என் நெஞ்சிலாடும் களபமே-30

களபம்-30
மோகன் மித்ராவைக் கட்டிக்கொண்டு அவளது தலையில் முத்தம் வைத்து அவள் மேலுள்ள தனது அன்பை வெளிப்படுத்திக் கொண்டிருந்தான்.
அவளுக்கும் இப்போது அது தேவைப்பட்டது.அதனால் அப்படியே நின்றிருந்தாள்.சில நிமிடத்திலயே அவளது கால்கள் தோய்ந்து தலை அவனது கைகளில் சரியவும் அவளுக்கு என்னமோ ஆகுது என்று உணர்ந்து அவளை இறுக்கமாக பிடித்து நிறுத்தியவன் முகத்தை நிமிர்த்திப் பார்த்தான்.
அவளோ கண்கள் மூடிய நிலையில் மயங்கியிருந்தாள்.
அவளது முகத்தையும் காண்களையும் பார்த்தவன் பயந்து பதறி “மித்ராஆஆஆஆ! மித்ராஆஆஆ!” என்று சத்தமாக அவளது கன்னத்தில் அடித்து உலுக்கினான்.
ஆனால் அவளிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. அவ்வளவுதான் பயந்து மித்ராஆஆஆ என்று சத்தமாக கதறி அழுதவன் அவளை அப்படியே தூக்கிக் கொண்டு தனது காரைநோக்கி ஓடினான்.
அவனது துடிப்பையும் கதறலையும் பார்த்த ஆயுஷும் பிரீத்தாவும் அவன் பின்னாடியே ஓடினர். அவனது காரை ஆயுஷ்தான் எடுத்தான்.பிரீத்தா அவனருகில் உட்கார்ந்துக்கொண்டாள்.
ஒருவழியாக ஐந்து நிமிடத்திலயே பக்கத்தில் இருந்த ஹாஸ்பிட்டலில் அவளை சேர்த்துவிட்டு கூடவே இருந்தனர்.
அவள் மீதான தனது அன்பையும் நேசத்தையும் முதன்முறையாக அளவற்று மோகன் உணர்ந்தான். அவள் மயங்கி கிடக்கிறாள் என்றதும் அவன் துடித்த துடிப்பின் அளவே அவர்களது வாழ்க்கை எப்படி போய்க்கொண்டிருக்கிறது என்பதை எல்லாருக்கும் பறை சாற்றியது.
இப்போதும் அவளுக்கு ஒன்றும் ஆயிருக்க்கூடாது கடவுளே! என்று வேண்டுதலோடு கொஞ்சம் பதற்றமும் பயமும் கலந்து அருகிலே நின்றிருந்தான்.
அவளது கைவிரல்களைப்பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தான். எங்கே தன்னை தனிமையில் விட்டுவிட்டு போயிடுவாளோ? என்ற பயம் வேறு தொண்டையைக் கவ்வியது.
அவள் தனக்குள் எந்தளவுக்கு ஊடுருவியிருக்கிறாள் என்பதை அவனே அப்போதுதான் உணர்கிறான். அதற்குள்ளாக அருணுக்கு போன் பண்ணி மச்சான் உன் தங்கச்சி என்னைவிட்டு போயிடுவா போலிருக்கு என்று பீல் பண்ணி சொல்ல,அங்கிருந்தவர்கள் பயந்துவிட்டனர்.
அவளைக் கடத்திட்டுப்போய் என்னமோ பண்ணிட்டானுங்க என்று பதறிப் பயந்து அருணோடு சேர்ந்து எல்லோரும் உடனே பிளைட்ல டிக்கட்போட்டு கிளம்பிவிட்டனர்.
ஒரு அரைமணி நேரத்திலயே டாக்டர்ஸ் வந்து “இது கர்ப்ப காலத்துல வர்ற மயக்கம்தான். ஏற்கனவே அவங்க பயத்திலிருந்துருக்காங்க போலிருக்கு. அதுல இருந்து கடத்தல் பிரச்சினை என்று வந்ததும் மயங்கிட்டாங்க. வேற ஒரு பிரச்சனையும் இல்லை அவங்களுக்கு சத்தான சாப்பாடுக் கொடுங்க. மாத்திரை மருந்து கொடுங்க. ஒழுங்கா செக்கப்புக்கு வாங்க” என்று டாக்டர் பாட்டுக்கு அடுக்கி கொண்டே போனார்.
அதைக்கேட்ட ப்ரீத்தா அப்படியே கண்களை உருட்டி”அட்டபாவி கிராதகா கல்யாணம் முடிஞ்சு ரெண்டு மாசத்துக்குள்ளயே இவ்ளோ பெரிய விஷயத்தை முடிச்சிருக்கப்பாரு. நீயெல்லாம் எவ்வளவு பெரிய தில்லாலங்கடி” என்றுதான் பார்த்தாள்.
ஆயுஷ் மோகனின் கையை பிடித்து “காங்கிரட்ஸ் மோகன் வாழ்த்துக்கள். கல்யாணம் முடிஞ்ச இரண்டுமாசத்துல இவ்வளவு பெரிய சாதனை பண்ணிருக்கீங்க. கல்யாணம் முடிஞ்சதும் சரியான பாதையில் போயிட்டிருக்கீங்க .இதுதான் வாழ்க்கையில முக்கியமான தருணமும் முக்கியமான விஷயமுமாக இருக்கும். அதைச் சரியா செய்திருக்கீங்க” என்று வாழ்த்தியவன் இப்போது சத்தமாகச் சிரித்தான்.
அதைக்கேட்டதும்தான் ஆனந்த அதிர்ச்சியில் இருந்த மோகன் வெல்கம் சார் என்றவனுக்கு வெட்கம் வரவும் நெளிந்துக் கொண்டே ஒரு சிரிப்பு சிரித்தான்.
அதை பார்த்தது ஆயுஷிற்கு இன்னும் சத்தமாக சிரிப்பு வரவும் வாய்விட்டு ஹாஹாஹா என ஹாஸ்பிட்டல் என்றும் பாராது சிரித்துவிட்டான்.
ஆயுஷிற்கு ரொம்ப ரொம்ப சந்தோஷம்.பிரீத்தா இனி மோகன் இருக்கிற பக்கம் தலைவைச்சிக் கூட படுக்க மாட்டாள். மோகனுக்கும் மித்ராவுக்கு இடையில் நம்ம தங்கையால் வந்த பிரச்சனை இனி தீர்ந்திடும்.அடுத்தும் அவளால் அவர்களுக்குள் பிரச்சனை வரவாய்ப்பேயில்லை.இனி அவங்களுக்குள்ள என் தங்கச்சி மூக்க நுழைக்கமாட்டாள்.என் தங்கை வாழ்க்கையும் நல்லபடியாகத் தப்பித்தது”என்று சுயநலமாக சிந்தித்துக் கொண்டிருந்தான்.
இப்போது ப்ரீத்தா மோகனின் அருகில் வந்தவள் தனது கையை நீட்டி “வாழ்த்துக்கள்! மோகன்சார் வாழ்த்துக்கள்! உங்க கல்யாண வாழ்க்கையின் ஸ்பீடு ரொம்ப ஸ்பீடா இருக்கு.அதுவும் பிடிக்காத பொண்டாட்டிக்கு கல்யாணம் பண்ணி இவ்ளோ ஸ்பீடா குழந்தையைக் குடுத்திருக்கீங்களே ரொம்ப நல்லவரு..நடத்துங்க நடத்துங்க.நீங்க அப்பாவானதுக்கு வாழ்த்துகள் சார்” என்று வாழ்த்தியவளுக்கே சிரிப்பு வந்தது.
அந்த சிரிப்பை தனது வாய்க்குள்ள அடக்கி கொண்டவள் “பையா இனி எதுக்கு நம்ம இங்க இடைஞ்சலா நிக்கணும்?வாங்க நம்ம வீட்டுக்கு போவோம்.டாடீ வேற அங்கிருந்து என்னாச்சோன்னு நம்மள தேடுவாரு. இங்க என்னாச்சு ஏதாச்சின்னும் எந்த பயப்படுவாரு. அவருக்கொரு வாழ்த்தை சொல்லிட்டு நம்ம நம்ம வீட்ட பாக்க போவோம். அவங்க அவங்க வாழ்க்கை பாக்காட்டும்” என்றவள் அங்கிருந்து நகர தொடங்கினாள்.
அங்கிருந்து மட்டுமல்ல மோகனிடமிருந்தும் விலகத் தொடங்கியிருந்தாள்.
அதுவே அவளது வாழ்க்கையின் அடுத்தக்கட்டத்திற்கு போவதற்கு தயாராகிவிட்டாள் என்பதாகத்தான் இருந்தது.
இனி ஆயுஷ் தங்கையின் வாழ்க்கையில் நல்லதொரு முடிவெடுத்து பெரியதொரு வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பான்.
மித்ரா இன்னும் கண் முழிக்கவில்லை என்பதால் அவள் அருகில் போய் உட்கார்ந்த மோகன் மெதுவாக அவளது தாடையப்பிடித்து கொஞ்சினான். மனதளவில் பூரித்த சந்தோஷப்பட்டு கொண்டிருந்தான்.
அந்தநேரம் அருண் போன் பண்ணி “நாங்க பிளைட்ல கிளம்ப போறோம் நீ எங்களை வந்துப் பிக்கப் பண்ணிடு. மித்ரா எப்படி இருக்காள்?% என்று பதட்டத்தில் பேசினான்.
ஐயோ சந்தோஷத்துல இவங்களுக்கு விஷயத்தை சொல்ல மறந்துட்டேனே! என்று நினைத்தவன் உடனே அருணை ருக்குமணியிடம் ஃபோனை கொடுக்க சொல்லி மித்ரா கர்ப்பமாக இருக்கிறார்கள் என்பதை தெரிவித்தான்.
மித்ராவுக்கு ஏதோ ஆகிவிட்டது என்று பயந்து ஓடி வந்தவர்களுக்கு இப்பொழுது சந்தோஷ செய்தியை கேட்டதும் அப்படியே வானத்துக்கும் பூமிக்கும் குதிக்காத குறையாக ருக்குமணி சந்தோஷத்தில் சிரித்தவாறு பிளைட்டில் உட்கார்ந்திருந்தார்.
தனத்துக்கு ரொம்ப சந்தோசம். எங்கே மகள் வாழாமல் வந்துவிடுவாளோ என்று பயந்ததவருக்கு அவள் கர்ப்பமாக இருக்கிற செய்தியைக் கேட்டதும் வயிற்றில் பாலை வார்த்ததுபோன்றிருந்தது.
தனது கணவன் சங்கரனே அவளுக்கு மகனாக பிறக்க வேண்டுமென்று திருப்பதி ஏழுமலை சாமிக்கு வேண்டுதலும் வைத்து நிம்மதியாக கண்களை மூடி உட்கார்ந்து இருந்தார்.
நித்ராவும் படிப்பையும் முடித்துவிட்டதால் அவளையும் கையோடு கூட்டிக் கொண்டு வந்திருந்தனர்.
மித்ரா கிட்டத்தட்ட நல்ல மயக்கத்தில் இருந்தவளுக்கு டிரிப்ஸ் போட்டிருந்ததால் மூன்றுமணி நேரம் கழித்துதான் கண்முழித்தாள்.
அதுவரைக்கும் சாப்பிடாமல் அவளது அருகிலே தலை சாய்த்து படுத்திருந்த மோகனைக் கண்டதும் அவனையே அமைதியாக பார்த்து இருந்தாள்.
எவ்வளவு நேரம் அப்படியே தலை சாய்த்து பார்த்திருந்தான் என்று தெரியாது மோகனுக்கு ஏதோ உள்ளுணர்வு உணர்த்தவும் கண்ணைத் திறந்து அப்படியே சாய்ந்து படுத்திருந்தவாறே பார்த்தான்.
அங்கே மித்ரா கண் முழித்து அவனையே கூர்மையாக பார்த்துக் கொண்டிருந்ததை கண்டவன் சட்டென்று தலைத்தூக்கி உட்கார்ந்தான்.
“ஹேய் எப்போ முழிச்ச.என்னை எழுப்பிருக்கலாமே?எப்படி இருக்கு இப்போ பரவாயில்லையா?”என்று கேட்டு அவளது கன்னத்தில் கைவைத்தான்.
ஷ்ஷ்ஷ் என்று மெல்லிதாக வலியில் முணங்கியவளின் கன்னத்தை இப்போதுதான் பார்த்தான்.அவன் அடித்ததில் லேசாகச் சிவந்திருந்தது.
அவன் அடித்ததும் வலியில் தடவி அதன் வீக்கத்தைத் தடுத்திருந்தாள்.ஆனாலும் லேசாக வீக்கத்தோடு கன்றியிருந்தது.
அச்சோ நடந்த களேபரத்தில் இதை மறந்துட்டனே என்று வாய்விட்டே சொன்னவன் “சாரிடி என்ன நடந்ததுன்னு தெரியாமல் உன்னை அடிச்சிட்டேன்” என்று கன்னத்தைத் தடவி முத்தம் வைத்தான்.
அவ்வளவுதான் மித்ராவுக்கு வந்த கோபத்தில் ஓங்கி சப்புன்னு அவனை அடித்து விட்டாள்.
“நான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லி இருக்கேன் உங்களுக்கு சுயமாக சிந்திக்க. தெரியல நல்லது கெட்டதும் சிந்திக்க தெரியல. உங்கள பத்தி மட்டும் தான் யோசிச்சிட்டு இருக்கீங்கன்னும் எத்தனை தடவை சொல்லிருப்பேன். நீங்க ஒரு தத்தின்னு.அதை இன்னிக்கு நீங்க நிரூபிச்சிட்டீங்க எல்லார் முன்னாடியும் என்னை அடிச்சி அத நிருபிச்சிட்டியே. கொஞ்சமாவது மண்டையில மசாலா இருந்துச்சா? அவ கூட நான் எதுக்கு சண்டை போட போறேன்? அவளை எதுக்கு அடிச்சேன்னு யோசிக்கவே மாட்டீங்களா? உங்க பொண்டாட்டியை இன்னொருத்தி அடிக்க வர்றா.அதெல்லாம் கண்டுக்கலை. ஆனால் நான் அவளை அடிச்சவுடனே வரிந்துக் கட்டிட்டு வந்தீங்கல்ல. அந்த பிரீத்தாவுக்கு போய் முத்தம் கொடுங்க” என்று கோபத்தில் ஆத்திரத்தில் கத்தினாள்.
மோகன் அவள் அடிப்பாள் என்று கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள் அடித்ததும் கோபம் வந்து திருப்பி அடிக்கக் கையோங்கியவன் அவள் பேசியதும் அப்படியே கையைக் கீழே போட்டுவிட்டு ஒன்றுமே சொல்லாது எழுந்துப் போய்விட்டான்.
அதற்குப்பிறகு அவளை டிஸ்சார்ஜ் செய்து வெளியே கூட்டிட்டு வர்றவரைக்குமே இருவருமே பேசிக்கொள்ளவில்லை.
வெளியே வந்ததும் அவள் காரில் ஏறி உட்கார்ந்தாள்.அப்போதுதான்” ஊர்ல இருந்து உன்னைப்பார்க்க எல்லாரும் வந்திருக்காங்க.அருண் வர்றதுனால தெரிஞ்ச டிரைவரை ஏற்பாடு பண்ணி கூட்டிட்டு வர்ற அனுப்பியிருக்கேன்.எப்படியும் ஒரு இரண்டுவாரமாவது நம்ம வீட்டுல தங்கிட்டுத்தான் போவாங்க”என்று தன் மனைவியிடம் தகவலைச் சொன்னான்.
அவளோ எதுக்கு இந்த தேவையில்லாத ஆணி என்ற ரீதியில் அவனைப் பார்த்தாள்.
“உன்னைக் கடத்திட்டாங்கன்னதும் பதற்றத்தில் அருணுக்கு போன் பண்ணிச் சொன்னேன்.எல்லோரும் கிளம்பி பிளைட்டில் ஏறப்போற நேரத்துலதான் நீ கர்ப்பம்னு டாக்டர் வந்துச் சொன்னாங்க.அதையும் சந்தோசத்துல அம்மாகிட்ட சொல்லிட்டேன்.அதனால் ஒரேடியாக உன்னைப் பார்த்துட்டுத்தான் போவோம்னு உங்கம்மா தங்கச்சின்னு மொத்தமா வர்றாங்க”
“கர்ப்பமா?யாரு நானா?”
“உனக்கே தெரியாதா என்ன?நர்ஸ் உன்கிட்ட சொல்லலையா?”
“உங்க மூஞ்சு டாக்டர் உங்கக்கிட்டதானே சொல்லிருக்காரு. அப்ப நீங்கதானே என்கிட்ட சொல்லணும். அவ சொல்லலையா இவ சொல்லலையான்னு கேட்கிறீங்க. நானே மயக்கத்துலதானே இருந்தேன். எனக்கெப்படித் தெரியும்?”
“அடிங்க மூஞ்சி கீஞ்சின்னு சொன்னா பல்லைக் கழட்டிடுவேன். ஐயோ பாவம் நம்ம பொண்டாட்டிய மயக்கத்துல இருந்து தெளிஞ்சிருக்காளே அவ அடிச்சா அடி வாங்கிப்போம்னு ஒரு நேரம் நின்னு கொடுத்தேன். அதுக்காக நீ இப்பயெல்லாம் பேசறையும் திட்டிகிட்டிருக்கிறதையும் கேட்டிட்டிருக்க முடியாது. ஒழுங்கா மரியாதையா பேசு”என்று சத்தமிட்டான்.
அதைக்கேட்டதும் கொஞ்சம் பயத்தில் தள்ளி உட்கார்ந்தவள் அவனைப் பார்த்து முறைத்துவிட்டு முணுமுணுத்தாள்.
“என்ன முணுமுணுப்பு அங்க?”
“பிரீயட்ஸ் கணக்குப்போட்டேன்” என்று முடித்துக்கொண்டாள்.
அவளது கணக்கும் உண்மையைச் சொல்லவும் தனது வயிற்றில் கைவைத்தவள் அப்படியே கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருந்தாள்.
கார் வீடுவந்து சேரும்வரைக்கும் கண்ணைத் திறக்கவில்லை.கார் நின்றதும் அவனைத் திரும்பியே பார்க்காது வேகவேகமாக இறங்கி நடந்து லிப்ட் ஏறி வீடுவந்துச் சேர்ந்தாள்.
அவள் உள்ளே வந்ததும் மோகன் தனது குடும்பத்தோடு பட்டாளமாக பின்னாடியே வந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
அதன்பின் இருவருக்கும் தனிமை என்பதே கிடைக்கவில்லை.
மோகன்தான் அவளைப் பார்த்து பார்த்து ஏங்கி ஏங்கி பேச முடியாது தவித்துப்போனான். ஆனால் மித்ராவும் இந்த தனிமையும் இந்த இடைவெளியும் அவளுக்கு தேவையான ஒன்றாக உணர்ந்து அப்படியே தனத்தோடு ஒட்டிக்கொண்டே இருக்க ஆரம்பித்தாள்.
ருக்குமணிக்கோ மகன் வாழ்க்கையை வாழத்தொடங்கி அடுத்து வாரிசையும் பெற்றுக்கொள்ளப் போகிறான் என்ற சந்தோசத்துலயே இருவரையும் உற்றுக் கவனிக்கத் தவறிவிட்டார்.
மித்ரா தனது மனதிற்குள் ஒரேடியாக மோகனிடமிருத்து விலகியிருக்க வேண்டும் என்று எண்ணத்தோடு தான் இருக்கிறாள் என்பதே மோகனுக்குத் தெரியாது.
அவள் நானும் ஊருக்கு போகிறேன் என்று சொல்லும் வரைக்கும் மோகன் அதை கண்டுக்கொள்ளவேயில்லை. அதன்பின்தான் தன்னைப் பிரிய நினைத்திருக்கிறாள் என்று உணர்ந்து அப்படியே மித்ராவையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் தன்னிடமிருந்து மொத்தமாக விலகிச்செல்கிறாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதும் நம்பாதும் பார்த்திருந்தவனுக்கு அவள்மேல் அளவில்லாத கோபம் வந்தது.
அதை தனது மௌனத்தால் அவளுக்கு காண்பிக்கத் தொடங்கினான்!