அநாயகா-17

அநாயகா-17

ஆதிரா வந்துட்டு போனதுல இருந்தே இளந்தீரனின் மனதிற்குள் ஒருவிதமான ஏக்கம் அவனது உள்ளத்தில் வந்துபோனது. 

அவன் மதுமதிதான் தன்னை பார்க்க வந்திருக்கிறாள் என ஆவலோடும், சந்தோஷத்தோடும் வந்து ஏமாந்த அந்த வலியோடு, அது அவனுக்கு ஒரு மாதிரி உறுத்தலாக உறுத்திக்கொண்டிருந்தது.

ஆதிரா கையெழுத்து போடச் சொன்ன இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டாலும் ஒரு சின்ன சந்தேகம் அவனுக்குள்ளே இருக்கத்தான் செய்தது.

‘எதுக்காக கையெழுத்து வாங்கிட்டுப்போனாள் என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. மாமா ஹாஸ்பிட்டல்ல இருக்கும்போது, இவா மட்டும் வந்து இன்னைக்கு கையெழுத்து வாங்கிட்டு போயிருக்காளே! எதுக்கு கையெழுத்து வாங்கினான்னு இன்னும் புரியல. எதுக்கு கையெழுத்து போடணும்னு கேட்டதெல்லாம் பதிலே சொல்லாமல் நம்மளையே மிரட்டி கையெழுத்து வாங்கினமாதிரியே வாங்கிட்டாளே. அது சரி எம்.எல்.ஏ ஜெயச்சந்திரனோட மகள்னா சும்மாவா? அவா பிறந்ததிலிருந்தே அரசியல்வாதியின் மகளாதானே இருக்கா. அந்த ரத்தம் சும்மாவா இருக்கும்?நம்மக்கிட்டயும் விளையாடத்தானே செய்யும் சரி நம்ம வாழ்க்கையில ஏதோ விளையாடுறாங்க இதுவரைக்கும் விளையாடினது போதாதுன்னு புதுசாக விளையாடுறா. விளையாடுங்கடா விளையாடுங்க’என தனக்குள்ளாகவே பேசி சிரித்துக்கொண்டான். 

ஜெயிலுக்குள்ளே வரும்போது இருந்த மனநிலைக்கும் இப்பொழுது இருக்கிற அவனது மனநிலைக்கும் ரொம்ப வித்தியாசம். இந்த பதினைந்து நாள் ஜெயில் வாழ்க்கை அவனுக்கு நிறைய பாடங்களைக் கற்றுக் கொடுத்திருந்தது.

அவனது மனதிற்குள் எல்லாம் அடிக்கடி மதுமதியின் 

முகமே முழுதாக நிறைந்திருந்தது. அவளை நினைத்து நினைத்து அந்த மீதி இருந்த பதினைந்து நாட்களையும் கழித்துவிட்டான்.

அவனைத்தேடி ஆதிரா வந்ததையோ அவள் கையெழுத்து வாங்கினதையோ முற்றிலுமாக மறந்தே போய்விட்டான்.

எப்போடா வெளியே வருவோம் மதுமதியைப் பார்த்து பேசுவோம்என்ற ஏக்கம்தான் அவனுக்குள்ளே இருந்தது. ஆனாலும் அவா நம்மளை வந்துப் பார்க்கலையே என்றும் ஒரு விதம் கோபமும் இருந்தது. 

‘அவள் பார்க்க வராததற்கு ஏதாவது காரணம் இருக்கும் பொம்பள பிள்ளையை காதலிக்கிறவனை பார்க்க யாருதான் ஜெயிலுக்குள்ளே அனுப்புவாங்க. அதுவும் அவ்வளவு பெரிய கட்சித் தலைவரும் சிவானந்தன் எப்படி அனுப்புவாரு? கண்டிப்பா அனுப்பமாட்டாருதான்.அவரும் நம்மளை வந்து பார்க்காமல் இருக்கிறதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். மதுமதியையும் என்னை வந்துப் பார்க்க விடாமல் பிடிச்சு வச்சிருக்காருன்னா ஏதோ முக்கியமான பிரச்சனையாக்கூட இருக்கலாம், என்ன காரணமா இருக்கும்?’ என்று தனக்குள்ளே காரணத்தை தேடி தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டான். 

ஒரு மாதம் ஜெயில் தண்டனை முடிந்து அவனை மறுபடியுமாக கோர்ட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தார்கள்

அப்பொழுதும் அவனுக்கு ஜாமீன் கொடுக்கக்கூடாது என்றுதான் வாதாடினார்கள். ஆனால் ஆதிரா தனது வக்கீல் மூலமாக வந்து அவனை மொத்தமாக அந்த கேஸிலிருந்து விடுதலைப் பண்ணி வெளியே எடுத்திருந்தாள்.

அவனை வெளியே எடுப்பதற்காகத்தான் அவனிடமே வந்து கையெழுத்து வாங்கிக் கொண்டு போனாள்.‌ அவள் தன்னை வந்து பார்த்ததற்கான காரணம் இப்போதுதான் அவனுக்குப் புரிந்தது. 

அவனை எப்படியாவது திரும்பவும் ஜெயிலுக்குள்ளே அனுப்பணும்னு என்று இன்ஸ்பெக்டர் நல்லபெருமாள் திரும்பவும் ஏதோதோ முயற்சி செய்தார்.

ஆனால் ஆதிராவே அவனை வெளியே எடுக்க எல்லா முயற்சியும் செய்ததால் வெளியே வந்துவிட்டான்.

அவள் கேஸ் வாபஸ் வாங்குறேன்னு சொன்னாலும், அவரோ “ ஒரு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ அவரை கல்லால் தாக்கியிருக்கான். அதனால் கண்டிப்ப் அவனைத் தண்டிக்கணும். அவனே ஜெயில்ல போடணும். இல்லைன்னா அது ஆபாத்தாக முடியும். இளந்தீரன் மறுபடியும் அவரை கொலை செய்ய முயற்சிக்கலாம்” என்று வக்கீலிடம் சொல்லி பேசினார்.

ஆனால் அவன் அந்த எண்ணத்தோடு ஜெயச்சந்திரனின் மீது செங்கலை வீசவில்லை, அது கோபத்தில் நடந்த நிகழ்ச்சி. அது ஒரு ஏதாச்சையாக நடந்தது என்றுதான் ஆதிரா ஏற்பாடு பண்ணின வக்கீல் வாதிட்டு அவனை வெளியே கொண்டுவந்திருந்தார்.

ஆதிரா ஏற்பாடு செய்திருந்த லாயர்தான் வந்து இப்போ இளந்தீரனிடம் எல்லாத்தையும் சொல்லிக் கொண்டிருந்தார். 

இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருந்தவன் அங்கே இன்ஸ்பெக்டர் நல்லபெருமாளோடு பேசிக்கொண்டிருந்த ஆதிராவைத திரும்பி பார்த்தான். 

அந்தப் பார்வையின் அர்த்தம் புரிந்த ஆதிரா நல்லபெருமாளிடம் பேசிமுடித்துவிட்டு நேராக அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

அவனோ தனது தாடியைத் தடவியவாறே அவளை ஏறயிறங்கப்பார்த்தான்.

அவன்தான் எதுக்கு பார்க்கிறான்னு அவனைத் தெரிஞ்ச அவளுக்கு புரியுமே!

“இதெல்லாம் நான் உங்களுக்காக ஒன்னும் செய்யலை. அங்க கோமாவுல படுத்து கிடக்காரே ஒருத்தர் அவருக்காகத்தான் செய்தேன். என் மருமகனையே ஜெயிலுக்குள்ள வைச்சுட்டாங்களே படுபாவிங்களான்னு எங்களையும் சேர்த்து மனசுக்குள்ள திட்டிட்டு இருப்பார். அந்த ஒரு காரணத்துக்காகதான் உங்களை வெளியே எடுத்தேன். அவரை நீ கொலையே பண்ணிருந்தாலும் அவரோ ஆவி என் மருமகன்னுதான் துடிச்சிட்டிருக்கும். அப்படி என்னத்தத்தான் இந்த மருமகன்மலே பாசம் வைச்சிருக்காரோ தெரியலை. ஊரில்லாத மருமகன் கிடைச்சிட்டான்னு இப்பவும் பாசத்துல துடிச்சிட்டிருக்காரு” என்றவள் தனது உதட்டை வளைத்து ஒரு மாதிரி நக்கல் தொணியில் சொன்னாள்.

அவன் மௌனமாகக் கேட்ட கேள்விகளுக்கு, வார்த்தைகளால் பதில் சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து தனது காருக்கு போனாள்.

அதையெல்லாம் கேட்ட இளந்தீரன் கொஞ்ச நேரம் அசையாமல் நின்றவன், என்ன நினைத்தானோ அவளுக்கு பின்னாடியே போனான்.

அவள் திரும்பிப் பார்த்துவிட்டு “என்ன நம்ம பின்னாடியே வந்திட்டிருக்காங்க?எதுக்கு வர்றாங்க?”என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதே எதுவுமே பேசாது அவளோட காரில் ஏறி உட்கார்ந்தான்.

அவளோ “இதென்ன புதுசா இருக்கு?நம்ம பக்கத்துல வந்து உட்காருறாங்க?”என அதிர்ச்சியில் அவனது முகத்தை ஏறிட்டுப்பார்த்தாள்.

“என்ன?”

“நான் எங்க வீட்டுக்குப் போறேன். நீங்க வேற டேக்ஸியோ ஆட்டோவோ பிடிச்சு உங்க வீட்டுக்குப் போங்க. அத்தை உங்களைப் பார்த்தால் சந்தோசப்படுவாங்க”

“அப்படியா?”என்று ஏளனமாகக் கேட்டான்.

“ஆமா”

“எனக்கு அந்த கார்லதான் போகணும்னு தோணுச்சு. இதுலதான் போவேன். உனக்கு நான் வர்றது பிடிக்கலையா?”

“என்னது பிடிக்கலையாவா?எதுக்குப் பிடிக்கணும்?”

“அப்போ பிடிக்கலை”என்று கேட்டவன் அவளது கண்களை கூர்மையாகப் பார்த்தான்.

அவ்வளவுதான் தனது முகத்தைத் திருப்பியவள் “டிரைவர் அண்ணா வண்டியை எடுங்க. முதல்ல நேரா ஒரு சலூனுக்கு போய் நிறுத்துங்க”என்று சொல்லிவிட்டு வெளியே பார்த்தாள்.

ஆனால் மனசுக்குள்ளவோ “இந்த அத்தான் என்ன ஆளு ஒரு மார்க்கமா பார்க்குறாங்க. என்ன இந்த திடீர் பார்வை?எதுவும் புரியலையே. எப்படி பார்த்தாலும் மதுமதியைப் பார்த்தா அங்க தாவிடுவாங்க. நீ கண்டதையும் யோசிக்காமல் அமைதியா இரு ஆதிரா”என் தனக்குத்தானே கடிவாளம் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அதற்குள் சலூனும் வந்துவிட ஆதிரா திரும்பி இளந்தீரனைப் பார்த்தாள்.

அவ்வளவுதான் மறுபேச்சு பேசாமல் இறங்கிப்போனவன் “காசு உங்கப்பானா குடுப்பான்?”என்று எகத்தாளமாகக் கேட்டான்.

“என்ன?”என்று கேட்டவள், காரிலிருந்து இறங்ஙி இடுப்பில் கையைவைத்து அவனைப் பார்த்து முறைத்து நின்றாள்.

ஜெயில்ல இருந்தும் இந்த அத்தானுக்கு வாய்கொழுப்புக் குறையல பாரு என்று உதட்டை வளைத்து சுழித்து அவனைப் பார்த்து “எங்கப்பன் பேரைச்சொன்னா காசு வாங்க மாட்டாங்க. போய் சிரைச்சிட்டுவாங்க”என்றுவிட்டு காருக்குள் வந்து உட்கார்ந்துகொண்டாள்.

என்ன?என்று இப்போது அவன் கோபத்தில் அவளைப் பார்க்க அவளோ கண்டுக்கொள்ளவேயில்லை. “அப்பனோட திமிரு அப்படியே இருக்கு” என்றவாறே உள்ளபோய் கட்டிங் சேவிங் முடிச்சிட்டு வெளியே வந்தான்.

அவளை எந்தவிதத்திலும் வார்த்தையால் காயப்படுத்த அவனுக்கு இப்போது மனசு வரவில்லை. ஏனோ பழையமாதிரியே ஆதிராவைப் பார்க்க அவனுக்கு எண்ணம் விழைந்தது. அது தப்பென்று அவன் மனது சொன்னதும் அவனது மனது மதுமதியைத் தேட ஆரம்பித்தது.

ஆனாலும் இப்போதைக்கு எப்படி அவளைப் பார்க்க முடியும்?ஏன் ஆதிராக்கிட்டயே ஹெல்ப் கேட்கக்கூடாது. அதுதான் நம்ம காதல் கதை மொத்தக்குடும்பத்துக்கும் தெரியுமே!அப்புறமென்ன அவக்கிட்டயே ஹெல்ப்ப கேட்டிருவோம் என்று இறங்கி வந்தான்.

அவள் பக்கத்தில் வந்து உட்கார்ந்தவன் “ஆமா இப்போ என்னை எங்கக்கூட்டிட்டுப் போயிட்டிருக்க?உங்க வேட்டுக்கெல்லாம் நான் வரமாட்டேன். எங்க வீட்டுக்கும் நான்போகமாட்டேன். நேரா என்னை ரகுவரன் வீடடுக்குக் கூட்டிட்டுப்போய் விட்று. உங்கம்மா எப்படியும் என்னை வெளியே எடுக்க சம்மதிச்சிருக்கமாட்டாங்க. அவங்களுக்குத் தெரியாமத்தானே இதெல்லாம் பண்ணிருப்பன்னு தெரியும். அதனால் உனக்கும் பிரச்சனையில்லாமல் எனக்கும் பிரச்சனையில்லாமல் என் பிரண்டு வீட்டுலயே என்னைக்கொண்டுவிட்று. எனக்கு அவனையும் பார்க்கணும் மதுமதியையும் பார்க்கணும்”என்று சொல்லிவிட்டுத் திரும்பியவனின் கண்ணில் பட்டபேனரையும் ஃபிளக்ஸையும் பார்த்து அப்படியே அதிர்ச்சியானவனுக்குஇதயமே வெடித்து சிதறுவது போன்று உணர்ந்தான்.

அவன் தனது கண்களால் பார்க்கின்ற காட்சி உண்மையா?இல்லை பிரம்மையா?என்பது போன்று சில சிமிடங்கள் பார்த்தவன் “காரை நிறுத்துஊஊஊ”என்று சத்தம்போட்டான்.

அவனது சத்தத்தில் பயந்துப்போன டிரைவர் க்ரை அப்படியே ஓரமாக நிறுத்திவிட்டுத் திரும்பிப்பார்த்தான்.

அதேநேரம் ஆதிராவும் இந்த அத்தான் எதுக்கு இவ்வளவு எதுக்கு இவ்வளவு கோபமா காரை நிறுத்தென்று கத்துறாங்க என பயந்துப்போய் திரும்பிப்பார்த்தாள்.  

ஏற்கனவே அவனது குணம் தெரியும் என்பதால் அவனைப் பயத்தோடு பார்த்தாள். ஆனால் அவனது பார்வையோ வெளியே வரிசையாக வைக்கப்பட்டிருந்த கல்யாண பேனர்களையும் கட்சி படங்களையும் பார்த்த அதிர்ச்சியில் அப்படியே நிலைத்திருந்தது.

அவனது கண்கள் சென்ற திசையைப் பார்த்ததும் எதுக்கு அத்தான் சத்தம்போட்டாங்க என்பதை புரிந்துக்கொண்டவள் 

“சின்னத்தான்!தீரா அத்தான்!”என்று மெதுவாக அழைத்து அவனது தோளைத் தொட்டு அசைத்தாள்.

அவன் அவளது கையைத் தள்ளிவிட்டவன் 

வேகமாக இறங்கி போய் அந்த பேனரில் இருந்த போட்டோக்களை பார்த்தவனுக்கு என்ன சொல்லுவது என்று தெரியாத நெஞ்சில் கை வைத்து நின்றுவிட்டான். அப்படியே தனது நெஞ்சில் தனக்குத்தானே தட்டி தன்னைத்தானே தேற்றிக் கொண்டிருந்தான். 

ஆனாலும் அவனால் அதை இன்னும் தாங்கிக்க முடியாது போகவும் ஆதிராவைத் திரும்பிப்பார்த்தான்.

அவனது முகம் கோபத்தில் ரௌத்சிரமாக மாறியிருக்க, கண்கள் இரண்டும் இரத்தச்சிவப்பாக மாறியிருக்க, மீசைத் துடிக்கப் பார்த்தான்.

அவனது நிலையை உணர்ந்தவள் மெதுவாகக் காரைவிட்டிறங்கி, பயந்து பயந்து அவன் பக்கத்தில் வந்து நின்றாள்.

“இதுக்காகத்தான் இவ்வளவு சீக்கிரமா எனக்கு ஜாமீன் எடுத்து வெளியே கூட்டிட்டு வந்தியா? இது எல்லாம் நான் பார்த்து அழணும், கண்ணீர் வடிக்கனும்னு,அப்படியே வேதனைப்படணும்னு உங்க அப்பனை மாதிரி நீயும் நினைச்சிருக்க அப்படித்தானே! அதனாலதானே இந்த சூழ்நிலையில் என்னை விடுதலைப் பண்ணிக்கூட்டிட்டு வந்திருக்க. நான் வேதனைப்படுறது உனக்குக்கூடவா அவ்வளவு சந்தோசமாவா இருக்கு?" என்று கோபத்தில் அவளிடம் சரமாரியாக கேள்விகளை கேட்டான். 

“உங்க வேதனையைப் பார்த்து சந்தோசப்படுறதுக்கு நான் ஒன்னும் உங்க கட்சிக்காரங்கக்கூட்டம் இல்லை. உங்க மாமா மகள். இங்க வலிச்சா இங்கயும் வலிக்கும். நான் உங்களுக்காகத்தான் வெளியேகூட்டிட்டு வந்தேன். ஆனா இதுக்காக மட்டும்னும் கூட்டிட்டு வரலை. அவங்கக் கல்யாணத்துக்கு இன்னும் மூணு நாள் இருக்கு. உங்களுக்கு என்ன தோணுதோ அதை உங்க விருப்படி செய்யுங்க. இதுல அத்தையோ நாங்களோ எந்த விதத்திலும் தலையிடமாட்டோம் உங்க வாழ்க்கை உங்க விருப்பம். உங்களைக் காயப்படுத்தணும்னு கல்யாணத்துக்கு மூணு நாளைக்கு முன்னாடி வெளியே கூட்டிட்டு வந்திருக்கமாட்டேன். கல்யாணத்தன்னைக்கு அதுவும் கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம்கூட்டிட்டு வந்திருப்பேன். இதெல்லாம் செய்யாமல் ஜெயிலுக்குள்ள இருக்கும்போதே நாலு கல்யாண கார்ட்டை வந்து தந்து வேதனைப் படுத்தருப்பேன். யாருக்கிட்டவந்து என்ன பேசணும்னு தெரகயாமல் பேசக்கூடாது. இது ஒன்னும் உங்க கட்சி கூட்டத்துல பேசுறது கிடையாது. எதிர்ல இருக்கிறவங்களுக்கு என்ன மாதிரியான காயங்களை உங்க வார்த்தை உண்டாக்கும்னு யோசிச்சு பேசணும் புரியுதா?”என்று இளந்தீரனுக்கே பாடம் எடுத்துவிட்டு, அதற்குமேல் அங்கே நிற்கப் பிடிக்காமல் காரில் ஏறி உட்கார்ந்து கொண்டாள். 

அவளது கோபமும் பேச்சும் நியாயமானதே என்பதை உணர்ந்தாலும் அவளிடம் சண்டைப்போடவோ எதிர்த்துப்பேசவோ அவன் விரும்பவில்லை என்பதைவிட அவன் பெருங்குழப்பத்திலும் வேதனையிலும் இருந்ததால் அவனுக்கு அது தோணவில்லை.

முதன்முதலாக முழுமையான துரோகத்தின் நிழலை கண்முன் பார்ப்பதால் அந்த அதிர்ச்சியில் இருந்து அவனால் அவ்வளவு சீக்கிரம் வெளியேவரமுடியவில்லை!

அவன் அப்படியே அந்த பேனர்களையும் அதில் இருந்த போட்டோக்களையும் பார்த்துக்கொண்டிருந்தவன் வேகமாகப்போய் அதையெல்லாம் கோபத்தில் கிழித்துப்போட்டான்.

அவன் பேனர்களைக் கிழிக்கிறதைப் பார்த்த ஆதிராவுக்கு வேதனையாக இருந்தது. தீராத்தானுக்கு இது நடந்திருக்கவேண்டாம் என்று இப்போதும் அவனுக்காகவே வருத்தபபட்டாள்.

இளந்தீரனோ துரோகியின் மீதுள்ள கோபத்தை அவர்களின் போட்டாக்களில் தீவிரமாக காட்டிக்கொண்டிருந்தான்.

உனக்கு இது ஆவனும்டா என்று உலகமே சொல்லுவதுபோல பிரம்மையாக இருந்தது!