என் நெஞ்சிலாடும் களபமே-5

களபம்-5
பிரீத்தா டீ போடுவதையே சிறிது நேரம் அசையாது அங்கே நின்றவாறே பார்த்துக் கொண்டிருந்தான்.
அவள் டீ போடும் அழகை தன் மனம் தானாக ரசிக்க ஆரம்பிப்பதை உணர்ந்த சுந்தர் சட்டென்று அங்கிருந்து விலகி ஹாலில் இருந்த குஷனில் வந்து உட்கார்ந்துவிட்டான்.
நான் எதுக்கு அவளை ரசிச்சேன்?என்று ஒரு கணம் திகைத்தவன் தனது மனதை நிலைப்படுத்திக்கொண்டான்.
அதற்குள் அவளும் டீ போட்டு அவனுக்கும் அவளுக்குமாக எடுத்துக்கொண்டு வந்து அவனது கையில் குடுக்கப் போனவள் “நான் வேணும்னா சூடு ஆத்தித்தரட்டுமா?” என்று ரொம்ப பணிவாகவும் அன்பாகவும் கேட்டாள்.
“இவளென்ன இப்படி நம்மக்கிட்ட கீழிறங்குறா? வேண்டாம் மனமே இவளைத் தள்ளி ஒதுக்கு” என்று மீண்டும் மீண்டும் தனக்குத்தானே தனது மனதிடம் சொல்லிக் கொண்டான்.
அதற்குள் அவள் வேறொரு காப்பினை எடுத்து அவன் குடிக்கும் பதமாக ஆத்திக் கையில் குடுத்தாள்.
“இப்போ வலி பரவாயில்லையா? எப்படித் தனியாக மேனேஜ் பண்றீங்க? நான் வேணும்னா ஒரு வேலைக்காரங்களை ஏற்பாடுப் பண்ணித்தரட்டுமா?”என்று அன்பாகக் கேட்டாள்.
அதைக்கேட்ட சுந்தர் கண்கள் இடுங்க அவளைப் பார்த்தான்.
அவளோ சட்டென்று அவனது பார்வையைத் தாங்கமுடியாது தனது இமைகளைத் தாழ்த்திக்கொண்டாள்.
ஹப்பா அப்படியே வொயிட் ஸ்னோவில் செய்த பொம்மை மாதிரி இருந்தவளைப் பார்த்தவனுக்கு ஆச்சர்யமாக இருந்தது.
‘இவளுக்கு எப்படி என் மீது ஒரு ஈர்ப்பு வந்தது? அப்படி நான் ஒன்னும் அழகனில்லை. நல்ல துள்ளும் இளைமையில் இருக்கும் இளைஞனும் இல்லை. இவளுக்கு எனக்கும் பத்து வயசாவது குறையாமல் இருக்கும்.ஊப்ஸ் இதெல்லாம் சரியாவராதுன்னு இந்தப்பொண்ணு எப்போ புரிஞ்சிக்கப் போகுதோன்னு தெரியலை. இவள் மட்டும் என்னைப் பிடிச்சிருக்கென்று சொல்லட்டும் அவ்வளவுதான் அப்புறம் நான் பேசுறதுல என் பக்கமே வரக்கூடாது” என்று நினைத்தவாறே டீயைக் குடிக்கத் தொடங்கினான்.
டீ அவனது நாக்கில் அவ்வளவு நரம்புகளையும் சுண்டியிழுத்து ரசித்துக் குடிக்க வைத்து.மீண்டும் மீண்டும் டீயை ரசித்துக் குடித்துக் கொண்டிருந்தான்.
இதற்குமேல்இங்கிருந்தால் சரிவராது என்று எழுந்து பால்கனிக்குப்போய் அங்கிருந்துக் குடித்துக்கொண்டிருந்தான். அவனருகிலயே உரசியவாறு பிரீத்தா வந்து நின்றாள்.
அவன் ஓரக்கண்ணால் பார்த்தவன் கண்டுக்காது நின்றான்.
“சுந்தர் நீங்க ஏன் இங்க தனியா இருக்கீங்க?”
அந்தக்கேள்வியில் திரும்பி புருவம் உயர்த்தி அவளைப் பார்த்தான்.
“இல்லை நீங்க தனியாகக் கஷ்டப்படுறேங்களேன்னு கேட்டேன். அம்மா அப்பா கூட்டிட்டு வரலாம்ல”
“எனக்கு அப்பா கிடையாது. அம்மா மட்டும்தான் எங்களை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. அப்பா சின்ன வயசுலயே இறந்துட்டாங்க. அம்மாவைக் கூட்டிட்டு வரலாம்தான். அதைவிட பெஸ்ட் என் பொண்டாட்டியைக் கூட்டிட்டு வந்தால் எனக்கு எல்லாத்துக்கும் உதவும்ல”என்று சொல்லிவிட்டு அவளது முகத்தைப் பார்த்தான்.
அந்தப்பதிலை எதிர்பார்க்காதவள் அவனது முகத்தை ஏறிட்டுப் பார்த்தாள்.அவளது கண்களில் அதிர்ச்சியும் அழுகையும் சேர்ந்தே வந்தது.ஆனால் அதை மறைத்து உதடுகள் துடிக்க”என்ன வைஃப்பா?”என்று உதட்டுக்கும் தொண்டைக்கும் வலிக்காதக் குரலில் கேட்டாள்.
“ப்ச்ச் அப்படி பொண்டாட்டியைக் கூட்டிட்டு வரத்தான் ஆசை. ஆனாப் பாருங்க கல்யாணம் பண்ணிக்கத்தான் எனக்குப் பிடிக்கலையே!” என்றவன் அவளைக் காண்டுக்காது திரும்பிக்கொண்டான்.
ஆனால் ஓரக்கண்ணால் நோட்டம்விட்டான். என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.
அவளுக்கு இப்போது உதட்டில் அவளை அறியாது மென் புன்னகை வந்திருந்தது. அந்தப் புன்னைகையில் கண்களும் சேர்ந்துக்கொண்டது.
அதைப்பார்த்தவனுக்கு இவ்வளவு நேரம் இருந்த இதம் மறைந்தது. இது சரியில்லை விளையாட்டாக அவள் மனசில் காதலை விதைத்துவிடக்கூடாது என்று நினைத்தவன்.
அதன்பிறகு அந்தப்பேச்சினை பேச நினைக்கவேயில்லை.அவளும் அதைத் தொடரவில்லை.
டீ குடிச்சு முடிச்சதும் அவனது கையில் இருந்தக் கப்பினை வாங்கியவள் தனது கப்பினையும் சேர்த்துக் கழுவி அதை எடுத்த இடத்திலே வைத்துவிட்டு நளினமாக நடந்துவந்தாள்.
அவளது அந்தக் கத்தைக் கூந்தல் அவளின் நடைக்குத்தக்க அசைந்தாடியது.
காதலிக்காதவனையும் ஆசையாகப் பார்க்கவைக்கும் அழகு அவளோடது.
எந்தவிதமான குறையும் சொல்லமுடியாது திருத்தமான பேரழகி பிரீத்தா!
அவள் தன்னிடம் வருவதை கண்கொட்டாது பார்த்திருந்தான்.
அவனருகில் வந்ததும் “நான் அப்பா அண்ணனுக்குத் தெரியாமல்தான் உங்களைப் பார்க்க வந்தேன். சீக்கிரம் போகணும். கிளம்பட்டுமா?”என்று கேட்டவளுக்கு அங்கிருந்துக் கிளம்பவே மனதில்லை என்பதினை அவளது குரலே சொன்னது.
“ம்ம்ம்”என்று தலையசைத்தான்.
இதுவரைக்கும் இருந்த முரட்டுத்தனம் இப்போது ம்ம்ம் என்று சொல்லும்போது இல்லை.அதை அவளுமே உணர்ந்தாள்.
ஒரு செடியில் ஒரு பூதான் பூக்கும் என்கின்ற காதல் கொள்கையெல்லாம் அவனிடம் கிடையாது. ஆனால் செய்த செயலின் வினையால் மனசாட்சி உறுத்தவும் ஊருக்குப்போகாது தனக்குத்தனே மனசுக்குள் இறுகிக்கொண்டான்.
அந்த இறுக்கம் பிரீத்தா அருகில் வரும் பொழுது குறைவதை அவனுமே உணர்ந்துதான் இருந்தான் ஆனாலும் அதை வெளி காட்டிக் கொள்ளாது மனதிற்கு கடிவாளம் போட்டு தன்னைத்தானே கட்டுப்படுத்திக் கொண்டான்.
“நான் நான் கிளம்புறேன்.ஏதாவது தேவையென்றால் கூப்பிடுங்க” என்றவள் போகாது அவனையே பார்த்திருந்தாள்.
“என்னாச்சு எதையாவது மறந்து வைச்சிட்டீங்களா பிரீத்தா?”
ம்ம்ம் என்று தையாட்டியவள் அதன்பின் இல்லையென்று வேகமாகத் தலையாட்டினாள்.
“ஏய் உன் கையில கத்தி கிழிச்சிருந்துதே அது சரியாகிட்டுதா? இன்னும் வலி இருக்குதா?” என்று அவளைக் கேட்காமலே அவரது கையைப் பிடித்துப் பார்த்தான்.
நீங்க வாங்க போங்க என்று பேசிக்கொண்டிருந்தவன் இப்பொழுதும் நீ வா போ என்று ஒருமைக்கு தாவியிருந்தான். அதிலிருந்ததே அவனது மனதினை அவள் அறிந்து கொண்டாள் ஆனால் அதை உணராத சுந்தர் அவளது கையைப் பிடித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.
“இந்த காயத்துக்காகதானே மயங்கி விழுந்த? இங்கப் பார்த்தியா என் கையில எவ்ளோ ஆழமா குத்து பாட்டு இருக்குன்னு. இதுக்கே நாங்க எவ்வளவு ஸ்ட்ராங்கா நின்னோம். இதே மாதிரி நீயும் ஸ்ட்ராங்காக நிக்கணும். அதுதான் சில இடங்களில் நாம் விழாமல் இருக்கத் தாங்கிப்பிடிக்கும்” என்றவன் அவளைப் பார்த்து பெரியதாக புன்னகைத்தான்.
அவளும் அதைக்கேட்டு சிரித்துவிட்டாள்.
“நான் என் காயத்தைப் பார்த்து மயங்கிவிழலை சுந்தர்.நான் உங்கக் கையிலிருந்து வந்த இரத்தத்தைப் பார்த்ததில் மயங்கிட்டேன்.ஒரு நொடி உலகமே சுத்திருச்சு” என்றாள்.
அதில் மறைமுகமாக அவனுக்காகத்தான் மயங்கினேன். அவன் தனக்கு ரொம்ப முக்கியமானவன்.உயிரானவன் என்பதைச் சொல்லாமல் சொன்னாள்.
என்னதான் சுந்தர் மனசை பாறையாக்கி வைத்திருந்தாலும் சில நேசங்கள் சிறிதாக அசைத்துப் பார்க்கத்தான் செய்கிறது.
அவனுக்கு பிரீத்தாவைக் காதலிக்கவேண்டும் என்ற எண்ணம் வராவிட்டாலும் அவளைப் பிடித்திருந்தது. நல்லபெண் இத்தனை வசதி வாய்ப்புகள் இருந்தும் தனக்காக இறங்கிவந்திருக்கிறாள் .எந்தவித ஈகோவும் இல்லை பணத்திமிரும் இல்லை.ஆனால் இவளது அண்ணங்காரன் ஆயூஷ்கிட்ட இந்த இரண்டுமே இருக்காது.இவள் எதுக்கு என்னைப் பார்க்க வந்திருக்கிறாள்?ஒருவேளை காதலைச் சொல்லவந்து சொல்லமுடியாமல் தவிக்கிறாளோ?
‘நல்லாயிருப்ப ஆத்தா அப்படிக் காதலைக் கீதலைச்
சொல்லித் தொலைச்சுடாதே! நான்வேற இப்ப இருக்க மனநிலையில ஆமான்னு தலையாட்டிட்டம்னா அது சரிபடாது. வாழ்க்கையில அடுத்த பிரச்சனையை நானே இழுத்து விட்ட மாதிரி ஆயிரும். தயவு செய்து இங்கிருந்து போயிரு ஆத்தா’ என்பது போன்றே அவனது பார்வையும் பேச்சும் இருந்தது.
பிரீத்தா மெதுவாக அவனருகில் இன்னும் நெருங்கி நின்றாள்.அதை உணர்ந்தாலும் பட்டென்று “பிரீத்தா வீட்டுல தேடுவாங்கள்ல. சொல்லிட்டு வந்தியா?”என் வீட்டுக்குப்போ என்று சொல்லாமல் சொன்னான்.
அந்த பிரீத்தா என்ற அழைப்பில் அவனருகில் நெருக்கமாக நின்றவள் திடுக்கிட்டு அவனோடு ஒட்டிக்கொண்டாள்.
‘விளங்கிச்சு! நானே தள்ளிப்போவான்னு கூப்பிட்டா இவா இடிச்சிக்கிட்டு வந்து நிக்கிறா. இத்தனை நாளும் உன் ஆபிஸ்லதானடி சேரைப்போட்டு உட்கார்ந்திருந்தேன்.இப்போ என்னடி புதுசா பார்க்கிறமாதிரியே பார்க்கிற! ஊப்ஸ் முடிலடா முடிலென்று தனது நெஞ்சில் கைவைத்துக் கோப்பட்டுக் கத்திடாதடா சுந்தரா! வேற வேலைத் தேடவேண்டியது வந்திரும்.அதுக்கு நீ இப்போ தயாராக இருக்கியான்னு பார்த்திக்க.அதைவிட அந்தபிள்ளை மனசை நோகடிச்சமாதிரி ஆகிடும்!’என்று மனதிற்குள் பேசிக்கொண்டிருந்தான்.
அவன் அமைதியாக நிற்கவும் சுந்தர் என்று இந்திக்கலந்து ஒரு மார்க்கமாக அந்தப்பெயரை உச்சரித்து அழைத்தாள்.
அந்த அழைப்பில் ம்ம்ம் என்று அவளது முகத்தைக் குனிந்துப் பார்த்தான்.
அவ்வளவுதான் சட்டென்று எவ்வி அவனது கன்னத்தில் ஒரு முத்தத்தை வைத்துவிட்டு வேகமாக சிட்டாக வாசலுக்குப் போனவள்”ஹேய் மதராஸி உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு”என்றவள் பறந்துவிட்டாள்.
அவள் தனது காதலைச் சொல்லுவாள் நம்ம திட்டிவிடணும் இல்லையா ஏதாவது சொல்லி வேண்டாம்னு மறுக்கலாம்னு பார்த்தா இவ என்னடான்னா என்னை ரொம்பப் பிடிக்கும்னு முத்தம் கொடுத்துட்டு ஓடிட்டா! முதல் முத்தம் நல்லாதான் இருக்கு.பட் வேண்டாம் என்று முடிவோடு அவள் போவதையே பால்கனியில் இருந்தே எட்டிப் பார்த்தான்.
ஒரு துள்ளல் நடையோடு காரில் ஏறிப்போனவளைப் பார்த்தவனுக்கு வாழ்க்கையில் ஒன்றுமே புரியலை!
நான் ஒருத்தியைத் தேடித்தேடிப்போனேன் அந்தக்கதையே வேற மாதிரி முடிஞ்சிடுச்சு. இப்போ ஒருத்தி என்னைத் தேடிவந்து பட்டாம்பூச்சி மாதிரி தொட்டுச்செல்கிறாள் இந்தக்கதை எப்படி முடியுமோ?
ஆனா ஒன்னு என்னைப் பார்த்தா பாவமா இல்லையா கடவுளே! இந்த குப்தா சாமி சத்தியமா எனக்குப் பொண்ணெல்லாம் தரமாட்டான். இந்த கற்பனைக் கதையில வேணும்னா நல்லவனா இருக்கிறவனுக்குப் பொண்ணுக் கொடுப்பாங்க அப்புறம் குடும்பமா ஒன்னா இருப்பாங்க.இதெல்லாம் ரியல் லைப்ல நடக்காதுன்னு தெளிவா தெரியும்.ஆனாலும் இந்த விதி அவளை நம்மக்கிட்ட நெருங்க வைக்குதே!ஸ்ஸோப்பா முடியல என்று தன் தலையை குலுக்கிக் கொண்டான்.
இரண்டுவருஷமா பொண்ணுங்களே வேண்டாம்னு இருக்கிற எனக்கு இவ முத்தம் கொடுத்துட்டுப் போறாளே! என்கிட்ட இருந்து என்ன எதிர்பார்க்கிறா? அழகு,பணம்,ஸ்டேட்டஸ் எல்லமே அவக்கிட்ட மிதமிஞ்சி இருக்கு நான் ஒரு சாதாரணமான வேலைக்காரன். அப்படி என்கிட்ட என்ன எதிர்பார்த்திட முடியும்? இதெல்லாம் தெரிஞ்சும் இவ நெருங்கி வர்றாளே!இன்னும் அறியாமல் இருக்கிறாள் சின்னபொண்ணு!என்று நினைத்தவன் தனது கவனத்தை திசைத்திருப்ப நினைத்து டீ.வி பார்க்கத் தொடங்கினான்.
அங்கேயும் அதே காதல் கலந்தத் திரைக்காவியங்கள் ஓடிக்கொண்டிருக்க இதுசரிவராது என்று எழுந்து மீண்டும் பால்கனிக்கு வந்தான்.
அதே அவள் முத்தமிட்டுச் சென்ற நினைவுகள்தான்.
ச்சை மனுஷனே குளிர்ல ஆடிட்டிருக்கான். இதுல இந்த முத்தமும் காதலும்தான் முக்கியம். ஏற்கனவே காதல் வந்து நான் சீரழிஞ்சது உனக்குப் போதாதா கடவுளே!மறுபடியும் மனசுக்குள்ள பட்டாம்பூச்சி பறக்க வைக்கிற.இது சரியில்லை பார்த்துக்கோ என்று புலம்பியவன் எப்போதும்போல தனக்குத் துணையாக இருக்கும் சிகரெட்டையும் பாட்டிலையும் கையில் எடுத்தான்.
இதுதான் நமக்கு பெஸ்ட்டு துணையாக எப்போதும் இருக்கும்டா இதையே தொட்டுக்க கட்டிப்பிடிச்சிக்க என்று புலம்பியவாறே குடித்துவிட்டு நல்ல புகையை ஆத்தோ என்று ஆத்திவிட்டு அரைத்தூக்கமா மயக்கமா என்று தெரியாதநிலையில் தூங்கிக்கொண்டிருந்தான்.
அப்போது ஊரில் இருந்து மீண்டும் போன் வரவும் எடுத்து என்னவென்று கேட்டான்.
அந்தப்பக்கமிருந்துச் சொன்னத் தகவலில் அப்படியே சிரித்தவன் நல்லது. அப்படியே அவக்கிட்ட நான் சொன்னதையே சொல்லிடு. அவங்கப்பன் அவளுக்குக் கல்யாணத்தைப் பண்ணி வைக்கட்டும் அப்போதான் நான் நிம்மதியாக என் வாழ்க்கையை பார்க்கமுடியும்.
என்று சொல்லி முடித்துவிட்டான்.
அதுதான் அவளுக்கு அவன் செய்யும் நன்மை என்று நினைத்திருந்தான்!.