என் நெஞ்சிலாடும் களபமே-31

களபம்-31
ருக்குமணி வந்ததுமே மருமகளை முத்தம்கொடுத்துக் கொஞ்சியே டயர்டாக்கிவிட்டார்.
என் மகனோட வாழ்க்கை எப்படியோ போயிடும்னு நினைக்கும்போதெல்லம் கண்ணீர் வடிக்காத நாளே கிடையாது.
நான் வேண்டாத கடவுளே கிடையாது. அந்தக் கடவுள் தான் கருணை காண்பிச்சு என் தம்பி மகளையே என் மகனுக்கு மனைவியாக குடுத்திருக்காரு. அந்த ஏழுமலை வெங்கடேசனுக்கு தான் நன்றி சொல்லணும் என்ற புலம்பி தள்ளினார்.
தனத்துக்கும் தன் மகள் நல்லாதான் வாழ்ந்துக்கொண்டிருக்கிறாள் என்ற நிம்மதி வந்தது.அடுத்து நித்ராவின் வாழ்க்கை நல்லதாக அமையும் என்றும் நம்பினார்.இதைப்பார்க்கத்தான் தனது கணவர் சங்கரன் இல்லையே என்று ஒரு ஏக்கம் வந்தது.
அவருதான் மகள் நல்லா வாழணும்னு பார்த்துப் பார்த்துப் படிக்கவைத்தார்.ஆனால் அவள் நன்றாக வாழ்வதைப் பார்க்க குடுத்து வைக்காது போய் சேர்ந்துவிட்டார் என்றுதான் வருத்தமாக இருந்தது.
அருண் சுமியும் இங்கு வந்ததற்கு டெல்லியை நல்ல சுற்றி பாப்போம் என்று மூன்று நாள் சுற்றிப்பார்த்துவிட்டு ஊருக்குக் கிளம்பிவிட்டனர்.
முதல்நாள் மித்ரா உட்பட எல்லோரும் ஹாலிலே படுத்து கதைப்பேசிக்கொண்டே தூங்கிவிட்டனர்.
மித்ராவுக்கு மோகன் மீது இன்னுமே கோபம் வருத்தம் என்று இருந்ததால் அவர்கள் இருவரும் தங்கள் தனிமையில் பொய் பேசிக்கொள்ள வேண்டும் பழகிக்கொள்ள வேண்டும் என்ற எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அந்த மூன்று நாட்களும் தானாகவே நகர்ந்தது.
மோகன் அடுத்த நாளே தனது ஆஃபீஸிற்கு சென்றுவிட்டான். அங்கு பிரீத்தா வேலைக்கு வரவில்லை.இனி ஆபிஸிற்கு வரவும் மாட்டாள். இந்த தகவல் கிடைத்ததும் கொஞ்சம் மனதுக்குள் நிம்மதியை ஊணர்ந்தான்.
அதை மித்ராவிடம் சொல்லி அவளையும் ஆபிஸிற்க் வரவைக்கலாம் என்று நினைத்தான். அவளிடம் பேசவேண்டும் என்று முயன்றுதான் பார்த்தான்.ஆனால் அவளிடம் தனியாகப் பேச வாய்ப்பு கிடைக்கவேயில்லை.
ஊப்ஸ் என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டிருக்கும்போதுதான் தனம் மெதுவாக மித்ராவிடம்”மித்து உன் ஆபிஸ்லயே உன் தங்கச்சிக்கும் வேலை வாங்கிக்குடேன்.அவளும் சிவில்தானே படிச்சிருக்கா.நீ இருக்கதுனால எனக்கும் பயமிருக்காது.நானும் அத்தையும் அங்க தனியாக இருத்துப்போம். நித்ராவுக்கும் கல்யாணம் ஆகிடுச்சுன்னா நிம்மதியா இருப்பேன்”என்று தனது ஆதங்கத்தை கொட்டினார்.
அதற்கு மித்ரா என்ன பதில் சொல்லுவாள் என்று மோகன் பார்த்திருக்க”ம்மாஆ நான் இனி வேலைக்குப் போகப் போறதில்லைம்மா. உன்கூடவே வந்து பிரசவம் வரைக்கும் இருக்கப்போறேன். அப்புறம் குழந்தை வந்துட்டா நான் வேலைக்கு எப்படிப் போகமுடியும். அதனால நித்ராவை சென்னையில வேலைத் தேடச்சொல்லுமா அதுதான் அவளுக்கும் நல்லது.அவளுக்கு வரனும் அங்கதானே பார்ப்ப அப்போ அங்க வேலைசெய்தால்தான் சரியாக இருக்கும்”என்று அழகாக சமாளித்தாள்.
மோகன் தனது கோபத்தைப் பல்லைக் கடித்துக்கொண்டு காண்பிக்கமுடியாது அவளை முறைத்துப் பார்த்தான்.
இருடி என்கிட்ட எப்படியும் மாட்டாமலா போவ அப்போ பார்த்துக்கிறேன் என்று எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாதிருந்தான்.
இரவு அவன் தனது அறையிலும் மித்ரா இங்கே தங்களோடு சோபாவிலும் படுத்திருப்பதை முதன்முறையாக கவனித்த ருக்குணிக்கு இப்போதுதான் மண்டைக்குள் மணியடித்தது.
இந்த இரண்டுங்களும் எதுக்கோ சண்டைப்போட்டு சுத்துதுங்க போல.நம்ம இருக்கிறதுனால் இதுங்களுக்கும் பேசாமலிக்க வசதியாகப்போச்சு என்று நினைத்தவர் இருவரது பிணக்கையும் கண்டுபிடித்துவிட்டார்.
இந்த மருமகளை வைச்சிக்கிட்டு ஊறுகாய்கூட போடமுடியாது போல.அவனை முந்தானையில் முடிஞ்சு வைன்னு புத்திசொன்னால் எங்க கேட்டுக்கிறா என்று மெதுவாக அவர்களைத் தினமும் கவனிக்க ஆரம்பித்தார்.
அவர்கள் சண்டை மட்டும் போட்டுக்கொள்ளவில்லை.. வேறு ஏதோ பிரச்சனை இருக்கிறது என்பதையே அப்பொழுதுதான் கண்டுப்பிடித்தார். மெதுவாக மித்ராவை கூப்பிட்டு என்ன பிரச்சனை உங்க இரண்டு பேருக்குள்ள என்று கேட்டார்.
ஒரு பிரச்சனையும் இல்லத்தை என்று குடும்ப இஸ்த்திரியாக பதில்சொல்லிவிட்டுப் போய்விட்டாள்.
மோகனை அழைத்துக்கேட்டதுக்கு அவனுமே “ஒன்னுமில்லம்மா நீயா ஏதாவது கற்பனைப் பண்ணிக்காத” என்று எரிந்துவிழுந்துவிட்டு போய்விட்டான்.
இது சரிப்பட்டு வராது என்று நினைத்தவர் அன்று இரவே சோபாவில் படுக்கவந்த மித்ராவை அழைத்தார்.
“மித்ரா நீயே வயித்துல குழந்தையோடு இருக்கிறவ. அதெப்பபடி தினமும் இந்த சோபாவுல படுக்கிற? உள்ள கட்டில் மோகன்கூட படுத்துக்க வேண்டியதுதானே. நாங்களும் வயசானக்கட்டைங்க இங்க தனியா படுத்திருக்கோம். உன் தங்கச்சி கல்யாணம் ஆகாத பொண்ணு அதனால எங்ககூட படுத்திருக்கா. நீ எப்படி இங்கு வந்து படுக்கலாம்?”என்று விளக்கமாகக் கேள்வி கேட்டார்.
அதை பார்த்த தனம் அப்பொழுதுதான் யோசித்தார் மகள் பாசத்தில் மகளைத் தன்னோடு படுத்துக்கொள்ளட்டும் தன்னோடு இருக்கட்டும் என்று நினைத்து விட்டனே!மருமகனைப் பத்தி நினைக்கவேயில்லையே என்று தவறினைப் புரிந்துக்கொண்டவர் மித்ராவைத் திரும்பிப் பார்த்து “மித்ரா நீ மாப்பிள்ளை கூட சேர்ந்து உள்ள போய் படு” என்று சத்தம்போட்டார்.
மித்ரா ருக்குமணியை முறைத்துப் பார்த்தவள் போட்டுக் குடுத்திட்டீங்களே அத்தை என்று எழுந்து உள்ளே சென்றாள்.
அங்கே இவள் வரமாட்டாள் என்று நினைத்த மோகன் ஹாயாக சிகரெட்டை கையில் வைத்துக் ஊதிக்கொண்டே கிளாஸில் நல்ல சரக்கை ஊத்திவைத்திருந்தான்.
அதைப்பார்த்ததும் அவளுக்கு வாந்தி வர ஓடிப்போய் வாந்தியெடுத்தாள்.
தனம் எழுந்துக் கதவைத் தட்டப்போக ருக்குமணி திட்டிவிட்டுவிட்டார்.
“நீ எல்லாம் என் தம்பிகூட குடும்பம் நடத்தி இரண்டு பிள்ளை பெத்தியோ? இரண்டு பொம்பளை பிள்ளையை பெத்தவன்னு வெளியே சொல்லிக்காத. உனக்குக் கொஞ்சமாவது அறிவு இருக்கா? இந்த நேரத்துல அவளைக் கட்டினவன்தான் கூட இருந்து பாத்துக்கணும்.அவ புருஷன் கூடத்தானே இருக்கான் அவன் பார்த்துப்பான்.நீ போய் தொந்தவு பண்ணாத” என தம்பி பொண்டாட்டி என்றுக்கூடப் பார்க்காது திட்டிவிட்டார்.
“ஐயோ! அண்ணி என்ன இப்படி திட்டுறீங்க?” என்று தனமே அதிர்ந்துவிட்டார்.
“இங்க பாரு நாளைக்கு நீயும் நானும் ஊருக்கு கிளம்புறோம். நித்ராவுக்கு அவன் வேலை ஏதாவது வாங்கிக் கொடுக்கிறதா இருந்தால் மட்டும் அவளை இங்க இருக்க சொல்லு. இல்லைன்னா அவளை நம்ம கூட பேக் பண்ணிட்டு போயிடுவோம். அவளை எதுக்கு இதை விட்டுட்டு போறேன்னா மித்ரா நம்ம கிட்ட சொல்லாத விஷயங்கள் எல்லாம் நித்ரா கிட்ட சொல்லுவா அதற்காகத்தான் சரியா. என்ன நாளைக்கு பார்த்து டிக்கெட் போட்டு ஊருக்கு கிளம்பி விடுவோம். அப்புறம்தான் அதுக இரண்டும் சரியா வரும்” என்று அவர்களுக்கு இடையில் இருக்கிற பிரச்சனைகளைப் பட்டும் படாமலும் தனத்திடம் சொன்னார்.
தனத்துக்கும் இப்போ அண்ணி சொல்வது சரியென்று படவும் ஊருக்குப்போக ரெடியாகிவிட்டார்.
மித்ரா வாந்தியெடுக்கவும் கையில் இருந்த சிகரெட்டை அணைத்துத் தூரப்போட்டவன் அவளருகில் போய் முதுகைத் தடவிவிட்டான்.
“ச்ச்சீ கையை எடுங்க போங்க அந்தப்பக்கம்.எனக்கு உங்க சிகரெட் நாத்தம்தான் குடலைப் பிரட்டிட்டு வாந்தி வரைவைக்குது” என்று கோபத்தில் கத்தினாள்.
அவளது இந்தக்குணம் வித்தியாசமாக இருக்கவும் போய் வாயைக் கழுவிட்டு பெப்பர்மிண்ட் போட்டு வந்தான். அவளோ சுருண்டுப் படுத்துக்கொண்டாள்.
அவளருகில் படுத்தவன் “எதுக்குடி இப்போ எரிந்துவிழுற? எனக்கும் நீ அடிச்சதுல உன் மேல கோவம் இருக்கு. அதுக்காக உன் மேல எறிஞ்சா விழறேன்.நான் என்ன என் கோபத்தை உன்கிட்ட காட்டுறேனா? இல்லல.நான் பொறுமையாதானே போறேன்ன இப்ப நீ மட்டும் எதுக்கு என்கிட்ட எறிஞ்சு விழற. என்ன வாய்ப்புக் கிடைத்ததும் பழி வாங்குறியா”என்று கோபத்தில் கேட்டான்.
அவனது கையைத்தட்டிவிட்டு பதில் பேசாது திரும்பிப் படுத்தவளின் மறுபக்கம்போய் அவளைப்பிடித்து தூக்கி உட்காரவைத்து தோளில் கைப்போட்டு மீண்டும் படுக்காதுப் பிடித்துக்கொண்டான்.
“என்னை விடுங்கத்தான் உங்கப்பக்கத்துல இருக்க எனக்குப் பிடிக்கலை.நான் உங்களை வெறுக்கிறேன். நான் எங்கம்மாவோடு ஊருக்குப்போறேன். என் குழந்தையை நான் பெத்துக்கிறேன். எனக்குப் படிப்பு இருக்கு நான் வேலை செய்து என் குழந்தை வளர்த்திடுவேன். இப்போ நம்ம பிரிந்திருப்போம். நித்ராவோட கல்யாணம் முடிஞ்சதும் உடனே விவாகரத்துக்கு அப்ளை பண்ணி சட்டப்படி பிரிந்து விடலாம். நீங்க உங்க விருப்பபடி அந்த பிரீத்தாவையே கல்யாணம் பண்ணிக்கங்க. அதுக்கு நான் எந்த தடையும் சொல்லமாட்டேன்.அதுக்கு வேணும்னா என்.ஓ.சி தர்றேன். இல்லைன்னா என்னைக் கொன்னுடுங்க.அவளோடு வாழுங்க”என்று சீரியஸ்ஸாகப் பேசிக்கொண்டிருந்தாள்.
அதைக்கேட்டவன் சத்தமாகச் சிரித்தான்.ஆனால் முன்புபோல அந்தச் சிரிப்பில் சந்தோசமில்லை என்று அவனது கண்களே சொன்னது.
அவன் வேதனையில் சிரிக்கிறான் என்பது புரிந்து”அத்தான் சிரிக்காதிங்க ப்ளீஸ் நிறுத்துங்க”என்று கெஞ்சினாள்.
“வாடி என் மாமன் மகளே. நான் எனக்கு உன்னோட வாழ்வதற்கு கொஞ்சம் கால அவகாசம் கேட்டேன் அப்போ ஒருத்தரும் கொடுக்கல. நானே எல்லா பிரச்சனைகளிருந்து மீண்டு வந்து உன்கூட வாழ ஆரம்பிச்சதுக்கு அப்புறம் இப்போ நீ எனக்கு விடுதலை தர்றியா. பிரீத்தாக்கூடபோய் வாழு அவக்கூட போய் வாழு,இவக்கூடப்போய் வாழுன்னு எனக்கு நல்லதுன்னு செய்யுறியா? இல்ல உனக்கு என் கூட வாழ்ந்து அலுத்தப் போச்சுங்கிறதுக்காக பிரியணும்னு நினைக்கிறியா?” என்று வார்த்தைகளை விஷம் தடவி கேட்டான்.
“அத்தாஆஆன் தேவையில்லாம பேசாதிங்க. உங்களுக்குத்தான் என் கூட வாழ்ந்த வாழ்க்கை அலுத்தப்போச்சு.அதுதான் அத்தனை பேர் முன்னாடியும் அந்த பிரீத்தாவுக்காக என்னை அடிச்சீங்க அப்பவே நான் பாதி செத்து போயிட்டே.ன் இதுக்கு மேல நான் வாழ்ந்தா என்ன செத்தா என்ன. வயித்துல குழந்தைன்னு ஒன்னு இல்லாமல் இருந்திருந்தால் நான் அப்பவே செத்துப் போயிருப்பேன்” என்று கதறி அழுதவள் கைகளால் தனது முகத்தை மூடிக்கொண்டாள்.
அவள் செத்து போயிடுவேன் என்று சொல்லும்போது ஒரு மாதிரி வலியை மனதிற்குள் உணர்ந்தவன் அவளது கையை பிடித்துக் கொண்டு தனது நெஞ்சில் வைத்தான்.
அதற்கு பிறகு அவனுக்குக் கொஞ்ச நேரத்திற்கு வார்த்தைகளே வரவில்லை ! தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு நிதானமாக அவளது கண்ணீரை துடைத்துவிட்டான்.
“அந்த நேரத்துல என்ன நடந்தது என்று தெரியாமல் நான் வந்து உன்னை அடிச்சது தப்பு தான் அத்தனை பேரும் முன்னாடி நீ நடந்து கொண்டதற்காக அடித்தேன்
பிரீத்தா என்னதான் பேசியிருந்தாலும் அவக்கிட்ட நீ எதுக்கு எதிர்த்து சண்டைப்போட்ட. என்னை கூப்பிட்டிருந்திருக்கலாமே? இல்லைன்னா அமைதியாக இருந்து பெரிய சார்க்கிட்ட சொல்லிருக்கலாமே. அதை எதுவுமே நீ செய்யலையே பிரச்சனைகளை பெருசாக்கி வச்சிருந்த அதுக்காகத்தான் அடிச்சேன். இல்லாம ப்ரீத்தாவை நீ அடிச்சதுக்காக எல்லாம் நான் அடிக்கல புரியுதா? என்ன தான் பேசினாலும் அந்த கம்பெனியோட ஓனர் அவ. நம்ம ஒரு வேலை செய்ற இடத்துல இருக்கிறோம் நம் அந்த இடத்தில நிதானமாகத்தான் இருந்தாகணும். அதுதான் நம்ம பக்கம் உள்ள நியாயமா இருக்கும் புரியுதா?”
அவளோ இன்னும் கோபத்தில்தான் இருந்தாள்.அதனால் அவனது கண்ணைப் பார்க்காமல் வேறெங்கோ பார்த்தாள்.
உடனே அவளது முகத்தைத் திருப்பி அவளது கண்களைப் பார்த்தவன்” இந்தக் கண்ணுல எனக்கான உண்மையான காதலைப் பார்த்தேன்.அதனால் மட்டும்தான் உன்னோடு வாழ ஆரம்பித்தேன். மத்தபடி கூட இருக்காளே வாழத்தொடங்குவோம்னுலாம் இல்லை புரியுதா. உன்னை அந்த ஆபிஸ்க்கு வேலைக்கு வர சொன்னதுக்கான முதல் காரணம் நீ என் கூட இருக்கும்போது என்னோட மனசு வேற எங்கே திரும்பாது என்கிற காரணத்தினால் மட்டும்தான். பிரீத்தாவுக்கு நீயும் நானும் வாழ்கிறோம் என்று தெரிய வைக்கணும்ங்கிறதுக்காக மட்டும்தான். மத்தபடி ஒண்ணா அங்க அடிமை வேலை செய்து வைக்கிறதுக்காக இல்லை.உன் சம்பளத்துல நான் வாழனும் என்பதற்காக எல்லாம் இல்ல. இப்போ ப்ரீத்தாவுக்கு எல்லாம் புரிஞ்சிருக்கும் நீ எனக்கு எவ்வளவு முக்கியம்னு. அதனால் கண்டிப்பா இனி உன் பிரச்சனைக்கும் என் பிரச்சனைக்கு வரமாட்டாள் புரியுதா?”
அதைக்கேட்டவள் நம்பாது அவனைப் பார்த்தாள்.
“நீ நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதுதான் உண்மை. என் மனசு முழுக்க இப்ப நீ மட்டும் தான் நிறைந்திருக்க.மித்ரா என் பொண்டாட்டி மட்டும்தான் நிறைஞ்சிருக்கா.உன்னை அடிச்சதுக்கு நான் இப்போ மன்னிப்புக் கேட்டுக்கிறேன். மன்னிசிடு. உனக்கு இந்த வார்த்தையில் எப்போ நம்பிக்கை வருதோ அப்போ என் கூட பேசு.வாழ்றதுக்கு வா” என்றவன் அவளது அனுமதியில்லாமலே உதட்டைக் கடித்து வலிக்க வலிக்க முத்தம் வைத்து விலகிப் படுத்துக் கொண்டான்.