அநாயகா-16

அநாயகா-16

அநாயகா-16

இளந்தீரனை ஜீப்பில் ஏற்றி கோர்ட்டில் இருந்து நேராக ஜெயிலில் கொண்டு அடைத்து விட்டார்கள். 

அவனால் இப்பொழுதும் நடந்ததை நினைத்தவனுக்கு, அது கனவா? இல்லை நிஜமா? என்று தனக்குள்ளாகவே கேட்டுக்கொள்கிறளவுக்கு அவன் ஒரு விதமான மன அதிர்ச்சியில் இருந்தான். 

அவன் ஜெயிலுக்குள் போனதும் அவன் போட்டிருந்த ட்ரஸ்ஸை மாற்ற சொல்லி, கைதிகள் போடும் ட்ரஸ் குடுத்தனர். 

அதை கையில் வாங்கும் பொழுது அவனது கை நடுங்கியது. இதுவரைக்கும் ஒரு விதமான குருட்டு தைரியத்திலும், தனக்காக எல்லோரும் இருக்கிறார்கள் என்பதான பிரம்மையிலும் கோர்ட்டில் இருந்து இங்கே வந்தவனுக்கு, அந்த நொடியிலே அதெல்லாம் தவிடு பொடியாகிற்று. 

அங்கிருந்த ஜெயிலர் முதற்கொண்டு வார்டன் வரைக்கும் எல்லோருக்கும் அவன் யார் என்பது ஏற்கனவே தெரியும் என்பதால் நக்கலாக அவன் பக்கத்தில் வந்தவர்கள் “ என்ன வருங்கால சி.எம் சார் உங்களுக்கு இந்த ஒயிட் கட்டம்போட்ட சட்டையெல்லாம் போட விருப்பம் இல்லையா? உங்களுக்கு புதுசா கரைபோட்ட வேஷ்டி சட்டையெல்லாம் வாங்கிட்டு வரச்சொல்லட்டும? ஏன்னூ சமூகம் பெரிய இடம். இப்படி கைதி ட்ரஸ் போட்டால் நல்லாயிருக்காதே?” என்று கேட்டார்கள். 

அவர்கள் தன்னை பரிகாசம் பண்ணுகிறார்கள் என்பதை உணர்ந்தவன், ஏறிட்டு அவர்களது முகத்தைப் பார்த்தான். 

இப்படியான ஒரு சூழ்நிலையை அவன் இதுவரைக்கும் கையாண்டதில்லை. அதனால் அவனது வார்த்தைகள் முற்றிலுமாக மூளையிலிருந்து வெளியே வராது நாவோடு நின்று போயிற்று.

அவனது நிலையை உணர்ந்தவன் எதுவுமே பேசமுடியாது அப்படியே அமைதியாக போய் அந்த உடையை மாற்றிக் கொண்டு வந்தான். அவர்கள் அவனுக்காகக் கொடுத்த செல்லுக்குள் கொண்டுபோய் விட்டார்கள்.

அங்கிருந்த மற்ற குற்றவாளிகளையும், அந்த இடம் இருந்த நிலையை பார்த்தவனுக்கு அப்படியே இங்கிருந்து எங்கேவாவது காணாமல் போய்விடமாட்டோமா! என்பது போன்று உணர்வுகள் வெடித்துக்கொண்டு வந்தது.

உடனே அங்கயே அப்படியே வெறி பிடித்த மாதிரி தனது தலையைப் பிடித்துக் கொண்டு ஓவென்று கத்தினான்.

ஏன் கத்தி சத்தம்போடுறோம்? எதுக்கு சத்தம்போடுறோம் என்பதெல்லாம் அவனுக்கே தெரியவில்லை. ஆனால் தன்னுள்ளே இருக்கும் ஒரு விதமான இறுக்கத்தை தொலைப்பதற்காக அப்படியே கத்தி கதறினான்.

அதைக் கேட்டு வார்டன் ஓடிவந்து பார்த்தார். அவருக்கே அவனது நிலையைப் பார்த்து பரிதாபமாக தெரிந்தது. 

இதுவரைக்கும் எதிர்க்கட்சியில் ஒரு முக்கியமான ஆளாக இருந்தவன்; தனது மாமாவின் மூலமாக எல்லா பிரச்சனைகளிலும் இருந்துத் தப்பித்து வந்தவன்; இப்போ மொத்தமாக மாறி ஏதோ பரதேசி மாதிரி வந்திருக்கானே!ஜெயசந்திரனும் செத்துப்போயிட்டாருன்னா இவனது வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும்னே தெரியாது. அவனுக்கு யாருமே உதவலைன்னா இந்த ஜெயிலிலே வாழ்க்கை கிடந்து வாழ்க்கை மொத்தமும் போயிடுமே!என்ற எண்ணத்தில்தார் அவனைப் பாவமாகப் பார்த்தார்.

அவன் இருக்கும் அந்த செல்லுக்குள் இருந்த மற்ற கைதிகளோ, அவன் கத்தியை கதறுவதைப பார்த்து வெளியே வந்து நின்றனர். 

ஜெயில் வார்டன் மெதுவாக அவனது பக்கத்தில் வந்து அவனது தோளைத்தட்டி “இளந்தீரா!இளந்தீரா!" என்று அழைத்ததும் தன்னை உணர்ந்து அவரை ஏறிட்டுப்பார்த்தான்.

“இங்க ஜெயிலுக்குள்ள இப்படியெல்லாம் கத்தக்கூடாது. நீ இப்போதான் ஃபர்ஸ்ட் டைம் வந்திருக்கிறதுனால உனக்கு இதெல்லாம் தெரிய வாய்ப்பில்லை. உனக்கு ரிமாண்ட் ஒரு மாசம் போட்டிருக்காங்க. இதுக்குமேல உனக்கு ஜாமீன் இனி ஒரு மாசம் கழிச்சுத்தான் கிடைக்க வாய்ப்பிருக்கு. அப்படியிருந்தாலுமே உங்க மாமாக்கு ஏதாவது ஒன்னு ஆகிட்டுன்னா உனக்கு ஜாமீனும் கிடைக்காது. அதுக்குள்ள கைஸு மொத்தமா மாறிடும். இப்போ இங்க சத்தம்போட்டமாதிரி போட்டன்னா வெளிய போகமுடியாது. நீ அமைதியா இருந்தன்னா பிரச்சனையில்லாமல் நீ வெளியே போயிடலாம். இல்ல கெத்துக்காட்டுவேன்னு வேலையை காட்டினேன்னு வையேன். நாங்களே உன் கையை காலை உடைச்சிப்போட்டுடுவோம். உனக்கு என்ன நடந்தாலும் கேட்கிறதுக்கே ஆளில்லை. உனக்கு ஜாமீனுக்காக வந்து நிற்கிறதுக்கும்கூட இப்போ ஆளில்லாத நிலையில்தான் நீ இருக்கிற. அதை ஞாபகம் வைச்சிக்க. அதனால யோசிச்சு அமைதியா இருக்க வழியைப்பாரு. உன்னை போட்டு தள்ளுறதுக்கு கூட ரெடியா இருக்கானுங்கன்னு நான் நினைக்கிறேன் .இதெல்லாம் எதுக்காக உன்கிட்ட பேசுறோம்னா அது உன்னோட மாமாவுக்காக மட்டும்தான். அவரு ஒருவேளை உயிரோட வந்துட்டாருன்னா, என் மருமகனை எப்படி இப்படி ட்ரீட் பண்ணுனீங்கன்னு எங்களை வகுந்துடுவாரு. ஒருமாசம் இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக இருந்துட்டு போயிட்டே இரு. அதுக்கு இடையில உங்க மாமா உயிர்பிழைச்சு எழுந்து வரணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கோ” என்று சொல்லிவிட்டு போய்விட்டார்.

அவர் பேசிவிட்டுப்போனதும் அப்படியே அமைதியாக அங்கிருந்த சுவரில் சாய்ந்து உட்கார்ந்தவனுக்கு ஏதோ நரகத்தில் வந்து விழுந்ததுபோன்றிருந்தது.

ஒரே ஒருதடவை இந்த மாமானை கல்லால் அடிச்சதுக்கு இவ்வளவு தூரம் கொண்டுவந்துவிட்டுட்டாங்களே!என் வாழ்கையே இப்படி மாறிட்டுதே என்று நினைத்து எதுவும் செய்ய இயலாது அமைதியாக விட்டத்தைப் பார்த்திருந்தான்.

அவனது எண்ணமெல்லாம் ஏன் இப்படியாச்சுன்னுதான் இருந்தது.

இப்படி சொல்லி வைச்சமாதிரியே எல்லாவனுங்களும் “உங்க மாமாவாலதான் உன்னையெல்லாம் சும்மா விடுறோம் சும்மாவிடுறோம்னு சொல்றானுங்க இவனுங்க எல்லாரும் நடிக்கிறானுங்களா?இல்லை உண்மையிலே மாமாதான் நம்மளை எல்லா இடத்திலும் காப்பாத்திட்டு இருந்தாரா? அத்வே உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கு. அதனால்தான் இந்த சிவானந்தனும் ரகுவரனும் என்னை வந்து பார்க்கவே வரலைபோல. அதனால்தான் நான் வெளியே வந்திடக்கூட்துன்னு எனக்காக எந்த லாயரையைம் அனுப்பி வைக்கைலையோ?. இதெல்லாம் ஏன்னு, இதற்கான பதில் தெரியாத வரைக்கும் இவங்க சொல்லுற எதையுமே நம்ப முடியாது” என்று அப்பவும் அவங்களைத்தான் நம்பினான்.

ஆனாலும் இந்த அளவுக்கு ஜெயிலுக்குள்ளே வருவோம் என்று அவன் எதிர்பாக்காதது நடந்ததால். அதை ஜீரணிக்க முடியாது அப்படியே கண்ணை மூடி படுத்திருந்தவன் முன்பாக ஒரு கைதி வந்து நின்றான்.

“யோய் நீதான் இளந்தீரனா? உன்ன ஜெயில் வார்டன் கூப்பிடுறாரு. இது சாப்பாட்டு நேரம் உனக்கான தட்டு டம்ளர் எல்லாம் அவங்க தருவாங்க. போய் அவரைப் பார்த்துட்டு சாப்பாடு வாங்க வந்திரு. நான் போறேன்” 

இதுக்கு மேல இங்கயே படுத்துஇருக்க முடியாது என்று மெதுவாக எழுந்து வெளியே வந்தான்.

அங்கே எல்லாரும் சாப்பாடு தட்டை எடுத்துக் கொண்டு நின்றிருந்தார்கள். அதை பார்த்தவனுக்கு தன்னோட நிலையை இப்படியாகிட்டே என்று நினைத்து இன்னும் கோபம்தான் வந்தது. 

இந்த சாப்பாடு சாப்பிட்டு ஒரு மாசம் இந்த ஜெயிலுக்குள்ளயே இருக்கிறதுக்கு, பேசாமல் செத்தே போயிருந்திருக்கலாம் என்றெல்லாம் நினைத்தவன் தனது நெஞ்சில் வேகமாக குத்திக் கொண்டான்.

அன்று முழுவதும் அவன் சாப்பிடவேயில்லை. அவனுக்குப் பசித்தது. ஆனாலும் சாப்பிட மனதில்லாது வயிற்றில் கையை வைத்துக்கொண்டு சுருண்டுப் படுத்துவிட்டான்.

அவன் கூடயிருக்கும் இன்னொரு கைதி அவன் அருகில் வந்து உட்கார்ந்து “ சார் என்ன பெரிய வீட்டு பையனா? சாப்பிடாம கிடக்குறியே, இங்கெல்ல்ம் இந்த பெரிய வீட்டு பையன் கஷ்டபட்ட பையன்னு யாரும் கிடையாது. இங்க நம்ம கைதி அவ்வளவுதான். நீ சாப்பிடலைன்னா உடம்பு கெட்டுப்போயக மயங்கி விழுந்தேன் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போய் ஒரு நாள் பார்ப்பாங்க அவ்வளவுதான். மறுபடியும் நீ இங்கதான் வந்தாகணும். உனக்கு எவ்வளவு நாள் தண்டனை கொடுத்து இருக்காங்களோ அவ்வளவு நாளைக்கு இருந்தே ஆகணும். உன் குடும்பத்தில் இருந்து ஜாமீன் எடுப்பாங்க அப்படி என்றால் சீக்கிரம் போகலாம். எதுன்னாலும் அதற்கு தகுந்தாப்புல யோசிச்சு கிடைக்கிறது சாப்பிட்டு உயிரை காப்பாத்திட்டு அதுவரைக்கும் இங்க இருக்கணும், அதுதான் புத்திசாலித்தனம் புரியுதா? இல்லைன்னா உன்ன யாரும் கரிசனையா விசாரிக்க வரப்போவதில்லை. கையில அள்பித்தந்து சாப்பிட வைக்க மாட்டாங்க.இது என்ன உன் வீடு நினைச்சியா? வெளியே போனாலும் நம்மள நாயா கூட மதிக்க மாட்டாங்க. அதுக்கு இங்கயே ஏதாச்சும் சாப்பாடாவது கிடைக்குதுன்னு சாப்பிட்டு நிம்மதியா இரு. இதுதான் நான் இங்க வந்து கண்ட அனுபவம். ஆறு வருஷமா இந்த ஜெயிலுக்குள்ளே இருக்கேன். எனக்கு ஏழு வருஷம் தண்டனை என்ன ஒரு வருஷம் இருந்துட்டு வெளியே போகணும். ஒரு ரெண்டு மூணு மாசத்துக்கு வீட்ல இருந்த ஆள் பார்க்க வந்தாங்க. இப்போ எல்லாம் நான் இருக்கனா செத்தானான்னுக்கூட யாரும் வரல. வாழ்க்கையில நம்ம செய்ற தப்புதான் நம்ம வாழ்க்கை எப்படி போகுதுன்னு தீர்மானிக்கும். எதுனாலும் நிதானமா யோசிச்சு முடிவு எடுத்தாதான் வாழமுடியும். இல்லைன்னா இப்படி ஜெயிலுக்குள்ள கஷ்டந்தான்படணும்”என்று அவன் பேசிக்கொண்டே இருந்தான்.

அவனுக்கு எதிரில் இருக்கும் இளந்தீரன் அதைக் கேட்கிறானா? இல்லையா? என்பது பத்தியெல்லாம் அவன் கவலையே படவில்லை .அவனுக்கு துணைக்கு பேசுவதற்கு ஒரு ஆள் கிடைத்துவிட்டது என்ற ரீதியில் பேசிக்கொண்டிருந்தான். 

இளந்தீரன் அவன் பேசுவதற்கு எதிர்வினை ஆற்றவில்லை என்றாலும், அவன் பேசுவதெல்லாம் சம்மட்டியாக ஒவ்வொரு வார்த்தையும் அடிக்கத்தான் செய்தது. 

அப்படி ஒன்னும் நம்ம ரொம்ப பெருசா எந்தத் தப்பு பண்ணலையே! எங்க மாமா செய்ததற்கு கல்லால் அடிச்சேன் அவ்வளவுதான். இது என்ன பெரிய தப்பா?ஆனா எங்க அப்பாவும் அம்மாவ்மே என்னை வந்து பார்க்கலையே! ஜாமீன் எடுக்க முயற்சி பண்ணலையே!

அவங்க அண்ணனை அடிச்சு போட்டுட்டு வந்துட்டேன்னு அந்த கோபம் இருக்கும் அதாவது அவங்க கோவத்துல இருந்தாங்க. ஆனால் இந்த ரகுவரனை உயிர் நண்பன்னு நினைச்சதுக்கூட எனக்காக வந்து நிற்கலையே. இந்த மனுஷங்க இப்படித்தான் இருப்பாங்களோ? நம்மதான் யாரையும் சரிவர புரிஞ்சுக்கலையோ? என்று முதல் முறையாக தான் செய்ததை நினைத்து வருந்தி யோசித்தான்.

அடுத்த நாளிலிருந்து ஏதோ சாப்பிடணும் வாழனும் என்று ஜெயிலுக்குள் கிடைத்ததை சாப்பிட பழகிக் கொண்டான்.

ஆனாலும் அவனுக்குள்ளாக இருந்த கேள்விகள் அவனையே உறுத்திக்கொண்டிருந்தது.

அவனது பேச்சுநின்று மௌன சாமியாராக மாறி இருந்தான்.

ஜெயிலுக்குள்ளே நடக்கும் பாலிடிக்ஸ் பார்த்தவனுக்கு என்னடா இது வெளியே இருக்கிறதைவிடவும் உள்ளதான் பெரிய பாலிடிக்ஸ் நடக்குது போலிருக்கு என்றுதான் ஆச்சரியப்பட்டான்.

அங்கும் கைதிகளுக்கு இடையேயும் நடக்கிற சின்ன சின்ன சண்டைகள் பிரச்சினைகள் வெளியே தெரியாது அவர்களுக்குள்ளே தீர்த்துக் கொள்வதை பார்த்தவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. 

அவனுக்கு ஏதோ வேற்று கிரகத்தில் வசிக்கிறது போலவே இருந்தது. அந்த சாப்பாடு பிடிக்கவில்லை என்றாலும் பசிக்கு சாப்பிட பழகிக் கொண்டே இருந்தான். அவன் தனது வீட்டில் எவ்வளவு சண்டைகள் பிரச்சினைகள் போட்டிருந்தாலும் அவனது சாப்பாடு சரியாக இருக்கும். அதில் எந்த குறைவும் இதுவரைக்கும் வந்ததில்லை. இப்பொழுது அதை நினைத்தும் வேதனைப்பட்டான். நம்மதான் எல்லாரையும் கஷ்டப்படுத்திரிருக்கமோ?என சின்னதாக குற்றவுணர்வு அவனுக்கு வந்தது. 

ஆனால் இந்த பத்துப் பன்னிரண்டு வருஷங்களாக குடும்பத்திற்கு என்ன மாதிரியான கஷ்டங்களையும் வேதனைகளையும் கொடுத்திருக்கிறோம் என்பதை அவன் இன்னுமே முழுமையாக உணரவில்லை. 

எப்போடா ஒரு மாசம் முடியும் வெளியே போகலாம் என்று காத்திருந்தாலும் அவனுக்காக ஜாமீன் கொடுக்கவும் அவனை பார்க்கவும் இந்த பத்து பதினைந்து நாளில் யாரும் வரவேயில்லை . நமக்காக கட்சி இருக்கிறது நண்பன் இருக்கிறான் என்ற நம்பிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போனது. 

அவனே நம்பிக்கையில்லாமல் ஏதோ காத்திருக்கிறோம் என்ற ரீதியில் இருந்தவனை யாரோ பார்க்க வந்திருக்கிறதாக வார்டன் மூலம் தகவல் சொல்லிவிட்டு போனார்கள்.

‘நம்மளை பார்க்க வரணும்னா யாரு வந்திருப்பா? ரகுவரனா இருக்கும், இல்லைன்னா மதுமதி வந்திருக்கணும், ஹப்பாடா இப்போவாவது வந்தாங்களே!என்ற சத்தோசத்தோடு ஓடிப்போய் பார்த்தவனுக்கு இருதயம் சுருங்கி முகம் அப்படியே வாடிவிட்டது. 

அவன் அதிர்ச்சியில் அப்படியே வந்தவர்களையே பார்த்துக்கொண்டிருக்க, அவனது நிலையைப் புரிந்துக்கொண்ட ஆதிரா பக்கத்தில் வந்து நின்றாள்.

ஆதிராவிற்கு அவனைப் பார்த்ததுமே கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. எப்படி கெத்தாக வேஷ்டியை மடிச்சிக்கட்டிட்டு ஊருக்குள்ள சண்டியர் மாதிரி சுத்திட்டிருந்த நம்ம தீரா அத்தானா இது?என்றுதான் பார்த்தாள்.

அவனது முகம் ஒடுங்கி,கண்கள் இடுங்கி பார்க்கவே பரிதாபமாக இருந்தான். அதை ஆதிரா எதிர்பார்க்கவில்லை என்பது அவளது பார்வையிலயே தெரிந்தது.

அவன் வந்ததும் எழுந்தா ஆதிரா அவன் பக்கத்தில் போய் நின்றவளுக்கு என்ன கேட்கணும் பேசணும்னு தெரியாது அப்படியே அசையாது நின்றாள்.

அவனுமே அவளது கண்களில் தனக்காகத் தெரியும் பரிதவிப்பைப் பார்த்துவிட்டு உள்ளுக்குள் ஏதோ உடைந்தது. அவளை இப்படி நேருக்கு நேராக நின்று பார்த்து ரொம்ப வருஷமாகாயிருந்தது. அவளது கண்களையே பார்க்க விரும்பாதவன் இப்போது அந்த கண்களில் ஏதோ இருப்பதாக உணர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

இருவரும் எதுவுமே பேசிக்காது நிற்கவும், ஆதிராவோடு வந்திருந்த லாயர்தான் ஓடி வந்து அவனிடம் ஒரு பேப்பரை கொடுத்து இதில் கையெழுத்து போடுங்கள் என்று கேட்டான். 

இளந்தீரன் வாயைத் திறந்து வார்த்தைகளில் எதுவுமே கேட்காது, தனது புருவத்தினை மட்டும் உயர்த்தி ஏன் என்ற கேள்வியோடு பார்த்தான். 

ஆதிரா அதற்கு பதில் ஏதும் சொல்லாது தன் கையில் இருந்த பேனைவைத் திறந்து அவனது கையில் கொடுத்தாள்.

அதை வாங்கியவன் எதுவுமே பேசாது அவள் காட்டிய இடத்தில் கையெழுத்து மட்டும் போட்டான்.

அவ்வளவுதான் அவன் கையெழுத்துப் போட்டதும் அதை வாங்கி லாயரிடம் கொடுத்த ஆதிரா எதுவுமே போசாது, வந்த வேலை முடிந்தது என்பது போன்று திரும்பி நடந்தாள்.

அவள் வெளியே போகிறதற்காகக திரும்பி நடக்கவும் “அவ்வளவுதானா?இந்தக் கையெழுத்து வாங்கத்தான் வந்தாளா?அப்போ எனக்காக வேற யாரும் வரலையா?ஆமா எதுக்கு கையெழுத்து வாங்கினா?எதுக்காக இருந்தாலும் கண்டிப்பா நம்மளை ஏமாத்தமாட்டாள். ஆனாலும் அவங்கப்பனை மாதிரி நடந்துக்கிறா பாரேன். இவா வரலைன்னு நான் அழுதனாக்கும். போடி”என்று கோபபப்பட்டு முறைத்துப்பார்த்தான்.

அப்புறம் எதுக்கு இளந்தீரா கோபப்படுற?அதுதான் உனக்கும் அவளுக்கும் ஆகாதே!போயிட்டுப்போறா. நீ உன் மதமதி வருவான்னு வெயிட் பண்ணு!

அவன் அப்படியே முறைத்துக்கொண்டு நிற்கவும்,ஆதிராவுக்கு மனசு ஒரு மாதிரியா இருந்தது.

அவளது உள் மனசு திரும்பிப் பார்க்கச் சொல்லியது. உடனே திரும்பி இளந்தீரனைப் பார்த்தாள்.

இருவரது கண்களும் நொடி நேரத்தில் முட்டிக்கொண்டு மீண்டது.அவ்வளவுதான் அவள் கண்கள் என்ன சொல்லியதோ? அதை சரியாக கவனித்து புரிந்துக்கொண்ட இளந்தீரன் ஒரு பெருமூச்சோடு திரும்பி ஜெயிலுக்குள்ளாக நடந்தான்!