திட்டிருக்காங்க.

அவன் அவரைப் பார்த்துவிட்டு ஆதிராவை கைப்பிடித்துத் தூக்கி இழுத்து சேரில் உட்காரவைத்தான்.

“என்ன ஆதிரா நீயே இப்படி உடைஞ்சு போனா மத்தவங்க எப்பபின்னு யோசி. தயவு செய்து பதட்டப்படாமல் எப்போதும் போல நிதானமா இரு. அடுத்து என்ன பண்ணலாம்னு யோசிக்கலாம். உன்னைப் பார்த்ததும் அத்தையும் சங்கவியும் இன்னும் அழ ஆரம்பிச்சிட்டாங்க”என்று ரவீந்திரன் சொன்னதும்தான் சுத்திப்பார்த்தாள்.

அவர்கள் அழுகிறதைப் பார்த்ததும் கண்களை வேகவேகமாகத் துடைத்தவள் எழுந்து நேராக டாக்டரைப் பார்க்கத் தனியாகப் போனாள்.

இங்கே இளந்தீரன் இப்போது நல்லக்குடித்துவிட்டு போதையில் வெளியே வந்தான். அவனது முகம் கொஞ்சம் தெளிவில்லாமல் இருந்ததைப் பார்த்ததும் ரகுவரன்தான் அவனது தோளைத்தட்டிக்கொடுத்தான்.

“டேய் ஏன்டா ஒரு மாதிரி மூஞ்சி வச்சிருக்க. உன் மாமா மண்டையில கல்லைத் தூக்கி எறிஞ்சுத நினைச்சு இன்னும் பீல் பண்ணிட்டிருக்கியா என்ன?இரத்தம் வர்றதெல்லாம் அரசியலில் சகஜமாப்பா. இதுக்கு முன்னாடியே உங்க மாமா கட்சி ஆட்களும் போலீஸும் எதிர்கட்சி ஆடகளான நம்மளை முன்னாடி ஓட ஓட விரட்டி அடிக்கலையா என்ன? அந்த அடியையெல்லாம் வாங்கிட்டு ஓடிதப்பிச்சோம்ல. அதுக்கு இது பதிலுக்கு பதில் செய்தாச்சு நினைச்சுக்கடா அவ்வளவுதான். நீ இன்னைக்கு செய்தது ரொம்ப பெரிய சம்பவம்தான்டா. நம்ம தலைவர் போஸ்டரை கிழிச்சிட்டு அவர் போஸ்டரை ஒட்ட வச்சிருக்காரே அப்போ இதையோசியேன் அவரு எவ்வளவு பெரிய அரசியல்வாதியா இருக்கணும்? அவரை எதிர்த்தால்தான் நம்ம கட்சியில் நம்ம மேல வர முடியும். எதுவும் கண்டுக்காத எதுனாலும் பார்த்துக்கலாம்,அப்படியே போலீஸ் கேஸானாலும் நம்ம வெளியே வந்துடலாம்.அதுவே நம்மளோட அரசியல் வாழ்க்கையில ஒரு முன்னேற்ற பாதைக்கு கொண்டு போகும்” என்று அவனை சமாதானப்படுத்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தான். 

அவன் வீட்டுக்கு வரும்போது அவனது அம்மாவும் அப்பாவும் தூங்காது அவனுக்காக காத்திருந்தார்கள். 

அவர்கள் இருவரும் அவனைப் பார்த்துக் கோபத்தில் முறைத்துக்கொண்டு நின்றிருந்தனர்.

அதைப் பார்த்ததும் “ஆஹா அதுக்குள்ள வீட்டுக்கு தகவல் வந்துதிருக்கப்போல.அதுக்குள்ள யாரு தகவல் சொல்லிருப்பா? வேற யாரு சொல்லி இருக்க முடியும் நம்மகூடப்பிறந்தவனாகத்தான் இருப்பான்.இல்லைன்னா மாமா பெத்தது இரண்டாது உள்ளது போட்டுக்குடுத்திருக்கும். என் அருமை அத்தை உன் மகன் எங்கப்பாவ அடிச்சிப்போட்டுட்டு வந்துட்டான்னு சொல்லிருப்பா. அவளுக்குத்தான் நம்ம வீட்டுல எல்லாருடைய நம்பரும் தெரியும் எல்லார்கிட்டயும் ஓட்டிகிட்டு பேசிட்டு அலையுறாளே” என்று நினைத்தவாறு உதட்டை சுழித்தவன் அவர்கள் இருவரையும் கண்டுக்காது வீட்டிற்குள் போக முயன்றான்.

ஆனால் அவனை வீட்டுக்கு போகவிடாது அவனது அம்மா கவிதாகுமாரி வாசலிலே அவனது வழியை மறைத்து நின்றார்.

“என்னம்மா நீ வீட்டுக்குள்ள போக விடாம வழியை மறைச்சிட்டு நிக்க? என்னை உள்ள போக விடாம பண்ற. நீயும் இப்போ வீட்டுக்குள்ளே போராட்டம் கீராட்டம் எதுவும் பண்ணிட்டிருக்கியா என்ன? இல்லை என்கிட்ட மட்டும்தான் இந்த போராட்டமா. அர்த்த இர்த்திரியில எழுந்து வழியை மறைச்சி விளையாடத. தள்ளிபிப்போ ஏற்கனவே ஓவரா தலையை சுத்துது. போய் படுத்தாதான் நல்லாயிருக்கும்” என்று நக்கலாக பேசியவாறே தலையைப் பிடித்துக்கொண்டான்.

அதைக் கேட்டதும் இருந்தக் கோபத்தில் கவிதாகுமாரி அவனது கன்னத்தில் ஓங்கி வேகமாக அடித்துவிட்டார்.

அதை எதிர்பார்க்காதவன் அப்படியே அதிர்ச்சியில் ஒரு நின்றுவிட்டான். அந்த போதையிலும் கோபப்பட்டவன் அவர் அடுத்த அடி அடிக்கப்போகும்போது அவரது கையை தடுத்து பிடித்திருந்தான் இளந்தீரன்.

இதை கவிதாவும் எதிர்பார்க்கவில்லை, அவனது அப்பா விஜயராஜும் இதை எதிர்பார்க்கவில்லை என்பதால் சட்டென்று கோபத்தில் அவனை அடிக்க வந்துவிட்டார்.அவரை கவிதாதான் தடுப்பிடித்து வேண்டாம் என்று சொன்னார்.

ஆனால் விஜயராஜோ கோபப்பட்டு கத்தினார்.

“இளா என்னடா பண்ற?அம்மாவோட கையைப்பிடிச்சு தடுக்கிற. நீ செய்து வைச்சிருக்க வேலைக்கு உன்னையெல்லாம் வீட்டைவிட்டுத் துரத்தியிருக்கணும். ஆனால் அதையெல்லாம் செய்யாமல் உன்னை இங்கயே இருக்க வைச்சிருக்கோம்பாரு நீ இப்படித்தான் எதிர்த்து நிப்பியா?”என்று கேட்டார்.

“அப்பா எதுக்கு இப்போ இவ்வளவு லெக்ட்சர் குடுக்குற. என்ன நடந்துச்சுன்னு உன் கவிதாயினிஎன்னை அடிச்சுச்சுன்னு சொல்லு முதல்ல. சும்மா சும்மா தோளுக்குமேல வளர்ந்த மகனை இப்படித்தான் அடிப்பாங்களா?அப்படி அடிச்சா இப்படித்தான் எதிர்த்து கையைப்பிடிப்பேன். இப்போ அதுக்கென்ன?” 

“இப்போ அதுக்கென்னவா?என்னடா நினைச்சிட்டிருக்க நீ?அங்க என்னடான்னா உன் மாமாவை கல்லைத் தூக்கி அடிச்சு, இரத்தம் வரளவுக்கு போட்டுட்டு வந்திருக்க, திரும்பிப் பார்க்காமல் வந்திருக்க.அவரு இப்போ ஐ.சி.யூவில் இருக்காரு. ஏதாவது பிரச்சனைன்னா நாங்க உன் பக்கத்துல நிக்கமாட்டோம்” 

“உங்களை யாரு என் பக்கத்துல நிக்கச் சொன்னது?எனக்கு என் கட்சித்தலைவர் இருக்காரு. மாவட்ட செயலாளர் சிவசங்கரன் மாமா இருக்காரு. என் பிரண்டு ரகுவரன் இருக்கான். அவங்கெல்லாம் எனக்குப்போதும். அவங்க என்பக்கம் எனக்காக நிற்பாங்க. நீங்க இல்லைன்னாலும் இந்த அரசியல் என்னைது தூக்கிவிடும் போங்கப்பா”என்று தெனாவெட்டாக பேசினவனை பெத்தவங்க இரண்டுபேரும் வேதனையின் கண்ணீரோடு பார்த்தனர்.

எல்லாரும் உனக்குப் பின்னாடி வந்து நிக்க நீ என்ன ஏ.டி.எம் மெசினா இளந்தீரா?