அநாயகா-21

அநாயகா-21

அநாயகா-21

ஆதிரா கொஞ்ச தூரம் போனபின்பு, அவளது மனசுக்குள் ஒரு மாதிரி ஏதோ தப்பாக நடக்கப் போகிறது என்பது போன்று ஒரு உணர்வு தோன்றவும் டிரைவரிடம் திரும்பினாள்.

அவள் திரும்பிப்பார்க்கவும் “என்னங்கம்மா?என்னாச்சு?அப்பாவைப் பார்க்க ஹாஸ்பிட்டல் போகணுமா?முகம் ஏன் ஒரு மாதிரியாகிட்டு. ஐயாவுக்கு என்னாச்சு?போன் எதுவும் வந்துச்சா?”என்று மூச்சுவிடாமல் பதறிப்போய் கேட்டான்.

அவள் ஒராளவுக்கு விபரம் தெரிந்த வயசிலிருந்து அவன் அவங்க வீட்டுலதான் வேலைப் பார்க்கிறான் என்பதால் அவளைப் பத்தி நன்றாகத் தெரியும். எவ்வளவு பெரிய பிரச்சனை வந்தாலும் ஜெயசந்திரன் எப்படி அமைதியா புன்னகை முகத்தோடு இருப்பாரோ அதேமாதிரிதான் ஆதிராவும் இருப்பாள். என்ன அவரு அமைதியா சிரிச்சிட்டே கடந்துப்போவாரு, இவா அமைதியா தீர்க்கமா இருப்பாள்.

அவளே இப்போ முகத்துல ஒரு மாதிரியான கலவரத்தோடு அவனைத் திரும்பிப்பார்க்கவும் பயந்துவிட்டான்.

அவன் கேட்ட கேள்வியில் கொஞ்சம் நிதானமானவள் “ எனக்கென்னமோ நம்ம சின்ன அத்தானை அங்க தனியா விட்டுட்டு வந்தது தப்பா தோணுதுண்ணே. நம்ம திரும்ப அங்கப்போய் ஒருதடவைப் பார்த்துட்டு வருவோமா?வண்டியை ஆத்துப்பாலத்துக்கே திருப்புங்கண்ணே”என்று ஒரு மாதிரியான குரலில் சொன்னதும் அவனுமே யோசித்தான்.

ஆதிராம்மா காரணமில்லாமல் எதுக்கும் இப்படி பேசமாட்டாங்க என்று நினைத்தவன், வேற எதுவுமே யோசிக்காது காரைத் திருப்பி மீண்டும் இளந்தீரனைக்கொண்டுவிட்டுட்டு வந்த இடத்துக்கே ஓட்டினான்.

ஆனாலும் அவன் மனசு கேட்காமல்“என்ன ஆச்சு சின்னமேடம் எதுக்காக திரும்பி போகணும்? அவரு சொன்ன இடத்துலததானே அவரை கொண்டுவிட்டுட்டு வந்தோம். அங்க அப்படி என்ன பயப்படுற மாதிரி நடந்திடப் போகுது. அதுதான் அவங்க கட்சி ஆளுங்க ரகுவரனும், அந்த மதுமதி இருக்காங்களே. அவங்களை மீறியா வேற யாரும் பிரச்சனை பண்ண வருவாங்க, இல்லை வேற ஏதாவது அவங்களை மீறி நடந்திடப்போகுதா. அவர்தான் உங்களை மதிக்கவே மாட்டுக்காரே மேடம். நீங்க எதுக்கு அவருக்காக பதறிப்போய் இப்போ அங்க போகச்சொல்றீங்க. நான் சொல்லுறேன்னு தப்பா நினைச்சிக்காதிங்க இது உங்களுக்குத் தேவையில்லாத வேலைன்னு நினைக்கிறேன். இதையேதான் பெரிய மேடமும் சொல்லுவாங்க பாருங்க. உங்களுக்கு அங்க ஏதாவது நடந்துட்டா பெரிய மேடம் என்னைக் கொன்னு போட்டுருவாங்க. அங்க போக வேண்டாமே நம்ம வீட்டுக்கே போவோம். உங்க சின்னத்தானை இதுவரைக்கும் யாரும் ஒன்னும் செய்ததில்லையே. நம்ம ஐயாவைத்தான் அவங்க ஹாஸ்பிட்டல்ல படுக்கவைச்சிருக்காங்க” என்று காரை மெதுவாக ஓட்டினான்.

அவனுக்கு உண்மையிலயே இளந்தீரனுக்கு எதுவும் ஆகியிருந்தாலும் பிரச்சனையில்லை. நம்ம ஐயா குடும்பமாவது தப்பிச்சிரும். இவனால்தான் இத்தனை வருஷமா பிரச்சனையாகிட்டிருக்கு. இவன் எங்கேயாவது போனாலும் பரவாயில்லை, இல்லைன்னா அந்த ரகுவரன் அவனௌ ஏதாவது பண்ணியிருந்தாலும் பரவாயில்லை என்றளவுக்கு யோசித்தான்.

அவன் பேசியதைக் கேட்டதும் “டிரைவர் அண்ணே நீங்க ரொம்ப பேசுறீங்க. இது உங்களுக்கு தேவையில்லாத வேலை. நான் உங்களை அந்த இடத்துக்கு போகமட்டும்தான் சொன்னேன். இப்படி பேசுறதெல்லாம் தேவையில்லாததது. உங்களுடைய வேலை என்ன கார் ஓட்டுறதுதானே அதை சரியா செய்திங்கன்னாலே போதும். அவ்வளவுதான் அதுக்கு மேல சின்னத்தானை பத்தியெல்லாம் நீங்க பேசவேண்டியதில்லை. சீக்கிரம் போங்க” என்று சத்தம் போட்டாள்.

அந்த டிரைவருக்கு இளந்தீரனையும் அவனது பேச்சையும் பிடிக்காது. இப்போ மதுமதியையும் ரகுவரைனையும் பார்த்ததும், அவன் ஆதிராவையே மதிக்காது நடந்து கொண்டதை பார்த்ததும் கூட கொஞ்சம் பிடிக்காமல் போய்விட்டது. அதனால்தான் அவன் காரை மெதுவாக ஓட்டியபடியே பேசினான்.இப்பொழுது ஆதிரா திட்டியதும் வேறுவழியின்றி கரை வேகமாக ஓட்டினான். 

ஆதிராவுக்கோ அப்படியே காரில் இருந்துக் குதித்து அப்படியே பறந்து உடனே அந்த இடத்திற்கு போயிடணும் என்றளவுக்கு மனசு தானாக படபடத்தது.

இளந்தீரனை விட்டுவிட்டு வந்த அந்த ஆற்றுப்பாலத்துக்கு அருகில் போகும்பொழுதே அங்கே அங்கே யாருமே இல்லை என்று தெரிந்தது.

இதுக்குள்ளவா பேசிமுடிச்சுட்டு எல்லோரும் போயிட்டாங்க?அவங்க காரெல்லாம் நம்மளுக்கு எதிராக வந்தமாதிரி தெரியலையே. அப்போ வேற பாக்கமா போயிட்டாங்களா.ஆமா அந்தபக்கமும் வழியிருக்குல்ல என்று யோசித்தவாறே சுத்தி சுத்தி பார்த்தவாறே வந்தாள்.

அதற்குள்ளாக டிரைவரும் காரை நிறுத்தியிருக்க ஆதிரா இறங்கியவள். இளந்தீரனை தேடினாள். 

‘இதுக்குள்ள அவங்க பேசிமுடிச்சிட்டு போகவாய்ப்பேயில்லை. ஒருவேளை மதுமதியைக் கூட்டிட்டு கல்யாணம் பண்ண போயிட்டாங்களா?ரகுவரன் அதுக்குத்தான் மதுமதியை தனியா கூட்டிட்டுவர்றேன்னு சொல்லியிருந்தானோ?அப்படியெல்லாம் செய்ய வ்ய்ப்பேயில்லையே. இந்த மதுமதி வேற ரகுவரனை கல்யாணம் பண்ணிக்க தைரியமா சம்மதிச்சவதானே. சின்னத்தான் வெளிய வர்றதே யாருக்கும் தெரியாது. இவங்க முன்னாடியே அத்தானை கல்யாணம் பண்ணிக்க ப்ளான் பண்ணவும் வாய்ப்பில்லை. ஒருவேளை நமக்குத் நெரியாமல் ஏதோ நடந்திருக்கோ?’ என்று யோசித்தவளுக்கு இன்னும் மனது படபடவென்றுதான் அடித்துக்கொண்டது. அவள் அங்கேயும் இங்கேயும் ஓடித்தேடிப்பார்த்தாள்.

அவளது இதயம் துடித்த துடிப்பில் ஏதோ தப்பாயிருக்கு என்று மட்டும் மூளை உணர்த்திக்கொண்டிருந்தது. அந்த ஆத்துப்பாலத்துக்கு கீழே புதர்மண்டிக்கிடந்த இடத்திற்குள் இறங்கியவளுக்கு நெஞ்சேவெடித்துவிடுவதுபோல இருந்தது.

அந்த முட்புதருக்கு இடையில் இளந்தீரன் மயங்கிக்கடந்தான். அவ்வளவுதான் “அத்தாஆஆஆஆன்” என்று அலறிக் கதறிவள் அவன் பக்கத்தில் போய் கையைப்பிடித்து தூக்க முயன்றாள்.

அதற்குள் அவளது சத்தம் கேட்டு “சின்னமேடம் என்னாச்சி” என்று டிரைவரும் ஓடிவந்துப் பார்த்தான்.

“ஐயோ இந்த ஐய்யா என்ன இங்க மயங்கிகிடக்காங்க?” என்று உள்ளே இறங்கினான். அதற்குள் ஆதிரா இளந்தீரனின் கையைப்பிடித்து இழுத்தும் அவன் எழுந்திருக்காததால் தலையைப்பிடித்து “அத்தாஆஆன்”என்று அசைத்துத் தூக்கிப் பார்க்க அவளது கையெல்லாம் இரத்தம் வழிந்தது.

“ஐய்யோ அத்த்தாஆஆன்” என்று கதறியவள் அவனை அப்படியே தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு கதறினாள். 

“சின்னமேடம் அவரைத் தூக்குவோம். ஹாஸ்பிட்டல் கொண்டுபோவோம். பாருங்க இரத்தம் நிறைய போயிட்டிருக்கு”என்று டிரைவர் பயந்து சொன்னதைக் கேட்டதும்தான் அவனைத்தூக்கி ஹாஸ்பிட்டல் கொண்டுபோகணும் என்ற உணர்வே வந்தது.

இப்போதான் ஏதோ நடந்திருக்கு, வந்தவங்கதான் அத்தானை அடிச்சு போட்டுட்டு போயிருக்கணும், இப்போ வேற எதையும் யோசிக்கவோ, செய்யவோ முடியாது. முதல்ல அத்தானைக் காப்பாத்தணும் என்று நினைத்த ஆதிரா உடனே டிரைவரோடு சேர்ந்து அவனை தூக்கி காரில் போட்டனர்.

அவளது அப்பாவை வைத்திருக்கும் அதே ஹாஸ்பிட்டலுக்குத்தான் கொண்டுவந்து அட்மிட் பண்ணினாள்.

இப்போதான் ஒரு இரண்டு மணி நேரத்துக்கு முன்னாடி அவனை ஜெயிலில் இருந்து வெளியே எடுத்து வந்திருக்கிறாள். அதற்குள் அவனுக்கு இப்படி ஆகிவிட்டது என்றால் அவள் மேல்தானே சந்தேகம் வரும். அவள்தான் அவங்கப்பாவை அடிச்சவனை பழிவாங்க ஏதோ பண்ணிருக்கிறாள் என்று அவளையே குற்றவாளியாக்கி அரஸ்ட்கூட பண்ணவாய்ப்பிருக்கு. இதெல்லாம் தெரிந்தும் அவனை ஹாஸ்பிட்டலில் அட்மிட் செய்திருந்தாள்.

அவனுக்கு என்ன ஆச்சு என்று எதுவுமே தெரியாது. ஆனால் ரகுவரனும் மதுமதியும் சேர்ந்துதான் அத்தானை ஏதோ பண்ணியிருக்கணும் என்று தெளிவாக தெரியும். 

ஹாஸ்பிட்டலில் எப்படி காயம் பட்டது?என்னாச்சு?என்று விசாரிக்கும் பொழுது அவர்கள் பெயரை சொல்லாமல் கீழே விழுந்துவிட்டான் என்றுதான் சொல்லியிருந்தாள்.

‘என்ன நடந்ததுன்னு முழுசா தெரியாது. அப்படித் தெரியாமல் மதுமதியை இதில் உள்ளே இழுக்கமுடியாது. அதில்லாமல் எல்லோரும் சேர்ந்து பழியை நம்மமேலயே போட்டுவிடுவாங்கன்னு தெரியும்’என்று நினைத்தவள், இப்போதைக்கு எதையும் வெளியே சொல்லாது அப்படியே அமைதியாக தனக்குள்ளயே வைத்துக்கொண்டாள். டிரைவரிடமும் யாருக்கிட்டயும் மதுமதி பேரையும் ரகுவரன் பேரையும் வெளியே சொல்லக்கூடாதுன்னும் எச்சரித்தாள்.

ஒருவேளை அத்தான் கண்ணுமுழிச்சு வேற ஏதாவது நடந்துச்சுன்னு சொன்னா மொத்தமா பிரச்சனைய்கிடும், அவங்க காதலிவேற என்று அவங்கப்ப்வைப் போல அறிவோடு செயல்பட்டாள்.

இதுல எல்லாம் அப்பாவைப் போலியிருக்கா. ஆனால் காதல்னு வரும்போது மட்டும் உன் அத்தான் அறிவைக் கடன்கொடுத்தமாதிரியே கொடுத்துடுறா!

இளந்தீரனை அட்மிட் பண்ணினதும் அவனை டாக்டர்கள் செக் பண்ணிட்டு உடனே ஐ.சிவிற்கு மாற்றிவிட்டனர்.

அவனதீ தலையில் அடி வேகமாகப் பட்டதால் காயம்பட்டு இரத்தம் வந்திருக்கே தவிற, உள்ளே மூளைக்கும் நரம்புக்கும் எந்த விதத்திலும் பாதிப்பில்லை. வெளிப்புற காயம் மட்டுமே இருந்தது. அதனால் தையல் போட்டு மருந்துவைத்துக் கட்டியிருந்தனர்.

ஆனாலும் இன்னும் அவன் கண்ணுமுழிக்கவில்லை என்பதால் வேறு ஏதும் உள்ளான பாதிப்புகள் இருக்கிறதா என்று எம். ஆர். எஸ் ஸ்கேன் எடுத்து பார்த்தார்கள். 

அப்படி எந்த ஆபத்தும் இல்லை. அவனை அப்சர்வேஷன் மட்டும் வைத்திருந்தார்கள். அவன் கண்முழித்து நார்மலாக இருந்தால் பிரச்சனையில்லை. அப்படியில்லைன்னா வேற பார்க்கணும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டனர்.

இளந்தீரனுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று அவள் மொத்தமாக பயந்துவிட்டாள். இப்போது ஆதிராவுக்குக் கொஞ்சம் பயம் போய்விட்டது.

மதுமதி அவனை ஒன்னும் செய்திருக்க வாய்ப்பில்லை. அவளைக் கல்யாணம் பண்றதுக்காக இந்த ராகுவரன் சிவானந்தனோடு சேர்ந்து அத்தனை கொலை பண்ணத்தான் திட்டம் போட்டிருக்கணும். அது நடக்காமல் போயிருக்கும், பாதியிலே அவனை போட்டுவிட்டு ஓடிவிட்டார்களாக இருக்கும் என்று அவளை என்ன நடந்திருக்கும் என்பதை யூகித்திருந்தாள்.

ஆனாலும் இளந்தீரனை அப்படி அவள் பார்த்ததில் அவளுக்கு வருத்தம். தன் இளமைக்காலம் தொடங்கி தன் நெஞ்சில் இருக்கும் காதலன். அவனுக்கு ஒன்று எனறால் அவளது சர்வமும் பயந்து நடுங்கியதை இப்போதும் உணர்கிறாள்.

தீராத்தான் என்று உதடுகள் முணுமுணுக்க கண்களை மூடியவளுக்கு. பழைய தீராத்தான் கண்ணுக்குள் வந்து நின்றான்.

ஆதிராவைப் பார்த்தாலே கண்களில் காதல் ஆசை வழிய,அவள் முன்பாகவந்து நின்று கண்ணடிக்கும் அந்த அத்தானை அவளுக்கு இப்பவும் பிடிக்கும். 

அவளது காதல் கனவுகளின் முதலும் முடிவுமான நாயகன் இளந்தீரன் மட்டுமே!

தன்னிடம் தைரியமாக வந்து “நீ என் பொண்டாட்டிடி” என்று தனது காதலைச் சொன்ன அந்த தீரா அத்தானை அவள் தொலைத்து பலவருடங்களாகிறது. ஆனாலும் அவன் கொடுத்த அந்த ஞாபகங்கள் இன்னும் நெஞ்சுக்குழிக்குள் பத்திரமாக இருக்கிறது. 

அவன் கொத்த அரும்பு மீசை குத்தும் முத்தங்களும், அவனது உதடுகள் தீண்டும்போது உணர்ந்த வெப்பமும், இப்போது நினைத்தாலும் அவளுக்கும் சிலிர்க்கும் தருணங்களாகத்தான் இருக்கிறது!

அதையெல்லாம் நினைத்துக் கண்ணை மூடி அங்கயே உட்கார்ந்திருந்தவளின் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்து கன்னங்களில் இறங்கியது. அதை துடைத்துவிட்டு அப்படியே உட்கார்ந்திருந்தாள்.

இதையெல்லாம் பார்த்திருந்த டிரைவர்,டாக்டர் வந்து பேசிட்டுப்போனதும், கடமை உணர்வுமிக்க டிரைவராக உடனே மகேஸ்வரிக்கு போன் பண்ணி நடந்த எல்லாவற்றையும் தகவலாக சொல்லிவிட்டான்.

அவ்வளவுதான் மகேஸ்வரிக்கு அதையெல்லாம் கேட்டதும் அதிர்ச்சியாக இருந்துத. நம்ம ஆதிராவா அவங்கப்பாவை இந்த நிலமைக்கு ஆளாக்கியவனை கேஸ்ல இருந்து விடுவித்து வெளியே எடுத்துட்டு வந்திருக்காள்!அவரால் நம்பவே மீடியவில்லை.

கணவனை பார்ப்பதற்காக ஹாஸ்பிட்டலில்தான்,அவரை வைத்திருந்த தனி ரூமில் இருந்தார்.

அவர் டிரைவர் சொன்னதைக் கேட்டதும் உடனே ரவிக்கு போன் பண்ணி வர சொல்லிவிட்டு ஆதிராவைத் தேடிப்போனார்.

ஆதிரா அங்கே ஐ.சி.யூவின் முன்பாக கண்களை மூடி உட்கார்ந்திருந்ததைப் பார்த்தவருக்கு, அவரை அறியாமலயே அப்படி ஒரு கோபம் வந்தது.

மகேஸ்வரி அவ்வளவுக் கோபத்தோட வேகமாக அவள் பக்கத்தில் வந்து நின்றவர், என்ன செய்கிறோம் என்று தெரியாது பளார் பளார் என்று ஆதிராவின் கன்னத்தில் வேகமாக அடித்தார்.

அதை எதிர்பார்க்காத ஆதிராவோ பதறி ஆஆஆஆ என்று அலறியவாறே தனது கண்களை திறந்தவள், அப்படியே கன்னத்தில் கையே வைத்துக் கொண்டு பாவமாக மகேஸ்வரியை பார்த்தாள்.

அவளது கண்களோ அருவியாகக் கண்ணீரை உதிர்க்க, அப்படியே அசையாது சிலை போல வாங்கிய அடியின் வலியிலும்,அதிர்ச்சியிலும் உட்கார்ந்திருந்தாள்!