என் நெஞ்சிலாடும் களபமே-3

களபம்-3
டெல்லி…
சுந்தர் தனது வேலை முடிந்து வெளியே வந்தவன் ஆட்டோ பிடித்து வீடு வந்து சேர்ந்தான்.
அந்த அப்பார்டமெண்ட வீட்டில் தனியாகத்தான் இருக்கிறான். அவனது கம்பெனி கட்டிக்கொடுத்த அப்பார்ட்மெண்டில் கம்பெனிக்கு என்றிருந்த வீட்டைத்தான் அவனுக்குக் கொடுத்திருந்தனர்.
அதனால் வாடகைக் கிடையாது.சம்பளம் நல்ல ஆறிலக்கத்தில் சம்பளம். முன்பென்றால் சாப்பாட்டுச் செலவு குடும்பச்செலவு என்று மொத்தமாக அம்மாவிடம் கொடுத்துவிட்டு தனது தேவைக்கு அம்மாவிடம் திட்டுவாங்கி பேச்சுக்கள் வாங்கி காசை வாங்கிட்டுப்போவான்.
தம்மு தண்ணியென்று எப்போதாவது பயன்படுத்தனும் என்றால் இருக்கவே இருக்கிறார்கள் நண்பர்கள் என்று கிளம்பிப் போய்விடுவான்.
இப்போது அப்படியான நடுத்தரவர்க்கத்தின் வாழ்க்கை இல்லை.நல்ல சம்பளம்.கைநிறைய செலவழிக்க இருக்கிறது.ஆனால் அவனது செலவழிப்பு எல்லாமே தண்ணிக்கும் தம்முக்குமாகப் போகிறது.
மனதில் ஏற்பட்ட வலியெல்லாம் ஆறிவிட்டதுதான்.ஆனால் அதைக்கடந்து வேறு சிந்திக்கவும் வேறு வாழ்க்கைக்குள் போகவும் அவன் விரும்பவில்லை.
இந்தத் தனிமை அவனுக்கு ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது.அப்படியே இருக்கத்தான் விரும்புகிறான்.
இப்போதும் அந்த ஐந்தாவது ப்ளோரில் அவனது வீட்டின் பால்கனியில் நின்றுகொண்டு பீர் பாட்டிலை எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தான்.
அவனது நினைவுகள் இரண்டுவருடம் பின்னோக்கிச் சென்றது.அந்தத் தவறை செய்யாமல் இருந்திருக்கலாம்? அவளை எதுக்குக் கடத்தினேன்? ச்சை அவள்தான் என்னை விரும்பவில்லையே? யாரையோ பழிவாங்க நினைச்சு கடைசியில் உன்னை நீயே பழிவாங்கிட்டியேடா! உன் காதல் பொய்யென்று போயிற்றே! என்று இப்போதும் வருந்தினான்.
அவளிடம் மன்னிப்புக் கேட்க வாழ்க்கை ஒரு வாய்ப்புத் தந்தால் போய் கேட்டிடணும் என்று எத்தனையாவது முறை யோசிக்கிறான் என்று அவனுக்கே தெரியாது யோசித்துக் கொண்டிருந்தான்.
டெல்லியின் பனிக்காலம் அவனை சுடுகிறது.அந்த கட்டிளம் காளையனை வாட்டுகிறது, என்னசெய்ய வந்த ஒரு காதலும் போய் இப்போது காதலும் வேண்டாம் கல்யாணமும் வேண்டாம் ஒரு டேஷூம் வேண்டாம் என்று முடிவெடுத்து இரண்டு வருடமாகிறதே!
இந்த தனிமைத்துயரை அனுபவித்துதான் ஆகணும். வேறுவழியில்லையே!
அவன் இருந்த மனநிலைக்கு அந்த ஒற்றை பீர் போதாது என்று உடல் உணர்த்த அதை முடித்துக்கொண்டு மீண்டுமாக பிரிட்ஜை திறந்து பார்த்தவன் இருந்ததிலேயே அதிக போதை ஏற்றும் ஒரு பிராந்தி பாட்டிலை எடுத்து வந்து அப்படியே ராவாக குடிக்க ஆரம்பித்தான்.
உள்ளே சென்ற பிர் ஏற்படுத்தாத போதையை இப்பொழுது பிராந்தி ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அப்படியே சிறிது நேரம் கண்களை மூடிக்கொண்டு அந்த பால்கனியில் சாய்ந்து உட்கார்ந்திருந்தான்.
அதற்குப் பிறகு குளிர் மிகவும் வாட்டி எடுக்கவும் எழுந்து தனது அறைக்குள் வந்து படுத்தவனுக்கு அடிவயிற்றில் பசி கிள்ளி எடுக்க மீண்டும் எழுந்து கிட்சனுக்கு வந்தவன் என்ன இருக்கு என்று பார்த்தான்.
அவன் வரும்போது வாங்கி வந்த சப்பாத்தியும் மட்டனும் இருக்க ஓவனில் சூடுபண்ணி சாப்பிட்டுவிட்டு நல்லபோதைக் கலந்த தூக்கத்திற்குப் போய்விட்டான்.
காலையில் அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டு எழுந்தவனுக்கு எங்கிருக்கிறோம் என்பதையே மறந்து இன்னும் “காபி போட்டுதரல யம்மா தாயே!காபி சூடா கொண்டுவா தலைவலிக்கு” என்று கத்தினான்.
காபிக்குக் கத்திவிட்டு மீண்டும் படுத்துக்கொண்டான்.அடுத்த அலாரம் எட்டுமணிக்கு அடிக்கவும் அரக்கப்பறக்க எழுந்து உட்கார்ந்தவன் “காபிக்கேட்டு காபியும் ஆளும் வரல” என்று வீட்டு ஞாபகத்தில் எழுந்து சென்றவன் கதவிலயே முட்டிக்கொண்டான்.
அவன் சுவரில் முட்டியதில் வலி உயிர்போகவும் நெற்றியையும் மூக்கையும் தடவியவனுக்கு அப்போதான் போதை நல்லத் தெளிந்து “இது நம்ம டெல்லியில் தனியாகத் தங்கியிருக்கும் வீடுல்ல இது.நம்ம இன்னும் டெல்லியில்தான் இருக்கோமா? கனவுல அம்மாலாம் வந்துச்சே!அப்போ காபிக்கேட்டதெல்லாம் கனவா? இல்லையே நான் கேட்ட ஞாபகம் இருக்கே.ஒருவேளை போதையிலக் கேட்டுட்டனோ?ஊப்ஸ் உனக்கு இன்னைக்கு நாளு சோலி முடிஞ்சுதுடா!”என்று எழுந்து ப்ளாக்டீ போட்டவன் அது சரியில்லை என்று லெமன் டீ மறுபடியும் போட்டுக் குடிச்சதும்தான் கொஞ்சம் ஹேங்க் ஓவர் போனது.டெல்லிக் குளிருக்கு குளிக்கணுமான்னு இருந்துச்சு. ஆனாலும் ஹீட்டர் போட்டுக் குளிச்சுட்டு வேகமாக கிளம்பி ஆட்டோவில் ஏறி ஆபிஸிற்குப் போனான்.
இன்னைக்காவது சர்வீசுக்கு விட்டக் காரை எடுத்துடணும்டா சாமி.இந்த ஆட்டோகாரனுங்களுக்கு கொடுத்து முடியல என்று நொந்துக்கொண்டே ஆபிஸிற்குப்போய் இறங்கினான்.
அவன் வந்து இறங்குவதற்கு முன்பே பிரச்சனைகள் வந்து இறங்கிருந்தது.அதுவும் ராம்சிங் உபயத்தில் சில்லறையாக வந்திருந்தது.
அவன் உள்ளே வரும்போது அங்கே ராம் சிங்கோடு ஒரு கும்பல் வந்து ஆபிஸின் முன்னாடியே கூடி நின்றிருந்தனர்.
அவன் உள்ளே வருவதைப்பார்த்தும் ராம்சிங்கின் கூட வந்தவர்கள் அவனைப்போகவிடாது வழிமறித்தனர்.
“என்னடா பிரச்சனை உனக்கு?”என்று சலிப்போடு நேரடியாக ராம்சிங்கிடம் சுந்தர் கேட்டான்.
“நீதான்டா பிரச்சனை.நான் இங்க உன்கிட்ட அடிவாங்கினது எல்லோருக்கும் தெரிஞ்சு எனக்குத் தரவேண்டிய பணத்தை தரமாட்டுக்காணுங்க.அதுவும் உன் முதலாளி குப்தாதான் எல்லாத்துகிட்டையும் தொழிற்சங்கத்திலும் சொல்லி இருப்பார் போலிருக்கு .இப்போ என் எல்லா பில்லும் பாஸாகாமல் கோடிக்கணக்கில் பணம் நிக்குது .எல்லாம் உன்னால தான்”என்று அவன் மீது பழியைப்போட்டான்.
“என்னாலயா?யோவ் தப்பான பில்லைப் பாஸாக்க சொன்னது நீ.அடிக்க வந்தது நீ.இப்போ பழி என்மேலயா! போயா போய் வேற ஏதாவது பொழைப்பைப் பாரு! நான் என் பொழைப்பைப் பார்க்கப்போகணும்”
“முடியாது நீ குப்தாக்கிட்ட பேசி இந்த விஷயத்தை அப்படியே மறைச்சு டீல் பண்ணிடு.உனக்கு எவ்வளவு பணம் வேணும்னாலும் தர்றேன்.இல்லன்னா என்ன பண்ணுவேன் தெரியும்ல
“போடா டேய் வழியை விடுடா ஆபிஸுக்குள்ள போகணும்”
“டேய் நான் உன்னை சும்மவிடமாட்டேன்னு சொல்லிட்டிருக்கேன்.நான் என்ன பண்ணுவேன்னுதான் கேட்கிறேன் இதுக்கு முன்னாடி இங்க இருந்து ஓடிப்போன மேனேஜர் என்ன ஆனாலும் விசாரிச்சு பாத்தியா?
“நீ என்ன லூசாடா நான் எதுக்குடா இங்க இருந்து போன மேனேஜர் எல்லாம் பத்தி விசாரிக்கணும்? உனக்கு தேவைன்னா விசாரிச்சுக்கோ? எனக்கு இப்போ வழி விடுடா நேரம் ஆகுது லேட் மார்க் விழுந்துச்சுன்னா சேலரி கட் பண்ணிடுவாங்கடா முதலாளி. இதுல எல்லாம் கரெக்டா இருப்பார்டா” என்று சொன்னவன் உள்ளே போக முயற்சித்தான்.
“டேய் நீ நின்னு இந்தப்பிரச்சனையை முடிச்சுட்டுப்போ.இல்லையா உன்னை என்ன பண்ணுவேன்னு தெரியாது” என்று கத்தி மிரட்டின ராம்சிங்கினை அப்படியே இழுத்துப்பிடித்து அவனது கையை மடக்கியவன் அவனது முதுகிற்குப் பின்னாடி வைத்தான்.ராம்சிங்கிற்கு கைவலியெடுக்கவும் அலறித்துடித்தான்.
ஏன்டா நானே நான் உண்டு என் வேலை உண்டுன்னு அமைதியாக போயிட்டிருக்கேன்.என்கிட்ட வந்து இப்படி சவுண்டு விடுறியே அறிவிருக்கா? இல்லை இவனை சும்மா ஒரு தட்டுதட்டி பயமுறத்தலாம்னு வந்தியா?சிங்கத்தைச் சீண்டிட்டியே ராசா உன் சங்கைக் கடிக்குமே சமாளி”என்று அவன் கையை இன்னும் வளைத்தான்.
“ஆஆஆஆஆ சோடோ மேர காத் போகத் தர்த் ஓரே சோடோ”( ஆஆஆ என்னை விடு.என் கை ரொம்ப வலிக்குது.என் கையை விடு”என்று சத்தமிட்டான்.
அதைப்பார்த்ததும் ராம்சிங்கோடு வந்தவர்கள் சுந்தரை அடிக்க கையோங்கிக்கொண்டும் கத்தி, கம்பு, வாள் என்று சுற்றி நின்றனர்.
இதென்னடா வாம்பா போச்சுது? என்று சுந்தர் அவர்களை பார்த்து சிரித்தவாறே எதிர்த்து நின்றிருந்தான்.
இவ்வளவு பெரிய பிரச்சனை நம்ம ஆபிஸ் முன்னாடி நடக்குது என்று எல்லோரும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தனர்.
அப்போது பார்த்து சரியாக உள்ளே வந்த பிரீத்தா சுந்தர் நடுவில் நிற்பதையும் அவனை சுற்றி பயங்கர ஆயுதங்களோடு ராம்சிங்கின் ஆட்களையும் கண்டவள் எதையும் யோசிக்காது “சுந்தர்!!?”என்று அழைத்தவாறே ஓடிவந்தாள்.
அவ்வளவுதான் அதைப்பார்த்த ராம்சிங் உடனே தனது ஆட்களுக்குக் கண்ணைக் காண்பித்து அவளைப் பிடிச்சு வைங்கடா என்று கட்டளையிட்டான்.
சுந்தரோ பிரீத்தா அழைத்ததும் இவளென்ன இப்போ இங்கே ஓடி வர்றா என்று யோசனையோடு திரும்பிப் பார்த்தான்.அவன் பார்க்கவும் ராம்சிங்கின் ஆளொருத்தன் ஓடிப்போய் பிரீத்தாவை பிடித்து இழுத்து தனது கைக்குள் வைத்தவன் அவளது கழுத்தில் கத்தியை வைத்து விட்டான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத சுந்தர் கொஞ்சம் திகைத்து, அதன்பின் சுதாரித்து ராம்சிங்கு தனது கைக்குள்ளயே வைத்திருந்தால் தான் பிரீத்தாவை விடுவான் என்று முன்யோசனையோடு செயல்பட்டு அப்படியே ராம்சிங்கின் மற்றொரு கையையும் வளைத்து பின்னாடி முறுக்கி வைத்து அவனை அங்கும் இங்கும் அசையாது பிடித்து வைத்துக்கொண்டான்.
ராம்சிங்கிடம் “உன் ஆள்கிட்ட பிரீத்தாவை விடச்சொல்லு. உனக்கும் எனக்கும்தானே பிரச்சனை அதைபேசி தீர்த்துக்கலாம்”என்று கொஞ்சம் இறங்கிப்பேசினான்.
“ஹான்! அப்படி வா வழிக்கு.அவளை அப்படியெல்லாம் விட முடியாது.உன் முதலாளி அந்தக் குப்தாவை உடனே இங்கே வரச்சொல்லு.எனக்குத் தரவேண்டிய பணத்தைத் தரச்சொல்லு.இதுக்குமேல உங்க கம்பெனி எனக்கு சிமெண்ட் ஆர்டர் தராது என்பது எனக்கு தெரியும்.அதனால் எனக்கு வரக்கூடிய பணத்தை இப்பவே இங்கயே எனக்கு தர சொல்லனும், அதை என் கையால் வாங்கினால்தான் உன் முதலாளி பொண்ணை என்னாளு விடுவான். அதுவரைக்கும் அவள் என் கஸ்டடியில் தான் இருப்பாள். யார் சொன்னாலும் விடமாட்டேன்.நீங்க போலீஸிற்குப் போனாலும் ஒன்னும் பண்ணமுடியாது.அப்படியே கிழிச்சு நார் நாராக்கி போட்டுட்டுப் போயிடுவேன்”என்று கெத்தாகச் சொன்னவன் ஒருமாதிரியாகச் சிரித்தான்.
அப்போதுதான் அவனுக்கு தான் ஒரு பொண்ணைக் கோபத்தில் கடத்தியதும் இப்படித்தானே நினைச்சிருப்பாங்க என்று நினைத்தவனுக்கு அது அருவருப்பாக இருந்தது.
அதற்குள் “பிரீத்தா விடுறா என்னை? நான் குப்தாவோட பொண்ணுடா.என் மேலயே கைவைக்கிறீங்களா? எங்க மாமாதான்டா இங்க கமிஷனரு. இருங்கடா நேத்தே உங்களைத் தூக்கி உள்ளப் போட்றுக்க வேண்டியது. சுந்தர் சொன்னதுனால்தான் பாவம்னு உடனே விடச்சொன்னோம். ஆனால் இன்னைக்கு என்னோட கழுத்துலயே கத்தி வைச்சிட்டீங்கள்ல சும்மா விடமாட்டேன்டா”என்று எகிறினாள்.
இதெல்லாம் நடந்து கொண்டிருக்கும் போதே அங்கே வேலைப் பார்ப்பவர்கள் உடனே போலீசிற்கு அழைத்து சொல்லிவிட்டனர். அப்பொழுதுதான் நான் ஆயுஷும் குப்தாவும் வீட்டிலிருந்து ஆபிஸிற்கு வந்து கொண்டு இருந்தனர்.
அவர்களுக்குத் தகவல் போனதும் உடனே கமிஷனர் நரேஷ் குப்தாவிற்கு அழைத்து நடவடிக்கை எடுக்கச் சொல்லி புகார் கொடுத்துவிட்டனர்.
ஆனாலும் ராம்சிங் பிரீத்தாவை எதுவும் செய்துவிடுவானோ என்கின்ற பயம் இருந்தது.அதனால் ஆயுஷ் டிரைவரிடம் வண்டியை வேகமாகப் போகச்சொன்னான்.
எவ்வளவு சீக்கிரம் வர முடியுமோ அவ்வளவு சீக்கிரமாக வந்து சேர்ந்தனர் அதற்குள்ளாக ராம்சிங்கினை சுந்தர் மிரட்டியிருக்க அவனோ எகிறிப்பேசினான்.
இதற்குமேல் பொறுக்க முடியாத சுந்தர் ராம்சிங்கின் ஒரு கையை உடைத்துவிட்டான். அவனுக்கு இப்போது மண்டைக்குள் ஓடியதெல்லாம் பிரீத்தாவை எப்படியாவது சேதாரமில்லாது காப்பாத்தணும் என்பதே!
அதனால் ராம்சிங் தனது கை சுந்தரால் உடைக்கப்படும் என்று சிறிதும் யோசிக்காதவேளையில் அவன் கையை உடைத்ததும் ஆஆஆஆஆ என்று அலறித் துடித்தவனைப் பார்த்து அவனது ஆட்கள் பதறி சுந்தரை நெருங்கினார்கள்.
அப்போது பிரீத்தாவை பிடித்திருந்தவன் வேகமாகத் கத்தியை இழுக்க பிரீத்தா அதைத்தடுக்க அது அவளது கையில் பட்டு இரத்தம் வந்துவிட்டது.
பிரீத்தா “அஆஆஆஆ வெட்டிட்டான்” என்று அலறவும் வேறு எதையும் பார்க்காது ராம்சிங்கினை மிதித்து தள்ளிவிட்டு ஓடிவந்தவன் பிரீத்தாவைப் பிடித்திருந்தவனை அடிக்க வந்தான்.
அவனோ பிரீத்தாவை குத்துவதற்கு கையை ஓங்கியிருக்க சுந்தர் ஓடிப்போய் அவனைப் பிடித்திழுத்தான்.
அதில் சுந்தரது தோளிற்குக் கீழே கையில் குத்தி அப்படியே கத்தி இறங்கிவிட்டது.அப்படியிருந்தும் அவனிடமிருந்து பிரீத்தாவை இழுத்து தன்னோடு பிடித்துக் காப்பாத்தியிருந்தான்.
இது நடந்து முடியவும் போலீஸும் குப்தாவும் வந்திறங்கினர். போலீஸைக் கண்டதும் எல்லோரும் ஓட ராம்சிங்கயும் தன்னைக் குத்தினவனையும் சுந்தர் ஒன்றாகப்பிடித்து வைத்து போலீஸிடம் ஒப்படைத்தான்.
அவனது கையில் கத்தி ஆழமாக இறங்கி அப்படியே இரத்தம் வடிந்துக்கொண்டிருக்க அதையும் தாங்கிக்கொண்டிருந்தான். அதையெல்லாம் பார்த்த பிரீத்தா ஓடிவந்து அந்தக் கத்தியை எடுக்கவும் அவள் மீதே இரத்தம் தெறித்தது.
ஏற்கனவே பயத்தில் இருந்தவள் இரத்தம் அவள் மீதே தெறித்துவிழுவதைப் பார்த்து அப்படியே மயங்கி சுந்தரின் நெஞ்சிலே சாய்ந்துவிட்டாள்!!!