என் நெஞ்சிலாடும் களபமே-9

என் நெஞ்சிலாடும் களபமே-9

களபம்-9

மித்ரா சீனு நிச்சயம் நல்லபடியாக முடிந்து எல்லோரும் விருந்து முடித்துவிட்டுக் கிளம்பினார்கள்.

சீனுவுக்கு மித்ராவைவிட்டுப் போகவே மனசில்லை.அவங்க அப்பாவும் அம்மாவும்தான் அடேய் வாடா.இன்னும் இருபதுநாள்ல கல்யாணம். அப்புறம் அவ உன்கூடவேதான் இருப்பா”என்று சத்தம்போட்டுத்தான் அவனது கையைப்பிடித்து இழுத்துக் கொண்டுப் போனார்கள்.

சங்கரனுக்கும் தனத்துக்கும் பெருமைத் தாங்கல.நம்ம மகளை மாப்பிள்ளைக்கு ரொம்ப பிடிச்சுப்போச்சுது. இனி அவ வாழ்க்கை நல்லாயிருக்கும் என்று பெருமையாக நினைத்துக் கொண்டே திரும்பினார்கள்.

அங்கே ருக்குமணி அவர்களையே கோபத்தில் பார்த்துக் கொண்டிருந்தார்.

“இந்த அக்காவுக்கு பொறாமையை பாரேன்” என்று மென்குரலில் தனத்திடம் காதைக் கடித்தார் சங்கரன்.

“என்ன சங்கரா உன் மகளுக்கு ரொம்ப நல்லவரன் பார்த்திருக்கன்னு பூரிப்புல இருக்க போல. ரொம்ப சந்தோசம் மாப்பிள்ளையைப் பத்தி நல்ல விசாரிச்சியா என்ன? உன் பொண்ணைப் பார்த்த ஒரே நாளில் நிச்சயம் வைச்சுக் காலில் தொபக்கடீர்னு விழுந்துட்டானே. அப்படியே பொண்ணுக் கிடைக்காமல் காய்ஞ்சிப் போயிருந்திருப்பான் போல.கொஞ்சம் அவனைப் பத்தி விசாரிச்சுட்டு கல்யாணத்தை வைங்க”

“அதானே உங்கப்பையன மாதிரி ஓடிப்போகாமல் தாய் தகப்பன் பேச்சைகாகேட்கிறானே அப்பவே அவரு நல்லப் பையன்தான். உங்கப்பையன் காதலிக்ககறேன்னு சுத்திட்டு அந்தப்பிரச்சனையில் ஓடிப்போயிருக்கானே முதல்ல அந்த விசயத்தை தெளிவா யோசிங்க.அதுக்கு அப்புறம் எங்க வீட்டு மாப்பிள்ளையைக் குறை சொல்லலாம்.வந்துட்டாங்கா நொட்ட சொல்லிட்டு”என்று தனம் நேரடியாகவே ருக்குமணியிடம் எரிந்துவிழுந்தார்.

அதைக்கேட்டதும் ருக்குமணிக்கு சுர்ரென்று கோபம் வந்தது”யாரைப்பார்த்து ஓடிப்போயிட்டான்னு சொல்லுற? என் மகன் ஒருத்தியை நேசிச்சான். அவள் விவாகரத்து ஆனவள்னு தெரிஞ்சும் உண்மையா காதலிச்சான்.அதனால்தான் அவனால் அந்த வேதனையைத் தாங்கிக்க முடியாமல் எங்கயோ போயிட்டான்.அதனால் இப்போ என்ன தப்பாபோயிட்டான்.அவன் வருவான் உங்க கண்ணு முன்னாடியே இன்னொரு பொண்ணு பார்த்து அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைப்பேன். உன் பொண்ணை விடவும் அழகான பொண்ணாகவும் நல்லப்பொண்ணாகவும் பார்த்துக் கட்டிவைப்பேன்.இது என் புருஷன் மேல சத்தியம்.உன் மகள் மட்டும்தான் இந்த ஊருல பொண்ணா? வேற பொண்ணு கிடைக்காத என்ன?”என்று சத்தம்போட்டவருக்கு மகனை நினைத்து மனசு வலித்தது.

சுமியும் அருணும் அதைப் பார்த்து கலங்கினார்கள். உடனே அம்மாவின் அருகில் வந்த சுமி அவர் கையைப் பிடித்துக் கொண்டு “அம்மா கத்தாதே. இப்பேதான் சுகர் பிரஷ்ர்னு முடியாமப்போய் இப்போதான் தேறி வந்திருக்கிற திரும்பவும் கத்தாத.பிரஷ்ர் எகிறிடும்,அப்புறம் பிரச்சினையாகிடும்”

“விடுடி கையை இவன் அதுதான் உங்க சின்னமாமனுக்கு பேச்சைப்பார்த்தியா. அவனை சும்மாவிடச்சொல்லுறியா? அவன்கூடச் சேர்ந்து உங்கத்தைக்காரி பேசுறதைப்பாரேன்”

“அம்மா நமக்கு மித்ரா கல்யாண நல்லபடியா முடியணும்.அதுதான் முக்கியம். அதுக்குள்ள அண்ணன் வந்துட்டான்னா அண்ணனுக்கு வேற பொண்ணுப்பார்த்து நல்லபடியா பேசி கல்யாணம் பண்ணி வைக்கலாம்” என்று அவரை சமாதானப்படுத்திவிட்டு இப்போது திரும்பி தனத்தை பார்த்து சத்தம் போட்டாள்.

“ஏன் அத்தை அம்மாவையும் அவங்க நிலமையும் தெரிஞ்சும் நீங்களே இப்படிப் பேசலாமா? என்ன மித்ராவுக்கு நல்லபடியா கல்யாணம் ஆகணும் அதுதானே உங்கப்பிரச்சனை?அதுதான் எல்லாம் நல்லபடியாக முடிஞ்சுட்டுதே.அவள் வாழ்க்கை நல்லாயிருக்கும்.அதை மட்டும் இனி பாருங்க போதும்.எங்கம்மாகிட்ட எகிறுகிற வேலையெல்லாம் வேண்டாம் புரியுதா.மாமா நீங்க எங்க வீட்டுக்கு நடையா நடந்ததையெல்லாம் மறந்திடாதிங்க. எங்கம்மா அப்பா இறந்தபிறகு தனியாளாக நின்னு எங்களை வளர்த்தாங்க. அந்த இருக்கிற ஒத்தை வேலையை வைச்சுத்தான் இவ்வளவையும் செய்திருக்காங்க. நீங்க இரண்டுபேரும்தான் எஙங்கம்மாகிட்ட உதவி வாங்கியிருக்கீங்களே தவிர எங்கம்மா உங்கக்கிட்ட உதவின்னு வந்ததில்லை இனியும் வரப்போறதில்லை. என்ன தம்பிமேல இருந்தப்பாசத்துல தம்பி மகளை தன் வீட்டு மருமகளாக்கிக்க நினைச்சாங்களே தவிர. மித்ராவுக்கு நல்ல வாழ்க்கை அமையக்கூடாதுன்னு கனவுலக்கூட நினைக்கமாட்டாங்க. உங்களுக்காகத் தான் எங்கண்ணன் காதலையே வேண்டாம்னு அத்துவுட்டாங்க”

“எங்களுக்காக ஒன்னும் இல்ல.உங்கண்ணனை அந்தப்பொண்ணுக்குப் பிடிக்கலை.அதுதான் உண்மையான காரணம்.சும்மா செய்ததை எல்லாம் சொல்லிக்காண்பிக்காத. அதுக்கும் இதுக்கும் சம்பந்தமே இல்லை. உதவி செய்து உங்க அண்ணனுக்கு எங்க பொண்ணு கட்டிக்கலாம்ன்னு பார்த்தாங்க அதுதான் நடக்கலையே! அப்புறம் என்ன திரும்பத் திரும்ப வந்து இந்த மாப்பிள்ளை விசாரிச்சீங்களா வச்சீங்களான்னு ஏன் கேக்குறீங்க? உங்க அண்ணனுக்கு சீனு மாப்பிள்ளை எவ்வளவோ பரவாயில்லை.மோகன் மாதிரியெல்லாம் இருக்க மாட்டார்”என்றவர் தனது தோளில் முகத்தை இடித்துக் கொண்டு உள்ளே சென்று விட்டார்.

சங்கரனுக்குத்தான் சங்கடமாகப் போயிற்று. தன் பொண்டாட்டி அக்காவை கூட எதிர்த்து பேசிட்டு போயிட்டாங்கறது வேற அதுவும் அவ பேசுனது எல்லாமே சரியா பேசி இருக்கா என்பது வேற. தனது மகள் விஷயத்தில் தன் பொண்டாட்டி பேசியதுதான் சரி என்று முடிவெடுத்தது சங்கரன் மனைவியின் பின்னாடியே போய்விட்டார்.

அதெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுமிக்குத்தான் ஆத்திரமாக வந்தது.

ருக்மணி பார்த்தியா உன் தம்பி தம்பின்னுத் தலையில் தூக்கி வைச்ச ஆடுனியே அவரு இப்போ யாரு பின்னாடி போயிட்டு இருக்காருன்னு பாரு.இதுதான் சொல்லுறது உன் பிள்ளைகளையும் உன்னைய மட்டும் கவனி அடுத்தவங்களை கவனிக்காதன்னு சொன்னேன் கேட்டியா.உன்னைக் கண்டுக்காமலயே உன் தொம்பி தன் பொண்டாட்டி பின்னாடியே போயிட்டாரு.தயவு செய்து இப்பவே கிளம்பி வீட்டுக்கு போ. இனி அவங்க கல்யாணத்துக்கு கூட நீ வரக்கூடாது” என்று சொல்லி சுமி ருக்குமணியைத் திட்டிக் கொண்டிருந்தாள்.

மித்ரா அவர்கள் அருகில் வந்தாள் “அம்மா பேசினதுக்காக நான் மன்னிப்புக்கேட்டுக்கிறேன் அண்ணி”என்று சுமியிடம் கையைப்பிடித்து மன்னிப்புக் கேட்டாள்.

ருக்குமணியிடம் திரும்பி”அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நான் எங்கே மோகன் மாமாவுக்காக அப்படியே காத்திருந்திருவேன்னு பயம் வந்துட்டு.அதுதான் இந்த நிச்சயத்தை சீக்கிரம் ஏற்பாடுபண்ணி உடனே முடிச்சுட்டாங்க.இரண்டு பெண்பிள்ளைக்கு அப்பாவாக அவரும் அம்மாவும் பேசினது தப்பில்லை.ஆனால் உங்களைக் காயப்படுத்தாமல் சொல்லிருக்கலாம் அதுதான் அவங்க தவறிட்டாங்க. அவங்களுக்காக நான் உங்கக்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கிறேன் அத்தை”என்று கண்கள் கலங்க மன்னிப்புக்கேட்டாள்.

அதற்குமேல் அவளுக்குமே அங்கே நிற்கமுடியாது திரும்பி வேகமாக வீட்டிற்குள் வந்துவிட்டாள்.

அவ்வளவுதான் ருக்குமணி கோபத்தில் அங்கிருந்து வேகமாக நடக்க அப்படியே மயங்கிவிழுந்துவிட்டார்.

அவ்வளவுதான் சுமி பதறி “அம்மாஆஆஆ” என்று ஓடிச்சென்று தூக்க,அருணும் அவனது அப்பா தயாளனும் அவரைத் தாங்கித் தூக்கி காரில் போட்டு மருத்துவனைக்குக் கொண்டு சென்றனர்.

ருக்குமணி விழுந்ததும் சுமி அலறியதில் வீட்டினுள் இருந்த சங்கரன் முதற்கொண்டு ஓடிவந்துப் பார்த்துவிட்டு பதறிவிட்டனர்.

“ஐயோ நம்மபேசி சண்டைப் போட்டதினால்தான் அக்கா மயங்கிட்டாளோ? என்னாச்சோ தெரியலையே?” என்று சங்கரனும் தனது வண்டியை எடுத்துக்கொண்டு பின்னாடியே ஓடினார்.

அதைப் பார்த்த மித்ராதான் தனத்திடம் போய் சண்டைப் போட்டாள்.

“எதுக்குமா அத்தை கிட்டப் போய் சண்டைப் போட்டா அவங்களே ரெண்டு வருஷமா மகனைக் காணும், பார்க்க முடியலையேன்னு ஏங்கிட்டிருக்காங்க. இந்த நேரத்துல போய் இவ்வளோ பேசி இருக்கியே அவங்களுக்கு பிபி அதிகமாக மயங்கி விழுந்திருக்காங்க. எதுவும் ஒண்ணுன்னா நீயா பதில் சொல்லுவ?”என்று வேதனையோடு அழுதாள்.

“எதுக்குடி இப்போ இப்படிக் கத்துற? உன்னைய அவங்க மகனுக்கு எடுக்கணும்னு உங்கப்பா மனசைக் கலைச்சதும் இல்லாமல் உன் மனசையும் சேர்த்துக் கெடுத்து வைச்சாங்க.அவங்க செய்தது தப்பில்லையா?அதைத்தானே சொன்னேன். அவங்க மகன் ஓடிப் போயிட்டான்.இங்க இல்லன்னு தெரியும் தெரிஞ்சும் உன்னைக் வேறக் கல்யாணம் பண்ணிக்க விடாமல் செய்றாங்கன்னா என்ன மனுஷி அவங்க? அவங்களுக்கு எதுக்கு இப்போ சீனு மாப்பிள்ளை மேல சந்தேகம் வருது.அவங்க பேசுறதும் நடந்துக்குறதும் தப்பில்லையாம் நான் சத்தம்போட்டது மட்டும் குத்தமா போச்சுது எல்லாருக்கும்.இது என்னங்கடா நியாயம்?”என்று அலுத்துக்கொண்டார்.

அவளது தங்கை நித்ரா ஓடிவந்து”அக்கா சும்மா அம்மாவைத் திட்டாத அத்தை பண்றதும் தப்புன்னு உனக்குத் தெரியலையா? இப்பதான் உனக்கு எங்கேஜ்மென்ட் முடிஞ்சு எல்லாரும் போயிருக்காங்க உடனே மாப்பிள்ளை பத்தி விசாரிச்சியான்னா என்ன அர்த்தம்?உலகத்துலயே என் மகன்மட்டும் அப்படி தங்கம் அப்படின்னு அத்தை பேசினா எந்த பெத்த உனக்குத்தான் வலிக்காது. அம்மா அப்பா சைடுல இருந்து பாரு. இப்போ என்ன நீயே கல்யாணத்துக்கு சம்மதிச்சு உனக்கு நிச்சயம் முடிந்து இருக்கு இதுலயும் அவங்க கல்லைத் தூக்கி போடப் பார்க்கிறாங்க என்றால் அப்போ அவங்க மனசுல உள்ள எண்ணங்கள் எல்லாம் சரி இல்லைனுதானே அர்த்தம்.அவங்க மகனை நீங்க கட்டிக்கலைன்னதும் என்னன்னா வேலைய பாக்குறாங்க பாரு.மோகன் அத்தான் காதலை எப்படி பிரிச்சாங்கன்னு உனக்கு தான் தெரியுமே. உனக்கு அத்தையைப் பிடிக்கும்னு சொன்னா உன்னோடு வச்சுக்கோ அது அம்மா கிட்டயும் கொண்டு வராத” என்று வெடுக்கென்று பேசி விட்டாள்.

“ப்ச்ச் அதுக்கில்லடி அவங்களே அவங்களே மகனைக் காணலைன்னு இரண்டு வருஷமா மனசு கஷ்டத்துல இருக்காங்க. இப்போ போய் அம்மா இப்படி பேசினா அவங்களுக்கு வலிக்குமா? வலிக்காதா? அவங்க வந்து நமக்கு எந்த தொந்தரவும் செய்யலையே! அவங்க மகனுக்கு என்ன கல்யாணம் பண்ணிக்கணும் நினைச்சாங்க. எனக்கும் மோகன் அத்தானைப் பிடிக்கும்.இப்படி நடக்கணும் யாருக்காவது தெரியமா?நம்மக் கனவுலக்கூட நினைக்கலையே! சரி நடந்தது நடந்து போச்சு அப்படியே அவங்க பேச்சு ஏதாவது பேசினாலும் அவங்க நிலமை புரிஞ்சிட்டு அமைதியா இருந்திருக்கணுமா? வேண்டாமா? அதைத்தான் அம்மாட்ட சொல்லிட்டு இருக்கேன்”

“நீ எதுக்காக அத்தைக்கு சப்போர்ட் பண்றேன்னு தெரியும். போதும் போதும் மோகன் அத்தான் எல்லாம் உன் வாழ்க்கையில் இருந்து விலகிப் போயாச்சு. இப்போ சீனு அத்தானோடு உனக்கு எங்கேஜ்மென்ட் எல்லாம் முடிஞ்சாச்சு. நீ சீனு அத்தானுக்கா மட்டும் சப்போர்ட் பண்ணு போதும்”என்ற நித்ரா தனத்தை இழுத்துக் கொண்டு உள்ளே சென்று விட்டாள்.

மித்ராவுக்கு ருக்குமணியை நினைத்து வருத்தமாக இருந்தது. இதுக்கு முன்னாடியாவது அத்தைக்கு கொஞ்சமாவது சப்போர்ட் பண்ணி பேசலாம்.இனி அத்தைகிட்ட பேசுறதுக்கே யோசிக்கணும்.இந்த வாழ்க்கையும் மனுஷங்களும் எப்படியெல்லாம் மாறுறாங்க என்று அவளுக்கு மனதே விட்டுப்போச்சு!

அங்கே பக்கத்தில் இருந்த பெரிய ஹாஸ்பிடல் அட்மிட் செய்துவிட்டு அருளும் சுமியும் உட்கார்ந்து இருக்க பின்னாடி சங்கரனும் போய் சேர்ந்து விட்டார்.

ருக்குமணிக்கு மைல்டாக ஹார்ட் அட்டாக் வந்திருந்தது. அவரது நிலைமையை பார்த்து அருண் இதற்கு மேலும் முடியாது என்று நினைத்தவன் உடனே மோகனுக்கு அழைத்து விட்டான்.

அருண் போன் என்றதும் அதைப்பார்த்தும் மோகன் எடுக்காதிருந்தான்.

அருண் திரும்பத் திரும்ப அழைத்துப் பார்த்துவிட்டு உடனே மெசேஜ் போட்டுவிட்டான்.

அத்தை சீரியஸா இருக்காங்க.ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிட்டல்ல சேர்த்திருக்கோம் என்று ஐ.சி.யூ போட்டோவோடு போட்டு அனுப்பிவிட்டுவிட்டான்.

முதலில் நம்மை அங்க வரவைக்க திட்டம்போட்டுப் பண்றாங்க என்று நினைத்தவன் அந்த போட்டோவைப் பார்த்ததும்தான் உண்மையென்று உணர்ந்துக்கொண்டான்.

ஆமா அம்மாவை ஹாஸ்பிட்டல்ல அட்மிட் பண்ணிருக்காங்க.என்ன திடீர்னு அட்டாக் வந்திருக்கு? என்னநடந்துச்சுன்னு தெரியலையே! என்று கொஞ்சமாக பதறியவன் உடனே அருணுக்கு அழைத்தான்.

அருண் போனை எடுக்காது சைலண்டில் போட்டுவிட்டான். அவ்வளவுதான் அம்மாவுக்கு ஏதோ பெருசா பிரச்சனையாகிட்டுப்போல என்று உடனே பிளைட்டில் டிக்கட் போட்டு ஊருக்குக் கிளம்பிவிட்டான்.