என் நெஞ்சிலாடும் களபமே-8

களபம்-8
மித்ரா அழுது முடித்தவள் இதுக்குமேல இங்க இருக்கக்கூடாது என்று உடனே கிளம்பி போய்விட்டாள்.அருணுக்கு அவள் அழுதது மனதைப் பிசையத்தான் செய்தது.ஒரு அண்ணனாக அவளது வாழ்க்கையும் நல்லாயிருக்கணும் மோகனுடைய வாழ்க்கையும் நல்லாயிருக்கணும்னு நினைத்து இதைச்செய்தான்.வேறு வழியே இல்லை.
மித்ரா இந்த வரனை ஏற்றுக்கொண்டு கல்யாணத்துக்கு சம்மதிக்கணும்னா உண்மையைச் சொல்லித்தானே ஆகணும். சொல்லியாச்சு இனி அவ அவ வாழ்க்கையைப் பார்த்துப்பா என்ற நம்பிக்கை வந்திருந்தது.
மித்ரா உடனே அங்கிருந்துக் கிளம்பிவிட்டாள் என்றதும் சுமி அருணிடம் வந்தாள்.
“அவக்கிட்ட என்ன சொல்லிவிட்டியோ? அவளோட.முகமே சரியில்லை? பாவம் அவ.நீங்க இரண்டுபேரும் உருப்படவே மாட்டேங்கடா”
“தேங்கஸ்”
“அரைஞ்சிடுவேன்டா.சொல்லுடா அப்படி என்னத்தைச் சொல்லித்தொலைச்ச.ஏதும் தப்பாகிப்பா முடிவெடுத்திடப்போறா?”
“என்னத்தைச் சொல்ல முடியும்? மோகன் வரமாட்டான் அவனுக்காக நீ காத்திருக்கிறதெல்லாம் வேஸ்ட்டு. அப்படியே அவன் வந்தாலும் உன்னைக் கலயாணம் பண்ணிக்கமாட்டான். அதனால் சித்தப்பா சொல்லுற மாப்பிள்ளையைக் கட்டிக்கிட்டு உன் வாழ்க்கையை பாருன்னு சொன்னேன்”
“இப்படியேவா சொன்னீங்க. அவளுக்கு மனசு கஷ்டமா இருக்கும்ல”
“கஷ்டமாகத்தான் இருக்கும். ஆனாலும் சொல்லித்தானே ஆகணும்.அதுதானே உண்மையும்கூட”
“அப்போ எங்க அண்ணன் இருக்கு இடம் உங்களுக்கு நல்லத்தெரியும் அப்படித்தானே?”
“ஊப்ஸ்ஸ் எப்படி ப்ளேட்டைத் திருப்பினாலும் இவக் கண்டுப்பிடிச்சிடுறாளே?”என்று முழித்தவன் அங்கிருந்து போவதற்காக எழுந்தான்.
அதைப் பார்த்து சுமி அவனது சட்டை பிடித்து கீழே உட்கார வைத்து “அப்போ ரெண்டு வருஷமா எங்க அண்ணன் எங்க இருக்கான்னு உனக்குத் தெரிஞ்சும் அம்மாகிட்ட சொல்லாம இருந்திருக்க கிராதகா! அந்தப்பரதேசியை இங்க வரச் சொல்ல வேண்டியதானே. நாங்க தினம் தினம் அவனை நினைச்சு அழுதுட்டு தானே இருக்கோம்.நான்தான் அவன் தங்கச்சியா போயிட்டேன் வேறவழியில்லாமல் அழுதுகிட்டு போறான். பாவம்டா மித்ரா! அந்த பிள்ளைக்கு ஒரு வழி சொல்லலாம்ல அது மனசுல அவனைத்தானே நினைச்சிட்டு இருந்தது. இதுக்கெல்லாம் காரணம் யாரு? எங்க அம்மாவும் அவங்க அப்பாவும்தானே! நாளைக்குவேற அவளைப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அண்ணனை நினைச்சிட்டிருக்கும் போது இன்னொருத்தன் பொண்ணுப் பார்க்க வந்தா அந்த பொண்ணுக்கு மனசு எவ்வளவு கஷ்டமா இருக்கும்? எப்படி இதெல்லாத்தையும் தாங்கிப்பா? இதப்பத்தி யாராவது யோசிச்சீங்களா?”என்று வருத்தப்பட்டு திட்டிக் கொண்டிருந்தாள்.
“இங்க பாரு உங்க அண்ணனுக்கு இந்த விஷயத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. உங்க அண்ணன் ஆரம்பத்திலிருந்து சொல்லிட்டிருந்தான் எனக்கு மித்ராவை கல்யாணம் பண்ணிக்க விருப்பம் இல்லன்னு, அதுலவேற அவனைத் திட்டுறீங்க.இதுல அவன் எப்படி இவ்வளவு கெட்டவன் ஆனான்!அவனே வாழ்க்கையில நொந்து போய் ஓடி போய் இருக்கான் அவனை பிடிச்சுட்டு வந்து மித்ராவை கட்டிக்கோன்னு சொல்ல முடியுமா?இதுக்குப் பயந்து அவன் திரும்பவும் ஓடிப் போயிட்டா என்ன பண்ணுவீங்க? இப்போ மோகன் இருக்கிற இடம் எனக்காவது தெரியும்.இனி ஓடிப்போனா அவன் இருக்கிற இடம்கூட யாருக்குமே தெரியாமல் போயிடுமே!அப்போ என்ன செய்வீங்க ?”
“அப்போ அவன் வாழ்க்கையில கல்யாணமே பண்ணிக்கமாட்டானா இனி?”என்று சுமி தனது அண்ணனை நினைத்து வருத்தப்பட்டாள்.
“அப்படித்தான் சொன்னான்.அதுவும் அவனா பேசலை.நான்தான் எங்க பிரண்ட்ஸ் க்ரூப்பூல சொல்லிவைச்சு அவனைக் கண்டுப்பிடிச்சு நம்பர் கிடைச்சது. நான்தான் கால் பண்றேன்னு தெரிஞ்சும் அந்தப்பக்கி ரொம்ப நாளாக போனை எடுக்கவேயில்லை அந்த பன்னாடை. அப்புறம் ஒரு நாலுமாசம் கழிச்சு அவனே போன் பண்ணி உங்களையெல்லாம் விசாரிச்சான்”
“ஓஓஓஓ”
“என்ன ஓஓஓ.அவனே காதல் தோல்வியிலயும் அடிவாங்கினதுலயும் நொந்துப் போயிட்டான்.அதைவிடவும் செய்த தப்பு பெருசுன்னு அவனுக்கே மனசாட்சி உறுத்துது அதுதான் வரமாட்டுக்கான்”
“செய்தது தப்புன்னாவது தெரிஞ்சுதே. ஒருத்தி விவாகரத்தாகி இருக்கான்னா அவ மனசுல என்ன இருக்குன்னு கேட்டுட்டுக் காதலிக்கணும்; இல்லை கல்யாணத்துகாவது பேசணும். இவன் என்னடான்னா அந்த ராதாவைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்னு அவ முன்னாள் புருஷன்கிட்டயே போய் சொல்லிருக்கான். அவன் அடிச்சதுக்கு பாவம் ராதாவைக் கடத்தினான்.இதெல்லாம் தப்புத்தானே.அவங்க புருஷன் பொண்டாட்டியும் சேர்ந்தாச்சு. இவன்தான் வாழ்க்கையில இப்போ தனியாக இருக்கான்.அவன் வாழ்க்கைப்போச்சுதா?”
“விடுடி ராதாவைக் காதலிச்சான் அவள் விவாகரத்து ஆனாலும் அவ அவ புருஷனைத்தான் ரொம்பக் காதலித்தாள். அந்தக்காதல் மீண்டும் அவங்க புருஷன் பொண்டாட்டியை சேர்த்து வைச்சுட்டு.அவ்வளவுதான். அவனுக்குன்னு ஒரு வாழ்க்கை கடவுள் வைச்சிருப்பாரு”
“அந்த வாழ்க்கை ஏன் மித்ராக் கூட இருக்கக்கூடாது.அவனை வரச்சொல்லுங்களேன். அம்மாவும் அவனைப் பார்க்காமல் ஏங்கிப்போயிட்டாங்க” என சொன்னவள் கண்கலங்கினாள்.
மித்ராவோட கல்யாணம் முடிஞ்சுட்டா உங்க அண்ணன் தனாகவே வந்திருவான். மித்ராவுக்கு அவன் வாழ்க்கையில் நடந்த எல்லா பிரச்சனைகளும் தெரியும் அப்படி தெரிஞ்ச ஒருத்தியை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியாக வாழ முடியாது.அதுதான் அவன் இந்தப்பக்கம் வராமல் இருக்க முக்கியமான காரணம். அதனால்தான் மித்ராகிட்ட மோகன் இனி வரவே மாட்டான் அவனுக்கு உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதில் சுத்தமா விருப்பம் இல்லை. மாறாக உன்மேல வெறுப்புதான் இருக்கு.யார் சொன்னாலும் அவன் உனக்குக் கிடைக்க மாட்டான். இப்படி கல்யாணத்துக்காக வான்னு சொன்னா கூட இங்க இருந்து வேற எங்கயாவது ஓடி போய்டுவான். அதனால் அவனுக்காக காத்திருந்து உன் வாழ்க்கையை வீணாக்காத. உன் வாழ்க்கையை நீ வாழப்பாரு நேரடியாக மித்ராக்கிட்ட சொல்லி அனுப்பிட்டேன். இனி இந்த விஷயத்தில் யாரும் தலையிடாதீங்க. முக்கியமா உங்க அம்மா கிட்ட சொல்லிடு” என்றவன் அந்த பிரச்சனையை அத்தோடு முடித்து விட்டான்.
சுமிக்கும் அருண் என்ன சொல்ல வருகிறான் என்பது புரிந்தது. அவன் சொல்லுறதும் சரிதானே! எல்லாம் தெரிந்தும் மித்ராவுக்கும் மோகனுக்கும் கல்யாணம் பண்ண வைச்சா அவங்க வாழ்க்கை நல்லா இருக்காது.
அண்ணன் எங்க இருக்கான்னு தெரியும்னு மட்டும் சொன்னா அவ்வளவுதான் அம்மா உடனே வரச்சொல்லிடுவாங்க.முதல்ல அவ கல்யாணம் நல்லபடியாக நடக்கட்டும் அப்புறம் சொல்லலாம் என்று சுமி அமைதியாகிவிட்டாள்.
அடுத்த நாள் மித்ராவைப் பொண்ணு பார்க்க வர்றாங்க என்று தெரிந்ததும் ருக்குமணிக்கு அங்கே இருக்கமுடியவில்லை.
“நம்ம மகனை விட அவன் எவ்வளவு வசதியாக, அழகாக இருக்கிறான்னு நானும் பார்க்கணும்ல” என நினைத்தவர் மித்ராவை பொண்ணு பார்க்க வரும் விசேஷத்திற்கு அவரும் போய் கலந்து கொண்டார்.
சங்கரனுக்கு தனது அக்கா ருக்மணி இங்கே வந்திருப்பது பிடிக்கவில்லைதான் ஆனாலும் அதை அவரிடம் நேரடியாக சொல்லவும் முடியாது. தனது பாசமான அக்காவை எப்படி போவென்று சொல்லமுடியும் என்று தனது பல்லைக் கடித்துக் கொண்டு அமர்ந்திருந்தார்.
நேத்துதான் ஒருவழியாக மித்ராகிட்ட நானும் தனமும் பேசி கொஞ்சம் புரிய வைச்சிருக்கோம்.இப்போதான் தன் மனசை கொஞ்சமாக மாத்தியிருக்கா. இப்போ அக்காவை பார்த்தாளென்றால் திரும்பவும் அவமனசு விருப்பம் என்று எல்லாம் மீண்டும் முருங்கைமரம் ஏறிடக்கூடாது என்று பதட்டமும் பயமுமாக சங்கரனுக்கு இருந்தது.
அதனால்தான் கொஞ்சம் டென்ஷனான உடனே தனத்தையே முறைத்துக் கொண்டிருந்தார்.
ஒரு வழியாக பொண்ணு பார்க்க வருபவர்கள் வந்துவிட்டனர். அவர்களுக்கு மித்ராவை ரொய்ப பிடித்திருந்தது.
உடனே கல்யாணத்தை பத்து இருபது நாளில் வைத்துவிட வேண்டும் என்று பேசிமுடித்து நிச்சயம் பண்ணி அன்றைக்கே மோதிரமும் மாற்றிக் கொண்டனர்.
மித்ராவுக்கு இதில் துளியும் விருப்பமில்லை, ஆனால் இப்போதே மோதிரம் மாத்தி எல்லாம் பேசிமுடித்துவிட்டால் அதுக்கப்புறம் ருக்குமணியும் வாயைத் திறக்கமாட்டார்.மகள் மித்ராவும் மோகனுக்காக காத்திருக்கணும்னு நினைக்கமாட்டாள் என்று சரியாக கணக்குப்போட்டார் சங்கரன்.
தனது அண்ணனும் அருணின் அப்பாவுமான தயாளன்கிட்ட ஆலோசனை செய்துவிட்டுத்தான் உடனே மோதிரத்தை மாற்றி நிச்சயத்தையும் முடித்துவிட்டனர்.
இனி இருபது நாளில் கல்யாணம்.
கல்யாணம் முடிந்ததும் மகளும் மருமகன் கூடவே வெளிநாட்டிற்குப் போயிடுவாள் என்று எல்லாவற்றையும் திட்டமிட்டே செய்துமுடித்திருந்தார் சங்கரன்.
சீனு என்று மாப்பிளையின் அம்மா அழைக்கவும் எனனம்மா என்று அம்மாவிடம் சென்றவனை மித்ரா சுவாரசியமின்றிப் பார்த்தாள்.
காலையில் பொண்ணு ப்பார்க்கவென்று குடும்பத்தோடு வந்து உட்கார்ந்தான். பொண்ணுக்கிட்ட தனியாக பேசணும்னு சொன்னான்.
அதைக்கேட்டதும் அவனது அம்மா முகம் சுழித்து மகனின் காதில் ஏதோ சொல்ல சிரித்துக்கொண்டே தலையாட்டினான்.
அவ்வளவுதான் உடனே சங்கரன் மித்ராவிடம் ” மித்ரா மாப்பிள்ளையைக் கூட்டிட்டு மாடிக்குப் போம்மா என்ன பேசணும்னு தெளிவா பேசிடு என்று அந்த தெளிவு என்று பேசக்கூடிய வார்த்தையை அழுத்தி சொல்லி மாடிக்கு அனுப்பி வைத்தார்கள்.
சீனு நேராக மித்ராவின் கையைப்பிடித்து”நீ ரொம்ப அழகா இருக்க மித்து.உன்னைப் போட்டோவுல பார்த்தவுடனே மொத்தமாக விழுந்துட்டேன் தெரியுமா?”என்று கூச்சமே இல்லாமல் பேசினான்.
அதை முற்றிலும் எதிர்பார்க்காத மித்ரா அவனது கையிலிருந்துத் தனது கையை உருவியெடுத்தாள்.
ஏன் மித்து கையை என்கிட்ட இருந்து எடுக்குற?என்று கேட்டவாறே மீண்டும் அவளது கையை இழுத்துப் பிடித்து தன் கைக்குள்ளாக வைத்தவன் அவளது கண்களை ஒரு மார்க்கமாக பார்த்தான்.
அவனது அந்த செய்கை மித்ராவுக்கு எரிச்சல் மூட்டியதாக. இருந்தாலும் தனது அப்பாவுக்காக பொறுமையாக மீண்டு “அவனது கையில் இருந்து தனது கையை எடுத்து இதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம் இப்படிக் கைய பிடிச்சு பேசலாம். இப்போதைக்கு வேண்டாம்.எனக்கு அது ஒரு மாதிரியாக இருக்கு” என்று சொல்லிவிட்டு கொஞ்சம் விலகியே நின்றாள்.
இதைக்கேட்டவன் அதைக் கண்டுக்கொள்ளவேயில்லை. அவன் வேண்டும் என்றே அவளோடு நெருக்கமாக இடித்துக்கொண்டு நின்றான்.
அதுவே அவளுக்குப் பிடிக்கவில்லை.ஆனாலும் அவனை விநோதமாகப் பார்த்தாள்.
“என்ன அப்படிப்பார்க்கிற மித்து.உனக்கு நான் எனக்கு நீன்னு பேசி முடிச்சாச்சுதே.அதுதான் உன்கூட பேசணும்னு வந்தேன்”
“சொல்லுங்க என்ன பேசணும்?”
“நானே நிறைய சம்பாதிக்கிறேன்.அதனால் நீ அங்க வந்து வேலைப்பார்க்கணும்னு இல்ல.நீ வீட்டுலயே இருந்து என்னை மட்டும் கவனிச்சிக்கிட்டா போதும்.உன்னைய மாதிரி அழகு அழகா குழைந்தையைப் பெத்துக்குடு அதுபோதும்”என்று பேசிக்கொண்டே போனான்.
அவனைப் பார்த்தவளுக்கு “இவன் எந்த ஊரு லூசா இருப்பான்?” என்றுதான்மனதிற்குள்ளாக நினைத்தாள்.
“என்ன மித்து இப்படி பார்க்கிற? நீ இப்படி ரசிக்கும்படியான அழகுல இருக்கன்ல.ஹாஹாஹாஹா” என்று சத்தமாகச் சிரித்தான்.
“ஊப்ஸ் இந்த மரமண்டைக் கூடத்தான் நான் இனி வாழ்க்கை முழுவதும் காலம் தள்ளணுமா என்ன?”என்று நொந்துக் கொண்டாள்.
அவள் அமைதியாக இருப்பதைப் பார்த்தவன்”மித்து என்னைப் பார்த்து பயந்து மிரளெல்லாம் வேண்டாம்.நான் அப்படி ரொம்ப ஸ்ட்ரிக்ட்டுலாம் இல்லை.உன்னால் என்கிட்ட பீரியா பேசுறளவுக்குத்தான் இருப்பேன். நான் கொஞ்சம் மூடிதான்.ஆனால் உன்கிட்டமட்டும் மூடியா இருக்கமாட்டேன்.நான் சொல்ல வர்றது உனக்குப் புரியுதா?”என்று அவளது இரு தோள்களிலும் கையைவைத்துப் பிடித்து அழுத்திக்கேட்டான்.
அதில் பயந்தவள் ‘விட்டா இவன் இன்னைக்கே எல்லாத்தையும் முடிச்சுருவான் போல முருகா காப்பாத்து’ என்று வேகமாக கீழிறங்கிவிட்டாள்.
அதிலிருந்து மோதிரம் போடும்வரைக்குமே ஒதுங்கியேதான் இருந்தாள்.
அதன் பிறகு பெரியவர்களாக பேசி முடித்து மோதிரம் போட்டு அவர்கள் இருவரும் பாதி கணவன் மனைவி என்கிறதாக அந்த நாள் முடிந்திருந்தது.
இனி அவன் என்ன பேசினாலும் கேட்டு தான் ஆக வேண்டும் என்று சூழ்நிலைக்குள் மித்ராவைத் தள்ளிவிட்டிருந்தனர்.
சங்கரனுக்கு செம ஹாப்பீ. மகளுக்கு அவர் எதிர்பார்த்ததைவிடவும் நல்ல வரன் அமைந்து நிச்சயமும் முடிந்து விட்டதால் மகிழ்ச்சியாக இருந்தார்.
இந்த அப்பாவோட முடியல கடவுளே! என்று நொந்து கொண்டாள் மித்ரா!
ஏனோ சீனுவை அவளுக்குப் பிடிக்க வில்லை.அவள் முன்பு யார் வந்தாலும் பிடிக்காது என்பது வேறு விஷயம் .ஆனால் நிச்சயமன்றே தொட்டுப் பேசியதும் நெருங்கியதும் ஏதோ தவறாகவே அவளுக்கு பட்டது.
ஆனால் மற்றவர்கள் அவனைப் பற்றி விசாரித்து நல்லவன் வல்லவன் நாளும் தெரிஞ்சவன் பெரிய வேலைக்காரன் மூளைக்காரன் என்று எல்லாம் வர்ணித்து சொல்லியிருந்ததால் அதைக் கேட்டு அவளுக்கு எரிச்சல் தான் வந்தது.
ருக்குமணிக்கு பொறாமையாக இருந்தது இவ்ளோ அழகான மித்ராவை நம்ம மகனுக்கு கட்டி வச்சிரலாம் பார்த்தால் எவனோ குறுக்கால புகுந்துட்டானே! நம்மளால ஒன்னும் செய்ய முடியலயே என்று தீவிர யோசனையில் இருந்தார்