அநாயகனே-2
அநாயகனே-2
இளந்தீரன் தனது வண்டியில் போய் உட்கார்ந்தவன் அதை ஸ்டார்ட் பண்ணவும், அதைப்பார்த்த கவிதா வேகமாக ஓடிப்போய், அவன் பைக்கில் இருந்த சாவியை பிடுங்கி எடுத்து கையில் வைத்துக்கொண்டார்.
அதைப்பார்த்த இளந்தீரன் கோபப்பட்டவன் “ராஜமாதா என்ன இது?பைக் சாவி எடுத்துட்ட?சாவியை குடும்மாஆஆ. பொங்கல் அன்னைக்கு ஏன்மா வந்து இப்பபி பிரச்சனை பண்ணிட்டிருக்க?எனக்காக அங்க எல்லாரும் வெயிட்டிங். ரகுவரன் வெயிட்டிங், எங்க கட்சித் தலைவர் இப்போ வந்திடுவார். நான் போவதற்காக காத்திருக்கிறாங்க. இப்போ வந்து சாவி பிடுங்கி வைச்சிட்டு இருக்க?சாவியை குடும்மாஆஆ?”என்றவன் அவர் கையிலிருந்து சாவியை வாங்க முயன்றான்.
கவிதாவோ அவன் மீதிருந்தக் கோபத்தில் எதுவும் பேசாது அந்த சாவியோடு உள்ளே வந்துவிட்டார்.
அந்தக் கடுப்பில் வேகமாக வண்டியில் இருந்து இறங்கியவன், அவர் பின்னாடியே ஓடி வந்து, அவரைப் போகவிடாமல் வழிமறித்து நின்றான்.
கவிதாகுமாரி சுதாரித்து சாவியை மறைத்து வைக்க முயன்றார். ஆனால் அதற்குள்ளாக அவரது கையில் இருந்து சாவியை வெடுக்கென்று பிடுங்கியவன், வெளியே வர நடந்தான்.
கவிதாவோ அவனது கையைப் பிடித்து நிறுத்தியவர் “இளா நில்லு எதுக்கு இப்போ இவ்வளவு அவசரமா போற?உன்னோட அப்பா அம்மான்னு எல்லோரும் இங்கதான் இருக்கோம். நீ அங்கபோய் பொங்கல் கொண்டாட என்ன அவசியம் வந்திருக்கு?முதல்ல வந்து குடும்பத்தோடு வந்து நின்னு சாமி கும்பிடு. அப்புறம் பொங்கல் எல்லாம் சாப்பிட்டு போய் அவனுங்கக்கூட கூத்தடி. எப்போ பாரு கட்சி, தலைவருன்னுட்டு இருக்க. உன்னை பெத்து வளர்த்தது நாங்க அவனுங்க இல்ல. பொங்கல் அதுவுமா சந்தோசமா பிள்ளைங்களோடு இருக்கலாம்னு நினைச்சு எல்லாம் செய்திட்டிருக்கேன். நீ என்னடான்னா இப்படி பண்ணிட்டிருக்க?”என்று தனது கோபத்தை வெளியே காண்பிக்காதவாறு அவனிடம் கேள்விகள் கேட்டார்.
“ஹல்லோ ராஜமாதா நீங்க உங்க மகனோடும் உங்க மருமகளோடும் பொங்கலைக் கொண்டாடுங்க. அவன் என் எதிரிக்கிட்டதான் பீ.ஏவா வேலைப் பார்க்கிறான். அதைவிடவும் எதிரியோட மூத்த மகளைத்தான் கல்யாணம் பண்ணிருக்கான். அவனைக் கூப்பிட்டால் எனக்குப் பிடிக்காதுன்னு தெரிஞ்சும் இங்க வரவைச்சிருக்கீங்க. அப்புறம் உங்க அம்மா சங்கரியாத்தா வேற மகன் வீட்டுல செஞ்ச பொங்கலை எனக்கு கொண்டு வந்திருக்காங்க பாரு அதெல்லாம் எனக்கு வேண்டாம். எனக்காக என் நண்பன் எல்லாம் செய்து வைச்சிருக்கான். என் தலைவர் வர்றாரு. நான் போறேன். சாவியை குடு”என்று சாவியை வாங்க முயன்றான்.
கவிதா அவனை அடிக்கவே போய்விட்டார்.
அதில் கொஞ்சம் நகர்ந்து நின்றவனை என்ன செய்யலாம் என்ற பல்லைக்கடித்து, கோபத்தை அடக்கிக்கொண்டு பார்த்தார்.
“டேய் எதிரி எதிரின்னு சொல்லுறியே?அவரு உன் தாய்மாமாடா. உன்னைத்தூக்கி வளர்த்தவரு. உனக்குப் பிடிச்ச மாமா. என் அண்ணன்டா. அவருக்கிட்டதானே இந்திரன் வேலைப்பார்க்கிறான். அவனுக்கு அவருக்கிட்டதான் வேலைப்பார்க்கப் பிடிச்சிருக்கு. அவன் திறமையைப் பார்த்து அவரு பொண்ணைக் கொடுத்திருக்காரு. உனக்கும்தான் இரண்டாவது உள்ளவளைக் கல்யாணம் பண்ணி வைக்க நினைக்கிறாரு. நீதான் அவரை எதிரி எதிரின்னு சொல்லிட்டுத் திரியுற. அவருக்கு நீ எப்பவுமே பாசமுள்ள சின்னமருமகன்தான். அதை முதல்ல புரிஞ்சிக்க”
“என்னத்தைப் புரிஞ்சிக்க?அவரை நல்லா புரிஞ்சிக்கிட்டதுனால்தான் என்கட்சியில ஸ்ட்ராங்கா நிக்கிறேன். அடுத்த எம்.எல்.ஏவாக போறேன். உன் பெரியமகனை மாதிரி கூஜா தூக்கிட்டு நிக்கலை. காலையிலயே கடுப்பக் கிளப்பாதம்மா. அவரு இளைய மகளை நான் கட்டிக்கணுமாம்ல என்ன? அந்த ஆதிராவைக்கட்டிக்கிட்டு அவரு வெத்தலைப்பொட்டியை எல்லாம் நான் சுமக்கத் தயாராயில்லை. அதை அவக்கிட்டயும் சொல்லிவை. இந்த இளந்தீரனைக் கல்யாணம் பண்ணிக்கிறளவுக்கு தகுதி இல்லை. நான் யாரைக் கல்யாணம் பண்ணிக்கணும்னு எனக்கு நல்லாவே தெரியும். இவரு எனக்குப் பொண்ணும் குடுத்து பதவியும் தரத்தேவையில்லை. அப்படிப்பட்ட பதவியே எனக்கு வேண்டாம். இப்போ சாவியை குடு”
“அதெல்லாம் தரமுடியாது”என்று அவரும் உனக்கு நான் அம்மாடா என்ற ரீதியில் பிடிவாதம் பிடித்து நின்றிருந்தார்.
“இங்க பாருங்க கவிதாகுமாரி உங்க அராஜகம் எல்லாம் உங்க மூத்த மகன்கிட்டயும் அந்த உட்கார்ந்து இருக்காளே உங்க மூத்த மருமகள்கிட்டயும் காண்பிங்க என்கிட்ட வராதீங்க. என் குணம் தெரியும்ல. உங்க பொங்கல் கொண்டாட்டத்தையே நான் மொத்தமாக பொங்க வைச்சிடுவேன். ஆளையும் மண்டையும் பாரு. உன் அண்ணன்காரன் ஏத்திவிட்டுத்தானே என்னை எங்க தலைவர்கூட சேர்ந்து, பொங்கல்விழாவை நடத்தவிடாமல் பண்றதுக்கு திட்டம்போட்டு இப்படி பண்றீங்க. இதெல்லாம் தெரியாமலயா நான் இப்படி வளர்ந்திருக்கேன். உங்க பாட்ச்சா எல்லாம் என்கிட்ட பலிக்காது”
“ஆமாடா நீ அந்த பரதேசி பையன் அந்த சிவானந்தாவோடும், அவன் மருமகன் ஒருத்தன் இருக்கானே, அந்த வில்லன் பேரென்ன?ஹான் அந்த ரகுவரன்கூடவும் சேர்ந்து நடத்தின சம்பவம் எதுதான் உருப்பட்டிருக்கு, உருப்படியா பண்ணிருக்க? அதைவேற நடத்தவிடாம பண்றதுக்கு நாங்க உன்னைப் போகவிடாமல் தடுக்கிறோமா
? போடா இவனே. நீங்களே உருப்படாமதானே எங்க அண்ணன்கிட்ட இத்தனை வருஷமா தோத்துட்டு இருக்கீங்க.அந்தாளுக்கு நேர்மையா எங்க அண்ணனை எதிர்த்து நின்னு ஜெயிக்கமுடியாமல்தான் உன்னை ஏதோதோ சொல்லி அந்தக் கட்சியில இழுத்து எங்கண்ணனுக்கு எதிரா தூண்டிவிடுறான். நீயும் அது எதுவும் தெரியாமல் பைத்தியம் மாதிரி பேசிட்டுதிரியாத. என்ன இருந்தாலும் கடைசியில எங்கண்ணன்கிட்டதான் வந்து நிக்கப்போற பாரு”
“யம்மாஆஆ நீ ரொம்ப பேசுற. நான் அழிஞ்சே போனாலும்,என்பிரண்டே என்னை ஏத்திவிட்டு பிரச்சனை பண்றான்னு தெரிஞ்சாலும்,உன் அண்ணங்காரன்கிட்ட வந்து எனக்கு ஒரு வாய்ப்புக்குடுன்னு கேட்கமாட்டேன். நான் மானஸ்தன் அப்படியெல்லாம் உங்க அண்ணன் முன்னாடி மண்டியிட்டு நிக்கமாட்டேன்.அப்புறம் இந்தக் கும்பல் எல்லாம் போனதும் எனக்கு போன் பண்ணி கூப்பிடு புரியுதா. இவங்கக்கூட ஒட்டிக்கவெல்லாம் எனக்குப்பிடிக்காது.இதுக்குமேல என்னைத் தடுக்காதம்மா. அப்புறம் நான் மனுஷனாகவே இருக்கமாட்டேன்.உங்க எல்லாரோட மண்டையையும் உடைச்சிட்டு வேணும்னாலும் போவனே தவிற. உங்க யாருக்காகவும் என் நண்பனையும் என் கட்சியையும் விட்டு கொடுக்கமாட்டேன்” என கோபத்தில் பேசியவன் கவிதாவின் கையில் இருந்த சாவியை வேகமாக பிடுங்கிவிட்டு, யாருடைய முகத்தையும் பார்க்காமல் அப்படியே திரும்பி வெளியே வந்துவிட்டான்.
இளந்தீரனுக்குடும்பத்தை விடவும் அவனது கட்சிதான் அவனுக்கு முக்கியம் .தனது கட்சி, தலைவர், தனது நண்பன் தனது காதலி இப்படித்தான் அவனது உலகமும் வாழ்க்கையும் சுற்றிக்கொண்டிருக்கிறது.
அப்படித்தான் அவனது வாழ்க்கையை சுற்றியும்,அவனை சுற்மியும் ஒரு வேலியை போட்டுக் கொண்டிருக்கிறான். அதில் தனது குடும்பத்தாரைக்கூட உள்ளே அனுமதிக்கமாட்டேங்கிறான்.
அவனது அந்தப்பாதையில் யாராவது இடைஞ்சல் பண்ணினால், உடனே கோபம் தாறுமாறாக எகிறி, அவனை மனுசனாகவே இருக்க விடுகிறதில்லை. அவனை கொஞ்ச நேரத்தில் மனிதமிருகமாக மாற்றி விடுகிறது.
அவன் அப்படி கோபத்தில் பேசி சென்றதை தாங்கிக் கொள்ள முடியாத கவிதா அப்படியே கண்கள் கலங்கி அவனைப் பார்த்தவாறே நின்றிருந்தார்.
என்னைக்கு அந்த மாவட்டத் தலைவர் சிவானந்தன் இவனை அந்த கட்சியில் இருந்து பிடிச்சு வெளியே தள்ளுறானோ அன்னைக்குத்தான் இவன் உருப்படுவான். வாழ்க்கைன்னா என்னன்னு புரிஞ்சிக்கிட்டு நம்மக்கிட்ட திரும்பி வருவான்.
அது வரைக்கும் அந்த சிவானந்தனும்,ரகுவரணும் இவனை நம்மக்கிட்ட சேரவிடமாட்டானுங்க.அவனுங்க பின்னாடியேதான் இவனும் சுத்துவான். அவனுங்களை பத்தித்தெரியாமல் ரொம்ப ஓவரா ஆடிக்கிட்டிருக்கான். அவங்க கூட சேராத சேராதான்னு. அவங்க இனக்கு என்ன மாயம் போட்டானுங்களோ எத்தனையோ தடவை சொன்னேன், தலைப்பாடா அடிச்சுக்கிட்டேன். மந்திரம் போட்டானுங்களோ பொண்டாட்டி முந்தானைல முடிஞ்சவனை மாதிரி, இவன புடிச்சு அவனுங்க வேட்டிக்குள்ள சொருகியே வச்சிருக்கானுங்க. கடவுளே! என் பிள்ளைக்கு ஒரு நல்ல வழியை காண்பிங்க என்று தனது இரண்டு கையும் தலைக்கு மேலாக தூக்கி, சாமி ரூமுக்கு முன்பாக நின்று கவிதாகுமாரி வேண்டிக் கொண்டிருந்தார்.
அதைப் பார்த்த சங்கரியாத்தாவிற்கும் மனசு சங்கடமா போயிட்டு. பொங்கல் அதுவுமா என் பொண்ணு இப்படி அவள் மகனை நினைச்சு இப்படி வருத்தப்படுறாளே! ஆண்டவா என் பேரனுக்கு இந்த தைலயாவது ஒரு நல்ல வழி பொறந்து, அவன் கல்யாணம் கட்டி அந்த சிவானந்தன்கிட்ட இருந்து பிரிஞ்சு வரட்டும் என்று அவரும் தன் பங்குக்கு சாமியிடம் வேண்டிக் கொண்டார்.
ஒருவழியாக சாமிக்கும்பிட்டுவிட்டு ரவீந்திரனும், சங்கவியும் அங்கிருந்து கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டார்கள்.
அதற்குள் சங்கவி இங்க நடந்ததை தனது அம்மா மகேஷ்வரியிடம் சொல்லிவிட்டாள்.
இப்போது மகேஷ்வரி கோபத்தில் திட்டிக்கொண்டிருக்க, சங்கவி உட்பட எல்லோரும் அமைதியாக இருந்தனர்.
அவரது இளையமகளும் சங்கவியின் தங்கச்சியுமான ஆதிராதான் “விடுங்கம்மா இப்போ அக்காவை எதுக்குத் திட்டுறீங்க. அத்தையும் மாமாவும் பாவம் அவங்களுக்கும் மகனும் மருமகளும் அவங்க வீட்டுல வந்து பொங்கல் வைச்சு சாமி கும்பிடணும்னு ஆசையா இருக்கும்ல. அதுல என்ன தப்பிருக்கு. சின்னத்தான் அப்படித்தான் பேசுவாருன்னு தெரிஞ்சேதானே போனாங்க. இனி திட்டி என்ன பிரயோஜனம்?”
‘அக்காவும் தங்கச்சியும் இப்படி உங்க அத்தைக்காரிக்கே வக்காலத்து வாங்குங்க. ஆனால் அங்க நடந்ததுக்கு யாரும் எதுவும் பேசிடாதிங்க. ஏற்கனவே அவனுக்கு நம்ம அப்பாவைப் பார்த்தாலே ஆகமாட்டுக்கு. இதுல எரியுற நெருப்புல எண்ணெய்யை ஊத்துறமாதிரி நீங்க அங்கப்போனா இப்படித்தான் நடந்துப்பான்”என்று வாயை மூடாமல் பேசிக்கொண்டிருந்தார்.
ஜெயசந்திரன்தான் “விடுடி. அவனே சின்னப்பையன். அவனைப்போட்டு திட்டிட்டிருக்க. அவனைப்பத்திதான் நமக்குத் தெரியுமே. அப்புறம் அரசியல்ல இதெல்லாம் ஒன்னுமேயில்லை. உனக்கு அவனைப் பிடிக்காதுங்கிறதுக்காக எப்பவும் திட்டிட்டிருக்காத. போய் கோவிலுக்கு போகிறதுக்கு ரெடியாகுங்க. நமக்காக அங்க எல்லோரும் காத்திருப்பாங்க”
“அதுசரி சின்ன மருமகனை சொன்னதும் உங்களுக்குக் கோபம் பொத்துட்டு வந்திடுமே. எங்களை பேசவேவிடமாட்டீங்களே. எப்படியோ போங்க. அவனை இந்த வீட்டுக்குள்ளகொண்டு வர்ற கனவை மட்டும் விட்றுங்க ஆமா சொல்லிட்டேன்”என்றுவிட்டு போய்விட்டார்.
சங்கரியம்மாதான் மெதுவாக மகனிடம் “உன் பொண்டாட்டிக்கு ஒன்னுமே பேசவே தெரியாது. நீ இளந்தீரனைக் கூப்பிட்டு ஒரு நாள் பேசேன். அவனுக்கு நம்ம ஆதிராவை முன்னாடியிருந்தே பிடிக்கும்தானே. இப்போ பேசி அவளுக்கும் அவனுக்கும் கல்யாணத்தை முடிச்சிட்டா அப்புறம் நம்மளோடவே இருப்பான்ல”என்று பேரன் மேல உள்ள பாசத்தில் கேட்டார். ஆனால் உண்மைநிலை என்னவென்று அவருக்குத் தெரியாதே!
அது தெரிந்த ஜெயசந்திரனோ இப்போது திரும்பி ஆதிராவைப் பார்த்தார். அவள் ஒன்றுமே சொல்லாது அமைதியாக இருந்தாள்.
சங்கவிக்குமே இந்த விசயத்துல அப்பா பக்கம் பேசுறதுக்கு எந்த வாய்ப்பும் இல்லையென்று தெரியும். அதனால் “அப்பத்தா அப்படியெல்லாம் அவனைக்கூப்பிட்டு வைச்சு ஒன்னும் பேசவேண்டாம். என் தங்கச்சிக்கு என்ன மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வராமலா இருக்காங்க. அவளுக்கு பிடிச்சமாதிரி அமையலன்னுதான் சும்மா இருக்கோம். நல்ல வரனா வந்தா உங்க இளையபேரனுக்காகவெல்லாம் காத்திருக்கமாட்டோம். அவளுக்குக்க ல்யாணத்தை பண்ணி வைச்சிடுவோம். இந்த விசயத்துல அம்மா பக்கம்தான் நான் நிப்பேன். உன் மூத்தபேரணும் என்கூட நிப்பாங்க”என்றவள் ரவீந்திரனைக் கூட்டிட்டு அவங்க ரூமுக்குள்ள போய் கோயிலுக்குப் போக ரெடியானாள்.
ஜெயசந்திரன் மெதுவாக ஆதிராவிடம் “ம்மாஆஆ நீ கிளம்பலையாடா. போய் ரெடியாகு நானும் அம்மா,அப்பத்தாவெல்லாம் ஒரு கார்ல போறோம், நீ அக்காக்கூட வா. போ ரெடியாகி வா. நமக்காக யாரும் அங்க காத்திருக்கக்கூடாது”என்று தன்மையாக பேசவுமே அவரது மனநிலையை புரிந்த ஆதிரா தலையையாட்டி “சரிப்பா” என்றுவிட்டு தனது ரூமுக்குள் போனவளுக்கு தன்னையறியாமலயே கண்ணீர் வந்தது.
‘ ஆமா எதுக்கு இப்போ நான் அழறேன்?என்னைக் கொஞ்சம்கூட நினைச்சுப் பார்க்காத ஒருத்தனுக்காக நான் எதுக்கு கண்ணீரை வேஸ்ட் பண்ணனும்?அவனுக்கு யாரைப் பிடிச்சிருக்கோ அவளையே கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமா வாழட்டும். எனக்கானவனை எங்கப்பா பார்த்து கட்டிவைப்பாங்க’ என்று தன்னைத்தானே தேற்றினாலும் மனதின் வலியை அவளது கண்கள் கண்ணீராக வெளிப்படுத்தியது.
அவளது கன்னங்கள் இரண்டும் கண்ணீரில் நனைந்து பனியில் நனைந்த ரோஜாக்களாக சிவந்ததது. அந்தக் கண்ணீரைத் துடைக்கக்கூட கைகள் வராது அப்படியே உட்கார்ந்திருந்தாள்.
அவளது இளமையின் தொடக்கக்காலத்தில் நடந்தவைகள் எல்லாம் மனதின் திரைக்குள் மோதியடிக்க, அதைத்தாளாது அப்படியே உடைந்து,உருகி கட்டிலில் சுருண்டுப் படுத்துவிட்டாள்.
அவள் எவ்வளவு நேரம் அப்படி படுத்திருந்தாளோ தெரியாது,மகேஷ்வரி வந்து கதவைத்தட்டும் சத்தம் கேட்டதும்தான் படபடவென்று எழுந்து முகத்தையெல்லாம் கழுவி துடைத்துவிட்டுக் கதவைத் திறந்தாள்.
அவள் முகம் கழுவி துடைத்து சாதாரணமாக வந்தாலும், பெற்றவளுக்கு பிள்ளையின் முகத்தைப் பார்த்தாலே தெரியுமே!
அதனால் மகேஷ்வரி உள்ளே வந்தவர் அவளுக்கான புடவையை எடுத்து வைத்துவிட்டு “இதைக் கட்டிட்டு வா, கோவிலுக்குப் போகணும்ல. நம்ம மனசுக்கு கண்டதையும் பிடிக்கும்,தேவையில்லாததை நினைக்கும், ஆனால் நமக்கு எது நல்லதுன்னு இருக்கோ அதுதான் நடக்கும். இதை புரிஞ்சிக்கிட்டன்னா உன் வாழ்க்கை நல்லாயிருக்கும். நான் என் பொண்ணுங்களுக்கு நல்லதுமட்டும்தான் நினைப்பேன். இதுக்குமேல எதுவும் சொல்லமாட்டேன் அவ்வளவுதான் கிளம்பி வா”என்றவர் அவளது கன்னத்தைத் தடவியவர், லேசான பெருமூச்சோடு போய்விட்டார்.
அவர் சொன்னதை புரிந்துக்கொண்ட ஆதிரா அந்த புடவையையே பார்த்திருக்க, அதற்குமேலும் யோசிக்காது வேகமாக கிளம்பி கீழே வந்தாள்.
அவள் என்னதான் புத்தியோடு யோசித்தாலும் மனசு என்னவோ வேறேபக்கமாகத்தான் போனது!
அதுசரி காதலுக்கு கண்ணும் கிடையாது மூளையும் கிடையாதே!
அந்தக் காதல் மனசுக்குள்ள வந்துட்டா, ஆணோ பெண்ணோ இரண்டுபேருமே இதயத்தையும் மூளையையும் கொண்டுபோய் நேராக சேட்டுக் கடையில அடமானம் வைச்சிட்டு வந்திடுறாங்களே!
அதுக்கு இளந்தீரனும் ஆதிராவும் விதிவிலக்கல்லவே!
ஆமா அடகுவைச்சத எப்போ மீட்டுப்பாங்க!