என் நெஞ்சிலாடும் களபமே-7

களபம்-7
சென்னை…
மித்ரா ஒன்றுமே பேசாது அப்படியே சங்கரனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
இதற்குமேல் மகளிடம் நேரடியாகச் சொல்லித்தான் ஆகவேண்டும் என்று முடிவெடுத்தவர் “மித்ரா இங்க பாரு நாளைக்கு உன்னை காலைல பொண்ணு பார்க்க வராங்க. துபாய்ல இருக்கான் நல்லா சம்பளம் கல்யாணம் முடிஞ்சது உன்னை அங்க கூட்டிட்டு போயிடுவான். உனக்கும் அங்கயே வேலை வாங்கி தந்திருவான். இரண்டு பேரும் அங்கேயே வேலை பாருங்க, சம்பாதிங்க வாழ்க்கையை நல்ல வாழுங்க. உன்னை அந்த மோகனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்க எனக்கு விருப்பம் கிடையாது. சாதாரண எம்.காம் முடிச்சுட்டு அக்கவுண்டன்ட் வேலைப் பார்க்கிறவர்களால் எவ்வளவு சம்பாதித்து விட முடியும்?அதனால் இப்போ பெரியண்ணன் கொண்டு வந்த இந்த சம்பந்தத்தையும் முடிக்கலாம்னு எல்லாம் முடிவு பண்ணிட்டேன்.அக்காகிட்டயும் பேசிட்டு வந்துட்டேன். நீ லீவு போட்டுட்டு வீட்டுல இரு.பொண்ணுப் பார்க்க வர்றாங்கள்ல”என்று கொஞ்சம் நல்ல வரன் பார்த்திருக்கிறேன் என்கின்ற பெருமையோடு மகளிடம் விசயத்தைச் சொன்னார்.
அதைக் கேட்டவள் எதுவுமே பேசாது அங்கிருந்து விலகி செல்ல அதில் பயந்தவர் “அய்யய்யோ இன்னும் ஒரு விவரமும் தெரியவில்லை” என்று மீண்டுமாக அவளது முன்புபோய் நின்றார்.
“என்னப்பா?”என்று கொஞ்சம் சலிப்பான குரலில் கேட்டாள்.
“நாளைக்கு உன்னைப் பொண்ணுப் பார்க்க வர்றாங்க சீக்கிரம் கல்யாணம் வைக்கணும்னு பேசிட்டு இருக்காங்க. நீ என்னடான்னா எதுவுமே நடக்காதது போல அந்த பக்கமா விலகி போறியே!. எனக்கு பதில் சொல்லிட்டு போ மித்ரா” என்று தகப்பனாக பரிதவித்தவாறே அவளிடம் கேட்டார்.
“என்னப்பா பதில் சொல்லணும் நீங்க என்கிட்ட கேள்வியா கேட்டீங்க பதில் சொல்றதுக்கு. நீங்க முடிவு பண்ணி நாளைக்கு பொண்ணு பாக்க வர்றாங்க சொன்னீங்க.அதான் சரின்னு அமைதியா போயிட்டிருக்கேன். இதுல நான் உங்களுக்கு என்ன பதில் சொல்ல முடியும்?”என்று எந்தவிதமான ஆர்வமும் இல்லாமல் கேட்டாள்.
“என்ன நீ உனக்கு கல்யாணம்னு நான் சொல்லிட்டு இருக்கேன் நீ எதுவுமே பேசாம போறேன்னு சொல்லுற! என்ன பதில் சொல்லணும்னு கேக்குற? நீ என்ன மாதிரியான மரியாதை எனக்கு கொடுக்கிற? என்று எதையோ பேச நினைத்து எதையோ கேட்டு வைத்தார்.
“அப்பா உங்களுக்கு மரியாதை கொடுக்கும்போது நானே சொல்லிவிடுறேன் அப்போ வாங்க.இப்போ போய் வேறவேலை இருந்தால் பாருங்க’
“என்னது வேற வேலை இருந்தா பாருங்கன்னு என்னையவே சொல்லுறியா? நீ உன் மனசுல என்ன நினைச்சிட்டிருக்க? அந்த ஓடிப்போன பரதேசி நாய் மோகனை நினைச்சுட்டு இருக்கியா? அவன்தான் காதல் தோல்வில ஓடிப்போயிட்டானே! நீ இப்பவும் அவனதான் நினைச்சுட்டு இருக்கியா? அவன் ஓடிப்போய் ரெண்டு வருஷம் ஆகிருச்சு. அவன் இருக்கானா? செத்தானா? இல்ல எங்கையாவது சாமியாரா போய்ட்டானா?என்று அவன் அம்மா எங்க அக்காவுக்கே தெரியாது. அவனுக்காக நீ காத்துகிட்டு இருப்பியா?அவன் அப்படியே திரும்பி வந்தாலும் உன்னைத்தான் கல்யாணம் பண்ணிப்பான்னு என்ன நிச்சயம் இருக்கு? ஏற்கனவே உன்னை பிடிக்கல வேணாம்னு சொன்னவன்தானே?”என்று அப்படியே மொத்தமாக பழியைத் தூக்கி மோகன் மீது போட்டுவிட்டார்.
“அப்பா அத்தான் அப்பத்திலிருந்தே என்னைக் கல்யாணம் பண்ணிக்கஸமாட்டேன்னுதான் சொன்னாரு. நீங்களும் அத்தையும்தான் பிடிவாதம் பிடிச்சீங்க.என்கிட்டயும் பேசி அத்தானையே கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கச் சொன்னீங்க.இப்போவந்து அவர்மேல பழியைப் போடாதிங்க.அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு மனசுல அவரை நினைச்சிட்டேன். இப்போ அவரு ஓடிப்போயிட்டாரு அவருகூட கல்யாணம் வேண்டாம்னு அதுஇதுன்னு சொன்னா எப்படி ஏத்துக்குறது. நானும் மனுஷிதானே. உங்க இஷ்டத்துக்கு மனசை மாத்திக்க முடியாதுப்பா”என்று பிடிவாதமாக தனது முடிவைச் சொன்னாள்.
“அவன் திரும்பி வருவானா?அப்படியே திரும்பி வந்தாலும் உன்னைக் கல்யாணம் பண்ணிப்பானா?அப்படி கல்யாணம் பண்ணிக்கலைன்னா என்ன பண்ணுவ? இது எல்லாத்தையும் விட அவன் உயிரோட இருக்கானா அப்படியே இருந்தா என்ன வேலை பார்க்கிறான்? எங்க இருக்கிறான்ன் எதுவும் தெரியாது இல்லாத ஒருத்தனுக்கு உன்னை எப்படி கல்யாணம் பண்ணி கொடுக்க முடியும்?நீ எப்படி நல்ல வாழ்வா? கையில இருக்கிற களாக்காயை விட்டுட்டு, மரத்துல இருக்க பலாக்காயை நினைக்காதே.அது நல்லதுக்கு இல்ல”
“அத்தான் வந்தா என்னையே கட்டிக்க சொல்லுவாங்களா அத்தை.அதுமட்டும் எனக்குத் தெரிஞ்சா போதும்.நான் இன்னும் எத்தனை நாளைக்கு வேணும்னாலும் காத்திருப்பேன்”
“ஆமா நீ காத்திரு.உன்கூட சேர்ந்து உன் தங்கச்சியும் சேர்ந்துக் கல்யாணம் முடியாமல் காத்திருப்பா. நான் அப்படியே கல்லறையிலே போய் காத்திருக்கேன். என்தலையெழுத்து இப்படித்தான் நடக்கணும்னு இருக்குப்போல” என்று நெஞ்சிலடித்துக்கொண்டு போய் உட்கார்ந்தார்.
“ஐயோ என்னங்க இப்படி பேசுறீங்க. அவள் என்ன சின்ன புள்ளையா நீங்க என்ன பேசுறீங்கன்னு புரியாம இருக்குறதுக்கு?அதுக்காக கல்லறைல போயி காத்திருக்கேன்னு இப்படியெல்லாமா பேசுவாங்க?” என்றவர் பயந்துபோய் தனது தாலியை எடுத்து கண்ணுலயே ஒத்திக்கொண்டவர் சங்கரன் அருகில் போய் உட்கார்ந்து கையை பிடித்துக் கொண்டார்.
முதல்ல மோகனுக்கு உன்னைக் கல்யாணம் பண்ணி கொடுக்கணும்னு ஆசைப்பட்டதுக்குக் காரணம் அவனுக்கு வீடு இருக்கு, சொத்து இருக்கு கொஞ்ச நிலம் இருக்குன்னுதான். அதுவுமில்லாமல் மோகன் நல்ல வேலையில இருக்கான்கிற காரணமும்கூட உண்டு.எல்லாம் இருக்குன்னுதான் என் மகளை அவனுக்குக் கட்டிக் கொடுக்கச் சம்மதிச்சேன். அதுவும் இல்லாமல் அக்கா மகனுக்கே மகளையும் கட்டிக் கொடுத்துட்டா எந்த பிக்கல் பிடுங்களும் இல்லாமல் நிம்மதியா இருப்பான்னு நான் ஆசப்பட்டேன்தான்.அப்போ நம்ம மகளுக்கு இவ்வளவு நல்ல வரன்கள் வரலையே. நம்மகிட்டயும் காசு பணம் நகைன்னு ரொம்ப கிடையாது. இருக்கிறதை வைச்சுதான் கட்டி கொடுக்கணும்னு நிலை. இப்போ நல்ல சம்பந்தம் வருது, போட்டது போடுங்க புள்ள நல்லா படிச்சிருக்காளான்னு கேக்குறாங்க. அப்போ இப்படியான ஒரு நல்ல வரன் வரும்போது கப்புன்னு பிடிச்சு கட்டி கொடுத்துட்டா அவ வாழ்க்கை நல்லாயிருக்கமேன்னு பார்த்தால் அதுக்கு அவ என்னென்னமோ பேசுறா பாருடி.முதல்ல அவக்கிட்ட பேசிப் புரியவை.நாளைக்குக் கொண்டு வர்ற வரன் நான் ஏற்பாடு பண்ணினதில்ல.எங்க அண்ணன் ஏற்பாடு செய்தது.அதனால் தட்டிலாம் கழிக்க முடியாது. அவளை லீவு போட்டுட்டு சும்மா வந்து நிக்கச்சொல்லு மத்ததை அப்புறமாகப் பார்த்துக்கலாம்”
இப்பொழுது தனத்துக்குமே கோவம் வந்துவிட்டது.
“ஏன்டி நீ என்ன அறிவு கெட்டவளா? அதுதான் உங்க அப்பா இவ்வளவு தூரம் படிச்சு படிச்சு சொல்றாருல்ல உன் வாழ்க்கைக்காகதானே இவ்வளவு தூரம் பாடா படுறாரு. அதுல இந்த வரன் வேற உங்க பெரியப்பா ஏற்பாடு பண்ணினாங்களாம். அதுயெல்லாம் நம்ம வேண்டாம்னுலாம் சொல்ல முடியாது.அவங்க வந்துப் பார்த்துட்டுப் போகட்டும். அதுக்கப்புறம் என்ன ஏதுன்னுப் பேசிக்கலாம். இப்போ அப்பாவும் மகளும் எதையும் பேசி பிரச்சனை உண்டு பண்ணாமல் இருங்க” என்று கட்டக்கடைசியாக இருவரையும் திட்டிவிட்டுதான் வேகமாக எழுத்து கிட்டனுக்குள் சென்றார். அவசர அவசரமாக கணவருக்குக் காப்பிப்போட்டு எடுத்துவந்து அவர் கையில் கொடுத்து அவரை சமாதனப் படுத்திக் கொண்டிருந்தார்.
மித்ரா எதுவுமே பேசாமல் தனக்கு என்னவந்தது நீங்க என்னவும் பண்ணுங்க என நினைத்துக்கொண்டுப் படுத்துக் கொண்டாள். இப்போது இருக்கும் மனநிலையில் அவளால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.
‘அப்பாவும் பாவம்தான் இரண்டு பெண் பிள்ளைகளை பெற்றவர். இரண்டையும நல்லபடியாக கட்டிக்கொடுத்திடணும்னு நினைக்கிறாரு அது இல்ல தப்பில்லதான். ஆனால் இதுக்கு முன்னாடி அவர் செய்தது தப்பு தானே!அத்தானை கட்டிக்கோ கட்டிக்கோன்னு சொல்லிச் சொல்லி நம்மளை டார்ச்சர் பண்ணினாரு, என் மனசுலையும் மோகன் அத்தான் மேலே காதலையும் வரவைச்சாரு. இப்ப வந்து அது சரி இல்ல,இதுசரியில்லன்னுட்டு. அத்தான் காணாம போயிட்டாருன்னா நான் என்ன பண்றது ? இந்த அத்தானுக்கும் என்னாச்சுன்னு தெரியல கொஞ்சமாவது அறிவோட நடந்திருக்கலாம்” என்று அவங்க அப்பாவை திட்டியதோடு அவங்க அத்தானையும் சேர்த்துத் திட்டினாள்.
மோகனுக்கு மித்ராவுக்கும வயசு வித்தியாசம் இருந்தாலும் அத்தை மகனல்லவா! அவளது சிறுவதிலிருந்தே பார்த்துப் பார்த்து வளர்ந்தது
இருவரும் பேசிக் கொள்வதில்லை என்றாலும் மித்ராவுக்கு அவன்மேல் ஒரு பிடித்தம் இருக்கத்தானே செய்யும்!
அது அவளது மனதில் ஆழமாக பதிந்திருந்தது.ஆனால் மோகனுக்கு அப்படி எந்த விருப்பமும் இல்லை என்பத் அவன் ராதாவைக் காதலிக்கிறான் எனத் தெரியவரும்போது அதிர்ந்தாள்.
ஆனாலும் மோகன் மீது அவளுக்கு சின்னவயதில் வந்த விருப்பம் இப்பொழுதும் அந்த விருப்பம் இருக்கிறது.
மோகன் சொல்லாமல் கொள்ளாமல் ஓடிப் போகாமல் இருந்திருந்தால் இதற்குள் ருக்குமணி எப்படியாவது மோகனுக்கும் மித்ராக்கும் கல்யாணத்தை முடித்து வைத்திருப்பார்.
ஆனால் அவன்தான் எங்கே இருக்கிறேன் என்று தெரியவில்லையே! இப்போ என்ன செய்யட்டும்?என்று தலையை பிடித்துக் கொண்டிருந்தவளுக்கு புதிதாக ஒரு ஐடியா வந்தது.
அருண் அண்ணனுக்கு கண்டிப்பாக அத்தான் எங்கே இருக்காரு?எப்படி இருக்காரு?எனக் கண்டிப்பா தெரியும்.
நம்மபோய் அருண் அண்ணாவைப் பார்த்துப பேசுவோம் என்று நினைத்தவள் படபடவென்று கிளம்பி வெளியே வந்தாள்.
“எங்கடி போற?”என்று தனம் கோபத்ணில் கேட்டார்
“அம்மா வெளிய போயிட்டு வர்றேன்மா”
“இந்த இராத்திரியிலயா?”
யம்மா என்னம்மா அர்த்தராத்திரி போற மாதிரி பேசுற மணி ஏழுதான் ஆகுது. பக்கத்துல இருக்குற நம்ம அண்ணன் வீட்டுக்கு போயிட்டு வரப்போறேன் அவ்வளவுதான்.
எனக்கு மனசு சரியில்ல நடந்திட்டு வர்றேன். அப்படி எல்லாம் எங்கேயும் ஓடி போயிட மாட்டேன் என்றவள் வேகமாக செருப்பைப் போட்டுக்கொண்டு வெளியே இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.
இந்த அம்மா கேட்கிற கேள்வி எல்லாம் கடுப்படிக்குது. இதைக்கேட்டு அப்பா உள்ள இருந்து வந்து போகவேண்டாம்னு புடிச்சி நிறுத்துவதற்காகவே இந்த அம்மா சத்தமா கேள்வி கேப்பாங்க போல!
நம்ம சொந்த அண்ணன் வீட்டுக்கு போறதுக்கு இவ்வளவு கட்டுப்பாடு பண்றாங்க நாளைக்கு பொண்ணு மட்டும் பார்க்க வந்துட்டு போயிட்டாங்கன்னா அவ்வளவுதான்.
வெளியே நிற்கவிட மாட்டாங்க போல என்று மனதிற்குள் திட்டிக்கொண்டே அருண் வீட்டிற்கு சென்றாள்.
அவளைப் பார்த்ததும் சுமிக்கு மனது கஷ்டமாகிவிட்டது.உடனே கோபத்தில் அருணைப் பார்த்தாள்.
“ஏன்டி உங்கம்மாவும் சித்தப்பனும் சேர்ந்து செய்தவேலைக்கு என்னை எதுக்குடி முறைக்கிற?”
“நான் எதுக்கு முறைக்கிறேன்னு உனக்குத் தெரியாதா என்ன? மரியாதைக்கு அவளுக்கு நல்லதா பதில் சொல்லு.இல்லை மவனே உன்னைக் கொன்னுடுவேன் பார்த்துக்க”
“நல்லதான்னா எப்படி?உங்க அண்ணன் வந்து அவக்கழுத்துல தாலிக்கட்டுவான்னா சொல்லமுடியும்?”
“அந்தப் பரதேசி அப்படிச்
சொல்லக்கூடாதுன்னு தான உன்கிட்ட சொல்லி வைத்திருப்பான்னும் எனக்கு தெரியும். நீயும் அவனும் எவ்வளவு பெரிய கூட்டுக்களவாணிங்கன்னும் எனக்குத் தெரியும். நீ எங்க அம்மாவை வேணும்னா ஏமாத்தலாம். ஆனா என்னை ஏமாத்த முடியாது.
உனக்கு அவன் இருக்கிற இடம் தெரியும். அவன் என்ன வேலை பார்க்கிறான் என்றும் தெரியும். எல்லாம் தெரியும்னு எனக்கும் தெரியும். மரியாதையா அதையெல்லாம் சொல்லு.இந்த விசயத்தை நாளைக்கு வரைக்கும் நீட்டி தட்டிக் கழிக்காமல் வர்ற மாப்பிள்ளைக்குத் தலையாட்டி கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு உன் தங்கிச்சிக்கிட்ட சொல்லு.அவ்வளவுதான்”
“போ போ ரொம்பப் பேசாத.அதைத்தான் சொல்லப்போறேன்னு” சொன்னவன் கதவைத்திறந்தான்.
”வா மித்ரா என்ன இந்தப்பக்கம்?”என்று தெரியாததுபோன்று கேட்டான்.
“இல்ல நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அதுதான் வந்து நேரடியாகவே முகம்முகமா கேட்டுடலாம்னு வந்தேன்”
“சொல்லுமா என்னக்கேட்கப்போற”
“நான் என்னகேட்பேன்னு தெரிஞ்சும் இப்படிக் கேட்கறீங்களே அண்ணா?”என்று வேதனை தோய்ந்தக் குரலில் கேட்டாள்.
“ம்ம்ம் சொல்லுமா”
“அத்தான் எங்க இருக்கார்னு உங்களுக்கு தெரியும்தானே அவரிடம் கேட்டு சொல்லுங்களேன். என்னைக் கல்யாணம் பண்ணிக்க முடியுமா? முடியாதா? இல்ல வருவாரா? வரமாட்டாரா?” என்று எந்த முகப்பூச்சும் இல்லாமல் நேரடியாகவே அவனிடம் கேட்டு விட்டாள்.
அவன் அதற்குச்சொன்ன பதிலைக்கேட்டவளுக்கு மனது உடைந்து கண்ணீர் வந்தது.
அதற்குமேல் என்ன பேசவும் கேட்கவும் இருக்கிறது? என்று அங்கு நிற்காமல் நேராக வீடு வந்து சேர்ந்தவளுக்கு வாழ்க்கை எதுக்கு நமக்குப்பிடிச்சதை மட்டும் நம்மக்கிட்ட இருந்து இப்படி கொடூரமா பிடுங்கிக்குது? என்று வேதனைப்பட்டு மனம் நொந்தவளுக்கு அழுகையாக வந்தது.