என் நெஞ்சிலாடும் களபமே-18

என் நெஞ்சிலாடும் களபமே-18

களபம்-18

மோகன் ஆபிஸிற்கு சென்றதும் ஒன்றுமே ஓடாது அப்படியே பால்கனியில் வந்து நின்றவள் அங்கு விளையாடும் சிறுவர்களை வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

அவளுக்கு இப்போது பசிக்கவேயில்லை.மனதின் பாரமே அழுத்தமாக இருந்ததால் அப்படியே போய் படுத்துக்கொண்டாள்.

இதற்குமேல் யோசித்தால் வாழ்க்கை மொத்தமாகச் சூன்யமாகப் போய்விடும் என்று மனதிற்குள்ளிருந்து பலவிதமான யோசனைகள் மேலெழும்பவும் இதுசரிவராது என்றுதான் தூங்கமுயன்று அப்படியே படுத்திருந்தாள்.

மோகன் ஆபிஸில் நுழைந்ததும் பிரீத்தா எங்கே இருக்கிறாள்? என்றுதான் தேடிக்கொண்டிருந்தான்.

அவளோ அவன் கண்முன்வரவேயில்லை. 

மதியம் சாப்பிடாது தனது கேபினில் டென்சனோடு இருந்த மோகன் முன்பு ஆயுஷ் வந்தான்.

“என்ன?ஆயுஷ் இங்க வந்திருக்கான்? என்று யோசனையோடே “வாங்க சார் என்ன என் கேபினுக்கு வந்திருக்கீங்க?” என்று சந்தேகத்துடன் கேட்டான்.

“அது ஒன்னுமில்லை உங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சுன்னு கேள்விப்பட்டேன்.அதுதான் வாழ்த்துகள் சொல்லிட்டுப் போகலாம்னு வந்தேன்.வாழ்த்துகள் சுந்தர் வாழ்த்துகள்” என்று கைக்குலுக்கிவிட்டுச் சென்றான்.

“என்னங்கடா இது இதுக்குள்ளவா பிரீத்தூ ஆபிஸ் முழுசும் நமக்குக் கல்யாணம் ஆனதைச் சொல்லிட்டா?”என்று யோசித்தவன் வெளியே வந்தான்.

அவனுக்கு எதிராக பிரீத்தா ஒருமாதிரி டயர்டான முகத்தோடு வந்தாள்.

அவளருகில் சென்றவள் மென்மையான குரலில் யாருக்கும் கேட்காதவாறு“பிரீத்தா உங்கக்கிட்டக் கொஞ்சம் பேசணும்?நீங்க ப்ரீயா?”என்று கேட்டான்.

அவளோ அவனுக்குப் பதிலே சொல்லாது,கண்டுக்காது வேகமாக தனது அண்ணனின் கேபினுக்குள் நுழைந்துவிட்டாள்.

அங்கே யாரும் அவர்களைக் கண்டுக்கொண்டமாதிரியே தெரியலை.அப்போ ஆயுஷுக்கு மட்டும்தான் என் கல்யாண மேட்டர் தெரிஞ்சிருக்கு. ஒருவேளை பிரீத்தா என்னை விரும்பினது இந்த ஆயுஷுக்கும் தெரிந்திருக்குமோ? அதுதான் எனக்கு கண்காணிக்கிறானோ? கல்யாணமான விஷயத்தை எல்லாம் தெரிஞ்சு வச்சிருக்கியேடா! இனி என்ன பிரச்சனை பண்ணுவான்னு தெரியலையே என்று தனது மண்டையை பிய்த்துக்கொண்டு வேலையில் கவனம்வைத்தான்.

அவனும் எப்படியாவது தனது சூழ்நிலையை பிரீத்தாவுக்கு விளக்கிடணும்னு முயற்சிப்பண்றான்.அவளோ அவனைக் கண்டுக்காது தனது ரணத்தை உள்ளயே வைத்துக்கொண்டு சுத்துகிறாள்.

அவனால் பிரீத்தாவிடம் பேசாது எந்த வேலையும் ஓடாது என்று எழுந்தவன் லீவு போட்டுட்டு வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டுக்கு வரும்போது கோபத்தோடு ஒரு மாதிரி விரக்தியாகி வந்தவன் கதவை வெகு நேரமாக தட்டிக் கொண்டிருந்தான்.

உள்ளிருந்து யாரும் திறக்கவில்லை காலிங் பெல்லும் திரும்பத் திரும்ப அடித்துப் பார்த்தான்.

கதவு திறந்த பாடில்லை.மித்ராவுக்கு என்னானதோ? என்று பயந்து போனவன் மீண்டும் மீண்டும் கதவைத் தட்டி ஓய்ந்துப்போய் அவளது போனுக்கு அழைக்கலாம் என்று நினைத்தால் அவளது போன் நம்பரும் அவனிடம் கிடையாது.

ப்ரீத்தா எப்பொழுதும் சொசைட்டில் இருந்து சாவி வாங்கிட்டு வந்து கதவைத் திறப்பாளே அதே மாதிரி திறக்கலாம் என்று நினைத்து திரும்பினான்.அப்போது சரியாக உள்ளிருந்து கதவும் திறக்கப்பட்டது.

ஏற்கனவே பிரீத்தாவிடம் பேச முடியாத கோபம் தன்னிலை விளக்கமும் கொடுக்க முடியாத விரக்தி என்று ஒருமாதிரி குழப்பமான மனநிலையோடு வந்தவனுக்கு வீட்டில் கதவு இவ்வளவு நேரம் திறக்கவில்லை.

அது இன்னும் அவனது மனதில் அதிக இறுக்கத்தை உண்டுபண்ணியிருந்தது.மித்ரா கதவை எப்போதடா திறப்பாள் என்று காத்திருந்தவனுக்கு அவள் கதவை திறந்ததும் எரிச்சலில் அதிககோபத்தைத் தூண்டி இருந்தது.

அந்த அதீத கோபத்தில் சட்டென்று அவளை கை நீட்டி அறைந்து விட்டான்.

“மனுஷன் வெளியில் நின்னுட்டு அரை மணி நேரமா கதவை தட்டியிட்டிருக்கேன்.நீ தூங்கியெழுந்து சாவகாசமா வந்து நிக்கிற. இதுதான் நீ குடும்பம் நடத்துற இலட்சணமா? இதுக்குத்தான் உனக்குக் கல்யாணம் தேவைப்பட்டுச்சா?” என்று வாய்க்கு வந்ததை எந்தவித சம்பந்தா சம்பந்தம் இல்லாமல் திட்டிவிட்டு அவனது ரூமூக்குள்ள போய் கதவை அடைத்துக் கொண்டான்.

அவன் அடித்ததும் அப்படியே பேயறைந்தது போன்று மித்ரா நின்றிருந்தாள். கண்ணீர் மட்டும் தானாக கண்களில் இருந்து இறங்கிக்கொண்டிருந்தது.

அவன் அடிப்பான் என்னு கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள் அந்த அதிர்ச்சியில் இருந்து மீளாது அப்படியே நின்றிருந்தாள்.

போன் வரவும் கொஞ்சம் இருக்கும் இடம் உணர்ந்து போனை எடுத்துப் பார்க்க அவளது தங்கை நித்ரா அழைப்பில் இருந்தாள்.

உடனே கண்களைத் துடைத்துவிட்டு போனை எடுத்தவள்”நித்து சொல்லுடி அம்மா எப்படி இருக்காங்க?அத்தை எப்படி இருக்காங்க?”என்று கேட்டாள்.

“இன்னைக்குக் காலையிலதான அக்கா இங்கிருந்து அங்கபோய் இறங்குன.அதுக்குள்ள ஏதோ பத்து வருஷம் ஆனது மாதிரி எப்படி இருக்கன்னு கேட்கிற?ஆமா எப்படி இருக்கார் உன் ஆத்துக்காரர் அந்த சிடுமூஞ்சி மோகன் என்ன பண்ணிட்டிருக்கார்?”என்று பேசினாள்.

அதைக்கேட்டதும் லேசாகச் சிரித்தவள்”நல்லா இருக்காரு?சொல்லுடி என்ன போன் பண்ணிருக்க?”

“அதுவா ருக்குமணி அத்தை இதுக்குள்ள பத்துக்கால் பண்ணிட்டாங்க.நீ போன் பண்ணுனியா என்னனு?அந்தச் சிடுமூஞ்சி கிட்டதான் அவங்க பேசமாட்டாங்களாமே.அதுதான் உனக்குப் போன் பண்ணிக் கேட்கச் சொன்னாங்க”

“ஓஓ அப்படியா சரி நீ எப்படியிருக்க அத்தை எப்படி இருக்காங்க”என்ற நலம் விசாரித்தவாறே கண்ணாடியில் முகத்தைப் பார்த்தாள்.

மோகன் அடித்தது அவளது கன்னத்தில் பதிந்து அவனது தொடுகையின் முதல் பதிவாக விரல்களின் தடத்தை சிவக்கப் பதிந்திருந்தது.

அதைத் தொட்டுப்பார்த்தவளுக்கு வலி உயிர் போயிற்று.ஷ்ஷ்ஷ் என்னு தன்னையறியாது சத்தமிட்டுவிட்டாள்.

“என்னாச்சு மித்து”என்று அந்தப்பக்கமிருந்து நித்ரா கேட்டதும்தான் போன்ல பேசிட்டிருக்கோம் என்பதே மீண்டும் ஞாபகத்துக்கு வந்தது.

உடனே முகத்தைத் திருப்பியவள் கண்ணாடி பார்க்காது வேறுபக்கமாக வந்து நின்று பேசிமுடித்தாள்.

அவளிடம் பேசிமுடித்துவிட்டு போனை வைத்துவிட்டு வயிறு பசித்தாலும் சாப்பிட என்ன இருக்கு? என்ன செய்யணும்? என்று எதுவும் தெரியாததனால் அப்படியே சுருண்டு அங்கிருந்த சோபாவிலயே படுத்துவிட்டாள்.

பசிவேறு, அவன் அடித்தது வேறு என்று அவளுக்கு தூக்கமும் இல்லாது ஒரு அரை மயக்க நிலையில் படுத்திருந்தாள்.

மோகனும் உள்ளே போய் ட்ரஸ் மாத்திவிட்டு அப்படியே கட்டிலில் கவிழ்ந்துப் படுத்துக் கொண்டான். ஒரு இரண்டுமணி நேர தூக்கத்திற்குப் பின் பசி வயித்தைக் கிள்ளவும் எழுந்து சாப்பிடவந்தவன் சோபாவில் படுத்திருந்த மித்ராவைப் பார்த்ததும்தான் கோபத்தில் அவளை அடித்தது ஞாபகம் வந்தது.

“அதுதான் நான் ஏற்கனவே சொன்னனே இவளை இப்போதைக்குக் கூட கூட்டிட்டுப் போகமாட்டேன். எனக்கு கொஞ்சம் அவகாசம் தேவைன்னு எவ்வளவு சொன்னேன்.

இவளோட அண்ணன்கிட்டயும் எங்கம்மாக்கிட்டயும் சொல்லி சொல்லி அலுத்துப்போனனே. இந்த காரணத்திற்காகதான் சொன்னேன். நான் மனதளவில அவள என்னோடுக் கூட்டிட்டு போக தயாராகயில்லை. என்னை நானே சமாதானப்படுத்திக்க வேண்டியதிருக்கு .எனக்கு நானே சில விஷயங்களில் இருந்துமீண்டு வர வேண்டியதிருக்கு என்று தானே சொன்னேன்.அதைக்கேட்காமல் மறுபடியும் என்னை எல்லாரும் மனசளவுல அரக்கனாக மாத்திட்டீங்க. இது தெரியாம அவளை இங்கு அனுப்பி விட்டுட்டாங்க. இப்போ அதுக்கும் சேர்த்து இவள் வாங்கிக்கட்டிக்கிறா? இதுக்கு நான் என்ன செய்யமுடியும்?”என்று நினைத்தவன் பசியில் சாப்பிட என்ன இருக்கு என்று பார்க்க கிட்சனுக்குள் நுழைந்தான்.

அங்கே ஒன்றுமே இல்லை என்றதும் அதுவேறு எரிச்சலைக் கிளப்பியது. அப்படியே வந்து அவளது அடிபட்டக் கன்னத்திலயே கவனமில்லாது சட்டென்று தட்டி எழுப்பினான்.

அவன் அடித்த கன்னம் நேரமாகியதில் வலியில் இன்னும் கன்றி சிவந்திருக்க அவன் தொட்டு எழுப்பியதும் உயிர் போகும் வலியில் அப்படியே துடித்தவள் “ஆஆஆஆஅப்பாஆஆஆஆஆ” என்று எழுந்து கையை கையை உதறிக்கொண்டு கண்ணீரோடு அவனைப் பார்த்தாள்.

அவனுக்கே ஒரு மாதிரியாகியது. அவன் பார்ப்பதை உணர்ந்தவள் தனது உதட்டைக் கடித்துக் கண்ணீரை உள்ளிழுத்து தன்னைத்தானே கட்டுப்படுத்தினாள்.

அதைப்பார்த்தவனுக்கு கொஞ்சம் நிதானம் வந்தது.அவளிடம் எதுவுமே பேசாது வெளியே போனவன் தன் மனதைக் கட்டுப்படுத்தி திசைத்திருப்ப ஒரு பாக்கெட் சிகரட்டை முடித்துவிட்டு இருவருக்கும் சேர்த்து சாப்பாடு வாங்கிக்கொண்டு வந்தான்.

அவன் கதவைத் திறந்து உள்ளே வரும்போது அழுதுக்கொண்டே வெந்நீர் வைத்து கன்னத்தில் ஓத்தடம் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

அதைப்பார்த்தவன் ஒரு நொடி அப்படியே அசையாது நின்று கண்களை இமைக்காமல் பார்த்தவன், ஒன்றுமே சொல்லாது போய் இரண்டுதட்டில் சாப்பாடு போட்டு எடுத்து வந்து அவளருகில் கொண்டு வைத்தான்.

அவளோ சாப்பிடாது எழுந்துப்போக முயலும்போது அவளது கையைப்பிடித்து உட்காரவைத்தவன் சாப்பாட்டை எடுத்து கையில் கொடுத்துச் சாப்பிடச்சொன்னான்.

மித்ராவோ சாப்பிடாது குனிந்து தன் கையில் இருக்கும் தட்டினையே பார்த்திருந்தாள்.

அதைப்பார்த்தவன் “என்னாச்சு? இங்கவுள்ள ரைஸ் சாப்பிடமாட்டியா? வேற எதுவும் வாங்கிட்டு வரட்டுமா?”என்று கேட்டான்.

அவன் இப்படியும் பேசுவானா?என்று யோசித்துக் கண்களை ஏறெடுத்துப் பார்த்தாள்.

அதைப்பார்தும் பாராததுபோன்று சாப்பிட்டுக்கொண்டிருந்தான். இன்னும் அவள் சாப்பாட்டினைத் தொடாது இருக்கவும் அவன் தட்டைக் கீழே வைத்துவிட்டு ”அடிச்சதுக்கெல்லாம் மன்னிப்புக் கேட்கமுடியாது. எனக்குப் பசிக்குது சாப்பிடணுமா? வேண்டாமா?”என்று கொஞ்சம் கடுப்பாகிக் கேட்டான்.

நீங்க சாப்பிடுங்க என்று சொல்லத் தொடங்கவுமே கன்னம் வலிக்கவும் கண்களை மூடி அந்த வலியைப் பொறுத்துக்கொண்டாள்.

அப்போதுதான் ஏன் சாப்பிடாமல் இருக்கிறாள் என்று புரிந்து தட்டை வைத்தவன் அவனும் சாப்பிடாது கொண்டுபோய் குப்பையில் போட்டுவிட்டு பத்து நிமிஷத்தில் ஹார்லிக்ஸ் கலக்கி எடுத்து வந்து அவளுக்கும் கொடுத்துவிட்டு தானும் எடுத்துக் குடிக்க ஆரம்பித்தான்.

அதைப்பார்த்தவள் இருந்த பசிக்கு இதுவே போதும் என்று எடுத்துக் குடித்தாள்.ஆனால் அவனைப் பார்க்கவேயில்லை.

என்ன நினைத்தானோ மெதுவாக அவளருகில் வந்து உட்கார்ந்தான். அவளோ சட்டென்று எழுந்து பால்கனிக்கு சென்றுவிட்டாள்.

‘அவ என்ன செய்திருந்தாலும் அவளை அடித்திருக்கக்கூடாதுதான் ஆனாலும் நான் எதுக்கு இறங்கிப்போகணும்?அவதானே என்கூட வந்தாள்.

நான் ஏத்துக்குற வரைக்கும் இப்படித்தான் இருக்கும் வாழ்க்கை. முடிஞ்சா சமாளி இல்லையா போ’ என்று நினைத்தவன் ஒன்றுமே சொல்லாது டீவியை ஆன்பண்ணி ஓடவிட்டான்.

அவனது மனமோ அதில் லயிக்காது அப்படியே கண்ணுமட்டும் அசையாது இருந்தது.அங்கே அதே டேபிளில் பிரீத்தா கொண்டுவைத்த பொக்கே அப்படியே இருந்தது.

அதைப்பார்த்ததும் மனம் குரங்காக பிரீத்தாவை நினைக்க ஆரம்பித்தது. அவளது மனம் எவ்வளவு வலித்திருக்கும்? என்று நினைத்தவன் தன்னருகில் ஒரு ஜீவன் தன்னையே நேசித்துக் காத்திருக்கிறதே! அந்த ஜீவனுக்கும் மனசுன்னு ஒன்னு இருக்கு என்று உணர்ந்தும் அது ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமுடையவனாக இருந்தான்.

அவனது அந்த கல்நெஞ்சம் கரைய எவ்வளவு காலமெடுக்கும் என்று அவனுக்குமே தெரியாது!

அவனது அறிவுக்கு எட்டுகிறது. கல்யாணமாகிட்டு தன்னையே நம்பி ஒருத்தி வந்துவிட்டாள். இனி யாரையும் நினைக்காதேடா மடையா என்று அடிக்கொருமுறை அவனுக்கு நினைப்பூட்டுகிறது.

ஆனால் அவனது அடிமனது பழையக் காதலையும் பிரீத்தாவையும் சேர்த்து நினைத்து அவனை பைத்தியம் பிடிக்காத குறையாக சுழல வைத்துக்கொண்டிருந்தது.