அநாயகா-13

அநாயகா-13

அநாயகா-13

இளந்தீரன் மீது இப்போது கொலை முயற்சி வழக்கு போட்டிருந்தார்கள். அதற்காகதான் ரவி வக்கீலோடு போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் வந்தான். ஆதிராவும் மகேஷ்வரியும் கம்ப்ளெயிண்டில் கையெழுத்துப்போட வந்திருந்தார்கள்.

ஆதிராவும் மகேஷ்வரியும் லீகலாக இளந்தீரன் மீது புகார் கொடுத்ததும் இதற்குப் பிறகான எல்லா விஷயத்தையும் போலீசார் பார்த்துக் கொள்வார்கள். 

“இதுக்குமேல எதுக்கு நம்ம இங்க இருக்கணும் வாங்க போவோம்” என்று ரவி சொன்னதும் இரண்டுபேரும் எழுந்து வெளியே வர நடந்தார்கள். 

அப்பொழுதும் இளந்தீரன் அவர்களை தெனாவட்டாக பார்த்து தனது காலின் மேல் கால் போட்டுத்தான் உட்கார்ந்திருந்தான். 

அதைப் பார்த்ததும் மகேஸ்வரிக்கோ அவன் தலையில் ஏதாவது தூக்கி போட்டு அவனை கொன்று விடலாமா? என்றளவுக்கு ஆத்திரமும் கோபமும் வந்தது. அதனால் மகேஸ்வரி அவன் பக்கத்தில் வேகமாகப் போனார்.

அடுத்து என்ன நடக்கும் என்பதை உணர்ந்த ஆதிரா ஓடிப்போய் அவரது கையை பிடித்து இழுத்தாள். 

மகேஸ்வரி தனது கோபம் அடங்காமல் “என் கையை விடு ஆதிரா. இவன் என் புருஷன் தலையை உடைச்சிட்டான். அவர் அங்க ஐ. சி.யூல மோசமான நிலையில் இருக்கிறாரு. அதுவும் உயிருக்குப் போராடிட்டு இருக்காரு. ஆனால் இவனை பாரு எவ்வளவு தேனாவெட்டா எந்த விதமான உறுத்தலும் இல்லாமல் ஏதோ பெரிய புரட்சி போராட்டத்துல ஜெயிலுக்கு வந்தவன் மாதிரி உட்கார்ந்திருக்கிறான் பாரு. இவனெல்லாம் நமக்கு செய்த இந்தக் கொடுமைக்கு எங்கேயாவது , எவன்கிட்டயாவது அடிவாங்கிஅநாதயை செத்துக்கிடப்பான். இவனைத் தூக்கிப்போடக்கூட ஆள் இல்லாமல் நடுரோட்டுல சாவன். இவன் எவ்வளவோ பிரச்சனை செய்தாலும் என் மருமகன் என் மருமகன்னு பாசத்துல விட்டுக் கொடுத்துப்போனாரு என் புருஷன்னு. அவரேயே இப்படி கொடூரமா அடிச்சு இப்படி படுக்கவைச்சிட்டானே இவனெல்லாம் ஒருநாளும் நல்லா இருக்க மாட்டான். நான் வயிறு எரிஞ்சு சொல்றேன்” என்று கதறியவர் அவனுக்கு சாபம் கொடுத்து தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

அதைக்கேட்டதும் ஆதிராவுக்கும் ரவிக்குமே அதிர்ச்சியாக இருந்தது. இந்தளவுக்கு மகேஷ்வரி சாபமிடுவார் என்று அவர்களும் எதிர்பார்க்கவில்லை, இளந்தீரனும் எதிர்பார்க்கவில்லை.

அவனது அதிர்ந்த முகத்தைப் பார்த்த ஆதிரா உடனே மகேஷ்வரியிடம்”அம்மாஆஆ இவ்வளவுதுரம் வேதனைப்படாதாம்மா. அப்பா நல்லபாடியா எழுந்நு வந்திருவாங்க. எதுவாயிருந்தாலும் அப்புறம் பார்த்துக்கலாம். இப்படி நம்ம யாரையும் சபிக்கவேண்டாம். அப்பா எழுந்து வந்து எல்லாத்தையும் பார்த்துப்பாங்க”என்று ஆறுதல் சொன்னாலும் அவளது மனது நெருடலாகவே இருந்தது.

அதனால் அவள் அங்கிருந்துப் போகிறவரைக்கும் இளந்தீரனைத் திரும்பித் திரும்பிப் பார்த்துக்கொண்டேதான் சென்றாள்.

அவள் என்ன நினைத்திருப்பாள், எதற்காக பார்த்திருப்பாள் என்பதையெல்லாம் தெரிந்திருந்தாலும் இப்போதுஅவனால் எதுவுமே செய்யமுடியாதே!எல்லாமே அவனது கையைமீறியல்லவா போய்கொண்டிருக்கிறது.

இதுவரைக்கும் கெத்தாக, தெனாவட்டாக இருந்தவன், மகேஷ்வரி அவ்வளவு திட்டி, சாபம் விட்டதும் மனசுக்குள் சிறிதாக ஒரு நெருடல் வந்தது. 

எதுக்காக மாமா தலையை கல்லால அடிச்சேன்?குடிச்சிருந்தால் இப்படி செய்வாங்களா? ஏன் இப்படி செய்தேன். ரொம்பப் பெரிய தப்புப் பண்ணிட்டனோ?

ஒரு நொடிதான் அப்படி யோசித்தான். ஆனால் அதற்கு அடுத்த நொடியே அந்த எண்ணங்கள் எல்லாம் மறைந்து சுயநலமாக யோசிக்க தொடங்கினான். 

ஆமா அவரு எங்க கட்சி போஸ்டரையெல்லாம் கிழிச்சிட்டு அவரோட போஸ்டரை ஒட்டினாருல்ல,அந்த கோவத்துல கல்லால் அடிச்சேன். அவரு செய்தது நியாயம்னா நான் செய்ததும் நியாயம்தான். அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டு தனது தோளைக் குலுக்கினான். 

அப்போது அவன் பக்கத்தில் யாரோ வருவதுபோன்று இருக்கவும் திரும்பி பார்த்தான். 

அங்கே இன்ஸ்பெக்டர்தான் வந்து நின்றார். அவனைப் பார்த்து நக்கலாக சிரித்தவர் ‘இதுக்காகத்தானடா நான் காத்திருந்தேன். உன் மேல உள்ள கம்ப்ளைன்ட் ஸ்ட்ராங்கா ஆகணும் கேஸ் பெருசா விழணும் நீ உள்ளே போகணும், அதுக்கு முன்னாடி உன் மேல இருக்க கோபத்தை நான் தீர்த்துக்கணும், இதுக்காகத்தானே நானும் காத்திருக்கேன்’ அர்த்தத்தில்தான் சிரித்தார்.

அவனும் அதை புரிந்துக்கொண்டவன் “ஓஹோ” என்று சொல்லிவிட்டு, தன் உதட்டை வளைத்து அவர் பேசியதைக் கேட்டவனின் காதில் இப்போது கொய்யென்று சத்தம் கேட்டது.

அவனது கை தானாகவே தனது கன்னத்தில் இருந்தது. 

இளந்திரன் மெதுவாகத்தான் தனது கன்னத்தில் சுளீரென்ற வலியை உணர்ந்தான்.

அப்படியே அதிர்ச்சியில் நிமிர்ந்து இன்ஸ்பெக்டரைப் பார்த்தான். 

அவர் தன்னை அடித்திருக்கிறார் என்பதை அப்போதுதான் உணர்ந்தான். அவரது கோபமான முகத்தைப் பார்த்ததும் அவனை அறியாமலயே எழுந்து நின்றுவிட்டான்.

இத்தனை வருட அரசியல் வாழ்க்கையில் அவன் யாரிடமும் அடிவாங்கியதேயில்லை. அதுவும் போலீஸ் ஸ்டேஷன் வந்தால் ராஜமரியாதைதான் கிடைக்கும். யாரும் அவனிடம் கோபமாகக்கூட பேசினதில்லை. அப்படியிருந்தவனை இன்று அதே ஸ்டேஷனில் உள்ள ஒருஇன்ஸ்பெக்டர் அடித்திருக்கிறார் என்பதே அவனால் தாங்கிக்கமுடியவில்லை. அதைவிடவும் அது அவனுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது.

என்னை இந்த இன்ஸ்பெக்டர் அடிச்சிட்டானா?எப்படி அடிக்கலாம் என்றும் கோபம் வந்தது. அவன் கோபத்தில் அவரை முறைத்துப் பார்த்தான்.

அவரோ“என்னடா பார்க்கிற?இளந்தீரன்னா பெரிய இவனா? வருங்கால சி.எம்க்கு நான் குடுத்த அடி செமையா வலிக்குதா?என் அடி எப்படி ஸ்ட்ராங்கா விழுந்துச்சா? இத்தனை வருஷம் உன் அரசியல் வாழ்க்கையில முதல் முதல் ஒரு ஆம்பள சிங்கமான இன்ஸ்பெக்டர் என்கிட்டயிருந்து அடி வாங்குறல்ல?அப்போ வலிக்கத்தான் செய்யும்”என்று கேட்டவாறே ஒரு சேரை எடுத்துப்போட்டு அவனுக்கு எதிராக உட்கார்ந்தார்.

இளந்தீரனோ அவர் தன்னை அடித்திருக்கிறார் என்பதை உணர்ந்ததும், அவனது மூர்க்கக்குணம் வெளிப்பட்டது. 

அவன் தனது காலால் அப்படியே இன்ஸ்பெக்டர் நல்லபெருமாள் உட்கார்ந்திருந்த சேரினை எட்டி உதைத்தான்.

அவர் அப்படியே பின்பக்கமாக சரிந்து கீழே விழுந்தார். அதைப்பார்த்தவுடனே ஸ்டேஷனில் இருந்த கான்ஸ்டபிஸ் எஸ்.ஐ என்று எல்லோரும் ஓடிவந்து அவரைத் தூக்குவதற்குள்,இளந்தீரன் தாவி அவர் மேல் உட்கார்ந்தான்.

அதை எதிர்பார்க்கத இன்ஸ்பெக்டரோ அவனைத் தடுத்துப்பிடிக்க,அவனோ தனது பலத்தைத் திரட்டி ஸ்டேஷன் என்றுகூட பார்க்காமல்,இன்ஸ்பெக்டரின் கன்னத்தில் மாற்றி மாற்றி ஓங்கி அடித்தான். 

கான்ஸ்டபிள்ஸ் எல்லோரும் சேர்ந்து அவனைப் பிடித்து இழுத்து, அவனிடமிருந்து இன்ஸ்பெக்டரை காப்பாற்ற போராடினார்கள்.

ஆனாலும் அவன் அடங்காது திமிறினான். ஒருவழியாக எல்லாரும் சேர்ந்து இளந்தீரனைப் பிடித்தது இழுத்து உட்காரவைத்துவிட்டு, இன்ஸ்பெக்டரை தூக்கினார்கள்.

இப்போது இருவரும் மூச்சுவாங்க தங்களை ஆசுவாசப்படுத்திக்கொண்டிருந்தனர்.

ஆனால் ஒரு கிரிமினல் கேஸ்ல அரஸ்ட் பண்ணிட்டு வந்தவன் இந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டரான என்னேயே அடிப்பானா?இவனை சும்மாவிடக்கூடாது. போலீஸ்னா யாருன்னு இவனுக்குக் காண்பிக்கணும் என்ற வேகம் வரவும் அப்படியே தாவி இளந்தீரனின் சட்டையைப் பிடித்துத்தன் பக்கமாக நிறுத்தினார்.

“உனக்காக எல்லாத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்த சொந்த சொந்த தாய் மாமனையே எதிர்க்கட்சிங்கறதுக்காக அடிச்சு கொலை பண்ண முயற்சி பண்ணியிருக்க. அதுக்காக உன் மேல கொலை கேஸ் போட்டிருக்காங்க. அப்படியாப்பட்ட கிரிமினில் நீ போலீஸ்காரன் என்மேலயே கைவைக்கிறியா?என்மேல வைச்ச கையை உடைக்கல நான் போலீஸ் இல்லடா. இதுக்கும் சேர்த்து உன் மேல தனி கேஸ்போட்டு உன்னை என்ன பண்றேன் பாரு. உன்னையெல்லாம் லாக்கப்ல போட்டு சாவடிக்காமல் இதுவரைக்கும் உன் மாமா பேச்சைக் கேட்டு வெளியே விட்டது என்னோட தப்புதான்டா. இனி அந்தாளு எழுந்து வரமாட்டான். அதனால் போலீஸ் ட்ரீட்மெண்டுன்னா என்னென்னு நான் உனக்கு காண்பிக்கிறேன்டா”என்றவர் அவனது கைகளைப் பிடித்து பின்பக்கமாக வளைத்து வைத்து விலங்குப்போட்டு பிடித்துக்கொண்டார்.

ஆனாலும் கோபம் குறையாத இளந்தீரனா அவரை எதிர்த்து நின்றான்.

“டேய் நல்லபெருமாள். நான் ஒரு வளர்ந்து வரும் அரசியல்வாதி. நீ இன்ஸ்பெக்டராக இருக்கிறதனால தான் இப்ப தப்பிச்சுகிட்டு இருக்க. ஆனாலும் நீ என்மேலயே கை வைச்சிட்டல்ல. இதுக்கானதை நான் உனக்குத் திருப்பித் தருவேன்டா. என்னை மட்டும் நீ வெளியே விட்டுப் பாரு உன் தலையை எடுத்துடுவேன். இத்தனை வருஷத்துல எவனும் என்மேல கைவைச்சதில்லடா. நீ அடிச்சிட்டல்ல. ஒரு இன்ஸ்பெக்டர் என் மேல கையை வைச்சது இதுதான்டா முதல் முறை இதுதான் கடைசி முறையாகவும் இருக்கும் .உன்னை நான் சும்மா விட மாட்டேன் என் கட்சித் தலைவர் வந்து எனக்காக நிப்பான்டா அப்போ ஜாமீன் வெளியே போயிட்டு உன்னை என்ன பண்றேன் பாரு” என்ன நடக்கிறது என்று புரியாமல் கோபத்தில் இன்ஸ்பெக்டரிடம் எதிர்த்து நின்று சவால்விட்டு எச்சரித்தான்.

“அதெல்லாம் அப்புறம் பாத்துக்கலாம். இங்கிருந்து நீ தப்பிச்சு போகமுடியுதான்னு பாரு. நீ என்ன அடிச்சதற்கான பதிலடி நான் திருப்பி தரணும்ல. அதுதராமல் உன்னை எப்படி நான் சும்மாவிடுவேன்னு நினைச்ச?இதுநாள்வரைக்கும் உன்மேல கைவைக்காமல் போனதுக்குக் காரணம் உன் மாமான்காரன்தான்டா. அவன் எம்.எல்.ஏவா இருந்தா எங்களை நிம்மதியா வேலை செய்யவிடமாட்டானா?உன்னையெல்லாம் எப்போவோ தூக்கிட்டு வந்து சிதைச்சு விட்றுப்போம். அந்தளாலதான் உன்னை சும்மாவிட்டு வைச்சிருந்தோம். இவன் அந்தாளோட எதிர்கட்சியில நின்னு அவருக்கூட மல்லுக்கட்டுவானாம். ஆனால் நம்ம எதுவும் செய்யக்கூடாதுன்னு நம்ம கையைக்கட்டிப்போடுவானாம். இப்போ அவன் ஹாஸ்பிட்டல்ல, நீ ஜெயில்ல. இதுதான்டா கர்மான்னு சொல்லுறது. இரண்டுபேரொட ஆட்டமும் குளோஸ்” என்று பேசியவாறே இளந்தீரனை அப்படியே தரதரவென்று இழுத்துக்கொண்டுபோய் அந்த லாக்கப்புக்குள்ள போட்டார்.

“சார் ரொம்ப பேசுறீங்க. முதல்ல என் கையில போட்டிருக்கிற விலங்கக் கழட்டிவிடுங்க. நான் ஒன்னும் சாதாரணமான ஆளுக்கிடையாது. எதிர்கட்சி ஆளு. எனக்கும் ஆளுங்கல்லாம் இருக்காங்க. இப்போ இல்லைன்னாலும் எப்படியும் என்னை வெளியே கொண்டுப்போக ஆட்கள் வருவாங்க. எல்லாம் ரெடிபண்ணிட்டிருப்பாங்க. அப்போ நான் உங்களை சும்மாவிடமாட்டேன் என்று நெஞ்சை நிமிர்த்துக்கொண்டு அவரை இடித்து வெளியே தள்ளியவன் தானும் வெளியே வரமுயன்றான்.

ஆனால் அதற்குள் கான்ஸ்டபிள்ஸ் லத்தியோடு உள்ளே வரவும், அதைப்பார்த்துவிட்டு இவனுங்க எதுக்கோ ப்ளான் போட்டுட்டாங்க என்று கொஞ்சம் அமைதியானான்.

“இன்ஸ்பெக்டர் சார் நீங்க பண்றது சரியில்லை. என் மேல ஒரு அடிபட்டுச்சின்னாலும் அப்புறம் உங்களுக்கு இருக்கு. ஆமா சொல்லிட்டேன். இதுக்கெல்லாம் சேர்த்து உங்களை என்னவேணும்னாலும் செய்வேன். எல்லாத்துக்கும் தயாராகிட்டு எதுன்னாலும் செய்யிங்க”என்று சொல்லி முடிப்பதற்குள் இன்ஸ்பெக்டர் கான்ஸ்டபிளின் கையில் இருந்த லத்தியை வேகமாக உருவி ஒரு அடி வேகமாக இழுத்தார்.

அதில் அப்படியே சுருண்டு விழுந்துவிட்டான். அவனால் அந்த லத்தி அடியைத் தாங்கிக்க முடியாதென்றில்லை. அவன் அதை எதிர்பார்க்காத நேரத்தில் அடித்ததும் சுருண்டு விழுந்துவிட்டான்.

இதுக்குமுன்னாட அரசியல்ல சண்டை போட்டு, அடியெல்லாம் வாங்கியிருக்கிறான். ஆனால் இந்த அடி அப்படியில்லையே!

போலீஸ் லத்தி அடி எப்படி இருக்கமென்று முதன்முறையாக வாழ்க்கையில் பார்த்தான்.

அப்படியே சுருண்டு விழுந்தவன் மெதுவாக எழுந்து நிற்க முயன்றான்.

அவன் ஏட்டு வந்து பிடித்து நிறுத்த அடுத்த அடி முதுகிலயே விழுந்தது. அப்படியே அந்ந ஏட்டு மேலயே சாய்ந்நுவிட்டான்.

முதன்முறையாக அம்மாஆஆஆஆஆ என்று கதறியவனுக்கு வாழ்க்கையில் லாக்கப்பு டெத்துன்னா என்னென்னு பார்க்க வைச்சிடுவாங்க போல என்றுதான் எண்ணம் வந்தது.

அவனது முதுகில் விழுந்த அடியில் மீண்டும் சுருண்டு கீழே விழுந்தவனை மொத்தமாக இரண்டுபேர் சேர்ந்து அடித்தன்.

அவனால் அடுத்தடுத்து அடி விழும்பொழுது கதறுவதற்குக்கூட தெம்பில்லாது அப்படியே ஒவ்வொரு அடிக்கும் துடித்துக்கொண்டிருந்தான்.

ராஜா வீட்டு கன்னுக்குட்டி போல ஊரை சுத்தி கொண்டு, அரசியல் விளையாட்டில் துள்பிக்கொண்டும் யாரையும் மதிக்காது நடந்தவன் இப்போது கிழிந்த நாராக அடிவாங்கி லாக்கப்பிற்குள் அரை மயக்கத்தில் கிடந்தான்.

முதல் முறையாக வலி பொறுக்க முடியாது இளந்திரனின் கண்களில் கண்ணீர் தானாக வடிந்தது.

மனதிற்குள்ளும் வலி உடலிலும் வலி இரண்டையும் ஒரு சேர உணர்ந்தவனுக்கு வாழ்க்கையில் இப்படியும் ஒரு பக்கம் இருக்கிறது என்பதை உணரத்தொடங்கியிருந்தான்!

லேட் பிக்கப். இந்த ஞானம் முதல்லயே வந்திருந்தா லத்தியாவது உடையாமல் இருந்திருக்கும் இளந்தீரா!