என் நெஞ்சிலாடும் களபமே-4

களபம்-4
டெல்லி…
பிரீத்தா மயங்கவிழவும் சுந்தர் அவளைத் தன் இன்னொரு கையால் தாங்கிப்பிடித்தவன் அப்படியே விழுந்தான்.
சுந்தரின் நெஞ்சோடு பிரீத்தா சேர்ந்து விழுந்திருந்தாள்.
ஆயுஷும் குப்தாவும் அவர்களைத் தூக்கிக்கொண்டுபோய் உடனே ஹாஸ்பிட்டலில் சேர்த்தனர்.
பிரீத்தாவுக்கு எதுவும் பெருசா இல்லை. அந்தக் கத்தி மேலோட்டமாகக் கிழித்ததால் இரத்தம் மட்டுமே வந்திருந்தது.தையல் போடவேண்டிய அவசியமில்லை.
ஆனால் சுந்தருக்கு அப்படியில்லை. கத்தி உள்ளே இறங்கி ஆழமாக எலும்பைத் தொட்டிருந்தது.
அதனால் இரத்தமும் போயிருந்தது.தையலும் போடவேண்டியதிருந்தது.
சுந்தர் நார்மலாகத்தான் இருந்தான். தையல்போடும்போது எல்லாம் பார்த்துக் கொண்டு தான் இருந்தான். அவனது மனோதிடம் அதிகமாயிருந்தது.
பிரீத்தாதான் அந்தச் சின்னக் காயத்தைக்கூட தாங்காது வலியில் ஆர்ப்பாட்டம் செய்துவிட்டாள்.அவள் அழுததைப் பார்த்துதான் சுந்தர் ராம்சிங்கின் கையையே உடைத்திருந்தான்.
அவ்வளவு பெரிய குப்தா குடும்பத்தில் பிறந்த பொண்ணு. எந்த கஷ்டமும் நஷ்டமும் இல்லாது வளர்த்தப்பொண்ணு.இப்படியான அடிதடியெல்லாம் பார்த்து வளராததால் இந்த சின்ன காயத்திற்கும், சுந்தருக்கு இரத்தம் வந்ததையும் பார்த்து மயங்கிவிட்டாள்.
ஹாஸ்பிட்டலில் இருவரையும் சேர்த்துவிட்டு குப்தா குடும்பமே அங்கே வந்து உட்கார்ந்துக் கொண்டனர்.
ராம்சிங்கினை கைது செய்து கொலைமுயற்சி கேஸ்போட்டு உள்ளே தள்ளிவிட்டனர். இனி அவன் ஜாமீனில் வெளியே வந்தால்தான் உண்டு. அதுவரைக்கும் இவர்களுக்குப் பிரச்சனையில்லை.
சுந்தருக்குத் தையல்போட்டு முடிந்ததும் கட்டுப்போட்டு வீட்டுக்குப்போகலாம் என்று சொல்லிவிட்டனர்.
அவன் வீட்டுக்கப்போக ஆயுஷ்தான் எல்லா ஏற்பாட்டையும் செய்தான்.
தனது தங்கையை ராம்சிங்கிடம் இருந்துக் காப்பாற்றியிருக்கிறான் என்பதால் மட்டுமே சுந்தருக்கு எல்லாம் செய்கிறான்.
அவன் சுந்தரிடம் ஒரு முதலாளியாகத்தான் இருக்க விரும்புகிறான். ஆனால் குப்தாவும் பிரீத்தாவும் அப்படியில்லை அவனை ரொம்ப பிடிக்கும் என்பதால் தோழமையோடு பேசுவார்கள்.
சுந்தர் வெளியே வரவும் ஆய்ஷும் வர “பிரீத்தா எப்படி இருக்காங்க? என்று கேட்டான்.
“அவளுக்கு இன்னும் மயக்கம் தெளியலை. காயம் என்னவோ சின்னதுதான் ஆனால் ஏன் மயங்கிட்டான்னு தெரியலை.டாக்டர்ஸ் ஒரு நாள் இருந்துட்டுப் போகச் சொல்லிருக்காங்க”
ஓஓஓ ஓகே என்றவன் காரில் ஏறினானான்.டிரைவரிடம் ஆயுஷ் “டிரைவர் இது அப்பா காரு.சுந்தரை கொண்டுவிட்டுட்டு வந்திடுங்க. நம்ம பேமிலி மெம்பர்ஸை வீட்டுல விடணும்”என்று முதலாளியாகப் பேசி சுந்தரை அனுப்பி வைத்தான்.
சுந்தரும் ஒரு தலையாட்டலோடு வர்றேன் என்று முடித்துக் கொண்டான்.
டிரைவர் வேறு அந்த ஊர்க்காரன் என்பதால் எதுவும் பேசவும் முடியாது என்று யோசித்தவனுக்கு பிரீத்தாவை நினைத்து சிரிப்பு வந்துவிட்டது.
இருந்தக் கை வேதனையிலும் ஹாஹாஹா என்று சத்தமாகச் சிரித்தவனைப் பார்த்து டிரைவர் ஒரு நொடி திரும்பி பார்த்தான்.
அவன் யோசனைகள் அப்படியே கண்களைச் சுருக்கிப்பார்த்தான். ஏனென்றால் இன்னாள் வரைக்கும் சுந்தர் யாரிடமும் சிரித்துப் பேசியதும் இல்லை,யாரை பார்த்துச் சிரித்ததும் இல்லை.
டிரைவரே நம்பாது பார்க்காவும் அவ்வளவுதான் உடனே சுந்தர் கப்சிப்பென்று தனது வாயை மூடிக்கொண்டான்.
ஆனாலும் அவனது மண்டைக்குள் பிரீத்தாவை நினைத்து இன்னும் சிரிப்பு ஓடியது.
ஆழமாகக் குத்துவாங்கி இரத்தம் பீறிட்டு வந்தது எனக்கு.அவளைத் தாங்கி அவன் கிட்டயிருந்து காப்பத்தினிதே சுந்தர்தான்.அவன் கழுத்துல கத்திவைச்சதும் பயந்தவள் அவளது கையில் லேசாக கீறினதும் அழுத அழுகை சத்தம் அவன்கிட்ட இருந்துத் தப்பிக்கணும் நினைச்சுத் துள்ளியது என்று அலப்பறையே பண்ணிவிட்டாள்.
ராம்சிங்கின் நோக்கம் அவளை வைத்து என்னை மிரட்டிக் கையெழுத்து வாங்கணும். பணத்தை குப்தா கண்ஸ்ட்ரக்ஷ்ன்ல இருந்து எப்படியாவது வாங்கிடணும் இதுதான் முழு எண்ணமாக இருந்தது.
அவன் ஆட்களைக் கூட்டிட்டு வந்து தகராறு செய்ததற்கான காரணம் இதுதான்.
ஆனால் எல்லாம் மொத்தமாக மாறி இப்போது இரத்க்காயத்தோடு வீட்டுக்குப்போறேன். ராம்சிங் ஜெயிலுக்குப்போறான்.
இதுல பிரீத்தா இடையில வந்து ராம்சிங் கதையே முடிஞ்சிது. இனி ஜென்மத்துக்கும் அவனால் இங்கிருந்து பணம் வாங்க முடியாது. மூளையில்லாத முட்டாள் ராம்சிங்கே என்று நினைத்துக்கொண்டான்.
அதே முட்டாள் என்ற வார்த்தை தன்னைப்பார்த்தும் சொல்லலாம் என்று நினைத்தான். சொல்லலாம் என்ன சொல்லலாம் நான் முட்டாளேதான்! என்று நினைத்தவன் கண்ணை மூடிக்கொண்டான்.
அவக்கிட்டப்போய் நான் செய்ததுக்காக மன்னிப்புக் கேட்கணும். அது எப்போன்னுதான் தெரியலை?அவளது வாழ்க்கையாவது நல்லாயிருக்கட்டும் ! என்று மனதார வேண்டிக்கொண்டான்.
இந்த இந்த ஞானம் அப்பவே வந்திருந்தால் இப்படி டெல்லிக்கு வந்து கஷ்டப்பட்டிருக்க வேண்டியது வந்திருக்காது! என்ன செய்ய புத்தி இப்போதானே வந்திருக்கு என்று நொந்துக்கொண்டான்.
கார் அப்பார்ட்மெண்ட்க்குள் வந்ததும் டிரைவர் “சார் உங்களை வீட்டுக்குள்ள வரைக்கும் விட்டுட்டு வரச்சொல்லி பெரியசார் சொல்லிருக்காங்க” என்று சுந்தரோடு சேர்ந்து இறங்கினான்.
“இதுவேறையா? நானே நடந்துபோயிடுவனே. லிப்ட்டுத்தான் இருக்குதே!” என்று மறுத்தாலும் டிரைவர் கேட்காது அவன் கூடவே வந்தான்.
“அதுசரி முதலாளி விசுவாசம் வா வா” என்று அவனையும் சேர்த்தே மேலே அழைத்துச் சென்றான்.
சுந்தரை வீட்டுக்குள்ளே விட்டுவிட்டு என்னவெல்லாம் தேவையென்று பார்த்த டிரைவர் அவனுக்கு தேவையான தண்ணீர் முதற்கொண்டு எடுத்து வைத்தவன் அவனிடம் சொல்லாமலே வெளியே சென்றான்.
இவன் வேற என்று நினைத்துக்கொண்டிருக்கும்போது போன் வந்தது.அதை எடுத்துப் பார்த்தான். ஊரிலிருந்துதான் போன் பண்ணுகிறார்கள் என்றதும் அதை அட்டெண்ட் பண்ணனுமா? வேண்டாமா? என்று நினைத்து ஒரு முடிவுக்கு வந்து போனை எடுக்காது இருந்தான்.
அதுவோ ஒரு இரண்டுமூணு முறை ரிங்காகி தானாக கட்டாகியது.
அதற்குள்ளகத் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டதும் யாரென்று எட்டிப் பார்த்தான் டிரைவர்தான் சாப்பாடு பழம் எல்லாம் வாங்கி வந்திருந்தார்.
அதைப்பார்த்தவன் “என்ன பையா இதெல்லாம்?” என்று கேட்டான்.
“இது பெரிய சார் வாங்கி வைக்கச் சொன்னாங்க. தினமும் வந்து உங்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதை வாங்கி வைக்கணும்னு சொல்லி இருக்காரு உங்களை நான் நல்லா பார்த்துக்கணுமாம் தயவுசெய்து நீங்க ஆபீஸ் வர வரைக்கும் உங்களுக்கு எல்லாம் நான்தான் வந்து செய்து தருவேன்” என்று சொன்னவன் கிளம்பிப்போய் விட்டான்.
இவனுங்க வேற ஓவர் அக்கறையில பொங்குறானுங்களே! என்று தலையில் அடித்துக்கொண்டவன் மாத்திரையைப் போட்டுவிட்டுப் படுத்துவிட்டான்.
அவ்வளவுதான் எவ்வளவு நேரம் தூங்கினான் என்றே தெரியாது டோர்பெல் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்துப் பார்த்தான்.
மணி இரவு பத்தென்று காண்பித்தது. இந்த நேரத்துல யாராக இருக்கும் என்று பார்த்தான். டிரைவர்தான் தனது வேலையை முடித்துவிட்டுப் பார்க்க வந்திருந்தான்.
இவன் ஒருத்தன் கடமை, கண்ணியம், கட்டுப்பாடுன்னு வந்து நிக்கிறானே! ஒருத்தன் தூங்கிக்கொண்டு இருப்பானே தொந்தரவு செய்றவன் ஒரு அறிவும் இல்லை என்று முணுமுணுத்தவாறே என்ன! என்று கேட்டான்.
“அது அது பிரீத்தா லடிக்கி கண்ணுமுழிச்சுட்டு. நல்லாயிருக்குதாம். போலீஸ் வந்தா நீங்க எதுவும் பேச வேண்டாமாம். சின்ன சார் பேசிடுவாங்களாம். அப்புறம் சாப்பாடு” என்று வைத்துவிட்டுப் போய்விட்டான்.
ஸ்ஸோப்பா இவனுங்க அக்கறையில் தீயை வைக்க என்று திட்டிக்கொண்டே சாப்பிட்டு முடித்தவன் போனை எடுத்து யாரெல்லாம் கால் பண்ணிருக்காங்க என்று பார்த்தான்.
அதில் முக்கியமாக வந்திருந்த ஒரு நம்பரையே பார்த்திருந்தவன் வேறு வழியின்றி திரும்ப அழைத்தான்.
அந்தப்பக்கம் போனை எடுத்ததும் “இங்க பாரு நான் இங்க நல்லாதான் இருக்கேன். நான் எங்க இருக்குன்னு யாரிடமும் சொல்ல வேண்டாம். அதை சொல்லாத அவ்வளவுதான் திரும்பத் திரும்ப போன் பண்ணி டார்ச்சர் பண்ணத. நான் நல்லா இருக்கேன் எனக்கு எந்த குறையும் இல்லை நீங்க இல்லாமலே நான் நல்லா இருக்கேன் போதுமா” என்றவன் அங்கிருந்து என்ன பதில் வருகிறது என்ன பேசுகிறார்கள் என்பதே கேட்காமலே போனை வைத்துவிட்டான்.
இவ்வளவு கல்நெஞ்சக்காரனாக நான் மாறிட்டேனா? என்று தான் யோசித்தான்.
வாழ்க்கையில் இப்படியும் மாறியிருக்கிறேன் அவ்வளவுதான். விடுவிடு என்று நினைத்துக் கொண்டான்.
அவ்வளவுதான் அவனது கை வலிக்கவும் மாத்திரை போட்டுக் கொண்டு தூங்கிவிட்டான். தினமும் ஹாஸ்பிடல் சென்று ட்ரெஸ்ஸிங் பண்ணிட்டு வர்றதுக்கு டிரைவர் வந்தான் டிரைவர் கூட போயிட்டு டிரைவர் கூடவே வந்ததுனால் வேற யாரையும் பார்க்க வேண்டிய அவசியமில்லை.
அன்றும் அப்படித்தான் ஹாஸ்பிடல் போயிட்டு வந்து டயர்டா வந்தவன் யாராவது ஒரு டீ போட்டு தந்தால் குடிக்கலாமே நல்லாயிருக்குமே! ஆனால் நமக்குத்தான் டீ போட்டு தர்றதுக்கு யாரும் இல்லையே! என்று டீ குடிக்கும் ஆசையை அடக்கிக்கொண்டுப் படுத்திருந்தான்.
அப்போது யாரோ கதவைத் திறந்துக்கொண்டு உள்ளே வருவதைப்பார்த்தான்.
“யாருடா அது? என் வீட்டு ஸ்பேர் கீ போட்டு உள்ள வர்றது? என்று கையில் ஒரு கம்பியை எடுத்துக் கொண்டு இடக்கையால் அடிக்க ரெடியாகி நின்றிருந்தான்.
அங்கே கதவைத்திறந்துக்கொண்டு உள்ளே ஆள் வரவும் கம்பியை ஓங்கி அடிக்கப்போனான்.
அதைப் பார்த்த பிரீத்தா ஆஆஆ ஆஆஆஆ நான் நான் பிரீத்தா என்று கத்தினாள்.
அவளின் முகத்தைப் பார்த்ததுமே சுதாரித்துவிட்டான்.ஆனால் அவள் எங்கே அடித்துவிடுவானோ என்று பயந்துக் கத்தினாள்.
“பச்ச் என்னங்க நீங்க? இப்படியா ஸ்பேர் சாவியைப்போட்டுத் திறந்து வருவீங்க? நல்ல வேலை உங்க முகத்தை பார்த்துட்டு அடிக்காம நிறுத்திட்டேன் இல்லன்னா திருடன்னு நினைச்சு அடிச்சிருந்தால்,யப்பா கொலை கேஸ்ல உள்ள போயிருப்பாங்க. உங்களை யார் இங்க வர சொன்னது?எதுக்காக வந்தீங்க?”என்று கொஞ்சம் கோபத்தைக் காட்டிக்கேட்டான்.
“சாரி சாரி சுந்தர்.நான் நான் நீங்க எப்படி இருக்கீங்கன்னு பார்த்துட்டுப் போக வந்தேன்.ஒருவேளை நீங்க ரெஸ்ட் எடுத்துட்டு இருந்தால் தொந்தரவு பண்ற மாதிரி ஆகிடுமேன்னு கீழ இருக்கும் பில்டிங் சொசைட்டி ஆபீஸ்ல அப்பா குடுத்து வைச்சிருத்தக் சாவியை வாங்கிட்டு வந்தேன்”
“என்னை எதுக்குங்க நீங்க பார்க்க வரணும்? அதுதான் டிரைவர் வந்து என்னை தினமும் ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு வராரு, அவரே சாப்பாடெல்லாம் வாங்கித் தந்திடுறாரு, இதெல்லாம் பண்ணி இருக்கீங்க திரும்ப எதுக்குங்க நீங்க என்னை பார்க்க வரணும்” என்று அவள் வந்ததுப் பிடிக்காது கேட்டான்.
பிரீத்தாவுக்கு அவன் முகத்தில் அடித்தாற்போல எதுக்கு வந்தீங்க? என்று கேட்டதும் முகம்வாடிவிட்டது.
அதனால் கொஞ்சம் திணறியவள் அதில்ல எனக்காக அடிப்பட்டு வந்து இருக்கீங்க..எங்க கம்பெனியில் நடந்த பிரச்சனைக்காகவும் அவங்க எல்லாம் உங்க நேர்மைக்கு குறிவைத்ததுனாலும் தானே இப்படி நடந்துச்சு. அதுவும் இல்லாமல் என்னை நீங்க அந்த கும்பலிலிடமிருந்து காப்பாத்தி இருக்கீங்க. அதுக்காக நன்றி சொல்ல உங்களை பார்க்க வந்தேன்” என்று திக்கித் திணறி ஒரு வழியாக சுந்தரிடம் பேசி முடித்து இருந்தாள்.
அதைக்கேட்டதும் கொஞ்சம் நிதானித்தவன் “வாங்க உள்ள வாங்க” என்று அழைத்துக் கொண்டு உட்கார வைத்தவனுக்கு அவளுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்று தெரியவில்லை நேரடியாக கிச்சனுக்குள் சென்று டீ போடலாம் என்று எடுத்து வைக்க இவள் அவனது பின்னாடியே போய் நின்றாள்.
கொடுங்க சுந்தர் நான் டீ போடுறேன். நீங்க போய் உட்காருங்க. நான் டீ போட்டு எடுத்துட்டு அங்க கொணடுவர்றேன். உங்களுக்கு எதுக்கு சிரமம் நீங்களே இந்தக் கையை வைச்சுட்டு டீ போட்டுக் குடிச்சிருக்க மாட்டீங்க. எனக்காக சிரமப்படவேண்டாம். நானே பார்த்துக்கிறேன்” என்று அவளது வீடுபோல அவன் கையில் இருந்து எல்லாம் வாங்கி படபடவென்று டீ போடும் வேலையை பார்த்தாள்.
இவ பண்றது ஏதோ சரி இல்லையே! எத்தனை நாள் நம்ம பார்வையால தான் தின்னுட்டு இருந்தாள். இப்போ நம்மகிட்ட ரொம்ப நெருங்குகிறாளே! சரி வராதே என்று தனக்குள்ள யோசித்துக் கொண்டிருந்தவன் அவளை எப்படி தன்னிடமிருந்து விலக்கி நிறுத்தலாம் என்று யோசனையோடு அவளைப் பார்த்தவாறு அப்படியே அமர்ந்திருந்தான்.
காதலும் ஆசையும் யாரை எப்போ எப்படி பிடிக்கும்னே தெரியாது. விலக்கிவைத்தாலும் நம்மிடம் விரும்பி வருமே!
இதையெல்லாம் ஒரு காதல் தோல்வியிலிருந்து மீண்டு வந்த சுந்தருக்கு தெரியும்.
அதன்விளைவு தெரிந்ததால்தான் அவளை விலக்கி வைக்க வேண்டும் என்று நினைக்கிறான்!