என் இனிய விவாகரத்தே 5
Divorce5
5 என் இனிய விவாகரத்தே!!
"ஏன் புகழினி அப்படி ஒரு குற்றச்சாட்டை பிரபா மேல வச்சீங்க... இப்ப பாருங்க உங்களுக்கு தான் ரிஸ்க், அவர் மத்த பொண்ணுங்க கூட தப்பா இருந்தாரு , என்னால் அதை சகிக்க முடியலன்னு உண்மையை சொல்லி இருந்தா , ஈசியா டைவர்ஸ் கிடைச்சிருக்குமே... "பெண் வக்கீல் முன்னே உட்கார்ந்திருந்த புகழினியை அவர் கேள்வியாக பார்க்க ...
"அப்பவும் கிடைச்சிருக்காது மேடம், அப்பவும் நான் பத்து பேர் கூட போனேன்னு அவப்பெயர்தான் கிடைச்சிருக்கும்... நான் ஆம்பள எது வேணாலும் பண்ணுவேன், நீ பொறுத்துத்தான் போகணும்னு மீசை இருக்கிற ஒரே காரணத்துக்காக ஓங்கி ஓங்கி கொட்டுனாருல்ல... நான் சொன்ன ஒரே ஒரு குற்றச்சாட்டுல இனி நிமிர்ந்து நடக்க விடாதுல்ல.... "
இப்ப அதை உண்மைன்னு நிரூபிக்க நீங்க கஷ்டப்படணுமே புகழினி...."
அவர் பொண்ணுங்க கூட தப்பா இருந்தாருன்னு நிரூபிக்க கூட கஷ்டம் தான் , ஏன்னா தப்பை தப்பே இல்லாம செய்றது எப்படின்னு அவருக்கு ரொம்ப நல்லாவே தெரியும்... கஷ்டப்படாம வாழ்க்கை மட்டும் இல்லை விவாகரத்தும் கிடைக்காதே என்று மெலிதாக சிரிக்க ....
ம்ம்
அதோடு நான் சொன்னது ஒன்னும் பொய் எல்லாம் இல்ல மேடம் , எங்க முடிஞ்சா அவர மெடிக்கல் செக்கப்புக்கு வர சொல்லுங்க பார்ப்போம்.... வரமாட்டாரு ஏன்னா அவருக்கே தெரியும் அவர் செல்ப் காண்பிடென்ஸ் லெவல் எப்படின்னு... என்று மெலிதாக புகழினி சிரித்தாள்
அப்புறம் எப்படி?? என்று வக்கீல் தடுமாற
எல்லா பொம்பளையும் ஒரு ஆம்பள கிட்ட சுகத்தை மட்டுமே தேடி போறதில்ல மேடம், அவன்கிட்ட இருக்குற துட்டு அவன் கொடுக்குற ஏதோ ஒன்னு காந்தம் மாதிரி இழுக்கும்... நீ ஆஹா ஓஹோன்னு சொன்னதும் இவனும் நாம பெரிய ஆம்பளதான் போல ன்னு நம்பி ஏமாந்து தான் போறான் இதுவும் ஒரு ஏமாளிதான்.... வீட்டுல புலி வெளிய எலி ஹாஹா பொண்டாட்டி கிட்ட மட்டுமே சீறும் ஜந்து...
"இவ்வளவு தெரியுதே கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணி போய் இருக்கலாமே இல்ல இப்படியே வாழ்ந்திருந்தா "
"வாழ்ந்து இருந்தா என் வாழ்க்கை நாசமா போயிருக்கும் மேடம்.... ஒரு அழுக்கான சட்டையை நாலு நாள் நம்மளால போட முடியுமா?....
ம்ஹூம்
பப்ளிக் டாய்லெட் குள்ள போன மாதிரி ஒரு ஃபீலிங் ஒவ்வொரு முறையும் இந்த தாம்பத்தியத்தை முகத்தை சுளிச்சுக்கிட்டு வாழும் போது இருக்கு ... எப்படி என்னால வாழ முடியும்னு சொல்லுங்க ....
"ஆனா நிறைய பேர் இப்படியும் வாழ்ந்துட்டு இருக்காங்க புகழினி ..."
"அது அவங்க நியாயம் அவங்க முடிவு மேடம் , யாரோட நியாய தர்மத்திலும் நான் தலையிட முடியாதுல்ல... கேட்டா , என் மேலேயும் அன்பாதான் இருக்கார், என் பிள்ளைங்களை நேசிக்கிறார் எனக்கு மரியாதை குறை இல்லை... எப்பவாவது அப்படி இப்படி வேலை விஷயமாக வெளிய போகும் போது இருப்பார்... ஆனா , அவர் மனைவி நான்தான்னு அவங்க வாழ்ற வாழ்க்கைக்கு அவங்களே சப்பை கட்டு கட்டுவாங்க... இதுல எங்க அன்பு காதல் இருக்கு ??
மனைவியை கணவனை நேசிக்கிற ஒருத்தர் கண்ணால கூட தப்பு செய்ய மாட்டாங்க மேடம் ... பைபிள் சொல்லுது ஒரு பெண்ணை இச்சையோடு பார்க்கிற எவனும் அவளோடு விபச்சாரம் செய்தாயிற்றுன்னு , திருக்குறள்ல கற்பியல்னு ஒரு அதிகாரமே இருக்கு, காதலின் ஒழுக்க நிலை பற்றி சொல்ல .... இது எதையும் கடைபிடிக்க தெரியாத ஒருத்தர் கூட வாழ்றது எப்படி காதல் ஆகும் ??
"ம்ம் சரிதான் "
"அவர் கல்யாணத்துக்கு முன்னாடி எப்படி வேணும்னாலும் இருந்து இருக்கலாம் ... அது கூட மன்னிச்சிருப்பேன்... கல்யாணம்னு ஒரு பந்தத்துக்குள்ள வந்த பிறகு, இப்படித்தான் வாழணும்னு நம்ம சமூகமும் பெரியவங்களும் ஆயிரம் சட்ட திட்டம் வச்சிருக்காங்க .... அந்த ஆயிரத்தை மதிக்க வேண்டாம்... அட்லீஸ்ட் மனைவிக்கு உண்மையா இருக்கணுங்கிற அந்த ஒன்னையாவது மதிக்கலாம்ல.... அவன் உண்மையா இருக்க மாட்டான், ஆனா நான் மட்டும் கடைசி வரைக்கும் உண்மையா இருக்கணும்னா என்ன நியாயம்?
அவர் இப்படின்னு தெரிஞ்ச அன்னைக்கே இந்த முடிவை எடுத்து இருக்கலாமே புகழினி,
"கையில எடுக்க கூடாத ஒரு புத்தகம் எடுத்துட்டேன் எதாவது ஒரு பக்கத்துல சுப முடிவு வராதான்னு புரட்டி புரட்டி பார்த்தேன் .... கடைசி வரை அந்த புத்தகத்துல என் பேர் எழுதப்படவே இல்லைன்னு தெரிஞ்ச பிறகு காத்திருக்கிறதும் பொறுத்து போறதும் வீணே!! பெருமூச்சு விட்டாள் ...
ம்ம்
இப்பவும் நான் சுதாரிக்கலைன்னா,
நான் சுரஓடா மாறிடுவேன் ... அவனுடைய எல்லா செயலுக்கும் மரத்துப் போய் அவனுக்கு அடிமை மாதிரி வாழ ஆரம்பிச்சிடுவேன்..... நீங்க சொன்னீங்களே சில பேர் அந்த சில பேர்ல ஒருத்தியா வாழ நான் தயார் இல்லை மேடம்...
குட்
"கல்யாணத்தோட அடிப்படை அஸ்திவாரம் காதலதிகாரம் !! ஆணாதிக்கம் இல்லை மேடம் ,, சிடுசிடுன்னு நிக்கிற ஆம்பள கிட்ட கூட கொஞ்சம் காதல் மிச்சம் இருக்கும் மனைவிக்கு உண்மையா இருப்பான், சவத்த கட்டியாச்சு இவளுக்கு உண்மையா இருப்போம், இவளைத் தவிர எவளும் நம்மள வச்சு வாழ முடியாது, அடிச்சாலும் புடிச்சாலும் கடைசியா அவகிட்ட தான் வந்து நிப்பான்... அதுல இருக்கிறது கூட சொச்சக்காதல்தான் !! ஆனா நான் வாழ்ந்துகிட்டு இருக்க வாழ்க்கையில நித்தம் ஆயிரம் துரோகங்கள்!! அடி மிதியை கூட தாங்கலாம் துரோகத்தை தாங்குற அளவு தைரியசாலி நான் இல்ல போல, அதான் விடுதலை கேட்கிறேன்..
"ஏன் எனக்கு இந்த தண்டனை, என் வாழ்க்கையை சரி செய்ய யாரும் வர மாட்டாங்க ... அய்யய்யோன்னு அனுதாபப்பட ஆயிரம் பேர் என்ன சுத்தி இருக்காங்க இல்லன்னு சொல்லல ... ஆனா அதுக்கு விடை சொல்றதுக்கோ, இல்ல அந்த சேற்றுல இருந்து என்னை தூக்கி விடுறதுக்கோ ஒத்த பய வரமாட்டான்... நானே போராடினாதான் உண்டுன்னு முடிவெடுத்துதான் இந்த விவாகரத்துக்கு அப்ளை பண்ணுனேன்.... கடைசி வரைக்கும் பின்வாங்குறதா இல்ல ....
"இதனால அசிங்கப்பட போறது அவர் இல்ல புகழினி நீங்கதான் புரியுதா??
"ஏன் புரியாம, உடம்பு சுகத்துக்கு ஆசைப்பட்டு இப்படி எல்லாம் பேசுறான்னு பத்தி பத்தியா என்ன பத்தி பேச போறாங்க, பேசிட்டு போகட்டுமே ஆனா உண்மை ஒருநாள் ஜெயிக்கும், நேர்மையா நான் வாழ்ந்த வாழ்க்கை ஒருநாள் என்னை தலை நிமிர்ந்து வாழ வைக்கும் மேடம் ... நான் யாருக்காகவும் என் வாழ்க்கையை விட்டுக் கொடுக்கவும் மாட்டேன்.... வாழாம இருக்கவும் மாட்டேன்
"அப்போ இன்னொரு வாழ்க்கை வாழ வாய்ப்பு இருக்குன்னு சொல்றீங்க...
"ஏன் நான் வாழ கூடாது , ஒருவேளை வாழணும்னு ஆசை வந்தா வாழ்வேன்.... ஜாம் ஜாம்னு இவன் முன்னாலேயே வாழ்வேன் ..... யாருக்கும் உண்மை இல்லாம வாழ்ற போலி வாழ்க்கையை விட தனியா நிம்மதியா வாழ்ந்துட்டு போறதே சாலச்சிறந்தது மேடம் ... போதும் பட்டது என்று விரக்தியான சிரிப்பு புகழினி உதட்டில்...
உறவுகளை நேசிக்க தெரிந்தவர்களுக்கு உறவுகளை மதிக்க தெரியாத இணையை கொடுத்து வேடிக்கை பார்க்கிறது உலகம் !!
பிரபா தன் வக்கீல் முன்னே அடிபட்ட மிருகம் போல உட்கார்ந்து இருந்தான் , ஊரில் தலைகாட்ட முடியவில்லை... ரெண்டு நாளாக ஆபீஸ் பக்கமே தலை வைத்து படுக்க வில்லை ... எல்லாரும் அவனை பார்த்து கேலி பேசுவது போலவே இருந்தது...
பிரபா ஒன்னு உங்க மிஸஸ் சொன்னது பொய்யின்னு நிரூபிங்க .... ஹெல்த் செக்கப்க்கு ஓகே சொல்லுங்க.... அப்படி இல்லன்னா அவங்க மேல என்ன தப்பு இருக்கோ அதை சுட்டி காட்டுங்க.... உங்க மேல தான் தப்பு இருக்குன்னு அவங்க முந்திக்கிட்டாங்கன்னா தீர்ப்பு அவங்களுக்கு சாதகமா மாறிடும் அப்புறம் ஜீவனாம்சம் அது இதுன்னு உங்களுக்கு தான் தொல்லை., பாத்தீங்க தானே!! அவங்க நகையில தான் நீங்க அந்த வீட்டை வாங்கினீங்கன்னு ஆதாரத்தை காட்டி கோர்ட் கையில இருந்தே அந்த வீட்டுக்குரிய சாவியை வாங்கிட்டு போயிட்டாங்க
"ப்ச் , இவளுக்கு என்ன தெரியும் மண்ணாங்கட்டின்னு நினைச்சு, அவளை விட்டு வெச்சதுதான் நான் செஞ்ச தப்பு.... நாய் கூடவே இருந்து என்ன கேவலப்படுத்திடுச்சு , பாவம் பொண்டாட்டின்னு விட்டு வச்சேன்ல இவளுக்கெல்லாம் சோத்துல விஷத்தை வெச்சு கொன்னு இருக்கணும் .. ஒன்னும் பிரச்சனை இல்ல அதான் குழந்தை இருக்குல்ல அதை வச்சு ஏதாவது பிளே பண்ண முடியுமா சார் என்று பிரபா தலையை தடவ
"ம்ம் பட், குழந்தை உங்க கிட்ட வர்றேன்னு சொல்லுமா பிரபா
"ம்ஹூம் அதுக்கு வாய்ப்பில்லையே...
"ஒன்னு அவங்களே கேஸ் வித்ட்ரா பண்ணணும் இல்லை உங்க பக்கம் தப்பில்லைன்னு நிரூபிக்கணும் இல்லை வருட கணக்கா கேஸ் இழுத்து அடிக்கும் பிரபா...
"அவ ஒரு நடத்தை கெட்டவன்னு நிருபிச்சிட்டா ??என்ற பிரபாவை வக்கீல் என்ன மனிதன் இவன் என்பது போல பார்த்தபடி ...
"ஏமாந்தது நான்தான்னு ஆக்கிட்டா?
"உலகம் தெரியாம கிடந்த அவளுக்கே இவ்வளவு தெரியும்னா .. நான் உலகத்தை கரைச்சி குடிச்சவன் அவளை உண்டு இல்லைன்னு ஆக்காம விட மாட்டேன்
அது சரிதான் ஆனா அதுவரை நீங்க கொஞ்சம் கவனமா இருக்கணும் பிரபா.. நீங்க கையும் காலுமா மாட்டிக்கிட்டா எல்லாம் ஊத்திக்கும்...
ப்ச் அதை நான் பார்த்துக்கிறேன்.. எனக்கு அவளை தோற்கடிச்சே ஆகணும் ... குழந்தையையும் பிடுங்கி அவ ஒழுக்கம் இல்லாத ___ண்டன்னு ஆக்கி ஏன்டா இவன்கிட்ட வச்சிக்கிட்டோம்னு நொந்து சாகணும்... என் கால்ல வந்து விழட்டும் ...அவ செஞ்ச தப்புக்கு கடைசி வரை எந்த வாழ்க்கையில இருந்து வெளியே போய் சுதந்திரமா இருக்க நினைக்கிறாளோ அதே வாழ்க்கை உள்ளே அழுது அழுது வாழணும்.... அவளுக்கு விடுதலையே கொடுக்க மாட்டேன்.... பறக்க ஆசை படுறாளா றெக்கையை ஒட்ட நறுக்கிடுறேன் அவளுக்கு சாதகமாக அவ குடும்பமே இல்லை... எல்லாரையும் விலைக்கு வாங்கி அவளுக்கு எதிரா சாட்சியை நான் தர்றேன்.. நானா அவளா பார்த்துடலாம் என்ற பிரபாவை வக்கீல் அமைதியாக பார்த்தார்...
"என் மனைவிக்கும் என் வீட்டு டிரைவருக்கும் தப்பான பழக்க வழக்கம் இருந்தது அதை பல தடவை நான் கண்டிச்சிருக்கேன். சரி கல்யாணம் கட்டிக்கிட்டோம் வாய்ப்பு கொடுக்கலாம்னு பல தடவை வாய்ப்பு கொடுத்து இருக்கேன் .... எங்க நான் முந்திக்கிட்டா அவ மேல தப்புன்னு ஆகிடுமோன்னு என்ன அசிங்க படுத்திட்டா , நான் சொல்றது எல்லாம் உண்மை என்று உறுத்தாது பொய் சொன்ன பிரபாவை அமைதியா கையை கட்டி கொண்டு புகழினி பார்த்து கொண்டு நின்றாள்...
பத்து நாள் டைம் கொடுங்க மேடம் , அத்தனை ஆதாரத்தையும் கொடுத்து நான் தப்பே செய்யலைன்னு ப்ரூப் பண்றேன் என்று பிரபா அவகாசம் கேட்க
ஓகே என்று அவனுக்கு சாதகமாக வாய்தா ஆனது ... பிரபா அவளை இளக்காரமாக பார்த்தவன்
வாழ ஆசை படுறியா, சாக ஆசை பட வைக்கிறேன்டி... என்று அவளை கடந்து போனவனை அமைதியாக புகழினி பார்த்தாள்...
ஸ்ரீநாத் , ரஞ்சனி என்று அடுத்த கேஸூக்கு பெயர்கள் அழைக்கப்பட ... புகழினி அங்கிருந்து நகர போக எதிரே வந்த ஆடவன் மீது இடிக்க போனவள் சுதாரித்து...
சாரிங்க சார் கவனிக்கல என்று புகழினி மன்னிப்பு கோர
"பரவாயில்லைங்க மேடம்" என்று மூக்கு கண்ணாடியை சரிசெய்து கொண்டு அவளை கடந்து அந்த அறை உள்ளே நுழைந்தான் ஸ்ரீநாத்...
மியூச்சுவல் டைவர்ஸ் அப்ளை பண்ணி இருக்கீங்க, என்ன காரணம்?? ஏன் சேர்ந்து வாழ முடியல என்று நீதிபதி ஸ்ரீநாத் கையில் சமத்தாக இருந்த அவன் மகனை பார்க்க
மேடம் நான் இந்த விவாகரத்து கேட்கவே இல்லை அவர்தான் கட்டாயபடுத்துறார் என் பிள்ளையையும் என்கிட்ட இருந்து பிரிச்சிட்டார்" என்று ரஞ்சனி அழ ஆரம்பிக்க ஸ்ரீநாத் கண்களை அகல விரித்தான்....
"என்னம்மா சொல்ற?
"அவருக்கு மனநோய் ரெண்டு வருசமா இருக்கு மேடம் அவங்க அம்மா செத்து போனதுல இருந்து பிரம்மை பிடிச்சது போல என்னன்வோ பண்ணுவார் மேடம்... இப்ப கொஞ்ச நாளா நான் கள்ள தொடர்பு வச்சிருக்கேன் அது இதுன்னு சந்தேகப்பட்டு டெய்லி அடி உதைதான் மேடம் ஆனாலும் அவர் நிலமை எனக்கு புரியுது... மத்த எல்லா விஷயத்திலும் நல்ல மனுசன் தான் .... என்னால அவரையும் பிள்ளையையும் பிரிஞ்சு வாழ முடியாது எங்களை சேர்த்து வச்சிடுங்க மேடம் என்று ரஞ்சனி கதறி அழ ...
இது என்னடா திருப்பம் என்று ஸ்ரீநாத்தே அதிர்ந்து தான் நின்றான் ...
உலகில் சாவது மட்டுமே எளிது !!
அவ்வளவு எளிதில் வாழ்ந்து விடவும் முடியாது
அவ்வளவு எளிதில் விடுதலை ஆகி விடவும் முடியாது ...
இங்கே பலரின் பிரச்சனையே தவறுகளுக்கு மன்னிப்பு கேட்க முடியாததும்
நான்தான் தவறி விட்டேன் என்று ஒத்துகொள்ள முடியாததுமே ஆகும் ....