அநாயகா-14

அநாயகா-14

அநாயகா-14

இளந்தீரனின் முதுகெல்லாம் வரி வரியாக விழுந்த அடியின் தடம் பதிந்திருந்தது. அவனால் ஒரு இன்ச்கூட நகர்ந்துப்போய் தாகத்துக்குத் தண்ணிக்கூட குடிக்கமுடியாது, தொண்டை வரண்டு அப்படியே படுத்திருந்தான்.

இப்போது இரண்டு போலீஸ்காரர்கள் வந்து கையையும் காலையும் பிடித்துத் தூக்கிக்கொண்டுபோய் வேறொரு லாக்கப்பிற்குள் கொண்டு போட்டனர்.

அங்கே இருந்தவர்கள் இளந்தீரனை பரிதாபமாகவும் பாவமாகவும் பார்த்தார்கள். 

இளந்தீரனுக்கு எதுவுமே முடியவில்லை. அங்கிருந்த இரண்டுபேரிடமும் கையால் சைகை செய்து தண்ணி வேணும் என்று கேட்டான்.

அதில் ஒருத்தன் பயந்துபோய் “நாங்க உனக்குத் தண்ணி தந்தால் எங்களையும் பிடிச்சு அடிப்பாங்க. அப்படியே படுத்துக்கோ வலி குறைஞ்சதும் நீயா எழுந்துப்போய் அந்தப்பானையில இருக்கத் தண்ணியைக் குடி”என்று கையை பானையை நோக்கி சுட்டிக்காட்டினான்.

அதைப்பார்த்ததும் அவ்வளவுதான் இளந்தீரனுக்கு ஒருமாதிரியாகிவிட்டது. அவனுக்கு தண்ணி எடுத்து தரமறுத்தாங்க என்பது ஒருபக்கம் என்றால், அந்தப்பானையைப் பார்த்ததும் தண்ணியே குடிக்கவேண்டாம் என்று தோன்றியது ஒருபக்கம், அப்படியே தலையை சாய்த்து அந்தத் தரையில் அப்படியே படுத்துவிட்டான்.

இவ்வளவு நாளும் நம்ம அரசியலில் இருக்கும்போது யாரும் நம்மளை எதிர்த்துக்கூட நின்றதில்லையே. அப்படியிருந்தும் எதிர்கட்சிக்காரனுங்கக்கிட்ட சண்டை போட்டுப்பிரச்சனை பண்ணியிருக்கேன். ஆனால் இந்தளவுக்கு அடிவாங்கினதேயில்லை. இந்தளவுக்கு நம்ம யாரையும் அடிச்சதும் இல்லையே.

இந்த நல்லபெருமாள் என்னைப் பார்த்தாலே நடுங்கி வணக்கம் சொல்லுவான், அவன் என் மேல இப்போ கை வச்சிட்டானே? இப்போ என் நிலமை சரியில்லை, இருக்கட்டும் எப்படியும் ரகுவரன் வக்கீலோடு வந்திடுவான். அப்போ நான் இந்த நல்லபெருமாளை என்ன பண்ணனுமோ பண்ணிக்கிறேன் என்று கோபத்திலும் வலியிலும் நினைத்தாலும், அவனால் இப்போது அசையமுடியாத நிலை என்பதால் அப்படியே கண்ணை மூடி படுத்துவிட்டான்.

நம்ம அம்மாவும் அப்பாவும்கூட நம்மைத் தேடி வரவில்லையே!இந்த ரவிதான் மாமானார் குடும்பத்துக்கு ஜால்ரா அடிக்கிறவனா இருக்கிறான்னா, இந்த அம்மாவும் அப்பாவுமே தம்மளை மொத்தமாக அந்தாளுக்காக ஒதுக்கிட்டாங்களே என்ற ஒரு ஆதங்கமும் வந்தது.

என்ன இளந்தீரா?யாருமே வேண்டாம், என் கட்சியும் தலைவனும் உயிர் நண்பனும் போதும்னு சொன்ன, இப்போ அடி பலமா விழுந்ததும் அம்மாவையும் அப்பாவையும் தேடுற போல!

அவன் செய்த தவறுகளும் பிரச்சனைகளும் அவனுக்கு இப்போதும் புரியவே இல்லை. 

மகேஸ்வரியும் ஆதிராவும் வந்துட்டு போனதுக்கு அப்புறம்தான் இந்த நல்லபெருமாள் இப்படி ஆடுகிறான். அவர்கள் இரண்டு பேரும் இந்த இன்ஸ்பெக்டருக்கு பணம் கொடுத்து கேஸை இன்னும் ஸ்ட்ராங்கா போட்டுட்டாங்க போல. அவங்க எத்தனைபேரு சேர்ந்தாலும் என்னை அழிக்கமுடியாது என்றுதான் அவன் தப்பு கணக்கு போட்டு கொண்டிருந்தான். 

அந்த வலியிலயே அப்படியே படுத்திருந்தவனுக்கு உணர்வேயில்லாமல் போனது.

அவன் மயக்கத்தில் இருந்தானா? இல்லை தூக்கத்தில் இருந்தானா? என்ற அவனுக்கே புரியாது இருக்கும்பொழுது அவனது முகத்தில் வேகமாக வந்து விழுந்த தண்ணீர் துளிகளில் பதறியடித்து கண்களை திறந்துப் பார்த்தான்.

அவன் கண்முன்னே கான்ஸ்டபிள் இரண்டுபேர் நின்றிருந்தனர்.

“என்ன மகராஜாவுக்கு எழுந்திருக்க மனசு வரலையோ? லத்தியில வாங்கினது பத்தாதது போலிருக்கு. எத்தனை தடவை கூப்பிட்டுட்டு இருக்கோம். அவ்வளவு தூக்கம்லாக்கப்புல படுத்திருக்கும்போது வருதோ துரைக்கு எழுந்து வெளிய வாடா”என்று கூப்பிட்டார்கள்.

ஆனால் அவனால் இம்மியளவுக்கூட நகரமுடியாது பாவமாகப் படுத்திருந்தான். அதைப்பார்த்த இரண்டுபேரும் “என்னடா உடம்பு ரொம்ப சுகம் கேட்குதோ. அடச்சீ எழுந்து வா. எம்.எல்.ஏ மருமகன்னு உன்னை விட்டு வைச்சது தப்பா போச்சுது. எங்க இடத்துக்கு வந்துஇன்ஸ்பெக்டர் மேலயே கைவைக்கிறல்ல. இப்போ எங்க ட்ரீட்மெண்ட் எப்படி இருக்கு”என அவனிடம் கேட்டுவிட்டு சிரித்தனர்.

அதைக்கேட்டதும் இளநதீஅரன் ஒரு வேகத்தில் அந்த வலியோடு எழுந்து உட்கார்ந்தான். ஆனாலும் அவர்கள் அடித்த அடியின் வீரியத்தில் அப்படியே உடல் வலியில் நடுங்கினான். 

அவனால் எழுந்திருக்க முடியாது என்று உணர்ந்தவர்கள் அவனது கை விலங்கோடு சேர்த்து இரண்டு கான்ஸ்டபிள்ஸும் அவனைப் பிடித்துத் தூக்கி நிறுத்தினார்கள். 

“டேய் இன்னைக்கு உன்னைக் கோர்ட்ல கொண்டுபோய் ஆஜர் படுத்தப்போறோம். அதுக்கப்புறம் தான் உன்னை எந்த ஜெயிலுக்குக் கொண்டு போகணும்னு சொல்லுவாங்க. எப்படியும் நீ ஜெயிலுக்குப் போறது உறுதியாகி போச்சு. நீ உன் கட்சி தலைவரோடு சேர்ந்து போட்ட ஆட்டத்துக்கு இது உனக்கு தேவைதான். உங்க மாமா இருக்கிற வரைக்கும் உனக்கு பிரச்சனை இல்லாமல் இருந்தைச்சு. அந்த மனுசனையே நீ கல்லால் அடிச்சி ஐ.சி.யூல படுக்க வைச்சிருக்கல்ல, அப்போ இதெல்லாம் உனக்கு தேவைதான். வா வா”என்று அவனை இழுத்துக் கொண்டுபோய் ஜீப்பில் தூக்கி ஏற்றினார்கள். 

அவன் அவர்கள் சொல்வதைக் கேட்டுக்கொண்டாலும் எதுவும் எதிர்த்துப் பேசவில்லை. அவன் நினைத்துப் பார்க்காததெல்லாம் இப்போது நடக்கிறது என்பதால் அதை எப்படி கையாளனும் என்று தெரியாது அவர்களைப் பார்த்தான்.

அந்த நேரத்திலும் அந்த ஸ்டேஷனை சுற்றிப்பார்த்தான். இதுவரைக்கும் தனக்காக யாருமே வரவில்லையே என்று ஏக்கத்தோடு சுற்றி சுற்றி பார்த்தான்

அந்த போலீஸ் ஸ்டேஷன் வளாகத்திற்குள் அவனது கட்சி சார்ந்த ஒரு ஈ காக்கா கூட இல்லை. அவனுக்கு அதுவே பெரிய அதிர்ச்சியாக இருந்தது. 

உடனே கான்ஸ்டபிலிடம் பேச முடியாது, மெதுவாக கையால் சைகை செய்து எனக்கு போன் வேணும், என்னோட லாயர்கிட்டயும், பிரண்டுகிட்டயும் பேசணும் என்று கேட்டான். 

அவங்களோ “என்னது போனா? அதெல்லாம் இப்போதைக்குத்தர முடியாது. ஏற்கனவே அவங்கக்கிட்ட நாங்களே கால் பண்ணி பேசியாச்சு. ஒருத்தரும் போன் எடுக்கல. அப்புறம் உன் பிரண்டுக்கு வேற ஆள் மூலமா இன்ஸ்பெக்டர் பேசினாரு. அந்த இளந்தீரனுக்கும் எங்க கட்சிக்கும் எந்த சம்பந்தமும் கிடையாதுன்னு சொல்லிட்டான். உன் குடும்பத்து ஆட்களே உனக்கு எதிராகத்தான் இருக்காங்க. உனக்கு கெட்ட நேரம் ஸ்டார்ட் ஆயிட்ட போலிருக்கு. இன்ஸ்பெக்டரையே அடிச்சுட்ட, மொத்த கேஸையும் சேர்த்து உன் தலையில்தான் எழுத போறாங்க. அனுபவி ராஜா அனுபவி. இனி வாழ்க்கை முழுசும் ஜெயில்தான். உன் மாமா உயிரோட எழுந்து வந்தா மட்டும்தான் உனக்கு விடுதலை” என்று சொல்லிவிட்டு ஜிப்பில் ஏறி முன்பக்கம் உட்கார்ந்து கொண்டார்கள்.

இவங்க எல்லாரும் சேர்ந்து பொய் சொல்லுறாங்க. என் தலைவர் அப்படியெல்லாம் சொல்லமாட்டாரே. ரகுவரன் என் நண்பன். அவன்ஒரு நாளும் என்னை இப்படி ஜெயிலுக்குள் போகவிடமாட்டான். இவங்கெல்லாருமே நம்மளை ஜெயிலுக்குள்ள அனுப்புறதுக்காக சதி பண்றாங்க. எங்க அத்தைக்காரியும் ஆதிராவும் பணத்தை தூக்கியெறிஞ்சிருப்பாங்க போலிருக்கு. ரகுவரன் எப்படி என்ன பார்க்க வராமல் இருப்பான்? எப்படியும் மதுமதி ரகுவரனை இழுத்துட்டு கோர்ட்டுக்கு வந்து என்னைப் பார்ப்பாள். ஸ்டேஷனுக்கும் வந்து என்னைப் பாக்கறதுக்காக முயற்சி பண்ணி இருப்பாள். என் மாமன் குடும்பம்தான் ஏதோ பண்ணி அவளை வரவிடாமல் பண்ணிருக்கணும். அதுக்கு எங்க அண்ணனும் உடந்தையா இருப்பான்னு தோணுது. எதுவா இருந்தாலும் சரி கோர்ட்ல போய் பார்த்துக்கலாம் எப்படியும் மதுமதி எனக்காக வக்கீலோட வந்துருவா”என அப்பொழுதும் ரகுவரன்மேலயீம் மதுமதி மேலயும் இருந்த நம்பிக்கையில் உட்கார்ந்திருந்தான்.

போலீஸ் ஜீப் இப்பொழுது கோர்ட்டுக்குள் போய் நின்றதும் அவனை இரு கான்ஸ்டபிள் வந்து பிடித்து இறக்கி விட்டார்கள். 

அவனது உடல் எல்லாம் அவ்வளவு வலியாக இருந்தது. ஆனாலும் அதை வெளிக்காட்டிக்காது இறங்கி நின்றவன் எப்பொழுதும்போல தனது கண்களால் தனக்கானவர்களை துலாவித் தேடினான்.

அவனை அவனது கேஸ் நம்பர் சொல்லி உள்ளே கூப்பிடும்வரைக்கும் அவனுக்கானவர்களை அவன் கண்கள் தேடிக்கொண்டேதான் இருந்தது. இன்னும் அவனால் கண்டுபிடிக்கமுடியவில்லை.

இத்தனை வருட அரசியல் வாழ்க்கையிலும், காதல் வாழ்க்கையிலும் முதன்முதலாக ஒரு ஏமாற்றத்தை உணர்ந்தான். தான் நம்பி இருந்தவர்கள் உண்மையில் தனது நம்பிக்கைக்கு உரியவர்களா?என முதன் முதலாக சந்தேகமும்பட்டான். 

அவனை உள்ளே கூப்பிட்டதுமே அவ்வளவுதான் யாருமேயில்லாத ஒருத்தனாக மனதிற்குள் உணர்ந்து, அப்படியே தளர்ந்தவன் அங்கேபோய் அமைதியாக நின்றான்.

ஏற்கனவே எல்லாத்தையும் ரெடி பண்ணி வைத்திருந்தார்கள். இன்ஸ்பெக்டரைத் தாக்கியதாகவும் வழக்கு பதிவு செய்து இரண்டு வழக்காக நீதிபதியிடம் காண்பித்து அவனுக்கு ஒரு மாதத்திற்கான விசாரணைக்கான ரீமாண்டும் வாங்கி இருந்தார்கள். 

ஒரு மாதம் ரிமாண்ட்டில் வைத்து விசாரிக்கவும் ஜெயிலில் அடைக்கவும் நீதிபதி உத்தரவு போட்டதும் தன்னை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரியாது சிறு குழந்தை போல மலங்க மலங்க முழித்துக் கொண்டிருந்தான்.

அதைப் பார்த்த நல்லபெருமாள்தான் அவனைப் பார்த்துச் சத்தமாக சிரித்தார்.

“இப்படி ஒரு நாள் வரும்னு நினைச்சேன். ஆனால் இவ்வளவு சீக்கிரம் வரும்னு நினைக்கலை. இன்னும் ஒரு மாசததுக்கு ஜெயில்ல களி திங்கணும். அந்த ஒரு மாசத்துல உன்னை எவனாவது போட்டுத்தள்ளுறதுக்காக கண்டிப்பா வருவானுங்க. ஏன்னா உன்னை டார்கெட் பண்ணி உங்க ம்மாவை அடிக்க நினைச்சவனுங்க சரியா அவனுங்க திட்டத்தை முடிச்சிட்டானுங்க. இனக அவனுங்களுக்குத் தேவையில்லை. அதனால்தான் உன்னை பார்க்கவும் வரலை.உனக்காக வக்கீல் ஏற்படும் பண்ணலை. நீ இனி வெளியே வந்து என்ன பண்ணப்போறன்னு நானும் பாக்கதான் போறேன். இந்த ஒரு மாசத்துக்குள்ள உன் மாமா செத்துப்போயிட்டாருன்னா கேஸ் ஸ்டராங்காகி உனக்கும் சேர்ந்து சங்கு தாண்டி. உனக்கு ஆயுள் தண்டனை கிடைக்கும் சாகுற வரைக்கும் நீ அந்த நாலு சுவத்துக்குள்ளதான் இருக்கணும். மாமனும் மருமகனும் தனித்தனி கட்சில இருந்து கொஞ்சமா ஆட்டம் போட்டீங்க. நீ என்ன பண்ணினாலும் உங்க மாமாங்க்காரன் உடனே போன் பண்ணி மருமகன் மேல கை வச்சிறாத கை வச்சிறாதன்னு மிரட்டுவாரு. அப்படி மிரட்டுனவன் ஹாஸ்பிட்டல்ல,நீ ஜெயில்ல. இதுதாண்டா உங்க வாழ்க்கையில கிடைச்ச பெரிய ட்விஸ்ட்டு. ஆப்பு கண்ணுக்குத் தெரியாம வந்து உங்க இரண்டு பேரையும் முடிச்சிவிட்டுட்டு பார்த்தியா”என்னவர் காலரைத்தூக்கி விட்டுக்கொண்டு அவனை ஜீப்பில் ஏற்றி ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்.

ஜெயிலுக்கு போகும் அந்த வண்டியில் ஏறி உட்காரும்போது இளந்தீரனை திரும்பி ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தான்.

அந்தப் பார்வைக்கு என்ன அர்த்தம் புரியாத நல்லபெருமாள் தனது புருவத்தை சுருக்கி பார்த்தவர் “உன்னால ஒன்னும் புடுங்க முடியாது போடா” காட்டிவிட்டு தனது ஜிப்பில் ஏறி ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார். 

ஆனால் தான் ஜெயிலுக்குள்ளாகப் போகப்போறோம் என்பதை நினைத்து இளந்தீரன் முதல் முறையாக அதிர்ச்சி அடைந்தாலும் இது எதனால் வந்தது எப்படியான சூழ்ச்சி என்று முதல் முறையாக அறிவோடு யோசிக்க ஆரம்பித்தான்.

இப்போ யோசிச்சா என்ன? யோசிக்காமல் போன என்ன? எல்லாம் முடிஞ்சு போச்சே இளந்தீரா!